04. நெருப்பாய் நின் நெருக்கம்.!!

4.8
(26)

நெருக்கம் – 04

ரகுநாத் இப்போது அபர்ணாவிடம் எதையும் கூற வேண்டாம் எனக் கூற பத்மாவும் சரியென ஒத்துக் கொண்டார்.

“அபர்ணாவும் நீயும் சாப்பிடுங்க… நான் கொஞ்சம் லேட்டா சாப்பிடுறேன்…” எனக் கூறியவர், குருஷேத்திரன் கொடுத்த அட்டையை எடுத்துக் கொண்டு வெளியேறி விட பத்மாவுக்கு அவர் அவனைப் பற்றி விசாரிப்பதற்காகத்தான் செல்கிறார் என்பது புரிந்தது.

‘இந்தச் சிறுவயதில் தன்னுடைய பெண்ணை எப்படித் திருமணம் செய்து கொடுப்பது..’ என எண்ணிக் கலங்கத் தொடங்கியது அவருடைய மனம்.

“மா…! பசிக்குதுமா….” எனக் கூறி தன்னை வந்து கட்டிக் கொண்ட மகளை வேதனையோடு பார்த்தவர், அவளுடைய தலையை மெல்ல வருடி விட்டார்.

“ஓய் பத்மா… என்ன ஆச்சு இன்னைக்கு…? காலைல இருந்து நீயும், உன்னோட புருஷனும் சோக கீதம் வாசிச்சுக்கிட்டே இருக்கீங்களே….? அக்கா என்ன சொன்னாள்…” என அவள் குறும்பாகக் கேட்க சட்டென சிரித்தவர், அவளுடைய தலையில் கொட்டினார்.

“வாயாடி… கொஞ்சமாவது மரியாதை கொடுக்கிறியா நீ…?” என அவளுக்கு செல்லமாகத் திட்டியவர், தன்னுடைய வேதனையை தனக்குள் மறைத்து விட்டு உணவை அவளுடைய தட்டில் பரிமாறத் தொடங்கினார்.

“ம்மா… இன்னைக்கு ஒருத்தர் செம்ம ஹேண்ட்ஸமா இருந்தாரு… என்னோட காலேஜுக்கு சீப் கெஸ்ட்டா வந்து இருந்தாருமா…. என்னப் பார்த்து ஓவியமா வரைஞ்சாரு…. தெரியுமா….?” என இன்று நடந்த அனைத்தையும் உணவை உண்டவாறே தன்னுடைய தாயிடம் அபர்ணா கூற,

அவள் கூறிய எதையும் காதில் வாங்காது, அடுத்து என்ன நடக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தார் பத்மா.

சற்று நேரத்தில் உணவை உண்டு முடித்து விட்டு தூக்கம் வருவதாக கூறிவிட்டு அபர்ணா அறைக்குள் சென்று தன்னுடைய தூக்கத்தைத் தொடர, வெகு நேரத்தின் பின்னரே வீடு வந்தடைந்தார் ரகுநாத்.

“பாப்பா எங்க….?” என‌ வந்ததும் அபர்ணாவைப் பற்றி அவர் கேட்க,

“அவ… சாப்பிட்டு நல்லா தூங்கிக்கிட்டு இருக்கா… எழுப்பவா…?” எனக் கேட்டார் பத்மா.

“இல்ல… இல்ல… அவ தூங்கட்டும்.. நான் உன்கிட்டதான் பேசணும்….”

“சொல்லுங்க…”

“இன்னைக்கு மதியம் வந்து பேசிட்டுப் போன பையன பத்தி விசாரிச்சேன்…. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது….. ஆனா நாம நினைச்சதை விட அவன் ரொம்ப ரொம்ப பணக்காரன்…..”

“ஓஹ்……!”

“நம்ம பொண்ண..! அவனுக்கு கட்டி வெச்சிடலாமா….?” என்றார் ரகுநாத்.

