12. சிறையிடாதே கருடா

4.8
(9)

கருடா 12

இரண்டாம் தளத்திற்கு வந்தவன், “அம்மா!” என அவளை இறக்கிவிட்டுப் பெரிய மூச்சை இழுத்து விட்டான்.

அவளோ கனல் பார்வையை மிளகாய்த் தூள் நெடி போல் தூக்கலாக வீச, “பார்க்கத் தான்டி, அழகா வெண்ணக்கட்டி மாதிரி இருக்க. எங்க அம்மா அரும்பாடுபட்டு வளர்த்த இந்த உடம்புல எத்தனை எலும்பு உடைஞ்சிருக்கோ தெரியல. உண்மையைக் கண்டுபிடிச்சு, உன்கிட்ட இருந்து விடுதலை வாங்குறதுக்குள்ள எமதர்மன் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கிடுவேன் போல.” என்றான்.

“இதெல்லாம் தெம்பா இருக்கிறவன் பண்ண வேண்டிய வேலை. மூணுவேளை சோறு ஒழுங்காத் தின்னாத நீயெல்லாம் எதுக்குடா இவ்ளோ ரிஸ்க் எடுக்கிற?”

“ஆனா ஊனா, பணத் திமிரைக் காட்டுறாளே முருகா!”

அங்கிருந்த முருகர் புகைப்படத்தைப் பார்த்துப் புலம்பியவன், “வயித்துக்கு வஞ்சனை இல்லாமல் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு இது. மிடில் கிளாஸா இருந்தா, சாப்பாட்டுக்குத் திண்டாடுவோம்னு எவன்டி சொன்னது? காசைக் கரியாக்கவே நல்ல நாள் எப்ப வரும்னு பார்க்குற உங்களை விட, வருஷத்துல வர அந்த ஒரு நல்ல நாள்ல தன்னோட புள்ளைக்கு நல்ல துணி எடுத்துப் போடணும்னு, ராப்பகலா உழைக்கிற அப்பா அம்மா இருக்குற வரைக்கும் நாங்க யாருமே ஏழைங்க இல்லை.” என்றவன் பேச்சைக் கேட்டவள்,

“உஃப்!” என்ற ஏளனத்தோடு இருக்கையில் அமர்ந்தாள்.

“தட்டு நிறையப் போட்டுச் சாப்பிட வசதி இருந்தாலும், நாலு பருக்கை போட்டுத் தின்னுட்டு, அதுக்கு நானூறு தடவை நடக்குற உங்களுக்கெல்லாம் இது ரொம்ப அலுப்பாத் தான் தெரியும்.”

“ஹே ஆட்டோக்காரா, உன் பஞ்சப்பாட்டைக் கேட்க எனக்கு நேரமில்லை. நீ பண்ண வேலையால அந்தக் கார் ரொம்ப அழுக்காயிடுச்சு. சுத்தமா வாஷ் பண்ணி வை.”

“உனக்கு இருக்க ஆணவத்துக்கு…” என அவன் பேசிக் கொண்டிருக்கும்போது இருக்கையைப் பின்னுக்குத் தள்ளியவள், கால் மீது கால் போட்டு அதை ஆட்டவும் செய்து,

“பணக்காரனுக்கு ஆணவம் இருந்தால் தான்டா அழகு.” கண் அடித்தாள்.

“ஆணவம் அழிச்சிடும்!”

“உஃப்! அழிச்சா அழிச்சிட்டுப் போகுது. வாழுற வரைக்கும் உன்னை மாதிரி ஆளுங்களுக்கு மேல வாழுறது தான்டா கெத்து.” என்றவளுக்கு அவன் பதில் கொடுக்க வர, “போடா…” என்றாள்.

“இதுக்கெல்லாம் ஒரு நாள் மொத்தமா அனுபவிக்கப் போற பாரு.” என்றதற்கு அவனைப் பார்க்காமல் நக்கலாக ஒரு சிரிப்புச் சிரித்தாள்.

அகங்காரத்தோடு அவள் கொடுக்கும் ஒவ்வொரு அவமானத்தையும், தன் மனம் எனும் டைரியில் சேமித்து வைத்தான் கருடேந்திரன். அவன் செல்லும் வரை மடிக்கணினியில் வைத்திருந்த பார்வையை வாசல் பக்கம் திருப்பியவள் மீண்டும் அந்தச் சிரிப்பையே சிரித்தாள்.

