02. தொடட்டுமா தொல்லை நீக்க..!

4.8
(83)

தொல்லை – 02

மதுராவின் மனமோ அலை பாய்ந்து கொண்டிருந்தது.

அஞ்சலியை அறைக்குள் அழைத்து வந்த பின்பும் ஒற்றை வார்த்தை கூட உதிர்க்காது கைகளைப் பிசைந்தவாறு அவள் தவிப்போடு நிற்க,

அஞ்சலியோ தன் கரத்தில் இருந்த புடவையைத் தன் சகோதரியிடம் நீட்டியவள் “சாந்தி முகூர்த்தத்துக்கு நீ இந்த புடவையைத்தான் கட்டிக்கணும்னு கதிர் மாமாவோட அம்மா சொன்னாங்க..” என மதுராவிடம் கூறினாள்.

மதுராவோ கோபத்துடன் கிட்டத்தட்ட அவள் நீட்டிய புடவையை பறித்து அருகே இருந்த மேஜை மீது தூக்கிப் போட்டவள்,

“என்னால சுத்தமா முடியல அஞ்சலி… எரிச்சலா இருக்கு… எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு தெரிஞ்சும் எப்படி உன்னால இப்படி பேச முடியுது..? இந்த புடவையை கட்டிக்கிட்டு சிரிச்ச மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு என்னை ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள போக சொல்றியா..?” என அஞ்சலியிடம் கோபப்பட்டாள் மதுரா.

“சாரிக்கா எனக்கு உன்னோட நிலைமை புரியுது.. ஆனா இனி நம்மளால என்ன பண்ண முடியும்..? கல்யாணம் நடந்து முடிஞ்சு போச்சு.. அப்பா நம்ம நிலைமையை எடுத்து சொன்னப்போ நீயும் சரின்னு தானே கல்யாணத்துக்கு சொன்ன.. இப்போ நீ இப்படி பேசினா என்ன பண்றது..?” என கவலை தொக்கிய குரலில் கேட்டாள் அஞ்சலி.

“தலைக்கு மேல நம்ம அப்பா கடன் வாங்கி வச்சிருக்காரு.. அதுல முக்காவாசி கடன் கதிரோட அப்பாகிட்டதான் வாங்கி இருக்காரு.. இந்தக் கல்யாணம் நடந்தா அவரோட விவசாய நிலம் மறுபடியும் அவருக்கு கிடைச்சிடும்.. தயவு செஞ்சு கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்சும் போது வேற என்னதான் என்னால பண்ண முடியும்..? அப்பாவும் அம்மாவும் அன்னைக்கு ரொம்ப அழுதுட்டாங்க.. அதனாலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. ஆனா எனக்குன்னு ஒரு கனவு இருக்கிறது உனக்குத் தெரியும்ல..?”

“எனக்கு தெரியும்கா… நீ கவலைப்படாத.. எனக்கு என்னவோ மாமாவைப் பார்த்தா கெட்டவர் மாதிரி தெரியல.. நீ எல்லா உண்மையையும் அவர்கிட்ட சொல்லு.. நீ படிக்கிறதுக்கு அவரே ஹெல்ப் பண்ணுவாரு..” என்றாள் அஞ்சலி.

“கிழிப்பாரு.. இவரே படிச்சிருக்காரோ என்னவோ தெரியல…” சீறினாள் மதுரா.

“ஐயோ ஏன்கா இப்படி பேசுற..? சத்தமா பேசாத.. வெளியே யாருக்காவது கேட்டு பிரச்சனையாகிடப் போகுது.. மாமா படிச்சிருக்காங்கன்னு தானே சொன்னாங்க…”

“அடியே கூறு கெட்டவளே படிச்சிருக்காருன்னுதான் சொன்னாங்க.. என்ன படிச்சிருக்காருன்னு சொன்னாங்களா..? இங்க மூணாம் கிளாஸ் படிச்சா கூட படிச்சிருக்காங்கன்னுதான் சொல்லுவாங்க.. நானாவது காலேஜ் வரைக்கும் முடிச்சிருக்கேன்.. இவர் என்ன படிச்சிருக்காருனு கூட எனக்குத் தெரியாது.. நான் சொல்ற படிப்பைப் பத்தி இவருக்குப் புரியுமான்னு கூட தெரியல.. நான் இங்க பிறக்க வேண்டிய ஆளே இல்ல தெரியுமா.. தெரியாம இந்த கிராமத்துல பிறந்து தொலைச்சு சிக்கிட்டேன்..”

