வரைவதற்கான கருவிகள், மாடல்கள் அமர்வதற்கான இருக்கைகள் என அனைத்தும் தயாராகி இருக்க, அங்கே ஒரு இருக்கையில் அபர்ணாவை அமரச் செய்தான் தினேஷ்.
“ஹேய்… நாம தான் லேட்டா வந்துட்டோம்டி…” என கிசுகிசுத்தான் தினேஷ்.
“சரி… சரி… நீ ஆரம்பி…” என்றாள் அபர்ணா.
ஏனைய மாணவர்களோ தன்னுடைய ஓவியத் திறமையை காட்டுவதற்காக வரையத் தொடங்கி இருக்க தினேஷும் தூரிகையை எடுத்து அபர்ணாவை பார்த்து வரைவதற்கு ஆயத்தமானான்.
அந்த மண்டபத்தின் ஒரு பக்கத்தில் மாணவர்கள் போட்டியை கண்டு களிக்க ஆர்வமாக காத்திருக்க, மறுபக்கத்தில் விரிவுரையாளர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தான் குருஷேத்திரன்.
அவனுடைய பார்வை எங்கேயும் அகலாது அபர்ணாவை மட்டும் வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்தது.
அடுத்த நொடியே எழுந்து கொண்டவன், மைக்கை தன்னுடைய கரத்தில் வாங்கி,
“குட்மார்னிங் ஹாய்ஸ்… இந்த போட்டிக்கு என்னை இன்வைட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்… இங்க இருக்கிற எல்லாரோட ஓவியத்தையும் பார்த்து ரசிக்கலாம்னுதான் இங்கே வந்தேன்…. ஆனா, இங்கே எல்லாரும் ட்ராயிங் பண்றத பார்த்ததும் எனக்கும் வரையனும்னு ஆசையா இருக்கு…. சோ நானும் உங்க கூட ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்…..” என அவன் கூறியதும் மாணவர் கூட்டமோ கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
அவனும் அதையே ஆமோதிப்பாக ஏற்றுக் கொண்டவன், மேடையை விட்டு கீழே இறங்கி நேராக அபர்ணாவை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
அதுவரை யாருக்கு வந்த விருந்தோ எனும் வகையில் அமர்ந்திருந்தவள் சிறப்பு விருந்தினராக வந்த வளர்ந்து கெட்டவன், தன்னை நோக்கி நெருங்கி வருவதைக் கண்டதும், விழிகளை விரித்து ஆச்சரியத்துடன் எழுந்து நின்றாள்.
தினேஷின் கையில் இருந்த தூரிகையை தான் வாங்கிக் கொண்டவன்,
“இந்தப் பொண்ணை நான் வரையிறேன்….” எனக் கூறி விட்டு அபர்ணாவை ஆழ்ந்து பார்க்க, அவளுக்கோ உடல் படபடத்துப் போனது.
இவ்வளவு நேரமும் தன்னுடைய நண்பன் ஒருவன்தான் தன்னை வரையப் போகின்றான் என்பதால், பெரிதாக அக்கறை இன்றி அமர்ந்திருந்தவள் யார் என்றே தெரியாத ஒரு ஆடவன் அவளுக்கு எதிராக மிக அருகே அமர்ந்து அவளை ஆழ்ந்து பார்க்கத் தொடங்கியதும் நெளியத் தொடங்கினாள்.
அதுவும் அவனுடைய பார்வையின் கூர்மையில் அவளுக்கோ தொண்டை உலர்ந்து போனது.
‘ஐயோ…! நம்ம ப்ரண்டுன்னு நினைச்சு இங்க வந்தா யாரோ ஒரு வளர்ந்து கெட்டவன் வந்து நம்மள இப்படி உத்து உத்து பார்த்துகிட்டு இருக்கானே…! பேசாம எந்திரிச்சு போயிடலாமா…?’ என எண்ணியவள் மீண்டும் அவனைப் பார்த்தாள்.