***

“அண்ணா!”

“சொல்லுப்பா…”

“நீங்க இங்க எத்தனை வருஷமா வேலை பார்க்குறீங்க?”

“நாலு வருஷமா!”

போனை எடுத்து அதில் இருக்கும் தன் தம்பி மூர்த்தியின் புகைப்படத்தைக் காட்டியவன், “இவன் என் தம்பி, இவன் இங்கதான் படிச்சிட்டு இருந்தான்.” சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அந்தப் பயிலகத்தின் காவலாளி,

“இவனை எனக்கு நல்லாத் தெரியுமே தம்பி.” என்றார்.

“ஹான்… என் தம்பியப் பத்தி தான் கேட்க வந்தேன்.”

“என்னப்பா விஷயம்?”

“இங்க ரவின்னு ஒருத்தர் இருப்பாரே, அவரை உங்களுக்குத் தெரியுமா?”

“மேடத்தோட மேனேஜரைக் கேக்குறீங்களா தம்பி.”

“அவனே தான் அண்ணா…”

“என்னப்பா நீ? அவரைப் போய் மரியாதை இல்லாமல் பேசுற. மேடம்க்கு தெரிஞ்சா அவ்ளோதான்.”

“அதெல்லாம் அவ ஒன்னும் கிழிக்க மாட்டா.”

“அய்யய்யோ! சத்தமாப் பேசாத தம்பி. மேடம் காதுல விழுந்தா என் வேலையே போயிடும்.”

“நீங்க எதுக்கு அண்ணா அவளுக்குப் போய் இவ்ளோ பயப்படுறீங்க. இந்த வேலை போனா வேற வேலை கிடைக்காதா? அவ என்னமோ சர்வாதிகாரி மாதிரியும், நீங்க என்னமோ அவளுக்கு அடிமை மாதிரியும் பயப்படுறீங்க.”

“நான் இருக்க நிலைமைக்குப் பயந்து தான் தம்பி ஆகணும். நல்ல நிலைல இருந்தா, இந்த வயசுல எதுக்கு வாட்ச்மேன் வேலைக்கு வரப்போறேன். அதுவும் இல்லாம எனக்கு முன்னாடி இங்க வேலை பார்த்த வாட்ச்மேன், ஒரு தடவை தெரியாம ரிது மேடம்னு அவங்க பேரைச் சேர்த்துச் சொல்லிட்டான் போல. நாலு பேரு பார்க்கக் கன்னத்துல அறைஞ்சவங்க, அந்த மாசச் சம்பளத்தைக் கூடக் கொடுக்காம துரத்தி இருக்காங்க. அதைக் கேட்டதுல இருந்து மேடம் வந்தா முகத்தைப் பார்க்காம தலை குனிஞ்சுகிட்டே வணக்கம் சொல்லிடுவேன்.”

‘ச்சீ! அவள்ளாம் மனுசப் பிறவியாவே பிறந்திருக்கக் கூடாது.’ உள்ளுக்குள் வீட்டுக்காரியைக் கறுவிக் கொண்டான்‌.

“மேடமை விட, அவரோட ஆட்டம் தான் ஓவரா இருக்கும். அவரை மீறி இங்க எதுவுமே நடக்காது.”

“யார் கிட்டயாவது வேலை வாங்கித் தரேன்னு காசு எதுவும் வாங்கி இருக்காரா?”

“அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது தம்பி. ஆனா, இங்கப் படிக்கிற சில பேர் அவர் ரொம்ப டார்ச்சர் பண்றதா மட்டும் பேசிப்பாங்க.”

“என் தம்பி அப்படி ஏதாச்சும் பேசிப் பார்த்து இருக்கீங்களா? இல்லனா, காசு குடுத்து இருக்கேன். அப்படி இப்படின்னு ஏதாவது…”

“அப்படி எதுவும் கேட்ட மாதிரி ஞாபகம் இல்ல தம்பி.” என்றவரிடம் அதற்கு மேல் ஒரு விவரமும் கிடைக்காது என்பதை உணர்ந்தவன் விடைபெறும் நேரம்,

“ஒரு நிமிஷம் தம்பி!” நிறுத்தினார்.

