11. ஜீவனின் ஜனனம் நீ…!!

4.5
(2)

💕 *ஜீவனின் ஜனனம் நீ…!!* 💕

 

ஜனனம் 11

 

“என்னக்கா சொல்லுற? ராஜ் அண்ணா பேசலயா உன் கூட?” ஜனனி சொன்னதைக் கேட்டு மகிஷா அதிர்ச்சியோடு கேட்க, “ம்ம். கல்யாணம் முடிவு பண்ணியாச்சாம்” கண்ணீர் வற்றிப் போயிருந்தது அவள் விழிகளில்.

 

அவளது அலைபேசியில் மேசேஜ் வரும் சத்தம். அதைக் கண்டும் காணாமல் இருக்க, ராஜீவ் அழைத்திருந்தான்.

 

அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்ற ஜனனிக்கு ஆன்ஸ்வர் செய்து காதில் வைப்பதற்குள் கை நடுங்கியது.

 

“ஹ..ஹலோ ராஜ்” என்றாள், கைகளோடு குரலும் நடுங்க.

 

“ஜானு நான் சொல்லுறதைக் கேளு. உன் கிட்ட நான் பேசனும் டி” அவன் குரலிலும் ஏதொவொரு உணர்வு.

 

“சொல்லு” அனுமதியளித்து விட்டாள்.

 

அவனது நண்பன் சொன்னது போல சொன்னான். அவனது அம்மா திருமணத்திற்கு தேதி குறித்து விட்டாராம். 

 

“நான் அம்மா கிட்ட உன்னைப் பற்றி சொன்னேன் ஜானு. உன் கூட பழகுறதை சொன்னேன். அம்மா என் கிட்ட கோபப்பட்டாங்க. அவங்க தம்பி பொண்ணுக்கு நிச்சயம் பண்ணி இருக்கும் போது எப்படி இன்னொரு பொண்ணு கூட பழகலாம்னு திட்டிட்டாங்க” எனும் போது அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

 

“உனக்கும் என் தம்பி பொண்ணுக்கும் கல்யாணம் சின்ன வயசுல இருந்து பேசிட்டோம். அது ஊரு முழுக்க தெரியும். இப்போ திடீர்னு நீ வேண்டாம்னு சொன்னா அவ வாழ்க்கை என்னாகுறது? அவளை யாரு கட்டிக்குவா? ஒரு பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிடாதே ராஜ். என் குடும்பத்தின் முன்னால் என்னை குற்றவாளியா நிறுத்தாத” கண்ணீரும் கோபமுமாக சொல்லி இருந்தார் அவனது தாய்.

 

“எனக்கு என்ன பண்ணுறதுன்னு புரியல ஜானு. எனக்கு வாழவே பிடிக்கல டி. வெறுப்பா இருக்கு. வீட்டில் இருக்க பிடிக்கல” கரகரத்த குரலில் மொழிந்தான் ராஜீவ்.

 

“ராஜ்! இப்படிலாம் பேசாத டா. உங்க அம்மா சொல்வது உண்மை தானே. நானும் நீயும் சேர்ந்தா நமக்கு மட்டும் தான் சந்தோஷம். ஆனால் உங்க குடும்பமே உடைஞ்சு போயிடும். எல்லாரையும் காயப்படுத்தி, நாம என்னிக்குமே சந்தோஷமா வாழ்ந்துட முடியாது.

 

இதுவே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாரும் சந்தோஷப்படுவாங்க. நானும் கஷ்டப்படுவேன், நீயும் கஷ்டப்படுவ. அது கண்ணுக்கு தெரியாம போயிடும் ராஜ். ஆனால் நம்ம காதலுக்காக ஒரு பொண்ணு வாழ்க்கை, உன் அம்மாவோட சந்தோஷம், அந்த குடும்ப உறவுகள் பாதிக்கப்படுறதுக்கு நாம யாருக்கும் தெரியாம உள்ளுக்குள்ள கஷ்டப்பட்டுட்டு வாழ்ந்துடலாம்” தனது எண்ணத்தைக் கூறியவளுக்கு கண்ணீர் நில்லாமல் வழிந்தது.

 

“நீ சொல்லுறது நிஜம். ஆனால் உன்னை மறந்து நான் எப்படி வாழுறது?” 

