“என்னடா இது மம்மி டம்மின்னு அழகா அம்மான்னு கூப்பிடு..” என்றார் அவர்.
“மாம் வாட் இஸ் திஸ்.. ஐ ஜஸ்ட்…” என கூறிக்கொண்டு போனவனின் தலையில் ஒரு கொட்டு வைத்தவர்,
“மறுபடியும் மாம் பாம்னு ஆரம்பிக்காதடா… இது ஒன்னும் உன்னோட லண்டன் கிடையாது… இது தமிழ்நாடு… தமிழ்… தமிழ்ல பேசுடா..” எனக் கண்டிக்க பெருமூச்சோடு வாயை இறுக மூடிக் கொண்டான் அவன்.
“ஊப்ஸ்.. ஓகே ஃபைன்..” என்றவன் அவர் மீண்டும் முறைப்பதைக் கண்டதும் “சரி தாயே..” என்றான் தமிழில்.
“அது.. அந்த பயம் இருக்கட்டும்.. இங்கேயே இருடா.. ஆரத்தி தட்ட எடுத்துட்டு வர்றேன்…”
“ஆரத்தியா..? யாரு அது..? அழகா இருப்பாளா மாம்..?”
“உன்ன லண்டன் அனுப்பி வெச்சேன்ல.. இதெல்லாம் எனக்குத் தேவை தான்டா..” என்றவர் மீண்டும் வீட்டிற்குள் நுழைய வேகமாக வேலையாள் ஒருவரோ ஆரத்தி தட்டை எடுத்து வந்து ரூபாவதியின் கரத்தில் கொடுத்தாள்.
அதை வாங்கி தன்னுடைய மகனுக்கு ஆரத்தி எடுத்தவர் அதன் பின்னரே அவனை உள்ளே அழைக்க,
“ஓஹ் இதுதான் அந்த ஆரத்தியா..? என்னம்மா இதெல்லாம் இன்னுமா இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க..?” என சலித்தவாறே உள்ளே வந்தான் அவன்.
ரூபாவதியின் முகம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கியது.
இத்தனை வருடங்களின் பின்னர் மகனைப் பார்த்ததில் அவருக்கோ அத்தனை சந்தோஷம்.
எப்படியாவது அவனை திருமணத்திற்கு சம்மதம் கூற வைத்து இந்தியாவிலேயே இருக்கச் செய்து விட வேண்டும் என்ற பேராசை அவருக்கு.
“ஏன்டா கண்ணா அம்மாவ இப்படி ஏங்க வைக்கிற..? இங்கேயே எங்க கூட இருந்துடேன்..”
“நம்மகிட்ட ஆளுங்களா இல்ல..? யார்கிட்டயாவது பொறுப்பை ஒப்படைச்சிட்டு இங்க வந்துடுடா…”
“நம்ம வேலைய நாமதான்மா பாத்துக்கணும்.. பணம் கொட்டிக் கொடுத்து இன்னொருத்தர பொறுப்புல வச்சாலும் நாம பார்த்துக்கிற மாதிரி வராது.. இவ்வளவு கஷ்டப்பட்டு எத்தனையோ கன்ட்ரிஸ் கூட டீல் பேசி வச்சிருக்கேன்.. இப்போ நான் மட்டும் எல்லாத்தையும் விட்டுட்டு இங்கே வந்தா எல்லாமே ஸ்பாயில் ஆகிடும்… புரிஞ்சுக்கோங்க மாம்..” பொறுமையாக தன்னுடைய அன்னைக்கு எடுத்துக் கூறினான் அவன்.
அன்னையிடம் மட்டும் அவனுக்கு கோபமே வராது.
தன் மீது எந்த எதிர்பார்ப்புமே இல்லாத பாசத்தை கொட்டுபவர் அல்லவா அவர்.
அதனால் எதுவாக இருந்தாலும் அவரிடம் மிகவும் பொறுமையாகவே பேசுவான் யாழவன்.
“சரி சரி அதெல்லாம் அப்புறமா பேசலாம்.. இப்போ நீ ப்ரெஷ் ஆயிட்டு வா.. நிறைய ஐட்டம் பண்ணி வச்சிருக்கேன்.. எல்லாத்தையும் ஒரு பிடி பிடிக்கலாம்..” என்ற அன்னையை தோளோடு அணைத்துக் கொண்டவன்,
“இப்போல்லாம் நான் ஹெவி ஃபுட் சாப்பிடுறத விட்டே ரொம்ப நாளாச்சு.. ப்ரஷ் ஜூஸ் மட்டும் போதும்…” என்றான்.
“அதெல்லாம் முடியாது.. அம்மா ஊட்டி விடுறேன்.. நீ போய் ப்ரஷ் ஆகிட்டு வா… ஜூஸ் மட்டும் குடிச்சா எப்படி பத்தும்..?”