அவனும் கொஞ்சம் கூட லட்ஜை இன்றி, அவளை தலை முதல் கால் வரை பார்வையால் அளவெடுத்து வருடி முடித்தவன், வரையத் தொடங்க இவளுக்கு முகம் சிவந்தே போனது.
பதற்றத்தில் தன்னுடைய பின்னலை முன்னால் போட்டு அதை விரல்களால் வருடிக் கொண்டிருந்தவள்,
அடிக்கடி மற்றவர்களை பார்க்கத் தொடங்க,
“அபர்ணா…! கொஞ்சம் அசையாம இரு… அப்போதானே அவரால வரைய முடியும்…” என அவளை திட்டினார் அவளுடைய பேராசிரியர்.
‘யோவ் நீ வந்து இந்த இடத்துல உட்கார்ந்து பாருயா… அப்போ தான் என்னோட கஷ்டம் புரியும்…’ என மனதிற்குள் புலம்பியவள், மிக சிரமப்பட்டு அசையாமல் இருக்க, முயற்சி செய்து வெற்றிகரமாக தோற்றுப் போனாள்.
‘அச்சச்சோ….! அர்ஜெண்டா சுச்சூ வருதே…. இப்போ எப்படி நான் போறது…? இப்போதான் ஒரு மணி நேரம் ஆகி இருக்கு… இன்னும் மூணு மணி நேரத்துக்கு என்னால சத்தியமா இப்படியே இருக்க முடியாது…’ என அவள் எண்ணிக் கொண்டு இருந்த போதே நிமிர்ந்தவன்,
தன்னுடைய கரத்தில் இருந்த தூரிகையை
மேஜை மீது வைத்து தன்னுடைய கையை உயர்த்தி முடிந்தது என்பது போல சைகை காட்ட அதிர்ந்து போனாள் அவள்.
‘ஒரு மணி நேரத்திற்குள் தன்னை முழுதாக வரைந்து முடித்து விட்டானா…?’ என வியந்தவள், விட்டால் போதும் என அங்கிருந்து எழுந்து ஓடி விட செல்லும் அவள் மீது நிலைத்திருந்தது அவனுடைய பார்வை.
ஏனையவர்களோ வந்து அவன் வரைந்த படத்தை பார்க்க சாதாரணமாக சுடிதாரில், கலைந்த கூந்தலோடு இருந்தவளை, நவீன உயர் ரக ஆடையோடு மிக அழகாக தத்ரூபமாக வரைந்திருந்தான் குருஷேத்திரன்.
சாதாரணமாகவே பேரழகாக ஜொலிப்பவள், அந்த ஓவியத்தில் இன்னும் இன்னும் பிரகாசமாக ஜொலித்தாள்.
குருஷேத்திரனும் தான் வரைந்த ஓவியத்தை தானே எடுத்துக் கொண்டவன், அந்தப் போட்டி முடிவடையும் முன்னரே அந்த இடத்தை விட்டு வேலை இருப்பதாகக் கூறிவிட்டு வெளியேறி இருந்தான்.
தன்னுடன் வந்த தன்னுடைய பிஏ ரதனிடம் அந்த ஓவியத்தை கொடுத்தவன்,
“இந்தக் காலேஜ்லதான் இந்தப் பொண்ணு படிக்கிறா… இவளை பத்தின ஃபுல் டீடைல்ஸும் எனக்கு இன்னைக்கு வந்தாகணும்…” என கூறி விட்டு, அவன் காரில் ஏறிக்கொள்ள ரதனும் அவனுடைய கட்டளையை ஏற்றுக் கொண்டு அதை நிறைவேற்ற ஆவணம் செய்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் அபர்ணாவை பற்றிய அனைத்து விடயங்களும் குருஷேத்திரனை வந்து அடைந்தது.
“பாஸ் ஒரே ஒரு பிரச்சனை…. அந்த பொண்ணுக்கு இப்போதான் 22 வயசு ஆகுது…”
“சோ… வாட்…” என புருவம் உயர்த்திப் பார்த்தான் குருஷேத்திரன்.
