அதிகாலையில் எழுந்து கடகடவென அனைத்து வேலைகளையும் செய்து முடித்தவள் குளிப்பதற்காக ஆடை மாற்றிவிட்டு வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றடிக்குச் சென்றாள்.
ஒவ்வொரு வாளியாக அள்ளி தலையில் ஊற்றியவளுக்கு உள்ளத்தின் படபடப்பு மற்றும் அடங்கவே இல்லை.
காலையில் சீக்கிரமாகவே எழுந்த அன்னை வேகவேகமாக தயாராகி அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாது எங்கோ சென்று விட என்னவோ ஏதோ என அவளுடைய நெஞ்சம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது.
இன்று என்ன பிரச்சனையை இழுத்துக் கொண்டு வரப் போகிறாரோ என எண்ணிப் பயந்தவள் குளித்து முடித்துவிட்டு ஈரப்பவாடைக்கு மேலாக நைட்டி ஒன்றை அணிந்தவள் ஈரப்பாவாடையை கொடியில் காயப் போட்டுவிட்டு உள்ளே வர அவர்களுடைய வீட்டின் ஹாலில் தன்னுடைய அலைபேசியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் சேகர்.
அவனைப் பார்த்ததும் அவளுக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
அவனோ நிமிர்ந்து பார்த்தவன் உடலில் நீர்த் துளிகள் பரவி இருக்க மெல்லிய நைட்டியோடு அதுவும் பாதி ஈரத்தில் நனைந்திருக்க கண்களுக்கு குளிர்ச்சியாக வந்து நின்றவளின் உடலை அழுத்தமாக தன் பார்வையால் களவாடினான்.
அவனைத் திட்ட எண்ணியவள் அவனுடைய பார்வை தன் கழுத்துக்கு கீழே விரசமாய் பயணிப்பதை உணர்ந்து பதறியவளாய் வேகமாக தன் அறைக்குள் நுழைந்தவளுக்கு கோபம் கோபமாக வந்தது.
‘என்னதான் கட்டிக்கப் போறவனா இருந்தாலும் இப்படியா பார்க்கிறது? இவனைஐஐ…’ என மனதுக்குள் திட்டியவாறு வேக வேகமாக ஆடையை மாற்றிவிட்டு தலையை துவட்டியவாறு அவனை நோக்கி வெளியே வந்தவள்,
“எதுக்காக நீங்க அம்மாகிட்ட சினிமா பத்தி பேசினீங்க..? நான்தான் ஆல்ரெடி எனக்கு நடிக்கிறதுக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிட்டேன்ல..?” என அவள் கோபத்தோடு சீற,
“இப்போ எதுக்கு என் மேல கோபப்படுற..? நீ இப்படி ஓடி ஓடி வேலை பாக்குறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை பேபி. கூடிய சீக்கிரமே நீ கஷ்டப்படாம சொகுசா வாழணும்னு நினைச்சுதான் உன்கிட்ட சினிமா பத்தியே பேசினேன்.. நான் அந்த ஃபீல்டுல தானே இருக்கேன்.. எனக்கு தெரியாதா அதைப் பத்தி..” என்றவனை எரித்து விடும் பார்வை பார்த்தாள் அவள்.
“சொகுசு வாழ்க்கை வேணும்னு நான் கேட்டேனா..?” என்றவளுக்கு விழிகள் கலங்கிவிட்டன.
“ஏய் உன்னோட எதிர்காலமே நான் தானே… உன்னை நான்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. நானே நீ நடிக்கிறதுக்கு சம்மதம் சொல்லிட்டேன்.. இதுக்கு அப்புறம் உனக்கு வேற என்ன வேணும்..?”
நீ சம்மதம் சொன்னால் மட்டும் போதுமா என்னுடைய விருப்பம் அவசியமே இல்லையா என்பதைப்போல மௌனமாக அவனைப் பார்த்தவாறு இருந்தாள் செந்தூரி.