“நான் சொல்றத நீங்க எப்பதான் கேக்குறீங்க..?” என்ன சலித்துக் கொண்டவன் தூரத்தில் நின்ற வேலையாளை தன் விழிகளால் அழைத்து காரில் இருந்த பெட்டிகளை எடுத்து தன்னுடைய அறைக்குள் வைக்கும்படி பணித்தவன் தன் கரத்தில் இருந்த கைக் கடிகாரத்தை கழற்றியவாறு அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கினான்.
“யாழவா…” என அழைத்தார் அவனுடைய அன்னை.
“சொல்லுங்க மாம்..?”
“யாரையாவது லவ் பண்றியாடா..?”
“நோப்.. எதுவுமே பிடிக்கல..”
“அப்போ அம்மா பொண்ணு பாக்கவா..?”
“இப்படியே பேசினா நாளைக்கு காலையிலேயே நான் லண்டன் கிளம்பிடுவேன்..” என அழுத்தமாகக் கூறியவன் வேகமாக தன்னுடைய அறையை நோக்கிச் சென்றுவிட இவருக்கோ பெருமூச்சு கிளம்பியது.
30 வயது ஆகிய பின்பும் கூட திருமணம் செய்யும் எண்ணம் சிறிதும் இன்றி எப்போது பார்த்தாலும் தொழில் பற்றியே சிந்திக்கின்றானே என்ற கவலை அந்த அன்னையின் நெஞ்சை மருகச் செய்தது.
அவருடைய வயதில் உள்ள அம்மாக்கள் எல்லாம் தங்களுடைய பிள்ளைகளை திருமணம் செய்து வைத்து பேரப் பிள்ளைகளை கொஞ்சிக் கொண்டிருக்க இவர் இன்னும் இவனை அல்லவா சிறுவன் போலக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்.
இவன் எப்போது திருமணம் செய்து.. எப்போ பேரப்பிள்ளை பெற்றுக் கொடுத்து… அவர் எப்போது அதைக் கொஞ்சுவது..?
அவருக்கோ ஏக்கமாக இருந்தது
மீண்டும் இதைப் பற்றி பேசினால் இங்கிருந்து கிளம்பினாலும் கிளம்பி விடுவான் சற்று பொறுத்து அவனிடம் பொறுமையாக இதைப் பற்றி பேசலாம் என எண்ணியவர் அவனுக்காக சமைத்த உணவுகளை எடுத்து மேஜையில் அடுக்க தொடங்கினார்.
யாழவனோ தன்னுடைய அறைக்குள் நுழைந்தவன் தன்னுடைய ஆடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு அப்படியே பாத்ரூமிற்கு வெற்று உடலோடு சென்று ஷவரின் கீழே நின்றான்.
கூச்சம் வெட்கம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் ரகம் அவன்.
பாத்ரூம் கதவைக் கூட அவன் பூட்டவில்லை
அலுப்பு தீரும் வரை குளித்து முடித்துவிட்டு அதே கோலத்தில் வெளியே வந்தவன் மிக மிகக் குட்டியாக இருந்த சார்ட்ஸ் ஒன்றை எடுத்து அணிந்து விட்டு பால்கனியில் வந்து நின்று தலையைத் துவட்டினான்.
அதைக் குட்டி ஷார்ட்ஸ் என்று சொல்லுவதை விட ஜட்டி என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.
அதே கணம் தோட்டத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த வயதான பாட்டி ஒருவரோ அவனை அந்தக் கோலத்தில் கண்டு அதிர்ந்து கண்களை விரிக்க,
“ஹேய் பியூட்டி.. என்ன என்னை சைட் அடிக்கிறியா..?” என இவன் சிரிப்போடு கேட்க,
“ஐயோ ஐயோ… என் கண்ணு அவிஞ்சு போச்சு..” என புலம்பியவாறே மறுபக்கம் திருப்பிக் கொண்டார் அவர்.
“நாட்டி பாட்டி..” என்றவனுக்கு சிரிப்புதான் வந்தது.
அதே கணம் அவனுடைய அறைக் கதவு தட்டப்பட அப்படியே அதே கோலத்தில் சென்று கதவைத் திறந்தவன் வெளியே நின்ற தன்னுடைய நண்பனைக் கண்டதும்,
“டேய் நான் வந்துட்டேன்னு எப்படிடா தெரியும்..? கொஞ்ச நேரத்துல நானே உன்னை வந்து பார்க்கலாம்னு இருந்தேன்…” எனக் கூறிய யாழவன் கதவை இன்னும் விரியத் திறக்க,
அவனை அந்தக் கோலத்தில் கண்ட அவனுடைய நண்பன் விஷ்வாவோ அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் “அடச் சீ என்னடா இந்த கோலத்துல நிக்கிற…?” என அதிர்ந்து போய் கேட்டான்.
“வை மேன்..? இதுக்கு என்ன குறைச்சல்..? மினி ஷாட்ஸ் போட்டுருக்கேன்..” என தன்னை குனிந்து பார்த்தான் யாழவன்.
