கொஞ்சம் கூட அவளுடைய மனதைப் பற்றி சிந்திக்காது அவன் சத்தமிட்டு அவளைத் திட்டிவிட விக்கித்துப் போனாள் செந்தூரி.
அங்கே பூங்காவிற்கு வந்திருந்த சிலர் அவர்களை லேசர் கண்களோடு கூர்ந்து கவனிப்பதைக் கண்டதும் அவளுக்கு அவமானத்தில் முகம் சிவந்தது.
பேச முடியாமல் இதழ்களைக் கடித்து தன் அழுகையை அடக்கிக் கொண்டவள் தன் தலையை தாழ்த்திக் கொண்டாள்.
கீழே விழும் அவளுடைய கண்ணீர்த் துளிகளை யாருமே பார்க்கக் கூடாது என்ற வைராக்கியம் அவளுக்கு.
தலையை தாழ்த்தியவாறே “சாரி சேகர்.. நான் வேணும்னே அப்படி எல்லாம் பண்ணல.. எல்லாருமே அட்ஜஸ்ட்மென்ட் அட்ஜஸ்ட்மென்ட் அப்படின்னு சொன்னதும் குழம்பிப் போயிட்டேன்… அவன் என்ன அதுக்குத்தான் கூப்பிடுறான்னு கோபத்தை அடக்க முடியாம அவசரப்பட்டு அடிச்சிட்டேன்.. நான் வேணும்னு பண்ணலையே.. என்னோட மனசு அந்த நேரத்துல என்ன பாடு பட்டுச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா..? தப்புதான் கை நீட்டினது தப்புதான்.. ஆனா நான் அவன்கிட்ட மன்னிப்புக் கேட்டேனே.. எல்லாத்துக்கும் நான் காரணம்னு நீங்களும் சொல்றீங்களே..” என அவள் உடைந்து போய் கேட்க,
அவனுக்கோ எரிச்சலாக இருந்தது.
“எல்லாத்துக்கும் உன்னோட அவசர பத்தியும் முட்டாள்தனமும் மட்டும்தான் காரணம் செந்தூரி. இப்போ என்னோட வேலையும் போயிடுச்சு.. ஒரு படத்துக்கு கிட்டத்தட்ட எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா..? இனி நான் என்ன பண்ணுவேன்..? மறுபடியும் வேற யாரையும் பிடிச்சு அவங்களுக்கு கீழ வேலைக்கு சேர்றது ஒன்னும் அவ்வளவு ஈசி கிடையாது.’
“ம்ம்..” என்றவள் அதன்பின்னர் மௌனமாகிப் போனாள்.
அழுகை பெருகியது.
தனித்த வனமொன்றில் நிற்பதைப் போல இருந்தது அவளுக்கு.
“இதோ பார் செந்தூரி… சரி முடிஞ்சது முடிஞ்சு போயிடுச்சு.. இப்போ நாம வேற டைரக்டர போய் மீட் பண்ணுவோம். விநாயக்கை பிடிக்காத டைரக்டர் நிச்சயமா இருப்பாங்க… அவங்க மூலமா உன்ன நடிகையா மாத்த ட்ரை பண்றேன்…” என்றவனை வெறித்துப் பார்த்தாள் அவள்.
“ஏன் சேகர் அங்க புரொடியூசரோட தொல்லை இருக்காதா..? இல்ல அந்த ப்ரொடியூசரோட அசிஸ்டன்ட்தான் வரமாட்டானா..? அந்த டைரக்டர் நல்லவன்தானா..? இன்னொரு தடவை யாரும் என்ன அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட மாட்டாங்களா..?” என அவள் இதழ்கள் நடுங்க கேள்விகளை அவனை நோக்கி செலுத்த,
“தெரியல..” என அவன் தயங்கியவாறே கூற அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள்.
“நீங்கதானே என்ன கட்டிக்கப் போறீங்க.. என் மேல உங்களுக்கு அக்கறை இருக்கும் தானே..? அப்படிப்பட்ட இடத்துக்கு எப்படி உங்களால என்ன அனுப்ப முடியுது..?”
