01. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

4.7
(68)

முள்ளெல்லாம் முல்லைத் தேனே..!

-ஸ்ரீ வினிதா-

முள் – 01

மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களைப் பிரிந்திருக்கும் வலியை சாதாரணமாக வார்த்தையால் உணர்த்திட முடியாது.

அவர்களைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும் எப்போது முடிவை அடையும் எப்போது தன்னவரைச் சந்திப்போம் என்ற ஆசையும் ஆவலும் அடிக்கடி மனதை தட்டிக் கொண்டே இருக்கும் அல்லவா..?

அக்கணம் அந்த நிலையில்தான் இருந்தான் நம் நாயகன்.

அவன் யாஷ்வின்..!

கப்பலின் மேற்புறத்தில் நின்று சிறு சிரிப்போடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் கரத்தில் சூடான டீ இருந்தது.

சற்றே தள்ளி அவனுடன் வேலை பார்ப்பவர்கள் மதுவை கையில் ஏந்திய வண்ணம் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க இவனுக்கோ குடிப்பழக்கம்தான் சிறிதும் இல்லையே.

இந்த நவ நாகரிக இளைஞர்கள் தன்னகத்தே கொண்டிருக்கும் எந்தவிதமான கெட்ட பழக்கங்களையும் இன்னும் பழகாமல் இருக்கும் அதி நல்லவன் அவன்.

அவர்களோ எத்தனையோ முறை குடிப்பதற்கு அழைத்தும் கூட அதனை நாசூக்காக மறுத்துவிட்டு சுடச்சுட தேநீரைப் பருகிக் கொண்டிருந்தவனுக்கு தன் அழகிய மனைவியின் நினைவே அலை கடலாய்ப் பெருகியது.

உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு அவனுக்கு இருப்பது அவனுடைய மனைவியும் இரண்டே வயது நிரம்பிய பெண் குழந்தையும் தானே.

அவர்களைப் பற்றி நினைத்தாலே அவனுடைய நெஞ்சம் விம்மி விடும்.

அந்த நொடி அவனை நெருங்கி வந்தாள் அவனுடன் கப்பலில் வேலை செய்யும் பெண்.

அவளைக் கண்டதும் புன்னகைத்தவன் அவளுடைய ஆடையைக் கண்டு அதிர்ந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய பார்வையை தேநீர் வைத்திருந்த கோப்பையில் மாற்றிக் கொண்டவன்,

“ஹாய் வைஷ்ணவி..” என இயல்பாகக் கூறினான்.

தொடைக்கு சற்று மேலே உயர்ந்த மினி ஸ்கர்ட்டும் வெண்ணிற மெல்லிய டி-ஷர்ட் ஒன்றையும் அணிந்து நின்றவளின் பார்வையோ அவனுடைய படிக்கட்டு தேகத்தின் மீது நிலைத்தது.

அவளுக்கோ யாஷ்வின் மீது அபாரப் பிரியம்.

எத்தனையோ முறை அவனிடம் பேசும் போதெல்லாம் தன் மனதை புரிய வைத்துவிடலாம் என அவள் நினைக்க, அவனோ வேலையைத் தவிர ஏனையவற்றை பேசுவதற்கு கூலி கேட்பவன் போல் அல்லவா அவளுடைய பேச்சை கத்தரித்து விடுவான்.

இன்று எப்படியாவது தன்னுடைய ஆசையை நிறைவேற்றி விட வேண்டும் என்ற ஆவலில் அவனை நெருங்கி வந்தவள்,

“இப்போவும் டீ தானா..? ஒரு தடவை ட்ரிங்க் பண்ணிப் பார்த்தா உங்களுக்கே அத ரொம்பப் பிடிச்சுப் போயிடும்..” என அவள் கூற தலையை மறுப்பாக அசைத்தவன் “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு..” எனக் கூற,

அவளோ வெளிப்படையாக தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

“உங்கள மாதிரி ஒருத்தர இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லை.. இனியும் பார்ப்பேனான்னு தெரியல..” என்றவள் அவன் அருகே வந்து அவனுடன் இணைந்து கடலைப் பார்க்க சற்று விலகி நின்றவன்,

“என்ன இந்த நேரத்துல வந்திருக்க.. தூங்கலையா..?” என அவளிடம் கேட்டான்.

