01. நெருப்பாய் நின் நெருக்கம்..!!

4.5
(82)
நெருப்பாய் நின் நெருக்கம்
        ஸ்ரீ வினிதா
நாயகன் – குருஷேத்திரன்
நாயகி – அபர்ணா
டீசர் – 01
“என்னால முடியாது.. அந்த அரைக்கிழவன என்னால கல்யாணம் பண்ணிக்க முடியா என்னது..” அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தினாள் அவள்.
“வாய மூடு அபர்ணா.. அவர் என்ன அரைக்கிழவனா..? முப்பத்தாறு வயசுதானேடி..? இப்படிலாம் எதிர்த்துப் பேசாதம்மா.. உங்க அப்பா கேட்டா உன்னைத் திட்டாம எனக்குத்தான் திட்டுவாரு..”
“ம்மாஆ… அந்த ஆளுக்கு முப்பத்தாறு இல்லம்மா முப்பத்தெட்டு.. புரியுதாஆஆஆ…? முப்பத்தி எட்டுஉஉஉஉ வயசாகுது…. நீங்க என்ன சொன்னாலும் அவன் அரைக்கிழவன்தான்.. யாராவது ஆன்ட்டியைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க… என்னால எல்லாம் அவனைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது..”
“ஏய் இப்படி ஒரு சம்மந்தம் கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்டி…”
“அப்போ நீங்களே அவன கட்டிக்கோங்க…”
“அபர்ணாஆஆ…”
“ப்ச் பிடிக்கலைன்னா விடுங்களேன்.. தாடி மீசை முடி கூட அவருக்கு நரைச்சுப் போயிருக்கும்.. இன்னும் ரெண்டு வருஷத்துல அவருக்கு நாப்பது வயசாகிரும்..”
அபர்ணாவின் அன்னையோ தவித்துப் போனார்.
“அம்மாடி….”
“ம்மாஆ வேணாம்… நீங்க இந்த கல்யாணத்தை நிறுத்துறீங்களா இல்லை நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்தட்டுமா..?” முகம் சிவக்கக் கேட்டாள் அவள்.
“பத்திரிக்கை அடிச்சு ஊருக்கே கொடுத்தாச்சு.. இனி நிறுத்த முடியாதுடி…” என்ற அன்னையை வெறித்துப் பார்த்தவள்,
“அந்த அரைக்கிழவனுக்கு இப்போ கல்யாணம் ஒன்னுதான் குறை.. அவனைஐஐஐஐ…” எனக் கத்தியவள் வாயிலில் நின்றவனைக் கண்டு அதிர்ந்து போனாள்.
நெருக்கம் – 01

 

இலங்கையின் கொழும்பு மாநகரத்தின் மிகப்பெரிய மாளிகை  போன்ற வீடு அது.
ஒரு ஊரையே குடியிருக்க வைக்கும் அளவிற்கு பெரியதாக இருந்த அந்த வீட்டின் வரவேற்பு அறையில் சிம்மாசனம் போல அவனுடைய வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான் அவன்.
அவன் குருஷேத்திரன்…!!
திடகாத்திரமான கட்டுமஸ்தான உடல் வாகுக்குச் சொந்தக்காரன்.
மற்றும் இலங்கையின் புகழ் பெற்ற சிறந்த ஓவியன்.
அவனின் முன்பு கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட அழகிகளின் புகைப்படங்கள் குவிந்து கிடந்தன.
அவனுடைய நேத்திரங்களோ வேங்கையின் நேத்திரங்களுக்கு ஒப்பாக அவற்றைக் கூர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தன.
ஒவ்வொன்றையும் ஒற்றை விரலால் தட்டித் தட்டிப் பார்த்தவன், சலிப்போடு தன்னுடைய தலையை அசைத்தான்.
“டாமிட்.. இதுல யாருமே நான் எதிர்பார்த்த மாதிரி அழகா இல்ல…” என குருஷேத்திரன் கூறியதும், அந்த அழகிகளின் புகைப்படங்களைத் தேடித் தேடி கொண்டு வந்து கொடுத்திருந்த முத்துவுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
‘என்னது யாருமே அழகா இல்லையா…?’ விழி பிதுங்கி நின்றான் அவன்.
“ஹேய் லுக்… எனக்கு வரப்போற பொண்டாட்டி ரொம்ப ரொம்ப அழகா இருக்கணும்… இந்த குருஷேத்திரனோட மனைவி, குழந்தைன்னு நான் உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் போது அவங்க ரெண்டு பேரும் எல்லாராலையும் ரசிக்கக் கூடியவங்களா இருக்கணும்… அதப் பாத்து மத்தவங்க பொறாமைப்படுற மாதிரி இருக்கணும்… அப்படிப்பட்ட அழகான ஒரு பொண்ணைத் தான் நான் தேடுறேன்… புரிஞ்சுதா…?”
