02. நெருப்பாய் நின் நெருக்கம்..!!

4.3
(54)

நெருக்கம் – 02

“என்னாச்சும்மா…? ஏன் அழுதுகிட்டு இருக்கீங்க…? வேலைக்கு கிளம்பலையா….?” எனக் கேட்டவாறு அபர்ணா பத்மாவை நெருங்க வேகமாக தன்னுடைய விழிகளைத் துடைத்துக் கொண்டவர்,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல…. நீ முதல்ல குளிச்சிட்டு காலேஜுக்கு கிளம்பு…” என தழுதழுத்த குரலில் கூறினார்.

“அம்மாக்கு என்னப்பா ஆச்சு…? நீங்களாவது சொல்லுங்க….” என அவள் கேட்ட கணம் கண்ணீரோடு சாதனா உள்ளே நுழைவதைக் கண்டவளுக்கு என்ன பிரச்சனை எனத் தெளிவாக விளங்கியது.

‘ஓஹோ…! வழக்கம் போல தானா…’ என தனக்குள் எண்ணிக் கொண்டவள், அமைதியாகத் தன்னுடைய அறைக்குள் நுழைந்து, காலேஜுக்கு தயாராகத் தொடங்கினாள்.

சாதனாவும் தன்னுடைய அன்னையை நெருங்கி அணைத்து கதறத் தொடங்கிவிட, அவளுடைய விழி நீரைத் துடைத்து விட்டவர்,

“எதுவா இருந்தாலும் அபர்ணா காலேஜுக்கு போனதுக்கு அப்புறம் பேசிக்கலாம்… நான் இன்னைக்கு வேலைக்கு லீவு சொல்லிட்டேன்…. என்னங்க… நீங்களும் இங்கேயே இருங்க…” என பத்மா கூற சரி எனத் தலையசைத்தார் ரகுநாத்.

சற்று நேரத்தில் காட்டன் சுடிதார் ஒன்றை அணிந்து, தலை முடியை கெட்டியாகப் பின்னி, எந்தவித மேக்கப்பும் இல்லாமல், புத்தகங்களோடு வெளியே வந்த அபர்ணாவை யார் பார்த்தாலும் பேரழகு என்றே கூறுவர்.

இடை தாண்டி கீழே தொங்கும் அவளுடைய அடர்ந்த கார் கூந்தலும், முட்டைக் கண்களும், அந்த கண்களுக்கு அழகு சேர்க்கும் வகையில் அடர்த்தியான இமைகளும், இயற்கையிலேயே சிவந்த தடித்த இதழ்களும், அவளை யௌவன மாது என நிரூபித்து விடும்.

தயாராகி வந்தவள், தன்னுடைய அன்னை கொடுத்த உணவுப் பார்சலை வாங்கிப் பையினுள் வைத்து விட்டு அக்காவை அவசர அவசரமாக அணைத்து,

“எல்லாம் சரியாகிடும் அக்கா…. கவலைப்படாதே…!” என ஒற்றை வார்த்தையில் அவளை சமாதானப்படுத்தி விட்டு, தந்தையை பார்த்து தலையை அசைத்தவள், புள்ளிமான் போல துள்ளி வீட்டை விட்டு வெளியேறி விட, இப்போது மீண்டும் அழத் தொடங்கி விட்டாள் சாதனா.

“என்னாச்சு சாது..? மாப்பிள்ளை உன்னை முன்னாடி மாதிரி அடிச்சாரா…?” என பரிதவிப்போடு கேட்டார் பத்மா.

“இல்லம்மா முதலாவது கையால தான் அடிப்பார்… இப்போ வார்த்தையால ரொம்ப காயப்படுத்துறாருமா…. என்னால தாங்கிக்கவே முடியல…. குழந்தை இல்லாததால என் மேல தான் குறைன்னு சொல்லி ரொம்பவே திட்டுறாரு.. அவங்க அம்மா கூட என்னை மலடின்னு சொல்லி திட்டுறாங்க….. என்னால தாங்கவே முடியல….” என அழுதவளைப் பார்க்கப் பார்க்கப் அவருக்கோ மனம் தாளவில்லை.

“கவலைப்படாத கண்ணம்மா…! சீக்கிரமாவே உனக்கு குழந்தை கிடைச்சிரும்…” என அவளை சமாதானப்படுத்தினார் அவர்.