 

“இன்னிக்கு எல்லாக் காதலும் சேர்றது இல்ல ராஜ். பிரிஞ்சு கூட போகும். அதுவும் நீ உன் குடும்பத்துக்காக காதலை விட்டுக் கொடுக்கப் போற. காலம் எல்லாத்துக்கும் மருந்தா அமையும்” அப்படிச் சொல்லும் போது அவளுயிர் அவளிடம் இல்லை.

 

எத்தனை கனவு கண்டாள்? அவனோடு கரம் கோர்த்து எங்கும் பயணிக்க விரும்பினாள். அவனது அருகாமையில் மகிழ்வோடு வாழ்ந்திட நினைத்தாள்.

ஆனால்? யாவும் கனவாகவே கலைகின்றதே.

 

“இப்போ நான் என்ன பண்ணனும் ஜானு? இதுக்கு மேல உன் கிட்ட நான் எப்படி பேசுறது?” அவன் தயக்கமாகக் கேட்க, “இல்லை ராஜ். இனிமே நாம பேச வேண்டாம். உனக்கு இனி அந்தப் பொண்ணு தான் வாழ்க்கை. அவ கூட வாழ மனசை மாத்திக்க. என்னை மறந்துடு. ஜானுங்கிற ஒருத்தி உன் வாழ்க்கையில் இருந்தா என்கிற நினைவை அழிச்சிடு” எனும் போது விம்மினாள்.

 

“நான் உன் வாழ்க்கையில் வந்திருக்க கூடாது ஜானு. நான் தான் பெரிய தப்பு பண்ணிட்டேன். உனக்கு ஆசையை தந்து ஏமாத்துறேன். எனக்கு கில்ட்டியா இருக்கு டி” அவளது அழுகை அவனைத் தாக்கியது.

 

“இல்லை ராஜ். அதைப் பற்றி பேசி எந்த பிரயோசனமும் இல்லை. நீ என் வாழ்க்கையில் வந்த, இப்போ போற. இடையில் அழகான மெமரீஸ்ஸ தந்த. அதை அப்படியே மூடி வெச்சுட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரலாம்” அவனிடம் சொல்லியவளிடம் மனம் கேட்டது, இதை உன்னால் செய்ய முடியுமா என்று.

 

“ஓகே. நான் போறேன். சந்தோஷமா இரு டி. உன் வாழ்க்கையைப் பார்த்துக்க” அழைப்பைத் துண்டித்து விட, “நீயில்லாம எனக்கு ஏது சந்தோஷம்? எல்லாமே போயிடுச்சு ராஜ். மிஸ் யூ டா‌. மிஸ் யூ சோ மச்” கைகளுக்குள் முகம் புதைத்து கதறியழுதாள் காரிகை.

 

“ஏய் ஜானு” நந்திதா அவள் தோள் தொட, “என்னால முடியல நந்து. சந்தோஷமா இருக்க சொல்லுறான். அவன் இல்லாம நான் எப்படி சந்தோஷமா இருப்பேன்? காதலிச்சவங்க கூட சேர முடியாதுன்னா ஏன் காதல் வரனும்?” அழுகையூடு கேட்டாள் ஜனனி.

 

“குடும்பத்துக்காக காதலை விட்டுக் கொடுக்கிறதா? உன்னைப் பற்றி யோசிக்க மாட்டாரா?” கோபமாகக் கேட்டாள் மகி.

 

“சொல்லுறது ஈசி மகி. ஆனால் நிஜத்துல அது ரொம்ப கஷ்டமானது. சீரியல்ல எல்லாம் ஹீரோயின் அப்பாவுக்காக, குடும்பத்துக்காக காதலை விட்டுக் கொடுக்க நெனக்கிறப்போ நாம திட்டுறோம். ஆனால் அது நமக்கே நடக்கும் போது புரியுது, அந்த கஷ்டம் எவ்ளோ பெரிசுன்னு. மத்தவங்களுக்கு கமெண்ட் அடிக்கும் போது விளங்காது. எதுவும் நமக்கு வந்தா தான் புரியும்” பெருமூச்சு விட்டவளுக்கு ஆறுதல் வார்த்தை கூறினர், சகோதரிகள் இருவரும்.

 

…………………

சத்யாவின் வீட்டிற்கு வந்திருந்தனர், மகேந்திரனின் தங்கை நீலாம்பரியும் அவரது மகளும்.

