வேறு வழி இன்றி அஞ்சலி சம்மதம் சொல்லிவிட அப்போதுதான் மதுராவிற்கு உயிரே மீண்டு வந்ததைப் போல இருந்தது.
அடுத்த நொடியே சிறு துளி அளவு கூட தயக்கம் இன்றி தன்னுடைய கழுத்தில் இருந்த தாலியை வேகமாகக் கழற்றி அவள் அஞ்சலியின் கழுத்தில் அவசர அவசரமாக அணிவித்து விட நடுங்கி விட்டாள் அஞ்சலி.
“ஐயோ அக்கா பயமா இருக்குக்கா.. இ… இது தப்புக்கா..” பதறியது அவளுடைய மனம்.
“ப்ச்… பயப்படாத அஞ்சு…”
“இ… இல்லக்கா… நான்தான் அஞ்சலின்னு கண்டுபிடிச்சா ரொம்ப பெரிய பிரச்சனையாயிடும்..” படபடத்தாள் அஞ்சலி.
“யாராலையும் கண்டு பிடிக்க முடியாதுடி.. அப்படியே கண்டு பிடிக்கிறதுன்னா நம்ம அம்மா அப்பாதான் கண்டு பிடிப்பாங்க.. அவங்கள சமாளிச்சிடலாம்.. நீ கதிரை மட்டும் நம்ப வெச்சா போதும்…”
“ம்ம்…” மனமே இன்றி தலை அசைத்தாள் அஞ்சலி.
அடுத்து நகர்ந்த நிமிடங்கள் எல்லாம் அஞ்சலியின் விருப்பம் இன்றியே கழிந்தன.
சாந்தி முகூர்த்தப் புடவையை எடுத்து அஞ்சலிக்கு கட்டி விட்டவள் அவளுக்கான அலங்காரத்தை முடித்துவிட்டு அஞ்சலியின் புடவையை தான் அணிந்து கொண்டாள்.
அவளைப் போலவே தன்னுடைய கூந்தலை பின்னலிட்டுக் கொண்ட மதுராவின் முகத்திலோ அப்போதுதான் நிம்மதி பரவியது.
“இப்படியே உன்னை யார் பார்த்தாலும் மதுரான்னு தான் நினைப்பாங்க… அச்சு அசலா என்ன மாதிரியே இருக்க.. அம்மாவால கூட அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது..” என்ற மதுராவை விழிகளில் கண்ணீர் தேங்கப் பார்த்தாள் அஞ்சலி.
“இப்போ எதுக்கு அஞ்சு அழுகுற..? அழாத… தைரியமா இரு.. எந்தத் தப்பும் நடக்காது..”
“இல்லக்கா நீன்னு நெனச்சு மாமா என்கிட்ட தப்பா ஏதாவது…” என அவள் அழுதவாறே தயங்க,
“அவரைப் பார்த்தா அந்த அளவுக்கு எல்லாம் வொர்த்துன்னு தோணல.. சோ நீ பயப்படாத… உள்ள போனதும் அவர்கிட்ட பேசணும்னு சொல்லு… பேசும்போது எனக்கு கொஞ்சம் டைம் வேணும் நாம நல்லா பழகினதுக்கு அப்புறமா ஒன்னா சேர்ந்து வாழலாம்னு சொல்லி சமாளி… அதுக்கப்புறம் நான் வந்து பாத்துக்குறேன்…” என்றாள் மதுரா.
அஞ்சலிக்கு நெஞ்சம் நடுங்கியது.
இப்படி எல்லாம் அவளால் அவனிடம் பேசிவிட முடியுமா..?
அக்கா சொல்வது எல்லாம் அப்படியே நடந்து விடுமா என்ன..?
அவள் கூறியதை செய்யவில்லை என்றால் தற்கொலை அல்லவா பண்ணிக் கொள்வேன் என்கிறாள்.. ஒருவேளை அவள் ஏதாவது செய்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டால் தன்னால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது போய்விடுமே..
குற்ற உணர்ச்சி அவளைக் கொன்று கூறு போட்டு விடும்..
இப்போது மதுரா சொல்வதைக் கேட்பதைத் தவிர தனக்கு வேறு வழி இல்லை என எண்ணியவள் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டாள்.
“ஓகே அஞ்சலி டைம் ஆயிடுச்சு.. இதுக்கு அப்புறமும் இங்கேயே நின்னு நான் உன் கூட பேசிட்டு இருந்தா வெளியே இருக்கவங்களுக்கு சந்தேகம் வந்துரும்… கடைசி பஸ் இன்னும் அரை மணி நேரத்துல பஸ் ஸ்டாப்புக்கு வந்துரும்… நான் இப்பவே கிளம்பினாதான் போக முடியும்… பத்திரமா இரு… பயந்து உளறிடாதே.. உன்னோட கைல தான் எல்லாமே இருக்கு..” எனக் கூறி அஞ்சலியின் தலையில் மிகப்பெரிய சுமையை ஏற்றி வைத்தாள் மதுரா.
