தன்னவளைப் பார்க்கப் போகின்றோம் என்ற ஆவலால் அவன் மனமெங்கும் இனிமை கலந்த படபடப்பு விரவியது.
மீண்டும் அந்த காலிங் பெல்லை அழுத்தியவன் மனைவியைப் பார்த்ததும் அணைத்து முத்தமிடும் ஆவலில் நிற்க,
இரண்டு நிமிடங்களின் பின்னரே அவனுடைய வீட்டுக் கதவு திறக்கப்பட்டது.
“யாரு..? எதுக்கு விடாம பெல்லை அழுத்திக்கிட்டே இருக்கீங்க..?” எனக் கோபமாகக் கேட்டவாறு கதவைத் திறந்தவளோ வெளியே நின்ற தன்னுடைய கணவனைக் கண்டதும் அதிர்ந்து மார்பில் கரம் வைத்தவாறு பதறி விழிக்க,
மெல்லிய நைட்டி அணிந்து அதன் மீது துவாலையை போர்த்தியவாறு விரிந்த கூந்தலுடன் வந்து நின்ற தன் மனைவியைக் காதல் பொங்க பார்த்தான் யாஷ்வின்.
இதோ சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கப் போகிறாள் என நினைத்துக் காத்திருந்தவன் அவள் அதிர்ந்து அமைதியாக நிற்பதைக் கண்டதும் வாய்விட்டுச் சிரித்தான்.
“அம்மாடி ஷாக் ஆயிட்டியா..? சாரி… சாரிடாம்மா… உன்கிட்ட சொல்லிட்டு வரலாம்னுதான் இருந்தேன்.. பட் சர்ப்ரைஸ் கொடுத்தா எப்படி இருக்கும்னு பார்க்கலாம்னுதான் சொல்லாம வந்துட்டேன்…” என்றவன் அப்படியே உள்ளே வந்து அவளை இறுக்கமாக அணைத்துக் கொள்ள அவளுக்கு உடல் வெளிப்படையாக நடுங்கத் தொடங்கி விட்டது.
அப்போதுதான் அவளுடைய நடுக்கத்தை உணர்ந்து கொண்டவன் அவளை விட்டுப் பதறி விலகினான்.
“அம்மாடி என்ன ஆச்சு..? ஏன் இப்படி உடம்பு நடுங்குது..? ஹேய் என்னடி..? ஏன் இப்படி வேர்க்குது..? உடம்புக்கு முடியலையா.?” என அவன் அவளுடைய தோள்களை மென்மையாகப் பற்றி சற்றே கவலையுடன் கேட்க அப்போதுதான் சுயம் அடைந்தவள் வேகமாக தன் தலையை மறுப்பாக அசைத்தாள்.
வாயை விட்டு வார்த்தைகள் வெளியே வர மறுத்தன.
“எ.. என்ன திடீர்னு… இல்ல… உங்கள திடீர்னு பார்த்த அதிர்ச்சியில எ… எப்படி ரியாக்ட் பண்ணுறதுன்னு தெ.. தெரியலைங்க..” என்றவள் கைகளைப் பிசைந்தாள்.
அச்சத்தில் அவளுடைய இதயம் வேகமாகத் துடித்தது.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை வரும்போது கிட்டத்தட்ட மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் தன் மனைவி இன்று மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்வதை எண்ணி அவன் புருவங்கள் சுருங்கின.
சொல்லாமல் வந்து அவளை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள் தள்ளிவிட்டோம் போலும் என தன்னையே நொந்து கொண்டவன் அவளை அங்கிருந்து இருக்கையில் அமர்த்தி விட்டு அவ்வளவு பயணக் களைப்போடு வந்திருந்தாலும் கூட சமையல் அறைக்குள் நுழைந்து ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து வந்து அவளுக்கு அருந்தக் கொடுக்க, அவளோ நடுக்கத்துடன் அதனை வாங்கி அருந்தினாள்.
எங்கே அவன் படுக்கையறைக்குள் நுழைந்து உள்ளே இருக்கும் விக்ரமை கண்டு கொள்வானோ என நொடிக்கு நொடி பதறித் தவித்தது அவளுடைய மனம்.
விழிகளில் இருந்து வழிந்து விடுவேன் என்ற கண்ணீரை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தாள் அவள்.
எப்படியும் இந்த நேரத்தில் யாரும் வரமாட்டார்கள் என நம்பித்தானே விக்ரமை அழைத்திருந்தாள்.
கப்பலில் சென்று கொண்டிருக்க வேண்டிய கணவன் திடீரென இங்கே வந்து நின்றதும் அவளுக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போனது.
வியர்வை நிற்காமல் தொடர்ந்து வழிவதைக் கண்டு மின்விசிறியை சுற்ற விட்டவன், “அம்மாடி ஆர் யூ ஓகே..?” எனக் கேட்டான்.
தான் வந்ததற்கான மகிழ்ச்சியின் அறிகுறி தன் மனைவியின் முகத்தில் சிறிதும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவனுக்கு உள்ளே சுருக்கென வலித்தது.