“என்ன விளையாடுறீங்களா…? அவ்வளவு பெரிய பணக்காரனுக்கு எப்படி நம்ம பொண்ண கொடுக்க முடியும்…? அங்கு அவளுக்கு எல்லாம் ஒத்துப் போகுமோ என்னவோ…!”

“இதோ பாரு பத்மா….! நாம நினைச்சதை விட அந்த பையனோட பேக்ரவுண்ட் ரொம்ப பெருசு…. அத அவர் சொல்லிட்டு போனத நீ கவனிச்சியா இல்லையான்னு தெரியல… நாளைக்கு உங்களோட சம்மதத்தை சொன்னா போதும்னு அழுத்தமா சொல்லிட்டு போனார்…. நம்ம கல்யாணம் பண்ணி கொடுக்க முடியாதுன்னு சொன்னாலும், நம்ம பொண்ண அவர் விடப் போறது இல்ல… விசாரிச்சு பார்த்ததில அவன் மேல எந்த குறையுமே தெரியல… வயசு தான் கொஞ்சம் ஜாஸ்தி…. அது மட்டும்தான் இடிக்குது…. மத்தபடி, பையன் நல்ல பையன் தான்…..

உன்னோட மூத்த மகளோட புருஷனுக்கு இரண்டாவதா கட்டிக் கொடுக்கிறத விட இந்த பையனுக்கு நம்ம பொண்ண கொடுக்கிறது நல்லதுன்னு தோணுது….

வயசு போன காலத்துல என்னால இதுக்கு மேல ஓடி ஆடி உழைக்கவும் முடியாதுடி.. பொண்ண நல்ல இடத்துல கரை சேர்த்துட்டு கடன் எல்லாத்தையும் முடிச்சிட்டு நிம்மதியா வாழனும்னு நினைக்கிறேன்….” எனக் கூறி அடிபட்ட பார்வை பார்த்தார் ரகுநாத்.

“அப்படி நம்மள மீறி அந்தப் பையனால என்னங்க பண்ணிட முடியும்…? அவசரப்பட்டு நம்மளோட அபர்ணாவ பாழும் கிணத்துல தள்ளிவிட்டுடக் கூடாது…. அந்தப் பையனோட வயசு என்ன…?” எனக் கேட்டார் அவர்.

“38…” என ரகு கூறியதும் தூக்கி வாரிப் போட்டது பத்மாவிற்கு,

“என்னது…? 38 வயசா…? ஆனா பார்த்தா அப்படி தெரியவே இல்லையே…!” என்றவர்,

“நம்ம பொண்ணுக்கு இப்போ தாங்க 22 வயசு ஆகுது… இது சரியா வராது…” என தன்மையாகக் கூறினார்.

“இதோ பார் பத்மா…. அவ உனக்கு மட்டும் பொண்ணு கிடையாது… எனக்கும் பொண்ணுதான்…. இதை விட வேற நல்ல சம்பந்தம் அவளுக்கு கிடைக்குமான்னு தெரியல…. இத்தனை வருஷம் அவளை கஷ்டத்திலேயே வளர்த்தாச்சு, அவ வாழ்க்கைப்பட்டு போற இடத்துலயாவது சந்தோஷமா இருக்கட்டும்….. வரதட்சனை எதுவுமே வேணாம்னு சொல்லிட்டாரு…. நம்மளோட கடன கூட அடைக்கிறேன்னு சொல்லிட்டாரு… எந்த கெட்ட பழக்கமும் கிடையாது…. இலங்கையிலேயே ரொம்ப ஃபேமஸான ஓவியர் வேற…. யார்கிட்ட கேட்டாலும், ஆகா ஓகோனு புகழ்றாங்க…. நம்ம பொண்ணுக்கு விடிவு காலம் பிறந்துட்டுன்னு தோணுது…. இதை விட நல்ல சம்பந்தம் கிடைக்காது பத்மா…

தானா தேடி வந்த பொக்கிஷத்தை, நாமளே வேண்டாம்னு ஒதுக்கித் தள்ள வேணாம்…. நம்ம பொண்ணுகிட்ட பேசி புரியவை…..” என்றவரின் அலைபேசி சினுங்க, அதனை எடுத்துப் பார்த்தவர், புதிய எண் என்றதும் பத்மாவைப் பார்த்தார்.

