அதற்கு மேல் அவனுக்கும் தொடர்வதில் தயக்கம் இருக்க, மீண்டும் வெளிப்பட்ட கண்ணீர் அவனைத் தடை செய்தது.
மெல்ல விலகி, “ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிறியா ருதி?” என வினவ, அவளோ இன்னும் உணர்வுகள் அடங்காமல், முத்தமிட்ட கணங்களின் கனம் நீங்காமல் பெருமூச்சு எடுத்துக் கொண்டிருந்தாள்.
அவனோ அப்படி ஒரு சம்பவமே நிகழாதது போல, வெகு இயல்பாக இருக்க, ‘இவருக்கு கிஸ் பண்ணா கூட எதுவுமே பீல் ஆகாதோ!’ என யோசித்தபடி அறைக்குள் சென்றாள்.
ஷக்தி மகிழவன், உடனடியாக அவளது பிரச்சினை பற்றி கூகிள் செய்து இன்னும் அதிகமாகத் தெரிந்து கொண்டான்.
சில நேரங்களில் நினைத்திருக்கிறான். ‘எப்படி இவளால் மற்றவர்களிடம் இத்தனை சகஜமாக, சிரித்த முகம் மாறாமல் பேச இயல்கிறது’ என்று. மனத்தினுள் இத்தனைப் புழுங்கிக் கொண்டு தான் ஒவ்வொரு முறையும் சிரித்திருக்கிறாள் எனப் புரிய, உள்ளத்தில் முள்ளாய் குத்தியது வேதனை.
அது அவனது முகத்திலும் பிரதிபலித்தது.
உடலை உறுத்திக் கொண்டிருந்த மேக்சியைக் கழற்றி எறிந்து விட்டு, காட்டன் இரவு உடையை அணிந்து கொண்டவள் தயக்கத்துடனே மீண்டும் ஹாலுக்கு வந்தாள்.
ஷக்தி மகிழவனின் உணர்விழந்த முகம், எப்போதும் விட இப்போது அதிகமாய் தாக்கியது.
அவனுடன் இருக்கும் வரையில், ‘தன்னை விட மாட்டான்!’ என நம்பினாலும், ஓர் நொடி விலகினாலும் ‘விட்டு விடுவானோ?’ என்ற அச்சம் எழுவதைத் தடுக்க இயலவில்லை.
அவளைக் கண்டதும் ‘வா…’ என்பது போலக் கண்ணை மூடித் திறந்தான்.
அதில் அவனருகில் வந்து அமர்ந்து கொண்டவள், “என் அப்பா என்னைப் பத்தி எதுவுமே சொல்லலையா மகிழ்… உங்களுக்கு முன்னாடியே தெரியாதா?” எனக் கேட்டாள் சங்கடமாக.
அவன் மறுப்பாகத் தலையசைத்து விட்டு, “ஒருவேளை, நார்மலான பெர்சனை மேரேஜ் பண்ணிருந்தா, உன் மனசுல இருந்த கஷ்டத்தை முன்னாடியே தெரிஞ்சுருப்பாங்கள்ல… நிறைய முறை நீ எனக்குப் புரிய வைக்க முயற்சி பண்ணிருக்க. ஆனா என்னால புரிஞ்சுக்க முடியல. உன்னை தெரிஞ்சே கண்டிப்பா ஹர்ட் ஆக விட மாட்டேன். ஒருவேளை தெரியாம ஹர்ட் பண்ணிடுவேனோன்னு இருக்கு ருதிடா… பர்ஸ்ட் டைம், உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கிக் குடுத்தப்பவே நீ டிஸ்டர்ப் ஆன தான? உனக்கு சர்ப்ரைசஸ் கம்ஃபர்ட்டா இருக்காதா?” எனத் தனக்கே வலிப்பது போல ஆழ்ந்த வருத்தம் அவனிடம்.
