வேந்தன்… 56

4.7
(15)
வேந்தன்… 56
அதற்குள் மனோகரி ஒரு யோசனையைக் கொடுத்தார். “இவங்களோடவே கிளப்பிப் போயிட்டு வாங்க சம்மந்தி. எப்படியும் சம்பிரதாயத்துக்கு மாசமா இருக்க பொண்ணைப் பார்க்கப் போகணும். இன்னொருக்கா தனியா அத்தனை தூரம் பயணம் செய்வானேன்” என்று சொல்ல. அதுவும் நல்ல யோசனையாகவே பட்டது அனைவருக்கும்.
மகளுக்கு பழம் இனிப்புகளை முதலில் பிறந்த வீட்டினர்தான் தர வேண்டும் என்பதால் அவர்களுடனேயே ராஜனும் மலர்விழியும் கிளம்பிவிட்டனர். அவர்களை இன்னொரு கார் ஏற்பாடு செய்து அதில் அழைத்து வந்தான் சிபின்.
கார் சீரான வேகத்தில், சாலையில் வழுக்கிக் கொண்டு செல்ல, சொகுசு காரில் இன்னுமே வசதியாய் அமர்வதற்கு அவளுக்கான எல்லா சவுகரியத்தையும் பண்ணித் தந்துவிட்டான் சிபின். அவ்வப்போது, பழரசம், இளநீர், சூடான பானங்கள் முதல் அவளுக்கு வாங்கிக் குடிக்க வைத்தான்.
இடையில் குமட்டல் வரும் போதெல்லாம் அவளை அப்படித் தாங்கினான். மார்போடு அவளை அணைத்து நெற்றியை பிடித்து விடுவதும், உச்சந்தலையில் முத்தமிட்டு அவளை ஆறுதல் படுத்துவதும் என அவளை உச்சி குளிர வைத்தான்.
இதை மட்டும் தன் வீட்டினர் பார்த்து விட்டால் போதும். சும்மாவே தலைமீது வைத்து தாங்குவார்கள் மூன்று மருமகன்களையும். இப்பொழுது இவரைப் போல உண்டான்னு போற்றிப் புகழ் பாடவும் வாய்ப்பிருக்கு. நம்ம பேச்சு அங்கே எடுபடவே செய்யாது, நினைத்தவள் அறியவில்லை பின்னே வரும் காரில் இருந்த ராஜனும் மலர்விழியும் மருமகனின் சேவையை கண் எடுக்காது பார்த்துப் பார்த்து பூரித்துப் போகிறார்கள் என்று.
ஆம், காரை விட்டிறங்கி அவன்தானே கடைகளுக்குச் சென்றான். அவளோடு தானும் இறங்கி அவள் நெற்றியைப் பிடித்து விடுவது, அவள் முகம் கழுவித் துடைப்பதும் மற்றவர்கள் பார்வையில் பட்டதோ இல்லையோ இவர்களின் பார்வையில் தெளிவாகவே விழுந்தது.
‘இதெல்லாம் எதுக்காம்? சர்க்கரைக் கட்டி வெல்லக்கட்டின்னு கொஞ்சுறது, சண்டைன்னு வந்துட்டா நெருப்பாட்டம் காய்ச்சி எடுக்கறது’ அவள் மனதில் சிறு சுணக்கம் எழுந்தது.
அப்படியென்ன புடிவாதம் ஒரே ஒருநாள் அங்கே தங்கினா மகாராஜாவுக்கு கிரீடம் இறங்கிடுமாக்கும் கீழ் உதடு பிடிவாதத்தில் லேசாய் பிதுங்கி இருக்க, அவளைப் பார்க்கவே அவ்வளவு அழகு.
அவள் மீது வைத்த கண்ணை அவனால் எடுக்கவே முடியவில்லை.
அவனது ஊடுருவும் பார்வையை உணர்ந்தவளாய் இன்னும் கதவை ஒட்டி அமர்ந்துவிட்டாள் நளிரா.
.