“தனியா தூங்க ஒரு மாதிரி இருக்கு.. தூக்கமே வரல.. அதனாலதான் இங்க வந்தேன்…” என்றவள் அவனை அர்த்தம் பொதியும் வகையில் பார்க்க அவளுடைய விழிகளை பார்க்காமல் கடலை வெறித்துப் பார்த்தவன்

“வீட்ல அப்பா அம்மா ஹஸ்பன்ட் எல்லாம் எப்படி இருக்காங்க..?” எனக் கேட்டான்.

அவளுக்கு ஐயோ வென்றிருந்தது.

“இப்போ நம்மள பத்தி மட்டும் பேசலாமே..” என்றாள் அவள்.

“நம்மள பத்தி பேசிக்க என்ன இருக்கு..? நீயும் இங்கதான் வேலை பாக்குற.. நானும் இங்கதான் வேலை பார்க்கிறேன்.. ஒருத்தரை ஒருத்தர் தினமும் பார்த்துக்கிறோமே..”

“ஹ்ம்ம்.. ஆறு மாசம் இங்கேயோ தனியா இருக்கிறது ரொம்ப போர்ல..? உழைக்கணும்னு வந்துட்டோம் அதுக்காக நம்ம தேவைகள பூர்த்தி செய்யாம இருக்கணுமா என்ன..?” என்ன ஹஸ்கி குரலில் வினவினாள் அவள்.

அமைதியாக நின்றான் அவன்.

“நீங்க வேணும்னா இன்னைக்கு நைட் என்னோட ரூமுக்கு வாங்களேன்.. டின்னர் சாப்பிட்டு கொஞ்சம் ஃபன் பண்ணலாம்.. உங்களுக்கும் நிறைய தேவை இருக்கும்னு எனக்குத் தெரியும்..” என சற்றே தயக்கத்துடன் ஆனால் தெளிவாக அவள் தன்னுடைய விருப்பத்தை கேட்டு விட இப்போது அவளுடைய முகத்தை அழுத்தமாகப் பார்த்தவன் புன்னகைத்தான்.

“நீ டின்னர்னு சொன்னதும் என்னோட வைஃப்தான் சட்டுன்னு எனக்கு நினைவுக்கு வர்றா.. அவ ரொம்ப சூப்பரா சமைப்பா.‌ எப்போ இந்த ஆறு மாசம் முடியும் எப்போ அவளைப் பார்த்து அவளோட கையால சாப்பிடுவோம்னு ஆசையா இருக்கு..”

“நினைக்கும் போதெல்லாம் வீட்டு சாப்பாட்டை இங்க சாப்பிட முடியாதே.. வெளிய கிடைக்கிற சாப்பாட்டையும் ருசி பார்க்கலாம் தப்பில்ல..” என அவள் இரு பொருள் அர்த்தத்தில் கூற, அவனுடைய பொறுமை குறையத் தொடங்கியது.

“அதுக்காக கண்டதையும் கண்ட இடத்துல சாப்பிடுற பழக்கம் எனக்கு கிடையாதே..” என அவன் அவளுடைய பாணியிலேயே பதிலைக் கூறி விட அவளுடைய முகமோ சட்டென கறுத்துப் போனது.

“சாரி வைஷ்ணவி.. நான் சொன்ன விதம் ஏதாவது உன்ன ஹர்ட் பண்ணி இருந்தா என்ன மன்னிச்சிடு..‌ நீ எந்த அர்த்தத்துல பேசுறேங்கிறத புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் சின்னப் பையன் கிடையாது.. என்னால என்னோட மனைவிக்கு துரோகம் பண்ண முடியாது..”

“உங்க மனைவிக்கு துரோகம் பண்ண சொல்லி நான் சொல்லவே இல்லையே.. உங்க மனைவிய விட்டுட்டு வரச் சொல்லி நான் எப்பவுமே சொல்ல மாட்டேன்.. இந்த நேரத்துல நம்மளோட உடல் தேவையை தீர்த்துக்கறதுல என்ன தப்பு இருக்கு..? எனக்கும் என்னோட புருஷன்தான் எல்லாமே.. காதல் வேற.. காமம் வேற.. ரெண்டையும் எதுக்காக போட்டு குழப்பிக்கிறீங்க..?”

