08. நெருப்பாய் நின் நெருக்கம்..!!

4.8
(58)

நெருக்கம் – 08

எந்தத் தைரியத்தில் திருமணத்திற்கு சம்மதம் கூறினால் என அவளுக்கேத் தெரியவில்லை.
புதிதாக உடல் படபடக்கவெல்லாம் செய்தது.
அவன் வரைந்து கொடுத்த ஓவியத்தை மீண்டும் பார்த்தாள்.

ரொம்பப் பெரிய ஓவியன்தான் போல என எண்ணியது அவளுடைய சிறுபிள்ளை மனம்.

‘என்னைப் பார்த்ததும் பிடித்திருந்தது என்றால் இங்கே வந்த பின்புத் தன்னை ரசனையாக ஒரு பார்வை கூட அவன் பார்க்கவே இல்லையே..!
ஏன்..?

ஒருவேளை தன்னுடைய அன்னை இருந்ததால் தன்னை பார்ப்பதை தவிர்த்து இருப்பானோ..?
நான் பேசியது கூடதான் அவனுக்குக் கேட்கவில்லை.

அவனுடைய நடவடிக்கைகளில் இருந்து அவளால் எதையும் புரிந்து கொள்ள முடியாது போனது.

இனி அவன்தான் தன்னுடைய எதிர்காலம் என்பது புரிந்துவிட தன்னுடைய மனதை அமைதிப்படுத்திக் கொண்டவள் அடுத்த கணமே வேகமாக ஓடிச் சென்றுக் குப்பைத் தொட்டியின் அருகே நெருங்கியவள் குப்பைத் தொட்டியைக் கவிழ்த்து கொட்டினாள்.

ஏனோ இதயம் வேகமாகத் துடிப்பது போல இருந்தது.

தன்னுடைய திருமணப் பத்திரிக்கையைக் கிழித்துச் சுக்குநூறாக எறிந்ததை அப்படியே அள்ளி இந்தக் குப்பைத் தொட்டியில் தானே போட்டாள்.

இப்போது படபடப்போடு அந்தக் கிழிந்தத் திருமணப் பத்திரிகையைத் தேடியவளுக்குச் சிதறிய சிறு துண்டு காகிதங்களே அவளுடைய கரத்தில் கிடைத்தன.

அவற்றையெல்லாம் அள்ளி எடுத்துத் தரையில் வைத்தவள் ஒவ்வொரு துண்டுகளாக சேகரித்துக் கிழிந்ததை எல்லாம் பொருத்தி ஒட்டத் தொடங்கினாள்.

கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அந்தப் பத்திரிகையை முழுதாக ஒட்டி முடித்தவள் இப்போது அதை மீண்டும் படித்தாள்.

“குருஷேத்திரன் வெட்ஸ் அபர்ணா..” உச்சரித்த வார்த்தைகள் யாவும் தித்தித்தன.

கன்னங்கள் சூடேறிச் சிவந்தன.

இதயம் நொடியில் தாளம் தப்பி துடிக்கத் தொடங்க என்ன உணர்விது என தவித்துப் போனாள் அவள்.

மனம் குழம்பிப் போனதும் நேரே பூஜை அறைக்குள் சென்றவள், மனம் உருகக் கையைக் கூப்பி இறைவனை வணங்கத் தொடங்கினாள்.

‘கடவுளே..! இந்த வாழ்க்கை சரியா பிழையா எதுவுமே எனக்குத் தெரியல.. மனசு சொன்னதைக் கேட்டு இந்த கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டேன்.. எந்தப் பிரச்சனையும் இல்லாம இந்த வாழ்க்கை நல்லா இருக்கணும்..

நான் நல்லா இருப்பதை விட எங்க அப்பா, அம்மா சந்தோஷமா இருக்கணும்.. அக்காவ கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு அவங்கக் கஷ்டப்படுற மாதிரி என்னையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்து அவங்க கஷ்டப்பட்டுடக் கூடாது..’ என மனம் உருக வேண்டிக் கொண்டவள் ஒருவித நிம்மதியை உணர்ந்தாள்.

இறைவனிடம் பாரத்தை ஒப்படைத்தாகிவிட்டது இனி அவன் பார்த்துக் கொள்வான் என முழு மனதாக நம்பியவள் திருமணத்திற்குத் தன் மனதைத் தயாராக்கத் தொடங்கினாள்.

******
ஒரே நாளில் அனைத்தும் தலைகீழாக மாறும் எனக் கூறினால் நம்ப முடியுமா..?

ஆம்… அப்படித்தான் மாறியது அபர்ணாவின் வாழ்க்கையும்.

கல்லூரிக்கு விடுமுறை கூறச் சென்றவளை விரிவுரையாளர்கள் தொடக்கம் மாணவர்கள் வரை சூழ்ந்து கொண்டனர்.