“காட் தாங்க்ஸ். ஆட்டோமேட்டிக் லாக். இல்லைன்னா நீ பண்ணுற திமிருக்கு இந்நேரம் எட்டிக் குதிச்சு விழுந்திருப்பேடி” வீம்பு பிடிப்பவளை ஏதும் செய்ய முடியாத கோபத்தில் பற்களைக் கடித்தான் சிபின்.
அவளோ நீ என்னமோ பேசிக்க. உன்கூட எனக்குப் பேச்சில்லை என்பது போல முகத்தை தூக்கி வைத்திருந்தாள். மறந்தும் அவன் பக்கம் பார்வையைத் திருப்பவே இல்லையவள்.
“இப்ப என்னடி வேணும்? இறங்கிப் போனா தலைக்கு மேல உட்காருவியோ?” அவனும் எப்படியெப்படியோ அவளைப் பேச்சிற்கு அழைத்துப் பார்த்துவிட்டான். ஒரு வார்த்தை பேசினால் கூட போதுமே அப்படியே அவளை மயக்கி தன் வசப்படுத்திவிடலாம் என்று எண்ணி அவளிடம் வாய் வளர்க்க.
அவளோ அவனது எண்ணம் புரிந்தவள் போல, வாயைப் பசை போட்டு ஒட்டிக் கொண்டது போல இருந்துவிட்டாள்.
ஒருவழியாக இருவரும் வீட்டிற்கு வந்து சேர, அவர்களுக்காக வாசலில் காத்திருந்தாள் மிரா. நளிராவைக் கட்டிக்கொண்டவள் “என் தங்கம். எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” கண்ணீரோடு நளிராவின் கன்னத்தில் முத்தமிட்டு விடுவித்தவள், பின்னே வந்த காரில் இருந்து இறங்கிய ராஜன் மலர்விழியைப் பார்த்துவிட்டாள்.
“வாங்க சம்மந்தி. வாங்க உள்ளே போகலாம்” அவர்களை அழைத்துப் போனாள் அவர்களை.
தன்னை விட்டுவிட்டு போகும் மனைவியை ஏமாற்றமாக சிபின் பார்த்தபடி நிற்க. அவனை அயர்வாக ஒரு பார்வை பார்த்த நளிராவுக்கு நிச்சயம் இந்தக் குணத்தை வளரவிடுவது சரியேயில்லை என்று தோன்றியது.
தாயின் அருகில் அமர்ந்த நளிரா, “அம்மா பிளீஸ் தங்கிட்டு போங்கம்மா. உங்களோட இருக்கணும்னு ஆசையா இருக்கும்மா” தாயைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள் நளிரா.
“சரிம்மா இருந்துட்டுப் போறோம்” மகளின் ஏக்கம் உணர்ந்த மலருக்கு அவளை அப்படியே விட்டுவிட்டுப் போக மனதேயில்லை. இருக்கறேன் என்று ஒப்புக் கொண்டார்.
மகளுக்கும் மிராவுக்கும் பிடித்ததை தன் கையாலேயே சமைத்துத் தந்தார் மலர். அதுபோக இனிப்பு காரவகைகள் செய்து வைத்தார். மிராவும் அவர்களுடன் ஆசையாய் பேச அமர்ந்துவிட பொழுது நன்றாகவே போனது.
மறுநாள் துருவ்வை பார்த்துவிட்டு வந்தவர்கள் மேலும் ஒருநாள் இருந்துவிட்டு கிளம்பினார்கள்.
“சம்மந்தி வளைகாப்பு வைக்கறோம் வந்திருங்க. பார்க்க வந்துட்டு அப்படியே அழைக்கறோம்னு தப்பா எடுத்துக்க வேண்டாம். இவருக்கு தூரமான பயணம் பண்ணுறதெல்லாம் முடியறது இல்லைங்க” தன்மையாகவே சொன்னார் மலர்விழி.
