வான்மதியின் பெற்றோர்கள் சிந்திய வார்த்தைகளை யாஷ்வினால் ஜீரணிக்க முடியவில்லை.
எப்படிப்பட்ட வார்த்தைகள் இவை..?
உயிரோடு உருவி எடுப்பதைப் போல அல்லவா வலிக்கின்றது.
அவர்கள் திட்டிக் கொண்டே போக ஒரு கட்டத்திற்கு மேல் அதை சகிக்க முடியாதவன்,
“போதும் நிறுத்துங்க.. என்ன பேசுறீங்கன்னு யோசிச்சுதான் பேசுறீங்களா..?” என சத்தமாக கத்திக் கேட்க,
வான்மதியின் தந்தைக்கு கோபம் இன்னும் பெருகியது.
அவரோ யாஷ்வினின் சட்டைக் காலரை இறுகப் பற்றிக் கொண்டவர்,
“நானும் பேசக்கூடாது பேசக்கூடாதுன்னு பார்த்தா என்னடா ரொம்ப ஓவரா துள்ற..? கோபப்படற அளவுக்கு நீ ஒன்னும் உத்தமன் கிடையாது.. உன்னை நல்லவன்னு நினைச்சுத்தானே என் பொண்ணுக்கு கட்டிக் கொடுத்தேன்.. அவளை கடைசி வரைக்கும் நல்லா பார்த்துப்பன்னு நினைச்சுத்தானே அவளை உன்ன நம்பி இங்க விட்டேன்… ஆனா நீ என்ன வேலை பார்த்து வச்சிருக்க..? அசிங்கமா இல்லையா..? உன் மனசு கொஞ்சம் கூட உறுத்தவே இல்லையா..? உன்ன தப்பு சொல்ல முடியாது.. நான் பெத்திருக்கேனே இந்த விளங்காதது இதுவே ஒழுக்கம் கெட்டு நடக்கும்போது உன்னத் திட்டி என்ன பயன் இருக்கப் போது..?” என தலையில் அடித்துக் கொண்டு அழுதார் அவர்.
அவருடைய அழுகையில் உண்மையான வேதனை தெரிவதைக் கண்டு நிதானம் கொண்டான் யாஷ்வின்.
முதலில் என்ன பிரச்சனை என்பதை அறிந்தால்தான் அதற்கான தீர்வைத் தேட முடியும் என உணர்ந்து கொண்டவன்,
“ஐயோ நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க.. ஆனா முதல்ல என்ன நடந்துச்சுன்னு இப்படி எல்லாம் பேசுறீங்கன்னு சொல்லிட்டுப் பேசுங்க.. எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு.. நான் எதுக்குங்க அசிங்கப்படணும்..? என்னோட மனசு எதுக்கு உறுத்தணும்..? நான்தான் எந்தத் தப்பும் பண்ணலையே..” என வேதனைக் குரலில் கூறினான் அவன்.
வான்மதியின் தந்தை விமலனோ “நடிக்காதடா..” என அவனுடைய கழுத்தைப் பற்றி இறுக்கியவர் அவனைத் தள்ளிவிட்டு தன்னுடைய பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து வான்மதி இறப்பிற்கு முன்னர் அனுப்பியிருந்த ரெக்கார்டிங்கை அங்கே ஒலிக்க விட்டார்.
அதை செய்வதற்குள் அவருடைய கரங்கள் நடுங்கி விட்டன.
“இது என் பொ.. பொண்ணு சூசைட் பண்றதுக்கு முன்னாடி எனக்கு கடைசியா அனுப்பின வாய்ஸ் மெசேஜ்.. இதைக் கேளு..” என்றவருக்கு விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அந்தக் குரல் குறுஞ்செய்தியில் வான்மதியின் அழுகைதான் முதலில் கேட்டது.
“அ.. அம்மா நான் ஏமாந்து போயிட்டேன்மா.. யாரை இத்தனை வருஷமா நம்பி யாருக்காக காத்திருந்தேனோ அவர்கிட்டயே ஏமாந்து போயிட்டேன்மா… என்னால அந்த வலியை தாங்கிக்கவே முடியல..
