வலிமை வாய்ந்த அவனுடைய வெண்கரமோ சிகப்பு நிற ஒயின் நிறைந்த அழகிய கண்ணாடிக் குவளையைப் பற்றி இருந்தது.
நாசுக்காக சில மிடரை அருந்தியவன் தன்னை நெருங்கிய மாதுவை என்ன என்பது போல பார்த்தான்.
“ஹாய் ஹனி, ஏதோ பேசணும்னு சொன்னியே.. என்ன மேட்டர்..?” எனக் கேட்டாள் கிளாரா.
கிளாரா அவனுடைய தற்போதைய காதலி.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த வீட்டில் அவளுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் நம் நாயகன்.
அவளுடன் ஒரு வருடம் வாழ்ந்தது அவனுக்கே வியப்புதான்.
இதற்கு முன்னர் இருந்த அவனுடைய காதலிகளோ இரண்டு மாதம் கூட அவனுடன் தாக்குப் பிடிக்கவில்லை.
இத்தோடு மூன்றாவது முறையாக லிவிங் டுகெதரில் இருப்பவனுக்கு இந்தக் கிளாராவையும் ஏனோ பிடிக்காமலேயே போனது.
இவளுடனான உறவு நன்றாக இருந்தால் இப்படியே கிளாராவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில்தான் அவன் இருந்தான்.
ஆனால் ஏனோ அந்த முடிவை அவனால் இக்கணம் ஏற்க முடியவில்லை.
வாழ்க்கை சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருப்பது போலத் தோன்றியது அவனுக்கு.
அதேபோல தன்னுடன் லிவிங் டு கெதரில் இருக்கும்போதே கிளாரா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதை அறிந்தவனுக்கு இந்த உறவை நீட்டிப்பதில் அவ்வளவாக விருப்பம் இல்லாமற் போனது.
அதற்காக அவள் வேறு யாருடனும் பழகக் கூடாது என்றெல்லாம் கூறும் நபர் அவன் கிடையாது.
வாழ்க்கை என்பது அவனைப் பொறுத்தவரை பிடித்ததை ரசித்து ருசித்து வாழ்வதுதான்.
சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகள், கலாச்சாரங்கள் என்பவற்றையெல்லாம் உள்ளே நுழைத்து வாழ்க்கையை சிறிய வட்டத்திற்குள் கொண்டு வந்து சுதந்திரம் இல்லாமல் வாழ்வதில் அவனுக்கு கிஞ்சித்தும் இஷ்டம் இல்லை.
“என்ன ஹனி பேசணும்னு கூப்பிட்ட.. பட் இப்படி சைலன்ட்டா இருந்தா என்ன அர்த்தம்..?” எனக் கேட்டாள் கிளாரா.
“எஸ்… முக்கியமான விஷயம் பேசணும்…” என்றான் அவன்.
“சொல்லு டார்லிங்..”
“எனக்கு இந்த வாழ்க்கை போரடிக்குது கிளாரா.. இத இத்தோட ஃபினிஷ் பண்ணிடலாம்..” என ஒவ்வொரு வார்த்தைகளையும் நிதானமாக உச்சரித்தான் அவன்.
“வாட்…?” அதிர்ந்து விட்டாள் அவள்.
“நான் சொன்னது புரியலையா கிளாரா..? அகைன் சொல்லணுமா..?” எனக் கேட்டான் அவன்.
“என்ன சொல்ற நீ..? பட் நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னியே…”
“எக்ஸ்க்யூஸ் மீ.. வாழ்ந்து பார்க்கலாம் பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிப்பேன் இல்லன்னா முடியாதுன்னு உன்கிட்ட ஆரம்பத்திலேயே தெளிவா சொன்னேன்..” என அழுத்திக் கூறினான் நம் நாயகன்.
திணறி விட்டாள் அவள்.
அவன் ஒன்றும் பொய் சொல்லி ஏமாற்றவில்லையே.
இவள் திருமணம் செய்து ஒன்றாக வாழலாம் எனக் கூறிய போது ஆரம்பத்திலேயே பிடித்தால் மட்டுமே திருமணம் செய்வேன் என்று கூறிதான் அவளுடன் பழகவே ஆரம்பித்தான்.
அவள் எதிர்த்துப் பேசி சண்டை பிடிக்கும் இடத்தில் அவன் இல்லை.
“ரப்பிஷ் மாதிரி பேசாத கிளாரா.. நீ இப்போ யார் கூட பழகிட்டு இருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும்… நான் இல்லைனா கூட உனக்கு இன்னொருத்தர் இருக்காங்க.. இனியும் இருப்பாங்க.. ஐ க்னோ தட்..”
அவளுக்கோ முகம் சட்டென இறுகியது.
அவளைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறான்.
அவனுக்கு தெரியாதவாறுதான் மற்றைய உறவில் கவனமாக இருந்தாள் கிளாரா.
எப்படிக் கண்டுபிடித்தான் என்று அவளுக்கே தெரியவில்லை.