“அதுக்காக வாழ்க்கைல முன்னேற ட்ரை பண்ணவே கூடாதா..? இப்படியே கடைசி வரைக்கும் பிச்சை எடுத்துட்டு இருக்கப் போறியா..?” எனக் கேட்க அவள் முகமோ இறுகிப் போனது.
“நான் ஒன்னும் பிச்சை எடுக்கல.. பார்த்துப் பேசுங்க..” என சீறி விட்டாள் அவள்.
சிறிய வேலை செய்தால் கையில் பணம் இல்லை என்றால் வாய்க்கு வந்ததைப் பேசி விடலாமா..?
பிச்சையே எடுத்தாலும் அவள் தானே எடுக்கின்றாள்.. இவனுக்கு என்ன வந்தது..?
இவனிடம் 10 ரூபாய் கூட அவள் இதுவரை கேட்டு வாங்கியதில்லையே.
“இந்த வாயும் திமிரும்தான் உன்ன இப்போ இந்த நிலையில கொண்டு வந்து நிறுத்தி இருக்கு..” என அவன் குத்திப் பேச இவனிடமா ஆறுதல் எதிர்பார்த்து வந்தோம் என பிளவு பட்டது அவளுடைய மனம்.
நின்ற கண்ணீர் மீண்டும் பெருகியது.
தலையை தாழ்த்திக் கொண்டு கண்ணீரை அழுந்தத் துடைத்தாள் அவள்.
கண்களுக்குள் குளம் கட்டி வைத்திருப்பதைப் போலத் துடைக்கத் துடைக்கக் கண்ணீர் பெருகிக்கொண்டே இருக்க இன்னும் உடைந்து போனாள் அவள்.
“எனக்கு உன்னை நினைச்சா கவலையா இருக்கு.. ஆனா இப்போ என்னோட நிலைமையும் மோசமாகிருச்சு.. எப்படியாவது எனக்கு என்னோட வேலை கிடைக்கணும்.. உனக்கு நல்ல வேலை கிடைக்கணும்னு ட்ரை பண்ணி இப்போ எனக்கு இருந்த ஒரே வேலையும் போயிடுச்சு..”
“சரி விடுங்க.. வேற ஏதாவது நல்ல வேலை கண்டிப்பா நமக்கு கிடைக்கும்..” என்றவளை முறைத்துப் பார்த்தான் அவன்.
“நீ நினச்சா இது எல்லாத்தையும் மாத்த முடியும்.. ஆனா நீ தான் பிடிவாதம் பிடிச்சுக்கிட்டு இருக்க..” என அவன் கூறியதும் திகைத்துப் போய் அவனுடைய முகத்தைப் பார்த்தாள் அவள்.
“இப்போ என்ன சொல்ல வரீங்க..?”
“விநாயக் சார்கிட்ட போய் பேசு..”
“நீங்க என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சுதான் பேசுறீங்களா..? அவன் ஒன்னும் என்ன பேசுறதுக்கு கூப்பிடல.. என்னை வப்பாட்டியா வாழ்க்கை முழுக்க வச்சிக்கிறதுக்கு கூப்பிடுறான்.. அவன்கிட்ட போய் பேசுன்னு சொல்றீங்களே..” என நம்ப முடியாத திகைப்போடு அவள் கேட்க,
“நமக்கு இப்போ வேற வழி இல்ல.. அவன் கால்ல விழுந்தாவது மன்னிப்புக் கேளு.. அவனோட மனச மாத்த ட்ரை பண்ணு.. அவனால மட்டும்தான் இது எல்லாத்தையும் சரி பண்ண முடியும்..” என்றவன் தன்னுடைய பைக் சாவியை கரத்தில் எடுத்துக் கொண்டான்.
“நீதான் ஏதாவது பண்ணி எங்க எல்லாரையும் காப்பாத்தணும் ப்ளீஸ்.. புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்..” என்றவன் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட இடிந்து போய் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தவளுக்கு உடல் அழுகையில் குலுங்கியது.
அவளுக்காக ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் கூட அவனிடமிருந்து இறுதிவரை வரவே இல்லையே.
தன்னைப் பற்றி மட்டுமல்லவா சுயநலமாக சிந்திக்கின்றான்.
இப்படியும் ஒரு காதலா..?
இல்லை இது காதலே இல்லையா..?
வெறும் இனக் கவர்ச்சி தானா..?
