“இனி நீ காலேஜுக்கு பஸ்ல போகக்கூடாது..” எனக் கட்டளையாக அவனுடைய வார்த்தைகள் வந்ததும் அதிர்ந்து போய் அவனைத் திரும்பிப் பார்த்தாள் அபர்ணா.
“ஏன்..?”
அவள் கேட்ட கேள்விக்கு அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவே இல்லை.
“நான் ஏன் இனி பஸ்ல போகக்கூடாது..” என மீண்டும் கேட்டாள் அவள்.
இப்போதும் அவனிடமிருந்து மௌனமே பதிலாகக் கிடைக்க அவளுக்கோ சட்டென முகம் வாடியது.
கீழே விழுந்த தன்னுடைய பையில் இருந்த தூசியைத் தட்டி அவள் மடியில் வைத்துக்கொள்ள சட்டென அதைப் பிடுங்கி காரின் கண்ணாடி வழியாக வெளியே எறிந்தான் அவன்.
“அது டேர்ட்டியா இருக்கு உனக்கு வேணாம்..”
அவளோ பதறிக் காரை விட்டு கீழே இறங்கியவள் அவன் தூக்கி எறிந்த பையை எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.
“இது எங்க அப்பா வாங்கிக் கொடுத்தது. இதை எப்படி நீங்க தூக்கி எறியலாம்..?” என கோபத்தோடு கேட்டவளுக்கு மூக்கு மேல் கோபம் வந்தது.
அவனோ அலட்சியமான சிறு தலையசைப்போடு திரும்பிக் கொள்ள,
“நான் பஸ்ஸிலேயே போறேன். என்னோட பஸ் வந்துருச்சு..” எனக் கூறியவள் வேகமாக வந்து நின்ற பேருந்தை நோக்கி நடந்து அதற்குள் ஏறி அமர்ந்து கொண்டாள்.
“இடியட், இவன் யார் எனக்கு ரூல்ஸ் போடறதுக்கு. இனி நான் பஸ்ல போகக்கூடாதாமே.. இப்போ என்ன பண்ணுவான் அந்த அரைக்கிழவன்.. போடா டேய்.. போடா.. போடா.. நான் பஸ்ல தான் போவேன்.. நல்லா சாய்ந்து உட்கார்ந்து இந்த ரோடெல்லாம் வேடிக்கை பாத்துட்டே போவேன். நீ யாருடா என்ன போகக் கூடாதுன்னு சொல்றதுக்கு. இப்ப உன்னால என்னடா பண்ண முடியும்..?” எனத் தனக்குத்தானே பேசியவாறு கோபத்தோடு அமர்ந்திருந்தவள், பேருந்து இன்னும் கிளம்பாது இருப்பதைப் பார்த்து என்னானது என எட்டிப் பார்த்தாள்.
அதே கணம் டிரைவரோ அவளை நோக்கி வந்தவர், “மேடம் உங்களுக்காக கீழ கார் வெயிட் பண்ணுது..” எனக் கூற,
“இல்ல.. பரவால்ல நான் பஸ்லயே வரேன்..” என்றாள் அவள்.
“நீங்க இருக்கும் மட்டும் இந்த பஸ் ஸ்டார்ட் ஆகாது மேடம்..” என ட்ரைவர் கூறியதும் தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு.
ஏனைய பயணிகள் சிலர் “டைம் ஆச்சு எப்போ பஸ்ஸ ஸ்டார்ட் பண்ணப் போறீங்க..” எனத் திட்டத் தொடங்க,
ட்ரைவரோ “பஸ் பிரேக் டவுன் ஆயிடுச்சு.. இப்போதைக்கு ஸ்டார்ட் பண்ண முடியாது..” எனக் கூற சட்டென எழுந்து கொண்டாள் அபர்ணா.
கடகடவென பேருந்தை விட்டு வெளியே இறங்கி வந்தவள் வேகமாகத் தன்னுடைய வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கி விட இப்போது மீண்டும் அவளின் அருகே வந்து நின்றது இன்னொரு கார்.
“ஆண்டவா இப்போ யார அனுப்பி வச்சிருக்க..” எனக் கேட்டவாறு அவள் பார்க்க அந்த காருக்குள் இருந்து இறங்கினான் சதீஷ்.
“சாருக்கு முக்கியமான மீட்டிங் இருந்ததுனால அவர் கிளம்பிட்டாரு. உங்களை ட்ராப் பண்ண சொல்லி என்கிட்ட சொன்னாரு..” என்றவாறு கீழே இறங்கி காரின் கதவை திறந்தவாறு நின்றவனைப் பார்த்து எரிச்சலாகிப் போனது அவளுக்கு.
‘தன்னுடைய வருங்கால மனைவி காரில் தான் செல்ல வேண்டும்’ என நினைப்பதெல்லாம் சரிதான்.
பேருந்தை நிறுத்தியவனுக்கு காத்திருந்து என்னை வீடு வரை கொண்டு சென்று விட முடியாதா..?
ஒருவேளை நிஜமாகவே வேலை தானோ..?
இதெல்லாம் திமிர் பிடித்தவனின் செயல்கள் போலல்லவா தெரிகின்றது.
