செந்தமிழ் 1
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!
என்று சித்ராவின் குரல் ஒலிக்க அதை கேட்டு கொண்டே சமைத்து கொண்டு இருந்தாள் செங்கனி. தீடீரென்று அந்த பாட்டின் சத்தம் நிற்கவும், அதை யார் நிறுத்தி இருப்பார்கள் என்று தெரிந்து இருந்ததால் ஆழந்த மூச்சு எடுத்து அவளை சமன் செய்து கொண்டாள்.
“இப்போ வானொலி ஆரம்பிக்க போகுது”, என்று அவள் நினைத்து கொண்டு இருக்கையிலே, “அது என்ன காலைலயே செந்தமிழ் நாடெனும் போதினிலே… ஏதாச்சு பிபிசி நியூஸ் இல்ல இங்கிலிஷ் பாட்டு போடலாம்ல”, என்று கத்தி கொண்டு இருந்தான் செங்கனியின் கணவன் தமிழினியன்.
இது ஒன்றும் புதிதாக நடக்கும் ஒன்று அல்ல! கடந்த பத்து ஆண்டுகளாக இந்த அலப்பறை தான்.
செங்கனிக்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன போது அவன் சாதாரண பதவியில் தான் இருந்தான். அப்போது இந்த பகட்டு வாழ்க்கை எல்லாம் கிடையாது.
ஆனால் திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளுக்கு பின் அவனுக்கு பதவி உயர்வோடு பண புழுக்கமும் அதிகரிக்க, அப்போது தான் பிரச்சனையும் ஆரம்பித்தது.
செங்கனியை வீட்டில் பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்கள். பிஏ, பிஎட் தமிழ் லிட்ரேச்சர் படித்து இருந்தாள். திருமணத்தின் போது அவனுக்கு அதெல்லாம் பெரிய விஷயமாக தெரியவில்லை. படித்து இருக்கிறாள் அவ்வளவே!
ஆனால் காலம் செல்ல செல்ல அவனுக்கு ஏனோ தமிழ் என்றாலே ஒரு வெறுப்பு. பகட்டு வாழ்க்கை அவனை தாய் மொழியின் மீதே வெறுப்பை உமிழ வைத்து இருந்தது.
“பிபிசி பார்த்து இப்போ யாரும் இங்க யுபிஎஸ்சி எக்ஸாம் கிளியர் பண்ண போறது இல்ல”, என்று அவள் சமையல்கட்டிற்குள் இருந்தே பதில் அளிக்க, “அறிவு வளரும்ல”, என்று அவன் சொல்லவும், “அப்போ இப்போ உங்களுக்கு அறிவு இல்லையா அப்பா?”, என்று கேட்டுக்கொண்டே செங்கனியிடம் வந்து நின்றான் அவர்களின் இரண்டாவது மகன் அச்யுத்.
அவளுக்கு அவன் கேட்ட கேள்வியில் சிரிப்பு வந்து விட்டது. இருந்தாலும் அடக்கி கொண்டாள். இல்லையென்றால் அவன் காலையிலேயே பேய் ஆட்டம் ஆடிவிடுவான் என்று தெரியுமே!
“என்ன டா உன்ன ட்ரெயின் பண்றளா உன் மம்மி?, என்று அவன் கேட்க, “அவங்களுக்கு வேற வேலை இல்லையா?”, என்று அவனும் மறு கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, அவனிற்கு டை கட்டி விட்டு இருந்தாள் செங்கனி.
“அப்பா”, என்று சொல்லிக்கொண்டே அச்யுத் வர, “எத்தனை தடவை சொல்லிருக்கேன் டாட்னு கூப்பிடணும்னு”, என்று கடிந்தான் தமிழினியன்.
அதே நேரம், “அப்பத்தா”, என்று கயல் சொல்லவும், அவனுக்கோ கோவம் வந்து விட்டது.
“உங்க ரெண்டு பேரையும் இன்டர்நேஷனல் ஸ்கூல்ல நல்லா இங்கிலிஷ் பேசுவீங்கன்னு படிக்க வச்சா நீங்க என்ன இப்படி லோக்கலா பேசுறீங்க?”, என்று சொல்லிக்கொண்டே கயலிடம் திரும்பியவன், “க்ரான்னினு கூப்பிடு”, என்று கட்டளை இட்டான்.