“உங்க இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, என் அப்பா என்னைப் பத்திச் சொல்லாம மேரேஜ் பண்ணதுக்கு, என்னைத் தான் ப்ளேம் பண்ணிருப்பாங்க மகிழ். உங்களுக்குக் கோபம் வரலையா? என்னைப் போய் உங்களுக்கு மேரேஜ் பண்ணி வச்சுட்டாங்கன்னு…” எனக் கமறிய குரலில் கேட்க,
“என்னை விட உங்களுக்கு ஒன்னும் அவ்ளோ பெரிய பிரச்சினை இல்ல… நார்மலா தான இருக்கீங்க. என்னைப் புரிஞ்சுக்கணும்னு தான் நீங்க மெனக்கெட்டு ஸ்ட்ரெஸ் பண்ணிக்கிறீங்க. இல்லன்னா, நீங்க, உங்க வேலைன்னு நிம்மதியா தான இருந்தீங்க.” என மூக்கை உறிஞ்சினாள்.
“நான், என் வேலைன்னு இருக்குறவரை என் பீலிங்ஸ் எனக்குள்ளவே செத்துரும் ருதி. நீ வந்தப்பறம், எனக்குள்ள வர்ற பீலிங்ஸை உங்கிட்ட பீல் பண்றேன். என் பிம்பமா உன்னைப் பார்க்குறேன். எனக்குள்ள இருந்த அழுத்தமெல்லாம் நீ வந்ததுக்கு அப்புறம், என்னை அழுத்தல. இந்த ஹார்ட் எதுக்காவது எரிஞ்சிட்டே இருக்கும். உன்னைப் பார்த்ததுக்கு அப்புறமா அது எரியல…” நிதானமாகத் தனது காதலைப் பகிர்ந்தவனை விழியசைக்காது ஏறிட்டாள் பிரகிருதி.
காதலை வெளிப்படுத்தத் தேவையான வார்த்தைகள் எதையும் அவன் உபயோகிக்கவில்லை. டீஃபால்ட்டாக, அவனால் காதலைப் பகிர இயலாது தான், ஆனால் உணர்த்துகிறானே… அவள் உணர்கிறாளே! தன்னைப் பற்றித் தெரிந்தும், அவன்முன் வித்தியாசமாக நடந்து கொண்டும், அவன் ஆசையாக வாங்கிக் கொடுத்த விலையுயர்ந்த நகைகளைத் தூக்கி எறிந்தும், தன் மீது அவனுக்கு நேசம் இருக்கிறதென்றால்… அதீத மகிழ்வு அவளுக்கும் நெஞ்சை அடைக்கச் செய்தது.
ஆகினும், அவளுக்குத் தேவையானது வாய் வார்த்தையான உறுதி தானே. அவனுக்கு வார்த்தையின் வடிவம் கடினமென்றாலும், செய்கையில் உணர்த்துகிறான். அது அவளுக்குப் பற்றவில்லை. உள்ளூர ஒரு நம்பிக்கையின்மை உழன்று கொண்டே இருக்கிறது. அதனை அழகாய் மறைத்துக் கொண்டவள், பேச்சற்று அமர்ந்திருந்தாள்.
‘தான் தனது அன்பைக் கூறியும், அவள் அமைதி காக்கிறாளே! தன்னைப் போல அவளுக்கு அத்தனை ஆழமாய் இந்த அன்பு துளிர் விடவில்லையோ’ என்ற வருத்தம் மேலோங்கிட, ஷக்தி மகிழவன் அந்த எண்ணத்தைத் தனக்குள் புதைத்துக் கொண்டு, “உனக்கு சர்ப்ரைசஸ் கம்ஃபர்ட் இல்லையான்னு கேட்டேனே?” என மீண்டும் பேச்சுக் கொடுத்தான்.
“ம்ம்… திடீர்னு சர்ப்ரைஸ் பண்ணுனா கொலாப்ஸ் ஆகிடுவேன். எனக்கு ரியாக்ட் பண்ண டைம் வேணும். பிரிப்பேர் பண்ணனும். நீங்க சர்ப்ரைஸ் பண்ணுன அன்னைக்கு ஆபிஸ்ல எல்லார்ட்டயும் இன்ட்ராக்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை. அதுலயே டோட்டலா ட்ரெயின் ஆகிருந்தேன். இன்னும் ஸ்ட்ரக் ஆகுற மாதிரி சர்ப்ரைஸும், ஷைனிங் கிப்ட்டும் கொடுத்ததும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு மகிழ். சாரி…” என்றாள் முகம் சுருக்கி.
