முள் – 02
தங்கை வரும் நேரம் நெருங்கியதும் வான்மதிக்கோ பதற்றம் தொற்றிக் கொண்டது.
“ஹேய் விக்ரம் டைம் ஆயிருச்சு… நீ கிளம்பு.. உன்ன அப்பவே கிளம்ப சொன்னேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தல அவ வந்துருவாடா புரிஞ்சுக்க..”
“ஏன்டி இவ்வளவு டென்ஷன் ஆகுற..? அவளுக்குத்தான் நான் உன் ஃப்ரெண்ட்டுன்னு தெரியுமே.. அவ வந்தா கூட உன்னைப் பார்க்க வந்தேன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம்.. பதட்டப்படாத..” என்றவன் தன்னுடைய ஆடைகளை எடுத்து அணியத் தொடங்க இவளுக்கு இன்னும் படபடப்பு குறையவில்லை.
“அச்சச்சோ அவருக்கு டென் மினிட்ஸ்ல கால் பண்றேன்னு சொல்லிட்டு கால் பண்ணவே இல்ல. என்ன நினைச்சாரோ தெரியலையே..”
பெல்டை தன்னுடைய கையில் எடுத்துக் கொண்டவன்,
“இப்போ கால் பண்ணு.. ஏன் லேட்னு கேட்டா குழந்தைய காரணமா சொல்லிடு..” எனத் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் அவளுடைய குழந்தையை கண்காட்டியவாறு அவன் கூற,
“ஹ்ம்ம்.. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.. முதல்ல நீ இங்க இருந்து போடா…” என்றாள் அவள்.
“ஓகே ஓகே ரிலாக்ஸ்…” என்றவன் அங்கிருந்து செல்வதற்கு முதல் அவளை இறுகணைத்து சிறு சில்மிஷத்தை நடத்திவிட்டு வெளியேறிவிட, அதன் பின்னர்தான் இவளுக்கு மூச்சே வந்தது.
விக்ரம் அவளுடைய கல்லூரி நண்பன்.
அவர்களுக்கிடையே சில மாதங்களுக்கு முன்பு வரை நட்பு மட்டும்தான் தொடர்ந்து கொண்டிருந்தது.
வான்மதிக்கோ தன்னுடைய கணவனை மிகவும் பிடிக்கும். அன்பு காட்டுவதில் அவனை யாராலும் அடித்துக் கொள்ளவே முடியாது.
அவளைப் பார்த்துக் கொள்வதிலும் குணத்திலும் கூட அவன் மிகவும் நல்லவன்தான்.
ஆனால் அவன் இல்லாத தனிமையைத்தான் அவளால் சமாளிக்கவோ சகிக்கவோ முடியவில்லை.
ஆரம்பத்தில் அவளுடைய நண்பர்களுடன் பொழுதுபோக்குக்காக வெளியே சுற்றத் தொடங்கியவள் விக்ரம் எனும் நண்பனுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகப் பழக ஆரம்பித்தாள்.
அவனுடைய நட்பு அவளுடைய வீடு வரை தொடர்ந்து விட அவளுக்கும் அதை மறுக்கத் தோன்றவில்லை.
ஆரம்பத்தில் நட்பாகத் தொடர்ந்த பேச்சு பின்பு இரட்டை அர்த்தங்களில் பேசும்படியாக மாறிப்போனது.
கொஞ்சம் கொஞ்சமாக அதீத உரிமையை எடுத்துக்கொண்ட விக்ரம் அவளைத் தொட்டுப் பேசுவதும் ஏ ஜோக்ஸ் சொல்லி சிரிக்க வைப்பதும் என தன்னுடைய எல்லையைத் தாண்டிச் செல்ல அதனை தடுத்து நிறுத்த வேண்டியவளோ அப்படி செய்யாது அவனுடன் சேர்ந்து நெருக்கமாக பேசத் தொடங்கினாள்.
அதை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டான் விக்ரம்.
அவனுக்கு பணத்தேவை அதிகமாக இருந்தது.
லகரங்களில் யாஷ்வின் சம்பாதித்து மனைவிக்கு அனுப்புவதை அறிந்து கொண்டவன் அவளிடம் அடிக்கடி பண உதவியையும் பெற்றுக் கொண்டான்.