“பட் நான் அவன லவ் பண்ணல.. உன்ன மட்டும்தான் லவ் பண்றேன். அது ஜஸ்ட் ஃபன்…. வேணும்னா சொல்லு இப்பவே அவனோட ரிலேஷன்ஷிப்பை கட் பண்ணிடுறேன்..” என்றவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன்,
“ஹேய் நாம லண்டன்ல இருக்கோம்.. உனக்கு இங்க எல்லா விதமான சுதந்திரமும் இருக்கு.. எனக்குப் புடிச்சா நான் இன்னொரு பொண்ணு கூட பழகதான் போறேன்.. உனக்கு பிடிச்சிருந்தா நீ பழகு.. இதுல நான் ஸ்ட்ரிக் பண்றதுக்கு எதுவுமே கிடையாது..
பட் என்கூட இருக்கும்போது நீ இன்னொரு ரிலேஷன்ஷிப்ல இருக்கேங்கிற விஷயத்தை என்கிட்ட சொல்லி இருக்கணும்… இல்லன்னா என்னோட ரிலேஷன்ஷிப்பை கட் பண்ணிட்டு அவன் கூட இருந்திருக்கலாம்.. இட்ஸ் ஓகே லீவ் இட்… நான் நம்ம உறவை பிரேக் பண்றதுக்கு இது மட்டும் ரீசன் கிடையாது… ஏதோ வெறுமையா இருக்கிற மாதிரி இருக்கு… லைஃப் லாங் இப்படியே வாழ முடியுமான்னு எனக்கு தோணல.. சோ இத்தோட முடிச்சுக்கலாம்..” என்றவன் தன் கரத்தில் இருந்த ஒயின் கிளாஸை மேசை மீது வைத்துவிட்டு அவளை அழுத்தமாகப் பார்க்க,
இதற்கு மேல் அவனுடைய மனதை மாற்ற முடியாது என்பதைப் புரிந்து கொண்டவள் “ஓகே ஃபைன்…” என்றிருந்தாள்.
அவனைத் திருமணம் செய்ய முடியாது போனதில் அவளுக்கோ ஏக வருத்தம்.
இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் வகிப்பவன் அவன்.
இங்கிலாந்தின் தலைநகரான இந்த இலண்டனின் மிக முக்கிய வர்த்தக பிரமுகர்களில் ஒருவன் அவன்.
இந்தியாவில் உள்ள பல மருந்து உற்பத்தி நிறுவனங்களின் சொந்தக்காரன் அவன்.
அவனுடைய நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மருந்துகளை இருநூறு நாடுகள் இறக்குமதி செய்கின்றன.
கால் பதிக்கும் நாடுகளில் எல்லாம் அவனுடைய செல்வாக்கு இருக்கும்போது அவனைத் திருமணம் செய்ய ஆசை வரத்தானே செய்யும்.
அவன் யாழவன் பிரான்ஸிஸ் சவேரியன்..!
தந்தை கிறிஸ்தவ மதத்தையும் அவனுடைய தாய் இந்து மதத்தையும் தழுவி இருந்ததால் இரண்டும் இணைந்த வகையில் அவனுடைய பெயர் அமைந்து போனது.
பிறந்தது இந்தியாவில் என்றாலும் வளர்ந்தது முழுவதும் லண்டன் என்பதால் இந்திய கலாச்சாரத்தை பற்றிய அரிச்சுவடி கூட அவனுக்கு எள்ளளவும் தெரியாது.
அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அவனுடைய சுதந்திரம் மாத்திரமே.
பெண்களை அணைப்பது முத்தமிடுவது எல்லாம் அவனுக்கு கைகுலுக்குவது போன்ற சாதாரண விடயம்.
பிடித்திருந்தால் ஒன்றாக வாழ்ந்து பார்க்கலாம் என்ற கொள்கையில் இதுவரை மூன்று பெண்களுடன் வாழ்ந்தும் பார்த்து விட்டான்.
இதுவரை திருமணத்தில் அவ்வளவாக அவனுக்கு ஈடுபாடு தோன்றவே இல்லை.
எந்தப் பெண்களையும் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு அவனுக்குப் பிடிக்கவும் இல்லை.
இந்தியாவில் இருக்கும் அவனுடைய அன்னையோ ஒவ்வொரு வருடமும் அவனைத் திருமணம் செய்து கொள்ளும்படி பாடாய் படித்து எடுத்து விடுவார்
அவருடைய தொல்லை தாங்க முடியாமல்தான் கிளாராவை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தான் அவன்.
ஏனோ அவளைத் திருமணம் செய்து தன்னுடைய மனைவி ஆக்கிக் கொள்ள அவனுக்கு எண்ணம் தோன்றவே இல்லை.
அன்னையின் தொல்லையால் கடந்த நான்கு வருடங்கள் அவன் இந்தியாவிற்கே செல்லவில்லை.
இந்த முறையும் அவன் இந்தியாவிற்கு செல்லவில்லை என்றால் அவனுடைய அன்னை நிச்சயம் இங்கே வந்து விடுவார்.