“அஞ்சு வருஷமா எவ்வளவோ ட்ரீட்மென்ட் பண்ணிப் பார்த்தாச்சு…. அப்போ வராத குழந்தை இனி எப்படி வரப்போதுன்னு அவர் கேட்கிறாரு….”

“இதுல உன்னோட தப்பு என்ன இருக்கும்மா..?” என ஆதங்கத்தோடு கேட்டார் ரகுநாத்.

“தெ… தெரியலையே… என்னை டிவோர்ஸ் பண்ண போறாராம்பா… என்னை விவாகரத்து பண்ணிட்டு, வேற பொண்ண கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க போறதா என்கிட்டயே சொல்றாரு… நான் அவரை ரொம்ப காதலிக்கிறேன்… அவருக்கு ஏன் என் மேல காதல் இப்போ இல்லைன்னு கொஞ்சம் கூட எனக்குப் புரியவே இல்லை… என்னை விட்டுட்டு வேறொருத்திய கல்யாணம் பண்ண போறேன்னு, என்கிட்டயே சொல்றாரு…. நான் இப்போ என்னதான் பண்றது….” என முகத்தை மூடிக்கொண்டு கதறியவளை, பார்க்க பத்மாவுக்கோ பெற்ற வயிறு பற்றி எரிந்தது.

“நீ கவலைப்படாதடா… நான் மாப்பிள்ளைகிட்ட பேசுறேன்…” என்ற ரகுநாத்தை மறுப்பாக பார்த்தவள்.

“இந்த அஞ்சு வருஷத்துல மூணு வருஷமா…. நானும் இந்த பிரச்சனைக்காகத்தான் அவர்கிட்ட கெஞ்சிக்கிட்டே இருக்கேன்பா…. எப்பவோ என்ன விவாகரத்து பண்ண போறேன்னு சொல்லிட்டாரு…. இவ்வளவு நாளா இழுத்துப் பிடிச்சு நான்தான் இந்த வாழ்க்கையை தக்க வச்சிக்கிட்டு இருந்தேன்… இனியும் இந்த வாழ்க்கை எனக்கு நிலைக்கனும்னா….. நம்ம அபர்ணாவை…” என இழுத்தவள், அதற்கு மேல் பேச முடியாது மீண்டும் அழத் தொடங்க, ரகுநாத்தின் முகமோ கோபத்தில் இறுகியது.

“நம்ம அபர்ணாக்கு என்ன…?” என அவர் சற்று அதட்டலாகக் கேட்க,

“நம்ம அபர்ணாவை… அவருக்கு ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணி வைக்கட்டுமாம்பா.. அப்போ குழந்தையும் கிடைச்சிருமாம்… என்னையும் கடைசி வரைக்கும் அவர் கூடவே வச்சிருப்பார்ன்னு… சொல்றாரு….” என அவள் கூறி முடிப்பதற்கு முன்னரே பத்மா அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.

“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு….? உன்னோட புருஷன்தான் அறிவில்லாம பேசுறாருன்னா… அதை அப்படியே கேட்டுட்டு வந்து இங்க சொல்றியே….! உனக்கு எங்க போச்சு அறிவு….? அவ சின்ன பொண்ணுடி….. இதுக்குத்தான் அன்னைக்கே தலபாடா அடிச்சுக்கிட்டேன்… உன்ன விட பணத்துக்கு தான் அவர் முக்கியம் கொடுக்கிறாரு…. இந்த கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன்…. என்னோட பேச்சை நீ கேட்டியா…? இப்போ பாரு எங்க வந்து நிக்குதுன்னு..? உன்ன கல்யாணம் பண்ணி கொடுத்ததிலிருந்து நீயும் சந்தோசமா இல்ல…. நாங்களும் சந்தோஷமா இல்ல… இப்போ சின்னவளோட வாழ்க்கையையும் கெடுக்கப் பார்க்கிறானா..? உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் சீரழிக்கப் போறியா முட்டாள்..?”

“இ… இல்லம்மா… எனக்கு பயமா இருக்கு… என்ன பண்றதுன்னே தெரியல… எத்தனையோ தடவை சொல்லி புரிய வைக்க முயற்சி பண்ணினேன்…. ஆனா அவர எதிர்த்து பேசினாலே ரொம்ப அடிக்கிறாரு… எங்க என்ன ஒரேடியா வேண்டாம்னு சொல்லிடுவாருன்னு பயமா இருக்கு…” என அவள் கூறியதும், ரகுநாத்தோ இடிந்து போய் இருக்கையில் அமர்ந்து விட்டார்.