“இதென்ன பார்மாலிட்டி. நாங்க வறோம் சம்மந்தி” மிராவும் ஆரியனும் அவர்களிடம் இன்முகமாக பேசி வழி அனுப்பி வைக்க. நளிராதான் எப்போதும் போல பிரிவின் தவிப்பில் கண்ணீருடன் விடைகொடுத்தாள். கூடவே மிராவுக்கும் தவிப்பாகத்தான் இருந்தது. அன்னையைப் போலவே அன்பு காட்டும் மலர்விழி ராஜனைப் பிரிந்திருக்க மிராவுக்கும் பிரியமில்லைதான்.
அவளைத் தன் கைப்பிடியில் வைத்துக் கொண்டான் சிபின். இதுவரை அவர்களிடம் தன்னை விட்டுத் தந்து ஒதுங்கி நின்றதே அவளுக்கு உதவியாய் இருந்தது.
புகுந்த வீட்டிலும் தங்கள் வாரிசைத் தாங்கும் பெண்ணை அவ்வளவு தாங்கினார்கள் ஆரியனும் மிராவும்.
வாந்தியும் மயக்கமும் அவளைப் பாடாய்ப் படுத்தி எடுக்க, இந்த நேரத்தில் கணவனின் நெருக்கமும் அவனது வாசனையும் அவளுக்கே பிடிக்காமல் போனது. முடிந்த மட்டும் அவனுக்கு உரைக்காத வண்ணம் தள்ளிப் போனாள் நளிரா.
பிறந்த வீட்டில் இருக்க விடாமல் கூட்டிகிட்டு வந்ததற்காகவும், குழந்தை பற்றிப் பேசியதாலும் தன் மீது கோபமாக இருக்கிறாள் என்று தானாகக் கருதியவனுக்கும் வேலைகள் தலைக்கும் மேல் இருக்கவும் அவள் ஒதுக்கத்தை உணர்ந்து கொள்ள வாய்ப்பே கிடைக்கவில்லை. அதன் பிறகு குழந்தை பற்றிய பேச்சையே அவன் எடுக்கவில்லை, நளிராவும் அது பற்றிப் பேசவில்லை.
ஆனாலும் நளிராவை தன் கைபிடியிலே இருந்து தனித்து விட்டான் இல்லை. அணைப்பும் முத்தங்களும் இல்லாது அந்த நாளே செல்லாது அவர்களுக்குள்.
ஆசையாய் அருகில் நெருங்கினாலோ, பிரியமாக முத்தம் தந்தாலோ “என்னவோ மாதிரியிருக்குங்க, இந்த ஸ்மெல் நல்லாவே இல்ல. வாசனை திரவியம் பயன்படுத்த வேண்டாங்க” அவனை ரொம்பவே சோதித்தாள்.
“இதுக்குத்தான் சொன்னேன் வேண்டாம்னு கேட்டியாடி” மற்ற நேரமாக இருந்திருந்தால் அவளைக் கட்டாயப்படுத்தி சேர்ந்திருப்பான். ஆனால் சோர்வுடன் வாடிவதங்கிப் போய் இருப்பவளிடம் தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ளவே பிடிக்கவில்லை அவனுக்கு.
“உரசாம படுங்க ஒரே இம்சையா இருக்கு. இதென்ன மீசையை இவ்ளோ அடர்த்தியா வச்சுட்டு. ப்ச் கையை மேல போடாதீங்க” பிடித்தமெல்லாம் பிடிக்காது போக, உரக்க கலக்கத்தில் அவன் மார்பில் கைவைத்துத் தள்ளினாள்.
நடு இரவில் அவள் இவ்வாறு செய்யும் பொழுது அவன்தான் தூக்கம் கலைந்து தவித்து போவான்.
“கஷ்டப்பட்டு அடக்கிட்டு இருக்கேண்டி. இப்படியே பண்ணு பாவம் பார்க்காம உன்னை கடிச்சு தின்னுருவேன்டி” அவளை இழுத்து மார்போடு அணைத்து, அவள் இதழ்களை தன் இதழ்களால் வருடிட.
