11 – உள்நெஞ்சே உறவாடுதே!

4.5
(11)

அத்தியாயம் 11

இதழ் ஒற்றல்
நான் கேட்டேன்…
உயிர் தாவும்
இதம் தந்தாய்!

உன்னழகில்
உருக்கம் கண்டேன்…
ஊன் சிவக்கும்
முறுவல் தந்தாய்!

இனி என்ன நான் செய்வேன்…
நெஞ்சூறும் நேசம் பிறக்க!

———————-

“இன்னைக்கு ஈவ்னிங் கிளம்பிடலாமா ருதி… நாளைக்குச் சென்னைக்குப் போகணும்!” ஷக்தி மகிழவன் வினவ, “கிளம்பிடலாம் மகிழ்!” என்றாள்.

கூடவே சிறு அமைதியும்.

“என் அப்பாட்ட என்னைப் பத்தி எதுவும் சொல்ல மாட்டீங்க தான?” தவிப்புடன் வினவ,

அது என்னவோ அவனைக் காயப்படுத்தியது. அவளது நம்பிக்கையின்மை கொடுக்கும் அழுத்தமெனப் புரியாது, “நான் சொல்லுவேன்னு நம்புறியா ருதி?” எனக் கேட்டான் ஏமாற்றமாக.

“இல்ல மகிழ், சொல்ல மாட்டீங்க…” வேகமாகத் தலையசைத்ததில் சிறு நிம்மதி அவனுள்.

இருவரும் உடைகளைப் பெட்டிகளில் அடுக்கிக் கொள்ள, ஓட்டுநர் வருவதற்கு இன்னும் நேரமிருந்தது.

“ருதி…” ஷக்தி அழைத்ததும் அவள் நிமிர,

“இன்னைக்கு கிஸ் பண்ணலாம்னு சொன்னியே?” என்றான் அமைதியாக.

செவ்வானமாய் சிவந்து போயிருந்தவள், ஏற்கெனவே இதனை எதிர்பார்த்திருந்தாள் தான்.

“மறந்துட்டீங்களோன்னு நினைச்சேன்…” அவன் அதைப் பற்றியே பேசாது இருந்ததில், அவனுக்கு ஆர்வம் இல்லையோ என எண்ணி இருந்தாள். தானாகக் கேட்கவும் தயக்கம்.

“ஏன் அப்படி நினைச்ச? நான் மறக்கல. டைம் செட் ஆகட்டும்னு வெயிட் பண்ணுனேன். ஊட்டியை விட்டுப் போறப்ப ஒரு ஞாபகமா இருக்கும்ல?” ஷக்தியின் கூற்றில் அவளுள் ஓர் இன்பமழைச் சாரல்.

“வெறும் ஞாபகத்துக்காகத் தானா?”

“அதுவும் ஒரு காரணம்!”

“வேற என்ன என்ன காரணம் இருக்கு?” அவனைச் சீண்டினாள்.

“ஐ திங்க்… ஐ திங்க்… தெரியல, தோணுது… என்ன காரணமா இருக்கும்?” என அவளிடமே கேட்டவனிடம் என்னவெனச் சொல்வது.

அவளும் பேச்சற்று நின்று விட, வெளியில் இருந்து ஓட்டுநர் ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்டது.

“ட்ரைவர் அண்ணா வந்துட்டாருன்னு நினைக்கிறேன்…” அவள் அவசரமாகக் கூறினாள். வேகமாக முத்தமிட்டு விட்டுக் கிளம்பலாமென அவளது எண்ணம்.

அவள் வாய் விட்டுச் சொல்லாததிலேயே சீக்கிரம் கிளம்பி விடலாமென, அவள் முத்தத்தை மறுத்ததாக அவன் எண்ணிக் கொள்ள “ம்ம்!” என்று பெட்டியை எடுத்துக்கொண்டு காருக்குச் சென்றான்.

பிரகிருதியின் முகம் சுருங்கி விட்டது. அவனது பிரச்சினை புரிந்தாலும், முத்தம் வேண்டுமென்று எப்படி அவளே வெளிப்படையாகக் கேட்பது. பெண்ணிற்கே உரிய நாணம் தடுக்க, தானாகவே கேட்டால் அவன் தவறாக எண்ணுவானோ என்ற பயமும் எழுந்தது.