“காதலும் காமமும் வேற வேறதான்.. அதுக்காக பாக்குற எல்லா பொண்ணுங்க மேலயும் காமம் வந்துடாது… நான் சீக்கிரமா வந்துருவேன்னு எனக்காக என் பிள்ளையோட என்ன நினைச்சுக்கிட்டே அவ அங்க காத்துக்கிட்டு இருப்பா.. அவளைத் தவிர வேற எந்தப் பொண்ணையும் என்னால தொடவோ மனசால நினைச்சுப் பார்க்கவோ முடியாது வைஷ்ணவி.. அவளுக்கு துரோகம் பண்ணா என் நெஞ்சே வெடிச்சிடும்.. சாரி நான் அந்த டைப் கிடையாது..” என அவளுக்கு புரியும் வகையில் மென்மையாக அவன் எடுத்துக் கூற அவளுடைய பார்வையோ அவன் மீது வியப்பாய் படிந்தது.

“இந்த உலகத்துல ரெண்டே விதமானவங்கதான் இருக்காங்க.. ஒன்னு உண்மையாவே நல்லவங்க.. இன்னொன்னு சான்ஸ் கிடைக்காததால நல்லவங்க… நீங்க சான்ஸ் கிடைச்சுமே நல்லவராதான் இருக்கீங்க.. உங்க மனைவி ப்ளஸ்ட்..” என்றவள் “சாரி…” எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட மீண்டும் கடலைப் பார்த்தவனுக்கு தன் மனைவியின் நினைவுதான் எழுந்தது.

நினைத்தவுடன் லீவு எடுத்துக்கொண்டு மனைவியை ஓடிச்சென்று பார்க்கும் வேலையிலா அவன் இருக்கிறான்..?

இல்லையே..!

இதோ அவன் சென்று கொண்டிருக்கும் கப்பல் உரிய வேலையை முடித்துவிட்டு மீண்டும் இலங்கையை வந்தடைய கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிடுமே.

இந்த ஆறு மாதங்களும் என்ன ஆனாலும் அவளை அவனால் பார்க்கவே முடியாது அல்லவா..?

பிரிவுத் துயர் அவனை பெரிதும் அழுத்தியது.

அடிக்கடி இந்த வேலையை விட்டுவிட்டு தன்னுடைய மனைவியுடனும் பிள்ளையுடனும் வாழ்ந்தால் என்னவென்று அவனுக்குத் தோன்றத்தான் செய்யும்.

மாதம் ஐந்து லட்சம் (இலங்கை ரூபாய்) ரூபாயை அள்ளிக் கொடுக்கும் இந்த வேலையை விடுவதற்கு அவன் ஒன்றும் கோடீஸ்வரனோ பரம்பரை பணக்காரனோ அல்லவே.

இந்த வேலையைப் பெறுவதற்கே அவன் எத்தனை சிரமங்களைத் தாண்டி போராட வேண்டியிருந்தது.

இந்த வேலையில் சேர்ந்த பின்னர்தான் அவனுடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்திருந்தது.

இந்த வேலையை விட்டால் மீண்டும் இப்படி ஒரு சம்பளத்தில் நல்ல வேலை கிடைப்பது மிக மிகச் சிரமம்.

வாலிபம் முடிவதற்குள் உழைத்து பணத்தை சேமித்து விட்டால் அதன் பின்னர் ஏதாவது பிஸ்னஸ் ஒன்றைத் தொடங்கி குடும்பத்துடன் செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில்தான் இந்தக் கப்பலில் தன் வேலையை தொடர்ந்து கொண்டிருக்கிறான் யாஷ்வின்.

வைஷ்ணவி விலகிச் சென்று விட்டதை உறுதி செய்து கொண்டவன் தன்னுடைய அலைபேசியை எடுத்து மனைவியை பார்க்கும் ஆவலில் வீடியோ அழைப்பை எடுத்தான்.

இரவு தூங்குவதற்கு முதல் வீடியோ காலில் அவளைப் பார்த்து பேசினால்தான் இவனுக்குத் திருப்தியாக இருக்கும்.

தன்னவளையும் குழந்தையையும் பார்க்காது ஒரு நாளைக் கடத்துவதே மிகப்பெரிய தொல்லைதான்.

ஆவலோடு அவன் வீடியோ காலை விடுக்க மறுபுறம் இருந்த அவனுடைய அழகிய மனைவியோ அழைப்பை ஏற்காது சட்டென துண்டிக்க இவனுடைய முகமோ வாடிப் போனது.

இப்போதெல்லாம் வீடியோ அழைப்பை அவனுடைய மனைவி உடனே ஏற்பதில்லையே.

ஏன் என அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே வான்மதியிடம் இருந்து ஆடியோ கால் வர சட்டென அவனுடைய முகம் மலர்ந்தது.