இவ்வளவு நேரமாகியும் அதிர்ச்சி விலகவில்லையா என்ன..?
ஏன் இப்படி அமைதியாக ஒரு விதமான பதற்றத்துடன் அமர்ந்திருக்கிறாள் என எண்ணிக் குழம்பியவன் சற்று நேரம் எடுத்துக் கொள்ளட்டும் என எண்ணியவாறு
“பாப்பா எங்கடி..?” எனக் கேட்டான்.
அவளோ பதில் கூறாது அப்போதும் அமைதியாக இருக்க,
படுக்கை அறைக்குள் குழந்தையை தூக்குவதற்கு செல்ல முயன்றவனை பதறி நிறுத்தினாள் அவள்.
“எ.. என்னங்க.. எங்க போறீங்க..?”
என அவள் கேட்டதும் படுக்கையறைக்குள் நுழைய முயன்றவனது கால்கள் அசைவற்று நின்றன.
அந்தக் கனிவை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லையே.
அவன் படுக்கையறைக்குள் நுழையப் போகின்றான் என்றதும் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
அறைக்குள்தானே விக்ரம் இருக்கின்றான்.
அவன் எந்த நிலையில் உள்ளே இருக்கிறான் என்பதே அவளுக்குத் தெரியவில்லை.
இன்னும் படுக்கையில் படுத்துத்தான் இருக்கின்றானா இல்லை இவருடைய சத்தம் கேட்டு எங்காவது மறைந்திருக்கிறானா எதுவுமே தெரியாமல் எப்படி இவரை உள்ளே அனுமதிப்பது..?
இவர் மட்டும் விக்ரமைப் பார்த்தால் என்னுடைய வாழ்க்கை இன்றோடு முடிந்து விடுமே.
எப்படியாவது இவரைத் தடுக்க வேண்டும் என எண்ணியவள்,
“பாப்பாவ அப்புறமா பாத்துக்கலாம்.. ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணி வந்திருக்கீங்க முதல்ல இங்க வந்து உட்காருங்க..” என நடுக்கத்துடன் எழுந்து வந்து அவனுடைய கரங்களைப் பற்றி அங்கிருந்த இருக்கையில் அவனை அமரச் செய்தவள் அவன் எழாதவாறு அவனுக்கு அருகே அமர்ந்து அவனுடைய கரங்களைப் பற்றிக் கொண்டாள்.
மனைவியின் அக்கறையில் அவனுக்கோ நெஞ்சம் உருகியது.
“ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணித்தான் வந்திருக்கேன்.. ஆனா உன்னோட முகத்தை பார்த்ததுமே எனக்கு அந்த களைப்பு எல்லாம் இல்லாம போயிடுச்சுடி… இப்போ பாப்பாவ பாத்தா புது தெம்பே வந்துரும்.. என் பொண்ண பார்த்ததுக்கு அப்புறமா ரெஸ்ட் எடுக்கிறேன்..” என்றவன் தன்னைப் பற்றிய மனைவியின் கரங்களை விடுவித்து விட்டு அவற்றுக்கு முத்தங்களை வழங்கி விட்டு படுக்கையறைக்குள் நுழைய இவளுக்கு இதயம் வாய் வழியாக வெளியே வந்து விழுந்து விடுமோ என்பது போல இருந்தது.
“நான்தான் சொல்றேன்ல.. முதல்ல உட்காருங்க.. நான் பாப்பாவ தூக்கிட்டு வரேன்…” என்றவள் அவனை உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் பொருட்டு சொந்தமாகக் கத்த,
அதிர்ச்சியுடன் அவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“அம்மாடி உனக்கு என்னதான் ஆச்சு..? ஏன் இப்படி பிஹேவ் பண்ற..? என் மேல எதுவும் கோபமா..? உடம்புக்கு ஏதாவது முடியலையா..?” குரலில் கவலை தொக்கி நிற்கக் கேட்டான் அவன்.
“ஐயோ அப்படியெல்லாம் இல்லைப்பா.. எனக்கு தலை வலிக்குது..”
“ஓஹ் காட்.. தலைவலியா? நான் வேணும்னா தைலம் ஏதாவது தேய்ச்சி விடட்டுமா..?” என்றவன் குழந்தையை மறந்து அவள் அருகே வர மீண்டும் அவர்களுடைய வீட்டுக் கதவு தட்டப்பட்டது.
ஒருமுறை அவளுடைய நெற்றியை நன்றாக அழுத்தி விட்டவன், “இருமா யாருன்னு பாத்துட்டு வரேன்..” என்றான்.
இப்போது யாராக இருக்கும் என அச்சத்தில் வான்மதி மீண்டும் பதற யாஷ்வினோ கதவைத் திறந்தான்.
அங்கே புத்தகங்களோடு நின்ற தன் மனைவியின் தங்கையைப் பார்த்ததும் அவனுடைய அதரங்களில் புன்னகை வந்து அப்பிக் கொண்டது.
“ஹையோ மாமா… நீங்களா..? சொல்லவே இல்ல… இந்த அக்கா கூட என்கிட்ட சொல்லவே இல்ல பாருங்களேன்..”