சில மாதங்களுக்கு முன்பு அவள் தனியாக இருந்தபோது அவன் தன்னுடைய விருப்பத்தைக் கூறிவிட முதலில் கோபப்பட்டு மறுத்து அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பியவள் இரண்டே நாட்களில் மீண்டும் அவனை வீட்டிற்கு அழைத்து அவன் கேட்டதற்கு சம்மதம் கூறியிருந்தாள்.
தகாத உறவுதான் ஆனால் அவளுக்கும் உடல் தேவை அதிகமாகவே இருந்தது.
வருடத்தில் இரண்டே இரண்டு முறை வந்து போகும் கணவனுக்காக என்னுடைய வாழ்க்கையை நான் ஏன் பாழாக்க வேண்டும்..? தனக்கென்ன கிழவி வயதா ஆகின்றது..?
இருபத்தாறு வயதே நிரம்பியவளுக்கு இது ஒன்றும் பெரிய தவறாகத் தெரியவில்லை.
வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லாம் இப்படித் தனியாகவா வாழ்கின்றனர்..?
பழைய காலத்து கலாச்சாரத்தை எல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என என்ன அவசியம் இருக்கின்றது எனத் தனக்குத்தானே கூறிக் கொண்டவள் அதன் பின்னர் தினமும் விக்ரமுடன் தன்னுடைய பொழுதை தவறான முறையில் கழிக்கத் தொடங்கினாள்.
அந்த வீட்டில் தங்கி இருந்து படிக்கும் அவளுடைய தங்கைக்கு விக்ரம் நல்ல நண்பன் என்று மட்டும் தான் தெரியும்.
அவள் காலேஜுக்கு சென்ற பின்னர் விக்ரம் வீட்டிற்கு வருவதால் யாருக்கும் இதுவரை எந்த சந்தேகமும் வரவில்லை.
சந்தேகம் வராதவாறு பார்த்துக் கொண்டாள் வான்மதி.
அவனை அனுப்பி வைத்து விட்டு ஆடைகளை சரி செய்து கொண்டு தன்னுடைய கணவனுக்கு வீடியோ அழைப்பை விடுத்தவள் அடுத்த நொடியே அவன் அழைப்பை ஏற்றுக் கொண்டதும் அவளுக்கோ மனம் குற்ற உணர்ச்சியில் குறுகுறுத்தது.
தன்னுடைய அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் “சாரிங்க.. பாப்பா அழுதா.. அதனாலதான் அவளை தூங்க வச்சுட்டு வந்து கால் பண்ணேன்..” எனக் கூற, அவனுக்கோ உருகியே போய்விட்டது.
“அம்மாடி நான் உன்ன ரொம்ப கஷ்டப் படுத்துறேனா..? இந்த வேலைல சேர்ந்ததுல இருந்து உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணவே முடியல.. உன் கூடவும் பாப்பா கூடவும் இருக்கிற நாள் ரொம்ப கம்மியா இருக்குல்ல..? எல்லா வேலையும் நீதான் அங்க தனியா பார்க்க வேண்டியதா இருக்கு.. வேலையை விட்டுட்டு வந்துடலாம்னு கூட இப்போ எல்லாம் யோசிக்கத் தோணுதும்மா..” என்றான் அவன்.
“நீங்க என்ன நினைச்சு கவலையே படாதீங்க… காலைல இருந்து ஈவினிங் வரைக்கும் பாப்பாவ சமாளிச்சு சமைச்சுட்டேன்னா போதும்… மிச்ச வேலை எல்லாம் தங்கச்சி வந்ததும் பாத்துப்பா… அவ என் கூட இருக்கிறது பெரிய ஹெல்ப்பா இருக்கு.. என்ன பத்தியும் பாப்பாவ பத்தியும் யோசிக்காதீங்க.. நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க..
இந்த வேலையை எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கினீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. எனக்காக அதை விட்டுட்டு வந்தீங்கன்னா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்பா… நான் இங்க சமாளிச்சுப்பேன்..” என அவள் கூற அவனுக்கும்தான் விழிகள் கலங்கிப் போயின.
