வேந்தன்…18
“எங்க பக்கம் புளிக்குழம்புல வெங்காயம் சேர்க்க மாட்டோம்மா. தாளிப்பும் வெந்தயமும் கூடவே கொஞ்சமா பூண்டும்தான் சேர்ப்போம். நீங்களும் கத்துக்கோங்க” என்று மாமியார் வீடியோ காலில் சமையல் குறிப்புகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்க,
“சரிங்க அத்த, ஆமா அத்த. ஓகே அத்த” என்று
முகத்தை சிரிச்சபடிக்கே வைத்திருக்கும் கொடுமையை வெகு நேரமாக அனுபவித்திருக்கும் சகோதரிகள் மீது கொஞ்சமும் எதிர்பாராமல் இவள் விழுந்து வாரி வைக்க.
என்னவோ ஏதோவென்று பதறிப் போனார்கள் பெண்கள் இருவரும். அப்போ அப்போ புரளி வேற கிளம்புதே, வினோத மிருகம் ஒன்று ஊரில் உலாவுவதாக. அப்படி ஏதாச்சும் இருக்குமோ!
பீச் வேறு, நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும், அதனால மடிமீது விழுந்தவளை தங்கை என்று அறியாமல் உருட்டிக் கீழே தள்ளியவர்கள், அதன் பிறகேதான் அவளை உணர்ந்தார்கள்.
மணலில் ஒருமுறை புரண்டு எழுந்த நளிரா திரும்பவும் அவர்கள் மீதே விழுந்து வைக்க “பிசாசே வலிக்குதுடி” ஆர்த்தி அவளை மீண்டும் மணலில் தள்ள.
“பேய்ங்களா எதுக்குடி தள்ளி விட்டீங்க?” அவளுக்கும் பதறித்தான் போச்சு. ராட்சசன்கிட்டே இருந்து தப்பி பிழைச்சு ஓடிவந்தவள் இவர்கள் மீது விழ, அவர்களும் பதிலுக்கு தள்ள முறைச்சுக்கிட்டு நின்றார்கள்.
இவர்களுக்கு இணையாக அருகில் இரண்டு நாய் வேறு குரைக்கவும், வெகு அசிங்கமாய் உணர்ந்தார்கள். “சாரிக்கா தப்பு என் மேலதான்” காதைப் பிடித்து மன்னிப்பும் கேட்டுவிட்டாள் நளிரா.
“சரி சரி விடுடி. நீயும் நல்லதைத்தான் பண்ணியிருக்க” சொன்ன சைத்ராவுக்கு அத்தம்மா என்னம்மா பிளேடு போடுது? நினைக்கவே மலைப்பாக இருந்தது.
ஆர்த்தியின் போன் திரும்பவும் ஒலித்தது. எடுத்துப் பார்த்தவள் “அக்கா அத்தம்மாதான் கூப்பிடுது” கடுப்பை மறைத்துச் சொல்ல.
“சத்தியமா முடியலைடி. போனை எடுக்காம விடு. வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்” சைத்ரா எழுந்தாள்.
அவர்கள் கூடவே தானும் எழுந்தவள் சுற்றுமுற்றும் பாராமல் இருவருக்குமிடையில் பாதுகாப்பாக நடந்தாள்.
தன்னை தொந்தரவு செய்தவன், இங்கேதான் இருக்கான் என்று அவள் உள்ளுணர்வு தெளிவாக உரைக்க, பார்வையை வலது இடது என்ன என அசைக்காது நடந்தாள்.
எவ்வளவு தைரியம்? அவளுக்கு கைகள் கால்கள் கிடுகிடுவென நடுங்கியது. இதற்குத்தான் தனியாக அனுப்ப யோசிக்கிறார்கள் போலும். நினைத்தவளுக்கு, இதற்காக பெற்றவர்களை எதிர்த்த தருணங்கள் மனதில் வந்து போனது.
“சாரிம்மா, சாரிப்பா” மன்னிப்பு கேட்டவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. ஆனால் இவர்கள் முன் அதைக் காட்டிக்கொள்ளாமல் அழுத்தமாய் இருந்தாள்.
கொஞ்ச நேரம் தனியாக இருந்தால் பரவாயில்லை என்று தோன்றவே, தன் தோழி சுபிக்கு அழைத்தாள்.
“நளிரா என்ன இந்த டைம்ல?” தூக்கம் கலந்த குரலில் சுபி ஆச்சரியமாக விசாரித்தாள்.
“மணி இப்ப ஆறுடி” பற்களை கடித்தாள் நளிரா.
“ஓ ஆறா? சாரிடி இன்டர்வ்யுக்கு போனேன். வெய்யில்ல டயர்டா ஆகிட்டேன். அதான் வந்ததும் தூங்கிட்டேன். அதான் டைம் தெரியலை” சுபி முகத்தைக் கழுவியவாறே அவளுக்கு ப்அதில் சொன்னாள்.
“என்னமோ பண்ணித் தொலை. இப்ப கிளம்பி பீச் வா. எனக்கு உங்க வீட்டுக்கு வரணும். உன் கூடப் பேசியே ஆகணும்” நளிரா சொல்லிவிட்டு, அவள் பதிலுக்கே காத்திராமல் போனை வைத்துவிட்டாள்.
