தொல்லை – 04
கதிரின் வார்த்தைகளைக் கேட்ட அஞ்சலியின் இதயம் படபடவென அடித்தது.
“மாமா… இது… இது அபசகுணம்… இன்னைக்கு எதுவும் வேணாமே…” என மெல்ல முனகினாள் அவள்.
அவளுடைய குரல் நடுக்கத்துடன் தழுதழுத்தது.
கைகளில் இருந்த பால் செம்பு அவளுடைய பயத்தின் விளைவால் கிடுகிடுவென ஆடியது.
கதிரோ அவளை உற்றுப் பார்த்தவன், மெல்லப் புன்னகைத்து,
“ஏய்… இதெல்லாம் ஒரு பிரச்சனையா..? தாலிக் கயிறு அவிழ்ந்து விழுந்துடுச்சு, அதுக்கு என்ன..? நானே மறுபடியும் கட்டி விடுறேன்டி..” எனக் கூறி, கையில் இருந்த தாலியை உயர்த்தி அவளை நோக்கி நகர்ந்தான் அவன்.
அஞ்சலிக்கு உடல் முழுவதும் வியர்க்கத் தொடங்கியது.
“இ… இல்ல மாமா… இப்போ வேணாம்… இது சரியில்ல…” எனத் தடுமாறினாள் அவள்.
கதிரின் கரங்களால் அவளுடைய கழுத்தில் தாலி ஏறக்கூடாது. கூடவே கூடாது.
அக்கணம் மதுராவின் வார்த்தைகள் செவிகளில் மீண்டும் ஒலித்தன.
‘பேசு… சமாளி… டைம் கேளு…’
ஆனால் இந்தக் கணத்தில் எப்படி சமாளிப்பது?
கதிரின் நெருக்கமும், அவனுடைய விழிகளில் தெரிந்த ஆர்வமும் அவளை மேலும் பதறச் செய்தன.
சில நொடிகளில் அஞ்சலியின் முகத்தில் அப்பட்டமாக பதற்றம் தெரிய நிதானித்தான் கதிர்.
“ஏய் மது, என்ன இப்படி பயப்படுற?”
“அ.. அப்படி இல்ல மாமா..”
“அப்போ வேற என்ன..? உனக்கு என்னைப் பிடிக்கலையா?” என்று கேட்டான் கதிர்.
அவளுடைய பதற்றம் அவனுக்கு வேடிக்கையாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.
“இல்ல… இல்ல மாமா… பிடிக்காம இல்ல…” என்று அவசரமாகப் பதிலளித்தவள், மதுரா கூறியபடி முயற்சித்து, “நாம… நாம கொஞ்சம் பேசணும்… ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டு, பழகின பிறகு… அதுக்கப்புறம்…” என்று தயங்கியபடி கூற வந்ததை முழுதாக கூறி முடிக்க முடியாது முனகினாள்.
கதிர் ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“ஓஹ்.. சரி, சரி… ரிலாக்ஸ்… பயப்படாத…” என்றவாறு பின்வாங்கி அவளுக்கு இடம் கொடுத்தான்.
“நீ இப்படி பயப்படுவேன்னு நினைக்கவே இல்ல மது… சரி, ரிலாக்ஸ் ஆகு… நாம பேசலாம்…” என மென் சிரிப்போடு கூறினான்.
அவனுடைய புன்னகையும், அமைதியான பேச்சும் அஞ்சலிக்கு சற்றே நிம்மதியை அளித்தன.
ஆனால் இந்த நிம்மதி எவ்வளவு நேரம் நீடிக்கும் என்ற பயம் மனதில் இருக்கத்தான் செய்தது.
“மாமா… இந்தத் தாலி கயிறு அவிழ்ந்து விழுந்ததுல இருந்து கொஞ்சம் பயமா இருக்கு… சகுணமே சரி இல்ல… இதை இப்போ கட்ட வேணாம்னு தோணுது..” என மெல்ல முனகினாள் அஞ்சலி.
மனதில் மதுராவின் வார்த்தைகளை மீட்டெடுத்தவள் “கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறம் குலதெய்வ கோயில்ல வெச்சு மறுபடியும் இந்தத் தாலியைக் கட்டிக்கலாம்..” என்றாள்.