கருடேந்திரன், பார்வையால் நிற்க வைத்த காரணத்தைக் கேட்க, “ஒரு தடவை உன் தம்பி அழுதுட்டே வெளில வந்தான். பின்னாடியே கொஞ்ச நேரத்துல ரவி சாரும் வந்தாரு. உன் தம்பி கை கூப்பி எதையோ சொல்லிக் கெஞ்சிகிட்டு இருந்தான். அவர் கோபமாய் பேசின மாதிரி இருந்துச்சு. அதோட உன் தம்பி அழுதுட்டுக் கிளம்பிட்டான்.” என்றார்.

“இது கரெக்டா எப்ப நடந்துச்சுன்னு சொல்ல முடியுமா?”

“நாலு மாசத்துக்கு முன்னாடி நடந்திருக்கும் தம்பி.”

“ரவியைப் பார்க்க இங்க வேற யாராச்சும் வருவாங்களா?”

“அப்படி யாரும் வர மாட்டாங்க தம்பி.”

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.” என்ற கருடன் பலத்த யோசனையோடு அங்கிருந்து கிளம்பினான்.

இவை அனைத்தையும் கேமராவில் பார்த்துக் கொண்டிருந்த ரிது சதிகா, காவலாளியைத் தொடர்பு கொண்டாள். பவ்வியமாக எடுத்துப் பதில் சொல்லும் அவரிடம் விசாரித்தவள், “இனி யார் வந்து என்ன கேட்டாலும், எந்தப் பதிலும் சொல்லக் கூடாது.” என்ற கண்டிப்போடு அழைப்பைத் துண்டித்தாள்.

***

பயிலகத்தில் இருக்கும் அனைத்து மாணவர்களையும் அழைத்து, மீட்டிங் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தாள் ரிது சதிகா. அவளிடம் பேச அவ்வழியாக வந்தான் கருடேந்திரன்‌. முதலாளியின் கணவன் என்று யாருக்கும் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை கருடேந்திரன் அவளுடைய ஓட்டுநர்.

“இவன் மேடம்கிட்டப் பிரச்சினை பண்ணவன் தான.” என்றார் ஒருவர்.

அதன் பின்னே, அங்கிருந்த ஆசிரியர்களுக்கு இவன் முகம் அடையாளம் தெரிந்தது. தம்பிக்காக, இங்குதான் ஒருமுறை அவளைக் காண வந்து பார்க்க முடியாததால் கத்திச் சண்டையிட்டான். அன்று சத்தம் கேட்டு மிடுக்கான தோரணையில் நடந்து வந்தது போல், இன்றும் ரதி சதிகா கம்பீரத்தோடு நடை போட,

“சண்டை போட்ட இவனையே டிரைவரா வேலைக்கு வச்சிருக்காங்க பார்த்தியா?” என்ற அனைவரின் பார்வையிலும் கேலியை உணர்ந்தான் கருடேந்திரன்.

“மேடம்னா சும்மாவா? மரியாதை இல்லாமல் பேசும்போதே இவன் ஆளு அடையாளம் தெரியாமல் ஆகப் போறான்னு நினைச்சேன். ஆனா, இப்படி அவங்களுக்குக் கீழ டிரைவரா வேலை பார்ப்பான்னு சத்தியமா நினைக்கல. சும்மா சொல்லக் கூடாது. மேடம் மாதிரி ஒரு தைரியமான பொம்பளையைப் பார்க்க முடியாது.”

“பார்த்துப் பேசுங்க, நான் ஒன்னும் டிரைவர் இல்லை.”

“வேற யாரு, மேடம் புருஷனா?”

“ஆமா!” என்றதும் சிரிப்பலை பெருகியது.

உள்ளே அமர்ந்திருக்கும் மாணவர்கள் அனைவரும், வெளியே எட்டிப் பார்க்கும் அளவிற்குப் பாடம் சொல்லிக் கொடுப்பவர்கள் சிரித்தார்கள். அவர்களின் சிரிப்பு, அவனுக்குள் ஒளிந்திருந்த கோபத்தைத் தூண்டியது. உடல் இறுகிப் பற்களைக் கடித்தான்.

“இவன் என்னப்பா, இப்படிப் பைத்தியக்காரன் மாதிரிப் பேசிட்டு இருக்கான். ஒருவேளை, மேடம்கிட்ட வேலை பார்க்குற அசிங்கம் தாங்க முடியாம மூளை கலங்கிப் போச்சா?”

“நான் அவ புருஷனா இல்லையான்னு அவகிட்டயே போய் கேட்டுப் பாருடா.” உரக்கக் கத்தினான்.

