சொர்க்கம் – 04
தன்னுடைய அன்னை செய்த செயலை அவளால் சற்றும் ஜீரணிக்க முடியவில்லை.
எவ்வளவு சிரமத்தின் மத்தியில் அவள் அந்த வேலையைப் பெற்றுக் கொண்டாள் என்பது அவள் மட்டுமே அறிந்த விடயம் அல்லவா..?
அனைத்தையும் ஒரு மணி நேரத்திற்குள் சிதைத்து விட்ட தன் அன்னையின் மீது அளவுக்கதிகமான சினம் பெருகியது.
இனி குடும்பத்தை நடத்துவதற்கு அவள் என்ன செய்வாள்..?
இன்னொரு புதிய வேலையை கண்டுபிடித்து விடுவதென்ன அவ்வளவு சுலபமா..?
தலை வெடிப்பதைப் போல இருந்தது.
கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்ட தன்னுடைய ஒற்றைக் கையால் கண்ணீரைத் துடைத்து எறிந்தவள் பேருந்தில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதையே மறந்து போனவளாய் பொடி நடையாக தன்னுடைய வீட்டை நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தின் பின்னர் நடந்தே தன்னுடைய வீட்டை வந்தடைந்தவளுக்கு நெஞ்சமெல்லாம் வலித்தது.
எதிர்காலத்தை எண்ணியதும் அச்சமெனும் மேகங்கள் அவளை வேகமாக வந்து சூழ்ந்து கொண்டன.
வீட்டுக்குள் நுழைந்தவள் அங்கே தொலைக்காட்சியில் மூழ்கி இருந்த தன் அன்னையைக் கண்டு கோபத்துடன் அவரை நெருங்கினாள்.
“என்ன வேலைம்மா பார்த்து வச்சிருக்கீங்க..? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா..? நாம இருக்க நிலைமைக்கு அந்த வேலை கிடைச்சதே எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா..? மேனேஜர் சார்கிட்ட போய் எதுக்காக இப்படி பேசினீங்க.. இனி என்ன வேலைல சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு…” என கண்ணீரோடும் கோபத்தோடும் பேச முடியாது தடுமாறியவாறு அவள் கேட்க,
“இதோ பாருடி அந்த உதவாத வேலையை இனி செய்யறதுன்னா என்னை நீ இனி அம்மான்னு கூப்பிடாத… வயசு போன காலத்துல எங்கள சந்தோசமா பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு.. நாங்க இப்போ சந்தோஷமாவா இருக்கோம்..? ஒருவேளை சாப்பாட்டுக்கே ரோட்ல நிக்க வேண்டியதா இருக்கு.. இப்படி அந்த உதவாத வேலையை செய்யறதுக்கு நீ செய்யாமலேயே இருக்கலாம்.. நாளைக்கு டைரக்டர் சார் உன்ன அழைச்சிட்டு வர சொல்லி இருக்காரு.. முரண்டு பிடிக்காம என் கூட கிளம்பி வா..” என்ற அன்னையை அதிர்ந்து பார்த்தாள் அவள்.
“அப்போ நீங்க அந்தப் பணத்தை கடன் வாங்கினவர்கிட்ட திருப்பிக் கொடுக்கலையா..? சேகர்கிட்டயே பணத்தை கொடுத்து அனுப்பிட்டீங்களா..?” என அவள் அதிர்ச்சியுடன் கேட்க தொலைக்காட்சியின் சேனலை மாற்றியவர் சீரியலில் தன்னுடைய கவனத்தை பதிக்கத் தொடங்கி விட்டார்.
பேசிப் பேசி வெறுத்துப் போனது அவளுக்கு.
“யார் என்ன சொன்னாலும் நான் எங்கேயும் கிளம்பி வரப்போறதா இல்ல..” என்றவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட அவளுடைய அழுகையையோ வார்த்தைகளையோ சிறிதும் கவனத்திற் கொள்ளாது சீரியலைப் பார்த்து வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார் மேகலா.
அவருக்கோ சேகரின் மீது அபார நம்பிக்கை இருந்தது.
