முள் – 12
தன்னுடைய செவிகளில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாது திகைத்து திணறி நின்று விட்டான் யாஷ்வின்.
சில நொடிகள் அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
தன் மாமனார் உதிர்த்த வார்த்தைகளைத் தவறாக கிரகித்து விட்டோமோ என்பது போல அவரைப் புரியாத பார்வை பார்த்தான் அவன்.
அவனுடைய நிலையை விமலனால் நன்கு உணர முடிந்தது.
“சாரி மாமா.. நீங்க கேட்டது எனக்கு புரியல.. என்ன கேட்டீங்க..?” என மீண்டும் அவர் கூறிய வார்த்தைகளைக் கூறும்படி கேட்டான் யாஷ்வின்.
இப்போது தடுமாறுவது அவரின் முறையாகிப் போனது.
அவனை மிகவும் கேவலமாக திட்டிவிட்டு அவனிடமே இப்போது உதவி கேட்கிறோமே என உறுத்தியது அவருடைய இதயம்.
“நான் இப்படி கேட்கிறேன்னு என்ன தப்பா நினைக்காதீங்க மாப்பிள.. எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல.. தயவு செஞ்சு என்னோட ரெண்டாவது பொண்ண கல்யாணம் பண்ணிக்கோங்க…” என அவர் மீண்டும் கேட்டே விட அவனுக்கோ உயர் அழுத்த மின்சாரத்தால் தாக்குண்டதைப் போல இருந்தது.
அடுத்த நொடியே கோபத்தில் அவன் முகம் இறுகியது.
“மாமா என்ன பேச்சு பேசுறீங்க..? அவ என் பொண்ணு மாதிரி.. அவளப் போய் என்னால எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்..? அவ குழந்தை மாமா..” என கண்டிப்புடன் கூறினான் அவன்.
அவர் கூறியதை அவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
“இல்ல மாப்ள.. அவ ஒன்னும் குழந்தை கிடையாது.. அவளுக்கு 21 வயசு ஆகுது..” என ராஜியும் தன் கணவருடன் இணைந்து கொள்ள இவனுக்கோ பேரதிர்ச்சிதான்.
இவர்களுக்கு திடீரென என்னதான் ஆயிற்று..?
பெரியவர்கள் ஆயிற்றே ஆதலால் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டவன் மூச்சை நன்கே உள்ளே இழுத்து வெளியே விட்டான்.
“கோபப்படாதீங்க மாப்ள.. உங்களால வேலைக்கு போய்கிட்டு இந்த குழந்தையை தனியா வளர்க்க முடியாது.. பாப்பாக்கும் நிச்சயமா ஒரு அம்மா தேவை.. அதே மாதிரி சாஹித்யாவுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கிறது இனி அவ்வளவு சுலபம் இல்லை.. ஊர் முழுக்க அவளப் பத்தி இப்போ தப்பாதான் பேசிகிட்டு இருக்காங்க… அவ கர்ப்பமா இருக்காளான்னு என்கிட்டயே கேட்கிறாங்க.. என்னால இதெல்லாம் தாங்கிக்க முடியல மாப்பிள..
இது எல்லாத்துக்கும் ஒரே முடிவு நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதுதான்… அவளை விட வேற யாரும் நம்ம பாப்பாவ நல்லா பார்த்துக்க மாட்டாங்க.. உங்களாலையும் பாப்பாவ தனியா பார்த்துக்க முடியாது.. தயவு செஞ்சு இந்த கல்யாணத்துக்கு சம்மதிங்க..” என்றவுடன் இது ஒரு சுயநல உலகம் என்றுதான் அவனுக்கு எண்ணத் தோன்றியது.
“என்னால பாப்பாவ பாத்துக்க முடியாதுன்னு யாருங்க சொன்னது..? ஆன்லைன்ல வேலை பார்த்தாவது என் பிள்ளை கூடவே இருந்து அவளை என்னால பாத்துக்க முடியும்..
அம்மாவால மட்டும்தான் பொண்ண வளர்க்க முடியுமா..? ஒரு ஆண் நினைச்சா வளர்க்க முடியாதா..? எனக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல.. சாஹிக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்.. வேணும்னா நானே அவளுக்கு நல்ல வரனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. அது என்னோட கடமை..” என்றான் அவன்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சாஹித்யாவோ அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டாள்.