“யாருங்க…?”

“தெரியல…. புது நம்பரா இருக்கு…” என்றவர், அழைப்பை ஏற்று காதில் வைத்தார்.

“ஹலோ… ரகுநாத் சார்… நான் குணா பேசுறேன்….” என்றதும் திகைத்துப் போன ரகுவோ,

“சார்…! கொஞ்சம் டைம் கொடுங்க சார்…. கொஞ்சம் கொஞ்சமா எப்படியாவது வட்டி பணத்தை கட்டி முடிச்சிடுறேன்….” எனத் தயங்கியவாறு கூறினார்.

“ஐயோ…..! இனி உங்க கிட்ட இருந்து ஒத்த பைசா கூட நான் வாங்கவே மாட்டேன் சார்…. உங்க வீட்டுப் பத்திரத்தை வந்து வாங்கிட்டு போங்கன்னு, சொல்லத் தான் உங்களுக்கு கால் பண்ணினேன்….. குருஷேத்திரன் சார் வட்டியோட எல்லா பணத்தையும் கொடுத்துட்டுப் போயிட்டாரு….. இனி உங்க வீடு உங்களுக்குத்தான் சொந்தம்…” எனக் கூறியவாறு குணா அழைப்பைத் துண்டித்து விட, அதிர்ந்து போய் தன்னுடைய மனைவியைப் பார்த்தவர், நடந்ததைக் கூற பத்மாவுக்கோ மேலும் பயமே அதிகரித்தது.

“வட்டி முதல் எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட முப்பது லட்சத்துக்கு மேல அந்தப் பையன் எதுக்காக கொடுக்கணும்…? இப்போ என்னங்க பண்றது…? கல்யாணம் பண்ணி வைக்க முடியாதுன்னு சொன்னா கொடுத்த பணம் எல்லாத்தையும் திரும்பிக் கேட்டு நம்மள அசிங்கப்படுத்துவானோ…?” என அச்சத்தோடு கேட்டார் பத்மா.

“தெரியல பத்மா… எனக்கு எதுவுமே தெரியல… இந்த ஆண்டவன் எதுக்காக நம்மளை இப்படி எல்லாம் சோதிக்கிறானோ… தெரியல…. நான் நேரா அவனோட கம்பெனிக்குப் போய், அந்த பையனைப் பார்த்து பேசிட்டு வந்துடுறேன்….”

“அவனே நாளைக்கு வாரேன்னு தானே சொன்னான்… நீங்க எதுக்காக இப்போ போறீங்க…?”

“நாளைக்கு வரைக்கும் நிம்மதியா தூங்க முடியும்னு உனக்குத் தோணுதா பத்மா..? இப்போவே போய் பேசிட்டு வந்துர்றேன்…” என்றவர் குருஷேத்திரனின் கம்பெனி நோக்கி செல்லத் தொடங்கினார்.

ஆட்டோ பிடித்து குருஷேத்திரனின் அலுவலகத்தின் முன்பு வந்து நின்றவருக்கோ தலைவலி இன்னும் அதிகரித்தது.

மிக மிக ஆடம்பரமான முறையில் அமைக்கப்பட்டிருந்த அடுக்குமாடி கட்டிடமான அவனுடைய கம்பெனியைப் பார்த்தவர், உள்ளே செல்வதா வேண்டாமா என ஒரு நொடி தயங்கினார்.

தன்னுடைய மகளின் வாழ்க்கையை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு, அவனுடைய அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்தவர், அவனை பார்ப்பதற்காகக் கேட்க ஒரேடியாக அவரை உள்ளே விட மறுத்தனர், அவனுடைய பணியாட்கள்.

“அபர்ணாவின் தந்தை வந்திருக்கிறேன்…” என கூறுமாறு அவர் சொல்ல அடுத்த சில நொடிகளில் அவரை உள்ளே அழைத்து இருந்தான் குருஷேத்திரன்.