“அடப்பாவி இது உனக்கு மினி ஷாட்ஸ்ஸா..? இத எங்க ஊர்ல பாக்ஸர் ஜட்டின்னு சொல்லுவோம்.. முதல்ல கதவை மூடுடா.. கவர்ச்சிக் கண்ணன் மாதிரி போஸ் கொடுக்குறத பாரு ச்சை..” எனத் திட்டியவாறு உள்ளே வந்த விஷ்வாவோ சோபாவில் கிடந்த துவாலையைத் தூக்கி அவன் மீது விட்டெறிய,
சிரித்தவாறு தன்னுடைய இடுப்பில் துவாலையை சுற்றிக் கொண்டான் யாழவன்.
“அடிக்கடி ஆன்ட்டி உன்னை லண்டன் அனுப்பினது தப்பு அங்கேயே வளர விட்டது தப்புன்னு எதுக்காக புலம்புறாங்கன்னு இப்போதான் புரியுது… நல்லவேளை அவங்கதான் உன்னை வந்து கூப்பிடுறதா இருந்தாங்க.. நீங்க வேலைய பாருங்க நானே போய் பார்க்கிறேன்னு சொல்லிட்டு வந்தேன்… அவங்க மட்டும் உன்னை இப்படி பார்த்து இருந்தாங்கன்னா விறகு கட்டையாலயே வெளுத்திருப்பாங்க..”
“விறகு கட்டையா..? அப்படின்னா என்ன.?”
“ஹாங் உன் தலை..” என்றான் விஷ்வா.
“இப்போ எதுக்குடா சலிச்சுக்கற..? நிறைய தமிழ் வேர்ட்ஸ்க்கு அர்த்தமே மறந்து போச்சு.. நீயும் அம்மாவும் மட்டும்தான் என் கூட தமிழ்ல பேசுவீங்க.. அங்க இருக்க எல்லாருமே இங்கிலீஷ் அண்ட் வேற லாங்குவேஜ்தான்.. அதான் கொஞ்சம் டச் விட்டிருச்சு..” என்றவன் சோபாவில் அமர்ந்தவாறு தன்னுடைய சிறுவயது நண்பனுடன் சிரித்துப் பேசத் தொடங்கினான்.
******
இந்தியாவின் பிரபல்யமான வீ கேர் என்ற மருத்துவமனையில்தான் தாதியாக பணிபுரிகின்றாள் அர்ச்சனா.
வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப வேலை செய்யும் நேர்மையான தாதி.
அன்றைய நாள் வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்தவளோ கொண்டை போட்டிருந்த தன்னுடைய நீளமான கூந்தலை அவிழ்த்து விட்டவாறு சோர்வோடு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
காபியை கொண்டு வந்து அர்ச்சனாக்கு கொடுத்தார் அன்னம்மா.
“தேங்க்ஸ்மா.. உன்னோட காபி குடிச்சாலே டயர்ட் எல்லாம் மாயமா மறைஞ்சு போயிரும்..” என்றவள் ரசித்து ருசித்து தன் கரத்தில் இருந்த காபியை குடிக்கத் தொடங்க,
“அடியேய் 26 வயசு ஆயிடுச்சுடி.. ஏதோ 16 வயசுங்குற மாதிரி பேசுற..?”
“இப்போ இருக்கிற பசங்கள பார்த்தாலே கல்யாணத்த நினைக்க பயமா இருக்கும்மா.. ஒழுக்கம் கெட்டவனுங்க.. எனக்கு ராமன் மாதிரி ஒருத்தன் வேணும்.. அதனால இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்மா.. அதுக்கப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என்றாள் அவள்.
“நான் எப்போ கல்யாணப் பேச்சை எடுத்தாலும் தட்டிப் பேசுறதே உனக்கு வேலையா போச்சு.. வேற ஏதாவது உன் மனசுல இருக்காடி..? அடிக்கடி ராமன் ராமன்னு சொல்றியே..? எந்த ராமையாவது விரும்புறியா..? அப்படியே ஏதாவது இருந்தா மறைக்காம என்கிட்ட சொல்லு..”
“ஐயோ அப்படியெல்லாம் இல்லம்மா.. அது ராம் இல்ல.. ஸ்ரீராமன்.. ஸ்ரீராமனை மாதிரி ஒரு மாப்பிள்ளைய பாருங்க கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்..”
“ஹ்ம்ம்… நீ வேலை செய்ற ஹாஸ்பிடல்ல உன்ன ஒரு பையன் லவ் பண்றான்னு சொன்னேல்ல.. அந்தப் பையன் எப்படி..?”
“ஐயோ அவன் ரொம்ப இம்சை மா.. இப்போ எனக்கு கல்யாணமே வேணாம். அட்லீஸ்ட் இந்த ஒரு வருஷம் போகட்டுமே ப்ளீஸ்..” என்றவள் காபி கப்போடு சமையலறைக்குள் நுழைந்து விட பெருமூச்சோடு இருக்கையில் அமர்ந்தவருக்கோ இவளை எப்படி திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது என்ற எண்ணம்தான் சிந்தையில் ஓடிக்கொண்டிருந்தது.
Wow super vini sis