“அ… அக்கா இப்போ நீ போனதுக்கு அப்புறம் எல்லாரும் அஞ்சலி ஓடி போய்ட்டான்னுதானே பேசுவாங்க..?” என திகைத்தவளாய் கேட்டாள் அஞ்சலி.
“ஆமா அஞ்சலி மூணு மாசத்துக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ப்ளீஸ்.. நான் திரும்பி வந்ததும் உண்மையை சொல்லி எல்லார்கிட்டயும் சாரி கேட்கிறேன்..” என்றவள் தன்னுடைய தந்தையை இறுக அணைத்து விட்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றுவிட இவளுக்கோ தேகம் நடுங்கத் தொடங்கியது.
இன்னும் சற்று நேரத்தில் பிரச்சினை வெடிக்கப் போகின்றது.
அஞ்சலி காணாமல் போய்விட்டாள் என எல்லாரும் தேடப் போகின்றார்கள்.
இதயம் மிக வேகமாகத் துடிக்க அந்த அறையில் இருந்த தண்ணீரை எடுத்து மட மடவென அருந்தினாள் அஞ்சலி.
“முருகா தயவு செஞ்சு இந்தப் பிரச்சனைல இருந்து என்னைக் காப்பாத்து..” என தன்னுடைய இஷ்ட தெய்வத்திடம் விழி மூடி பிரார்த்தனை செய்தாள் அவள்.
அதற்குள் அந்த அறையின் கதவு தட்டப்பட படபடப்போடு அந்தக் கதவைத் திறந்தவள் வெளியே நின்ற கதிரின் அன்னையைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள்.
“மதுரா ரெடி ஆயிட்டியா..?”
“ஆ… ஆமா அத்த..”
“தேவதை மாதிரி இருக்கம்மா.. என்கூட வா..” என்றவர் அவளுடைய கரத்தில் பால் செம்பைக் கொடுக்க அவளுக்கோ கரங்களின் நடுக்கத்தில் எங்கே அந்த பால் செம்பை கீழே போட்டு விடுவோமோ என்ற பயமே முதலில் எழுந்தது.
மெல்ல அந்த பால் செம்பை வாங்கிக் கொண்டவள் அவருடன் இணைந்து நடக்க அஞ்சலியின் அன்னையும் அவர்களின் அருகே நெருங்கி வந்தார்.
“வாங்க சம்மந்திம்மா… இன்னைக்கு நைட் நீங்க இங்கேயே தங்கலாமே…?” என்றார் கதிரின் அன்னை சுதாலட்சுமி.
“இல்லைங்க.. கல்யாணத்துக்கு வந்த சொந்தக்காரங்க நம்ம வீட்லயும் கொஞ்சம் பேர் இருக்காங்க.. அவங்களையும் கவனிக்கணும்.. இன்னைக்கு போய்ட்டு நாங்க அப்புறமா வர்றோம்..” என்றார் சீதா.
அவரின் பார்வை பெருமிதமாக தன்னுடைய மகள் மதுராவின் மீது படிந்தது.
அஞ்சலியோ படபடப்போடு தன் தலையைக் குனிந்து கொண்டாள்.
எங்கே அம்மா தன்னைக் கண்டு கொள்வாளோ என்ற பயம் அவளுக்கு.
அவள் தலையை குனிந்த விதத்தில் சீதாவின் புருவங்கள் சுருங்கின.
“சரிம்மா நல்ல நேரம் முடியப் போகுது… நீ உள்ள போ..” என்ற சுதாலட்சுமியோ தன்னுடைய மகனின் அறைக்கதவைத் திறந்து விட இப்போது அன்னையிடமிருந்து தப்பித்தால் போதும் என எண்ணிய அஞ்சலி வேகமாக அந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
நல்ல வேலை அன்னை தன்னிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்ற நிம்மதிப் பெருமூச்சோடு எண்ணிக் கொண்டவள் தன்னை யாரோ உற்றுப் பார்ப்பது போன்ற உணர்வில் சட்டென திரும்பினாள்.
அங்கே படுக்கையில் அமர்ந்திருந்தவாறு அவளையே இரசனை ததும்ப பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்வேலன்.
அவனுடைய மனமோ அந்தப் பார்வையில் அலறத் தொடங்கியது.
இவரை சமாளிப்பதை விட அன்னையை சமாளித்து விடலாம் என எண்ணியவள் அக்கணமே மீண்டும் வெளியே சென்று விடலாம் எனக் கதவுப் பக்கம் திரும்ப,
“ஏன் அங்கேயே நிற்கிற..? இங்க வா மது..” என அழைத்தான் கதிர்.