அவனோ எதுவும் கூறாது அந்த சாக்லேட்டின் கவரைப் பிரித்து சாக்லேட்டை அவளுடைய உதட்டருகே கொண்டு செல்ல தன்னுடைய இதழ்களைத் திறக்காது அழுந்த மூடிக் கொண்டாள் அவள்.
“ப்ளீஸ் பேபி…’ என்றவன் மெல்ல அவளை நெருங்கி வந்து அவளுடைய கன்னத்தில் கரம் பதிக்க பதறிப்போய் தன் இதழ்களை விரித்தாள் அவள்.
அந்த நேரத்தில் அவளுடைய இதழ்களுக்குள் சாக்லேட்டை வைத்தவன் அழுத்தமாக அவளுடைய கீழுதட்டைத் தன் பெருவிரலால் வருடி விட்டு தன் கரத்தை எடுத்துக் கொள்ள தடுமாறிப் போய் தலை குனிந்து கொண்டாள் செந்தூரி.
“எப்பவும் போல இன்னைக்கும் நீ ரொம்ப அழகா இருக்கடி.. இப்படியே உன்ன அள்ளித் தூக்கிட்டு எங்க வீட்டுக்கு கொண்டு போயிடணும் போல ஆசையா இருக்குடி…” எனத் தாபக் குரலில் அவன் கூற அவளுக்கோ முகம் வெட்கத்தில் சிவந்தது.
“சீக்கிரமா கல்யாணத்தை பண்ணிடலாம்..” என்றவனை வெட்கம் கலந்த பார்வை பார்த்தவள்,
“ரெண்டு வீட்டுக்கும் சம்மதம் தானே.. நான் ஏதோ கல்யாணத்தை வேணாம்னு சொல்லி தள்ளிப் போட்ட மாதிரி பேசுறீங்க..” என மென் குரலில் அவள கூற,
அவளுடைய வெட்கத்தில் சிவந்த கன்னத்தை வருடியவன்,
“நீ சினிமால நடிக்க சம்மதிச்சா அடுத்த மாசமே நமக்கு கல்யாணம்தான்..” என அவன் கூறியதும் அவனை அதிர்ந்து பார்த்தாள் செந்தூரி.
இவ்வளவு நேரமும் அவளை சூழ்ந்து இருந்த மகிழ்ச்சி எனும் வலை சட்டென அறுந்து போனது.
“ஒருவேளை நான் நடிக்கிறதுக்கு சம்மதிக்கவே இல்லைன்னா என்ன பண்ணுவீங்க..?” என அவள் கேட்க,
அமைதியாக அவளைப் பார்த்தான் சேகர்.
அதே கணம் அதிகாலையில் வெளியே சென்ற மேகலாவோ மீண்டும் வீட்டுக்குத் திரும்பி விட சட்டென அவளை விட்டு இரண்டடி விலகி நின்றான் சேகர்.
“அடடே வாங்க மாப்பிள்ளை.. எப்போ வந்தீங்க..? எதுக்காக நின்னுகிட்டு இருக்கீங்க.? உட்காருங்க..” என சிரித்தவாறு மேகலா உபசரிக்க,
“தேங்க்ஸ் ஆன்ட்டி..” என்றவன் அங்கே இருந்த இருக்கையில் சிரித்தவாறு அமர்ந்து கொண்டான்.
செந்தூரியால்தான் போலியாகக் கூட சிரிக்க முடியவில்லை.
அவன் கூறிய வார்த்தைகள் மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தன.
நிஜமாகவே நான் இவர்களுடைய ஆசைக்கு இணங்கவில்லை என்றால் என்னைத் திருமணம் செய்ய முடியாது எனக் கூறி விடுவானா..?
சே.. அப்படி எல்லாம் இருக்காது.. எத்தனையோ நாட்களாக நான் வேலைக்கு செல்லும்போதெல்லாம் என் பின்னாலேயே வந்து என்னிடம் காதலைக் கூறி கெஞ்சி மன்றாடி என் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி அவனுடைய பெற்றோரையும் சம்மதிக்க வைத்தவன் எப்படி என்னை திருமணம் செய்யாது விடுவான்..?
