வேந்தன்… 9

5
(4)
வேந்தன்… 9
“என்ன மலரு கல்யாண வேலையை ஆரம்பிச்சாச்சா?” நளிராவின் வீட்டு கலகலப்பு வேணியை அவர்கள் வீட்டில் இருக்க விடவில்லை. ஓடியே வந்துவிட்டார் இங்கே. 
“இப்பதான் அவளுக்கு போட வேண்டியதை கணக்கு பார்க்கறோம்க்கா. இனிதான் யோசிக்கணும் மத்தது எல்லாம்” அவருக்கு பதில் சொன்ன மலர்விழிக்கு அப்பத்தான் சம்மந்தி வீட்டார் வரும் நினைவே வந்தது.
மகள்கள் மூவரும் வீட்டில் அணியும் உடையை அணிந்திருக்கவும், “அடடா பொண்ணுங்களா சம்மந்தி வீட்டுலருந்து வரேன்னு சொன்னாங்க. போய் ட்ரெஸ் மாத்திகிட்டு வாங்க” அவர்களை விரட்டிவிட.
“அம்மா அக்காவைதான பார்க்க வராங்க, நாங்க இப்படியே இருக்கோம்” நளிரா தான் அணிந்திருக்கும் உடையே வசதியாக இருக்கவும் மறுத்தாள். 
“இப்போ போறீங்களா இல்லையாடி” மலர் ஓங்கி கத்திடவும், கத்திய கத்தலில் புரையேறி இருமலே வந்துவிட்டது இவருக்கு. 
“பாத்துடி பாத்து. அப்பவே சொன்னேன் கேட்டியாடி. செல்லம் குடுத்து குட்டிச் செவுராக்கி வச்சிட்ட இவளுங்களை. இப்பப் பாரு தலையில ஏறி நிக்கறாளுங்க” வாணி இதுதான் சாக்குனு பெண்களை திட்டினார்.
“இதப்பாருடா நாட்டாமை பஞ்சாயத்துக்கு வருது” நளிரா குறும்பு குரலில் சொல்லிவிட்டு அறைக்குள் செல்ல. அங்கேயும் ஒரு சலசலப்பு வரத்தான் செய்தது.
“ஏய் உங்கள ட்ரெஸ் மாத்திட்டுதான வரச் சொன்னேன்
 அங்க என்னங்கடி சண்டை?” வாணிக்கு நிஜமாகவே புரியவில்லை. அவங்கவங்க துணிய தேடி எடுத்து உடுத்திக்கறாங்க. இதுல எதுக்கு சண்டை வரணும்? மண்டையை பிச்சுகிட்டது அவருக்கு.
ஏனெனில் மூணு பெண்களுமே வேறு வேறு அளவுகளில் இருப்பார்கள். சைத்ரா உயரமாக இருப்பாள், அதற்கேற்ற உடம்பும் அவளுக்கு இருக்கும். ஆர்த்தியும் உயரம்தான் ஆனால் சற்றே பூசிய உடல்வாகு. 
இவர்களில் கொஞ்சமும் பொருந்தாமல் மலர்விழியின் உடல் வாகை அப்படியே உரித்து வைத்து பிறந்திருந்தாள் நளிரா. ஜாடை மட்டும் நாதனின் தாயையும் தந்தையையும் கொண்டிருப்பாள். 
சைத்ரா ஆர்த்தியின் அருகே நளிரா நின்றால் அவர்கள் கழுத்து வரைக்குத்தான் வருவாள். செதுக்கி வைத்த தேகம், அளவான அமைப்பும் நளிராவை தேவதையாகவே மாற்றியது. எந்த உடையை உடுத்தினாலும் இவளுக்கு பொருந்தும். அதனால் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை உடைகள் தேர்வில். 
அதனால் ஒருவர் உடை நிச்சயமாக மற்றவர்களுக்கு பொருந்தாது. வாணிக்கு இங்கேதான் குழப்பம். 
“அதையேக்கா கேக்கற எல்லாத்துக்கும் சண்டைதான்” மலர் சிரித்தார்.
“பிள்ளைங்க இப்படியே ஒத்துமையா இருந்தா சரிதாண்டி” வாணியும் புன்னகைத்தார். 
மனோகரியும் ராகவனும் வந்துவிட, அவர்களை வரவேற்றவர்கள், அமரவைத்து உபசரித்தார்கள்.
சைத்ரா அவர்களுக்கு குடிக்க டீ தயாரித்து எடுத்துவர, அதை கையில் எடுத்த மனோகரி நளிரா எங்கே எனப் பார்வையால் தேடிட. ஆர்த்திதான் அவர்கள் சாப்பிடுவதற்கு ஒரு தட்டில் காரமும் இனிப்பும் எடுத்து வந்தாள்.
“கலயாணம் வேற நெருங்கிகிட்டு இருக்குது. ஏற்பாடுகள் எப்படிப் போகுது?” வாணி அவர்களிடம் விசாரிக்க.
“அதைப் பத்திதான் பேச வந்தோம்ங்க. எல்லாம் நல்ல விஷயம்தான்” மனோகரி கணவரைப் பார்க்க.
அவரோ “நீயே பேசும்மா” என அனுமதி தந்துவிட்டார். எதுக்கு தேவையில்லாமல் தான் ஒன்றைப் பேசி வைத்து, வீட்டுக்குப் போய் அதற்கும் வாங்கி காட்டுவானேன். என்று மனைவிக்கே விட்டுக்கொடுத்தார் பேசும் வல்லமையை. 
மனோகரி நளிராவைத் தேட, அதைக் கவனித்து “சைத்ரா இங்க வந்து நில்லும்மா” வாணி சைத்ராவை அழைத்தார். 
