06. நெருப்பாய் நின் நெருக்கம்..!!

4.6
(61)

நெருக்கம் – 06

பத்மாவோ கோபத்தோடு அபர்ணாவின் அறைக் கதவைத் தட்டி,

“அபர்ணா என்ன இது புதுப் பழக்கம். முதல்ல கதவைத் திற..” என அவர் கோபமாகத் திட்ட, அழுகையோடு எழுந்து வந்து கதவைத் திறந்தவள்,

“நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது உங்க நிம்மதிக்காக மட்டும்தான், அதுக்காக என்னால வயசானவனை எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது..”

“இப்போ ஏன்டி கத்துற..?”

“என்னால முடியாது.. அந்த அரைக்கிழவன என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது..” அந்த அறையே அதிரும் வண்ணம் மீண்டும் கத்தினாள் அவள்.

“வாய மூடு அபர்ணா.. அவர் என்ன அரைக்கிழவனா..? முப்பத்தாறு வயசுதானேடி..? இப்படி எல்லாம் எதிர்த்துப் பேசாதம்மா.. உங்க அப்பா கேட்டா உன்னைத் திட்டாம எனக்குத்தான் திட்டுவாரு..”

“ம்மாஆ… அந்த ஆளுக்கு முப்பத்தாறு இல்லம்மா முப்பத்தெட்டு.. புரியுதாஆஆஆ…? முப்பத்தி எட்டுஉஉஉஉ வயசாகுது…. அப்பா நல்லா தெளிவா 38 வயசுன்னுதானே சொல்லிட்டுப் போனாரு…. நீங்க என்ன சொன்னாலும் அவன் அரைக்கிழவன்தான்.. யாராவது ஆன்ட்டியைப் பார்த்து  கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க… என்னால எல்லாம் அவனைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது..”

“ஏய்.. இப்படி ஒரு சம்பந்தம் கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்டி…”

“அப்போ நீங்களே அவன கட்டிக்கோங்க…”

“அபர்ணாஆஆ…”

“ப்ச் பிடிக்கலைன்னா விடுங்களேன்.. தாடி மீசை முடி கூட  அவருக்கு நரைச்சுப் போயிருக்கும்.. இன்னும் ரெண்டு வருஷத்துல அவருக்கு நாப்பது வயசாகிரும்..”

“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் அவர் இல்லடி. நேர்ல ரொம்ப அழகாத்தான் இருந்தாரு..”  என்று கூறிய அபர்ணாவின் அன்னையோ மிகவும் பரிதவித்துப் போனார்.

“ப்ச்…” என சலித்துக் கொண்டாள் அவள்.

“அம்மாடி….”

“ம்மாஆ… வேணாம்… நீங்களே இந்தக் கல்யாணத்தை நிறுத்துறீங்களா..? இல்லை, நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்தட்டுமா..?” முகம் சிவக்கக் கேட்டாள் அவள்.

“பத்திரிக்கை அடிச்சு ஊருக்கே கொடுத்தாச்சு.. இனி நிறுத்த முடியாதுடி…” என்ற அன்னையை வெறித்துப் பார்த்தவள்,

“அந்த அரைக்கிழவனுக்கு இப்போ கல்யாணம் ஒன்னுதான் குறை.. அவனைஐஐஐஐ…” எனக் கத்தியவள் வாயிலில் நின்றவனைக் கண்டு அதிர்ந்து போனாள்.

அங்கே அவளுடைய அக்காவின் கணவன் கேசவன் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் அபர்ணாவுக்கு முகத்தில் வெறுப்பு அதிகரித்தது.

ஆரம்பத்தில் இருந்தே அபர்ணாவிற்கு கேசவனை கொஞ்சமும் பிடிக்காது.

தன்னுடைய பாசத்திற்குரிய சகோதரியை தினம், தினம் அடித்து வதைக்கும் அவனை அடியோடு வெறுத்தவளுக்கு எப்போது அவன் தன்னையும் திருமணம் செய்யக் கேட்டான் என்ற விடயம் தெரிந்ததோ அன்றே அருவருத்து போனாள் அவள்.