என் மீது கொண்ட காதல் அப்படியே தானே இருக்கும்.. என எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் தன்னுடைய அன்னை பைக்குள் இருந்து பணக்கட்டுகளை எடுக்க அதிர்ந்து போனாள்.
“தம்பி இதுல நீங்க கேட்ட 10 லட்ச ரூபா இருக்கு.. இத வச்சு எப்படியாவது இவளை சினிமால நடிக்க வச்சிருங்க… இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள நாங்க எல்லாரும் கோடீஸ்வரனா மாறணும்…” என அளவற்ற ஆசையோடு கூறியவாறு அவர் சேகரிடம் பணக்கட்டுகளைக் கொடுக்க அதை வாங்கி தன்னுடைய பைக்குள் பத்திரப்படுத்தினான் சேகர்.
இவளுக்கோ தலை சுற்றத் தொடங்கி விட்டது.
இவ்வளவு பணம் தன்னுடைய அன்னைக்கு எப்படிக் கிடைத்தது என எண்ணி அச்சம் கொண்டவள் வேகமாக அவரை நெருங்கினாள்.
“அ… அம்மா இ.. இவ்வளவு பணம் உங்களுக்கு எப்படி..? எப்படிக் கிடைச்சுது..? தயவு செஞ்சு யார்கிட்டயாவது கடன் வாங்கிட்டு வந்தேன்னு மட்டும் சொல்லி என் தலை மேல இடியை இறக்கிடாதீங்க ப்ளீஸ்..” என விழிகள் கலங்க கண்ணீரோடு கூறியவளை முறைத்துப் பார்த்தார் மேகலா.
“ஆமாடி நான் கடனுக்குத்தான் வாங்கிட்டு வந்தேன்.. இதுக்கு மாசம் பத்தாயிரம் வட்டி வேற கட்டணும்.. ஒழுங்கு மரியாதையா நானும் உன்னோட வருங்கால புருஷனும் சொல்ற மாதிரி சினிமால நடிக்க ஒத்துக்கோ.. நீ இப்பவே ஓகே சொன்னாதான் இன்னும் கொஞ்சம் மாசத்துக்குள்ள நமக்கு அட்வான்ஸ் பணமாவது கிடைக்கும்..” என்ற தாயை அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள்.
அவளுக்கோ வாயும் வயிறும் பற்றி எரிந்தது.
அவளுடைய வயதில் பெண்கள் எல்லோரும் தன்னுடைய படிப்பை தொடர்ந்து கொண்டிருக்க அவளோ பாதி படிப்போடு தன் கல்லூரிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேலைக்கு அல்லவா செல்கிறாள்..
வேலையில் கிடைக்கும் சம்பளத்தை வைத்து வயிற்றுப்பாட்டுக்கும் சிறுக சிறுக கடன் கொடுப்பதற்குமே அவளுக்கு போதுமானதாக இருக்க ஆசைப்பட்ட ஆடைகளையோ பொருட்களையோ கூட அவள் தனக்கென வாங்குவதே இல்லை.
வாயைக் கற்றி வயிற்றைக் கட்டி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துச் சேர்த்து சிரமப்பட்டு கடனை அடைத்துக் கொண்டிருந்தவளுக்கு ஆயிரம் பத்தாயிரம் ஆக அல்லாமல் பத்து லட்ச ரூபாயை அதுவும் வட்டிக்கு வாங்கி வந்து நின்ற அன்னையைக் கண்டதும் அழுகையும் கோபமும் பொங்கியது.
வாழ்க்கை முழுக்க ஓடினாலும் அவளால் இந்தக் கடனை கட்டி முடிக்க முடியாதே.
நடுங்கிப் போனாள் செந்தூரி.