சாஹித்யாவும் அவரும் எனக்கு துரோகம் பண்ணிட்டாங்க.. அவங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்ததை என் க.. கண்ணாலயே பார்த்தேன்..
இப்படி என்னை ஏமாத்திட்டீங்களேன்னு அவர்கிட்ட நியாயம் கேட்டதுக்கு என்னை அட்ஜஸ்ட் பண்ணி வாழ சொல்றாரும்மா.. முடியாதுன்னா குழந்தையை கொடுத்துட்டு டிவோஸ் பண்ணலாம்னு சொல்றாரு..
என்னால இத தாங்கிக்கவே முடியல.. எவ்வளவு பெரிய துரோகம் இது.. இதுக்கு அப்புறம் நான் எதுக்கு உயிர் வாழணும்..? என்னால அந்த வலியைத் தாங்கிட்டு வாழவே முடியாது.. நான் போறேன்.. சாஹி அவ கூடவே வாழட்டும்.. குழந்தையை நீங்க நல்லா பாத்துக்கோங்க… நான் இந்த உலகத்தை விட்டே போறேன்… என்ன மன்னிச்சிடுங்க அம்மா.. எல்லா விஷயத்துலயும் நான் ரொம்ப பர்ஃபெக்ட்னு சொல்லுவீங்க.. ஆனா முதல்முறையா ஏமாந்து என் வாழ்க்கைல தோத்துட்டேன்..” என முடிந்திருந்தது அவளுடைய ரெக்கார்டிங்.
வான்மதியின் இறுதி குரல் பதிவைக் கேட்ட சாஹித்யாவுக்கும் யாஷ்வினுக்கும் மூளை மரத்துப் போனதைப் போல இருந்தது.
என்ன காரியம் இது..?
இப்படியும் ஒருத்தியால் செய்ய முடியுமா..?
தான் செய்த தவறை அப்படியே இன்னொருவரின் தவறாக புனைந்து கூற முடியுமா..?
நாக்கு கூசவில்லையா..?
அவள் தவறு செய்தபோது கூட ஒரு வார்த்தை நான் அவளைத் திட்டவே இல்லையே.
அக்கணம் உயிர் போகும் வலியை அனுபவித்த போதும் பொறுமையாகத்தானே நடந்து கொண்டேன்.
ஏன் என்னை இப்படி அசிங்கப்படுத்திவிட்டு சென்றுவிட்டாள்..?
வாழவே தொடங்காத சிறு பெண்ணையும் அல்லவா இழுத்து சகதியில் தள்ளிவிட்டாள்.
இதற்கு பெயர் வக்கிரம் அல்லவா..?
தன் மனைவியின் மீது இத்தனை நாட்களாக இருந்த உயர்ந்த பிம்பம் எல்லாம் அக்கணம் விழுந்து நொறுங்கியது.
அந்தக் குரல் பதிவைக் கேட்ட வான்மதியின் அன்னையோ மீண்டும் கதறி அழுதார்.
அவருக்கோ தன்மகள் துரோகத்தால் இறந்துவிட்டாளே என்ற வருத்தம்.
பாவம் அவரும் என்னதான் செய்வார்..?
பெற்ற வயிறு அல்லவா பற்றித்தானே எரியும்.
உண்மை தெரியாத அவருக்கோ அப்பாவி மகள் இவர்களின் துரோகத்தால் இறந்துவிட்டதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அதுவும் இரண்டு வயது பெண் குழந்தையைப் பற்றிக் கூட யோசிக்காது தூக்கில் தொங்கி உயிரை விட்டு இருக்கிறாள் என்றால் அவளுடைய மனம் எந்த அளவுக்கு காயம் பட்டிருக்க வேண்டும் என எண்ணியவருக்கு அதிர்ந்து நின்ற யாஷ்வினையும் சாஹித்யாவையும் கொல்ல வேண்டும் என்ற வெறியே எழுந்தது.
பிரச்சனை தெரிந்தவுடன் பதறி வந்தவர்களுக்கு இறந்த மகளின் உடல்தான் பதிலாகக் கிடைத்தது.
இப்போதே இந்த அயோக்கியனை போலீஸில் பிடித்துக் கொடுத்து தன் மகளின் இறப்புக்கு இவன் மட்டும்தான் காரணம் என கத்த வேண்டும் போல இருந்தது அவருக்கு.