நான் தான் அதிகமாக எதிர்பார்க்கின்றேனா..?
இல்லையே, என்னை விட்டிருந்தால், நான் நடந்தே வந்திருப்பேனே. காரில் போவதற்கு நான் என்ன ஆசையா பட்டேன். என்னை வலுக்கட்டாயமாக ஏற்றிவிட்டு 1008 கட்டளை விதித்தால் நான் என்ன அவனுடைய வீட்டு வேலைக்காரியா..?’
“மேடம் நீங்க வந்தீங்கன்னா உங்களை ட்ராப் பண்ணிடுவேன்..” என அவளுடைய சிந்தனையைக் குழப்பும் வகையில் பேசினான் சதீஷ்.
‘வேண்டாம் என்றாலும் விடமாட்டான் போல இருக்கிறதே..’ என எண்ணியவள் பெருமூச்சோடு காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அந்தக் கார் அவளை அழுங்காமல் குலுங்காமல் அவளுடைய வீடு வரை வந்து சேர்த்து விட்டது.
“தேங்க்ஸ் அண்ணா..” எனக் கூறிவிட்டு காரை விட்டு இறங்கியவள், எரிச்சலோடு உள்ளே நுழைய அவளுடைய வீட்டிற்குள் நிறைந்து போய் இருந்தது உறவினர்கள் கூட்டம்.
இதுவரை எட்டிக் கூட பார்க்காதவர்கள் எல்லாம் வீட்டில் நிறைந்து போயிருப்பதைக் கண்டு மீண்டும் எரிச்சலாகிப் போனாள் அவள்.
“இதோ நம்ம அபர்ணா குட்டி வந்துட்டா.. அடடே கார்ல வந்து இறங்கி இருக்காளே.. உனக்கு என்னடிமா நீ கொடுத்து வச்சவ..” என அவளுடைய பெரியம்மா கூறத் தொடங்க
“எதே அபர்ணா குட்டியா..? இத்தனை வருஷம் இந்த பக்கம் கூட நீங்க வரவே இல்லையே.. உங்க கண்ணுக்கு நான்தான் அபர்ணான்னு தெரியுதா..? பரவால்லையே அதிசயம் தான்..” என வார்த்தைகளாலேயே அவருக்குத் திருப்பிக் கொடுத்தவள், வேகமாகத் தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டாள்.
மாமி, சித்தி என ஒவ்வொருத்தராக அவளை வந்து பார்க்கத் தொடங்க அனைவருக்கும் சுள் சுள் எனத் தன்னுடைய வார்த்தைகளால் பதிலடி கொடுத்துவிட்டுப் படுக்கையில் குப்புற விழுந்தவளுக்கு ஏனோ வெறுமையாக இருந்தது.
போலி உறவுகள் என எண்ணிக் கொண்டவள் கசப்பாக புன்னகைத்தாள்.
பின்னே தங்களுக்கு வறுமை வந்ததும் எட்டிக் கூட பார்க்காதவர்கள் எல்லாம் இப்போது நல்ல இடத்தில் சம்பந்தம் வைத்ததும் வழிய வழிய சிரித்துப் பேசுவதும் அபர்ணாக் குட்டி எனக் கொஞ்சுவதும் சகிக்கவில்லை அவளுக்கு.
‘என்னை யாராவது இனி கண்ணே, பொண்ணே, மானேன்னு கொஞ்சட்டும் கழுவிக் கழுவி ஊத்தி விடுறேன்..’ எனக் கடுப்பாக எண்ணியவள் விழிகளை மூடிக்கொண்டாள்.
விழிகளை மூடிய கணமே அழுத்தமாகப் பார்க்கும் குருஷேத்திரனின் உருவம் தோன்றப் பதறி அடித்துப் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தவளுக்குத் தொண்டை உலர்ந்து போனது.
‘இன்று நடந்ததை அன்னையிடம் கூறி விடுவோமா என எண்ணியவள் வேண்டாம் சஞ்சலப்படுவார் என எண்ணி அதை அப்படியே தனக்குள் போட்டு மறைத்துக் கொண்டாள்.
விடிந்தால் கல்யாணம்.
இன்னும் அவளால் அதை நம்பத் தான் முடியவில்லை.
சற்று நேரத்தில் அவளுடைய அறைக்குள் வந்த பத்மாவோ,
“ஏன்டி வந்திருக்கிறவங்கக்கிட்ட போய் வாயக் கொடுக்கிற.. நீ ரொம்ப வாய் பேசுறியாம்ன்னு உங்க பெரியம்மா, சித்தி எல்லாம் புலம்பிக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் மரியாதை கொடுத்துப் பேசு அபர்ணா..” என்று அன்னையை முறைத்துப் பார்த்தவள்,
“இவ்வளவு நாள் எங்கம்மா போனாங்க இவங்க எல்லாம்..? நாம இருக்கோமா செத்துட்டோமான்னு கூட பாக்க வராதவங்க..” எனச் சீறிய மகளின் தலையை வருடி விட்டவர்.