“வணக்கம் மிஸ்டர் ரகுநாத்… நாளைக்கு தானே நம்ம மீட் பண்றதா இருந்தோம்…? இன்னைக்கு நீங்க வர்றத சொல்லவே இல்லையே…!” எனக் கூறியவன், தன்னுடைய ஒற்றை கரத்தை நீட்டி அமரும்படி சைகை செய்ய, தயக்கத்தோடு நுனி இருக்கையில் அமர்ந்தார் ரகுநாத்.

“சொல்லுங்க… என்ன முடிவெடுத்து இருக்கீங்க…?”

“எதுக்காக…? எங்க வீட்டை அடமானத்திலிருந்து எடுத்தீங்க….”

“என்னோட வருங்கால பொண்டாட்டியோட வீடு அடமானத்தில் இருக்கிறத நான் விரும்பல…. அதனால எடுத்தேன்…” எனப் பதில் வந்தது அவனிடமிருந்து,

“நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கல்லன்னா… என்ன பண்ணுவீங்க…?”

“நீங்க சம்மதித்தாலும், சம்மதிக்கலைன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும் மிஸ்டர் ரகுநாத்….” என அழுத்திக் கூறினான் அவன்.

பெருமூச்சோடு எழுந்து கொண்டார் ரகுநாத்.

“எங்களுக்கு கல்யாணத்துக்கு சம்மதம்…” என அவர் சோர்ந்து போன குரலில் கூற,

தன்னுடைய மேஜையின் இழுப்பறையை இழுத்துத் திறந்தவன், உள்ளே அடுக்கி வைத்திருந்த பத்திரிகையில் சில கட்டை எடுத்து அவருடைய கையில் கொடுத்தான்.

“கல்யாண பத்திரிகை…! இன்னைக்கு காலையிலயே அடிச்சுட்டேன்…. என்னோட சைட் கொடுக்க ஆரம்பிச்சாச்சு…. நீங்களும் உங்க சைட் கொடுத்துடுங்க….” என அவன் கூற அவருக்கோ அதிர்ச்சியில் விழிகள் விரிந்தன.

ஆக அவன் அனைத்து ஏற்பாட்டையும் செய்து முடித்து விட்டான் என்பதை மிகத் தாமதமாக உணர்ந்து கொண்டவர், எதுவும் கூறாது அதனை வாங்கிக் கொண்டார்.

“தம்பி…! உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா….?”

“கேளுங்க…”

“என்னோட பொண்ண சந்தோஷமா பாத்துப்பீங்களா….?”

“ஊரே பார்த்து பொறாமைப்படுற அளவுக்கு, உங்களோட பொண்ண பாத்துப்பேன்…” என்றான் அவன்.

அந்தப் பதிலில் திருப்தி அடைந்தவர், அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு, அங்கிருந்து சென்று விட குருஷேத்திரனின் முகமோ இறுகியது.

ஊரே பார்த்து பொறாமைப்படும் இடத்தில் வைத்திருந்தாலும் மகிழ்ச்சி என்பது கிட்டி விடாதல்லவா..?

அவன் ஒன்றும் சந்தோஷமாக பார்த்துக் கொள்வதாக வாக்குக் கொடுக்கவே இல்லையே….!

அவர் கேட்டது ஒன்று.

அவன் கூறியது ஒன்று.

அனைத்திற்கும் காலமே பதில் கூறும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “04. நெருப்பாய் நின் நெருக்கம்.!!”

  1. என்னடா இது டுவிஸ்டு… கல்யாண பத்திரிகை ரெடியா🤔🤔 ஏன்டா டேய் இந்த வேகம் ஓவர்டா 🤣🤣 அபர்ணா என்ன குதி குதிப்பானு தெரியலையே 🤭🤭🤭ஒருவேளை குரு அபர்ணாவை கல்யாணம்
    பண்ண வேற ஏதோ அழுத்தமான காரணம் இருக்கும் என்று தோணுது எனக்கு😜😜 பங்கு
    எபி சூப்பர் 👌👌

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!