சமூகத்தைப் பொறுத்த வரையில், பாலின உணர்ச்சிகளை முதன்முறை வெளிப்படுத்துவது ஆணாகவே இருக்க வேண்டுமென்பது எழுதப்படாத விதியாகிற்றே. அதை மீறினால் அப்பெண்ணின் மீது அபாண்டமான பழி சுமத்தி விடுமே!

அதற்குக் கட்டுப்பட்டு, அவளுக்கும் உள்ளூர ஆசையெழுந்தாலும் ஏக்கத்துடன் மறைத்து விட்டுக் கோவை நோக்கிப் பயணித்தாள்.

ஆர்த்தியும், ரவிதரனும் மணமக்களை வரவேற்றனர். ஆர்த்தி தான், “மறுவீட்டுக்கு வந்துட்டு ஊட்டிலயே நாளைக் கழிச்சுட்டீங்களே. இங்க இன்னும் ரெண்டு நாள் இருக்கலாமே மாப்பிள்ளை…” எனக் கேட்க,

“முடியாது ஆண்ட்டி. வேலை இருக்கு.” என்று நேரடியாகவே மறுத்து விட்டான்.

இப்படிப் பட்டென முடியாது என்று சொல்வானென ஆர்த்தியும் எதிர்பார்க்கவில்லை. ரவிதரனோ, “சரி, அடுத்த லீவ்க்கு இங்க நாலு நாள் தங்குற மாதிரி வாங்க…” என்று மரியாதைக்காக அழைக்க, சமாளிக்கவேனும் ‘கண்டிப்பா வரேன்!’ என்று பசப்பு வார்த்தைகளை வீசாது, “நாலு நாள் தொடர்ந்து வேலையை விட்டுட்டு வர முடியாது அங்கிள். நீங்க சென்னைக்கு வாங்க, பார்க்கலாம்… நாளைக்கு இயர்லி மார்னிங் பிளைட், தூங்கலாமா ருதிடா?” என்றவனுக்கு அவளிடம் பேசும்போது மட்டும் தானாய் ஒரு மென்மை குடியேறியது.

ரவிதரனின் முகம் சிறுத்து விட, அதனைப் பிரகிருதி கண்டு கொண்டாள்.

ஆனாலும், அவனை மீறிச் சொல்வதற்கு ஒன்றுமில்லையே. அவனுக்கு அகமொன்று வைத்துப் புறமொன்று பேசிட இயலாது எனப் புரிந்தவள், அவனுடனே அறைக்குள் நழுவிக் கொண்டாள்.

ஷக்தி மகிழவன் தனது ரீடிங் நேரத்தை முடித்து வரும் வரையில், அவளும் ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தாள்.

“ரீடிங் முடிஞ்சுதா?” அவன் வரும் வரைக்கும் படிக்க எண்ணியவள், புத்தகத்திலேயே மூழ்கிப் போயிருக்க, ஷக்தி தான் அவளை மீட்க வேண்டியதாகப் போயிற்று.

அதில் புத்தகத்தை மூடி வைத்தவள், “ம்ம்… நான் சும்மா தான் படிச்சுட்டு இருந்தேன். தூங்கலாமா?” அவளும் மறுகேள்வி கேட்டாள்.

அவன் தலையசைத்ததும், அறையை முழுதாய் இருட்டாக்கி இருவரும் கட்டிலில் படுத்தனர்.

இருவருக்கும் இடையில் போதிய இடைவெளியும் இருந்தது.

அவ்விருட்டின் வழியே ஷக்தி மகிழவனின் ஆழ்ந்த குரல், பிரகிருதியின் செவிப்பறையைத் தீண்டியது.

“ருதி… இந்த இருட்டு உனக்குப் பிடிக்குமா?”

“ம்ம் ரொம்ப…”

“ஏனாம்?”

“இந்த இருட்டு, என் நிஜத்தை மட்டுமே பார்க்கும் மகிழ்…” இருளில் கருவிழிகளிரண்டை அங்கும் இங்கும் சுழற்றினாள்.

அவனிடம் சிறு அமைதி.

பின், “நான் எப்போ உனக்கு இந்த இருட்டா மாறுவேன் ருதிடா?” ஆடவனின் ஒற்றைக் கேள்வியில் ஓராயிரம் அர்த்தங்கள்.

