இத்தனை நாட்களும் தன்னுடைய சகோதரியின் கணவன் மோசமானவன், என்பதைச் செவி வழி மூலமாக மட்டுமே அறிந்து வைத்திருந்தவள், இன்று நேரில் அவனுடைய செயல்களைக் கண்டதும் நொந்து போனாள்.
தன்னுடைய அன்னை தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதற்கான காரணம் இப்போது அவளுக்குத் தெளிவாக புரிந்தது.
‘கொஞ்சம் கூட நாகரீகமோ மரியாதையோ பார்க்காது என்னையே கையைப் பிடித்து அடிக்க முயன்றவன், தனிமையில் தன்னுடைய சகோதரியை என்னவெல்லாம் செய்வான்..’ என எண்ணிப் பார்த்த அவள் உள்ளம் நடுங்கிப் போனது.
இந்தப் பிரச்சனைகளிடமிருந்து எல்லாம் தப்பிக்க வேண்டும் என்றால் நான் திருமணம் செய்து கொள்வது தான் நல்லது என்பது புரிய இப்போது அவளுடைய பார்வை குருஷேத்திரனின் மீது ஆழப் பதிந்தது.
‘தன்னுடைய வயதிற்கும் அவனுடைய வயதுக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி இருக்கிறது. அப்படி இருக்கையில் இருவரும் எப்படி திருமணம் செய்து கொண்டு வாழ முடியும்..’ என்று எண்ணியவள் மீண்டும் கலங்கிப் போனாள்.
‘அவன் கம்பீரமாக வந்து நின்றத் தோரணையும் பெரிய பிரச்சினையாகிப் போகுமோ என பயந்து கொண்டிருந்த நொடிகளை இலகுவாக்கிக் கேசவனை நொடியில் வீழ்த்திப் பயந்து ஓடச் செய்த அவனுடைய வலிமையும் திடகாத்திரமான உடலோடு அழுத்தமாய் அவளை அவன் பார்த்த விதமும் அவளை ஈர்த்தது உண்மைதான்.
அன்று காலேஜில் சீப் கெஸ்ட் ஆக வந்த போது கூட ஹேண்ட்சம் என குருஷேத்திரனை எண்ணியது அவளுக்கு நினைவில் எழுந்தது.
38 வயது என்றதும் தாடி, மீசை எல்லாம் நரைத்து அரைக் கிழவனாக ஒருவன் வந்து நிற்பான் எனப் பார்த்தால், படு அட்டகாசமாக வந்து நின்றவனைக் கண்டு அவளுக்கோ இதயம் தாளம் தப்பித் துடிக்கத் தொடங்கியது.
சட்டெனத் திகைத்தவள் தன்னுடைய மனசாட்சியையே காரித் துப்பத் தொடங்கினாள்.
‘என்னதான் அழகா இருந்தாலும் 38 வயசு, 38 வயசு தானே..! என்னோட வயசுக்கு அவன் அரைக் கிழவன்தான்’ என அவனை ஏற்கத் துணிந்த மனதுக்குப் பதிலடி கொடுத்தாள் அபர்ணா.
‘இதோ பாரு அபர்ணா..! நீ என்னதான் காரணம் சொன்னாலும் உன்ன அவனுக்குத்தான் கல்யாணம் பண்ணி கொடுக்கப் போறாங்க. பத்திரிகை கூட அடிச்சிட்டாங்க.. இதுக்கு அப்புறமா நீ தையத் தக்கான்னு குதிச்சாக் கூட நீ நினைக்கிறது நடக்காது..’ என அவளுக்குத் தற்போதைய நிலைமையை எடுத்துக் கூறியது அவளுடைய மனசாட்சி.
‘அப்போ..! என்னோட மனசப் பத்தி இவங்களுக்கு கவலையே இல்லையா..? எனக்கு விருப்பமா இல்லையான்னு கூட கேட்காம இவ்ளோ பெரிய முடிவ எப்படி எடுக்கலாம்..’ சற்றே வேதனையோடு கேள்வி எழுப்பினாள் அவள்.