திரையில் தெரிந்த அவளுடைய முகத்தைப் பார்த்து எண்ணற்ற முத்தங்களை தொலைவில் இருந்தே வழங்கியவன்,
“ரொம்ப கஷ்டமா இருக்குடி.. வேலை செய்யும்போது எந்த நினைப்பும் வராது.. வேலை எல்லாம் முடிச்சு வந்ததுக்கு அப்புறமா என்னோட மனசு உன்னையும் பாப்பாவை மட்டும் தான் தேடும்… ரொம்ப டயர்டா இருக்கும்போது உன் மடில தூங்கணும் போல இருக்கும்… உன் கையால காபி குடிக்கணும் போல இருக்கும்… இங்க எவ்வளவு நல்ல சாப்பாடு சாப்பிட்டாலும் உன்னோட கை பக்குவத்துக்குத்தான் மனசு ஏங்குதுடி.. உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்மா..
உனக்காக வேலையை விடுறேன்னு சொல்றதை விட எனக்காக வேலைய விடுறேன்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.. ஏன்னா நீ இல்லாம என்னால இங்க இருக்கவே முடியல.. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இந்த ஆறு மாசத்தையும் தள்ளிட்டு இருக்கேன்.. எப்போ அடுத்த லீவு வரும் எப்போ உன்னை பார்க்கலாம்னு மனசு கிடந்து துடிக்குது மதி..
பாப்பா கிட்ட கூட ஒழுங்கா பேச முடியல.. இங்க வேலையெல்லாம் முடிஞ்சு நான் கால் பண்றப்போ அவ தூக்கத்துல இருப்பாளே..” என அவன் கவலைப்பட,
“நான் வேணும்னா பாப்பாவ எழுப்பட்டுமா..?” எனக் கேட்டாள் வான்மதி.
“இல்ல இல்ல அவளை எழுப்பாத.. அவ தூங்கட்டும்.. அவளோட முகத்தை மட்டும் காமிக்கிறியா ப்ளீஸ்..?” என அவன் ஆசையாகக் கேட்க,
இவளுக்கு நெஞ்சம் பிசைந்தது. கனத்த மனதுடன் எழுந்து கொண்டவள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை மெல்லத் தன் கரத்தில் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அவனுக்கு குழந்தையின் முகத்தை காண்பிக்க கண்களில் வழிந்த கண்ணீரோடு குழந்தைக்கும் முத்தத்தை வழங்கினான் யாஷ்வின்.
“பிறக்கும்போது உன்ன மாதிரி இருந்தா.. இப்போ என்னோட ஷேப் அடிக்கிற மாதிரி இருக்குல்ல..?” என அவன் மகிழ்ச்சி ததும்ப கேட்க ஆமென தலையை அசைத்தாள் அவள்.
“இங்க எல்லாருமே அப்படியே உங்களை உரிச்சு வச்சிருக்கான்னுதான் சொல்லிக்கிறாங்க..”
“அவ என் பொண்ணுடி.. என்னை மாதிரி தானே இருப்பா..?” பெருமையுடன் கேட்டான் அவன்.
“ஐயோடா நான் எப்ப இல்லைன்னு சொன்னேன்..? உங்க பொண்ணு உங்கள மாதிரி தான் இருப்பா.. ஆனா அவளோட சப்பை மூக்கு என்ன மாதிரி இருக்குல்ல..?” என பெருமைப்பட்டுக் கொண்டவளை அள்ளி அணைக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு.
“அம்மாடி…”
“என்னப்பா..?”
“உனக்கு கஷ்டமா இருந்தா எந்த தயக்கமும் இல்லாம என்கிட்ட சொல்லிரு.. இந்த வேலையை விட்டுட்டு ஓடி வந்துடுறேன்…”
“ம்ம்..”
“நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் இன்னும் ரெண்டு வருஷத்துக்கு மட்டும் வேலை பார்த்து கொஞ்சம் காசை சேமிச்சுட்டு ஏதாவது பிஸ்னஸ்ஸ நம்ம ஊர்ல இருந்தே பாத்துக்கலாம்னு இருக்கேன்..”
“புரியுதுங்க.. உங்களுக்கு எது இஷ்டமோ அப்படியே பண்ணுங்க.. உங்க முடிவுல நான் எப்பவுமே தலையிட மாட்டேன்.. ஏன்னா நீங்க எடுக்கிற முடிவு எப்பவும் சரியா தான் இருக்கும்…” என்றவளை காதல் பொங்க பார்த்தவன்,
“லவ் யூ அம்மாடி…” என்றான்.
