அத்தியாயம் 2
ஒரு கம்பில் எலுமிச்சம் பழத்தை கட்டி முடிஞ்சு வைத்திருந்தது. “தூஊ இவனெல்லாம் பெரிய மனுஷன்னு சுத்திக்கிட்டு இருக்கானே. இப்படியாப்பட்ட வேலையை பண்றதுக்கு குட்டையில விழுந்து சாவலாம்” கம்பை மண்ணிலிருந்து உருவி ஓரமாய் நட்டுவிட்டு நடந்தாள்.
“இதுக்கெல்லாம் பயந்தா எப்படி பொழைக்கறது?”
வரப்பில் நடந்தவள், சும்மா போகாமல் கடலைச் செடியை வேரோடு பிடுங்கி ஒவ்வொன்றாய் சாப்பிட்டவாறே நடந்தாள்.
“ஏண்டி கருவாச்சி முள்ளு வேலி போட்டு வச்சிருக்கன், மந்திருச்சு கட்டிவச்சிருக்குது. எதுக்குடி உள்ள வந்த?” மண்வெட்டியை தோளில் போட்டு, அவள் எதிரில் வந்து நின்ற கருப்புச்சாமி அவள் கையில் இருந்த கடலைச் செடியைப் பார்த்து, வாயில் கைவைத்து அசந்து போனான்.
“அடியேய் கருவாச்சி! நாலு செடியைக் கொத்தோட புடுங்கி வச்சிருக்க. இதுவே ஒரு கிலோ வரும். ஒழுங்கா காசை எண்ணி வச்சுட்டு போடி. வரும் போது போம் போது இப்படியே லவட்டிட்டு போய் காசு சேர்க்கறியா வெக்கமாயில்லை உனக்கு?” அவள் காதைப் பிடித்து இழுக்கப் போனான்.
வரப்பில் தள்ளி நின்று, “இங்க பாருய்யா. இதெல்லாம் நீ கேக்க கூடாது. நா அப்படித்தான் எடுப்பேன். மாமன் வீட்டு முதலு எடுத்து தின்னா உனக்கென்ன குறையுது?” கடலையை வாயில் போட்டாவள் எகனை பேச.
“வரவன் போறவன் எல்லாம் இப்படியே மாமன் மச்சான் மொறை சொல்லிட்டு எடுத்துட்டு போங்கடி. பண்ணையம் உருப்பட்ட மாதிரிதான்” மண்வெட்டியை நீரில் மேம்போக்காக அலசியதால் சேறு இன்னும் ஒட்டிக்கிடக்க, அவன் கருத்த மேனியில் புது வர்ணமாய் வழிந்து ஓடியது.
சந்தனமாய் வழிந்து ஓடிய இடங்களில் நண்டுப் பார்வையை ஓட விட்ட செவ்வந்தி, அவனுக்கு பதில் தரவும் மறுக்கவில்லை, தூங்கும் போது எழுப்பி சண்டைக்கு போனாலும், அதுக்கு தயாராகவே இருக்கும் செல்லாயி கிழவி ரத்தம் அவ.
“நடக்கற பாதையில் முள்ளு போட்டவன் நியாயம் பேசக்கூடாதுய்யா. மூடிக்கிட்டு போய்க்கோ” முந்தானையை கையில் வைத்து ஒரு சுழற்று சுழற்ற அதன் நுனியில் இருந்த ஒரு ரூபாய் நாணயம் பளிச்சென மின்னி அடங்கியது.
“திருடித் தின்ன நாக்குல சூடு வைக்கணும்டி. அப்பத்தான் அடங்குவ”
“நீ சம்பாதிச்சுப் போட்ட பாரு. அதான் கொழுப்பெடுத்துப் போய் கிடக்கேன். வந்துட்டான் பெருசா பேச” செவ்வந்தி சண்டைக்கு தயாராய் நின்றாள்.
“வாயாடி. உன்னைக் கட்டிக்கச் சொல்லி உங்கம்மா வீட்டுக்கு வரட்டும். பேசிக்கறேன்”
“ஐய. சும்மா கொடுத்தாக்கூட நீ வேண்டாம்ய்யா. ஆளையும் மூஞ்சியையும் பாரு. நாலு கடலைக்கு இந்த நியாயம் பேசுறான். உன்னை கட்டிக்கிட்டு சோத்துக்கு வீங்கிப் போகணும்னு எனக்கென்ன தலையெழுத்தா? வழியை விட்டு நில்லுய்யா. வந்துட்டான் நாட்டாமை பண்ண” அவனைத் தள்ளிவிட்டவள் வேகமாய் நடைபோட்டாள்.
வீரமாய்ப் பேசிட்டாலும் நெஞ்சுக்குழிக்குள் பயம் இருக்கத்தான் செய்தது. கருப்புச்சாமி வெளித்தோற்றத்துக்கு விட்டுக்கொடுத்து செல்லும் நல்லவன் மாதிரியே தெரிவான். அது அப்படியில்ல என்பது நெருங்கியவர்களுக்கு தெரியும்.
செவ்வந்தியின் மாமன் வீட்டுத் தோட்டம் அது. அமுதாவுக்கு கருப்புச்சாமியின் அப்பத்தா ராமாயி பெரியம்மா முறையாகுது.
“நகை நட்டுன்னு எங்கிட்டயே இருக்குதுடா. நீ தந்துதான் மருமக கழுத்து நிறையணும்னு இல்லன்னு” கருப்புச்சாமியின் அம்மா சுலோச்சனாவுக்கு வரதட்சணையாய் நிலங்களை எழுதி வாங்கிட்டார் ராமாயி. அது போக ராமாயிக்கும் காடு கரைன்னு சுத்தியும் இருந்தது. மண் மீது ஆசை அதிகம் ராமாயிக்கு.