“அது என்ன டா கிரைண்டர் மிக்சின்னு… நீ அப்பத்தானு கூப்பிடு கண்ணு”, என்று பொன்னம்மாள் சொல்லவும், “அம்மா”, என்று பற்களை கடித்து கொண்டு அவரை பார்க்க, “நீங்க மட்டும் இப்போ என்ன மம்மினு கூப்பிட்டீங்களா அம்மானு தான கூப்பிட்டீங்க”, என்று கயல் கேட்க, அவளை ஒரு பார்வை பார்த்தவுடன் அவள் வாயை மூடி கொண்டாள்.
“அப்பா லூசு மாறி இப்படி இங்கிலிஷ்ல பேசுனு சொல்றத விட்டுட்டு நீங்க அம்மா கிட்ட இருந்து தமிழ் கத்துக்கோங்க”, என்று அச்யுத் சொன்னவுடன் அவனின் கோவம் வானளவு உயர்ந்தது.
“டேய் தமிழை வச்சிட்டு ஒன்னும் பண்ணா முடியாது”, என்று அவன் சொல்லவும், “யாரு சொன்னது அப்படினு..”, என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தாள் செங்கனி.
“எத்தனை வெளிநாட்டு மக்கள் நம்ப மொழியை கத்துக்க அவங்க நாடு விட்டு இங்க வராங்கனு உங்களுக்கு தெரியுமா? இந்த உலகத்துலயே சிறந்த பண்பாடு, கலாச்சாரம் நம்ப மொழியில் உள்ள நூல்கள்ல எழுதி இருக்காங்க… இவ்ளோ ஏன் அகம் புறம்னு நூல்கள் எழுதி, அந்த காலத்துலயே கலப்பு திருமணத்துல இருந்து சாதியற்ற சமுதாயம் வரை எல்லாவற்றையும் பேசிய மொழி நம்ப செந்தமிழ் தான்”, என்று அவள் சொல்ல, “நீ கூட தான் தமிழ் லிட்ரேச்சர் படிச்சிருக்க? வீட்ல வெட்டியா தான இருக்க? இதுவே வேற ஏதாவது படிச்சி இருந்தா வேலைக்கு போயிருக்கலாம் இப்படி வெட்டியா வீட்ல தண்ட சோறு சாப்டுட்டு இருக்க வேண்டாம்”, என்று சொன்னான்.
அவன் அதை சொல்லிமுடிக்கும் போதே, “டேய் நாக்குல இப்படி நரம்பு இல்லாம பேசாத டா… கனி வேலைக்கு தானே போய்ட்டு இருந்தா கல்யாணம் ஆகும் போது… நீ தானே வீட்ல எனக்கு ஒத்தாசையா இருக்கணும்னு அந்த பிள்ளையை வேலைல இருந்து நிக்க சொன்ன… இப்போ கூட அவ நினைச்சா டீச்சர் வேலைக்கு போலாம்”, என்று மருமகளுக்காக பேசினார் பொன்னம்மாள்.
அவர் மகனிடம் இந்த பிரச்சனைகளை பற்றி பேசுவதை தவிர்க்க தான் பார்ப்பார். ஏனெனில் மகனிடம் பேசுவது செவிடன் காதில் சங்கூதுவது போல என்று அவருக்கு தெரியும், ஆதலால் அவர் இதில் மூக்கு நுழைப்பதை கிடையாது.
ஆனால் இன்று இனியன் பேசியது அவருக்கே அதிகப்படியாக தோன்ற அவள் சத்தம் இட்டு விட்டார்.
பொன்னம்மாள் மிகவும் வித்யாசமான மாமியார். அவருக்கு செங்கனியை மிகவும் பிடித்திருக்கவே அவளை மகனிற்கு கட்டி கொடுக்க முடிவு எடுத்தார்.
செங்கனியின் குடும்பம் மிக சாதாரணமான குடும்பம் தான். அவளின் தந்தை சிறுவயதிலேயே இயற்கை எய்திட, அவளின் அம்மாவின் அறைவனைப்பில் வறுமை என்னும் கொடுமையில் வளர்ந்தாள். ஆனால் படிப்பில் படு சுட்டி. தமிழின் மீது சிறுவயதில் இருந்தே ஆர்வம் அதிகம் என்பதால் அதையே தேர்ந்து எடுத்து படித்தாள்.
