மன்னிப்புக் கேட்க வந்த தன்னிடமே எவ்வளவு அசிங்கமாகப் பேசுகின்றான் என அருவருப்பில் விழிகளை மூடித் திறந்தவளுக்கு மீண்டும் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சுரக்கத் தொடங்கியது.
“இப்போ என்னதான் சொல்ல வரீங்க..?” என அவள் வெளிப்படையாகவே அவனிடம் கேட்டு விட,
“நீ சாரி கேட்டா மட்டும் நான் பட்ட அவமானம் எல்லாம் இல்லாம போயிடுமா..? இல்ல நீ என்னை அத்தனை பேரு முன்னாடி அடிச்சதுதான் இல்லைன்னு ஆயிடுமா..? நீ எதுக்காக என்னை அடிச்சியோ எந்தக் காரணத்தைச் சொல்லி என்னை ஜெயில்ல தள்ளுவேன்னு வசனம் பேசினியோ அதுக்காகவே நீ என்னைத் தேடி வரணும்.. வருவ… வர வைப்பேன்… அதுவரைக்கும் உன்னை நான் நிம்மதியா இருக்க விட மாட்டேன்..” என அவன் ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்திக் கூற கொதித்துப் போனாள் அவள்.
“நீங்க நினைக்கிறது உங்களோட கனவுல கூட நடக்காது..”
“உண்மைதான் நான் நினைக்கிறது என்னோட கனவுல நடக்காது.. இன்னும் கொஞ்ச நாள்ல நிஜமாவே நடக்கப் போகுது..” என அவன் சிரித்தவாறு கூற இவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.
பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறக்கத் தொடங்கியது.
அவனோ தன் கரத்தில் இருந்த பெண் வெண்கலச் சிலையை தன்னுடைய ஒற்றைக் கையால் வருடியவன்,
“இந்த சிலை மாதிரியே நீயும் என்னோட கைக்குள்ள அசையாம இருக்கப் போற நாள் ரொம்ப தூரத்துல இல்லை..” என்றதும் தன் காதுகளைப் பொத்திக் கொண்டவள் “ப்ளீஸ் ஸ்டாப் இட்..” எனக் கத்தினாள்.
உடல் அருவருப்பில் கூசியது.
“நீ எல்லாம் ஒரு மனுஷனா..? உன்கிட்ட போய் மன்னிப்புக் கேட்க இவ்வளவு தூரம் வந்தேன்ல என்னை நானே செருப்பால அடிச்சுக்கணும்..”
“இந்த ஷூ ஓகேவா..?” என அவன் தன் காலில் போட்டிருந்த பாதணியை விழிகளால் சுட்டிக் காண்பிக்க அவளுக்கோ முகம் கன்றிச் சிவந்தது.
“நீ என்ன பண்ணினாலும் எவ்வளவு ட்ரை பண்ணினாலும் நீ நினைக்கிறது ஒருபோதும் நடக்கவே நடக்காது..” என அவனைப் பார்த்து சீறியவள் அடுத்து ஒரு நொடி கூட அங்கே நில்லாமல் அந்த வீட்டை விட்டு வேகமாக வெளியேறத் தொடங்கினாள்.
கிட்டத்தட்ட பயந்து ஓடுவதைப் போல இருந்தது அவளுடைய செயல்.
அந்தப் பயத்தை உணர்ந்து கொண்டவனோ அடக்க மாட்டாமல் சிரிக்கத் தொடங்கினான்.
“நீ எங்க ஓடினாலும் என்கிட்டதான் வந்தாகணும்..” என அவளுக்கு கேட்கும் விதத்தில் கூறியவன் தன்னுடைய கரத்தில் இருந்த வெண்கலச் சிலையை தரையில் விட்டெறிந்தான்.
அவளைப் பார்த்ததும் அவனுள் அத்தனை கோபம்.
தன் உணர்வுகளை அப்படியே காட்டிவிட்டால் அவற்றுக்கு என்ன மரியாதை..?
அனைத்தையும் அடக்கிக் கொண்டு ஆழ்கடலின் அமைதியோடு பேசியவனுக்கு அவளை சீண்டிப் பார்க்க கரங்கள் பரபரத்துக் கொண்டுதான் இருந்தன.
எங்கே போய் விடப் போகிறாள் என எண்ணியவன் தன்னுடைய அலைபேசிக்கு வந்திருந்த அவளைப் பற்றிய தகவல்களை சுவாரஸ்யத்துடன் பார்க்கத் தொடங்கினான்.
அவளுடைய பெயர் தொடக்கம் அவளுடைய குடும்பத்தின் ஜாதகம் வரை அனைத்தும் அவனுக்கு வந்து சேர்ந்திருந்தது.