எப்படியும் அவனுக்குத் தெரிந்த டைரக்டரிடம் பணத்தைக் கொடுத்து தன்னுடைய மகளை பெரிய நடிகையாக்கி விடுவான் என்ற நம்பிக்கையில் நாடகத்தில் மூழ்கிப் போனார் அவர்.
அன்று இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தாள் செந்தூரி.
எப்படியாவது புதிய வேலையைத் தேட வேண்டும் என அவளுடைய மனமோ மருகித் தவித்தது.
இரவு தூக்கமின்றி தவித்து வெகு நேரத்தின் பின்னரே தூங்கியவளை அடுத்த நாள் காலையில் சீக்கிரமாக எழுப்பினார் மேகலா.
பதறி விழித்தவள் காபி கப்போடு தன் அருகே நின்ற அன்னையைக் கண்டு வியந்து போனாள்.
எப்போதும் அவள்தான் அதிகாலையில் எழுந்து அனைவருக்கும் காபி கலந்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்வாள்.
ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக நடப்பதைக் கண்டதும் அவளுக்கோ வியப்பில் புருவங்கள் உயர்ந்தன.
என்னதான் வியப்பு மேலிட்டாலும் மனதின் ஓரம் சற்றே மகிழ்ச்சி பரவ “தேங்க்ஸ்மா..” என சிறு புன்னகையோடு கூறியவள் பல வருடங்களின் பின்பு அன்னையின் கரத்தால் போட்ட காபியை சுவைக்கும் நோக்கத்தில் காபி கப்பருகே தன்னுடைய உதட்டை கொண்டு சென்ற கணம்,
“அம்மாடி சீக்கிரமா குளிச்சு அழகா ரெடி ஆயிட்டு அம்மா கூட கிளம்பி வா..” என அவர் அன்போடு கூற இவளுக்கோ உடல் உதறியது.
அவர் எங்கே அழைக்கிறார் என்பது தெரிந்திருந்தும் தெரியாதவள் போல எங்கே என மெல்லக் கேட்டாள் அவள்.
“நேற்றுதான் டைரக்டர் சார்கிட்ட போகணும்னு சொன்னேனே.. அதுக்குள்ளேயே மறந்துட்டியா..? எட்டு மணிக்கு அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துருவாராம்.. இப்பவே நாம கிளம்பிப் போனாதான் அவரை மீட் பண்ண முடியும்..”
“ஐயோ ஏன்மா இப்படிப் பண்றீங்க..? நான்தான் எனக்கு நடிக்க இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டேனே… தயவு செஞ்சு என்னை கம்பெல் பண்ணாதீங்க அம்மா. நான் எங்கேயும் வரலை..” என்றவளை கொலை வெறியோடு பார்த்த வேகலாவுக்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது.
“இனி முடியாதுன்னு சொன்னா என்னடி அர்த்தம்..? கடன் வாங்கி 10 லட்சத்தை டைரக்டர்கிட்ட கொடுத்துட்டேன்.. மாப்பிள்ளையும் அவர்கிட்ட பேசிட்டாரு… வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல பானையை உடைக்கிற மாதிரி பேசாத.. நம்ம வாழ்க்கை நல்லா இருக்கணும்னுதான் இவ்வளவு பொறுமையா உனக்கு எடுத்து சொல்லிக்கிட்டு இருக்கேன்.. தயவு செஞ்சு கிளம்பி வா…”
“என்கிட்ட கேட்டுட்டா பணத்தைக் கொடுத்தீங்க..? எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை.. இதுக்கு மேல என்னால கஷ்டப்பட முடியாது.. நான் வரமாட்டேன்.. தயவு செஞ்சு என்னை வற்புறுத்தாதீங்க…” எனக் கோபமாகக் கூறிவிட்டு படுக்கையில் இருந்து அவள் எழுந்து சமையலறைக்குள் செல்ல அவளை முந்திக்கொண்டு வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்தவர் அங்கே இருந்த மண்ணெண்ணெய் கேனைத் தூக்கி தன் தலை மீது கவிழ்த்துக் கொட்ட பதறித் துடித்து அலறி விட்டாள் செந்தூரி.
