10. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

4.8
(84)

முள் – 10

குழந்தையின் சிரிப்பு மானிடர்களை சிதைக்குமா என்ன..?

ஆம் அங்கே அந்தப் பிஞ்சுக் குழந்தையின் சிரிப்பைக் கண்டு அங்கே நின்றிருந்த அனைவரின் நெஞ்சமும் பிசையத் தொடங்கியது.

அன்னை இறந்து விட்டதைக் கூட அறியாது, நடக்கும் பிரச்சனைகள் எது பற்றியும் புரியாது வஞ்சகம் இல்லாத அழகிய சிரிப்பை உதிர்க்கும் அந்தக் குழந்தையைக் கண்டு ஒரு நொடி அனைவரும் மனதால் சிதைந்துதான் போயினர்.

தன் குழந்தையின் மீது உயிரே வைத்திருக்கும் யாஷ்வினுக்கு உயிர் துடித்தது.

“அஞ்சு நிமிஷம் குழந்தையோட அழுகையைக் கூட உங்களால நிறுத்த முடியல.. என் பொண்ணு எதுக்காக உங்க கூட வளரணும்..? அவ என் கூடதான் இருப்பா.. பாப்பாவை என்கிட்ட கொடுக்க முடியாதுன்னு சொன்னா கோட் வரைக்கும் போவேன்.. சட்டரீதியான நிறைய பிரச்சனைகளை நீங்க எதிர் நோக்க வேண்டி இருக்கும்..” என அவன் அழுத்தமாகக் கூற அவர்களோ திணறி விட்டனர்.

அவன் எதிர்த்துப் பேசிய கோபத்தில் வான்மதியின் அன்னையோ அவனை எதுவும் செய்ய முடியாது குழந்தையை வைத்திருந்த சாஹித்யாவை நெருங்கி வேகமாக அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தவர்,

“அசிங்கம் புடிச்சவளே… இதெல்லாம் உன்னாலதான்டி… நீ நல்லாவே இருக்க மாட்ட…” என மீண்டும் அவளைத் திட்டத் தொடங்க,

அவர் அடித்த வேகத்தில் குழந்தையோடு மடிந்து தரையில் விழப்போனவளை சட்டெனத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் யாஷ்வின்.

“இனாஃப்…” என்ற அவனுடைய கர்ஜனையில் அங்கே நின்று அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

பயந்து தன் கைகளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தவளை அழைத்து வந்து அங்கிருந்த சோபாவில் குழந்தையோடு அமர வைத்தவன் அவர்களை எரிப்பது போலப் பார்த்தான்.

“உங்களோட பொண்ணு மேல நீங்க எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்களோ அதுக்கு கொஞ்சம் கூட குறையாம நான் அவ மேல உயிரே வச்சிருந்தேன்.. இத்தனை வருஷம் நான் அவள பாத்துக்கிட்டதுல இருந்தே உங்களுக்குப் புரியலையா..? உங்களையும் தப்பு சொல்ல முடியாதுங்க.. யாரா இருந்தாலும் பொண்ணோட சாவுக்கு என்ன காரணம்னுதான் யோசிக்கத் தோணும்.. ஆனா சாஹியும் உங்களோட பொண்ணு தானே..? இவ மேல நம்பிக்கை இல்லையா என்ன..?

அட்லீஸ்ட் என்ன நடந்துச்சு.. நீ இப்படி பண்ணியான்னு கூட உங்களுக்கு அவகிட்ட கேக்கணும்னு தோணலையா..?

என்னால சாஹிக்கும் எனக்கும் எந்தத் தப்பும் இல்லன்னு ப்ருஃப் பண்ண முடியும்.. பட் நானும் அவளும் தப்பு பண்ணி இருக்கோம்னு உங்களால ப்ரூவ் பண்ண முடியுமா..? உங்களோட பொண்ணு அனுப்பிய வாய்ஸ் மெசேஜை தவிர உங்ககிட்ட வேற ஏதாவது ஆதாரம் இருக்கா..?” என்றவன் தான் நேற்று வந்த பிளைட் டிக்கெட் தொடக்கம் அனைத்தையும் குறித்த நேரத்தோடு அவர்களுக்கு காட்டினான்.

“நான் இங்க வந்ததிலிருந்து இந்த வீட்ல வான்மதிதான் இருக்கா.. காலேஜ்ல இருந்து அதுக்கு அப்புறமாதான் சாஹி வந்தா..‌ இதுல நான் எப்படி இவகூட தப்பா இருந்திருப்பேன்..? எனக்கு இந்த வார்த்தைய உங்ககிட்ட சொல்லும்போது கூட நாக்குக் கூசுது.. என்ன நடந்துச்சுன்னே தெரியாம வார்த்தையை விடாதீங்க.. ஒருத்தவங்க மேல பழி போடுறதுக்கு முதல் அது நடந்திருக்குமா இல்லையான்னு ஆயிரம் தடவை யோசிக்கணும்… அதுவும் உங்க பொண்ணா இருக்கும் பட்சத்துல நீங்க ரெண்டாயிரம் முறையாவது யோசிச்சிருக்கணும்..”

அவன் பேசிக் கொண்டே போக வான்மதியின் தந்தைக்கோ அதிர்ச்சியாக இருந்தது.

“என்னங்க இவன் ஏதேதோ பேசி நம்மள ஏமாத்தப் பார்க்கிறான்.. நம்ம எதுக்கு இவன்கிட்ட பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணனும்..? நாம கிளம்பலாம்..” என்றார் அவர்.

தன் மனைவியை விழிகளால் அடக்கியவர் சற்று நிதானித்தார்.

அவனுடைய சட்டைக் காலரைப் பிடித்து திட்டியவர்தான் ஒரு காலத்தில் தன்னுடைய மாப்பிள்ளையைப் போல ஒரு உயர்ந்த மனிதன் எப்போதும் கிடைக்க மாட்டார் என அத்தனை பெருமைகளை அள்ளிவிட்டிருந்தார்.

அவனுடைய குண இயல்பு நினைவுக்கு வந்ததும் அவருக்கோ குழம்பியது.

எதைத்தான் நம்புவது..?

இத்தனை நாட்கள் அவர் பார்த்த மருமகனின் குணத்தை நம்புவதா இல்லை மகள் இறப்பதற்கு முன்னால் அனுப்பிய வாக்குமூலத்தை நம்புவதா..?

அங்கே மூளையை விட மனம் தான் வென்றது.

ஆம் அவர் மகள் மீது கொண்ட பாசம்தான் வென்றது.

மகளின் மீது இருந்த அதீத அன்பு அவனை நம்ப மறுக்க,

“சரி.. உங்க மேல தப்பு இல்லன்னா என்னோட பொண்ணு எதுக்கு சூசைட் பண்ணிக்கணும்..? நாங்க ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்கோம்.. மேலும் மேலும் எங்களுக்கு கஷ்டத்தை கொடுக்காதீங்க.. உங்களால முடிஞ்சா உங்க மேல தப்பு இல்லைன்னு நிரூபிச்சுக் காட்டுங்க…” என்றார் அவர்.

அவனால் அவர்கள் கேட்கும் ஆதாரத்தை கொடுத்து விட முடியும்தான்.

அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சாஹித்யாவை அழைத்துச் சென்றாலே அவளுடைய வெர்ஜினிட்டியை பரிசோதித்து தவறு எதுவும் நடக்கவில்லை என்பதை ஆணித்தரமாக உறுதிப்படுத்த முடியும்.

ஆனால் அந்தச் சிறு பெண்ணை அழைத்து சங்கடப்படுத்த அவன் கிஞ்சித்தும் விரும்பவில்லை.

அவன் ராமன்தான்.

சீதை மட்டும்தான் தீக்குளிப்பாளா என்ன..?

அவனை தீக்குளிக்கச் சொன்னாலும் அவன் நிச்சயம் குளிப்பான்.

ஆனால் இந்த சிறு பெண்ணை எதற்காக சிரமப் படுத்த வேண்டும்..?

விம்மி அழுது கொண்டிருக்கும் அவளைப் பார்த்தவனுக்கு நெஞ்சில் உதிரம் வழிந்தது.