‘நீ நல்லா இருக்கணும்னு மட்டும் தான் அவங்க இவ்வளவு அவசரப்படுறாங்க.. எங்க அந்த கேசவன் பொறுக்கி நாயால உனக்கு ஏதாவது ஆபத்து வந்துருமோன்னு பயப்படுறாங்க.. நல்ல சம்பந்தம் கேட்டு வந்ததும், அதை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டாங்க அவ்வளவுதான்.. உன்னோட சந்தோஷம் மட்டும்தான் அவங்களுக்கு முக்கியம்..’ என மீண்டும் அட்வைஸ் மழையைப் பொழிந்தது அவளுடைய மனசாட்சி.
அவள் மாறி மாறி தனக்கும் மனசாட்சிக்கும் இடையே போராடிக் கொண்டிருந்தவள், குருஷேத்திரனின் குரலில் சுயமடைந்து உள்ளுக்குள் நடந்தப் போராட்டத்தை நிறுத்திவிட்டு அவனுடைய முகத்தை மீண்டும் பார்த்தாள்.
“இனி அவனால இங்க எந்த பிரச்சனையும் வராது. நோ வொரீஸ்..” என்றவன்,
“சதீஷ்..” என அழைத்ததும் வெளியே நின்ற ஒருவனோ கை நிறையப் பைகளோடு உள்ளே வேகமாக வந்தான்.
“இதுல உங்க எல்லாருக்குமான ட்ரஸ், ஜுவல்ஸ் எல்லாமே இருக்கு.. எடுத்துக்கோங்க.. ஒவ்வொன்னா ஷாப்பிங் போய் செலக்ட் பண்ணற அளவுக்கு நமக்கு இப்போ டைம் இல்ல. இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம். அதனால பெஸ்ட் டிசைனர வர வச்சு நானே எல்லாரோட ட்ரெஸ்ஸையும் டிசைன் பண்ண சொல்லிட்டேன்.. பக்காவா இருக்கும்… உங்களுக்கு பிடிக்கலைன்னா மாத்திக்கலாம்..” என அவன் கூற பத்மாவோ வியந்து போனவராய் “சரி தம்பி..” என்றார்.
அவனுடைய அழுத்தமான குரலில் அவன் பேசப் பேச இவளோ அவனை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இந்தத் திருமணத்தில உனக்கு சம்மதமா..?’ என அவனுக்குக் கேட்கத் தோன்றவில்லையா..?
வளர்ந்து கெட்டவன் என்கிட்ட ஒரு வார்த்தை பேசுறானா பாரு.. நாமளே கூப்பிட்டு பிடிக்கலைன்னு சொல்லிடுவோமா..? என எண்ணியவள், யெஸ்.. இதான் நல்ல ஐடியா இப்பவே கூப்பிட்டு பேசிடலாம்’ என நினைத்தாள்.
“மாப்பிள..! உக்காருங்க. காபி போட்டு எடுத்துட்டு வரேன்..” என பத்மா கூற உடனடியாக மறுத்தான் அவன்.
“முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு. அப்புறமா வந்து குடிச்சிக்கிறேன்..” என்றவன் சிறு தலையசைப்பை பத்மாவிற்கு கொடுத்துவிட்டு அப்படியே திரும்ப இவளுக்கு முகத்தில் அடித்தாற் போல இருந்தது.
நான் ஒருத்தி இங்கே குத்துக்கல்லாட்டம் நிக்கிறது அவனோட கண்ணுக்குத் தெரியுதா..? இல்லையா..?
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என அவள் சத்தமாக அழுத்திக் கூற வாயில்புறம் திரும்பியவன் இவள் புறம் திரும்பவே இல்லை.
காதே கேளாதவன் போல அவன் அந்த வீட்டை விட்டு வெளியேறி விட கொதித்துப் போனாள் அபர்ணா.
“ம்மாஆஆஆஆ…”
“என்னடி…?”
“அந்த அரைக்கிழவனுக்கு எவ்வளவு கொழுப்புன்னு பாத்தியா..? நான் பேசணும்னு சொல்லியும், என்ன கொஞ்சம் கூட மதிக்காம அவன் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கான்..”