ஆனால் தங்களுடைய இரண்டாவது மகளும் இதில் பாதிக்கப்பட்டு விட்டாளே.
இதை வெளியே கூறினால் அவளுடைய வாழ்க்கை முழுதாக அழிந்து விடுமே.
குடும்ப மானம் பற்றி அதிகமாக சிந்திப்பவர்கள் எப்படி இந்த விடயத்தை வெளியே சொல்வார்கள்..?
அதனால்தான் மகளின் இறுதிக் காரியம் முடியும் வரை அத்தனை வலியையும் வேதனையும் அடக்கிக் கொண்டிருந்தவர்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றிடலாம் என முயற்சிக்க சாஹித்யா வந்து பேசியதும் அவர்களால் கோபத்தை அடக்க முடியவில்லை.
இவளுக்கு என்ன குறை வைத்தோம்..?
படிப்பதற்கு இங்கே அனுப்பி வைத்தால் அக்காவின் கணவனை அல்லவா வளைத்துப் போட்டு விட்டாள்.
இவளை இப்படி வளர்க்கவில்லையே..! என் வளர்ப்பு எங்கே பிழைத்துப் போனது என வேதனையுடன் எண்ணியது அந்தத் தாயுள்ளம்.
சாஹித்யாவோ துடித்துப் போனாள். அவளால் அந்த பொய்க் குற்றச்சாட்டை கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியவில்லை.
எவ்வளவு பெரிய அசிங்கமான பொய் இது..?
எப்படி.. எப்படி இந்தப் பழியை என் மீது போட அக்கா துணிந்தாள்..?
இவ்வளவு காலமும் தன்னைப் போட்டியாக நினைத்து அடிக்கடி பெற்றவர்களுடன் இருக்கும்போது தன்னை மட்டம் தட்டுவதையெல்லாம் அவள் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை.
என்ன இருந்தாலும் வயதில் மூத்தவள் தன்னுடைய நன்மைக்காகத்தான் சொல்லுவாள் என்றுதானே அனைத்தையும் தாங்கிக் கொண்டாள்.
ஆனால் இப்படி ஒரு கொடூரமான பழியை என் தலையில் சுமத்தி விட்டுச் சென்று விட்டாளே பாவி.. எனக் கதறி அழுதது அவளுடைய பிஞ்சு மனம்.
வான்மதி செய்த தவறு யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என நினைத்தவள் மொத்த பழியையும் இவர்கள் மீது போட்டுவிட்டு நல்லவளாக போய் சேர்ந்து விட்டாள்.
தவறே செய்யாத இரு அப்பாவிகள்தான் அசிங்கப்பட்டு அந்த இடத்தில் நின்றனர்.
“இங்க பாருப்பா மகராசா.. நீ நல்லா இருப்ப.. இப்படியே போயிரு… இனி எங்க மூஞ்சிலேயே முழிச்சிடாத.. அடியே உனக்கு கொஞ்சமாவது வெக்க மானம் சூடு சொரணை இருந்தா இப்பவே இங்க இருந்து கிளம்பு..
அடக்க ஒடுக்கமா இருந்தீன்னா யாராவது ஒருத்தன்கிட்ட உண்மையை சொல்லி உன்னை ஒப்படைக்கிறோம்.. அவனோட ஒழுங்கா வாழ்றதுனா வாழு.. இல்லன்னா கடைசி வரைக்கும் பெத்த பாவத்துக்கு எங்க கூடவே இருந்து தொலை…” என்றவர் குழந்தையுடன் வெளியே நடக்கத் தொடங்க,
“ஒரு நிமிஷம்..” என அழுத்தமாகக் கூறினான் யாஷ்வின்.
“என்ன..? எந்த முகத்தை வச்சுட்டு எங்க கிட்ட பேச வர்ற..? உன் கூட பேசுறதுக்கு எங்களுக்கு துளி கூட இஷ்டம் இல்ல.. எங்கள பொறுத்த வரைக்கும் நீ ஒரு கொலைகாரன்..” என்றார் வான்மதியின் தந்தை.