அதிலும் கூடுதல் தகவலாக அவளுடைய அன்னை வட்டிக்கு வாங்கிய 10 லட்சம் ரூபாயும் அவனுடைய பார்வையில் பட்டுவிட அவர்களை வைத்து பொம்மலாட்டம் ஆட்டுவிக்க தயாராகினான் விநாயக்.
செந்தூரியோ வெளியே நின்ற சேகரை நோக்கி வந்தவள் “போகலாம்..” எனச் சோர்வாகக் கூற,
“என்ன ஆச்சு..? உன்னோட மன்னிப்பை அவர் ஏத்துக்கிட்டாரா..?” என பதற்றத்தோடு கேட்டான் சேகர்.
“அவனெல்லாம் மனுஷனே கிடையாது சேகர்.. நான் என்ன சொல்ல வர்றேன்னு கூட கேட்கவே இல்லை.. இதுக்கு மேல என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்.. வாங்க வீட்டுக்குப் போகலாம்..” என்றவள் முன்னே நடக்கக் தொடங்கி விட தன்னுடைய பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்தவனுக்கு சிந்தனைகள் தாறுமாறாக தலைக்குள் ஓடத் தொடங்கின.
இனி நடப்பது நடக்கட்டும் என அவ்வளவு எளிதாக விட்டுவிடக்கூடிய பிரச்சனையா இது..?
கடந்த இரண்டு வருடங்களாக சினிமா துறையில் வேலை பார்த்தவனுக்கு விநாயக்கைப் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது.
அடிபட்ட புலியாய் அவன் பாயப் போவது உறுதி என்பதை மட்டும் உணர்ந்தவன் எதுவும் கூறாது அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
செந்தூரி வீட்டிற்குச் சென்ற அடுத்த கணமே அவளுடைய அன்னை கதறி அழத் தொடங்கி விட அவளுக்கோ என்ன நடந்தது என்றே புரியவில்லை.
தந்தைக்குத்தான் உடலுக்கு ஏதும் முடியவில்லையோ எனப் பதறிப் போனவள்,
“என்னாச்சும்மா..? அப்பா நல்லாதானே இருக்காங்க..?” எனப் பதறியவாறு கேட்க,
தன் விழிகளைத் துடைத்தவாறு “அவருக்கு ஒன்னும் இல்லடி.. எனக்குத்தான் நேரமே சரியில்லைன்னு தோணுது..” என மீண்டும் அழத் தொடங்கியவரை புரியாது பார்த்தாள் அவள்.
“முதல்ல என்ன பிரச்சனைன்னு சொல்லுங்கம்மா.. எனக்கே ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு.. இதுல நீங்க வேற ஏன் இப்படி பண்றீங்க..?” என அவளோ கலங்கிப்போன குரலில் கூற,
“மோகன் சார் வீட்டுக்கு வந்தாரு..” என்றார் மேகலா.
“மோகன் சாரா.. அது யாரும்மா..?” என அவள் கேட்க,
“நீ படத்துல நடிக்கிறதுக்காக பத்து லட்சத்தை வட்டிக்கு கொடுத்தவருடி.. அவரோட பணத்தை இன்னும் ஒரு வாரத்துல கொடுக்கணும்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல..” என மீண்டும் அவர் அழத் தொடங்கி விட இவளுக்கோ ஒரு கணம் மூச்சே நின்று போனது.
“இதுக்குத்தான் படிச்சுப் படிச்சு சொன்னேன் கடன் வாங்காதீங்கன்னு.. கேட்டீங்களா..? இப்போ எப்படி அவ்வளவு பணத்தை திருப்பிக் கொடுக்கிறது..? நம்மகிட்ட நகை கூட இல்லை.. அடகு வச்சு சொற்ப பணத்தை புரட்டுறதுக்கும் வழியில்ல.. நான் இப்போ எங்கம்மா போவேன்..? கைவசம் என்கிட்ட வேலை கூட இல்லையே..” எனத் தவிப்பாய் அவள் கூற அப்போதுதான் மேகலாவுக்கோ தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் புத்தியில் உறைக்கத் தொடங்கியது.
“தெ.. தெரியாம பண்ணிட்டேன்டி இப்போ என்ன பண்றது..?” என அவர் பயத்தோடு கைகளைப் பிசைய,
“இன்னும் ஒரு வாரம் டைம் இருக்குதானே பாத்துக்கலாம்.. அவர்கிட்ட பேசி டைம் கேட்கலாம்.. இப்போ நீங்க அழாம ரெஸ்ட் எடுங்க..” என தன்னுடைய அன்னையை சமாதானம் செய்துவிட்டுத் திரும்பியவள் அங்கே சேகர் அவளிடம் ஒற்றை வார்த்தை கூடக் கூறாது பைக்கில் ஏறிச் சென்றுவிட பெருமூச்சோடு தன் நெற்றியை அழுத்திக் கொண்டாள் அவள்.