“நான் அடக்க ஒடுக்கமா இருக்குறது எல்லாம் இருக்கட்டும்.. முதல்ல அவன கூப்பிடுமா.. அவன் கிட்ட பேசி எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நான் நிறுத்தியே ஆகணும்..” என்ற மகளை தீயாய் முறைத்தார் பத்மா.
“மறுபடியும் கேசவன் வந்து பிரச்சனை பண்ணா..? என்ன பண்ணுவ..?”
“போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்..”
“இப்போ உனக்கு என்ன வேணும்..? 38 வயசு தானே பிரச்சனை.. வேறொருத்தன மாப்பிள்ளைய பார்த்தா கல்யாணம் பண்ணிக்குவியா..?” என அன்னை கேட்டதும் திகைத்துப் போனாள் அவள்.
கல்யாணமே வேணாம் என கத்த வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
“சொல்லுடி இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு வேற மாப்பிள்ளை பார்த்தா, நீ அந்தப் பையனை கட்டிப்பியா..?”
அவளுக்கோ பதில் கூற முடியவில்லை.
குருஷேத்திரனாவது தெரிந்த முகம் திடீரென இன்னொருவனைக் கொண்டு வந்து யார் என்றே தெரியாத ஒருவனை திருமணம் முடி எனக் கூறினால், அவளால் சத்தியமாக முடியாதுதான்.
திகைத்துப் போய் பதில் கூற முடியாமல் நின்றவளைப் பார்க்க பத்மாவுக்கு பாவமாகிப் போனது.
“உன்னோட சந்தோஷத்துக்காக, உன்னோட நல்ல வாழ்க்கைக்காகத்தான் நான் இதெல்லாம் பண்றேன்.. அதுக்காக உன்ன கைய, கால கட்டியெல்லாம் நாங்க கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோம்.. உனக்கு இது பிடிக்கவே இல்லை.. இந்த வாழ்க்கை சரி வராதுன்னு நீ நினைச்சீன்னா சொல்லு, அப்பா கிட்ட என்னால முடிஞ்ச அளவுக்குப் பேசிப் பார்க்கிறேன்..”
“ஊருக்குப் பத்திரிக்கைக் கொடுத்தாச்சுன்னு சொன்ன..” எனக் கேட்டபடி தன்னுடைய அன்னையைப் பார்த்தாள் அவள்.
“பத்திரிக்கை ஒன்னும் நாங்க அடிக்கல.. மாப்பிள்ளையே அடிச்சிட்டாரு.. அவரோட சைட் எல்லாருக்கும் கொடுத்துட்டாராம்.. நம்ம சைட் இன்னும் கொடுக்க ஆரம்பிக்கல..” எனப் பெருமூச்சோடு கூறினார் பத்மா.
இவளுக்குக் குழப்பம் அதிகரித்தது.
‘இந்த திருமணத்தை நிறுத்தினால் இன்னொரு மாப்பிள்ளையை நிச்சயமாகப் பார்ப்பார்கள்.
என்ன செய்வது திருமணத்தை நிறுத்தி விடலாமா..?
குருஷேத்திரனுடனான வாழ்க்கை நன்றாக இருக்குமா..?’
திடீரென தன்னுடைய அன்னையைப் பார்த்தவள்,
“அம்மா.. இவர் ரொம்ப ஃபேமஸான ஆர்ட்டிஸ்ட்.. இவரோட வரன் எப்படி வந்துச்சு..?” எனக் கேட்டாள் அபர்ணா.
“உன்னோட காலேஜ்ல உன்ன பாத்தாராம்.. அவருக்கு ரொம்ப புடிச்சுப் போச்சாம்.. அவரே வந்து பேசிட்டு போனாரு..” என நடந்ததைக் கூறினார் பத்மா.
“தன்னைப் பிடித்ததால் தான் அவனே தன்னை வரைவதாகக் கூறி மேடையில் இருந்து இறங்கி வந்தானோ..?
கண்டதும் காதலா..?
என்னிடம் கூட எதுவுமே பேசாது.. நேராக தன்னுடைய பெற்றோர்கள் வரை சென்று பத்திரிகை வரை அடித்துக் கொடுத்து விட்டானே..