“ச்சீய் தள்ளிப் போங்க. ஐ ஹேட் திஸ்” வயிற்றில் இருக்கும் கரு வளர வளர ஹார்மோன்கள் தன் வேலையைக் காட்டிட, அவனது அருகாமையில் முரண்டு பிடித்தாள் பெண்.
“தள்ளித்தான் இருந்தேண்டி. நீதான் சீண்டி விட்டே அனுபவி” அவள் மீது மென்மையாய் படர்ந்தவன் அவளுக்கு வலிக்காது ஒரு கூடலை நடத்திட,
அவள்தான் அவன் அதீத மென்மையில் தவித்துப் போனாள்.
ஆரம்பத்தில் வேண்டாம் வேண்டாம் என அவனைத் தடுத்தவள், அவன் தொடுகையில் சர்க்கரை போலே கரைந்து போனாள். ஆணின் இறுகிய கரங்களுக்குள் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தவள் கிறங்கிப் போனாள்.
மிதவேகம் பிடிக்காது அவன் தோள்களில் நகம் பதித்து தன் ஆசையைக் கூறாது கூற. அவனோ அவளது நிலையை கருத்தில் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்தினான். அவளுக்கு பிடித்த விதத்திலேயே அவளோடான தருணங்களைக் கழித்தான்.
இதில் துருவ் உடல்நிலை தேறி வருகிறதென்று மருத்துவமனை வேறு செல்ல வேண்டியது இருந்தது. ஆரியனும் அவனுமே அங்கே இங்கே அலைந்தாக வேண்டிய கட்டாயம். யாராவது ஒருவர் துருவ் அருகில் இருந்தே ஆக வேண்டிய சூழ்நிலை.
துருவ் கண் விழித்தால், அருகில் யாருமில்லையென பயந்து போக வாய்ப்பு உள்ளது என்று கருதியதால் ஆரியன், சிபின் இருவரில் யாராவது ஒருவர் கட்டாயம் அவனோடு இருப்பார்கள்.
மிரா சிபின் வீட்டுக்கு வரும் நேரங்களில் அங்கே சென்று வருவார். துருவ் நளிரா இருவரையுமே தன் கண் பார்வையிலேதான் வைத்திருந்தார் மிரா.
வீட்டில் வேலையாட்கள் இருப்பதால் நளிராவுக்கும் செய்வதற்கு எந்த வேலையும் பெரிதாக இருப்பதில்லை. நடைப்பயிற்சி செல்வதும், பெற்றோர்களுடனும், சகோதரிகளுடனும் தோழியுடனும் பேசுவதில் நேரம் நன்றாகவே சென்றது அவளுக்கு.
அன்று மதிய நேரம், சிபினும் நளிராவும் ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தனர்.
“அம்மா வீட்டுக்குப் போகணுங்க” தயங்கித் தயங்கி ஆரம்பித்தாள்.
பைலில் உள்ள பேப்பர்களைத் திருப்பிப் பார்த்திருந்தவனின் விரல்கள் ஒருநிமிடம் தன் அசைவை நிறுத்திட, “எதுக்கு?” அதட்டலாய்க் கேட்டான்.
அதிலேயே அவளுக்கும் நடுக்கம் பிறந்திட, “வளைகாப்பு வைக்கறாங்கங்க” நேராக வந்து அழைத்தும் இப்படியொரு கேள்வியைக் கேட்டால் எப்படியாம்? என்றிருந்தது அவளுக்கு.
“அம்மா போகட்டும்” அலட்சியம் அவனிடம்.
“அப்போ நான் போகவேண்டாமாங்க. கூடப் பிறந்தவங்களுக்கு விசேஷத்துக்கு நான் போகாம எப்படி?” கல்யாணம் ஆச்சுன்னா பெத்தவங்களைப் பார்க்கவும் இப்படிக் கெஞ்சிட்டு நிற்கணுமா? அவளுக்கு ஆயாசமாக இருந்தது.
“வேண்டாம்னா விடேன்” அவன் அழுத்தமாக சொல்லிவிட.