 

நீலாம்பரியின் கணவர் சிவநேசன் மிகவும் நல்லவர். நீலாம்பரிக்கு மேகலை என்றால் ஆகாது. எப்போதும் அவரை ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். அவர்களுக்கு ஒரு மகள் நீரஜா. முதலில் சத்யாவுக்கு கட்டி வைக்க நினைத்தாலும், அவன் மறுத்து விட்டான். மற்ற இருவருள் ஒருவரைத் தன் மாப்பிள்ளையாக்கிக் கொள்வது அவரது எண்ணம்.

 

“வாங்கண்ணி! நல்லா இருக்கீங்களா?” மேகலை சுகம் விசாரிக்க, “இருக்கேன் இருக்கேன்‌. சத்யாவுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன்” என நீலாம்பரி கேட்க, அவரும் தலையசைத்தார்.

 

“முதல் கல்யாணம் தான் எங்க கிட்ட கேட்காம எங்கேயோ மூளையில் பொண்ணு எடுத்தீங்க. அது சரியா இருந்திருந்தா ரெண்டாவது கல்யாணமே தேவைப்பட்டிருக்காது” என்று சொல்ல, மேகலைக்கு மனம் கலங்கியது.

 

“இப்போ கூட நம்ம குடும்பத்தில் கேட்காம, வெளியூர்ல பொண்ணு எடுக்கப் போறீங்க. அதுவும் நல்லா இருந்தா சரி. இல்லனா மூனாவது கல்யாணம்..” என ஆரம்பிக்க, “உங்களுக்கு மூனு கல்யாணம் தேவைப்படுதா அத்தை?” எனக் கேட்டவாறு வந்தான் ரூபன்.

 

“என்னைச் சொல்லல டா. உங்க அண்ணாவை சொன்னேன்” என்று சொல்ல, “எங்கம்மாவோட சாய்ஸ் எப்போவும் பெஸ்டா இருக்கும் அத்தை. இந்த கல்யாணத்தை பார்க்க தானே போறீங்க” என்றான் அவன்.

 

“அதான் அத்தை. முதல் ஆளையும் கரெக்டா தேடினோம். அவங்க பிழையானதுக்கு எங்கம்மா காரணமாக முடியாது. எங்கம்மா சாய்ஸ் பெட்டரா இருக்கிறதால் தான் அவங்களுக்கு உங்க அண்ணன் கிடைச்சார்” அமைதியாகப் பேசினாலும், தேவனின் பேச்சில் ஆத்திரம் நிறைந்திருந்தது.

 

“அது சரிடா மருமவனே. இந்த சம்பந்தமாவது நல்லபடியா அமைஞ்சு அவன் வாழ்க்கை சந்தோஷமா இருந்தா அது போதும்” மேற்கோண்டு எதுவும் பேசாமல் அமைதியானார்.

 

தேவ், ரூபன் முன்னால் மேகலையை எதுவும் சொல்வதில்லை அவர். சொன்னால் அம்மா மீதுள்ள பாசத்தில் அவரது மூக்கை உடைத்து விடுவார்கள்.

 

“அப்பறம். நீரு காலேஜ் போறியா?” ரூபன் கேள்வியெழுப்ப, “போறேன் ரூபன். இப்போ செமஸ்டர் லீவ்” என்றவளது பார்வை தேவன் மீது படிந்து மீண்டது.

 

“தேவ் அத்தான்…!!” என்று அழைக்க, “அதென்ன அத்தை எல்லாரும் அவனை மட்டும் அழகா உறவு சொல்லி பேசுறீங்க. என்னை மட்டும் கண்டுக்கவே மாட்றீங்க?” புலம்பலை அள்ளி வீசினான் ரூபன்.

 

“தேவ்! உன்னை நீரு கூப்பிட்டாள்ல. என்ன ஏதுன்னு பேச மாட்டியா? அத்தை பொண்ணு தானே. பேசிப் பழகு டா” என்று நீலாம்பரி கூற, “முதல்ல நீங்க என் அம்மா கிட்ட ஒழுங்கா பேசிப் பழகுங்க அத்தை. அவங்களை கஷ்டப்படுத்துற மாதிரியே பேசும் போது எனக்கு உங்க யாரோடவும் சிரிச்சு பேச தோணுறதில்ல” வெளிப்படையாகவே சொல்லி விட்டான் தேவன்.