அந்தச் சத்தத்தைத் தாண்டி அவளின் காலணிச் சத்தம், “டொக்! டொக்!” என்ற ஓசையில் மிரட்ட, சிரித்துக் கொண்டிருந்த அனைவரின் வாயும் மூடியது. சத்தம் வரும் திசையைக் கருடேந்திரன் நோக்க, அவனைப் பார்த்தபடி நடந்து வந்தவள் விழிகளில் உக்கிரம் தாண்டவம் ஆடியது.

சிங்கம் என்றும் ஆணுக்கு அடையாளமானவை என்ற உவமையை உடைத்து, அஞ்சா சிங்கமாக அத்தனை ஆண்களுக்கு மத்தியில் நின்றவள், “என்ன இங்க சத்தம்?” எனக் கர்ஜிக்க, நின்று கொண்டிருந்த ஆசிரியர்கள் அனைவரும் அரங்கத்திற்குள் சென்றனர்.

அவர்கள் செல்லும் வரை அங்கேயே பார்வையைப் பதித்திருந்தவள், சட்டென்று அவன் புறம் திரும்பினாள். அவனோ தன்னைக் கேலி செய்தவர்கள் மீது தான் பார்வையை வைத்தான். ‘சாதாரணமாக இருக்கும் இவர்களே, தனக்குக் கீழ் பணிபுரியும் ஒருவனை இவ்வளவு மட்டமாக நடத்தும் பொழுது, எங்கேயோ இருக்கும் தன்னவள் நடத்துவதில் தவறில்லையே.’ என்ற எண்ணம் அவனுக்குள்.

“கிளம்பு!” என்றிட அவளை முறைத்துக் கொண்டே சென்றான்.

“சங்கரன் சார்…” என்றவள் குரலில் அடித்துப் பிடித்து வெளியே ஓடி வந்தார் அந்த ஆசிரியர்.

“இங்க எனக்கு நீங்களும் ஒன்னுதான், வெளிய இருக்க வாட்ச்மேனும் ஒன்னு தான். எல்லாரும் என்கிட்ட வேலை பார்க்கிறவங்க அவ்ளோதான்… யாரும், யாருக்கு மேலயும் கிடையாது, கீழேயும் கிடையாது. இன்னொரு தடவை அவனை அவமானப்படுத்துறதைப் பார்த்தேன், எங்கயும் வேலைக்குச் சேர முடியாதபடி பண்ணிடுவேன்.” என்றவள் நீட்டிய விரலின் மீது தான் அவரின் பார்வை இருந்தது.

அவள் விழிகளுக்குக் குறைவில்லாது, அந்த ஆள்காட்டி விரல் எச்சிலை விழுங்க வைத்தது. கூர்மையாக இருக்கும் அவள் நகங்கள், பத்து வாளுக்குச் சமமாக மிரட்டியது. எதிரில் இருந்தவரின் தலை தன்னால் நடுங்கி ஆட,

“உள்ள போங்க!” கட்டளையிட்டாள்.

அதன்பின், அங்கு நிற்க அவர் கால்கள் துணியுமா? தலை குனிந்து கொண்டே மெல்ல நகர்ந்தவரை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தவள், “ஒரு நிமிஷம்!” என்றிட அவள் முகம் பார்க்காமல் அப்படியே நின்றார்.

“நீங்க கிண்டல் பண்ணது டிரைவரை இல்ல, என்னோட ஹஸ்பண்ட. இங்க எனக்கென்ன மரியாதையோ, அதை அவனுக்கும் தரணும்.” என்றதும் அவள் முகம் பார்த்தவருக்கு வியர்த்துக் கொட்டியது.

அதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாதவள், கிளம்பும்படி விரல் அசைத்துச் சைகை செய்ய, வியர்த்த முகத்தைத் துடைக்கத் தைரியம் இல்லாது உள்ளே சென்றுவிட்டார். வெகு நேரம் அங்கேயே நின்றிருந்தவள் எட்டிப் பார்த்தாள். கோபத்தில், குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் கருடேந்திரன். அவன் மீதான பார்வையை மாற்றாமல், அப்படியே அங்கிருந்த சுவரின் மீது கைகளை ஊன்றி நின்றாள்.

***

“ஹாய் ஆல்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? எக்ஸாம்க்கு பிரிப்பேர் ஆகிட்டீங்களா?”