“மதுவா..?” எனத் திணறியவள் இனி அவள் மது தானே என் எண்ணி பெருமூச்சோடு அவனைப் பார்த்தாள்.
அவளுடைய கால்களோ நகர மறுத்தன.
அப்படியே சுவற்றில் ஒட்டிய பல்லி போல கதவில் சாய்ந்து நின்று கொண்டாள் அஞ்சலி.
அவனுடைய விழிகளிலோ அத்தனை ஆர்வம்.
மெல்ல எழுந்து அவள் அருகே நெருங்கி வந்தான் கதிர்வேலன்.
அவளுக்கோ படபடப்பு அதிகரித்தது.
“ரொம்ப அழகா இருக்க…” என்றான் அவன் கரகரப்பான குரலில்.
திணறிப் போனாள் அவள்.
அவளுடைய கரத்தில் இருந்த பால் செம்போ அவளுடைய கரத்தின் நடுக்கத்தில் கிடு கிடுவென ஆடத் தொடங்கியது.
அவளின் நிலை புரியாது இன்னும் நெருங்கினான் கதிர்.
அவன் விழிகளில் ஆசையும் மோகமும் கலந்து வழிந்தது.
“நா… நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றாள் அவள் அவசரமாக.
“பேசலாமே… விடிய விடிய பேசலாம் மது…” என்றவன் அவளுடைய கரத்தில் இருந்த பால் செம்பை வாங்கி அருகே இருந்த மேஜை மீது வைத்தவன் அவளுடைய கைகளைப் பற்றிக்கொள்ள,
அவளுக்கோ உடல் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்துவிட்டது.
“ஏய் என்ன ஆச்சு..? பயப்படுறியா..?” எனக் கேட்டான் அவன்.
சற்றும் யோசிக்காது ஆம் என தலையசைத்து விட்டாள் அவள்.
அவனுக்கோ சிரிப்பாக இருந்தது.
அவளுடைய மென்மையும் நடுக்கமும் அவனுக்கு சுவாரஸ்யத்தை அதிகரித்தது.
“ஏன்டி பொண்டாட்டி..? என்னைப் பார்த்தா டெரர் மாதிரியா தெரியுது..?” எனக் கேட்டவன் அவளுடைய கரத்தை பற்றி அழைத்துக் கொண்டு படுக்கையில் அவளை அமர வைக்க, அவளோ விழி விரித்து அவனைப் பார்த்தாள்.
“மாமா… நான் உங்ககிட்ட பே.. பேசணும்…”
“மாமாவா…? வாவ்.. நீ என்னை மாமான்னுதான் கூப்பிடுவியா..? கேட்கவே செம கிக்கா இருக்குடி…”
‘அடக் கடவுளே.. இவர் கிட்ட எப்போ பேசி முடிச்சு எப்படி இவரை சமாளிக்கப் போறேன்னே தெரியலையே.. இப்படியே மயங்கி விழுந்த மாதிரி தரையில விழுந்திடுவோமா..?’
அவள் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் மேஜை மீது இருந்த பால் செம்பை எடுத்து பாதியை தான் குடித்துவிட்டு மீதியை அவளிடம் நீட்டினான் அவன்.
“குடி…”
“ம்ம்…” என்றவள் தவிர்க்க முடியாது அந்தப் பால் செம்பை தன்னுடைய கையில் வாங்கிய நொடி அவளுடைய கழுத்தில் அவசர அவசரமாக மதுரா கட்டிய தாலிக் கயிறோ அவிழ்ந்து கீழே விழுந்தது.
“ஹேய் தாலி விழுந்திருச்சுடி.. நல்லா தானே மூணு முடிச்சுப் போட்டு விட்டேன்.. எப்படி விழுந்திச்சு…?” எனப் பதறியவாறு கீழே குனிந்து அந்தத் தாலியை கரத்தில் எடுத்தான் கதிர்.
இந்த முதல் இரவில் இருந்து தப்பிப்பதற்கு இதுதான் நல்ல வாய்ப்பு என எண்ணியவள் “அச்சச்சோ இப்படி முதல் ராத்திரி அன்னைக்கே தாலி கழன்டு விழுந்துடுச்சே… இது அபசகுணமாச்சே.. இன்னைக்கு எந்த சடங்கு வேண்டாம் மாமா…” என வேக வேகமாக அஞ்சலி கூற,
“ஐயய்யோ அதெல்லாம் முடியாது.. இன்னைக்கு முத ராத்திரி நடந்தே ஆகணும்…” என அலறி விட்டான் நம் நாயகன்.
ஏம்மா விஷக் குட்டி ஹீரோவ இந்த அலறு அலற விடுற? 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️
Pavam anjali
அஞ்சலி பாவம். இப்படி எல்லாம் நீங்க பண்ண கூடாது . அருமை அருமை அருமை அருமை அருமை அருமை