“நா.. நாங்க தப்பு பண்ணல மாமா.. சா.. சாஹித்யா என்னோட பொண்ணு மாதிரி..” உயிர் துடிக்கும் வலியிலும் விளக்கம் கூறினான் அவன்.
“ச்சீ அசிங்கம் பிடிச்சவனே பொண்ணு மாதிரின்னு சொல்லி சொல்லித்தான் அவ கூட படுத்தியோ..? உன்ன நம்பி எப்படிடா இந்த பெண் குழந்தையை கொடுக்குறது..?” என்றதும் அவனுக்கோ தலை விறைத்து விட்டது.
வார்த்தைகளுக்கு கொல்லும் சக்தி இருக்கின்றதா என்ன..?
அக்கணமே மரணம் வந்து தன்னைத் தழுவிக் கொண்டதைப் போலத்தான் உணர்ந்தான் அந்த ஆண்மகன்.
“அப்பாஆஆஆஆ போதும்.. என்ன நடந்ததுன்னு தெரியாம மாமாவை தப்பா பேசாதீங்க..” அலறினாள் சாஹித்யா.
“அடியே கூறுகெட்டவளே.. இப்பவும் நீ இவனுக்காக சப்போர்ட் பண்றியா..? உன்னை இந்த இடத்திலேயே கொன்னு போட்டுட்டு எனக்கு பொண்ணுங்களே இல்லைன்னு போயிருவேன் பாத்துக்கோ..” என சீறினார் வான்மதியின் அன்னை.
உடைந்து போய் அழுதாள் அவள்.
“ராஜி நீ எதுக்கு இங்கேயே இவங்களுக்கு பதில் சொல்லிட்டு நிக்கிற..? நம்ம பேத்திய அழைச்சிட்டு நாம நம்ம ஊருக்கு போயிடலாம்.. இனி நமக்கு இங்கே எந்த வேலையும் இல்லை..” என்ற விமலனோ தன் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற,
“என் குழந்தைய கொடுத்துட்டுப் போங்க..” என அழுத்தமாகக் கூறினான் யாஷ்வின்.
“என்னது குழந்தைய கொடுக்கணுமா..? உன்கிட்ட எப்படி கொடுக்க சொல்ற..? இது என்னோட பேத்தி.. இவளை உன்கிட்ட நான் கொடுக்கவே போறதில்லை..” என்றவர் குழந்தையை தன்னோடு அணைத்துக்கொள்ள குழந்தையோ விழித்தெழுந்து அழத் தொடங்கி விட்டது.
வான்மதியின் அன்னையோ குழந்தையை வாங்கி சமாதானம் செய்ய குழந்தையின் அழுகைதான் கூடியதே தவிர சற்றும் குறையவில்லை.
“லிசின்… என்னோட குழந்தைய என்னை விட்டு பிரிக்கிறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.. அவளை என்கிட்ட கொடுங்க..” என்றவன் குழந்தையை வாங்குவதற்காக அவரை நெருங்க அவரோ பின்னால் நகர்ந்தார்.
குழந்தையின் அழுகையோ இன்னும் கூடியது.
அதை சமாளிக்க முடியாமல் திணறியவரைப் பார்த்தவன்,
“அவளை உங்களால அஞ்சு நிமிஷம் கூட சமாளிக்க முடியாது.. என் பொண்ண என்கிட்ட கொடுத்துடுங்க..” மீண்டும் அழுத்திக் கூறினான் அவன்.
அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அழுகையைத் தாங்க முடியாது அழுகையோடு எழுந்து வந்த சாஹித்யாவோ தன் அன்னையின் கரத்தில் இருந்த குழந்தையை வாங்கி தன் மார்போடு சாய்த்துக்கொள்ள பழக்கப்பட்ட சித்தியின் கைகளுக்குள் வந்ததும் அழுத குழந்தையோ அழுகையை நிறுத்தி சற்றே இதழ் பிரித்து சிரித்தது.
Sethum keduthutu poyirukke idhellam enna jenmamo? Vanmadhi unmai theriyurappo ivanga rendu perum enga mugatha kondu poi vachupanga? Waiting for next ud eagerly.👌👌👌👌👏👏👏👏🤩🤩🤩🤩😍😍😍🥰🥰🥰
Chee ponnaa ava
Sema moving😍
Super sis 💕