‘ச்சே…. என்ன மனிதன் இவன்…? அக்காவை காதலித்து திருமணம் செய்துவிட்டு அவளுடைய தங்கையையும் திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கின்றானே….!’

எவ்வளவு கேவலமான எண்ணம்….’ என தனக்குள் எண்ணி மறுகினார் பத்மா.

“போதும் நிறுத்துங்க… இதுக்கு மேல என்னால எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாது…. உன்னோட வாழ்க்கைக்காக நான் எவ்வளவோ பண்ணிட்டேன் சாதனா…. இரண்டாவது பொண்ணோட வாழ்க்கையையும் உன்னோட வாழ்க்கைக்காக என்னால பணயம் வைக்க முடியாது…. இந்த வாழ்க்கை நீயா தேடிக்கிட்டது.. அபர்ணா கல்யாணம் பண்ணாம இருக்குறதுதானே உன் புருஷனோட கண்ணுக்கு இப்போ உறுத்திக்கிட்டு இருக்கு…?

நாளைக்கே அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சிடுறேன்…” என கோபத்தில் சத்தமாக கத்தினார் ரகுநாத்.

“என்னங்க பேசுறீங்க… இப்போ அவளுக்கு கல்யாணம் பண்ற வயசா…? அவ இன்னும் காலேஜ் கூட முடிக்கல…. இப்போ தான் 22 வயசு ஆகுது…. இந்த வயசுல அவளுக்கு என்ன தெரியும்னு. கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறது…” என பதை பதைத்தார் பத்மா.

“இதோ பாரு பத்மா…. நான் சொன்னதுதான் முடிவு…. நான் பாக்குற மாப்பிள்ளைய அபர்ணாக்கு கல்யாணம் பண்ணி வச்சுருவோம்… நம்ம சாதனாவ வச்சு மிரட்டி, அபர்ணாவ இரண்டாம் தரமா கல்யாணம் பண்ணிக்க அவன் என்ன வேணாலும் பண்ணுவான்…
ஏற்கனவே எனக்கு நெஞ்செல்லாம் வலிக்கிற மாதிரி இருக்கு…. இந்த வீடு எப்ப வேணாலும் நம்ம கைய விட்டுப் போயிடலாம்…. அதுக்கு மேல பேங்க்ல எடுத்த லோன் வேற கட்டி முடிக்கல… இவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியில உங்களை அம்போன்னு விட்டுட்டு எங்க போய் சேர்ந்திடுவனோன்னு… பயமா இருக்கு…. அதுக்கு முன்னாடி என்னோட இரண்டாவது பொண்ண கரை சேர்த்துட்டாலே எனக்கு பெரிய நிம்மதி… இனி நான் சொல்றத மட்டும் கேளுங்க….” என வேதனையோடும், கோபத்தோடும் கத்தியவர், துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, அந்த வீட்டை விட்டு வெளியே சென்று விட, சாதனாவோ விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

“அப்பா சொல்றதுதான் சரின்னு தோணுதுமா…. நம்ம குட்டிமாவ கல்யாணம் பண்ணி கொடுத்திடலாம்…” என்ற மகளை அழுகையோடு அணைத்துக் கொண்டார் பத்மா.

*****

பேருந்தில் இருந்து இறங்கியவள், கல்லூரி வளாகத்தினுள் மெல்ல நடந்து சென்றாள்.
அக்காவிற்கு இப்போது என்ன பிரச்சனை வந்திருக்கக்கூடும் என்ற எண்ணமே அபர்ணாவின் மனதினுள் எழுந்து அவளை குழப்பிக் கொண்டிருந்தது.

“ஹேய் அபூஊஊ.. வந்துட்டியா…. வா வா..” என அபர்ணாவைக் கண்ட உற்சாகத்தில் அவளை நோக்கி வேகமாக வந்தாள் அவளுடைய தோழி ப்ரீத்தி.

“ஹேய் ப்ரீத்தி… கிளாசுக்கு டைம் ஆயிடுச்சு. இன்னும் உள்ள போகாம இங்கே என்னடி பண்ற..? நான் என்னோட பஸ்ஸ மிஸ் பண்ணிட்டேன்… அதனாலதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு…” எனக் கூறினாள் அபர்ணா.