“சாரிங்க.. இப்போதான் குளிச்சிட்டு வந்தேன்.. ட்ரெஸ் பண்ணிட்டு வந்து வீடியோ கால் பண்ணட்டுமா..?” எனக் கேட்க இவனுக்கோ குறும்பு புன்னகை உதடுகளில் தவழ்ந்தது.

“தாராளமா பட் என் முன்னாடியே மாத்தலாமே..” என அவன் கிசு கிசுப்பான குரலில் ஆசை ததும்பக் கேட்க, வெட்கப் புன்னகையை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தவள் “உங்கள கொன்னுருவேன்… சும்மா இருங்க..” என சிணுங்கினாள்.

“ஹா… ஹா.. மிஸ் யூ மதி…”

“நானும்பா… ஜஸ்ட் 10 மினிட்ஸ்ல நானே வீடியோ கால் பண்றேன் வெயிட் பண்ணுங்க..” என அவன் பதில் கூறுவதற்குள் அழைப்பைத் துண்டித்து விட இவனுடைய உதடுகளில் இன்னும் சிரிப்பு நிலைத்திருந்தது.

அவளோ அழைப்பைத் துண்டித்து விட்டு பெருமூச்சை வெளியே விட அவளுடன் படுக்கையில் ஒன்றாக படுத்திருந்த அந்த ஆடவனுக்கோ வியர்த்து விட்டது.

“என்னடி திடீர்னு வீடியோ கால் பண்ணிட்டான்.. கொஞ்ச நேரத்துல பக்குன்னு ஆயிடுச்சு..” என்றான் அவன்.

“இப்போ அங்க நைட் டைம்… ஆல்ரெடி பேசிட்டுதான் வச்சாரு… மறுபடியும் இப்ப கால் பண்ணவாருன்னு எனக்கு எப்படித் தெரியும்..? எனக்கும்தான் படபடன்னு ஆயிடுச்சு..” என்றாள் அவள்.

“சரி சரி டென்ஷன் ஆகாத.. அவன் கால் பண்ணா மட்டும் இங்க என்ன நடக்குதுன்னு அவனால பார்க்கவா முடியும்..? பயப்படாதடி..” என்றவன் போர்வைக்குள் இருந்தவளின் உடலின் மீது படர அவனை இறுக்கமாக அணைத்தவள்,

“ஸ்ஸ்…. என்னடா மறுபடியும் ஆரம்பிக்கப் போறியா..?” என சுகத்தில் கண்கள் சொருகக் கேட்டாள்.

“ம்ம் உன்னை எவ்வளவு முறை அனுபவிச்சாலும் பத்தலையேடி..” என்றான் அந்த பிறன்மனை விரும்பி.

“ஆவ்ச்…. போதும்டா இன்னும் கொஞ்ச நேரத்துல என் தங்கச்சி வீட்டுக்கு வந்துருவா. அவ மட்டும் உன்னப் பார்த்தா அவ்வளவுதான்.. சீக்கிரமா கெளம்பு…” என தன் மீது படர்ந்தவனை வீட்டை விட்டு அனுப்புவதில் குறியானாள் யாஷ்வினின் மனைவி வான்மதி.

“ஹேய் மதி.. உன் தங்கச்சி மட்டும் இங்க இல்லன்னா நானும் உன் கூட இங்கேயே தங்கிடுவேன்.. அவளை ஏதாவது சொல்லி உங்க ஊருக்கே அனுப்பி வெச்சிடேன்..”

“அப்படியெல்லாம் பண்ணினா என் மேல சந்தேகம் வந்திடும்டா.. அவ என் கூட இருக்கிறதாலதான் யாரும் நம்மளை இதுவரைக்கும் தப்பா நினைக்கல.. இதுவே நான் தனியா இருக்கும் போது நீ வீட்டுக்கு வந்துட்டுப் போனா பாக்குறவங்களுக்கு கண்டிப்பா சந்தேகம் வரும்.”

“சரிடி சரி.. இப்படியே பேசுறதுக்கு இன்னொரு ரவுண்ட் போயிடலாமே..” என்றவன் அவளுடைய இதழ்களை முற்றுகையிட தனக்காக காத்துக் கொண்டிருக்கும் கணவனை மறந்து போனவள் அந்த வேற்று உரிமையில்லாத ஆடவனுடன் இழையத் தொடங்கினாள்.

நிகரில்லாத துரோகம் தடையின்றி அங்கே நிகழத் தொடங்கியது.

💜💘

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 68

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “01. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!