“நான் வேணும்னு செய்யல ருதிடா” அத்தனைக் குற்ற உணர்வு அவன் குரலில்.
சில நிமிடங்கள் கழிய, ஷக்தி மகிழவன் நிமிர்ந்து அமர்ந்து பற்றி இருந்த பாவையின் கரத்தை இன்னும் இறுக்கிக் கொண்டான்.
“சரி ஓகே… இப்பத்தான் நம்மளைப் பத்தி நமக்கே தெரிஞ்சுருச்சுல. இனி நமக்குள்ள எந்த மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கும் வேணாம் ருதிடா. உன் ப்ராப்ளமை நான் அனலைஸ் பண்ணிக்கிறேன். என் ப்ராப்ளம நீ அனலைஸ் பண்ணிக்க… உன் வீட்ல என்னை நீ கம்ஃபர்ட்டா இருக்க வச்ச மாதிரி, நானும் உன்னை முடிஞ்ச அளவு கம்ஃபர்ட்டா வச்சுப்பேன். பட் நீ மனசுக்குள்ளவே எதையும் வச்சுக்கக் கூடாது. என்கிட்ட வெளிப்படையா சொல்லிட்டா, உன்னைப் புரிஞ்சுக்க ஈஸியா இருக்கும். அட்லீஸ்ட், என்கிட்ட மட்டுமாவது உன் ஆக்டிங் மாஸ்க்கை ரிமூவ் பண்ணிக்கோயேன்.” அவளுடன் எந்தவித மனத்தாங்கலும் இன்றி உறவாடிட மனம் அலைபாய்ந்தது அவனுக்கு.
அவனது புரிதலில் உருகிப் போனவள், இறுதி வரியில் பதறினாள்.
“வேணாம் மகிழ்! என் அம்மா கூட நான் நடிக்கலைன்னா என்னைத் திட்டுவாங்க. எனக்கு அப்படி இருக்க முடியாது உங்ககிட்ட. ப்ளீஸ் மகிழ்… நான் எப்பவும் போல இருந்துக்குறேன் உங்ககிட்ட…” என மறுத்ததில், மெலிதாய் வருத்தம் எழுந்தாலும், தன் மீது அவளுக்கு முழு நம்பிக்கை வரும் வரைக்கும் காத்திருக்கத் தயாரானான் ஆடவன்.
“உங்க ரீடிங் டைம் வந்துடுச்சு மகிழ்…” மணிக்கூண்டைப் பார்த்தபடி அவள் கூற, சிறு முறுவல் அவனிடம்.
“இப்ப புக் படிக்கத் தோணல, உன்னைப் படிக்கத் தான் தோணுது.” ஆழப்பார்வை அதிலே பல அர்த்தங்கள்.
பேந்தப் பேந்த விழித்த பிரகிருதி, “என்னது?” எனத் திகைக்க, “உன்னைப் படிக்கணும் ருதிடா!” மீண்டும் அதையே உரைத்தான் அவன்.
“என்னை… என்னை எப்படிப் படிக்க முடியும் மகிழ்?” அவனைப் பார்க்க இயலாமல் அவளது கண்கள் திண்டாட, “கன்னம் பிடிச்சுக்கவா?” என்றான் வினவலாக.
“ம்ம்…” மெல்லத் தலையாட்டினாள்.
“லிப்ல கிஸ் பண்ணட்டா?”
“இப்பவா?”
“ம்ம், டைம் வேணுமா?”