அவர் இங்கே வந்தால் அவ்வளவுதான்.
அவனுடைய வாழ்க்கை முறையைப் பார்த்து அவருக்கு நெஞ்சடைப்பே வந்துவிடும்.
சில நாட்கள் இந்தியாவில் சென்று அவருக்காக அங்கே தங்கி விட்டு வரலாம் என்ற முடிவுக்கு வந்தான் யாழவன்.
அங்கே அவனுக்கு எதிர்மறையான குணத்துடன் கலாச்சாரத்தை கடவுளாக மதிக்கும் பெண்ணை சந்தித்து அவளைக் காதல் திருமணமும் செய்யப்போவதை முன்னரே அறிந்திருந்தால் நிச்சயம் அவன் இந்த முறையும் இந்தியா செல்லும் எண்ணத்தை தவிர்த்து இருப்பான் போலும்.
அவன் ஒன்றும் தீர்க்கதரிசி அல்லவே.
நாளை என்ன நடக்கப் போகின்றது என்பதை முன்னரே அறிந்து கொள்வதற்கு அவன் ஒன்றும் ஞானியும் கிடையாது.
இந்தியா செல்வதற்கான வேலைகளை தன்னுடைய பீஏவை பார்க்கச் சொன்னவன் கிளாராவை தன்னுடைய வீட்டில் இருந்து அனுப்பி வைத்துவிட்டு இந்தியா செல்வதற்கு தயாரானான்.
****
“காலையில ஏழு மணிக்கே கோயிலுக்கு போகணும்னு சொன்னேன்.. இப்போ 8 மணி ஆகுது.. அந்த புடவைய கட்டுறதுக்கு இவ்வளவு நேரமாடி..?” என சலித்துக் கொண்டார் அன்னம்.
“ம்மா.. அந்த டெய்லர் அக்கா நான் சொன்ன மாதிரியே தைக்கலைமா.. பிளவுஸோட முதுகுப் பக்கம் ரொம்ப டீப்பா இருக்கு.. இவ்வளவு பெருசா தைச்சா எப்படி போட முடியும்..?” என தன்னுடைய அறைக்குள் நின்று சிணுங்கினாள் நம் நாயகி அர்ச்சனா.
“முதல்ல கதவ திற.. நான் வந்து பார்க்கிறேன்..” என்றார் அவளுடைய அன்னை அன்னம்மா.
அவளோ கதவைத் திறந்து விட உள்ளே வந்தவர்,
“அவ்ளோ பெருசா எதுவுமே தெரியலடி…” என அவளுடைய முதுகைப் பார்த்து கூற,
“ஐயோ என்னால இப்படி எல்லாம் போட முடியாதும்மா.. பாதி முதுகு தெரியுது..” என்றாள்.
“ஒரு இன்ச் நான் போடுறத விட டீப்பா தான்டி இருக்கு.. எனக்கு இது போட பிடிக்கவே இல்லை.. நான் இன்னைக்கு புடவையே கட்டல…” என்றவள் சுடிதார் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு தன்னுடைய மார்பை நன்றாக மறைத்து துப்பட்டாவை பின் குத்தியவள் அதன் பின்னர் தான் அறையை விட்டு வெளியே வந்தாள்.
அவள் அப்படித்தான் சிறு ஆடை விலகலைக் கூடத் தாங்கிக் கொள்ள மாட்டாள்.
கலாச்சாரம் என்பது அவளுக்கு கடவுள் போல.
வெள்ளிக்கிழமை என்றால் விரதம் இருப்பதும் கோயிலுக்குச் செல்வதும் புடவை கட்டினால் கூட இடுப்பு தெரியாமல் பாதுகாப்பதுமென அப்படியே பழகி விட்டாள்.
தன் மகளைப் பார்த்து எப்போதும் அன்னத்திற்கு பெருமைதான்.
கணவர் இல்லாமல் இரண்டு பெண் பிள்ளைகளையும் நன்றாக வளர்க்க வேண்டும் என நினைத்திருந்தவர் அவர்களுடைய சிறுவயதிலிருந்தே சில கட்டுப்பாடுகளையும் விதி முறைகளையும் கூறிக் கூறி வளர்த்து விட அவர்கள் இருவரும் அப்படியே வளர்ந்து விட்டனர்.
இனி மூத்த பெண்ணிற்கு திருமணம் செய்து கொடுத்தால் ஒரு பெரிய கடமை முடிந்து விடும் என்பதே அவருடைய எண்ணம்.
ஆலயத்திற்கு சென்றவர் தன்னுடைய பெண்ணிற்கு ‘நல்ல வரன் தேடி வர வேண்டும்..’ என இறைவனிடம் மனம் உருகிப் பிரார்த்திக்க,
அதே கணம் இந்தியாவில் தன்னுடைய காலை 4 வருடங்களுக்குப் பிறகு பதித்திருந்தான் யாழவன் பிரான்சிஸ் சவேரியன்.
Super vini sis
Super super super super super.👌👌👌👏👏😍😍🥰🥰🤩🤩❤️❤️❤️