03. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?

4.9
(48)

சொர்க்கம் – 03

மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதி அது.

ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் செர்ரி ப்ளஸ்ஸம் அல்லது சக்குரா எனப்படும் மலர்கள் பூத்துக் குலுங்கி இருந்த அழகான மாலை வேளை.

அந்த அழகிய மலர்களை இரசித்தவாறே நடந்து கொண்டிருந்தான் அவன்.

அவன் விநாயக் மகாதேவ்..!

அவனுடைய கரங்களில் வெள்ளை நிற பிளாஸ்டிக் கப்பில் ஏதோ ஒரு வகையான போதையைக் குறைந்த அளவில் உண்டாக்கும் மதுபான வகை சிவப்பு நிறத் திரவமாக இருக்க அதனை ருசித்தவாறு நடந்தவன்தான் எத்தனை கம்பீரமானவன்.

அவனுடைய முகத்திலோ அலட்சியமான புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

யார் என்றே தெரியாதவர்கள் இருக்கும் இந்த ஜப்பான் நாட்டில்தான் அவனால் இவ்வளவு சுதந்திரமாக சுற்றித் திரிய முடியும்.

இதுவே அவனுடைய சொந்த நாடாக இருந்தால் அவனால் இவ்வளவு சுதந்திரமாக தெருவில் சுற்றி விட முடியுமா என்ன..?

முகத்தை பாதி மறைக்கும் அளவிற்கு முகக் கவசம் அணிந்து சுற்றிவர பாதுகாவலர்கள் அவனை அழைத்துச் செல்ல ஒரு விதமான பரபரப்புடன் அல்லவா அவன் செல்ல வேண்டி இருந்திருக்கும்.

அதுவும் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் அவன் சென்று விட்டால் சரி ஆட்டோகிராப் போடும்படியும் அவனோடு போட்டோ எடுப்பதற்கும் துடியாய் துடித்து மக்கள் ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணி விடுவர்.

தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்த புகழ்பெற்ற சிறந்த நடிகன் அல்லவா அவன்.

அவனை வீதியில் கண்டால் மக்கள் அவ்வளவு எளிதாக விட்டு விடுவார்களா..?

அவனுடைய போஸ்டரைக் கண்டாலே பாலாபிஷேகம் செய்வதும் கையெடுத்துக் கும்பிடுவதுமாக இருக்க, இப்படியெல்லாம் அவனைக் கொண்டாடுபவர்கள் அவனை நேரில் கண்டால் அவ்வளவுதான்.

உண்மையைச் சொன்னால் இதெல்லாம் அவனுக்கு எரிச்சலைத்தான் கொடுத்தன.

அனைவருக்கு முன்பும் ஒரு போலிச் சிரிப்பை கம்பீரமாக உதிர்த்து விடுபவன் நின்று கூட பேசாது தன்னுடைய காரில் ஏறிப் பறந்து விடுவான்.

வருடம் முழுக்க நடிப்பதில் தன்னுடைய நாட்களை செலவழிப்பவன் ஏதாவது இரண்டு மாதங்கள் மட்டும் முற்று முழுதாக விடுமுறை எடுத்துக் கொள்வான்.

அந்த இரண்டு மாதங்களில் ஏதாவது ஒரு நாட்டைத் தெரிவு செய்து அதுவும் தமிழ் மக்கள் குறைவாக இருக்கும் நாடாக தெரிவு செய்து அங்கே தன்னுடைய விடுமுறையை கழிக்கப் பறந்து விடுவான் அந்த சினிமா நடிகன்.

இவ்வாறு அவன் விடுமுறைக்காக இந்த முறை தேர்வு செய்த நாடுதான் ஜப்பான்.

சக்குரா மலர்கள் இந்தக் காலங்களில்தான் அதிகமாக பூக்கும் என்பதை அறிந்திருந்தவன் இதோ அங்கே வந்ததும் அல்லாது மலர்களை இரசித்தவாறே அந்த வீதியில் நடந்து கொண்டிருந்தான்.

பணம் இருந்தால் பாதாளம் வரை செல்லலாமே வேறு நாடு செல்வதென்ன சிரமமா..?

