நெருக்கம் – 10
தாலி கட்டி முடித்ததும் ஒவ்வொருத்தராக வந்து அவர்களுக்கு வாழ்த்து கூறிக் கொண்டே போக அபர்ணாவிற்கோ அனைத்தும் கனவு போலவே இருந்தது.
மூன்று நாட்களுக்குள் அனைத்தும் முடிந்துவிட்டது.
பணம் இருந்தால் அனைத்தும் சாத்தியம்தான் போல என எண்ணிக் கொண்டவள் சோர்ந்து போனாள்.
எப்போது இந்த ஆடை, ஆபரணங்களை எல்லாம் நீக்கி விட்டு ஃப்ரீயாக இருக்கலா என ஏங்கத் தொடங்கியது அவளுடைய மனம்.
‘நகைகள் ஒவ்வொன்றும் பாரமாக இருக்க இப்போதே கழற்றி வைத்து விடலாமா..?’ என்று கூட எண்ணத் தொடங்கி விட்டாள் அவள்.
அருகில் இருக்கும் தன்னுடைய கணவனிடம் கூறி விடலாமா..? என எண்ணியவள் அவனை எப்படி அழைப்பது எனச் சிந்திக்கத் தொடங்கினாள்.
‘தன்னுடைய அன்னை அழைப்பது போல அப்பா, என்னங்க என அழைத்தால் ரொம்ப பழசாக இருக்குமோ..’ என எண்ணியவள் அதை வேண்டாம் எனத் தவிர்த்து விட்டாள்.
‘அரைக்கிழவன்னு கூப்டா எப்படி இருக்கும்..?’ என எண்ணியவளுக்கு சட்டென சிரிப்பு பொங்கியது.
மிகச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவள் வேறு எப்படி அழைப்பது என தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினாள்.
சிந்தனையின் தீவரத்தில் அவளுடைய நகங்கள் பற்களுக்கு இரையாகத் தொடங்க அவளை திரும்பிப் பார்த்த குருஷேத்திரன் அவளுடைய கரத்தை எடுத்து கீழே விட்டவன்,
“டோன்ட் டு தட் அகைன்..” எனக் கூறிவிட்டு திரும்பிக் கொள்ள அவளுக்கு சரிதான் போடா என்றிருந்தது.
‘என்னோட நகத்தை நான் கடிக்கக் கூடாதா.. இது என்ன கொடுமையா இருக்கு.. பேசாம இவன ரூல்ஸ் மன்னன்னு கூப்பிட்ரலாமா..?
ம்ஹும்… வேற வினையே வேணாம்… ஐயையோ எவ்ளோ யோசிச்சாலும் ஒரு ஐடியா கூட கிடைக்க மாட்டேங்குதே.. பேர் சொல்லி கூப்பிடவும் முடியாது.. என்ன விட ரெண்டு மூணு வயசு பெரியவனா இருந்தாக் கூடப் பெயர் சொல்லிக் கூப்பிடலாம்.. இவ்வளவு கேப்ல இருக்க அவரப் போய் எப்படி என்னால பேர் சொல்லிக் கூப்பிட முடியும்..?
அடச்சை என்னால ஒரு பேர கூட ஒழுங்கா யோசிச்சு கண்டுபிடிக்க முடியல நான் எப்படி இவன் கூட குடும்பம் நடத்தப் போறேன்..?
கணவனை எப்படி அழைப்பது என கூகுள் சர்ச் பண்ணிப் பார்க்கலாமா..?’ என எண்ணியவள் அடுத்த கணமே தன்னுடைய தலையில் தானே கொட்டிக் கொண்டாள்.