கதிரோ சற்றே யோசித்தவன், “ஹேய் நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற அளவுக்கு இது ஒன்னும் பெரிய விஷயமில்ல… ஆனா இதை இப்படியே விடவும் முடியாது… வெயிட் பண்ணு அம்மாவை கூப்பிட்டு கேட்டுக்குறேன்…” என்றவன் அதிர்ந்து விழித்தவளின் கன்னத்தை மென்மையாக வருடிவிட்டு அறைக் கதவைத் திறக்க, அவனுடைய சிறு தொடுகையில் இவள்தான் உறைந்து போனாள்.
“அம்மா… கொஞ்சம் இங்க வாங்க…” என தன் அன்னை சுதாலட்சுமியை அவன் அழைக்க,
அஞ்சலியின் இதயம் மீண்டும் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
இப்போது என்ன நடக்கப் போகின்றது…?
கதிரின் அம்மாவுடன் என் அன்னையும் வந்தால் உண்மை தெரிந்து விடுமோ?
அவளுக்கு உடல் நடுங்கியது.
சுதாலட்சுமியோ வேகமாக அறைக்குள் நுழைந்தவர்,
“என்ன கதிர்? என்ன ஆச்சு?” என சிறு பதற்றத்துடன் கேட்டார்.
“அம்மா… நீங்களும் எதுக்காக இப்போ டென்ஷன் ஆகுறீங்க..?”
“இல்லடா.. இந்த நேரத்துல நீ கூப்பிட்டதும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்பா..”
“அது ஒன்னும் இல்லம்மா… தாலி அவிழ்ந்து விழுந்துடுச்சு… மது இதை அபசகுணம்னு பயப்படுறா… இப்போ என்ன பண்ணலாம்?” எனக் கேட்டான் கதிர்.
“அச்சச்சோ எப்படி கழண்டு விழுந்துச்சு..?” எனக் கேட்டவரின் முகம் சட்டென வாடியது.
அதே வேகத்தில் சுதாரித்துக் கொண்டு அஞ்சலியைப் பார்த்து புன்னகைத்தவர்,
“அட, இதுக்கு ஏன்மா பயப்படுற..? இது ஒரு பிரச்சனையே இல்ல… வாங்க, ரெண்டு பேரும் பூஜை அறைக்கு போய், இந்தத் தாலியை மறுபடியும் கட்டிக்கலாம். இப்போ கூட நல்ல நேரம்தான்… இந்த நல்ல முகூர்த்த நேரத்துல இதை செஞ்சா எல்லாம் சரியாயிடும்…” என்று கூறி, அவர்களை அழைத்தார்.
அஞ்சலிக்கு உடல் இறுகிப்போனது.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிப் போனது.
இதை அவளால் ஏற்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை.
“அ… அத்த… இப்போ வேணாமே…” என்று தடுமாறினாள் அவள். ஆனால் சுதாலட்சுமியின் உறுதியான பார்வையில் அவளால் அதற்கு மேல் மறுப்பு சொல்ல முடியவில்லை.
“பயப்படாத மது… இது ஒரு சின்ன விஷயம்… சாமி முன்னாடி மறுபடியும் தாலி கட்டினா எல்லாம் சரியாயிடும்…” என சுதாலட்சுமி ஆறுதலாகக் கூற,
அஞ்சலியை அழைத்துக் கொண்டு சுவாமி அறை நோக்கி நடந்தான் கதிர்.
அடுத்த அரை மணி நேரத்திற்குள் சுவாமி அறையில் விளக்குகள் ஏற்றப்பட்டு சிறு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது.
கதிரின் குடும்பம் மட்டும் அந்த அறைக்குள் நின்றிருந்தனர்.
தன்னுடைய அன்னை இங்கே தான் இருக்கிறாரா என விழிகளால் அலசினாள் அஞ்சலி.
“என்னம்மா உன்னோட அம்மாவ தேடுறியா…? உன்னோட தங்கச்சி இங்க இருந்து சீக்கிரமாகவே கிளம்பிட்டாளாம்… வீட்ல தனியா இருப்பான்னு உன்னோட அப்பாவும் அம்மாவும் சீக்கிரமே இங்கிருந்து கிளம்பிட்டாங்க..” என்றார் சுதாலட்சுமி.
அஞ்சலிக்கோ அழுகை முட்டியது.
வீட்டிற்குச் சென்றதும் நிச்சயம் அவளுடைய பெற்றோர்கள் தன்னைக் காணவில்லை என எண்ணி வேதனை அடையப் போகின்றார்கள் என்பது அவளுக்குப் புரிந்தது.
இருதலைக் கொள்ளி எறும்பாய் சிக்கித் தவித்தாள் அவள்.