“குடுக்குறீங்களா…”
“கிஸ்ஸா?” அவளைத் தவிக்க விடத் தோன்றியது அவனுக்கு. அதில் அவனை மீறியும், அவனே இதுவரை யாரிடமும் செய்யாத வம்பு வெளிப்பட,
“ஐயோ இல்ல, டைம் கேட்டேன்!” சற்று ஆடினாலும் அவனது மூக்கைத் தனது மூக்கு நுனி உரசிவிடும் அபாயம் இருக்க, ஆடாமல் அதிர்ந்தாள்.
அதில் குழம்பிய பிரகிருதி, “இதுக்கு எப்படி ப்ரிப்பேர் ஆகன்னு தெரியலையே எனக்கும்.” என்றாள் உதடு குவித்து.
நேராய் ஷக்தியின் லேசர் பார்வை, வரிகள் கொண்ட ஆரஞ்சுச் சுளை இதழ்களை ஆழமாய்ப் பார்த்தது.
“எமோஷனலா என்னால சொல்ல முடியாது. பட் லாஜிக்கலா சொல்லட்டா ருதிடா?”
“ம்ம்!” தலையை உருட்டினாள் மெல்ல.
“முதல்ல டீப் ப்ரீத் எடுக்கணும். தென், என் லிப்ஸ்ஸும் உன் லிப்ஸும் டச் ஆகும் போது, உள்ளுக்குள்ள ஒரு ஒரு… ஒரு…” சட்டென மோன நிலை அறுபட்டது போலப் புருவம் சுருக்கினான்.
அவனைப் புரிந்தவள் போல மெல்லச் சிரித்தவள், “உள்ளுக்குள்ள ஒரு மின்சாரம் வரணுமாமே, புக்ஸ்ல படிச்சு இருக்கேன்.” என்றாள் வெட்கம் மின்ன.
அதில் அவனது குழப்பம் வெகுதூரம் செல்ல, “வேற என்ன படிச்சு இருக்கீங்களாம் ருதி மேடம்?” என்றவனின் குரலில் மீண்டுமொரு குறும்பு.
“வேற எதுவும் படிக்கல?” பதற்றமாகத் தலையாட்டியதில், அத்தனை நேரம் கட்டிக் காத்த மூக்கு நுனியின் நாணம் விடைபெற்று அவன் மூக்கோடு உரசிச் சென்றது.
சட்டென ஏற்பட்ட தீண்டலதில் மெல்லிய நடுக்கமும் உருவாக, அவன் மேலும் பேசும் முன் “இன்னைக்கு இது போதுமே மகிழ்…” என்றாள் மிரட்சியாக.
அவனிடம் ஏமாற்றமெல்லாம் இல்லை. “ஓகே… அப்போ லிப்ஸ் டச்சிங்க்கு மட்டும் இப்போ உன்னை ப்ரிப்பேர் பண்ணிருக்கேன், எப்போ பண்ணலாம்?” ஷக்தி கேட்டதும் வெட்கம் மீதூற, “நாளைக்கு?” என மெலிதாய் கூறியதில், “ஓகே ருதி, ஐ ஆம் வெயிட்டிங்!” என்றான் கண் சிமிட்டி.
இருவரின் உள்ளமும் அவர்களது குறைகளை மறந்து, தனது இணையுடன் பின்னிப் பிணைய முற்பட்டது.
அந்த இதத்திலேயே இருவருமே உறங்கி விட, மறுநாள் காலையிலேயே லேகா பிரகிருதிக்கு அழைத்திருந்தார்.
அந்த அழைப்பைப் பார்த்ததும் தான், திருமணத்திற்குச் செல்லச் சொன்னதே அவளுக்கு நினைவு வந்தது.
“அய்யய்யோ!” எனத் தலையில் கை வைத்தவள், வேகமாக அழைப்பை ஏற்க, எதிர்புறம் லேகாவின் கோப மூச்சை உணர்ந்தாள்.
“ஏன், நேத்துப் பாதில திரும்பி வந்த?” எடுத்ததும் காட்டத்துடனே ஆரம்பித்தார்.