அனைவரின் பேச்சிலும் அவ்வளவு மரியாதை.

அடிக்கடி அவளைதா திட்டும் ப்ரொபசர் கூட அவளிடம் கைகட்டி வாய் பொத்தாத குறையாகப் பேசத் தொடங்க வியந்து போனாள் அவள்.

அனைவரும் கேட்ட கேள்விக்குத் தலையைத் தலையை அசைத்துப் பதிலைக் கூறித் தப்பிக்காத குறையாக ஓடி வந்து தன்னுடைய வகுப்பில் அமர்ந்து கொண்டவளுக்கு ஏனோ ஒவ்வாமை உணர்வே ஏற்பட்டது.

குருஷேத்திரனுக்கு இவ்வளவு புகழ் இருக்கிறதா என எண்ணி மலைத்துப் போனாள் அவள்.

அவள் எங்கே இருப்பாள் என அவளைத் தேடி வந்த ப்ரீத்தியும், தினேஷும் அவளைக் கண்டுபிடித்துத் திருமண வாழ்த்துக் கூறச் சோர்ந்து போனவளாய்த் “தேங்க்யூ.. தேங்க்யூ..” என முனகினாள் அவள்.

“ஏண்டா தினேஷ்..? குருஷேத்திரன் என்ன அவ்வளவு பெரிய ஆளா..?” என அவள் புரியாமல் கேட்க,

“அடிப்பாவி.. எங்களை விட உனக்குத் தானே அவர பத்தித் தெரிஞ்சுருக்கணும்.. என்ன நீ எங்ககிட்டயே இப்படிக் கேக்குற..?”

“அட போடா.. திடீர்னு கல்யாணம்னு வந்து நின்னா.. எங்க விசாரிக்கிறது..? எங்க அப்பா தான் அவரைப் பத்தி விசாரிச்சாரு. நான் எதுவுமே கேட்கல.. இப்போதைக்கு நல்லா படம் வரைவாரு, ஓரளவான பணக்காரன்னு மட்டும் தெரியும்..” என்றாள் அவள்.

“அட பைத்தியமே..! இலங்கையில் இருக்கக் கோடீஸ்வரங்கள்ல அவரும் ஒருத்தர். அவரோட சொத்து இங்க மட்டும் இல்ல.. இந்தியாவிலும் இருக்கு.. ஓவியம் வரைவாருன்னு சொன்னல்ல.. எத்தனையோ நாடுகளுக்கு போய் வரைஞ்சு பல மெடலுக்கு சொந்தக்காரர்டி.. குருஷேத்திரன்னு கூகிள்ல அடிச்சு சர்ச் பண்ணி பார்த்தாலே அவரை பத்தின எல்லா டீடைல்ஸும் வந்துடும்.. அவ்வளவு பெரிய ஆள்டி அவரு…” என அவரைப் பற்றி தனக்குத் தெரிந்ததெல்லாம் ஒப்புவிக்கத் தொடங்கினான் தினேஷ்.

அவன் கூறியதைக் கேட்டு ஆடிப் போனாள் அபர்ணா.

மனதுக்குள் ஏதோ ஒரு விதமான பயம் அப்பிக் கொண்டது.

ப்ரீத்தியும் “நீ ரொம்ப லக்கி தெரியுமா..?” என ஆரம்பிக்கச் சட்டென அந்த இடத்தில் இருந்து எழுந்து கொண்டவள்,

“சரி.. நான் போறேன்.. லீவ் சொல்லத் தான் வந்தேன்.. இன்னும் கொஞ்ச நாளைக்கு காலேஜ் வரமாட்டேன்..” என வேகமாகக் கூறியவள் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தாள்.

வியர்த்து வழியத் தொடங்கியது.

ஏதாவது தவறாக இருக்கக் கூடுமோ என அவளுடைய மனம் படபடத்தது.

இலங்கையில் விரல் விட்டு எண்ணக்கூடியக் கோடீஸ்வரன் என்றால் அவனுக்குக் கிடைக்காத பெண்களா..?

எதற்கு தன்னை தேர்ந்தெடுக்க வேண்டும்..?
அப்படி என்ன என்னிடம் இருக்கிறது என்றெல்லாம் சிந்தித்துச் சோர்ந்து போனவள், பேருந்திற்காகக் காத்திருக்கும் இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

அவள் நடந்து கொண்டிருக்கும் போதே அவள் அருகே ஒரு கார் வந்து நிற்கத் திகைத்து யாரெனப் பார்த்தவள் உள்ளே இருந்த ஆடவனைப் பார்த்து புரியாது விழி சுருக்க,

“மேடம் நான் குருஷேத்திரன் சார்கிட்டதான் வேலை பார்க்கிறேன்.. நீங்க எதுக்காக நடந்து போறீங்க..? வாங்க நானே உங்களை ட்ராப் பண்றேன்..” என காரை விட்டு இறங்கி வந்து அவளுக்காகக் கார்க் காதவைத் திறந்து விடத் திணறிப் போனாள் அவள்.