அஞ்சலி தன்னுடைய அக்காவை சமாளிக்க முடியாமல் திணறிப் போனாள்.

எப்படியாவது இவளை சமாளித்து சாந்தி முகூர்த்த அறைக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என எண்ணியவள்,

“ப்ளீஸ் அதெல்லாம் மறந்துருக்கா.. மாமா கிட்ட போய் பேசு… இப்போ இந்த புடவையை மாத்திட்டு வாயேன்…” என அன்பாக மெல்லிய குரலில் அழைக்க சட்டென அஞ்சலியின் கரத்தை இறுக்கப்பற்றிக் கொண்டாள் மதுரா.

“அஞ்சு தயவு செஞ்சு நீயாவது எனக்கு உதவி பண்ணு… நீ நெனச்சா எனக்கு இந்த உதவிய கண்டிப்பா பண்ணலாம்… என்னோட கடைசி நம்பிக்கையே நீதான்… ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணு..” என்றதும் அஞ்சலிக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“நா.. நான் என்ன உதவிக்கா உனக்கு பண்ண முடியும்..? எனக்குப் புரியல…” என குழப்பத்துடன் கேட்டவளை மதுராவின் விழிகளோ உற்று நோக்கின.

“நான் என்னோட கனவை நோக்கி போகணும் அஞ்சலி.. இங்கே இருந்தா மூச்சு முட்டியே செத்துருவேன்.. இங்கிருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல நான் சென்னைக்கு கிளம்பலாம்னு இருக்கேன்..” என்றதும் அஞ்சலியின் விழிகளோ பயத்தில் அகல விரிந்தன.

“ஐயோ.. என்னக்கா சொல்ற நீ புரிஞ்சுதான் பேசுறியா..? இன்னைக்குத்தான் உனக்கு கல்யாணம் ஆயிருக்கு.. இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு ஃபர்ஸ்ட் நைட் இருக்கு.. உனக்காக அங்க மாமா காத்துக்கிட்டு இருக்காரு‌.. வெளியே நம்ம ரெண்டு பேர் குடும்பமும் இருக்கு.. அது மட்டுமா ஊர் காரங்க சொந்தக்காரங்க எல்லாரும் இருக்காங்க… இப்போ வீட்டை விட்டு சென்னைக்குப் போகணும்னு சொல்றியே..?” தவித்தபடி கேட்டாள் அவள்.

“எனக்கு வேற வழி தெரியல அஞ்சலி..”

“என்னக்கா விளையாடுறியா..? அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாத.. கல்யாண பொண்ணு ஓடிப் போயிடுச்சுன்னு தெரிஞ்சா எவ்வளவு அவமானம் தெரியுமா..? இப்போ எல்லாரோட கண்ணும் உன் மேல தான் இருக்கும்.. அவசரப்பட்டு தப்பான முடிவு எடுக்காத ப்ளீஸ்..”

மதுராவோ அஞ்சலியின் தோள்களைப் பற்றி, “நீ என்னைப் போலவே இருக்க. உன்னோட முகம், உன்னோட உருவம் எல்லாம் என்னை மாதிரியே இருக்கு… நீ மட்டும் மனசு வச்சா நான் இங்க இருந்து ஈஸியா போயிடலாம்… நீ மூணு மாசம்.. மூணே மூணு மாசம் மட்டும் என் இடத்துல இரு. கதிர்கிட்ட மதுராவா நடி… நான் சென்னைக்குப் போய் என் கனவை நிறைவேத்தி நம்ம குடும்பத்தோட கடனை அடைக்க ஒரு வழி பண்ணுறேன்… கூடிய சீக்கிரமே எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன் ப்ளீஸ் அஞ்சு… இத மட்டும் எனக்காக செய்…” என மன்றாடினாள் மதுரா.

உறைந்து போய் விட்டாள் அஞ்சலி.

சிறு வயது முதல் இக்கணம் வரை அவளுக்காக அவள் எவ்வளவோ செய்து இருக்கிறாள்..

மதுரா செய்த தவறுகளுக்கெல்லாம் தான் செய்ததாக தந்தையிடம் பல முறை அடியும் வாங்கி இருக்கிறாள்… அதெல்லாம் அவளுக்கு பெரிதாகவும் தெரியவில்லை.

எப்படியாவது அந்த பிரச்சனையிலிருந்து தன்னுடைய அக்காவை காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் அஞ்சலியின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

ஆனால் இப்போது அவள் கேட்கும் உதவி மிகப்பெரிய தவறல்லவா..?