“மகிழ்!” அவனது கேள்வி புரிந்து நெகிழ்ந்து போனவளின் கண்களில் சிறு துளியாய் கண்ணீர்.

“ஜஸ்ட் தோணுச்சு!” அதையும் அவன் அதிகப்படியாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனாலும், அலைபாய்ந்த உள்ளமதின் வேட்கை புரியாது சோர்ந்து போனான்.

சில நொடிகள் கழிய, “பொதுவா எல்லாரும், அவங்களுக்குப் பிடிச்சவங்க வாழ்க்கைல வெளிச்சமா வரணும்னு தான் நினைப்பாங்க. நீங்க இருட்டா வர்றேன்னு சொல்றீங்க…” பிரகிருதியின் குரலில் கிண்டல்.

அதனைப் புரிந்து கொள்ள இயலாதவன், “ஹர்ட் பண்ணிட்டேனாடா”? எனக் கேட்க,

“அச்சோ இல்ல மகிழ். சும்மா உங்களை டீஸ் பண்ணக் கேட்டேன்.” என்றாள் வேகமாக.

“உனக்குப் பிடிச்சது இருட்டு தான. அப்போ வெளிச்சமா வந்து உன்னை இரிட்டேட் பண்ண முடியுமா? அதான் அப்படிச் சொன்னேன்.” சொன்னபடி ஷக்தி அவள் புறம் புரண்டு படுத்தான்.

அவள் இதழ்களில் சிறிதாய் புன்னகை மலர, “ருதி மேடம் பதில் சொல்ல மாட்டீங்களோ?” என்றான் எதிர்பார்ப்பாக.

“ஸ்மைல் பண்ணுனேன். இருட்டுல உங்களுக்குத் தெரியல!” சிறுபிள்ளையாய் அவள் கூற,

“ஆமா தெரியல. டச் பண்ணிப் பார்க்கட்டா, நீ ஸ்மைல் பண்றியானு?” ஷக்தி கேட்டதும், கன்னக்கதுப்புகள் சிவந்தது.

“ம்ம்!” அவளிடம் இருந்து சிறு சம்மதம் கிடைக்க, விரல் கொண்டு அவள் முகம் இருக்கும் திசையில் வருடியவனின் கையில் நேரடியாகச் சிக்கிக் கொண்டது இதழ்கள்.

“சில்லுன்னு இருக்கு உன் லிப்ஸ்!” ஷக்தியின் கூற்றில் ரசனை உணர்ந்தாள்.

அவனோ விரல் எடுக்காது வருடியபடியே இருக்க, வெட்கம் தாளாது அவனது கையை எடுத்துப் பிடித்துக் கொண்டாள்.

“வேணாமா ருதிடா?”

“ஷையா இருக்கு மகிழ்!”

“சோ, இப்ப உன் சீக்ஸ் ரெட் ஆகிடும் கரெக்ட்டா?” என்றவனின் ஆர்வம் நிறைந்த வார்த்தைகளில் இன்னுமாய் சிவந்தது அவளது மேனி.

“ஆமா…” மெலிதாய் அவள் கூற,

“பார்க்கணுமே ருதிடா உன் முகத்தை. அந்த டைம்ல உன்னைப் பார்க்குறப்ப, எனக்குள்ள ஏதோ பண்ணுது. உன்கிட்ட க்ளோஸ் ஆகத் தோணுது…” என்றான் அவஸ்தையாக.

“ஐயோ… இப்ப இன்னும் ஷையா இருக்கே மகிழ். ப்ளீஸ்…” என அவன் கையைக் கொண்டே அவள் முகத்தை மூடிக் கொண்டாள்.

அவளது உடல்மொழியில், அவளுக்குத் தனது உரையாடல்கள் பிடித்திருக்கிறது எனப் புரிந்து கொண்டவனின் முகத்தில் பரவசம் நிறைந்தது.

ஆனால், உடனேயே அடுத்த உரையாடலுக்குத் தாவி இருந்தான்.

“உனக்கு இப்பப் பேசுறது கூட முன்னவே பிராக்டிஸ் பண்ணிருக்கணுமா ருதிடா?” ஷக்தி கேட்க, அவளுக்கோ இன்னும் அவன் பேசி முடித்ததற்கான உணர்வலைகளே அமைதி பெறாத நிலை.