“பு… புரிஞ்சுது சார்…”
“நீ கொண்டு வந்த போட்டோஸ்ல இருக்க யாருமே அவ்வளவு அழகா இல்ல… எல்லாமே சுத்த வேஸ்ட்டு…” எனத் தன் முன்னே இருந்த புகைப்படங்களைத் தட்டி விட்டான் நம் நாயகன்.
புகைப்படங்களைக் கொண்டு வந்து குவித்திருந்த முத்துவுக்கோ ஐயோவென்றானது.
‘எத்தனைப் புகைப்படங்களைத் தான் கொண்டு வந்து காட்டுவது..?
எந்தப் பெண்ணையும் அழகில்லை எனக் கூறினால் என்ன தான் செய்வது…?’
எவ்வளவு அழகான அழகிகளை எல்லாம் அவன் தேடித் தேடி புகைப்படம் எடுத்து வந்து இவனிடம் கொண்டு வந்து நீட்டினால், இவனோ இதெல்லாம் ஒரு அழகா என்பதைப் போல அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி விடுவான்.
முத்துவுக்கோ அழகிய பெண்களைத் தேடித் தேடியே வாழ்க்கை வெறுத்துப் போயிருந்தது.
ஒரு கட்டத்தில் எதுதான்டா அழகு என்பது போல குழம்பிப் போனான் அவன்.
‘இப்படியே காட்டுற பொண்ணு எல்லாத்தையும் அழகா இல்ல… அழகா இல்லன்னு… ரிஜெக்ட் பண்ணி… இப்போ 38 வயசு ஆயிடுச்சு… இதுக்கு மேலயும் லேட் பண்ணினா…. இனி அறுபதாவது கல்யாணம் தான் பண்ணனும்…’ என மனதுக்குள் முனகிக் கொண்டவன், வெளியே குருஷேத்திரனைப் பார்த்து அனைத்து பற்களையும் காட்டிச் சிரித்தான்.
(வாட்..!! நம்ம ஹீரோக்கு 38 வயசா..? அப்படித்தானே ஷாக் ஆகுறீங்க..? அட ஆமாங்க… நம்ம குருஷேத்திரனுக்கு இப்போ முப்பத்தெட்டு வயசாகுது…)
“இடியட்… இங்க என்ன டூத் பேஸ்ட் விளம்பரமா நடக்குது…? எதுக்காக இப்போ அத்தனை பல்லையும் காட்டிகிட்டு நிக்கிற..? சொன்ன வேலையை ஒழுங்கா பண்ண முடியாதா..? இல்ல இந்த இலங்கைல அழகான பொண்ணுங்களே இல்லையா…?”
“ஐயோ அப்படி இல்ல சார்.. நான் வேற பொண்ணுங்களோட போட்டோஸ் கொண்டு வர்றேன்..” என பவ்யமாகக் கூறினான் முத்து.
‘அழகே பொறாமைப்படும் பேரழகிகளைக் கொண்டு வந்து இவர் முன்னாடி நிறுத்தினா கூட அழகில்லைன்னு தான் சொல்வாரு போல.. சரியான ஜடம்..’ என மீண்டும் மனதிற்குள் குருஷேத்திரனை வறுத்தெடுத்தான் முத்து.
“ஏய் உனக்கு இன்னும் ரெண்டு வாரம்தான் டைம் அதுக்குள்ள நான் எதிர்பார்க்கிற மாதிரி பொண்ண என் கண் முன்னாடி நீ நிறுத்தலைன்னா…..” என இழுத்தவன், தன்னுடைய பேன்டின் பின்புறத்தில் இருந்த துப்பாக்கியை எடுத்து மேசை மீது வைக்க, முத்துவுக்கோ உடல் முழுவதும் சடுதியில் வியர்த்துப் போனது.
“சார்… ப்ளீஸ் சார்… கோபப்படாதீங்க… நம்ம நாட்டுல இருக்கிற 25 மாவட்டத்திலையும்… சல்லடை போட்டுத் தேடி அழகான பொண்ண கூட்டிட்டு வர்றேன்…. என்னை நம்புங்க….” என அச்சத்துடன் திக்கித் திணறியவாறு முத்து கூறி முடிக்க,
“கெட் லாஸ்ட்…..” எனக் கர்ஜித்தான் குருஷேத்திரன்.
அதன் பின்பும் அங்கே தாமதிக்க முத்துவுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது…?
திரும்பிக் கூடப் பார்க்காமல் தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே சென்றான் அவன்.