 

“தேவ்” மேகலை கண்டிப்போடு அழைக்க, “பார்த்தீங்களா அத்தை? நீங்க அவங்களை வார்த்தைகளால காயப்படுத்துறீங்க. ஆனால் நாங்க உங்களை எதுவும் சொல்லக் கூடாதுனு நெனக்கிறாங்க. யாரையும் கொஞ்சம் கூட காயப்படுத்தாத மனசு இவங்களுக்கு. அது தான் எங்க அம்மா” தாயைத் தோளோடு சேர்த்து அணைத்தான் தேவ்.

 

“சரி அண்ணி. அப்போ நாம கிளம்புறோம்” என அவர் எழுந்து கொள்ள, “நேரத்தோட வந்துரு நீலா. நீ தான் எல்லாத்தையும் முன்னின்னு நடாத்தனும்” என்று சொல்லியனுப்பினார் மேகலை.

 

“டேய்! செமயா சொன்னடா அவங்களுக்கு” என ரூபன் சொல்ல, “எங்கம்மாவை ஏதும் சொன்னா கேட்க ஆள் இல்லேனு நெனச்சிட்டாங்க போல. என்னால சும்மா இருக்க முடியாது டா” தலையை சிலுப்பிக் கொண்டான் தேவன்.

 

“எனக்கு உங்க அன்பு போதும் டா. ஆனால் அத்தை கிட்ட எதுவும் பேசாதீங்க. எவ்ளோ பேசினாலும் அவ உங்க அப்பாவோட கூடப் பிறந்தவ. அப்பா போனதுக்குப் பின்னால கூட நம்ம உறவுகளை முறிச்சுக்க முடியாது. அந்த உறவுகளைப் பேணி வாழனும். அதான் நீங்க உங்கப்பாவுக்குக் கொடுக்கிற மரியாதை. அவர் குடும்ப விஷயங்கள்ல அவர் சார்பா நீங்க கலந்துக்கனும். அவருடைய இடம் உங்களுக்கானது” என்று சொல்ல,

 

“எங்களுக்கு தெரியும் மா. நாங்க உறவுகளை முறிச்சுக்க மாட்டோம். உங்களுக்கு எப்போவும் பழி விழாம, நீங்க சொன்னதைக் கேட்டு நாம இருப்போம்” என்று மகன்கள் கூற, அவர்களது கன்னத்தில் கை வைத்து அன்போடு பார்த்தார் மேகலை.

 

படிக்கட்டில் நின்றவாறு தம்மைப் பார்த்துக் கொண்டிருந்த யுகனை மேகலை அழைக்க, அருகில் வந்து அவர் மடி மீது அமர்ந்தான்.

 

“எனக்கு ஏன் பாட்டி பாசமான அம்மா கிடைக்கல?” அவன் கேட்ட கேள்வியில், மூவருக்கும் என்னவோ போல் ஆகியது.

 

“எனக்கு கவலை இல்லை பாட்டி. அம்மாவும் தேவையில்லை. ஆனால் நீங்கள்லாம் இப்படி அன்பா இருக்கிறதைப் பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரி இருக்கு” மேகலையின் நெஞ்சில் சாய்ந்து கொள்ள,

 

“உனக்கு தான் புது அம்மா வரப் போறாங்கள்ல யுகி. அவங்க உன்னை இதை விட பாசமா பார்த்துப்பாங்க. உனக்கும் அம்மா கிடைப்பாங்க செல்லம்” அவனது நெற்றியில் முத்தமிட்டான் தேவன்.

 

“நீ டாடி கிட்ட இப்படி கேட்டா அவர் என்ன சொல்லுவார்?” என ரூபன் வினவ, “டாடி கிட்ட அம்மா பற்றி கேட்கவே மாட்டேன் ரூபி. அவர் ஃபீல் பண்ணுவார்ல. எனக்கு அம்மாவும் வேண்டாம். டாடி ஹேப்பியா இருந்தா போதும்” என்றவனது பேச்சில், சத்யாவின் கண்களில் மெல்லிய நீர்ப் படலம்.

 

மகன் சொன்னதைக் கேட்டு, அவனுக்கு தன் மீதுள்ள அன்பில் உருகிப் போய் நின்றான் சத்ய ஜீவா.

 

தொடரும்…..!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!