சட்டென இயல்பாய் பேச இயலாமல் திணறிட, “என்ன ஆச்சுடா?” என்றான்.

இன்னும் தன்னைச் சிவக்க வைக்க, ‘ஸ்வீட் நத்திங்ஸ்’ வேண்டுமென்று சொல்லத் தயங்கி விட்டு, “சின்ன வயசுல இருந்து நார்மலா ஹேண்டில் பண்ற கேள்விகள், சோசியல் ப்ராப்ளம்ஸ், ரெகுலர் இன்ஸிடண்ட் இதுக்குலாம் ரொம்ப ரிகர்சல் பண்ணனும்னு தேவை இல்ல. ஆனா, சடனா ஒரு பங்க்ஷன், திடீர்னு ஒரு டெத், திடீர்னு ஒரு மீட்டிங், சர்ப்ரைஸ்னு அதைப்பத்தி மனசுக்குள்ள ஒரு ரிகர்சல் பண்ணக் கூட டைம் இல்லாம நடக்குற விஷயங்கள் தான் என்னை ரொம்ப அஃபெக்ட் பண்ணும் மகிழ்.

இப்போ ரேடியோ ஸ்டேஷன் போறேன். அங்க ரெகுலரா நடக்குற விஷயங்கள், ரெக்கார்டிங்ஸ் இதெல்லாம் எனக்குப் பழகி இருக்கும். அப்படி இருந்தும் மனுஷங்க கூட இன்டராக்ட் பண்ணக் கடுப்பா தான் இருக்கும். பிடிக்காத விஷயத்தை வலுக்கட்டாயமா திணிக்கும்போது, சடனா புதுப் புது நபர்களைப் பார்க்கும் போது, நான் ப்ரிப்பேர் பண்ணி வைக்காத மாதிரியான கேள்விகளைக் கேட்குறதுன்னு… இதுக்குலாம் ரொம்ப ரியாக்ட் பண்ணிடுவேன்.

நேத்து ரிசப்ஷன்ல கூட அப்படித்தான் பேபி பத்திக் கேட்கவும் பதறிட்டேன். அதுக்கு நம்ம எந்தப் பிளானும் பண்ணலை தான? நானும் ப்ரிப்பேர் பண்ணிக்கல. நெர்வஸ் ஆகிட்டேன். அந்த மாதிரி சிட்டுவேஷன்ல தான் கஷ்டமே தவிர, மேனேஜ் பண்ணிப்பேன் மகிழ். ப்ராப்பரா எல்லாம் நடக்குறப்ப, என்னை கம்ஃபர்ட்டபிளா வச்சுக்குற வரை எனக்கு ஸ்ட்ரெஸ் இருக்காது. ஆனா, யாருக்கும் என்னோட உணர்வு தேவைப்படல… உங்களைத் தவிர…” என்றதில் அவனது கரம் அவளது கரத்தை மெல்ல அழுத்திக் கொடுத்தது.

“இப்ப உங்களோட பேசுறது எல்லாம் நான் முன்னாடியே ப்ரிப்பேர் பண்ணிக்கலை தான். ஆனா நீங்க ஒன்னும் என்கிட்ட எதையும் போர்ஸ் பண்ணித் திணிக்கலையே. என்னை சாஃப்ட்டா ஹேண்டில் பண்றீங்க. என்னைப் பத்தித் தெரியுறதுக்கு முன்னாடி இருந்தே… உங்களுக்கு விருப்பமானதைக் கூட எனக்கும் விருப்பமான்னு கேட்டுத்தான் செய்யறீங்க. அதனால உங்ககிட்ட இருக்கறப்ப எனக்கு வெளியாள்கிட்ட இருக்குற ஃபீல் இல்ல. உங்ககூடப் பேச எனக்கு ஏனோ ரிகர்சல் தேவைப்படல மகிழ்!” எனும்போது உள்ளம் பூரித்துப் போனானோ என்னவோ, மீண்டும் ஒரு கையழுத்தம் கொடுத்தான் ஆடவன்.

“பீலிங் லைட் ருதிடா…” ஷக்திக்கு வானத்தில் பறப்பது போலான மனநிலை.

தனது கூற்று அவனை நெகிழ வைத்திருக்கிறது எனப் புரிய அவளுக்கும் புன்சிரிப்பு.