********
காலையில் எழுந்து அனைத்து வேலைகளையும் வேக வேகமாக செய்து முடித்து விட்டு வேலைக்கு செல்வதற்காக புடவையைக் கட்டிய பத்மாவோ, தன்னுடைய மூத்த மகளின் ஒற்றை அலைபேசி அழைப்பில் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு தலையில் கை வைத்தவாறு அமர்ந்து விட்டார்.
கண்கள் கலங்கி அழுகை பொங்கி வர துடைக்கத் தோன்றாது அப்படியே தலையில் கை வைத்தவாறு சாய்ந்து அமர்ந்திருந்தவருக்கு உடலில் லேசான நடுக்கம் இழையோடத் தொடங்கியது.
பாவம் அவரும் என்னதான் செய்வார்..?
மூத்த மகள் காதல் என்று வந்து நின்றதும் ஆரம்பமான பிரச்சனை அவளை திருமணம் செய்து கொடுத்து ஐந்து வருடங்கள் ஆன பின்பும் கூட இன்னும் நிற்கவேயில்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி விட்டதால், இரண்டு குடும்பமும் சேர்ந்து திருமண பேச்சுவார்த்தையை நடத்த ஆரம்பித்த போதுதான் மெல்ல மெல்ல எழுந்தது வரதட்சனைப் பிரச்சனை.
திருமணத்தை மிக மிக ஆடம்பரமாகத்தான் செய்ய வேண்டும் என மணமகன் வீட்டினர் இறுதி முடிவாகக் கூறிவிட பத்மாவின் குடும்பமோ திகைத்துத்தான் போனது.
அவரோ அரசு பள்ளியில் சாதாரண ஆசிரியர்.
பத்மாவின் கணவர் ரகுவோ வயரிங் வேலை செய்யும் கூலித் தொழிலாளி.
இருவரும் சிறுகச் சிறுக சேர்த்த சேமிப்பு எனப் பார்த்தால், அவர்களுடைய கையில் அப்போது இருந்தது ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே.
இதில் எங்கே ஆடம்பரமாக திருமணம் செய்வது…?
பத்தாததுக்கு அவர்கள் கேட்ட வரதட்சணையைக் கொடுக்க வேண்டும் என்றால், அவர்கள் இவருடைய தலையை அடமானம் வைத்தால் கூட கொடுக்க முடியாது.
அவர்களுக்கு சாதனா மட்டும் மகள் அல்லவே..!
இரண்டாவதாக அபர்ணாவும் இருக்கிறாள் அல்லவா…? அவளுடைய வாழ்க்கையையும் அவர்கள் பார்த்தாக வேண்டுமே….!
‘இந்தத் திருமணம் வேண்டாம்.. நிறுத்தி விடுவோம்…’ எனக் கூறியதற்கு மகளோ ‘விரும்பியவனை கல்யாணம் பண்ண வில்லை என்றால் இறந்து விடுவேன்…’ எனக் கண்ணீரில் கரைய, வேறு வழியின்றி தன்னுடைய மூத்த மகளான சாதனாவின் மகிழ்ச்சிக்காக, அவர்கள் வாழ்ந்த சொந்த வீட்டை 15 லட்ச ரூபாய்க்கு அடகு வைத்து விட்டு திருமண வேலையைத் தொடங்கியது அந்த நடுத்தரக் குடும்பம்.
ஆடம்பரமாக திருமணம் செய்வது என்றால் சும்மாவா….?
மேக்கப், போட்டோ, வகை வகையான விருந்து, மேடை அலங்காரம், மண்டப வாடகை, ஐயருக்கான காணிக்கை, தமது குடும்பத்தோடு மாப்பிள்ளை வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் புது ஆடைகள்… என இவை அனைத்திற்கும் 5 இலட்சத்திற்கும் மேல் செலவாகிவிட, மீதம் இருந்த 10 இலட்சமும் மாப்பிள்ளை வீட்டினர் போடப் போகும் தாலிக்கொடிக்கு  கரைந்தே போனது.
சேமிப்பு தொடக்கம் வழித்து துடைத்து வைத்திருந்த அனைத்து பணத்தையும் கரையாய் கரைத்து, மூத்த மகளது திருமணத்தை நடத்தி முடித்தால்  சீதனம் கொடுக்கவில்லை என திருமணம் முடித்த அடுத்த வாரமே மீண்டும் பிரச்சனை எழுந்தது.
காதலித்து திருமணம் முடித்தவன் பணத்திற்காக மனைவியை அடித்துத் துரத்த, கண்ணீரோடு வீடு வந்து அழுத மூத்த மகளின் நிலையைக் காணச் சகிக்காது, அரச ஊழியர்கள் எடுக்கும் வங்கிக் கடன் இருபது லட்சத்தை பத்மா எடுத்து மகளிடம் கொடுத்திருந்தார்.
அதன் பின்னர் மூத்த மகளின் பிரச்சனை முடிந்து போக, இவர்களுடைய குடும்பத்திலோ ஆரம்பமானது  வறுமை.