அருகே இருந்த தீப்பெட்டியை எடுத்து அவளுடைய கையில் திணித்தவர்,
“ஒன்னு என்கூட வா.. இல்லன்னா இப்போவே உன்ன பெத்த பாவத்துக்கு என்ன எரிச்சிடு..” என அவர் அழுதவாறு கூற விக்கித்துப் போனாள் அவள்.
அவளுக்கோ உடல் வெளிப்படையாக நடுங்கத் தொடங்கி விட்டது.
பதறி தன் கரத்தில் இருந்த தீப்பெட்டியைத் தரையில் போட்டவர்,
“என்ன காரியம் பண்றீங்கம்மா..?” எனக் கதறி விட இரும்பாக அசையாது நின்றார் மேகலா.
“இப்படி எல்லாம் பண்ணாதீங்கம்மா.. உங்களுக்கு எதுவும் ஆச்சுன்னா எங்க நிலைமையை யோசிச்சீங்களா..? எங்களால எப்படி அதை தாங்கிக்க முடியும்..? முதல்ல வாங்க குளிக்கலாம்..” என்றவள் பதறியவாறு அவருடைய கரத்தைப் பிடிக்க அவளுடைய கரத்தை உதறி விடுவித்தவர்,
“இப்பவே நீ எனக்கு உன்னோட முடிவை சொல்லு.. ஒன்னு நீ நடிக்கணும் இல்லன்னா நான் சாகணும்.. இதுதான் என்னோட முடிவு.. என் கூட கிளம்பி வர்றதா இருந்தா சொல்லு.. இல்லன்னா இப்பவே என்ன கொளுத்திடு..” என்றவர் கீழே விழுந்த தீப்பெட்டியை எடுத்து மீண்டும் அவளிடம் திணிக்க விக்கித்துப் போய் அவரைப் பார்த்தவள்
“நா..நான் ந… நடிக்கிறேன்..” என உதடுகள் நடுங்கக் கூறினாள்.
மேகலாவோ அவளை தன்னுடைய ஆசைப்படி நடத்துவதற்கு தன்னுடைய இறுதி அஸ்திரமாக தற்கொலை முயற்சியை கையில் எடுத்து விட அவர் நினைத்ததைப் போலவே அவருடைய முடிவுக்கு இணங்கி விட்டாள் அவருடைய ஒற்றை மகள்.
அவள் சம்மதம் கூறியதும் சட்டென சந்தோஷத்தில் அவளுடைய கன்னத்தை கிள்ளிக் கொஞ்சியவர் “இப்போதான்டி எனக்கு நிம்மதியா இருக்கு… இனி இந்த அம்மாவுக்கு எந்த கவலையும் இருக்காது.. இன்னும் கொஞ்ச மாசத்துல நீயே நான் நல்ல வழி காட்டிட்டேன்னு ரொம்ப சந்தோஷப்படப் போற.. சரி நீ போய் ஏதாவது நல்ல ட்ரெஸ்ஸா போட்டு ரொம்ப அழகா ரெடியாகு… நானும் சீக்கிரமா குளிச்சிட்டு ரெடியாகுறேன்..” என்றவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காத குறையாக சமையலறையில் இருந்து வெளியேறிச் சென்று விட கீழே சிந்திய மண்ணெண்ணெயைப் பார்த்தவள் இதைத் தன் தலையில் ஊற்றிக் கொண்டு தான் தற்கொலை செய்தால் என்ன என்ற எண்ணம் வர திடுக்கிட்டுப் போனாள்.
அவள் இறந்தால் அவளுடைய குடும்பம் நடுத்தெருவில் அல்லவா நிற்கும்.
படுக்கையில் உள்ள தந்தை உள்ளத்தால் இன்னும் நைந்து போய் விடுவாரே.
மேலும் மேலும் அதல பாதாளத்திற்குள் விழுந்தது போல இருந்தது அவளுக்கு.
வருங்காலக் கணவன் என்னவென்றால் சினிமாவில் நடித்தால்தான் திருமணம் செய்வேன் என்கின்றான்.