“அடிப்பாவி உனக்கு விஷயமே தெரியாதா…? இன்னைக்கு நமக்கு கிளாஸ் நடக்காது… ஏதோ ஓவியப்போட்டி நம்ம காலேஜ்ல நடக்க போகுதாம்….. ஃபேமஸான ஆர்ட்டிஸ்டு எல்லாம் வரப் போறாங்களாம்…..”

“சூப்பரு…. அப்போ இன்னைக்கு செமையா ஃபன் பண்ணலாம்….” என்றவள் ப்ரீத்தியின் கையைப் பிடித்தவாறு கேண்டினை நோக்கி செல்லத் தொடங்க,

“அபர்ணா…” என அவளை அழைத்தான் அவளுடைய நண்பன் தினேஷ்.

“என்னடா….?”

“அடியே…! நான் உன்னோட சீனியர்டி… கொஞ்சமாவது மரியாதை கொடு…” என்றான் அவன்.

“அதான் நாம பிரெண்ட்ஸ் ஆயிட்டோம்ல…. இந்த மரியாதையே உனக்குப் போதும்… என்ன மேட்டர்னு சொல்லு…” என்றாள் அவள்.

“இதோ பாரு… உனக்கு பிடிச்ச பிஸ்கட் கோன் ஐஸ்கிரீம் வாங்கித் தர்றேன்…. கொஞ்ச நேரம் நான் வரையும் மட்டும் எனக்கு மாடலா இருக்க முடியுமா…?”

“வாவ்… நிஜமா வாங்கித் தருவியா…?”

“சத்தியமா வாங்கித் தர்றேன்டி…. நாலு மணி நேரத்துக்குள்ள நம்ம கண்ணு முன்னாடி இருக்கிற ஒருத்தர வரைஞ்சு முடிக்கிறதுதான் போட்டியே….. சுசியை வரையலாமுன்னு… பிளான் பண்ணி இருந்தேன்… கடைசி நேரத்தில் அவ காலேஜ் வராம சொதப்பிட்டா…. அதனால தான் உன்னை கேட்கிறேன்… நீ மட்டும் நான் வரைஞ்சு முடிக்கும் மட்டும், அந்த இடத்துல இருந்தீன்னா உனக்கு அஞ்சு பிஸ்கட் கோன் ஐஸ்கிரீம் வாங்கித் தர்றேன்…” என்றதும் அவளோ புருவங்களை சுருக்கியவள்,

“வாட்… நாலு மணி நேரம் ஒரே இடத்தில் இருக்கணுமா…? அடப் போடா… என்னால முடியாது… போர் அடிக்கும்…” என இதழ்களை சுளித்தாள் அவள்.

“ஹே…. ப்ளீஸ் டி…. ஹெல்ப் பண்ணுடி…”

“சரி…. உன்ன பார்த்தாலும் பாவமாத் தான் இருக்கு…. நீ கேட்டத நான் பண்ணிக் கொடுத்தா…? என்னோட அசைன்மென்ட்ட நீ பண்ணிக் கொடுப்பியா…?” என்றதும் அவளைப் பார்த்து முறைத்தான் தினேஷ்.

“எவ்வளவு தைரியம் இருந்தா…? என்னை பார்த்து முறைப்ப….? முடியாது போடா….” என அவள் சிலுப்பிக் கொள்ள,

“சரிடி பண்ணித் தொலைக்கிறேன்…. இப்ப வா….” என அவளை நெருங்கியவன், அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டு போட்டி நடக்கவிருந்த மண்டபத்தை நோக்கி செல்லத் தொடங்கினான்.

அதே கணம் அங்கே நடக்கவிருந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக அந்த மண்டபத்திற்குள் நுழைந்தான் குருஷேத்திரன்.

அவனுடைய பார்வையோ சிரித்தவாறு தினேஷின் கையை பிடித்தபடி ஓடிச் சென்று கொண்டிருந்த அபர்ணாவின் மீது வியப்பாய் படிந்தது.

 

அந்தப் பார்வை மெல்ல இரசனையாய் மாறியது.

🔥🔥🔥🔥

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 54

No votes so far! Be the first to rate this post.

1 thought on “02. நெருப்பாய் நின் நெருக்கம்..!!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!