“இல்ல… நத்திங் பாஸ்…” என்றான் ரதன்.
“என்னோட பொண்டாட்டி ஆகுறதுக்கான எல்லா தகுதியும் அவகிட்ட இருக்கு… அவளோட அழகு ரொம்ப அபாரம்… அது மட்டும் எனக்கு போதும்…” என அழுத்தமான குரலில் கூறியவன், “அவளோட ஃபேமிலி பத்தி சொல்லு…” என்றான்.
ரதனோ தனக்குத் தெரிந்த விடயங்களை கூறி முடிக்க, “சோ… மிடில் கிளாஸ் ஃபேமிலி…. ஏகப்பட்ட கடன் வேற இருக்கு… மூத்த மகளோட கல்யாண வாழ்க்கையும் சரி இல்ல….. கூல்…..” என்றவன்,
அடுத்த கணமே ரதனிடம் இருந்து அபர்ணாவின் வீட்டு முகவரியை வாங்கி, தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு அங்கே செல்லத் தொடங்கினான்.
ஒரு முடிவை எடுத்த பின்பு தாமதிப்பதில் அவனுக்கு கிஞ்சித்தும் உடன்பாடில்லை.
பத்து நிமிடத்தில் ரகுநாத்தின் வீட்டை வந்தடைந்தவன், காரை விட்டு கீழே இறங்கினான்.
வீட்டு வாயிலின் முன்பு கார் வந்து நின்றதும், வெளியே வந்து எட்டிப் பார்த்தார் ரகுநாத்.
“யாருப்பா….. வேணும்…?”
“வணக்கம் மாஸ்டர் ரகுநாத்… உங்க கூட கொஞ்சம் பேசணும்… உள்ளே வரலாமா…?” என நேரடியாக குருஷேத்திரன் கேட்க, அவன் நிமிர்ந்து நின்ற தோரணையும், அவனுடைய அழுத்தமான குரலும் ரகுநாத்தை தானாகவே தலையசைக்க வைத்தது.
“உள்ளே வாங்க…” என குருஷேத்திரனை அழைத்தவர், அங்கே இருந்த இருக்கையில் அமரும்படி கூற, அந்த இடத்தை சுற்றி வர தன்னுடைய பார்வையால் அளவெடுத்துக் கொண்டவன், பழக்கமே இல்லாத அந்த சிறிய சோபாவில் அமர்ந்து கொண்டான்.
“சொல்லுங்க சார்… ஏதோ பேசணும்னு சொன்னீங்க….? நீங்க யாருன்னு எனக்கு தெரியல….” என வெள்ளந்தியாக புன்னகைத்தார் ரகுநாத்.
பத்மாவும் புரியாது இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க, “சரிதான் உங்களுக்கு என்னை தெரியாது…. எனக்கும் உங்களை தெரியாது… நான் இங்கே பேச வந்ததற்கான ஒரே காரணம் அபர்ணா மட்டும்தான்…. எனக்கு சுத்தி வளர்ச்சி எல்லாம் பேசத் தெரியாது மிஸ்டர் ரகுநாத்.. உங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்…. உங்களோட சம்மதமும் இருந்தா….. ரொம்ப நல்லா இருக்கும்….” என ஏதோ கத்தரிக்காய் வாங்குவதைப் போல அவன் கூறிக் கொண்டே போக பத்மாவும், ரகுநாத்தும் அதிர்ந்து போய் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“என்னடா…? திடீர்னு யாருன்னே தெரியாத ஒருத்தன்…. வந்து நம்மளோட பொண்ண கேக்குறான்னு நீங்க ஷாக் ஆகறீங்கன்னு…. எனக்கு நல்லாவே புரியுது…. நான் இப்படித்தான் எனக்கு தோணுற விஷயத்தை நேரா சொல்லித்தான் பழக்கம்….. இன்னைக்கு காலேஜ்ல உங்களோட பொண்ண பார்த்தேன்….. எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு…. இனி நீங்க தான் சொல்லணும்…” என்றான் அவன்.