விநாயக்கைத் தேடிச் சென்று அவனுடைய காலில் விழுந்து கெஞ்சுவதற்கு அவள் தயார்தான்.
அவளால் சக்கரவர்த்தி சாரின் படத்தையும் சேகரின் வேலையையும் காப்பாற்ற முடியும் என்றால் நிச்சயமாக அவள் அதை செய்வதற்கு தயங்கவே மாட்டாள்.
ஆனால் நான் காலில் விழுந்தால் கூட அவன் ஏற்றுக் கொள்வானா..?
நேற்றைய தினம் பேசியதைக் கூட அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லையே.
மீண்டும் சென்றால் அதற்குள் படுக்கைக்கு வர சம்மதித்து விட்டாயா என்றல்லவா கேட்பான்.
அந்த வார்த்தைகள் ஒன்றும் அவளை கத்தியில்லாமலேயே குத்திக் கொன்றனவே.
எந்தப் பெண்ணும் அந்நிய ஆணிடம் கேட்கக் கூடாத வார்த்தைகள் அல்லவா அவை.
அவனைப் பார்த்தாலே அவளுக்கு அச்சமாக இருந்தது.
எங்கே மனதை நொறுக்கி விடும் வார்த்தைகளைக் கூறி அவளை அசிங்கப்படுத்தி விடுவானோ என ஒவ்வொரு நொடியும் மனம் பதறியதை அவள் அறிவாளே.
மீண்டும் அவனிடம் செல்ல வேண்டும் என எப்படி சேகரால் கூற முடிந்தது..?
அவனுக்கு என்னை விட அவனுடைய வேலைதான் முக்கியமா..?
தலை வெடித்து விடும் போல இருந்தது.
“அழுதது போதுமே.. பார்க் முழுக்க வெள்ளம் வரப்போகுது..” என்ற குரலில் சடாரென நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
அங்கே உதடுகளில் புன்னகையும் விழிகளில் கேள்வியோடும் நின்றிருந்தான் கௌதமன்.
சட்டென தன்னுடைய இரு கரங்களாலும் முகத்தை அழுத்தத் துடைத்துக் கொண்டாள் செந்தூரி.
“நான் இங்க இருக்கலாமா..?” என்ற அவனுடைய அடுத்த கேள்வியில் அவளுடைய தலையோ சம்மதமாக அசைந்தது.
சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டவள் தன் கவலைகளை மனதிற்குள் போட்டு புதைத்துக் கொண்டாள்.
“எ.. எப்படி இருக்கீங்க அண்ணா..?”
“இவ்வளவு நேரம் நல்லாதான் இருந்தேன்.. நீங்க அண்ணன்னு சொன்னதும்தான் உடைஞ்சு போயிட்டேன்..” என இதயத்தை பிடித்துக் கொண்டு அவன் அன்று போலக் கூற இம்முறை கோபம் இல்லாமல் அவளுக்கு சிரிப்பே வந்தது.
அத்தனை கவலையிலும் அவள் இதழ்கள் பிரித்து சிரித்து விட “நான் கௌதமன்.. கௌதம்..” என்றான் அவன்.
“ஓஹ் அப்படி ஏதாவது சட்டம் போட்டு இருக்காங்களா என்ன..?” என அவள் புருவம் உயர்த்திக் கேட்க,
மீண்டும் அவன் உதட்டில் புன்னகை.
“என்னாச்சுங்க அவர்தானே அன்னைக்கு உங்க கூட ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு வந்தவரு..? எதுக்காக உங்களைத் திட்டுனாரு..? அவர் திட்டினதாலதான் இப்படி அழுகுறீங்களா..?” என அவன் கேட்க அவளுக்கு சங்கடமாகிப் போனது.
இன்னும் எத்தனை பேர் இந்தக் காட்சியைப் பார்த்து இருப்பார்களோ என மனதிற்குள் நொந்து கொண்டவள்,
“சின்ன பிரச்சனைதான்.. வேற ஒன்னும் இல்ல..” என சமாளிப்பாகக் கூறினாள்.
“உங்களுக்கு சமாளிக்க வரலைங்க..” என்றான் அவன்.
அவளிடம் இருந்து பெருமூச்சு மாத்திரமே வெளிவந்தது.