தலை மிகவும் வலித்தது.
நிம்மதி தொலைந்தது.
பாவம் அன்றைய இரவும் அவளுக்கு நிம்மதியான உறக்கம் கிட்டவே இல்லை.
அடுத்த நாள் அதிகாலையில் நேரத்திற்கே எழுந்தவள் வீட்டின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு வாயிற் கதவைத் திறந்தாள்.
திறந்தவளுக்கு விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
செந்தூரியால் தன் விழிகளை நம்பவே முடியவில்லை.
பின்னே மிகப்பெரிய இயக்குநர் தன்னுடைய வீட்டு வாயிலில் வந்து நின்றால் அவளுக்கு அதிர்ச்சியாகத் தானே இருக்கும்.
ஏற்கனவே அவளைச் சுற்றி 1008 பிரச்சனைகள் அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் போது இவருடைய வருகை இன்னொரு பிரச்சனைக்கு அடித்தளமாக அமைந்து விடுமோ என பதை பதைத்தது அவளுடைய உள்ளம்.
“உன்கூட கொஞ்சம் பேசணும்மா..” என அவர் கூற,
“உள்ள வாங்க சார்..” என அழைத்தாள் அவள்.
சக்கரவர்த்தி ஒருபோதும் தன்னிடம் தவறாகப் பேசியதில்லை என்பதை அக்கணம் நினைவிற் கொண்டு வந்தவள் இன்முகமாகவே அவரை உள்ளே வரவேற்றாள்.
“சொல்லுங்க சார் என்ன விஷயம்.?”
“நீதாம்மா எனக்கு உதவி பண்ணனும்..” என அவர் கூறியதும் அவளுடைய குண்டு விழிகளோ இன்னும் அகலமாக விரிந்தன.
“என்ன சார் சொல்றீங்க..? மிகப்பெரிய டைரக்டர் நீங்க… நீங்க நினைச்சா என்ன வேணாலும் பண்ண முடியுமே… என்ன மாதிரி சாதாரண ஒருத்தியோட உதவி எல்லாம் உங்களுக்கு தேவைப் படாதே..” என்றாள் அவள்.
அவரோ சுற்றி வளைக்காமல் நேரடியாக “விநாயக் மகாதேவ்..” என்றதும் அவளுடைய உடலோ ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது.
அவளோ எதுவும் கூறாது முழுவதையும் அவரே சொல்லட்டும் என்பது போலப் பார்க்க,
அவளுடைய பார்வையை புரிந்து கொண்டாற் போல தனது பேச்சைத் தொடர்ந்தார் சக்கரவர்த்தி.
“விநாயக் சார் என்னோட படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டார்..”
“அ.. அதுக்கு நான் என்ன பண்ண முடியும் சார்..?”
எந்தக் கிணற்றிலிருந்து எந்தப் பூதம் வெளிவரப் போகின்றதோ என்ற அச்சத்தில் பேசினாள் செந்தூரி.
“அவர் நடிக்க மாட்டேன்னு சொன்னதுக்கு காரணமே நீதான்மா.. நான்தானே உன்னை ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு வர வெச்சேன்.. அன்னைக்கு நடந்த எல்லாத்துக்கும் நான்தான் காரணம்னு இனி என்னோட எந்த படத்துலையுமே நடிக்க மாட்டேன்னு விநாயக் சொல்லிட்டாரு..”
“ஓஹ்…?”
“நீ அவர்கிட்ட போனாதான் எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரும்.. சோ எனக்காக நீ அவர்கிட்ட போய் பேசு..” என சக்கரவர்த்தி கூற மறுப்பாக தலையசைத்தாள் அவள்.
விநாயக் ஒன்றும் அவளை பேச்சு வார்த்தைக்காக அழைக்கவில்லையே அவளை வே**சியாக வைத்திருப்பதற்கல்லவா அழைக்கின்றான்.
“சாரி சார் நான் யாரையும் தேடிப் போறதா இல்ல..” உறுதியாக மறுத்தாள் அவள்.