கேசவனின் பின்பு அழுதவாறு நின்ற சாதனாவைப் பார்த்தவள், அமைதியாகத் தன்னுடைய அறைக்குள் நுழைய முயற்சிக்க,
“யாரைக் கேட்டு அபர்ணாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறீங்க…? இந்த வீட்டோட மூத்த மருமகன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்கணும்னு உங்க யாருக்கும் தோணவே இல்லையா..?” எனக் கேசவன் நடுவீட்டில் வந்து கத்தத் தொடங்க பத்மாவோ அதிர்ந்து போனார்.

“தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை… நல்ல வரனா வந்துச்சு.. அதனாலதான் பேசி முடிச்சிட்டோம்..” என தன்மையாகவே பதில் கூறினார் அந்தத் தாய்.

எங்கே தான் கோபமாக ஏதேனும் பேசி, அந்தக் கோபம் தன்னுடைய மகள் மீது திரும்பி விடுமோ என்ற அச்சம் அவரை சாந்தமாகப் பேச வைத்தது.

“நீங்க பண்றது எல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்ல.. நான் இருக்கும் போது இன்னொரு மாப்பிள்ளையை நீங்க எப்படி பார்க்கலாம்…?” என சிறிதும் வெட்கமின்றி கேட்டான் அவன்.

“நீங்க என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சுதான் பேசுறீங்களா..? உங்களுக்குத்தான் எங்களோட மூத்த பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்துட்டோமே.. அப்புறம் எதுக்காக இப்படி எல்லாம் பேசுறீங்க…?” எனக்  கேட்டவருக்கு எவ்வளவு முயன்றும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“உங்க மூத்த பொண்ணால தான் என்னோட வாழ்க்கையே அழிஞ்சு போச்சு.. இப்போ வரைக்கும் என்னோட வம்சம் வளர்றத்துக்கு ஒரு வாரிசு கூட அவளோட வயித்துல உதிக்கவே இல்ல.. ஒரு மலடியை கல்யாணம் பண்ணி வச்சு என்னோட வாழ்க்கையை நாசப்படுத்திட்டிங்க… அதுக்கு பிராயச்சித்தமா உங்க ரெண்டாவது பொண்ணையும் எனக்கே கட்டிக் கொடுத்துடுங்க..” என கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாது கேட்டான் கேசவன்.

“செருப்புப் பிஞ்சிடும்..” என்றாள் அபர்ணா.
பத்மாவோ அதிர்ந்து போய்விட்டார்.

கேசவன், சாதனா கூட அதிர்ந்து போய் அபர்ணாவா இப்படி பேசியது எனப் பார்க்க, அவனின் முன்பு வந்து நின்றவள்,

“மரியாதையா வெளியே போ.. அக்காவை வச்சு உன்னால குடும்பம் நடத்த முடியலனா அவளை எங்ககிட்ட விட்டிரு, நாங்க அவள பாத்துக்குறோம்..” என அவள் கோபத்தில் சீற,

“முளைச்சு மூணு இலை விடல.. என்னையே எதிர்த்து பேசுறியாடி…” எனக் கத்தியவன்,
அபர்ணாவை நெருங்கி அவளுடைய ஒற்றைக் கையைப் பிடித்து பின்பக்கமாக வளைக்க, அவன் திடீரென இப்படிச் செய்வான் என்பதை சற்றும் எதிர்பாக்காதவள் அவனுடைய பிடியிலிருந்து விலகத் துடித்தாள்.

“ஐயோ..! அவள விடுடா.. என் பொண்ண விடுடா..” எனப் பதறி அலறினார் பத்மா.

“என்னங்க ப்ளீஸ்.. அவளை விட்ருங்க. அவ சின்ன பொண்ணு அவளுக்கு வலிக்க போகுது விடுங்க.. என்னைத்தான் தினமும் அடிச்சு கொடுமை படுத்துறீங்க. அவளை எதுக்காக இப்படி பண்றீங்க..? விடுங்க அவ தெரியாம பேசிட்டா..” எனச் சாதனா அழுதபடியே கெஞ்ச இப்போது அபர்ணாவை உதறித் தள்ளியவன், சாதனாவின் முடியை கொத்தாகப் பிடித்தான்.