சுதாலட்சுமியோ, “கதிர்… இந்தத் தாலியை மறுபடியும் மது கழுத்துல கட்டுப்பா…” எனக் கூறி தாலியை அவனிடம் எடுத்துக் கொடுத்தார்.
அஞ்சலி அப்படியே உறைந்து போய் நின்றாள்.
அவளுடைய மொத்த தேகமும் நடுங்கின.
இப்போது என்ன செய்வது?
கதிர் தாலியை எடுத்து அவள் கழுத்தை நோக்கி நெருங்க, அவளுக்கு உடல் முழுவதும் குளிர்ந்து, மனம் பதறியது.
அவளுடைய முகம் வெளிறிப் போய் தேகம் நடுங்குவதை உணர்ந்து கொண்ட கதிர் என்ன நினைத்தானோ,
“மது, பயப்படாத… இது ஒரு சின்ன சம்பிரதாயம்தான்.. எந்த அபசகுணமும் நம்மளை எதுவும் பண்ணிடாது… நான் எப்பவுமே உன் கூடவே இருப்பேன்…” என மென்மையாகக் கூறினான்.
அவனுடைய அந்த வார்த்தைகள் அஞ்சலியை சற்றே திடமாக்கின.
அவளுடைய முகம் தெளிந்ததும் அவன் கைகள் தாலியை அவள் கழுத்தில் கட்டத் தயாராகின.
அஞ்சலியோ ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் இறுகிப்போய் நின்றாள்.
அடுத்த நொடியே அவளுடைய கழுத்தில் அந்தத் தாலியை அணிவித்து மூன்று முடிச்சுகளைப் போட்டான் கதிர்வேலன்.
அவளுடைய கால்களோ தொய்ந்தன.
நிற்கவே சிரமமாக இருந்தது.
இந்த நாடகம் இன்னும் எத்தனை நாள் தொடரப் போகின்றது..?
மதுரா எப்போது திரும்புவாள்..?
உண்மை வெளியாகும் முன் மீண்டும் தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு அவளால் திரும்ப முடியுமா..?
ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து வந்து அவளை வாட்டி வதைத்தன.
திகைத்து நின்றவளின் நெற்றியிலும் உச்சி வகிட்டிலும் குங்குமத்தை வைத்து விட்டவன் அவளுடைய கரத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.
விழிகள் கலங்க தன்னருகே நின்றவளின் முகத்தைபா பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு.
“சரிமா நீங்க தூங்குங்க…” என்றவன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு மீண்டும் தன்னுடைய அறைக்குள் வந்தான்.
சற்று நேரம் இருவரிடமும் அமைதி நிலவியது.
எப்படி ஆரம்பிப்பது என அவனும் எப்படி தடுப்பது என அவளும் சிந்தனையில் மூழ்கிப் போயினர்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நம் நாயகனோ,
“எவ்வளவு நேரம் இப்படியே புடவையோட இருக்கப் போற நான் வேணும்னா உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா..?” எனக் கேட்டவாறு அவளை நெருங்க,
“நா.. நான் குளிக்கணும்…” என்றாள் அவள்.
“இப்போவா…?”
“ம்ம்…”
“சரிடி போ..” என்றவன் அந்த அறைக்குள் இருந்த குளியலறையை தன்னுடைய விழிகளால் காட்ட வேகமாக அந்த குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டவளுக்கு மூச்சு எடுக்கவே சிரமமாக இருந்தது.
பேருக்கு குளித்து முடித்தவள் கையோடு எடுத்து வந்த ஆடையை மாற்றி விட்டு வெளியே செல்லாமல் குளியல் அறைக்குள்ளேயே நின்றாள்.
“அடியேய் பொண்டாட்டி வெளியே வருவியா இல்லையா..?” என அரை மணி நேரத்திலேயே பொறுமை இழந்து கேட்டான் கதிர்.
‘ஐயோ சரியான காஜியா இருக்காரே..’ என மனதிற்குள் அவனைத் திட்டித் தீர்த்தவள் வெளியே வந்தாள்.
அடுத்த கணம் அவளை காற்றுக் கூடப் புகாதவாறு இறுக அணைத்துக் கொண்டான் கதிர்.
அவளுடைய தேகத்தின் மென்மையை அக்கணம் உணர்ந்து கொண்டவனுக்கு தேகம் சிலிர்த்தது.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.👌👌👌👌👌👏👏👏👏🥰🥰🥰🥰🤩🤩🤩😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை