சொர்க்கம் – 11
காலையில் எழுந்ததுமே வில்லங்கம் சக்கரவர்த்தி மூலம் வீடு தேடி வந்து விட்டுச் செல்ல மூச்சு எடுக்கவே சிரமப்பட்டவளாக திணறிப் போனாள் செந்தூரி.
அதே கணம் அறை வாயிலில் நின்று அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்த மேகலாவைப் பார்க்கும் போது இப்போது அவர் மீது அவளுக்குக் கோபம் வரவில்லை.
அவரும் அதிர்ந்து போயிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டவள் “அம்மா நான் சீக்கிரமே ஒரு நல்ல வேலை தேடியாகணும்.. மு.. முதல்ல அப்பாவோட மருந்துக்கு நம்ம செலவுக்கு வீட்டு வாடகை கட்டுறதுக்காவது ஒரு சாதாரண வேலை வேணும்.. மத்தது எல்லாத்தையும் அதுக்கப்புறமா பாத்துக்கலாம்..” என்றவளின் கரத்தைப் பிடித்துக் கொண்ட மேகலாவோ,
“சக்கரவர்த்தி சார் எதுக்காக உன்ன விநாயக் சார்கிட்ட போகச் சொல்றாரு..? நீ போகலன்னா அவருக்கு அறுபது லட்சம் கொடுக்கணுமா..? இதெல்லாம் கேட்கும் போது எனக்கு பயமா இருக்குடி..” என்றார்.
“அவன் அத்தனை பேரும் முன்னாடியும் நான் அவனை அடிச்சதுக்கு என்ன அசிங்கப்படுத்தனும்னு நினைக்கிறான்.. அவனோட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கக் கூட நான் தயாரா இருக்கேன்.. ஆனா அவன் கேக்குறது என்னோட மன்னிப்பை இல்லை.. என்னோட மானத்தை… அதை எப்படிமா என்னால கொடுக்க முடியும்..? ஒரு மாசத்துல வட்டி மட்டும் தந்தா போதும்னு சொன்ன மோகன் சார் இப்போ முழு பணத்தையும் ஒரே வாரத்துல கேட்கிறதுக்கு கூட இவன்தான் காரணமாக இருப்பான்னு தோணுது..
எல்லா பக்கமும் என்னை நகர விடாம முட்டுக்கட்டை போட்டு திணறடிக்கிறான்னு தோணுதுமா.. ஆனா இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.. நீங்களும் பயப்படாதீங்க.. ஏதாவது ஒரு வழி நமக்கு கண்டிப்பா கிடைக்கும்..
இத்தனை வருஷமா நம்மள காப்பாத்தின கடவுள் இனியும் நம்மள காப்பாத்துவார்.. எத்தனை கதவு மூடினாலும் ஏதாவது ஒரு ஜன்னல் கூடவா நமக்காகத் திறக்காது..? பாத்துக்கலாம்மா.. நீங்க பயப்படாதீங்க… இன்னும் கொஞ்ச நேரத்துல நான் ரெடி ஆகி வேலை ஏதாவது கிடைக்குமான்னு பாத்துட்டு வந்துர்றேன்.”
“நீ பாத்துட்டு இருந்த வேலையும் என்னாலதானே போயிடுச்சு.. நான் வேணும்னா அந்த மேனேஜர் சார்கிட்ட போய் மன்னிப்புக் கேட்டு மறுபடியும் உனக்கு வேலை கொடுக்கச் சொல்லவா..?” என மேகலா கேட்க மறுப்பாக தலை அசைத்தாள் அவள்.
“இனி நீங்க என்ன கேட்டாலும் அங்க எனக்கு வேலை கிடைக்காதும்மா.. பரவால்ல விடுங்க.. இந்த உலகத்துல இருக்கிற எத்தனையோ வேலைகள்ல ஒரு சின்ன வேலை கூடவா எனக்குக் கிடைக்காது..? பாத்துக்கலாம்..” என்றவர் தன்னுடைய அன்னைக்கு தைரியம் கொடுத்துவிட்டு சற்று நேரத்தில் தந்தைக்கு சாப்பாட்டை ஊட்டிவிட்டாள்.
இந்த பிரச்சனை பற்றி எதுவும் கூறாத போதும் அவருடைய விழிகளிலோ கண்ணீர் படலம்.