“புரிஞ்சுக்கோம்மா ஆல்ரெடி விநாயக் சாரை வச்சு போஸ்டர் எல்லாம் ரிலீஸ் பண்ணிட்டோம்.. நாலஞ்சு சீன் வேற எடுத்து முடிச்சாச்சு… இதுக்கு அப்புறமா அந்த படத்துக்கு வேற எந்த ஹீரோவையும் என்னால நடிக்க வைக்க முடியாது.. அவர் வந்து இந்த படத்தை நடிச்சுக் கொடுக்கலைன்னா ரொம்ப கஷ்டமா போயிரும்..” என அவர் கூற இவளுக்கு மூச்சு முட்டுவதைப் போல இருந்தது.
அவன் தன்னுடைய காரியத்தை சாதிப்பதற்கு எந்த அளவு வேண்டுமென்றாலும் செல்வான் என்பதை அக்கணம் புரிந்து கொண்டவள் சக்கரவர்த்தியை அழுத்தமாகப் பார்த்தாள்.
“என்னால அவர்கிட்ட போக முடியாது சார்.. என்னை மன்னிச்சிடுங்க..”
“ஓஹ்… உன்னால அவர்கிட்ட பேச முடியாதுன்னா இந்த படத்துல லாஸ் ஆகுற பணத்தை நீதான் எனக்குக் கொடுக்கணும்.. இந்த பிரச்சனை எல்லாத்துக்குமே நீ மட்டும்தான் காரணம்.. அவ்வளவு ஈஸியா அத்தனை பேர் முன்னாடி விநாயக் சாரை அடிச்சது உன்னோட தப்பு.. இதுக்கு நீதான் பொறுப்பேத்துக்கணும்.. ஒன்னு நீ அவரை சமாதானப்படுத்தி என்னோட படத்துல நடிக்க வை… அப்படி இல்லன்னா அந்த படத்துக்கான லாஸ் எவ்வளவோ அதை நீயே எனக்குக் கொடுத்துடு..” என அவர் கூற இவளுக்கோ உடல் சோர்ந்தது.
இருக்கிற பிரச்சினைகள் போதாது என்று இப்போது இது வேறா என உள்ளுக்குள் நொந்து கொண்டாள் அவள்.
“அவர் இல்லாம வேற எந்த ஆக்டர வெச்சு படம் எடுத்தாலும் ரசிகர்களுக்கு ரொம்ப ஏமாற்றம் ஆயிரும்.. இனி இந்தப் படத்தை என்னால எடுக்க முடியும்னு நம்பிக்கையே வரல.. ஒன்னு விநாயக் சார் இந்த படத்தை நடிச்சுக் கொடுக்கணும்.. இல்லன்னா இந்த படத்துக்கு இதுவரைக்கும் நான் செலவழிச்ச அறுபது லட்சத்தை நீ எனக்கு இப்பவே திருப்பிக் கொடுக்கணும்..” என்றதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
60 லட்சத்துக்கு அவள் எங்கே போவாள்.?
ஏற்கனவே அவளுடைய அன்னை வாங்கி வைத்த 10 லட்சம் கடனையை திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறும் போது 60 லட்சம் என்பது மிகப்பெரிய தொகை அல்லவா..?
தலை சுற்றுவது போல இருந்தது செந்தூரிக்கு.
“சார் அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன்..? அந்த விநாயக் ஒன்னும் என்ன பேசுறதுக்காக கூப்பிடல.. என்ன வப்பாட்டியா வெச்சிக்க கூப்பிடுறான்.. என்னால எப்படி அவன்கிட்ட போக முடியும்..? என் நிலைமைய கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க..” என கண்களில் கண்ணீரோடு அவள் கூற இறுகிய மனதோடு எழுந்து கொண்டார் சக்கரவர்த்தி.
“சாரிமா எனக்கு உன்னோட நிலைமை புரியுது.. ஆனா விநாயக்கை பகைச்சுக்கிட்டு என்னால இந்த சினி ஃபீல்ட்ல எதுவுமே பண்ண முடியாது… புகழும் பணமும் பலமும் அவன்கிட்ட கொட்டிக் கிடக்கு.. நான் மட்டும் இல்ல உன்னாலையும் அவனை எதிர்த்து எதுவுமே பண்ண முடியாது… உனக்கு ரெண்டு நாள் டைம் தரேன்.. அதுக்குள்ள என்னோட பணம் வரணும்.. இல்லன்னா உன்னாலதான் ஷூட்டிங்கில் பிரச்சனைன்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டி வரும்..” எனக் கூறிவிட்டு அவர் எழுந்து சென்றுவிட அவளுக்கோ நெஞ்சம் அதிர்ந்தது.
விநாயக் சுற்றி வளைத்து அவளை எழ முடியாத அளவிற்கு அடிக்கின்றான் என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு மூச்சுத் திணறியது.
Ni words