“மத்தவங்க எப்படி வேணா இருந்துட்டு போகட்டும். நாம நல்லவங்களாவே இருப்போமே. அதால நமக்கு எந்தக் குறையும் வரப்போவதில்லை. உன்னோட வயசுக்கு பெரியவங்கள நீ மதிச்சு பேசுறது தான் நல்லது. யார் என்ன கேட்டாலும் அதற்கான பதிலை மரியாதையான முறையில் கொடுத்துட்டுத்தான் நீ அடுத்த வேலையே பாக்கணும்..” என அறிவுரை கூறிய அன்னையை அணைத்துக் கொண்டாள் அவள்.
“நாளைக்குக் கல்யாணம் முடிஞ்சதும் என்ன அந்த அரைக்ககிழவனோட வீட்டுக்கு அனுப்பி வச்சுருவீங்களா அம்மா..?” எனத் தவிப்போடுக் கேட்ட மகளை தானும் அணைத்துக் கொண்டார் அவர்.
“காலம் காலமாக இதுதானே முறை..” என்றவர் பெருமூச்சோடு,
“உன்னை அடிக்கடி நாங்க பாக்க வருவோம்… இப்போ நேரத்துக்கு தூங்கு, அப்போதான் காலையில முகம் நல்ல ஃப்ரஷ்ஷா இருக்கும்..” என்றவர் அதற்கு மேல் அங்கே நில்லாமல் வெளியே சென்று விட, இவளுக்கு நாளைய நாள் எப்படி இருக்கப் போகின்றது என்ற கேள்வியிலேயே நேரம் நகரத் தொடங்கியது.
******
காலை எழுந்தது மாத்திரம்தான் அவளுக்கு தன்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பது போல இருந்தது.
அதன் பின்னர் அவளுடைய ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு பெண்கள் வந்து வரிசையாக நின்றுவிட திகைத்துப் போனாள் அவள்.
அடுத்தடுத்த வேலைகள் யாவும் அசுர கதியில் நடந்தன.
அழகிய மாதுவான அவளை மென்மேலும் அழகாக்கிப் பதுமை போல ஆபரணங்களாலும், மலர்களாலும் அலங்கரித்து மணமேடையில் குருஷேத்திரனின் அருகே அமர வைக்க, சிவந்த கன்னங்களோடு தலை குனிந்த வண்ணம் அழகே உருவாக அமர்ந்திருந்தாள் அபர்ணா.
இருவரின் ஜோடிப் பொருத்தத்தையும் கண்டு அனைவரும் மெச்சத் தொடங்க அபர்ணாவின் பெற்றோருக்கு இருந்த சிறிய கவலையும் முற்றாக மறைந்து போனது.
சாதனாவின் திருமணத்தின்போது ஓடியாடி வேலை செய்ததைப் போல இந்த திருமணத்தில் அவர்களுக்கு எந்த வேலையும் இருக்கவில்லை.
மண்டபம் பார்ப்பது முதல் அலங்காரம் தொடக்கம் அனைத்து வேலைகளும் குருஷேத்திரனே பார்த்து முடித்திருக்கத் தயாராகி அவன் கூறிய மண்டபத்திற்கு வந்து இறங்கியது மட்டும்தான் அவர்களுடைய வேலையாக இருந்தது.
அங்கே எத்தனையோ பணக்காரர்கள் தொடக்கம் தொழிலதிபர்கள் என வந்து குவிந்திருக்க அனைவரையும் கவனிப்பதற்கு ஆட்களை நியமித்திருந்தான் குருஷேத்திரன்.
எத்தனையோ பெண்கள் தனக்கு அபர்ணாவின் இடம் கிடைக்கவில்லையே என ஏக்கத்தோடும், சில உறவினர்கள் இவளுக்கு இப்படி ஒரு வாழ்வா என்ற எரிச்சலோடும், சிலரின் நல்ல உள்ளத்தின் வாழ்த்துக்களுடன் இனிதாக ஆரம்பித்தது அவர்களுடைய திருமணம்.
ஆளைக் கொள்ளை அடிக்கும் அபார அழகு அவனைத் திருப்திப் படுத்தியது.
இது போதும் அவனுக்கு.
மங்கல வாத்தியங்கள் முழங்க, உறவினர்கள் பூ தூவ,
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” என உச்சாடனம் செய்த புரோகிதர் தலை அசைக்க அந்தப் பொன் தாலியை நம் நாயகியின் கழுத்தில் அணிவித்து அவளைத் தன்னுடைய வாழ்க்கையின் சரிபாதியாக மாற்றிக் கொண்டான் குருஷேத்திரன்.
உடல் சிலிர்க்க உள்ளம் தித்திக்கத் தன்னுடைய புதிய உறவை ஆவலாகவே ஏற்றுக்கொண்டு அந்தத் தாலியை வாங்கிக் கொண்டாள் பெண்ணவள்.
அடுத்தடுத்த சம்பிராதாயங்கள் யாவும் புரோகிதரின் கூற்றுப்படி முறையாக நடந்து முடிக்க அக்கினியை வலம் வந்து முடித்தவன் கர்வமாய்ப் புன்னகைத்தான்.
Kiliyai pidithu puli kayil kodukirargala?