இதுவரை அங்குப் பயிலும் மாணவர்களிடம் நேரடியாகப் பேசியதில்லை ரிது சதிகா. அங்குப் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் பார்த்தது கூடக் கிடையாது இவளை. எப்போதாவது மின்னல் வேகத்தில், வரும் பொழுதும் போகும் பொழுதும் பார்ப்பார்கள். மற்ற அனைத்தும் அங்குப் பணிபுரியும் ஆசிரியர்களோடு மட்டுமே நிறுத்திக் கொள்வாள்.

மூர்த்தியின் பிரச்சினைக்குப் பின், முதல் முறையாக இத்தனைப் பேருக்கும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

“இங்க உங்களுக்கு ஒரு ஃபார்ம் கொடுப்பேன். அந்த ஃபார்ம்ல இருக்க விஷயங்களுக்கு உண்மையா ஆன்சர் பண்ணிட்டு, அங்க இருக்க பாக்ஸ்ல போட்டுடனும். அந்த பாக்ஸை நான் மட்டும் தான் ஓபன் பண்ணுவேன். அதுல இருக்க விஷயங்கள் என்னைத் தவிர வேற யாருக்கும்…” என்று அங்கிருந்த ஆசிரியர்களைப் பார்த்தவள்,

“இவங்க உட்பட யாருக்கும் தெரியாது. சோ, உங்க மனசுல இருக்குறதை ரொம்ப ஹானஸ்டா எழுதிக் கொடுங்க. நீங்க கொடுக்கப் போற பதில்ல தான் இந்த இன்ஸ்டிடியூட் இன்னும் தரமான கல்வியைக் கொடுக்க முயற்சி பண்ணும்.” என்றவள் ஆசிரியர்களுக்குக் கண்ணைக் காட்டினாள்.

அங்கிருந்த அனைத்து மாணவர்களுக்கும் அந்தக் காகிதம் பகிரப்பட்டது. ஆசிரியர்கள் அனைவரையும் வெளியே நிற்கச் சொன்னவள், எழுதி முடித்துப் பெட்டியில் போடும் வரை அமைதி காத்தாள். நிறைந்த பெட்டியைக் கையோடு எடுத்துக் கொண்டு கிளம்பி விட, சலசலப்பு அடங்க வெகு நேரம் தேவைப்பட்டது.

பெட்டியோடு கார் பார்க்கிங் வந்தவள், இன்னும் குறையாத கோபத்தோடு காரைச் சேதப்படுத்திக் கொண்டிருக்கும் அவன் பின்னால் நின்றாள். தன்னவளின் வரவை அறியாது ஏதேதோ உளறிக் கொண்டிருந்தான். தன்மானம் அவன் கோபத்தை அவ்வளவு எளிதாக அடங்க விடவில்லை என்பதைப் புரிந்து கொண்டவள்,

“என்னடா, உனக்கு இப்பப் பிரச்சினை?” எனச் சாதாரணமாகக் குரல் கொடுத்தாள்.

அவள் குரலைக் கேட்டதும், கழுத்தைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் காரில் மோத வைத்தான். சிறிதும் அஞ்சாத பார்வையோடு ரிது சதிகா நின்று இருக்க, அவள் விழிகளைத் தன் விழிகளால் குத்திக் கிழித்தான் கருடேந்திரன்.

“என்னை இப்படி அவமானப்படுத்தத் தான டிரைவரா வேலைக்கு வச்ச?”

“இவ்ளோ லேட்டாவா புரிஞ்சிக்கிறது?”

“அசிங்கமா நாலு வார்த்தை கேக்கணும் போல இருக்கு.”

“கேட்டுடு!”

“உன்னை மாதிரிக் கேடு கெட்ட வளர்ப்புல நான் வளரல.”

“இப்படி ஒரு பொண்ணு கழுத்தைப் புடிச்சு நோகடிக்கிற அளவுக்கு நல்ல வளர்ப்புத்தான்.”

“நோகடிக்கிறனா? அதோட அர்த்தம் தெரியுமாடி உனக்கு!‌ அதெல்லாம் உணர்வுள்ள மனுஷங்க சொல்லற வார்த்தை. நீ மனுஷ ரூபத்துல இருக்க காட்டேரி! உன் உடம்பைக் கிழிச்சா, ஒரு சொட்டு ரத்தம் கூட வராது. அத்தனையும் விஷம்!”