“இல்ல.. இல்ல.. அதெல்லாம் வேணாம் அண்ணா..” எனப் பதறியவாறு கூறியவள், வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் இன்னொரு கார் அவளின் அருகில் வந்து நிற்க, அவளுக்கு உடல் வெளிப்படையாக நடுங்கத் தொடங்கியது.

“மேடம்..! நீங்க அபர்ணா தானே. குருஷேத்திரன் சாருக்கும் உங்களுக்கும் தானே கல்யாணமாகப் போகுது. நீங்க இந்த வெயில்ல நடந்து போறீங்க. நான் உங்களை கார்ல கொண்டு போய் விடட்டுமா..?” என அதே போல இன்னொருவன் கேட்க அழுது விடுவோமோ எனப் பயந்து போனாள் அவள்.

“இல்ல.. நானே போயிடுவேன்..” என திக்கித் திணறிக் கூறியவள், தன்னுடையப் பையை இறுகப் பற்றிக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

சுதந்திரம் பறிபோனதைப் போல இருந்தது.
யார் என்றே தெரியாதவர்கள் எல்லாம் வந்து பேச அச்சத்தில் உடல் படபடக்கத் தொடங்கியது.

பேருந்து நிலையத்தை நெருங்கியதும் நிம்மதிப் பெருமூச்சோடு நடந்தவளின் அருகே இன்னொரு கார் வந்து நிற்க உடைந்து போனாள் அவள்.
கார்க் கதவைத் திறந்து கொண்டு இன்னொரு ஆடவன் கீழே இறங்க,

“தயவு செஞ்சு போயிருங்க.. நானே நடந்து போயிருவேன்..” எனக் கத்தியவள், அங்கே அவளை அழுத்தமாக பார்த்தவாறு நின்ற குருஷேத்திரனைக் கண்டதும் பதறிப் போனாள்.

“இ.. இல்ல இல்ல நா.. நா.. நான் உங்கள திட்டல.. அது.. அது வந்து.. இன்னொரு அண்ணா என்கிட்ட..” என உளறி ஒரு கட்டத்தில் பேச முடியாது இதழ்களைக் கடித்துக் கொண்டு தலை குனிந்தவளுக்கு ஏனோ கண்ணீர் வழியத் தொடங்கியது.

“கெட் இன் த கார்..” என்றான் அவன்.

அவனுடைய குரலில் அக்கறையை விட அலட்சியமே நிறைந்திருப்பதைப் போல தோன்றியது அவளுக்கு.

“இ.. இல்ல நான் பஸ்… பஸ்ல…”

“ப்ச்… கமான் அபர்ணா..” என அவன் கூறியதும் தயக்கத்தோடு காரின் பின்னிருக்கையை நோக்கி நகர்ந்தவளின் கரத்தை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான் அவன்.

அவ்வளவுதான் அவளுக்கோ உடல் வெடவடக்கத் தொடங்கி விட்டது.

‘அச்சோ பொசுக்குன்னு கைய பிடிச்சுட்டானே… பெருமாளேஏஏ…’

அவன் கரத்தைப் பிடித்ததும் தன்னுடைய மற்றைய கரத்தில் இருந்த பையை தொப்பென தரையில் போட்டவள், நடுக்கத்தோடு தன்னுடைய கரத்தை விடுவிக்க முயற்சி செய்தாள்.

“முன்னாடி வந்து ஏறு..” மீண்டும் இரும்பென இறுகிய அவனுடைய குரல் வெளி வந்ததும் மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் மெல்ல சிரித்ததும் சட்டென இயல்பானாள்.

‘நான் எதுக்கு இப்போ பயப்படணும்..? அதெல்லாம் தெரியாதவங்க.. அவங்க வந்து கேட்டதும் அவங்கள மறுத்தது ஓகே. இப்போ என்னக் கட்டிக்கப் போறவர் தானே கூப்பிடுறாரு.. இதுக்கு நான் எதுக்கு பயப்படனும்..’ எனத் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவள், கீழே விழுந்த தன்னுடைய பையை எடுத்துவிட்டு காரின் முன்னிருக்கையில் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

என்னதான் தன்னைத் திடப்படுத்திக் கொண்டாலும் கரங்களின் நடுக்கம் மட்டும் அவளுக்கு நின்ற பாடு இல்லை.

“அபர்ணா…. இனி நீ காலேஜுக்கு பஸ்ல போகக்கூடாது..” என கட்டளையாய் வந்தது அவனுடைய வார்த்தைகள்.

🔥🔥🔥🔥

அடுத்த எபிசோட்ல நம்ம அபர்ணாக்கு கல்யாணம் எல்லாரும் மொய்யோட வந்துருங்க 😁😜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 58

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!