சட்டென தன்னுடைய பாக்கெட்டில் இருந்து தன்னுடைய பர்சை எடுத்தவன் அதற்குள் இருந்த முருகனின் புகைப்படத்தை தன்னுடைய கரத்தில் எடுத்துக் கொண்டான்.
அவளோ அந்த முருகனின் படத்தையும் அவனையும் மாறி மாறிப் பார்க்க,
“எனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் இவர்கிட்டதான் வேண்டிக்குவேன்..” என்றவன் தன்னுடைய விழிகளை மூடி “முருகா என்னோட ப்ரண்டுக்கு ஏதோ கஷ்டம்னு தோணுது.. நீதான் எப்படியாவது அந்த கஷ்டத்தை ஓட வச்சிடணும்..” என அவன் நிஜமாகவே விழிகளை மூடி முருகனைப் பிரார்த்திக்கத் தொடங்கி விட அவன் ப்ரண்டு எனக் கூறிய வார்த்தைகளில் அவளுடைய கண்கள் பணித்தன.
தனக்காக ஒருவன் இறைவனிடம் மன்றாடுகின்றான் என்ற உணர்வு அவளுடைய மனதை இலேசாக்கியது.
அவனோ பிரார்த்தித்து முடித்ததும் மீண்டும் பர்சினுள் முருகனின் புகைப்படத்தை வைத்து பாக்கெட்டினுள் வைத்தவன் “இப்போ பாருங்க நம்ம முருகன் எல்லா பிரச்சனையும் சரி பண்ணிடுவாரு… எத நினைச்சும் கவலைப்படாதீங்க.. எல்லாமே சரியாயிடும்..” என அவளை சமாதானப்படுத்தும் நோக்கில் அவன் வார்த்தைகளை உதிர்க்க “தேங்க்யூ சோ மச் கௌதம்..” என்றாள் செந்தூரி.
“ஃப்ரெண்ட்ஷிப்ல தேங்க்ஸ் சொல்லக் கூடாது. நோ தேங்க்ஸ் நோ சாரி..”
“என்னது ப்ரண்டா ஏத்துக்க மாட்டீங்களா..? அப்போ என்னோட முருகன்கிட்ட உங்களுக்கு ஹெல்ப் பண்ண வேணாம்னு கம்ப்ளைன்ட் பண்றேன்..” என அவன் மீண்டும் தன்னுடைய பர்சை வெளியே எடுக்கு முயன்ற கணம் சட்டென பதறிப் போய் “அச்சச்சோ வேணாம்.. நாம பிரண்டாவே இருக்கலாம்..” என சிரித்தாள் அவள்.
அவனுடைய வேதனைக் குரல் அவளையும் சோர்வடையச் செய்தது.
சட்டென “உங்களோட பர்ச கொடுங்களேன்..” எனக் கேட்டாள்.
“எதுக்குங்க..?” எனக் கேட்டவாறே பர்சை வெளியே எடுத்தான் அவன்.
“அட நான் ஒன்னும் உங்க பர்ச தூக்கிட்டுப் போயிட மாட்டேன்.. நம்பிக் கொடுங்க..” எனக் கேட்டவள் அதனை வாங்கி அதற்குள் இருந்த முருகன் புகைப்படத்தை இப்போது தான் எடுத்துக் கொண்டாள்.
அவனோ அவளை அதிர்ந்து போய் பார்க்க,
“முருகா… என்னோட ப்ரண்டு பேரு கௌதம்.. பார்க்க நல்ல பையனாதான் இருக்கான்.. படத்துல நடிக்கிறதுக்கு ஏதாவது சான்ஸ் வாங்கிக் கொடேன்.. நான் உனக்கு மூணு தேங்காய் உடைக்கிறேன்..” என விழிகளை மூடி அவனைப் போலவே பிரார்த்தனை செய்து விட்டு மீண்டும் அவனுடைய கரத்தில் அவனுடைய பர்சை கொடுக்க அவனுடைய விழிகளோ கலங்கிப் போயிருந்தன.
💜💜💜
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.6 / 5. Vote count: 33
No votes so far! Be the first to rate this post.
Post Views:676
2 thoughts on “12. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”
Super Gowtham
Ethirparpu illamal kedaipathu நட்பு mattum than