“உங்க ரெண்டாவது பொண்ணுக்கும் அடுத்து மாப்பிள்ளை பார்க்கணுமே” மனோகரி பேச்சை ஆரம்பிக்க.
“அதுக்கென்னங்க அவசரம். முதல்ல மூத்தவளுக்கு முடியட்டும். ரெண்டு வருஷம் போனப்புறம் இளையவளுக்கு பார்ப்போம்” என்று மலர்விழி சொன்னார்.
“கல்யாண வயசுதான் ஆச்சேங்க. பிறகு எதுக்கு லேட் பண்ணனும். வரன் வரும்போது கட்டிவைச்சிடுங்க” மனோகரி அழகாய் ஆரம்பிக்க.
ராகவன் மனைவியை மெச்சிக்கொண்டார் “இவ எப்பவுமே அறிவாளிதான். எப்படி அசால்ட்டா பொண்ணு கேட்கறா பாரேன்” பொண்ணு கிடைக்கறது எத்தனை கஷ்டம்னு கடந்த ரெண்டு வருஷங்களில் அனுபவித்திருந்தார். 
நாய் படாதபாடுபட்டாச்சு இந்தப் பொண்ணை மகனுக்கு முடிக்கறதுக்குள். இனி அவனுக்கு வேற பார்க்கணுமே என்ற நினைப்பே இவரை அக்கடான்னு மூச்சுவிட முடியாமல் செய்தது. 
அவர்கள் பேச்சே மலர்விழிக்கு புரியவில்லை, ஆனால் வாணிக்குப் புரியவும் உற்சாகம் வந்தது அவருக்கு. ஒரே நேரத்தில் ரெண்டு பொண்ணுங்களை கட்டிக்குடுக்குற வாய்ப்பு தானாக கிடைக்குதே இவங்களுக்கு. உற்சாகமானவர்.
“அதுக்கென்னங்க நல்ல இடமா அமைஞ்சா கட்டிக்குடுத்துற வேண்டியதுதான்” மலர் குறுக்கே புகுந்து தட்டிப் பேசும்முன் வாணி பதில் சொன்னார்.
“அதுக்குத்தான் நாங்க வந்திருக்கோம். எங்க ரெண்டாவது பையன் ஆரவ்க்கு உங்க பொண்ணு நளிராவை குடுங்களேன். ஒரே நாள்ல கல்யாணத்தை முடிப்போம்” மனோகரி கேட்க. 
ஆர்த்திக்கோ இந்தப் பேச்சு கசந்தது. ஆரவ் மீது அவளுக்கு ஈர்ப்பு வந்திருக்க, பேச்சு வேறு திசையில் செல்கிறதே, விழித்தவள் நளிராவை அறைக்குள் அழைத்துப் போய் தன் விருப்பத்தை சொன்னாள்.
“அடேங்கப்பா அப்பாவியாட்டம் இருந்துட்டு லவ் பண்ணியிருக்க பாரேன்” நளிரா வியக்க.
“லூசு இது லவ் இல்ல. பிடிச்சிருக்கு அவ்வளவுதான்” ஆர்த்தி அவள் கையைப் பற்றிக்கொண்டாள். “உனக்கு வேண்டான்னு சொல்லிருடி ப்ளீஸ்” கெஞ்சிக் கேட்டுகிட்டாள்.
“சரிடி வா அம்மா கூப்பிடறாங்க” இருவரும் வெளியே வர.
பெரியவர்கள் அவர்களையே பார்த்தனர். 
“நளிரா” மலர்விழி என்ன பேசுவதெனப் புரியாது ஆரம்பிக்க.
“அம்மா நீங்க பேசுறது காதில் விழுந்ததும்மா. எனக்கு இப்பக் கல்யாணம் வேண்டாம். ஆர்த்திக்கு பண்ணி வைங்க” நளிரா அத்தனை பேர் முன்பும் பட்டுன்னு உடைச்சே சொல்லிவிட்டாள்.
“அதிகப்பிரசங்கிதனமா பேசாதடி” வாணி அவளை மிரட்டினார்.
ஏனோ எடுத்த எடுப்பில் தானே முடிவெடுத்து பேசும் நளிராவை மனோகரிக்கு பிடிக்காமல் போனது. 
“எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்மா. என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க” நளிரா அறைக்குள் சென்றுவிட்டாள். கதவை சாத்தி தாழ் போட்டுவிட்டு கட்டிலில் படுத்தவளுக்கு மனதில் பாரம் உண்டானது. 
மற்றவர்கள் முன் அம்மாவிடம் இப்படிப் பேசிவிட்டோமே என்ற குற்ற உணர்வு அவளை அரித்தது. இப்படிப் பேசும் பெண்ணும் இல்லையே அவள். தலையணையில் முகத்தை அழுந்தப் பதித்தவள் கண் மூட.
அங்கே ஆர்த்திக்கு திருமணம் பேசிக்கொண்டிருந்தனர்.
காலதரிசியாய் தனக்காய் காத்திருக்கும் கசப்பான வாழ்க்கை இப்போதே தெரியவந்திருந்தால் திருமணத்திற்கு சம்மதித்திருப்பாளோ நளிரா. 
தன் எதிரியை அப்போதே கொல்லாத மிருகமானது துடிக்க வைத்து குற்றுயிராக்கி இதுக்கு மேல முடியாதுன்னு மயங்கும் தருவாயில்தான் புசிக்குமாம். பசி தீர்ந்த திருப்தியும் கிடைக்குமாம். 
மென்மையான நளிர் பெண் அதுபோல மனித மிருகத்தின் கையில் சிக்காதிருக்க வேண்டுமே. 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!