அவனுடைய அம்மாடி என்ற அழைப்பு அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
“ஏய் மதி.. உன் கழுத்துல என்னாச்சு..? சிவந்து இருக்கு..” என அவன் கேட்க, இவளுக்கோ சட்டென உடல் பதறிவிட்டது.
விக்ரமின் பற்தடங்கள் ஏதாவது பதிந்து வெளியே தெரிகின்றதோ எனப் பதறியவள் ஃபோனில் தெரிந்த திரையில் தன்னுடைய கழுத்தைப் பார்த்துவிட்டு பல் தடம் ஏதுமின்றி சிவந்து மட்டும் இருப்பதைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
‘நல்ல வேளை பல்தடம் எதுவும் தெரியலை.. இவன்கிட்ட கடிக்காதடான்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. கேக்குறானே இல்லையே.. சே..’ என மனதிற்குள் விக்ரமுக்கு திட்டியவள் வெளியே தன் கணவனைப் பார்த்து சமாளிப்பாகச் சிரித்தாள்.
“இன்னைக்கு வீட்ல டஸ்ட் தட்டும்போது ஏதோ பூச்சி கடிச்சிருச்சுங்க.. அதுதான் இப்படி சிவந்திருக்கு..” என அவள் சமாளிக்க அவன்தான் துடித்துப் போனான்.
“இந்த வேலையெல்லாம் நீ எதுக்குடி பண்ற..?”
“நல்லா இருக்கே உங்க பேச்சு.. நம்ம வீட்டு வேலைய நாம பண்ணாம வேற யார் பண்ணுவா..?” எனக் கேட்டாள் அவள்.
‘அம்மாடி வேலைக்கு யாராவது ஆள உன் கூடவே வச்சுக்கோ.. மாசமாசம் அவங்களுக்கு பணம் கொடுத்துக்கலாம்.. குழந்தையும் பார்த்துக்கிட்டு வீட்டு வேலையும் எப்படி உன்னால சமாளிக்க முடியும்..? நான் உழைக்கிறதுதான் இப்போ நல்லாவே பத்துமே.. யாராவது ஓரளவு வயசு இருக்கவங்களா பார்த்து வேலைக்கு வச்சுக்கோ…” என்றதும் வேகமாக மறுத்தாள் அவள்.
“சும்மா எதுக்கு பணத்தை வேஸ்ட் பண்ணனும்..? இங்க ஒன்னும் அவ்வளவு பெரிய வேலை இல்லைங்க… நானே சமாளிச்சுப்பேன்.. என்ன பத்தி யோசிக்காதீங்கன்னு உங்ககிட்ட சொன்னேன்ல.. நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க… சீக்கிரமா லீவு கிடைச்சதும் வீட்டுக்கு வாங்க..”
“சரிமா..” என்றவன் மேலும் ஏதோ கூறத் தொடங்க அவன் முன்னே வந்து நின்றான் அவனுடைய நண்பன் கமல்.
“யாஷ் ஒரு பிரச்சினை டா கேப்டன் உன்ன கூட்டிட்டு வரச் சொன்னாரு..” என அவன் கூற சட்டென எழுந்து கொண்டவன் “அம்மாடி இங்க ஏதோ பிரச்சனையாம்.. நான் என்னன்னு பாத்துட்டு உன் கூட அப்புறமா பேசுறேன்.. பாப்பாவ பாத்துக்கோ.. நீயும் டைமுக்கு சாப்பிடு… பை…” என்றவன் அவளிடம் தலை அசைத்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அந்த சிறிய பிரச்சனைதான் அவனுடைய வாழ்க்கையையே புரட்டிப் போடப் போவதை அக்கணம் அவன் அறியவில்லை.
💜💜💜
So sad sis
Super super super super . Pavam enna pirachinai vachirukeenga Vini sister. Already than oru pirachinai Iruku illa. Innum yen list ah perusa add panreenga?👌👌👏👏👏👏👏🥰🥰🥰🥰😍😍😍😍🤩🤩🤩🤩❤️❤️❤️