பெற்றெடுத்த அன்னையும் சினிமாவில் நடித்தால்தான் உயிரோடு இருப்பேன் என்கின்றாள்.
எல்லோரும் தன்னை மட்டும் எதற்காக அவர்களுடைய விருப்பப்படி ஆட்டி வைக்கின்றார்கள் என வேதனையோடு எண்ணிக் கொண்டவள் விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூடத் தோன்றாது தயாராகத் தொடங்கினாள்.
முகம் அழுது அழுது சிவந்து போனது.
குளித்து முடித்தவள் தன்னிடம் இருந்த சாதாரணமான சுடிதார் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள்.
எப்போதும் தன்னை ஒப்பனை செய்து அலங்கரிக்கும் வழக்கம் அவளிடம் இல்லாததால் சாதாரணமாக தலைவாரி பின்னல் இட்டு சிறிய கறுப்பு நிற பொட்டொன்றை புருவங்களுக்கு இடையே வைத்தவளுக்கு கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தைப் பார்ப்பதில் கூட சிறிதும் இஷ்டமில்லை.
ஆனால் ஒப்பனையே இல்லாது பளிச்சென்று இருந்தது அவளுடைய பளிங்கு வதனம்.
இயற்கையாகவே சிவந்திருந்த அவளுடைய உதடுகளும் அடர்த்தியான கண் இமைகளும் கூரான மூக்கும் நாசியும் கூட அவளை மிகச் சிறந்த அழகியாக எடுத்துக்காட்ட ஒப்பனை இன்றியே கொள்ளை கொள்ளும் அபார அழகாய் இருந்தாள் செந்தூரி.
மேகலாவோ அவளைப் பார்த்து திருப்தியாக புன்னகைத்தவர், “வாம்மா இப்பவே லேட் ஆயிருச்சு..” என்றவாறு அவளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றவர் ஆட்டோ ஒன்றில் வெளியே அவர்களுக்காக காத்திருந்த சேகரைக் கண்டதும் “எல்லாம் சரிதானே தம்பி..?” எனக் கேட்க இவளுக்கோ அனைத்தும் வெறுப்பையே உண்டாக்கியது.
“ஆமா ஆன்டி.. நேத்து பணத்தை டைரக்டர் சார்கிட்ட கொடுத்துட்டேன்.. செந்தூரியோட போட்டோ கூட பார்த்துட்டாரு.. கண்டிப்பா படத்துல நடிக்க வாய்ப்புக் கொடுப்பேன்னு சொல்லி இருக்காரு.. இன்னைக்கு நாம நேர்ல அவரைப் பார்த்துட்டு வந்துடலாம்..” என்றவன் செந்தூரியைப் பார்த்து காதலோடு புன்னகை சிந்த தன் தலையை குனிந்து கொண்டாள் அவள்.
உள்ளே எரிமலையாக உள்ளம் வெந்து வெடித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் அவளால் சிரிக்கவா முடியும்..?
அடுத்த நொடியே அவளை அந்த ஆட்டோவிற்குள் ஏற்றியவர் தானும் அவளுக்கு அருகே அமர்ந்து கொள்ள மூவரும் ஷூட்டிங் நடக்க இருந்த இடத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர்.
தன் அருகே அமர்ந்திருந்த செந்தூரியின் கரத்தை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான் சேகர்.
“நான் மட்டும் உனக்கு மேக்கப் போட்டு விட்டேன்னா உலக அழகியே உன்கிட்ட பிச்சை வாங்கணும்..” என அவளுடைய காதருகே நெருங்கி சன்னமான குரலில் அவன் கூற அவனை எரிப்பது போல முறைத்துப் பார்த்தாள் செந்தூரி.
ஆட்டின் கழுத்தில் கயிற்றைக் கட்டி அதனைப் பலி கொடுப்பதற்கு இழுத்துச் செல்வதைப் போலத்தான் ஆட்டோவில் அவளை நடுவில் அமர்த்தி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அவளுடைய வருங்காலக் கணவனும் அன்னையும் அழைத்துச் சென்றனர்.
Adapavingala