“நான் வர்றது உங்க அக்காக்கே தெரியாது..”
“வாவ் சப்ரைஸ்ஸா வந்திருக்கீங்களா..? சூப்பர் சூப்பர்.. எனக்கு சாக்லேட் வாங்கிட்டு வந்தீங்கதானே..?” என மகிழ்ச்சியின் உச்சத்தில் துள்ளி குதித்தவாறு உள்ளே நுழைந்த சாஹித்யாவின் தலையை அன்போடு வருடி விட்டவன்,
“உனக்கு சாக்லேட் வாங்காம வருவேனா..? உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி வந்திருக்கேன்…” என்றான்.
“மாமான்னா மாமாதான்..” என முகத்தை சுருக்கி கூறிக் கொண்டவள் தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருந்த தன் அக்காவைக் கண்டதும்,
“என்ன ஆச்சுக்கா..?” எனக் கேட்டாள்.
“எனக்கு என்ன ஆனா உனக்கு என்ன..? நீ எதுக்கு இவ்வளவு நேரத்துக்கு வந்திருக்க..? இப்போ உனக்கு காலேஜ் முடிஞ்சிருக்காதே..” என எரிந்து விழுந்தாள் மதி.
இன்று தனக்கு நேரமே சரியில்லை போலும் என உள்ளே பயந்து கதறியது அவளுடைய மனம்.
“அம்மாடி அவ சின்ன பொண்ணு.. அவகிட்ட ஏன் கோபப்படுற..?”
“யாரு இவ சின்ன பொண்ணா உங்களுக்கு..?” எரிந்து விழுந்தாள் மதி.
“மாமா இப்போதான் வந்தீங்களா..? இன்னும் ட்ரெஸ் கூட சேஞ்ச் பண்ணாம இருக்கீங்களே.. நான் ஏதாவது குடிக்கிறதுக்கு எடுத்து வரட்டுமா..?” என அவள் கேட்க,
“இல்லடாம்மா.. உனக்குதான் ஸ்டொமக் பெயின்னு சொன்னேல்ல.. நீ போய் ரெஸ்ட் எடு.. நான் பாத்துக்குறேன்..” என்றான் யாஷ்வின்.
அவனைப் பொறுத்தவரை தன் பெண் குழந்தையைப் போலத்தான் சாஹித்யாவும்.
அதே கணம் அவர்களுடைய படுக்கை அறைக்குள் எதுவோ விழுந்து உடையும் சத்தம் கேட்டு பதறித் திரும்பினான் அவன்.
“உள்ளே என்ன சத்தம்..?” எனக் கேட்டவாறு வேகமாக அவன் படுக்கை அறைக்குள் நுழைந்து விட,
இவளுக்கு அச்சத்தில் உடல் விறைத்தது.
பதறி அவன் பின்னாலேயே அவளும் உள்ளே நுழைய அங்கிருந்த மிகப்பெரிய அலுமாரியின் கதவு மூடுவதும் திறப்பதுமாக அசைந்து கொண்டே இருக்க அதற்குள் உரோமம் அடர்ந்து வளர்ந்த ஆண் ஒருவனின் கரம் தெரிவதைக் கண்டு உறைந்து போய் விட்டான் யாஷ்வின்.
ஒரு கணம் அவனால் அவனுடைய கண்களையே நம்ப முடியவில்லை.
அவனுடைய அறைக்குள் அதுவும் அவர்களுடைய படுக்கை அறைக்குள் இன்னொரு ஆணால் எப்படி உள்ளே நுழைய முடியும்..?
ஒருவேளை திருடனாக இருக்குமோ எனப் பதறியவன் சட்டென அங்கே தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய குழந்தையை பாதுகாப்பாகத் தூக்கி தன் பின்னே பதற்றத்துடன் நின்ற மனைவியின் கரத்தில் குழந்தையைக் கொடுத்தவன் ஆயுதம் எதையும் கையில் எடுத்துக் கொள்ளலாம் என எண்ணி அருகே இருந்த நாற்காலியை இறுகப்பற்ற,
அப்போதுதான் படுக்கையில் கழன்று கிடந்த ஜட்டியில் அவனுடைய பார்வை படிந்தது.
அதுவும் அந்த உள்ளாடை தன் படுக்கையில் இருப்பதைக் கண்டு மீண்டும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அதிர்ச்சிக்குள் தள்ளப்பட்டான் அவன்.
இங்கே என்ன நடக்கின்றது..?
ஆங்காங்கே மனைவியின் உள்ளாடைகளும் சிதறிக் கிடப்பதைக் கண்டவனுக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது.
நிற்க முடியாமல் அப்படியே அங்கிருந்த சுவற்றின் மீது சாய்ந்து கொண்டவன் பதறியவாறு வந்து நின்ற மனைவியின் முகத்தில் தன் பார்வையை கேள்வியாய் பதித்தான்.
ஒட்டு மொத்த வலியும் அவன் பார்வையில் தொக்கி நின்றது.
Nice move 🥰