பரம்பரை பரம்பரையாக பணக்காரனாகவே இருந்து வளர்ந்தவனுக்கு அவன் சினிமாவில் நுழைந்ததும் இன்னும் கோடி கோடியாக பணம் கொட்டிக் குவிந்தது.

பணம் அதிகமாக இருப்பதாலோ என்னவோ திமிரும் அவனுடைய உச்சி முதல் உள்ளங்கால் வரை அதீதமாகவே இருந்தது.

யாரேனும் அவனிடம் வந்து இதை செய்யாதே என்றால் வம்படியாக அதை செய்து முடிப்பதே அவனுடைய முதல் வேலையாக இருக்கும்.

அவனைப் பொறுத்தவரை இந்த உலகத்தில் அவனைக் கட்டுப்படுத்துவதற்கு யாருக்குமே உரிமை இல்லை.

அந்த உரிமையை அவன் யாருக்கும் வழங்குவதாகவும் இல்லை.

அவனுடைய பெற்றோரோ அவன் சினிமாவில் நடிப்பதற்கு முன்னரே ஒரு விபத்தில் இறந்துவிட அதன் பின்னர் அவனுக்கோ முழு சுதந்திரம் கிடைத்து விட்டிருந்தது.

தன்னைப் பற்றி கவலையில்லாத பெற்றோர்கள் இறந்ததில் அவ்வளவாக அவன் வருத்தமும் படவில்லை.

ஜஸ்ட் லைக் தட் என அந்த விபத்தை தூசி போலத் தட்டி விட்டு தன்னுடைய வாழ்க்கையை ரசித்து வாழும் விசித்திரமான பிறவியவன்.

அன்பு கருணை காதல் கமிட்மெண்ட்ஸ் இது அனைத்திலும் ஏதோ ஒரு விதமான ஒவ்வாமை அவனுக்கு.

காதல் என்றாலே கசந்து வழியும்.

அதற்காக ராமன் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

எந்தப் பெண்ணையும் வற்புறுத்தி இதுவரை அவன் படுக்கைக்கு அழைத்ததில்லை.

அந்த அவசியம் அவனுக்கு இதுவரை ஏற்பட்டதும் இல்லை.

ம்ம் எனும் முன் படுக்கையை அலங்கரிப்பதற்காக அவனுடன் திரையில் நடிக்கும் நடிகைகள் தொடக்கம் மாடல்கள் வரை காத்திருக்க அவன் விரும்பிய அனைத்தும் தானாகவே அவனுடைய காலடியை வந்து சேர்ந்துவிடும்.

வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரைமுறையை உடைத்து எறிந்தவன் தன் இஷ்டத்துக்கு இரசித்து ருசித்து வாழ்ந்தான்.

இந்த உலகத்தில் மகிழ்ச்சியான ஆண் யார் எனக் கேட்டால் நொடியும் சிந்திக்காது அது நானே எனக் கர்வமாகக் கூறுவான் அவன்.

செல்லும் இடமெல்லாம் புகழும் பாராட்டுக்களும் வருவதோடு தினமும் நூற்றுக்கணக்கில் அவனுக்கென வந்து குவியும் பரிசுகளும் அவனைப் பார்த்ததும் பின்னாலேயே சுற்றும் யுவதிகளின் காதல் பார்வையும் அவனுடைய கர்வத்தை அதிகரிக்கப் போதுமானதாக இருந்தன.

(சுருக்கமா சொல்லணும்னா திமிரு பிடிச்ச ஹீரோங்க…)

தன் கரத்தில் இருந்த மதுவை ருசித்தவாறே நடந்தவன் தான் தங்கியிருந்த லக்ஷரி ஹோட்டலை வந்தடைந்ததும் அருகே இருந்த டஸ்பினில் காலி கப்பைத் தூக்கிப் போட்டவன் டைரக்டர் சக்கரவர்த்தியிடமிருந்து அழைப்பு வருவதைக் கண்டு புருவம் உயர்த்தினான்.

எரிச்சல் மேலிட்டது.