“அம்மா ப்ளீஸ்மா.. எனக்காக ஒன்னே ஒன்னு மட்டும் பண்ணுங்க… தயவுசெஞ்சு இதை யார்கிட்ட வாங்கினீங்களோ திரும்ப அவங்ககிட்டயே கொண்டு போய் கொடுத்துட்டு வந்துடுங்க… மாசம் பத்தாயிரம் வட்டி கட்றதெல்லாம் ரொம்ப கஷ்டம்மா.. நினைச்சாலே எனக்கு தலையெல்லாம் சுத்துற மாதிரி இருக்கு.. தயவு செஞ்சு இப்படி பண்ணாதீங்கம்மா.. சேகர் ப்ளீஸ் நீங்களாவது அம்மாக்கு எடுத்துச் சொல்லுங்க.. அந்தப் பணத்தை திருப்பிக் கொடுங்க..* என அவனைப் பார்த்து அவள் கெஞ்சலாய் கேட்க அவனோ பிரியமே இன்றி பைக்குள் இருந்த பணத்தை வெளியே எடுத்தவன் கொடுக்க மனம் இன்றி மேகலாவைப் பார்த்தான்.
“அடியே பைத்தியமாடி நீ..? ஒரே ஒரு மகளை பெத்து வச்சிருக்கேன்.. அதையும் இப்படி பைத்தியமா பெத்து வச்சுட்டேனே.. இவளுக்கு கொஞ்சமாவது புத்திய கொடு கடவுளே… இப்படியே தத்தி மாதிரி இருந்து எங்களையும் நடுத்தெருவுல கொண்டு வந்து விடப் போறா..” என அவர் திட்ட உறைந்து போனாள் அவள்.
அளவுக்கடந்த கோபம் தன் அன்னை மீது கிளர்ந்தது.
“இதோ பாருங்கம்மா.. என்னால நீங்க சொல்றத பண்ணவே முடியாது.. என்ன ஆனாலும் நான் சினிமால நடிக்கிறதுக்கு தயாரா இல்லை.. நீங்க இந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்தாலும் சரி.. கொடுக்கலைன்னாலும் சரி நான் நடிக்கப் போக மாட்டேன்..” என்றவள் வேகமாக தன்னுடைய அறைக்குள் சென்று அடுத்த ஐந்து நொடிகளில் தயாராகி தன்னுடைய ஹேண்ட் பேக்கோடு வேலைக்கு வெளியே சென்றுவிட அதிர்ந்து போனான் சேகர்.
“என்ன ஆன்ட்டி இவ இப்படி சொல்லிட்டு போறாளே..” என அவன் வருத்தத்தோடு கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி.. வேலை பார்க்கிறோம்னு திமிர்.. இன்னும் ஒரு மணி நேரத்துல போன வேகத்திலேயே வீட்டுக்கு திரும்பி வந்துருவா.. அதுக்கப்புறம் நாம சொல்றதைத்தான் அவ பண்ணியாகணும்..” என இரகசிய சிரிப்போடு மேகலா கூற அவரைப் புரியாது பார்த்தான் அவன்.
“நீங்க பணத்தைக் கொண்டு போய் டைரக்டர் சார்கிட்ட கொடுத்து இப்பவே சொல்லி வச்சுடுங்க.. நாளைக்கே நான் அவளை அழைச்சுட்டு வர்றேன்..” என்றார் மேகலா.
“சரி ஆண்ட்டி… நீங்க சொன்னா செஞ்சிடுவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. நம்ம எதிர்காலம் இனிப் பிரகாசமா இருக்கும்..” என்றவன் பணத்தை மீண்டும் பைக்குள் வைத்து பத்திரப்படுத்திக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டவாறே பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றாள் செந்தூரி.
தன் அன்னைக்கு எப்போதுதான் தான் கூற வருவது புரியுமோ..?
பயமாக வேறு இருந்தது.
பேருந்து வந்ததும் பேருந்தில் ஏறியவள் அந்த சன நெரிசலுக்குள் சிரமப்பட்டு ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றாள். தான் வேலை செய்யும் சிறிய அலுவலகம் வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கியவளுக்கு சிந்தனை முழுவதும் அன்னை வாங்கிய கடன் மீதே நிலைத்திருந்தது.
வழமையை விட பத்து நிமிடம் தாமதமாகி விட வேகமாக உள்ளே நுழைந்தவளை எதிர்கொண்டார் மேனேஜர் சுந்தரம்.