பொன்னம்மாளுக்கு அவளை பிடித்ததற்கு காரணமே அவளின் தைரியம் தான். அவள் எங்கும் அவளின் எண்ணங்களை பிரதிபலிக்க தயங்கியது இல்லை.
இனியன் பேசுவதற்கு நிச்சயம் பதில் அடி கொடுத்து விடுவாள்.
“அப்பத்தா நீங்க அப்பாவுக்கு இனியன்னு பேரு வச்சத்துக்கு சனியன்னு வச்சிருக்கலாம்”, என்று கயல் சொல்லவும், “ஆமா கண்ணு அப்போ தெரியாம உன் தாத்தா பேச்சை கேட்டு வச்சிட்டேன்”, என்று அவரும் பேத்தியுடன் சேர்ந்து அவரின் மகனை தான் வறுத்து எடுத்து கொண்டிருந்தார்.
“இந்த வீட்ல ஒருத்தராச்சு என் பேச்ச கேட்குறீங்களா?”, என்று அவன் கத்துவதை கூட யாரும் சட்டை செய்ய வில்லை.
“அப்பா கையெழுத்து போடுங்க”, என்று அச்யுத் நிற்க, “அத கூட சைன்னு சொல்ல மாட்டியா டா?”, என்று அவன் முகத்தை தூக்கி வைத்து கொண்டே கையொப்பம் இட்டான்.
“உங்களுக்கு நான் பேசறது புரியுது தான? அப்பறோம் எதுக்கு சைன்னு சொல்லணும்”, என்று அவனிடம் இருந்த அவனின் மதிப்பெண் சான்றிதழை வாங்கி கொண்டு உள்ளே சென்று விட்டான்.
“அம்மா நான் தமிழ் மன்றத்தோட செயலாளரா ஆகிருக்கேன்”, என்று கயல் கத்த, “ரொம்ப நல்லது கண்ணு”, என்று பொன்னம்மாள் பின்னி முடிக்க, “நல்ல பொறுப்பா இருக்கனும்”, என்று கனி சொல்லவும், “ஏன் அந்த மன்றத்துல சேர்ந்து இருக்க?”, என்று கோவமாக கேட்டான் இனியன்.
“அப்பா எனக்கு பிடிச்சதை நான் பண்றேன். உங்களுக்கு என்ன பிரச்சனை?”, என்று அவளும் அவளின் தந்தையின் முன் நிற்க, “எல்லாம் இவள சொல்லணும்… உங்க எல்லாரையும் அவ பக்கம் இழுத்து வச்சிருக்கா”, என்று அவன் செங்கனியை பார்த்து முறைத்தான்.
“ஆமா டா அவ பக்கம் தான் இழுத்து வச்சிருக்கா… இப்போ கையெழுத்து போட்டியே உன் மகனோட எல்லா படத்துலயும் மதிப்பெண் எவ்வளோ எடுத்திருக்கான் சொல்லு பார்ப்போம்?”, என்று அவர் கேட்கவும், திருதிருவென விழித்தான்.
“உனக்கு பணம் ஸ்டேட்டஸ் இது பின்னாடி ஓடவே நேரம் சரியா இருக்கு பா… வீட்டு நியாபகம்னு ஒன்னு இருந்தா தான? பசங்கள பெரிய தாஸ் புசுனு இங்கிலிஷ் பேசுற பள்ளிக்கூடத்துல சேர்த்தா மட்டும் போதாது. அவங்களுக்கு என்ன வேணும் வேணாம்… எப்படி படிக்கிறாங்கனு எல்லாம் யாரு பார்ப்பா? வெறும் பணம் கொடுத்தா மட்டும் போதாது கொஞ்சமாச்சு அக்கறை இருக்கனும்”, என்று அவரும் இன்று மகனை பார்த்து பேசினார்.
“எனக்கு அக்கறை இல்லனு சொல்றிங்களா அப்போ?”, என்று அவன் கேட்கவும், கனிக்கு பிரச்சனை வெடிக்க வேண்டாம் என்று தோன்றியது.
“அத்தை நீங்க விடுங்க…”, என்று அவரிடம் சொன்னவள், அப்படியே இனியன் பக்கம் திரும்பி, “மீட்டிங்ன்னு சொன்னிங்க டைம் ஆகிருச்சு ஆபீஸ் கிளம்புங்க”, என்று அவள் சொல்லவும், முகத்தை திருப்பி கொண்டு அவர்களின் அறையில் நுழைந்து கொண்டான்.