அவளுடைய வாழ்க்கையில் அவளைப் போல என்னால் எப்படி வாழ முடியும்..?

அதுவும் மூன்று மாதங்கள்..!

இது என்ன சாதாரண விடயமா..?

நினைக்கவே அவளுக்கு தேகம் நடுங்கியது.

“ப்ளீஸ்டி முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத.. உன்னோட ஒரு சம்மதத்துல நம்ம எல்லாரோட வாழ்க்கையும் மாறிப் போயிடும்.. எனக்கு நல்ல சம்பளத்துல வேலை கிடைக்கும்… நம்ம குடும்பக்கடனை முழுசா அடைச்சிடலாம்.. உன்னையும் நான் படிக்க வைக்கிறேன்.. ப்ளீஸ்..”

அஞ்சலியோ பின்வாங்கினாள்.

“அக்கா இது பைத்தியக்காரத்தனம்.. இப்படி ஆள்மாறாட்டம் பண்ண என்னால முடியாது… அப்படி பண்றதும் ரொம்ப பெரிய தப்பு… இது மட்டும் கதிர் மாமாக்கு தெரிஞ்சு போச்சுன்னா என்ன ஆகும்னு யோசிச்சு பாத்தியா..? அவரோட குடும்பத்துக்கு தெரிஞ்சு போச்சுன்னா நம்ம மானம் மரியாதை எல்லாமே போயிடும்.. இவ்வளவு பெரிய தப்பை என்னால எப்படிக்கா செய்ய முடியும்?” என தீவிரமாக மறுத்தாள்.

அவளது கண்களில் பயம் மின்னின.

கைகள் நடுங்கின.

தங்கையின் மறுப்பில் மதுராவின் விழிகளோ அகல விரிந்தன.

அவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சிறுவயது முதல் இப்போது வரை என்ன சொன்னாலும் தான் சொல்வதை அப்படியே சரியென பின்பற்றி நடப்பவள் இன்று திடீரென மறுத்துக் கூறவும் அவளுக்கோ கோபம் பொங்கியது.

கோபத்துடன் இயலாமையும் அதிகரிக்க மதுராவின் விழிகளில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.

“உனக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்லையா அஞ்சலி..? நீ என்ன பத்தி யோசிக்கவே மாட்டியா…? என்ன கல்யாணம் பண்ண கதிரோ அவரோட அம்மா அப்பா யாருமே என்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடி சம்மதம் கேட்கல… என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல..‌அவங்க பெரிய பணக்கார குடும்பம்.. நாம எதுக்குமே வக்கில்லாதவங்க தானே பொண்ணு படிச்சிருக்கா அழகா இருக்கான்னதும் சம்பந்தம் பேசி முடிச்சிட்டாங்க… என்னோட மனசுல என்ன இருக்குன்னு அவங்க தெரிஞ்சுக்க முயற்சியே பண்ணல..”

அஞ்சலிக்கோ அவள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கதரின் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதமா என கேட்டு விட்டதும் அதற்கு மதுரா வேறு வழியின்றி ஆம் சொன்னதும் அதன் பின்னர் நிச்சயம் வைத்து தங்கச் சங்கிலியை கதிரின் பெற்றோர்கள் அவளுடைய கழுத்தில் அணிவித்ததும் அவளுக்கு இன்னும் நினைவில் இருந்தது.

“இங்க இருக்க எல்லாருமே சுயநலவாதிங்க.. இவங்க என்ன நினைச்சா நமக்கு என்ன..? நாம நல்லா இருக்குறத பத்தி மட்டும்தான் நாம யோசிக்கணும்.. அஞ்சலி புரிஞ்சுக்கோ..”

“சாரிக்கா நீ என்ன சொன்னாலும் என்னால இந்த தப்பை கண்டிப்பா பண்ண முடியாது.. நான் இங்க இருந்து போறேன்… நான் இங்கே இருந்தாதான் உனக்கு இப்படி எல்லாம் தப்புத் தப்பா தோணும்.. நான் இப்போ வீட்டுக்கு கிளம்புறேன்.. தயவு செஞ்சு இப்படி முட்டாள் தனமா யோசிச்சு உன்னோட வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத..” என்றவள் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேற முயற்சி செய்ய,

சட்டென அஞ்சலியின் கரத்தை இறுக்கமாகப் பற்றி அவளை வெளியே போக விடாமல் நிறுத்தியவள் அந்த அறையின் கதவில் அழுத்தமாக சாய்ந்து நின்று கொண்டாள்.