அவள் கூறவில்லை என்றாலும் அந்த சிறிய வீட்டிற்குள் நடக்கும் பேச்சு வார்த்தைகள் அவருடைய காதில் விழத் தானே செய்யும்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவர் குழறலாகக் கூட அவளிடம் ஒற்றை வார்த்தை அதைப்பற்றிக் கேட்கவில்லை.
அவர் மௌனமாக கண்ணீர் சிந்த அவளுக்கோ நெஞ்சம் பிசைந்தது
‘எதைப் பத்தியும் நினைச்சு கவலைப்படாதீங்கப்பா.. எல்லாத்தையும் பாத்துக்கலாம்..” என தந்தையின் தலையை வருடி விட்டவள் எழுந்து கொண்டாள்.
மனம் பாரமாகிப் போனது.
மனம் ரணம் கொள்ளும் போது நெருங்கியவர்களிடம் சொல்லி அழுதாலே மனதின் ரணமும் பாரமும் குறைந்து விடும் அல்லவா..?
ஆனால் அவளுடைய நிலைமையோ நெருங்கியவர்களுக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் இருந்ததுதான் பரிதாபம்.
தன்னுடைய மனதின் ரணத்தை யாரிடம் கொட்டிக் கவிழ்ப்பது எனத் தெரியாது திணறித்தான் போனாள் அந்த இளம் மாது.
நேற்று வீட்டுக்கு கொண்டு வந்து விட்ட சேகரோ அதன் பின்னர் ஒற்றை வார்த்தை கூட அவளுக்கு ஆதரவாகக் கூறாமல் சென்றுவிட அவள் மனமோ ஓய்ந்து போனது.
காதல் என்பது கட்டித் தழுவி முத்தமிட்டு நீதான் என்னுடைய உலகம் எனச் சொல்லுவதில் இல்லையே.
மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் என்ன நடந்தாலும் நான் உனக்காக உன் கூடவே இருப்பேன் என்ற நம்பிக்கையைத் தருவது தானே காதல்.
அந்த நம்பிக்கையை சேகர் இதுவரை அவளுக்கு சிறிதளவும் கொடுக்கவே இல்லையே.
இதற்காகவா தன்னைத் துரத்தித் துரத்திக் காதலித்தான்..?
இந்த சினிமா என்ற புதைக்குழி வேண்டாம் என எத்தனை தடவை அவனிடம் கூறியிருப்பேன்.
நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் என்னை இந்த பாதாளத்திற்குள் இழுத்து விட்டு இப்போது எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலச் சென்று விட்டானே.
அவள் மனமோ ஒற்றை நம்பிக்கை வார்த்தைக்காக ஏங்கியது.
கவலைப்படாதே அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற ஒரு வசனம் அவளுடைய மனதிற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்து விடும்.
ஆனால் இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கூறுவதற்கு கூட அவளுக்கு யாருமே இல்லையோ என்ற பயம்தான் மேலும் அவளை பலவீனம் ஆக்கிக் கொண்டிருந்தது.
பின் தன்னைத்தானே சமாதானம் செய்தவளின் மனம் சேகர் ஏதாவது பதற்றத்தில் சென்றிருப்பான் அவனுடன் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தது.
தன்னுடைய ஃபோனை எடுத்து சேகருக்கு அழைத்தாள் அவள்.
“ஹலோ சேகர்..?”
“சொல்லுடி..”
“நான் உங்க கூட கொஞ்சம் பேசணும்..”
“நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்..”
“ஓஹ்.. இட்ஸ் ஓகே. நீங்க வீட்ல தானே இருக்கீங்க நான் அங்க வந்து உங்களை பார்க்கிறேன்..” என அவள் கூற மறு பக்கத்தில் அமைதியாக இருந்தான் அவன்.
“ஹலோ..? லைன்ல இருக்கீங்களா..?” என அழுத்திக் கேட்டாள் செந்தூரி.
“ஹாங் இருக்கேன்.. இன்னும் பத்து நிமிஷத்துல என்னோட வேலை முடிஞ்சுரும்.. நானே உங்க வீட்டுக்கு வரேன்.. வெயிட் பண்ணு..” என்றான் அவன்.