மீண்டும் அவள் புறம் திரும்பிய குருஷேத்திரன் அவளை முறைத்துப் பார்க்க ‘அச்சச்சோ எல்லாருக்கு முன்னாடியும் என் தலையில நானே கொட்டிட்டேனே.. இவன் வேற முறைக்கிறானே.. சரி சமாளிப்போம்..’ என மனதுக்குள் எண்ணியவள் அவனைப் பார்த்து “ஹி… ஹி.. சாரி ஹேர் ஸ்டைல் அட்ஜஸ்ட் பண்ணினேன்..” என அடித்து விட்டாள்.
மேலும் உக்கிரமாக முறைத்தான் அவன்.
‘யோவ் சும்மா சும்மா முறைச்சு பூச்சாண்டி காட்டாம போயா..’ எனக் கத்த வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
சட்டென மறுபுறம் திரும்பி கல்யாணத்திற்கு வந்தவர்களை பார்வையிடத் தொடங்கினாள் அவள்.
அவனைப் பார்த்தால் தானே அவன் முறைப்பது தெரியும்..
இன்னும் பத்து நிமிடத்திற்கு அவன் புறம் திரும்பவே கூடாது என்ற உறுதியோடு மற்றைய பக்கம் திரும்பியவளுக்குக் கழுத்து வலிக்கத் தொடங்கிவிட்டது.
“போதும் முதல்ல இந்தப் பக்கம் திரும்பு..” எனப் பற்களைக் கடித்தவாறு வார்த்தைகளைத் துப்பினான் அவன்.
அவளுக்கு கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.
விட்டால் அப்படியே மேடையில் இருந்து இறங்கி ஓடி விடுவேன் என்பது போல நின்றாள் அவள்.
அதை அவனும் உணர்ந்து கொண்டான் போலும்.
அவனுடைய இரும்பை ஒத்த கரமோ அவளுடைய வளையல் அணிந்த மென் கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொள்ள இவளுக்கு மூச்சே நின்றுவிடும் போல இருந்தது.
“கை.. கைய விடுங்க…” படபடப்பாக கூறினாள் அவள்
“……….”
அவனோ எந்த பதிலும் கூறாது அவளை திரும்பிக் கூடப் பார்க்காமல் நிற்க இவளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.
“உங்களத் தான் சொல்றேன்…”
“……..”
“கைய விடுங்க….”
“………”
“ப்ச்…. எல்லோரும் பார்க்கிறாங்க..” எனச் சங்கடத்துடன் மீண்டும் கூறினாள் அவள்.
அவனோ பிடித்து வைத்த பிள்ளையார் சிலை போல அப்படியே நின்றான்.
அவள் புறம் திரும்பவும் இல்லை அவள் கூறியதைச் செவிமடுத்து செய்யவும் இல்லை.
அவளுக்கு ஆத்திரமாத்திரமாக வந்தது.
கையை உதறித் தள்ளி விடுவித்து விடுவோமா.. என எண்ணியவள் அவனுடைய பலத்திற்கு முன்பு தன்னால் போராட முடியாது என்ற நிதர்சனத்தை உணர்ந்து கொண்டாள்.
அத்தோடு தான் கையை உதறினால் இங்கு வந்திருக்கும் அனைவரின் கவனமும் தன்னில் பதிந்து விடும் என்ற அச்சமும் அவளுக்குத் தோன்ற அமைதியாக நிற்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள் அவள்.
அவனாகக் கையை விடுவித்தால் தான் உண்டு என்பது புரிய வேறு வழியின்றி அவனுடைய பெயரை கூறி அவனை அழைத்தாள் அபர்ணா.
“மிஸ்டர் குருஷேத்திரன்..?”
“……..”
“ஹலோ… உங்களத்தான் கூப்பிடுறேன்..”
“……..”
“நான் பேசுறது கேக்கலையா..?”
“……”
ஒரு கட்டத்தில் பேசிப் பேசியே ஓய்ந்து போனவள் சட்டென அதிர்ந்து நிமிர்ந்தாள்.