அடகு வைத்த வீட்டை மீட்க முடியாது வட்டி அதிகரித்துக் கொண்டே போனது.
பத்மாவிற்கு வரும் சம்பளத்திலும் மாதாமாதம் பாதிக்கு மேல் வங்கிக் கடனுக்கு செலுத்த வேண்டி இருந்ததால், ஒவ்வொரு மாத சம்பளமும் அவர்களுடைய நடுத்தர வாழ்க்கைக்கு கூட போதாது போனது பரிதாபமே.
ரகு வயரிங் வேலைக்குச் சென்று அன்றாடம் கொண்டு வரும் சிறு சிறு தொகையில் அன்றைய உணவுக்கே சரியாகிப் போக, இரண்டாவது மகளின் படிப்பு செலவுக்கு திண்டாடத் தொடங்கியது அந்தக் குடும்பம்.
கடந்த ஐந்து வருடமாக ஓய்வின்றி எப்படி உழைத்துக் கொட்டினாலும், இந்த சிக்கலான வாழ்க்கை முறையில் இருந்து மீள முடியாது தவித்துக் கொண்டிருந்தவருக்கு மூத்த மகள் அழைத்து விம்மி விம்மி அழுததும், அடுத்து என்ன பிரச்சனையோ என உள்ளம் பதைபதைத்து போனது.
‘வீட்டுக்குக் கிளம்பி வருவதாக கூறியவள் இன்னும் சில நேரத்தில் வந்து விடுவாள்.. ஏதாவது ஒரு பிரச்சனையுடன்தான் நிச்சயம் வருவாள்…’ என்பதை அறிந்து வைத்திருந்தவருக்கு வேதனையில் கண்ணீர் பெருகியது.
எவ்வளவு செலவழித்து திருமணம் செய்து கொடுத்தும், கேட்ட வரதட்சனை கொடுத்தும் கூட, மகள் சந்தோஷமான வாழ்க்கை வாழவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம் சுக்கு நூறாக நொறுங்கத் தனிமையில் தவித்துக் கொண்டிருந்தவரின் தோளில் அழுத்தமாக தன் கரத்தை பதித்தார் ரகுநாத்.
“என்ன பத்தமா…? என்ன ஆச்சு…? ஸ்கூலுக்கு கிளம்பாம எதுக்கு அழுதுகிட்டு இருக்க…?” என அவர் சற்றே பதைபதைப்புடன் கேட்க, சாதனா அழைப்பெடுத்ததையும் விடாது விம்மி வெடித்து அழுததையும், சற்று நேரத்தில் அவள் இங்கே கிளம்பி வருவதாக கூறியதையும் வலியுடன் கூறி முடித்தார் பத்மா.
பத்மாவுக்குள் இருக்கும் அதே குறையாத கலக்கம் இப்போது ரகுவின் முகத்திலும் படரத் தொடங்கியது.
தன்னுடைய வீட்டிற்குள் நடக்கும் பிரச்சனை பற்றி எதுவும் அறியாது தூக்கம் நீங்கி எழுந்தாள் நம் கதையின் நாயகி.
அவள் இந்த வீட்டின் இரண்டாவது மகள்.
பெயர் அபர்ணா..!!
படுக்கையிலிருந்து சோம்பல் முறித்தவாறு எழுந்து கொண்டவளோ அறை முழுவதும் ஒட்டி வைக்கப்பட்டிருந்த தளபதி விஜயின் புகைப்படத்தைப் பார்த்து ரசித்து பறக்கும் முத்தங்களை வழங்கிவிட்டு,
பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய பிளேயரை ஆன் செய்து பாடலை சத்தமாக ஒலிக்க விட்டவள் பாடலோடு சேர்ந்து பாடியவாறு அன்று காலேஜுக்கு அணிவதற்கான ஆடையை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.
“கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா…
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா…
தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா…
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா…”
என பாடலோடு இணைந்து பாடியவாறே வெளியே வந்தவள் தன்னுடைய தாய் தந்தையின் சோர்ந்து போன முகத்தைக் கண்டதும்,
“ரைட்டு இன்னைக்கு ஏதோ சம்பவம் ஆயிருச்சு போலயே..” என தனக்குள் முனகியவாறு மீண்டும் அறைக்குள் ஓடிச் சென்று பாட்டை நிறுத்தியவள், நல்ல பிள்ளை போல அமைதியாக மீண்டும் வெளியே வந்தாள்.
வீட்டில் இத்தனை நாட்களாக நடந்த அத்தனை பிரச்சினைகளுக்கும் முடிவாக அவள்தான் பலியாகப் போகின்றாள் என்பதை அறியாது போனாள் அபர்ணா.
💜💜🔥🔥

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 82

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!