“இல்லப்பா… நீங்க எங்களோட நிலைமை தெரியாம பேசுறீங்க…. இப்போ நாங்க ரொம்ப கஷ்டத்துல இருக்கோம்…. உங்கள பார்த்தாலே ரொம்ப வசதியானவர்னு தெரியுது… இப்படி வசதியான இடத்துல பொண்ணு கொடுக்கிற அளவுக்கு எங்க கிட்ட இப்போ கையில எதுவுமே இல்ல…. இந்த வீடு கூட கடன்லதான் இருக்கு.. வரதட்சணை எல்லாம் கொடுக்கிற நிலைமையில நாங்க இப்போ இல்ல… மூத்த பொண்ணோட வாழ்க்கைதான் கொஞ்சம் குளறுபடியா போயிருச்சு….. எங்க ரெண்டாவது பொண்ணோட வாழ்க்கையாவது நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன்…. இந்த சம்பந்தம் சரியா வரும்னு…. எனக்கு தோணலப்பா….” என்றார் ரகுநாத்.
“லிசன் மிஸ்டர் ரகுநாத்….! உங்க பேர்ல என்னென்ன கடன் இருக்கு… நீங்க பேங்க்ல எவ்வளவு லோன் எடுத்து இருக்கீங்க… இந்த வீடு இன்னும் கொஞ்ச நாள்ல அறுதியா போகப் போறது… எக்ஸட்ரா…. எக்ஸட்ரா…. எல்லாமே எனக்குத் தெரியும்…. நான் நினைச்சா ஒரே சொடக்குல, இது எல்லாத்தையும் இல்லாம பண்ணவும் முடியும்….. எனக்கு தேவை வரதட்சணையோ பணமோ இல்ல…. உங்களோட பொண்ணு மட்டும் தான்…”
“இது என்னோட கார்ட்…. என்ன பத்தி வெளியில விசாரிக்கறதுன்னா…. தாராளமா விசாரிச்சு பாருங்க…. நாளைக்கு மறுபடியும் வருவேன்…. அப்ப உங்களோட சம்மதத்தை சொன்னா போதும்…” என சம்மதம் என்ற வார்த்தையில் அவன் அழுத்திக் கூற பத்மாவுகோ பயம் பற்றிக் கொண்டது.
அடுத்த கணம் அவன் தலையை அசைத்து விட்டு, அங்கிருந்து வெளியேறி விட, மீண்டும் தலையில் இடி இறங்கியதைப் போல அமர்ந்து விட்டார் பத்மா.
******
“தடிமாடு…! எருமை…! பிஸ்கட் கோன் வாங்கி தாரேன்னு சொல்லி என்னைக் கூட்டிட்டுப் போய், கடைசில எதுவுமே வாங்கி கொடுக்காம ஓடிப் போயிட்டான்…. நாளைக்கு காலேஜுக்கு வரட்டும், அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன்….” என தினேஷை திட்டிய வாறே தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் அபர்ணா.
தான் காலையில் கல்லூரிக்குப் போகும் போது எப்படி தாயும், தந்தையும் சோகமாக அமர்ந்திருந்தாங்களோ….! அதைப் போலவே இப்போதும் அமர்ந்திருப்பதைக் கண்டு திகைத்துப் போனாள் அவள்.
‘இன்னுமாடா… பிரச்சனை முடியல….?’ என தனக்குள் மனம் நொந்து கொண்டவள், தன்னுடைய முகத்தையும் சோகம் போல வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
🔥🔥🔥💜💜💜🔥🔥🔥
அடுத்து எபி இன்னைக்கே வேணும்னா கமெண்ட்ஸ் பண்ணுங்க டியர்ஸ் அப்போ தான் எனக்கு எபி எழுதவே உற்சாகம் வரும்..
பங்கு நைட்டுக்கு எபி வேணும் 😍😍
கண்டிப்பா வேணும் இதெல்லாம் கேக்க கூடாது அக்கா 😍😍😍