‘ஒருவேளை இவனுக்குக் காது கேட்காது போல… அன்னைக்கும் இப்படித்தான் நான் வீட்ல வச்சு உங்க கூட பேசணும்னு சொன்னப்போ எந்த ரியாக்ஷனும் இல்லாமல் நடந்து போயிட்டான்..
எப்போ நான் என்ன கேட்டாலும் அவன் அதுக்கு பதில் சொன்னதே இல்லை.. காது கேட்காதவங்க உதட்டு அசைவை வச்சு நாம என்ன பேசுறோம்னு கண்டுபிடிப்பாங்களே அப்படித்தான் இவனுமோ..?
எதிரே நின்னு பேசினா மட்டும்தான் இவனுக்கு புரியுமோ..?
அடக்கடவுளே இவ்ளோ பெரிய பணக்காரனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையேன்னு ஏன் யோசிக்காமல் விட்டேன்..?
இவனுக்குக் காது கேட்காததால் தான் இவ்வளவு நாள் கல்யாணம் ஆகாம இருந்திருக்கும் போல…
நம்மள ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டானே பாவி.. பாவி..
உன்ன அரைக்கிழவன்னு தானே நினைச்சேன்… உனக்குள்ள இன்னொரு பிரச்சனை வேற இருக்கா..?’ என எண்ணி கலங்கிப் போனவள்,
தூர நின்ற தன்னுடைய அன்னையைப் பார்த்து கையை உயர்த்தி தன்னருகே வருமாறு சைகை செய்தாள்.
பத்மாவோ அவள் தன்னை அழைப்பதைக் கண்டு வேகமாக மேடை ஏறி அவள் அருகே வந்தவர், மாப்பிள்ளையைப் பார்த்து புன்னகைத்து விட்டு
“சொல்லுமா டயர்டா இருக்கா..? குடிக்க ஏதாவது ஜூஸ் கொண்டு வரட்டுமா..?” என அக்கறையுடன் கேட்க,
தன்னுடைய முகத்தை குருஷேத்திரன் பார்க்காதவாறு திரும்பி நின்று கொண்டவள்,
தன்னுடைய அன்னையைப் பார்த்து “ம்மா.. நாம மோசம் போயிட்டோம்..” என்றதும் பத்மாவுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“என்னடி சொல்ற முட்டாள்தனமா பேசாம இரு..” எனக் கண்டிப்பாக பேசியவர், மாப்பிள்ளையை வைத்துக்கொண்டு இவள் இப்படி பேசுகிறாளே எனப் பதற்றமாகிப் போனார்.
“அப்பா இவங்களப் பத்தி ஒழுங்கா விசாரிச்சாரா இல்லையா..?”
“என்ன அபர்ணா இது வாய மூடு.. மாப்பிள்ளை பக்கத்தில் இருக்கும் போது என்ன பேசுற…? அவர் என்ன நினைப்பாரு..?” எனக் கண்டித்தார் பத்மா.
“ஐயோ நான் சொல்ல வர்றதை முதல்ல கேளுமா.. இவருக்கு காதே கேட்கல.. என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.. நான் எத்தன தடவை பேசினாலும் அவருக்கு கேட்குதே இல்லம்மா..” எனச் சோகமாய் எடுத்துக் கூற,
“என்னடி உளர்ற..” எனத் திட்டினார் பத்மா.
“இப்போ நீ எதுக்கு டென்ஷன் ஆகுற..? நான் நினைக்கிறேன் நம்மளோட உதட்டசவை வச்சுத்தான் நாம என்ன பேசுறோம்னு அவர் கண்டுபிடிக்கிறார் போல.. நான் இப்படி திரும்பி நின்னு பேசுறதால நான் என்ன பேசுறேன்னு அவருக்கு புரியாது..