“இல்ல வீட்ல மீட் பண்ண வேணாம்.. நாம பேசுறது எல்லாமே அப்பாக்கு கேக்குது.. அவர் ரொம்ப மனசு உடைஞ்சு போறாரு.. பார்க்ல மீட் பண்ணலாம்.. இன்னும் அரை மணி நேரத்துல நான் அந்த பார்க்குக்கு வந்துடுறேன்.. நீங்களும் அங்க வாங்க..” என்றவள் சற்று நேரத்தில் அன்னையிடம் கூறிவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சற்று தொலைவில் இருந்த பார்க்கை நோக்கி நடந்து செல்லத் தொடங்கினாள்.
மனம் ஏனோ அதிகமாய் தடுமாறுவதைப் போலே இருந்தது.
பார்க்குக்கு சென்றவள் அங்கே அழகிய செடிகளுக்கு மத்தியில் போடப்பட்டிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
கவலை கொள்ளும் போதெல்லாம் அவள் ஓடி வந்து விடும் இடம் இந்தப் பூங்கா.
சிறுவயதில் அன்னை அடித்தது தொடக்கம் தன்னுடைய தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போனது வரை அவளுடைய சோகங்களையும் கண்ணீரையும் இந்தப் பூங்கா பார்த்திருக்கின்றது.
அமைதியாக அமர்ந்திருந்து மலர்ந்திருந்த பூக்களை உணர்வுகள் தொலைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள் சேகரின் மோட்டார் பைக் சத்தத்தை கேட்டதும் திரும்பிப் பார்த்தாள்.
ஆம் அவன்தான் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
“என்னடி ஏதாவது முக்கியமான விஷயமா..?” எனக் கேட்டவாறு அவளின் அருகே அவன் அமர்ந்து கொள்ள,
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு சேகர்.. சக்கரவர்த்தி சார் இன்னைக்கு காலையில வீட்டுக்கு வந்தாரு..”
“என்னது சார் வீட்டுக்கு வந்தாரா..? உன்னோட வீட்டுக்கா..?” என அதிர்ச்சி மாறாமல் திகைத்துப் போனவனாய் கேட்டான் சேகர்.
“ம்ம்..”
“ஏன்..?”
“அந்த ஹீரோ சார் படத்துல நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாராம்.. நான் அவர்கிட்ட போனாதான் அவரால படத்துல நடிக்க முடியுமாம்.. அதனால என்னப் போய் விநாயக் சார்கிட்ட பேசச் சொன்னாரு.”
“நீ என்ன சொன்ன..?”
“நான் முடியாதுன்னுதான் சொன்னேன்… அவன் ஒன்னும் என்ன பேசுறதுக்காக கூப்பிடல சேகர்.. அவ.. அவன் என்ன…” எனக் கூற வந்தவளுக்கு வார்த்தைகள் வராமல் தடுமாறின.
விழிகளில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழியத் தொடங்கியது.
“ஹேய் அழாதடி ப்ளீஸ்..” என்ற சேகரின் விரல்களோ அவளுடைய கண்ணீரைத் துடைத்து விட்டன.
“தப்பான நோக்கத்தோட என்ன அவன் வீட்டுக்கு வர சொல்றான்.. நான் எப்போ போனாலும் அவனோட வீட்டுக்கதவு திறந்தே இருக்குமாம்.. மன்னிப்புக் கேட்கப் போன என்கிட்ட எவ்வளவு தப்பா பேசினான் தெரியுமா..? என்னால சத்தியமா தாங்கிக்கவே முடியல சேகர்.. ரொம்ப வலிக்குது.. பயமா இருக்கு.. நான் என்னதான் பண்றது..?”
“சரி விடு.. நீ அவன்கிட்ட போகவே வேணாம்.. சக்கரவர்த்தி சார்கிட்ட முடியாதுன்னு சொல்லிட்டதானே..?”
“ம்ம்.. என்னால முடியாதுன்னு சொன்னதும் படத்துக்கு இதுவரைக்கும் அவர் செலவழிச்ச 60 லட்சத்தையும் என்ன கொடுக்க சொல்றாரு.. இன்னும் ஒரு வாரத்துல அந்தப் பணத்தை கொடுக்கலைன்னா என்னால தான் ஷூட்டிங் நின்னு போச்சுன்னு கம்ப்ளைன்ட் கொடுப்பேன்னு மிரட்டுறாரு..” என்றவளுக்கு அழுகையில் விழிகள் சிவந்து போயின.