“பேச வேண்டியதைப் பேசிட்டன்னா வண்டியை எடு.” என்றதும் அவள் தலையைக் கார்‌ கண்ணாடியில் வைத்து அழுத்தியவன்,

“என்னை ரொம்பக் கோபப்படுத்திப் பார்க்குற. நீ பண்ற வேலை உனக்கே ஆபத்தா முடியப் போகுது.” என்றான்.

கருடேந்திரன் முகத்தை ஆராய்ந்தவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. தன்னிடம் ருத்ர தாண்டவம் ஆடுவதற்காகவே இந்தக் கருடேந்திரனைக் கடவுள் படைத்திருக்கிறான் என்பதை முழுதாக நம்பியவள்,

“நீ என் வாழ்க்கைக்குள்ள வந்த அந்த நிமிஷமே ஆபத்து என்னைச் சூழ்ந்துடுச்சு.” நிதானமாகப் பதில் சொன்னாலும், அவள் கண்கள் இறுகிப்போன அவன் முகத்தை அலசுவதை நிறுத்தவில்லை.

“ஆமாடி. உன்னை அழிக்கறதுக்காகவே சூழ்ந்த ஆபத்து நான். சூறாவளி மாதிரி சுத்த வெச்சு உருத் தெரியாம அழிக்கப் போறேன். உனக்கான நாள் ரொம்பக் குறைவு. இருக்க வரைக்கும் ஆட்டம் போட்டுக்க.”

“தேங்க்யூ!”

ரிது சதிகா முகத்தில் சிறிதும் அச்சமில்லை என்பதை அறிந்தவன், அதை முழுதாகப் பார்க்க முடிவெடுத்து முகத்தில் ஓங்கிக் குத்த வந்தான். நொடிதான் என்றாலும், வரும் ஆபத்தை உணர்ந்தவள் கண்களை மூடிக்கொள்ள, அவளுக்குப் பதில் கார் கண்ணாடி சிதைந்து சிதறியது. பட்டென்று விழி திறந்தவள் கண்களில் தெரியும் பயத்தைக் கண்டு திருப்தி அடைந்தவன், மீண்டும் ஒருமுறை காரோடு சேர்த்து அவள் உடலை இறுக்கி விடுவித்தான்.

கருடேந்திரன், அவள் வாழ்க்கைக்குள் நுழைந்ததிலிருந்து பலமுறை உயிர் பயத்தைக் காட்டி இருக்கிறான். இந்த முறையும் அதைப் பார்த்து வந்தவள், இயல்புக்குத் திரும்ப நொடிகளை எடுத்துக் கொண்டாள்.

“பண்ண வேண்டிய சம்பவத்தைப் பண்ணி முடிச்சிட்டியா? காரை எடு, கிளம்பனும்.”

எதுவும் பேசாமல் இருக்கையில் சென்று அமர்ந்தான். தனக்குள் லேசாக இதழை வளைத்துச் சிரித்தவள், பின் இருக்கையில் சென்று அமர்ந்தாள். கண்ணாடி வழியாக அவள் முகம் பார்த்தவன் வேகமாகக் காரை இயக்க,

“ரெண்டு நாளா சென்னையைச் சுத்திக் காட்டின மாதிரி இப்பவும் சுத்திக் காட்டாத. காரை நேரா உன் தம்பி அட்மிட் ஆகி இருக்கற ஆஸ்பிட்டலுக்கு விடு.” என்றதும் காரின் இயக்கம் நின்றது.

அவன் நடவடிக்கைகளைக் கண்டு மீண்டும் தனக்குள் சிரித்துக் கொண்டவள், “நம்மைப் போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்ல என்ற பாட்டு பேக்ரவுண்ட்ல ஓடுது போல.” எனக் கேலி செய்ய, முறைத்துக் கொண்டே வண்டியை எடுத்தான்.

***

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக, மருத்துவமனையே கதி என்று இருக்கும் மூர்த்தியின் பக்கத்தில் மனம் கலங்க அமர்ந்திருந்தார் சரளா. உடல்நிலை தேறி இருக்கும் மகனைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார் சத்யராஜ். நாளை வீடு திரும்ப இருக்கிறான். ஆனால், அந்த மகிழ்வு துளியும் இல்லை அவனிடம். அதற்கு முழுக்காரணம் கருடேந்திரன் மட்டும் தான்.

நடந்த அனைத்தையும் கேள்விப்பட்டவன் உள்ளம் வாடி வதங்கியது. தன்னால் பெரும் துயரத்திற்குத் தள்ளப்பட்ட அண்ணனின் நிலை குறித்துக் கவலை கொண்டான். அதிலும், அண்ணியாக ரிது சதிகா வருவாள் என்று கற்பனை கூடச் செய்து பார்க்காதவனுக்குத் துளியும் அதை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லை. அத்தனை வெறுப்பு அவள் மீது.

கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் அவனின் அண்ணி. இதைச் சற்றும் எதிர்பார்க்காத மூர்த்தி எழுந்தமர, மருமகளைக் கண்ட மாமனார், மாமியார் பார்வையைச் சுழற்றினார்கள் மகனைத் தேடி. அவர்களின் தேடுதலை உணர்ந்தவள், மூர்த்தியின் விழிகளுக்குள் உலா வரும் வெறுப்பையும் அறிந்து கொண்டாள்.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாது வழக்கமான நடையோடு அவன் முன்பு நின்றவள், “இப்போ உடம்பு எப்படி இருக்கு?” அதிகாரமாகக் கேட்டாள்.

இதுவரை இரு முறை மட்டுமே மூர்த்தி பார்த்திருக்கிறான் இவளை. இன்னும், தன் அண்ணனின் மனைவி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, பயிலகத்தின் முதலாளியாகவே நினைத்துத் தலையாட்டினான்.

“குட்!” என்றவள் கதவு திறக்கும் ஓசை கேட்டு அங்கு நின்றிருந்தவர்களைக் கவனித்தாள்.

மகனைக் கண்ட பெற்றோர்கள், கண்களால் ஆறத் தழுவிப் பாசத்தைப் பொழிந்தார்கள். ஒரு படி மேல் சென்று கண்ணீரே வடிக்க ஆரம்பித்தான் மூர்த்தி. தன் குடும்பத்தைப் பார்த்த கருடேந்திரனின் உடல் அசைவுகள் தளர்ந்தது. எம்மாதிரியான முகபாவனைகளைக் கொடுப்பது என்று தெரியாமல் திண்டாடி அதே இடத்தில் நின்றிருந்தான்.

“ம்க்கும்!” எனத் தொண்டையைச் செருமி, “உங்க டிராமா முடிஞ்சுதா? நான் வந்த வேலையைப் பார்க்கலாமா?” என அனைவரின் கவனத்தையும் அவள் மீது திருப்பினாள்.

மருமகளின் வார்த்தையைக் கேட்ட சத்யராஜ் முகம் சுழிக்க, வழக்கம் போல் பல்லைக் கடித்தான் கருடேந்திரன். மூர்த்தியோ, பிடித்தம் இல்லாது பார்த்துக் கொண்டிருக்க, பெருமூச்சோடு அமர்ந்து விட்டார் சரளா.

“ரவி எப்போ உன்கிட்டப் பேசினான்? நீ எப்பக் காசு கொடுத்தன்னு டீடைலா சொல்ல முடியுமா?” என்றதற்கு அவன் அண்ணன் முகத்தைக் காண, அவனோ கண் அசைத்தான்.

“கலெக்டர் பர்மிஷன் குடுத்துட்டாருல, சொல்லு!”

“உன் அதிகாரத்தை என் தம்பிகிட்டக் காட்டாத.”

“உன் தம்பியப் பார்க்க நான் இங்க வரல. நான் காசு வாங்கிட்டதா ஊரெல்லாம் புரளியைக் கிளப்பி விட்டு இருக்கற ஒருத்தனைப் பார்க்க வந்திருக்கேன்.” என்றவள் அமைதியாக அமர்ந்திருக்கும் மாமியாரை நோக்கி,

“மாசம் நாற்பதாயிரம் சம்பளத்துக்கு டிரைவரா வேலைக்கு வச்சிருக்கேன். ஆக்சுவலா இவ்ளோ சம்பளம் கொடுக்க மாட்டேன். உங்க ரெண்டு பேர் முகத்துக்காகத் தான் கொடுக்கிறேன். இவ்ளோ காசை மொத்தமாப் பார்த்திருக்க மாட்டீங்க. இனியாவது நல்லபடியா வாழுங்க.” என்றாள்.

“என்னடா சொல்லுது இந்தப் பொண்ணு?” என மகனை நோக்கிச் செல்லும் கணவனைத் தடுத்த சரளா, மருமகள் முன்பு நின்று சினேகமாகப் புன்னகைத்தார்.

“எதுக்குச் சிரிக்கிறீங்க?”