அக்கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை. “அது… வந்து அத்தை…” எனத் திக்கத் தொடங்கிட, குளித்து முடித்துத் தலையைத் துவட்டியபடி வந்தான் ஷக்தி மகிழவன்.
தன்னவளின் திணறலைக் கண்டு புருவம் இடுங்க, “யார் போன்ல?” எனக் கேட்க, “அத்தை!” எனும்போதே விழி கலங்கி இருந்தது.
“ஓ, ஓகே!” என நகரப் போனவன், அவளது கலங்கிய விழி கண்டு, அவருடன் பேசுவதில் தற்போது உடன்பாடில்லை எனப் புரிந்து கொண்டவன், உடனடியாக அலைபேசியைப் பிடுங்கி விட்டான்.
லேகாவோ, “அதெப்படி நான் சொல்லியும் நீ பாதில வரலாம். ஷக்தியே அமைதியா தான் இருந்துருக்கான். இன்னைக்குக் கல்யாணத்துக்கும் போகல.” என்று திட்டத் தொடங்க, “அம்மா…” என்ற மகனின் கம்பீரக் குரலில் அவரது பேச்சுத் தடைப்பட்டது.
“அவள் போனை உங்கிட்டக் குடுத்துட்டாளா?” லேகாவிற்குக் கோபம் பீறிட,
“நான்தான் வாங்குனேன், என்ன பிரச்சினை உங்களுக்கு?” என்றான் கடுமையுடன்.
“நீ போனை அவள்கிட்டக் குடு ஷக்தி…” லேகா உத்தரவிட்டும் அவன் கொடுக்கவில்லை.
“இன்னைக்குக் கல்யாணத்துக்குப் போக முடியாது. எங்களுக்கு வேற பிளான் இருக்கு. இங்க நாங்க வந்தது ஹனிமூன்க்கு, கண்டவங்க வீட்டுக்குப் போய் அசிங்கப்பட இல்ல. அவ்ளோ அவசியம்னா நீங்க வந்து மேரேஜ் அட்டென்ட் பண்ணுங்க. டோன்ட் டிஸ்டர்ப் அஸ்!” என்று கண்டிப்பும், அழுத்தமும் கலந்து கூறிவிட்டு அழைப்பைத் துண்டிக்க லேகா அதிர்ந்தே போனார்.
தனது மகன் தொடர்ந்து இத்தனை வாசகங்கள் பேசியதே அவருக்கு அதிசயம் தான். அதிலும், தனது கட்டளையை மீறி அவளுக்காகத் தன்னை மறுத்துப் பேசியதில் உள்ளுக்குள் கோபம் கனன்றது.
அவரது மகன் எப்போதோ ருதியின் மகிழாக மாறி விட்டதை, விரைவில் உணரும் காலம் வருமென்று அறியாதவராக, “ரெண்டு பேரும் சென்னை வரட்டும், பார்த்துக்குறேன்.” என்று பிரகாசத்திடம் பொருமினார்.
“தேங்க்ஸ் மகிழ்…” தன்னைப் புரிந்து தாயிடமே கண்டிப்பாய் பேசியதில் அவளது இதழில் ஒரு மென்முறுவல்.
அச்சிறு நகைக்காகவே இவ்வுலகத்தையே எதிர்க்கும் துணிவு உள்ளத்தில் உருவாக, “இங்க நீ இருந்துட்டு என்னமோ செய்ற!” என்றான் தனது இதயத்தைச் சுட்டிக் காட்டி.
அதில் நன்றாகவே சிரித்து விட்டவள், “அங்க எப்படி நான் உட்கார முடியுமாம்?” எனக் குறும்பாய் கேட்க, “உட்கார வைக்கட்டா?” என ஒற்றைப்புருவம் உயர்த்தி வினவினான் ஷக்தி.
அக்கேள்வியின் வில்லங்கம் புரிய, “அச்சோ, நான் குளிக்கப் போறேன்பா…” எனக் குளியலறைக்கு ஓடியே விட்டவளை நேசம் மிகுந்த விழிகளுக்குள் சிறைப்படுத்திக் கொண்டான் ஆணவன்.