“என்னோட பிளைட் டிக்கெட்டே நீங்க கேட்ட ஆதாரம்தான்… நான் வந்ததுல இருந்து வான்மதி கூடதான் இருக்கேன்..” என்றான் யாஷ்வின்.

“அப்போ எதுக்கு என்னோட பொண்ணு தற்கொலை பண்ணிக்கணும்..?” என அலறினார் வான்மதியின் அன்னை.

“பத்து மாசம் கஷ்டப்பட்டு பெத்து படிக்க வச்சு வளர்த்து ஆளாக்கி நல்லவன்னு நினைச்சு உங்க கையில பிடிச்சுக் கொடுத்தா கடைசிஐ அவளோட உயிரையே காவு வாங்கிட்டீங்களே..” அழுதார் அவர்.

நுனி நாக்கு வரை வந்த வார்த்தைகளை மிக சிரமப்பட்டு அடக்கினான் யாஷ்வின்.

அவள் செய்த துரோகத்தை கூறிவிடலாம்தான் ஆனால் மனம் தடுமாறியது.

நடந்தது தெரிந்தால் முதலில் இவர்கள் தாங்கிக் கொள்வார்களா..?

இறந்த பின்னர் தனக்கு எந்த அவப்பெயரும் வந்துவிடக்கூடாது என்றுதான் அத்தனை பழியையும் எங்கள் மீது போட்டுவிட்டு அவள் சென்று விட்டாள்.

இந்த அவப் பெயரை அவள் மீது திருப்பி விட அவனுக்கு ஒரு நொடி கூட ஆகாது.

என்றாலும் அவன் மனம் தயங்கியது.

அதே கணம் இதில் சாஹித்யாவும் சம்பந்தப்பட்டிருக்கிறாளே தவறு செய்யாத அவள் பாதிக்கப்படுவதை அவன் சிறிதும் விரும்பவில்லை.

அவளுக்காகவாவது நடந்த உண்மையை கூறித்தான் ஆக வேண்டும். இல்லையேல் திருமணமாகாத இந்த பெண்ணின் வாழ்க்கை அடியோடு அழிந்து விடும் அல்லவா..?

எந்தத் தவறும் செய்யாத பெண் எதற்காக சிலுவை சுமக்க வேண்டும்..?

அதுவும் அவளை செருப்பால் அடித்து இன்னமும் கூட அடித்துக் கொண்டிருக்கிறார்களே.

எப்படி இவர்களுடன் உண்மையைக் கூறாது அவளை அனுப்பி வைக்க முடியும்..?

பெற்றோர்கள் செய்தாலும் வன்முறை வன்முறை தானே.

முடிவெடுத்தவனாய் அவர்களை நிமிர்ந்து பார்த்தவன் இருவரையும் அங்கிருந்த சோபாவில் அமரச் சொன்னான்.

அவர்களுக்கு எரிச்சலாக இருந்தது.

இவ்வளவு பிரச்சனையிலும் அமர்ந்துதான் பேசுவானா இவன் என்ற கோபம் துளிர் விட,

“உட்காருங்க.. நான் நடந்த எல்லாத்தையும் பத்தி உங்ககிட்ட பேசணும்.. நான் சொல்றத கேக்குற அளவுக்கு பொறுமை இருந்தா உட்காருங்க.. பேசலாம்.. இல்லன்னா என் குழந்தையை கொடுத்துட்டு கிளம்புங்க..” என்றான் அவன்.

வான்மதியின் தந்தையோ தன் மனைவியை அழைத்து வந்து சோபாவில் அமர்ந்தார்.

அவர்கள் இருவருக்கும் வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவுக்கு வேதனை தான்.

அக்கணமே அவனை அடித்துப் போட்டு விட்டு செல்ல வேண்டும் போலத்தான் இருந்தது.

ஆனால் இதில் அவர்களுடைய இரண்டாவது மகளும் சம்பந்தப்பட்டு விட்டாளே. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இந்தப் பிரச்சினையை முடித்து விட முடியாது அல்லவா..?