“இப்ப அவன் உன் புருஷன்! டிரைவரா வேலை பார்க்குறது உனக்கே அவமானம் இல்லாத போது எங்களுக்கு என்ன?” என மனதாரப் புன்னகைக்க, அந்தப் பேச்சை அத்தோடு முடிப்பதற்காக மூர்த்தியைப் பார்த்தாள்.

“என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட ஒரு நாள் எப்படியாவது கவர்மெண்ட் வேலை வாங்கிடனும்னு ரொம்ப பீல் பண்ணிப் பேசிட்டு இருந்தேன். அந்த நேரம் ரவி சார் என்னைக் கூப்பிட்டு, மேடம் வேலை வாங்கித் தருவாங்க. பத்து லட்சம் மட்டும் ரெடி பண்ணுன்னு சொன்னாரு. முதல்ல என்னால முடியாதுன்னு சொன்னேன். அவர்தான் ரொம்பக் கட்டாயப்படுத்தி, கவர்மெண்ட் வேலை வந்துட்டா பெரிய ஆள் ஆகிடுவேன்னு பிரைன் வாஷ் பண்ணாரு. அதனால அண்ணாக்குத் தெரியாம, அப்பாவைச் சமாதானப்படுத்தி வீட்டுப் பத்திரத்தை வச்சுக் காசு கொடுத்தேன்.

காசு வாங்குற வரைக்கும் நல்ல விதமாய் பேசிட்டு இருந்தவரு, அதுக்கு அப்புறம் ரொம்ப மோசமா நடத்த ஆரம்பிச்சாரு. எப்பக் கேட்டாலும், மேடமைக் கேட்டுச் சொல்றேன்னு சமாளிச்சாரு. உங்ககிட்ட நேரடியா கேட்கப் போறேன்னு சொன்னதுக்கு அப்புறம், அவரோட நடவடிக்கை வேற மாதிரி இருந்துச்சு. அதைப் புரிஞ்சுகிட்டு, கொடுத்த காசைக் கேட்டுச் சண்டை போட்டேன். உன்னை இங்க படிக்கவே வேண்டாம்னு மேடம் சொல்லிட்டாங்கன்னு துரத்தி விட்டுட்டாரு. காலைப் புடிச்சுக் கூட கெஞ்சிப் பார்த்தேன். உங்ககிட்டயும் கெஞ்சுறேன்னு சொல்லியும் விரட்டி அடிச்சிட்டாரு.”

“உங்க அண்ணன் என்னமோ காந்தி மாதிரி நியாயம் பேசுறான்… அவன் தம்பி, உனக்கு லஞ்சம் கொடுத்து வேலை வாங்கக் கூடாதுன்னு தெரியாதா? எப்படியாவது லஞ்சம் கொடுத்து கவர்மெண்ட் வேலை வாங்கிட்டா, நிறையச் சம்பாதிச்சுப் பெரிய ஆள் ஆகிடலாம்னு ஆசை. உன்னோட பேராசை தான், இந்தக் குடும்பத்தோட கஷ்டத்துக்குக் காரணம்!” என்றவள் ஒதுங்கி நின்று கொண்டிருக்கும் கணவனை ஆழமாகப் பார்த்து,

“என்னைப் பணப்பேய்னு சொன்னியே, இப்போ உன் தம்பி அந்தப் பணத்துக்கு ஆசைப்பட்டுத் தான் இப்படிப் படுத்திருக்கான். இதுக்கு என்ன பேரு? இப்பவே லஞ்சம் கொடுக்கிறவன், வேலை கிடைச்சதுக்கு அப்புறம் என்னென்னலாம் பண்ணுவான்னு யோசிச்சுப் பாரு. நான் எங்கயும் லஞ்சம் கொடுத்து, யாரையும் ஏமாத்தி எதையும் வாங்கல. எல்லாம் நான் பொறந்ததுல இருந்து எனக்காக இருந்தது.

இருக்கிற பணத்தைப் பத்திரமாய் பாதுகாக்க ஓடுற எனக்கு, பணத்தாசை பிடிச்சவள்னு கெட்ட பேரு. இல்லாத பணத்தை எப்படியாவது சம்பாதிச்சு, பெரிய ஆள் ஆகிடனும்னு நினைக்கிற உன் தம்பிக்கு அப்பாவின்னு பேரு… நல்லா இருக்குடா உங்க நியாயம்!” எனக் கணவனை மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரையும் சாட்டையால் அடித்தாள் ரிது சதிகா.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!