வரப்பில் நடக்கும் பொழுது கண்ணில் தென்படும் மஞ்சள் செடியின் வாசனை, கடலைச் செடி கண்ணில் பட்டால் கை துறுத்துறுக்கும் ஒரு செடியை வேரோடு பிடுங்கினால் குறைந்தது அரைக் கிலோ கடலை தேரும். பிடுங்கிய கையோடு பச்சைக் கடலையை உரித்து சாப்பிட்டால் அதன் சுவை நாவை சுண்டி இழுத்து கண்ணை மூட வைக்கும்.
அப்படியே நடந்தால் கம்பு ராகி சோளம் என்று செவ்வந்தியின் பசியே அடங்கிப் போகும். அதுமட்டுமா, களைச் செடிகளோடு சேர்ந்து வளர்ந்திருக்கும் கீரைச் செடிகளைப் பிடுங்கி அதை வித்தும் வருமானம் பார்க்கிறாள்.
இரும்பு கேட்டை திறந்து உள்ளே போனவள், அங்கே பண்ணையில் வேலை செய்யும் ஆட்களுக்கு கூலி கொடுத்தபடி அமர்ந்திருந்த தயாளன் உருவம் பார்த்து பவ்யமாய் நடந்தாள்.
‘எப்படியும் இவர்கிட்ட சிக்கினா, கூடக் குறையத்தான் காசு கைக்கு வரும், சரியான கஞ்சப் பிசுனாரி’ அவர் அறியாமல் உள்ளே போக முற்பட்டாள்.
“என்ன புள்ள அரவமில்லாம உள்ள போற?” அவர் குரல் அவளை மறித்தது.
“மாமா அன்னம் உள்ள இருக்குதுங்களா?” பால் கேனை வாசல்படியின் ஓரமாய் வைத்தபடி செவ்வந்தி உள்ளே எட்டிப் பார்த்தாள்.
“ஆமா செவ்வந்தி. அன்னம் உள்ளதான் இருக்கா போ. பச்சைத் தண்ணிக்கு மாசமானா டான்னு காசு வாங்கிக்கோ புள்ள” அவளை வம்பிழுத்த தயாளன், அன்று வேலை அதிகம் இருந்ததால் அவளை உள்ளே போகச் சொல்லிவிட்டார்.
மரத்தால் ஆன நீள இருக்கையில் அமர்ந்திருந்தவள், தன் முன் அசைவை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.
“அன்னம் இந்த மாசம் பால் கணக்குக்கு காசு வாங்க வந்திருக்கேன்” எனக் கேட்டவாறே நெளிந்தபடி நின்ற செவ்வந்தியைப் பார்த்ததும் சிரித்துவிட்டாள் அன்னம்.
பச்சரிசிப் பற்கள் மின்னலாய் தெரியச் சிரித்தவளின் சிரிப்பை பார்த்த செவ்வந்தி, நெட்டி முறித்தாள் விரல்களால்.
அதில் இன்னுமே சிரிந்துவிட்ட அன்னம், “வாயை மூடவே மாட்டியா?” என்ன சைகையில் கேட்டாள்.
அன்னத்த பெத்த மவராசி சுலோச்சனாவுக்கு குரலை உயர்த்தி சத்தமா பேசுனா புடிக்காது. அதனால எதுக்கு வம்புன்னு சைகை காட்டிடுவா அவங்க இருக்கற நேரத்துல.
“என் வாயை மூடினா நாய் கூட மதிக்காது அன்னம். ஆனா பாரு உனக்கு அன்னக்கிளின்னு பேர் வச்சிருக்காங்க. கிளி மாதிரி பேசாம சைகை பண்ணிக்கிட்டு இருக்க” செவ்வந்தி விசனப்பட்டாள்.
“வாசல்ல அப்பா இருக்காரு அவர்கிட்ட வாங்குறது?” அன்னம் சைகையில் கேட்டாள்.
“நீ கொடு அன்னம். அப்பத்தான் ராசி எனக்கு. உங்கப்பாகிட்ட வாங்குனா பத்து பைசாக்கூட கையில தங்க மாட்டேங்குது. ஓட்டைக் கையி அவருது” செவ்வந்தியின் பேச்சை காதில் வாங்கியபடி வந்த தயாளன்,
“அன்னம் அவளுக்கு பணத்தைக் கொடுத்துட்டு இதில குறிச்சு வை. அப்படியே கிளம்பு நான் காலேஜ்ல விட்டுட்டு வரேன்” கையில் உள்ள கணக்குப் புத்தகத்தை அவள் எதிரே வைத்தார்.
“செவ்வந்தி ஆயிரத்தி ஐநூறு இருக்கு இதில” எதிரே நின்றவள் கையில் பணத்தை எண்ணி வைத்தாள்.
“அவகிட்ட காசைத் தராத கண்ணு. நம்ம வீட்டுக்கு ஊத்துற பாலுக்கு மேலயே காசு பார்த்துடுறா. திருடி” கருப்புச்சாமி அங்கே ஆஜர் ஆனான்.
“அது என் சமர்த்துய்யா. உனக்கேன் குத்துது” இருக்கும் இடம் மறந்து அவனிடம் வாயாடினாள்.
“என்ன செவ்வந்தி காலையிலேயே சத்தம் சுலோச்சனா அவர்கள் பேச்சைக் காதில் வாங்கியவாறே வந்தார்.
“இப்ப வாய் திறடி பாக்கறேன் ராங்கி” உதடுகள் அசைய சத்தம் வராமல் சொன்னவனைப் பார்த்தவளுக்கு பத்திகிட்டு வந்தது.
Post Views: 421