“இதோ பாருடி.. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது.. இவ என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும் சொல்லி புரியவை இல்லனா, குடும்பத்தோட கொழுத்திடுவேன்..” என மிரட்டி விட்டுச் சாதனாவை உதறி தள்ளியவன், வெளியே செல்லத் திரும்பிய கணம் வாயிலில் சாய்ந்து நின்றான் குருஷேத்திரன்.

புதிதாக ஒரு திடகாத்திரமான ஆண்மகன் அங்கே வந்து நின்றதைக் கண்டதும் கேசவனுக்கோ உடல் திகைத்தது.

கேசவன் கையைப் பிடித்து பின்னால் வளைத்ததால் அபர்ணாவின் கரமோ சிவந்து போயிருந்தது.

சிவந்து போன தன்னுடைய கரத்தை கண்ணீரோடு தேய்த்து விட்டவாறு வாயிலில் வந்து நின்ற குருஷேத்திரனை பார்த்தவள்,

‘இவரா..? இவர் எப்படி இங்க வந்தாரு..? இவர் தானே ஸ்கூல் ஃபங்ஷன்ல சீப் கெஸ்ட்டா வந்து என்ன வரைஞ்சவரு.. ஒருவேளை அன்னைக்கு வரைஞ்ச என்னோட படத்தை கொடுத்துட்டு போகலாம்னு வீடு தேடி வந்து இருப்பாரோ..!’ என எண்ணியவள் சட்டென வெட்கிப் போனாள்.

குடும்பப் பிரச்சினை நடக்கும் போது வந்து விட்டாரே என சங்கடமாக எண்ணியவள், சார் என குருஷேத்திரனை அழைப்பதற்கு முன்பு பத்மாவோ

“வா… வாங்க மாப்பிள்ளை..” என அவனை அழைக்க விதிர்விதிர்த்துப் போனாள் அபர்ணா.

‘என்னது மாப்பிள்ளையா..? அப்போ அந்த அரைக் கிழவன் இவன் தானா..?’ எனத் தீராத அதிர்ச்சியில் அவள் அசையாது நிற்கத், தன்னுடைய தலை முடியை அழுத்தமாக கோதிவிட்டவாறு உள்ளே நுழைந்தான் குருஷேத்திரன்.

கேசவனுக்கோ கோபம் பொங்கியது.

“ஓஹோ..! பெரிய பணக்காரன் கிடைச்சதும் வளைச்சு போட்டுட்டீங்க போல, சார் இங்க பாருங்க அபர்ணாவ நான் தான் கட்டிக்க போறேன்.. நீங்க மரியாதையா வெளியே போங்க..” என கேசவன் கூற, பளார் என ஓங்கி அவனுடைய கன்னத்தில் ஒரு அறை விட்டான் குருஷேத்திரன்.

அவன் விட்ட அறையில் கேசவன் அதிர்ந்து போய் இரண்டடி பின்னால் நகர்ந்து நிற்க,

“அவ என்னோட பொண்டாட்டி.. இன்னொரு தடவை அபர்ணாவ பத்தி ஏதாவது ஒரு வார்த்தை உன்னோட வாயிலிருந்து வந்துச்சு.. வாயை உடச்சிடுவேன்.” என குருஷேத்திரன் கர்ஜிக்க, பயந்து போனான் கேசவன்.

“உங்க எல்லாரையும் சும்மா விடமாட்டேன்.. நான் யாருன்னு காட்டுறேன்..” என பின்னால் நகர்ந்தவாறு நடுக்கத்தோடு கூறியவன், சாதனாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட அவனையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள் அபர்ணா.

உள்ளம் பந்தயக்குதிரை போல தடதடத்துக் கொண்டிருந்தது.

🔥🔥🔥🔥

கமெண்ட்ஸ் பண்ணுங்க டியர்ஸ்
இன்னைக்கு தொடர்ந்து எபிசோட் மழை உண்டு

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 61

No votes so far! Be the first to rate this post.

1 thought on “06. நெருப்பாய் நின் நெருக்கம்..!!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!