எத்தனைப் பெரிய உணர்வையும் அவன் அளவாகவே காட்ட இயலும் எனப் புரிந்தது. ஆனால், அதனை எல்லாம் பழகிக்கொள்ளத் தான் அவளுக்கு நேரம் தேவைப்பட்டது.

அதிக காயங்களைக் கண்டவள். அவனது அன்பு மட்டுமே தற்போது பிடிமானமாக இருக்கிறதென்றாலும், அவளுள் முழுதாய் கிரகித்துக் கொள்ள, அவன் முழு உணர்வையும் கொட்ட வேண்டும்.

அவனால், அது முடியாதனாலேயே அவன் மீது எழுந்த ஆழமான அழுத்தமான நேசம், அடிநெஞ்சிலேயே அமைதியாகப் பதுங்கி இருக்கிறது.

அதன்பிறகு, அவ்வறையில் வெறும் மௌனம் மட்டுமே ஆக்கிரமிக்க, மறுநாள் மீண்டும் சென்னைக்குத் திரும்பினர் தம்பதியினர்.

வீடை இருவருமாகச் சுத்தம் செய்து முடித்து விட்டு, ஆசுவாசமாக காபியுடன் சோபாவில் அமர்ந்தனர்.

“பேக் டூ ஹோம். எங்க போனாலும் திரும்ப இந்த வீட்டுக்கு வந்ததும் தான் ஒரு… ஒரு…” ஷக்தி புருவம் சுருக்கிக் கூறிட,

“ஒரு சேஃப் ஃபீல் வருதுல்ல?” என முடித்து வைத்தாள் பிரகிருதி.

“ம்ம், எஸ் மே பி” குறுநகை அவனிடம்.

“ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் தான நீங்க இங்க இருக்கீங்க. அதுக்கு முன்னாடி அப்பா, அம்மா கூட தான் இருந்திருப்பீங்க. நியாயமா அது தான உங்களுக்கு ஹோம் பீல் தரணும்?” பிரகிருதி குழப்பமாகக் கேட்டாள்.

அவனும் மெல்லக் குழம்பினான். “பிறந்ததுல இருந்தே அப்பா, அம்மா கூடத்தான் இருந்தேன். ஆனா இந்த வீடு தான் எனக்கு ஹோம் மாதிரி இருக்கு. தெரியலையே ஏன்?” என அவளிடமே கேட்டான்.

“நான் இருக்குறதுனாலயா?” தவிப்பும், ஆர்வமும் கலந்து அவள் வினவ,

ஷக்தியின் அழுத்த விழிகள் பளிச்சிட்டது.

“ஆமா… நீ என்னை, என் வெளிவராத உணர்வை நீயே உணர்ந்து உன் மூலமா எனக்கு உணர வைக்கிற. இந்த மாதிரி யாரும் என்னை உணர வச்சது இல்ல ருதிடா… சோ, உன் கூடத் தனியா இருக்குற இந்த வீடு தான் எனக்கு ஹோம்…” என்ற ஆடவனை அளவுக்கதிகமாக ரசித்து வைத்தாள் பிரகிருதி.

உணர்வுக் குவியலாக ஷக்தியின் முன் அமர்ந்திருந்தவள், அவனது அழகு முகத்தையே அளவெடுத்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க கியூட் மகிழ்!” நாணம் சூழ்ந்து உரைத்தவளிடம் புருவம் சுருக்கினான்.

“அதை எப்படி டிஃபைன் பண்ற… எந்த மெட்ரிக்ல மெஷர் பண்ணனும்?” தீவிரமாக அவன் கேட்டதில், அவள் வாய்விட்டே சிரித்து விட்டாள்.

அவளது சிரிப்பைக் கண்ணெடுக்காமல் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனது குழப்ப முகம் இன்னுமாக ரசனையைக் கொடுத்தது அவளுக்கு.

“மகிழ்… அன்னைக்கு கிஸ் கேட்டீங்களே?” என நாணம் மிகக் கேட்க,

“ஆமா கேட்டேன்! அதுக்கு என்ன?” என்றான்.

‘இதையும் வாய் விட்டுத்தான் சொல்லணும் போலயே’ என நெளிந்தவள்,

“அது… அது… எனக்கு ஓகே தான், இப்போ…” என்றதும் விழி விரித்தான்.