“நீ எதுக்கும்மா இங்க வந்திருக்க..? உனக்கெல்லாம் இங்க வேலை கிடையாது… மரியாதையா கிளம்பு..” என அவர் கோபமாகத் திட்ட அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
ஏற்கனவே அதீத வேதனையோடு வேலைக்கு வந்திருந்த அவளுக்கு அத்தனை பேரின் முன்பும் மேனேஜர் திட்டிவிட அவமானமாகிப் போனது.
வெளியே வழிந்து விடுவேன் என்ற கண்ணீரை உள்ளே இமைகளை சிமிட்டி இழுத்துக் கொண்டவள் “எ.. என்னாச்சு சார்..? நான் என்ன தப்பு பண்ணினேன்..? எதுக்காக என்ன வேலைக்கு வரக்கூடாதுன்னு சொல்றீங்க..? இந்த வேலையை நம்பித்தான் என் குடும்பமே இருக்கு..” என அவள் தவிப்போடு கூற,
“இப்படி எல்லாம் நீ முன்னாடி சொன்னதாலதான் ஏதோ போனா போகுது பாவம்னு வேலை போட்டுக் கொடுத்தேன்.. இப்போ என்னடான்னா காலையிலேயே உங்க அம்மா வந்து இங்க காச்சு மூச்சுன்னு கத்திட்டுப் போறாங்க..” என்றதும் விக்கித்துப் போனாள் அவள்.
“அ.. அம்மாவா..?”
“ஆமா… ஏதோ நீ பெரிய நடிகையாகப் போறியாம்.. உன்னோட வளர்ச்சியை நான்தான் இந்த சீப்பான வேலை கொடுத்து கெடுத்துட்டேனாம்.. இதெல்லாம் எனக்குத் தேவையா..? உங்கள மாதிரி ஆளுங்களுக்கு பாவம் பார்த்தா கடைசில எங்களை மாதிரி ஆட்களோட கழுத்துதான் நெரிபடும்.. முதல்ல வெளிய போம்மா… உனக்கு இனி இங்க வேலை கிடையாது… உங்க அம்மா பேசிய பேச்சுக்கு நீ என் கம்பெனிக்கு உள்ள வரவே கூடாது..” என கோபத்தில் அவர் கத்திவிட்டு உள்ளே திரும்பி நடக்கத் தொடங்க பதறிப் போனாள் அவள்.
“சார் சார் ப்ளீஸ் சார்.. அம்மாக்காக நான் சாரி கேட்டுக்கிறேன் சார்.. எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம்.. இப்படி பண்ணிடாதீங்க சார்… இவ்வளவு நாளும் நான் ரொம்ப நல்லாத்தானே வேலை பார்த்திருக்கேன்.. நீங்க சொன்ன எல்லாத்தையும் பண்ணி முடிச்சிருக்கேன்… தயவு செஞ்சு ஒரே ஒரு நிமிஷம் எனக்காக என்ன மன்னிக்கக் கூடாதா..?” என அவள் அழுதவாறே அவரின் பின்னே கெஞ்சியபடி செல்ல,
அவரோ தன்னுடைய அறைக் கதவை அறைந்து சாற்றி விட்டு அவருடைய கேபினுக்குள் நுழைந்து விட உறைந்து போய் நின்று விட்டாள் செந்தூரி.
வயிற்றுப்பாட்டுக்கு என இருந்த ஒரே வேலையும் இல்லாமல் அல்லவா போய்விட்டது..!
இனி அவளுடைய நிலை..?
அவளை நம்பி பொறுப்பை ஒப்படைத்து விட்டு நோயின் பிடியில் படுத்திருக்கும் தந்தையின் நிலை..?
வாடகை, கடன், மளிகை ஜாமான் கரன்ட் பில், தண்ணி பில், இஎம்ஐ என ஒவ்வொன்றும் நினைவில் வந்து அந்த இளம் பெண்ணின் கழுத்தைப் பிடித்து நெரிக்க இடிந்து போனாள் செந்தூரி.