“வாட் 60 லட்சமா..? என்னடி சொல்ற..? அத எப்படி நம்மளால கொடுக்க முடியும்..?”
“எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. அம்மா வட்டிக்கு அன்னைக்கு பணம் வாங்கி கொடுத்தாங்கல்ல.. அவரும் அம்மாகிட்ட பணத்தை ஒரு வாரத்துல கொடுக்க சொல்லி கேட்டுருக்காராம். என்கிட்ட இப்போ 2000 ரூபா மட்டும்தான் கையில இருக்கு… இந்த பணத்தை வைத்து தான் வீட்டு செலவையும் பாக்கணும்.. இதுல 70 லட்சத்துக்கு நான் எங்க போவேன்..?
படுத்தா தூக்கமே வர மாட்டேங்குது.. யாரோ கழுத்தை நெரிக்கிற மாதிரி ரொம்ப அழுத்தமா இருக்கு… பயமா இருக்கு சேகர்..” என அவனுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டவள் அவனுடைய ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்த்து தன் மனதில் உள்ள ரணங்கள் அனைத்தையும் கொட்டிக் கதறி அழுத்தொடங்க,
அவளுடைய கரங்களில் இருந்து தன்னுடைய கரத்தை உருவி எடுத்துக் கொண்டான் அவன்.
அதே நேரம் அவனுக்கோ அவனுடைய சீனியரிடமிருந்து அழைப்பு வர அதை ஏற்றவன்,
“சார் சொல்லுங்க சார்… ஷூட்டிங் நாளைக்குத்தானே..? நீங்க சொன்ன ஹேர் ஸ்டைல் ஹீரோ சாருக்கு போட்டுடலாம்.? எல்லாமே ரெடி பண்ணி வச்சிட்டேன்..” எனக் கூறிக் கொண்டே சென்றவன் திடீரென அதிர்ச்சியில் எழுந்து நின்று விட இவளுக்கோ எதுவும் புரியவில்லை.
“சார் நான் என்ன பண்ணினேன்..? என்ன எதுக்கு ஃபயர் பண்றீங்க..? நான் எந்தத் தப்புமே பண்ணல சார்.. இந்த வேலை போச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்..? ப்ளீஸ் என்ன வேலையை விட்டுத் தூக்கிடாதீங்க..” எனக் கெஞ்சத் தொடங்கி விட இவளுக்கோ உள்ளம் பதறிப் போனது.
“சார் சார்…” என சேகர் கெஞ்சிக் கொண்டிருக்கும்போதே அவன் பேசிக் கொண்டிருந்த அழைப்பு துண்டிக்கப்பட்டு விட சற்று நேரம் அசைவற்று நின்றிருந்தான் அவன்.
அவளோ பதறி எழுந்தவள் அவனுடைய கரத்தைப் பிடித்தவாறு,
“என்னாச்சு எதுக்காக உங்களை வேலைய விட்டுத் தூக்கிட்டாங்க..?” என இதழ்கள் துடிக்க வேதனையுடன் கேட்டாள்.
“ஷிட்… எதுவுமே தெரியாத மாதிரி நடிக்கிறத முதல்ல ஸ்டாப் பண்ணு.. எதுக்கு என்ன வேலைய விட்டுத் தூக்கினாங்கன்னு உனக்குத் தெரியாதா..? எல்லாத்துக்குமே நீதான் காரணம்.. உன்னை யார் அவனை அடிக்கச் சொன்னது..? இப்போ உன்னால எத்தனை பேர் பாதிக்கப்படுறோம்னு பாத்தியா..? சே… சக்கரவர்த்தி சாருக்கு படம் லாஸ் ஆயிடுச்சு… எனக்கு வேலை போயிடுச்சு..” என அவளுடைய கரத்தை உதறிவிட்டு அவன் பெரும் குரலெடுத்து திட்டிவிட விக்கித்துப் போனாள் செந்தூரி.
💜🔥💜
No words
Ivan mattum unmaiya va love pannan 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Sendhoori 😔😔😔😔