“ஏய் நான்..” சுபி கத்தக் கத்த அவள் போனை வைத்துவிட, “இவளை” அங்கே அவள் புரியாமல் அவசமாகக் கிளம்பினாள்.
இப்படி அவசரமாக அழைக்கவே மாட்டாள் என்பதால் அவள் பேச்சைத் தட்டாமல் தந்தையிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.
அவள் தன்னைப் பார்ப்பாள் என்று எதிர்பார்த்த சிபினுக்கு அது ஏமாற்றமாகவே இருந்தாலும், சுவைத்தறிந்த இதழின் சுவை இன்னும் இனிக்க, இதழ்களை நாவினால் வருடினான் சிபின்.
“ஸ்வீட் கர்ள்” கீழுதட்டை கடித்தான் கிறக்கமாய்.
அவனுக்கு நம்பவே முடியவில்லை. நாமா இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு ஒரு பெண்ணின் பின்னால் அழைகிறோம்? இருகைகளாலும் தலையை அழுந்தக் கோதியவனுக்கு, அப்போதுதான் மீன் வாசம் நாசியில் ஏற, தன் வாகனத்தில் ஏறிக் கிளம்பினான்.
அவர்களைக் கடந்து செல்லும் பொழுது அவளுக்கு பை சொல்லலாமா என்று யோசித்தவன், சகோதரிகள் முன் அவளை சங்கடப்படுத்த வேண்டாமென விட்டுவிட்டான்.
“ஏய் உன் தலையில எப்படி இவ்ளோ பூ?” ஆர்த்தி கத்தியதில் நளிரா அலறிவிட்டாள்.
“பைத்தியமே எதுக்குடி கத்துற? இருக்குறது பத்தாதுன்னு இவ வேற” சைத்ரா தங்கையை கோபித்துக் கொள்ள.
“அக்கா இவ வரும் போது முல்லை பூதானே வச்சிருந்தா? இப்ப கூட பூ வேணும்னு கேட்டாதான?” ஆர்த்தி அவளை சாட்சிக்கு தயார் பண்ணினாள்.
“அப்படியா?” என்றுவிட்டு வேறு யோசனையில் மூழ்கிட. மாமியார் படுத்தும் பாட்டில் இப்போதே சைத்ராவுக்கு கண்ணைக் கட்டியது. அதனால ஆர்த்தி சொல்வதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
“அக்கா!” ஆர்த்தி குரலெடுத்து கத்த.
“ஏய் இப்ப என்னடி? அவளுக்குத்தான் குண்டுமல்லின்னா பிடிக்கும்னு தெரியுமில்ல. அதான் வாங்கி வச்சிருப்பா. உனக்கு வேணும்னா வாங்கிக்க” வார்த்தைகளால் கடித்தாள் தங்கையை.
நளிராவோ மற்ற நேரமானால் தங்கை இப்படித் திட்டு வாங்கும்போது, கூட சேர்ந்து இன்னும் ஒத்து ஊதுவாள். இப்போதோ அவளே தேள் கொட்டிய நிலையில் இருக்கவும் இதைப் பெரிதாகக் எடுக்கவில்லை.
ஆனால் ஆர்த்திக்கு இதுதான் சந்தேகத்தைத் தந்தது. “ஒழுங்கா உண்மைய சொல்லுடி” என நளிராவின் கையைப் பிடிக்கப் போக.
சுபியின் ஸ்கூட்டி அவர்களுக்கிடையே வந்து நின்றது நளிராவைக் காப்பாற்றும் நந்தியாக.
“ஹாய் கைஸ்” சுபியின் உற்சாகக் குரல் கேட்டதும் தான் நளிராவுக்கு நிம்மதியானது.
“ஹப்பா” பெருமூச்சும் வந்தது.
“சரிடி வா போகலாம்” அவள் பைக்கில் ஏறியமர்ந்தவள்,
“அக்கா அம்மாகிட்டே சொல்லிடு. நைட் இவ வீட்டுலயே சாப்பிட்டுக்கறேன்” தகவல் சொன்னவள்,
“சீக்கிரம் கிளம்புடி” ஆரத்தியை திருட்டு முழியோடு பார்த்த நளிரா சுபி தோளில் தட்டினாள்.
“தப்பிச்சுட்டா” கைகளை இடுப்பில் வைத்தவள், திரும்பவும் போன் ஒலிக்க,
“இவங்களை” பல்லைக் கடித்தவள் திரும்பவும் மாமியார் போனில் வர.
எடுத்துக் காதில் வைத்தவள், “அத்தம்மா கொஞ்சம் பிஸியா இருக்கோம். பிறகு பேசுவோம்” சொல்லிட்டு பட்டுன்னு போனை அணைத்தாள்.
சைத்ராவோ வாயில் கைவைத்து அதிர்ந்து நின்றுவிட்டாள். “அடிப்பாவி” என்று.
அடுத்து நிஷாந்த் அழைப்பு வர சைத்ரா பேசினாள்.
“சைத்து அம்மாகிட்ட பேசும் போதே போனை கட் பண்ணிட்டியாம். வருத்தப்படறாங்க” இனி இப்படி செய்யாதே என்பது போலவே அவன் பேச்சு இருக்கவும்.
“அவசரமா ரெஸ்ட் ரூம் போனேன். அதான் கட் பண்ணேன்” வெடுக்குன்னு சொன்னவள் அவன் பேச்சையும் கத்தரித்தாள்.