“உன்னால இங்க இருந்து போக முடியாது அஞ்சலி… இன்னும் கொஞ்ச நேரத்துல நான்தான் அஞ்சலியா இந்த வீட்டை விட்டு வெளியே போகப் போறேன்.. நீ மதுராவா இந்த வீட்ல வாழப் போற.. ஜஸ்ட் மூணு மாசம் நடிச்சா மட்டும் போதும்… அதுக்கு அப்புறமா நானே எல்லாத்தையும் பாத்துக்கிறேன்…”

“உனக்கு என்ன பைத்தியமா அக்கா? நான்தான் சொல்றேன்ல என்னால முடியாதுன்னு.. எதுக்காக என்னை இப்படி வற்புறுத்துற..? நீ பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல..” அழுது விட்டாள் அஞ்சலி.

“என்கிட்ட ரெண்டே ரெண்டு சாய்ஸ்தான் இருக்கு அஞ்சலி… ஒன்னு நான் அஞ்சலியா இங்க இருந்து வெளியே போகணும்.. இல்லனா இதோ நீ கொடுத்த இந்தப் புடவைலயே தூக்குப் போட்டு சாகணும்… நான் இங்க இருந்து போறதா இல்ல சாகிறதான்னு நீயே முடிவு பண்ணு..” என்றவள் இறுகிய முகத்துடன் அஞ்சலியைப் பார்த்தவாறு நிற்க,

விக்கித்துப் போனாள் அஞ்சலி. அவளுக்கு தேகம் படபடத்து விட்டது.

மதுராவின் கண்களில் தெரிந்த மரண உறுதி, அவளை மெல்ல மெல்ல உடைத்தது.

“அக்கா, நீ இப்படி செஞ்சுடுவேன்னு சொல்றியே… என்னால இதை எப்படி தாங்க முடியும்..? பயமா இருக்குக்கா..” என அஞ்சலி மனம் உடைந்து கூறினாள்.

“நோ…. சத்தியமா கொஞ்சம் கூட விருப்பமே இல்லாமதான் நம்ம குடும்பத்துக்காக இந்த மணமேடைல அமைதியா இருந்தேன்… இதுக்கு மேல நான் இங்கேயே இருந்தா மூச்சு முட்டியே செத்துருவேன் அஞ்சலி..”

“இப்போ போறேன்னு சொல்ற நீ கல்யாணத்துக்கு முன்னாடியே இங்கிருந்து போயிருக்கலாமே.. அப்பவே உன்னோட கனவ நோக்கி போயிருந்தேன்னா இப்போ இந்த நிலைமை வந்திருக்காதுல்ல..?” என அழுகையுடன் கேட்டாள் அஞ்சலி.

“அப்போ என்கிட்ட பணம் இல்லையே..”

“இப்போ மட்டும் இருக்கா..?” கோபமாகக் கேட்டாள் அஞ்சலி.

“நிச்சயம் பண்ணும் போது கதிரோட அம்மா என் கழுத்துல போட்டு விட்ட நாலு பவுன் சங்கிலி இருக்கு… இது கொஞ்ச மாசத்துக்கு எனக்குப் போதும்.. அதுக்குள்ள நான் ஏதாவது பார்ட் டைம் ஜாப்ல ஜாயின் பண்ணி பணம் சம்பாதிச்சிடுவேன்.. அதுவரைக்கும் நீ மதுரா மாதிரி நடி..” என்றவள் அவளுடைய கழுத்தில் இருந்த அந்த நாலு பவுன் சங்கிலியைப் போலவே போலியாக செய்து வைத்திருந்த சங்கிலியை எடுத்து அஞ்சலியின் கழுத்தில் அணிவித்து விட துடித்துப் போனவளாய் நின்றாள் அஞ்சலி.

மதுராவிற்கு இதைவிட சிறந்த வேறு திட்டம் எதுவுமே தோன்றவில்லை.

ஒருவேளை தனக்கு பணம் பத்தவில்லை என்றால் கூட அஞ்சலியை வைத்து கதிரிடம் தேவையான பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணினாள் அவள்.

அஞ்சலிக்கோ தலை வெடித்து விடும் போல இருந்தது.

சகோதரியின் உயிரா ஆள்மாறாட்டமா என்ற கேள்விக்கு உயிர் தான் முக்கியம் எனக் கிடைத்த பதில் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றும் சாவியாகிப் போனது.

💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 83

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “02. தொடட்டுமா தொல்லை நீக்க..!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!