இருந்தாலும் இது தப்பில்லையா அம்மா..? உண்மையை சொல்லி கல்யாணம் பண்ணாம இப்படி பொய் சொல்லி கல்யாணம் பண்றது எவ்வளவு பெரிய தப்பு…? எல்லாம் நம்ம அப்பாவ சொல்லணும் என்னத்த விசாரிச்சாரோ.. எனக்கு வர்ற கோபத்துக்கு..” என அவள் பேசிக்கொண்டே போக,
“எனக்கு நல்லாவே காது கேட்கும்..” என அழுத்தமான குரலில் கூறினான் குருஷேத்திரன்.
அவ்வளவுதான் நடுநடுங்கிப் போனாள் அபர்ணா.
“சாரி மாப்ள அவ ஏதோ தெரியாம பேசிட்டா தப்பா எடுத்துக்காதீங்க..” எனக் கூறிய பத்மாவோ,
“இதோ வர்றேங்க..” என ரகுநாத் அழைத்ததைப் போல அங்கிருந்து நழுவிச் சென்றுவிட அபர்ணாவிற்க்கோ அப்படியே நிலத்திற்குள் புதைந்து விடலாமா என்பதைப் போல இருந்தது.
‘ஐயோ பெருமாளே அப்போ இவ்வளவு நேரமா நான் கழுவி ஊத்தின எல்லாத்தையும் அவர் கேட்டுருப்பாரே… நம்ம மேல கோபத்தில் இருப்பாரோ..?
காது கேக்குதுன்னா நான் கேட்டதுக்கு பதில் சொல்ல வேண்டியதுதானே..? எப்போ பார்த்தாலும் பேசாம அமைதியா நின்னா நான் என்ன நினைக்கிறது..’ என எண்ணியவாறு அவனைத் திரும்பிப் பார்த்தவள், தன்னை அழுத்தமாகப் பார்த்தவாறு நின்று நின்று கொண்டிருக்கும் அவனைக் கண்டு “சாரி..” என மெல்ல முணுமுணுத்தாள்.
“உனக்குக் கொஞ்சம் கூட மூளையே இல்லை இனியாவது அதை யூஸ் பண்ணு..” எனக் குரலை உயர்த்தாமல் அவன் அழுத்தமான வார்த்தைகளை கடித்துத் துப்ப அவளுக்கு கண்கள் கலங்கியே விட்டன.
திருமணம் அன்றே திட்டி விட்டான்.
நான் என்ன வேண்டும் என்றா செய்தேன்..?
எத்தனையோ முறை பேசியும் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தால், என்னதான் நினைப்பது..?
ஏதோ நான் வேண்டுமென அவனைப் பற்றி தவறாகக் கூறியதைப் போல் அல்லவா திட்டுகிறான்.
வேதனையில் இதழ்கள் நடுங்கத் தொடங்கின.
விழிகளில் இருந்து கண்ணீர் எந்நேரமும் கன்னத்தில் வழிந்து விடுவது போல இருக்க தலையைக் குனிந்து கொண்டு அழுகையை அடக்கப் போராடிக் கொண்டிருந்தவளைச் சலிப்பாக பார்த்தவன்,
சட்டென அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு மேடைக்கு பின்புறமாக இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவன் அழைத்து வந்ததே அவளை இழுத்து வந்தது போல இருக்க அதிர்ந்து போய் அந்த அறைக்குள் நின்றவாறு அவனைப் பார்த்தாள்.
அவனோ அந்த அறைக் கதவைப் பூட்டியவன்
“வாட் இஸ் திஸ் அபர்ணா..?” எனக் கேட்டான்.
“இ.. இல்ல நீ.. நீங்க அப்போ கை.. கைய பிடிச்சு..” என அவள் தடுமாறிக் கொண்டிருக்க அவளைப் பார்த்தவாறு அவளை நெருங்கி வந்தவன் மீண்டும் அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்து அவளுடைய உடலை தன் உடலோடு மோதச் செய்தான்.
பதறிப் போய் விழிகளை விரித்தாள் அவள்.
“கம் அகைன்..” என்றவனின் கரங்கள் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டன.
💜💜💜💜