யாஷ்வினோ அவர்களை நேர்பார்வை பார்த்தவன் நேற்று தான் வந்ததிலிருந்து நடந்த ஒவ்வொன்றாக அவர்களிடம் கூறத் தொடங்கியவன் அவன் நேரில் கண்டதைப் பற்றிக் கூறும்போது எவ்வளவோ முயன்றும் அடக்க முடியாது அவனுக்கு அழுகை வந்துவிட்டது.

வலித்த மார்பைத் தன் கரத்தால் அழுத்தித் தேய்த்தவன் அந்த நொடி பேச்சற்று கதறி விட ‘இது என்ன புதுக்கதை..?’ என்பது போலத்தான் இருந்தது வான்மதியின் பெற்றோருக்கு.

மகள் அவனை துரோகி என்பதும் மருமகனோ மகள் மீதுதான் தவறு என்பதும் அந்த வயதானவர்களை குழம்பச் செய்தது.

“உன் மேல தப்பு இல்லைன்னு நிரூபிக்கணும்னு என் பொண்ணு மேல பழி போட பாக்குறியா..?” எனக் கேட்டார் வான்மதியின் தந்தை.

கசப்பாக சிரித்தான் அவன்.

“ஏங்க அவ எனக்கு பண்ண துரோகத்த வெளியே சொல்லணும்னா போலீஸ் விசாரிக்கும் போதே சொல்லிருப்பேன்… நீங்க இவ்வளவு பேசினப்போ கூட என் மேல தப்பு இல்லன்னுதான் சொன்னேனே தவிர வான்மதிய பத்தி நான் தப்பா ஒரு வார்த்தை கூட பேசல.. பட் இப்போ எதுக்காக உண்மைய சொல்றேன்னா என்னாலையோ என் மனைவியாலையோ சாஹித்யா கஷ்டப்படுறத நான் விரும்பல.. எந்தத் தப்பும் செய்யாத பொண்ணு எதுக்கு எங்களால பாதிக்கப்படணும்..?

அதனாலதான் உண்மைய சொல்றேன்.. நீங்க நம்பினாலும் நம்பலைன்னாலும் நடந்தது இதுதான்.. நான் வீட்டுக்கு வரும்போது விக்ரம்னு ஒரு பையன் அவகூடதான் இருந்தான்.” என பொறுமையாக அனைத்தையும் கூறி முடித்தான் அவன்.

மீண்டும் நினைத்துப் பார்க்கவே கூடாது என எண்ணிய விடயங்களை அவன் வாயாலேயே பேச வைத்த சூழ்நிலையை என்னவென்று சபிப்பது..?

அவனைப் பொறுத்தவரை வான்மதியுடன் அவனுடைய உணர்வுகளும் காதலும் மறந்து மரித்துப் போயின.

“என்னங்க இவன் ஏததோ சொல்லி நம்மள குழப்புறான்.. நம்ம பொண்ணு நிச்சியமா அந்தத் தப்பை பண்ணிருக்கவே மாட்டா..” என வான்மதியின் அன்னை கூறியதும் அவ்வளவு நேரமும் அழுது கொண்டிருந்த சாஹித்யாவோ சடாரென நிமிர்ந்து தன்னுடைய அன்னையை வெறித்துப் பார்த்தாள்.

“ஏன்மா அக்கா மேல உங்களுக்கு இருக்க நம்பிக்கை என் மேல ஏன் இல்லாம போச்சு…? நானும் உங்க பொண்ணு தானே…? நான் இப்படிப்பட்ட தப்ப பண்ணி இருக்க மாட்டேன்னு உங்களுக்குத் தோணவே இல்லையா..?” என உடைந்து போன குரலில் கேட்டவள்,

கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“மாமா என்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போங்க.. இப்போ வரைக்கும் நான் வெர்ஜின்தான்.. இந்த டெஸ்ட் நான் தப்பு பண்ணலைன்னு நிரூபிக்க போதும்ல..?” எனக் கேட்க,

இப்போது அதிர்ந்து விழிப்பது அவளுடைய பெற்றோர்களின் நிலையாகிப் போனது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 84

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “10. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!