“எல்லாமே உங்க விருப்பம்தானா? அப்போ எப்பதான் என்னை புரிஞ்சுக்கப் போறீங்க? நானென்ன உங்களுக்கு அடிமையா?” அழுகையுடன் கேட்டிருந்தாள் நளிரா.
“ஹேய்!” ஆத்திரமாக பைலை தூக்கி வீசியிருந்தவன் எழுந்து நிற்க.
அவன் சப்தத்தில் கிட்சனில் நளிராவுக்கு சாப்பிடுவதற்காக மாங்காய் சுண்டல் கலந்த சாலட் செய்து கொண்டிருந்த மிரா என்னவோ ஏதோவென்று அங்கே ஓடி வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் அவர் அருகில் ஓடிய நளிரா “அத்தை” என்று கேவலுடன் கட்டிக் கொண்டாள்.
அவளுக்கு எப்படியாவது அம்மா வீட்டுக்குப் போகணுமே, அப்படிப் போகாம விட்டுட்டா ரொம்ப வருத்தப்படுவாங்க. அதுமட்டுமா வரவங்க அவங்களை ஏளனமா பேசுவாங்களே என்ற பதற்றம் தொற்றிக் கொள்ள, சண்டை பிடிச்சாவது வளைகாப்புக்கு கிளம்பியாகணும் என்ற பிடிவாதம் எழுந்தது.
“அறிவிருக்காடி உனக்கு. சும்மாவே அங்க வலிக்குது இங்க வலிக்குதுன்னு தள்ளித் தள்ளிப் போற. பக்கத்துல வந்தாவே அய்யோன்னு கத்துற. இப்போ அங்க போக மட்டும் இனிப்பா இருக்கோ. கொன்னுடுவேன் பாத்துக்க. யாருகிட்ட ட்ராமா பண்ணிட்டு இருக்க நீ” எரிமலையாய் நின்றவனை விளங்காது பார்த்தனர் பெண்கள் இருவருமே.
அவனோ அவர்கள் பார்வையைப் புரிந்து கொள்ளாது, தனக்கு போன் வரவும், “என்கிட்டே பேசுறப்ப கவனமா பேசுடி” ஒற்றை விரலை உயர்த்தி மிரட்டிவிட்டு, தரையில் இருந்த பைலை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் அலுவலகத்திற்கு.
நளிரா பிரம்மை பிடித்தது போல நிற்க, “ஒண்ணுல்லம்மா வா வந்து உட்காரு. அப்புறமா உன்கிட்டத்தான் வந்து நிப்பான் பாரேன்” அவளை சமாதானப்படுத்தினார் மிரா.
ஏற்கனவே துருவ் பத்திய கவலையில் இருப்பவரை மேலும் வருத்தாமல், கவலையை மறைத்து அவரிடம் புன்னகை முகத்தோடு பேச ஆரம்பித்தாள் மிரா.
ஆனால் அடக்கி வைக்கப்பட்ட கோபம் ஒருநாள் நிச்சயம் வெடிக்கத்தான் செய்யும். அது சமயம் அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தி இருவருக்குமே தேவைதான்.
இப்படியே ஒரு வாரம் செல்ல. துருவ் கண் விழித்துவிட்டான். மேலும் ஒரு வாரம் அவனை அங்கேயே வைத்தும் பரிசோதித்தவர்கள் முழு திருப்தி என்ற நிலையில் அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
துருவ் நளிராவைப் பார்த்ததும் “நல்லாயிருக்கீங்களா அண்ணி?” என்று நலம் விசாரிக்க, அனைவருக்குமே நிம்மதியானது. நளிராவுக்கு விஷயம் தெரியாததால் அதை இயல்பாகவே எடுத்துக் கொண்டாள்.
மிரா அந்த அளவிற்கு மகனின் மனதில் நளிரா சிபினின் மனைவி, உனக்கு அண்ணி என்பதை எடுத்துச் சொல்லியிருந்தார். நண்பன் குணமானதில் ஆத்மா ரவிக் இருவருக்கும் அத்தனை சந்தோசம்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!