சில நொடிகளின் பின்னர் அழைப்பை ஏற்றவன் எதுவும் கூறாது அமைதியாக இருக்க,

விநாயக் பேசுவதற்கு முன்னரே,

“சாரி சார்.. உங்க வெக்கேஷன் டைம்ல உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப சாரி..” என அவனுடைய கோபத்தை எதிர்கொள்ள தைரியமற்றுப் போய் அவர் மன்னிப்பை யாசித்து விட பெருமூச்சை வெளியேற்றியவன்

“என்ன விஷயம்..?” எனக் கேட்டான்.

“இல்ல சார்..”

“எதுவும் இல்லைன்னா எதுக்கு மேன் கால் பண்ண..?”

“ஐயோ அப்படி இல்ல சார்.. நீங்க எப்போ சென்னைக்கு ரிட்டன் வர்றீங்கன்னு தெரிஞ்சதுன்னா நான் ஷூட்டிங் ஏற்பாடு எல்லாத்தையும் பண்ணிடுவேன்..” என அவர் தயக்கமாக இழுக்க,

“இன்னும் 2 டேஸ்ல ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்..” என்றவன் அதற்கு மேல் எதுவுமே பேசப் பிரியப்படாதவன் போல அழைப்பைத் துண்டித்து விட்டான்.

ஆம் அவன் ஜப்பான் வந்து இரண்டு மாதங்கள் முடிந்தே விட்டிருந்தன.

இங்கே வந்தது முதல் கேம்ஸ் பார்ட்டி அழகிய பெண்கள் என நாட்கள் நகர்ந்த விதமோ வெகு வேகமாய் இருந்தது.

சக்கரவர்த்தியின் அழைப்பை துண்டித்து விட்டு தன்னுடைய அறை இருந்த ஹாரிடோரினுள் நடந்து கொண்டிருந்தவன் அங்கே ஒரு ஜப்பானிய பெண்ணின் மீது கத்தியை அழுத்தியவாறு ஏதோ மிரட்டிக் கொண்டிருந்த வாலிபனைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்து போனான்.

அந்தப் பெண்ணின் முகமோ அதீத கலவரத்தை தத்தெடுத்திருந்தது.

உதவி எனக் கேட்டு கத்தினால் கூட அவளுடைய கழுத்தை அறுத்து விடுவேன் என்பதைப் போல அவன் நின்றிருக்க,

“ஹேய் லீவ் ஹெர்..” என அதட்டி அழைத்தான் விநாயக் மகாதேவ்.

விநாயக்கின் குரல் கேட்டதும் பதறியவன் ஜப்பானிய மொழியில் மிரட்டலாக எதையோ கூற குத்து மதிப்பாக அவன் தன்னுடைய கரங்களை உயர்த்தி தன்னை திரும்பி நிற்கும் படிதான் கூறுகின்றான் என்பதை உணர்ந்து கொண்ட விநாயக்கோ அசைய மாட்டேன் என்பதைப் போல அவனைப் பார்த்தவாறு நிற்க அந்தப் பெண்ணிற்கோ அச்சத்தில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

அதே கணம் அந்த ஹோட்டலில் பாதுகாவலர்கள் ஓடிவரும் சத்தம் தடதடவென கேட்க கத்தியை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தவனுக்கு வியர்க்கத் தொடங்கியது.

அந்தப் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் இன்னும் வசதியாக அவளுடைய கழுத்தில் கத்தியை வைக்க துப்பாக்கியோடு மேலே வந்திருந்தனர் அந்த ஹோட்டலின் காவலர்கள்.

அவனோ துப்பாக்கியை கீழே போடவில்லை என்றால் அந்தப் பெண்ணின் கழுத்தை வெட்டி விடுவேன் என்பதைப் போல மிரட்ட அந்தக் காவலர்களுக்கும்தான் அந்த சூழ்நிலையை சடுதியில் சமாளிக்க முடியாத போனது.