“என்ன ஓகே, கிஸ்ஸா?” நெற்றி உயர்த்தி ஆடவன் வினவ,

“ம்ம்!” என்றாள் தலையாட்டி.

“யூ மீன், லிப்ஸ் டச்சிங்?” மீண்டும் அவன் கேட்க,

“இவ்ளோ டீடெய்லா கேட்கணுமா? எனக்கு வெட்க வெட்கமா வருது!” என்று முகத்தை மூடிக் கொண்டவளின் செயல் அவனுக்குப் புதிதாய் இருந்தாலும் ரசிக்க வைத்தது.

“நான் எதுவும் தப்பாய் புரிஞ்சுட்டு உன்னை ஹர்ட் பண்ணிடக் கூடாதுல்ல ருதிடா. அதான் திரும்பத் திரும்பக் கேட்டுக்குறேன்.” அப்போதும் அவளது மனநிலையே அவனுக்குப் பிரதானமாய் பட, காதலை வாய் வார்த்தையாக அல்லாது தனது ஒவ்வொரு சிறு செயலிலும் அழுத்தமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

“நீங்க குட் பாய் மகிழ்!” அவனுக்கு நற்சான்றிதழ் வழங்கிய மனையாளைக் கண்டு தலை குனிந்து கவுரவப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டான்.

“ஆனா கிஸ் கேட்குறது எல்லாம் பேட் பாய் லிஸ்ட்ல தான வரும்?” சின்னதான மின்னல் அவனிடம்.

“கேட்காமல் குடுத்தா தான் பேட் பாய் லிஸ்ட்ல வரும். நீங்க டைம் தந்து தர்றதுனால குட் பாய் தான்!” என்றவளின் விளக்கத்தைக் கேட்டவனின் விழிகள் தானாய் அவளது இதழ்களில் பதிந்தது.

“உன் லிப்ஸ்ல இருக்குற லைன்ஸ் எல்லாம் லுக்கிங் குட்… எல்லாம் ஒரே ஷேப்ல இருக்கு.” சொல்லியவாறு அவன் நெருங்கியவுடன் அவள் மூச்சுத் தடுமாறியது. இதயம் தாளம் தப்பித் துடித்தது. அவனது கரத்தின் வெப்பம் பாவையின் கன்னங்களில் சூடேறச் செய்ய, இதழ்கள் ஒரு முறை லேசாய் குவிந்து பின் மூடியது.

வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்ள, எதிர்பார்ப்பும் ஆசையும் நிறைந்து கண்ணை மூடிக் கொண்டவளிடம், “கண்ணைத் திற ருதிடா. எனக்கு உன் கண்ணைப் பார்த்துக் கிஸ் பண்ணனும். நீ என்ன ஃபீல் பண்றன்னு பார்க்கணும்.” அவனது குரலில் இன்னும் இறுக்கமாகக் கண்ணை மூடிக் கொண்டாள்.

“இந்த ஒரு தடவை கண்ணை மூடிக்கிறேன் மகிழ். நான் நெர்வஸ் ஆவேன்னுலாம் நீங்க ஃபீல் பண்ணாதீங்க.” என அவனுக்குத் தைரியம் கொடுக்க, அதுவே அவனை இன்னும் நெருங்க வைத்தது.

இரு கன்னத்தையும் மெல்லப் பிடித்தவன், தனது இதழை அவள் இதழுடன் மெதுவாகப் பொருத்தினான்.

முத்தமிடவில்லை அவன். ஆனால், இதழ் தீண்டிய நொடியில் இரு உயிர்களும் இடம் மாறி இடவலமாய் அலைந்தது.

ஆடாமல் அசையாமல், அவளது அதரத்தை அவசரமாக ஆட்கொள்ளாமல், அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கண்ணியமாகக் கடைப்பிடிப்பவன் போல, இதழ் ஒற்றலை இம்மியளவும் சறுக்காது இனிமையாய் கடைப்பிடித்தான்.

வயிற்றில் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன பிரகிருதிக்கு. மெல்ல மெல்ல நெருக்கம் கொண்ட இரு உள்ளங்களின் ஆத்மார்த்த அன்பினைச் சோதிக்க எண்ணுவது விதியோ? சதியோ!

உறவு தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!