“நீ எப்படி தான் இவன் கூட வாழறியோ மா? வேற பொண்ணா இருந்தா இந்நேரம் இவன தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டே இருந்திருப்பா”, என்று அவர் மருமகளிடம் சொல்ல, “அவர் ஒன்னும் கல்யாணம் ஆன புதுசுல இப்படி இல்லையே அத்தை… உங்க மகன் நல்லவரு தான்… ஏன் இப்படி திடிர்னு பணம்… உயர்ந்த தரம் மக்கள்னுலாம் பாகுபாடு பாக்குறாரோனு தான் தெரியல”, என்று சொல்லிவிட்டு அவள் சமைக்க சென்று விட்டாள்.
அவள் சமையல் செய்து கொண்டிருக்கும் போது அங்கே வந்த அவர்களின் மகள், “அம்மா ஏன் மா அப்பா மட்டும் இப்படி இருக்காரு?”, என்று அவள் கேட்க, “அப்பா மட்டும் இல்ல, உன் அப்பா மாறி நிறைய பேறு இப்போல்லாம் அப்படி தான் இருக்காங்க… பசங்களுக்கு என்ன பிடிக்குது பிடிக்கலைனுலாம் அவங்களுக்கு கவலை இல்ல… அவங்களோட மானம், மரியாதை, கௌரவம்னு சொல்லி பசங்க மேல நிறைய திணிக்கிறாங்க…இதனாலேயே இந்த காலத்து பசங்க சின்ன வயசுலயே மனஉளைச்சலுக்கு ஆளாகிறாங்க”, என்று சொல்லிக்கொண்டே கயலின் கையில் இட்லி தட்டை கொடுத்தாள்.
“என் பிரென்ட் கூட சொன்னா மா… அவளுக்கு பியானோ கிளாஸ் பிடிக்கவே இல்லயாம்… வீணை கத்துக்குறேனு சொன்னா அவ அப்பா விடவே மாட்டேங்குறாராம்”, என்று அவள் சொல்லவும், “இப்போலாம் நம்ப உணவை யாரும் சாப்பிடறது இல்ல, பாரம்பரியத்தை மதிக்கறது இல்ல… இன்னும் கொஞ்ச நாள் போனா தமிழை யாராச்சு படிப்பாங்களானு கூட தெரியல”, என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அங்கு வந்தான் அச்யுத்.
“அம்மா நான் உன்னை மாதிரி தான் மா தமிழ் எடுத்து படிப்பேன்.. நான் தமிழ் பேராசிரியர் ஆக போறேன் பாருங்க”, என்று பெரிய மனிதனை போல் அவன் பேச, “பேராசிரியர் ஆகுறது இருக்கட்டும் மொதல்ல பேனால எழுத பழகு டா”, என்று அவனின் தலையில் கொட்டினாள் கயல்.
“பாரு மா.. அக்காவ”, என்று அவன் தாயிடம் தஞ்சம் புக, “அவன ரொம்ப சீண்டாத டி”, என்று அவர் சொல்லவும், அவளும் சம்மதமாக தலை அசைத்தாள்.
இருவரையும் பள்ளிக்கூட வண்டியில் அனுப்பி விட்டு அவளின் அறைக்குள் வர, அங்கு அவளிற்காக காத்து கொண்டு இருந்தான் இனியன்.
“இன்னைக்கு என்ன பஞ்சாயத்தோ தெரியலையே”, என்று நினைத்து கொண்டு அவள் இருக்கையில், அவளின் முன் வந்து நின்றான்.
செம்ம….!!
எனக்கும் பிடிச்ச பாடம் தமிழ் தான்.
இந்த தமிழ் கான்செப்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா…
சீக்கிரம் அடுத்த எபிசோட்ல போடுங்க.
முதல் அத்தியாயம் அமர்க்களம்.
தமிழை எதிர்க்கிற கதாநாயகன்….தமிழை நேசிக்கும் கதை நாயகி அருமையான பொருத்தம்👌🏻👌🏻👌🏻👌🏻பிள்ளைச் செல்வங்களும் மாமியாரும் கூட பெண்ணவளுக்குத் துணை👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻அருமையான ஆரம்பம்🤩🤩🤩🤩🤩மாற்றம் எப்போது ஆரம்பித்தது தமிழுக்கு….மாற்றம் எப்போது வருமோ🤗🤗🤗🤗