ஒரு அப்பாவிப் பெண்ணின் உயிர் போய் விடக்கூடாது என அவர்கள் தயங்கி நின்ற கணம் அந்த வாலிபனின் பார்வை மொத்தமும் காவலாளிகளின் மீது உள்ளதை கவனித்த விநாயக்கோ தன் கரத்தில் இருந்த ஸ்மார்ட்போனை நொடி நேரத்தில் வேகமாக தூக்கி அவனுடைய தலையின் மீது விட்டெறிய,

நேராக அவனுடைய முன் நெற்றியில் அந்த ஸ்மார்ட்போன் மோதியதும் எங்கே தோட்டா தான் தன்னைத் துளைத்து விட்டதோ என நொடியில் பதறி தன் கரத்தில் இருந்த கத்தியை அவன் கீழே விட்டு விட அந்தப் பெண்ணோ அலறிக்கொண்டு அவனை விட்டு மறுபக்கம் ஓடி வந்திருந்தாள்.

அடுத்த கணம் துப்பாக்கியோடு அவனை வளைத்துப் பிடித்தனர் அந்தக் காவலாளிகள்.

“அரிகாட்டோ ஹொஸைமஸ்..” என அவன் முன்பு வந்து தன் தலையைக் குனிந்து நன்றியை தெரிவித்துவிட்டு விநாயக்கை நிமிர்ந்து பார்த்தாள் அந்த அழகிய பெண்.

“இட்ஸ் ஓகே..” என ஆங்கிலத்தில் அவன் பதிலைக் கூறிவிட்டு அந்தப் பெண்ணைக் கடந்து செல்ல முயற்சித்த நொடியில் அந்தப் பெண்ணோ அவனை உற்றுப் பார்த்துவிட்டு,

“ஓ மை காட் இட்ஸ் யு.. வ்னாயக்..?” என அவன் யாரென தெரிந்தது போல மகிழ்ச்சியாகக் கூற அவனுக்குத்தான் தெரிந்த நபர்களைக் கண்டாலே அலர்ஜியாகி விடுமே.

சென்ற வருடத்தில் அவன் நடித்து முடித்த ஆக்ஷன் படம் ஒன்று பழமொழிகளில் வெளியானதின் விளைவே இது என்பதைக் கண்டு கொண்டவன்

சட்டென அந்தப் பெண்ணின் உதடுகளின் மீது தன் ஒற்றை விரலை பதித்து “உஷ்..” என்றான்.

அந்த அழகியோ விழி விரித்து அவனைப் பார்த்தவள் சரி என்பது போல தலை சாய்த்து அவனைப் பார்க்க இமை சிமிட்டி விட்டு பறக்கும் முத்தத்தை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தவன் அங்கிருந்து வேகமாக தன்னுடைய அறையை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

அடுத்த சில நிமிடங்களில் அவனுடைய அறைக் கதவு தட்டப்பட எரிச்சலோடு கதவைத் திறந்தவன் விரிசலிட்ட தன்னுடைய ஸ்மார்ட்போனைக் கையில் ஏந்தியவாறு வெளியே நின்ற அந்த ஹோட்டலின் உரிமையாளரைக் கண்டு செயற்கை புன்னகையை உதிர்த்தான்.

அவனுடைய செயலுக்கு நன்றி கூறி பாராட்டி விட்டு அவனுடைய ஃபோனைக் கொடுக்க “தேங்க்ஸ்..” என்ற ஒற்றை வார்த்தையோடு கதவை மூடியவன் தன்னுடைய போனை அந்த அறைக்குள் இருந்த குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டிருந்தான்.

பல இலட்சங்களை விழுங்கிய ஸ்மார்ட் ஃபோனாக இருந்தாலும் இனி அது அவனுக்குத் தேவையில்லாததுதான்.

தன் விடுமுறையை முடித்துக் கொண்டு களிப்போடு இந்தியா திரும்பும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியவனுக்கு ஒரு பெண்ணின் வடிவில் தனக்கு அவமானமும் துயரமும் ஏற்படப் போவதை முன்னரே அறிந்திருந்தால் தன்னுடைய விடுமுறை நாட்களை அவன் நீடித்திருக்க கூடுமோ என்னவோ..?

💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 48

No votes so far! Be the first to rate this post.

1 thought on “03. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!