என் மீது அவ்வளவு காதலா..?’ புரியவில்லை அவளுக்கு.
ஆனால் மனதில் ஏதோ ஒரு மூலையில் சற்றே தித்திப்பாக இருந்தது.
இதுவரை தன்னை காதல் என்று துரத்தியவர்கள் ஏராளம்.
அதில் ஒருவர் கூட தன்னுடைய தந்தையை சந்தித்ததே இல்லை. தந்தை காலேஜுக்கு தன்னை அழைக்க வந்தாலே பாய்ந்து ஓடி ஒளிந்து கொள்பவர்களின் மத்தியில், குருஷேத்திரனின் செயல் அவளை வியக்க வைத்தது.
“அட பைத்தியமே உன் பின்னாடி லவ் லெட்டர் எடுத்துட்டு சுத்தி வர, அவன் என்ன டீனேஜ் பையனா..? அவனுக்குத்தான் இப்போ 38 வயசு ஆகுதே.. அவன் இப்படி பண்ணலைன்னா தான் அதிசயம்..’ என மீண்டும் கவுண்டர் கொடுத்தது அவளுடைய மனசாட்சி.
சிந்தித்துச் சிந்தித்து சோர்ந்து போனாள் அவள்.
‘இத்தனை காதலிப்பவனை ஏற்றுக் கொள்வதா..?
நிராகரிப்பதா..?
இந்த திருமணத்தை நடத்தச் சொல்வதா..?
நிறுத்தச் சொல்வதா..?
ஐயோ..!
ஏதாவது திடமான ஒரு முடிவை எடுக்க முடியவில்லையே’ என தவித்துக் கொண்டிருந்தவளின் முன்பு குருஷேத்திரனுடன் வந்த சதீஷ் என்பவன் வந்து நின்றான்.
“இத சார் உங்ககிட்ட கொடுக்க சொன்னாரு..” என ஒரு காகிதத்தை மடித்து அவளிடம் அவன் கொடுத்து விட்டுச் செல்லத் தயக்கத்தோடு அதனை வாங்கிக் கொண்டவள் சதீஷ் சென்றதும் அதனை விரித்துப் பார்த்தாள்.
அந்தப் பெரிய காகிதத்தில் அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அபர்ணா.
அன்று அவன் கல்லூரியில் வைத்து தன்னை வரைந்த படம் தான் இது என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு வியப்பு உச்சத்தைத் தொட்டது.
அவள் அணிந்த ஆடை இல்லாமல் அழகிய நவீன ஆடையில் அதற்கேற்ற ஆபரணங்களை அணிவித்து அழகாக வரைந்து வைத்திருந்தான் குருஷேத்திரன்.
அவன் அவ்வளவு தத்ரூபமாக வரைந்திருப்பான் என அவள் எள்ளளவும் எண்ணிப் பார்க்கவே இல்லை.
பத்மாவோ இது எப்படி..? என அதிர்ந்து போய்ப் பார்க்க,
“அம்மா.. நான் அன்னைக்கு சொன்னேனே சீப் கெஸ்ட் வந்தவரு என்ன வரஞ்சாரு அப்படின்னு அவர்தான் இவர்..” எனக் கூற
“நீ ஹாண்ட்சம்னு சொன்னல்ல..” என சிரித்தபடியே பத்மா கேட்க இவளுக்கோ முகம் சிவந்தது.
எவ்வளவு நுணுக்கமாக அழகாக வரைந்து இருக்கிறான் என எண்ணி எண்ணி வியந்தவள், அந்தப் படத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொள்ள,
“அப்பாகிட்ட பேசவா வேண்டாமா..? சொல்லிட்டுப் போடி..” எனக் கேட்டார் பத்மா.
“இ.. இல்லம்மா எனக்கும் சம்மதம்..” என மெல்லிய குரலில் வெட்கத்தோடு கூறியவள், கதவை அடைத்துக் கொண்டாள்.
பத்மாவின் முகத்திலோ நிம்மதியின் சாயல் படர்ந்தது.
💜💜🔥💜💜
இன்னைக்கு இன்னும் எபி இருக்கு..
சீக்கிரமா வரேன் தங்கம்ஸ்..