தன்னுடைய பெற்றோர்கள் தன் மனதைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்களா என்றுதான் அவளுக்குத் தோன்றியது.
அழுவதைத் தவிர அவளுக்கு அக்கணம் வேறு எதுவும் தோன்றவில்லை.
“நாங்க பேசுறது உங்களுக்குத் தப்பாதான் தோணும்.. ஆனா இந்த பிரச்சனைக்கு இதைவிட நல்ல தீர்வு வேற எதுவுமே இல்ல மாப்பிள..”
“நான்தான் சொல்லிட்டேனே.. என்னால இன்னொரு கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்க.. குழந்தைய என்னால நல்லா பாத்துக்க முடியும்.. என்னையும் என் குழந்தையையும் நினைச்சு நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம்..” என முடிவாகக் கூறினான் அவன்.
“சாஹியோட வாழ்க்கை உங்களுக்கு முக்கியம் இல்லையா..? இனி அவளுக்கு எப்படி நல்ல வாழ்க்கை கிடைக்கும்..? என்னோட மூத்த பொண்ணு உங்களுக்கு துரோகம் பண்ணி உங்க வாழ்க்கைய நாசம் பண்ணிட்டா.. உங்க வாழ்க்கைய மட்டும் இல்ல என் மத்த பொண்ணோட வாழ்க்கையையும் சேர்த்து நாசம் பண்ணிட்டுப் போயிட்டா..
அவளை நம்பி உங்க ரெண்டு பேரையும் தப்பா நினைச்சது எங்களோட தப்புதான்.. தலைக்கு மேல வெள்ளம் போயிருச்சு மாப்பிள்ளை..
இந்த ரிப்போர்ட்டைக் கொண்டு போய் ஊருல காட்டினா கூட இனி யாருமே சாஹித்தியாவ நம்ப மாட்டாங்க.. எல்லோருமே அவளை கெட்டுப்போனவ அப்படின்னுதான் சொல்லுவாங்க.. ஒவ்வொருத்தர்கிட்டயா போய் என்னால உண்மையா சொல்லிக்கிட்டு இருக்க முடியாது.. அப்படியே சொன்னா கூட யாருதான் நம்பப் போறா..?
என் பொண்ணு நல்லா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.. உங்கள விட வேற ஒரு நல்ல மாப்பிள்ளை யாருக்குமே கிடைக்காது.. தயவு செஞ்சு நீங்களே என் பொண்ண கூட்டிட்டுப் போயிருங்க..” என்ற ராஜியை நெருங்கியவன்,
“அத்த ப்ளீஸ்.. என்னை சங்கடப்படுத்தாதீங்க.. சாஹிக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.. அவ மேல எந்தப் பழியும் வராம அவளை ஒரு நல்லவன் கைல நான் பிடிச்சுக் கொடுக்கிறேன் போதுமா…?” என்றவன் விழிகள் கலங்கப் பார்த்த வான்மதியின் அன்னையைப் பார்த்து,
“நம்புங்க… சத்தியமா நான் அவளுக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சுக் கொடுப்பேன்..” எனக் கூறிவிட்டு சாஹித்யாவைப் பார்த்தவன்,
“நீ கவலைப்படாம படிம்மா.. நான் இருக்கேன்.. உன்னை அப்படியே கைவிட்டுற மாட்டேன்… உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கிறது என்னோட பொறுப்பு.. உன்னோட கவனம் முழுக்க படிப்புல மட்டும்தான் இருக்கணும்.. எல்லாத்தையும் இந்த மாமா பார்த்துப்பேன்…” என்றவன் அவளுடைய தலையை வருடி விட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட ராஜியோ தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டார்.
அவருக்கோ தன் மகளின் வாழ்க்கையைப் பற்றி எண்ணியதும் மனம் முழுவதும் பயம் நிரம்பி வழிந்தது.
***
அரை மணி நேரத்தில் தன்னுடைய வீட்டிற்கு வந்தவனுக்கு மூச்சடைப்பது போல இருந்தது.
தன்னுடைய படுக்கை அறையைக் கண்டால் கூட அவன் இதயம் பதைபதைக்கத் தொடங்கி விடும்.
அப்படியே ஹாலில் அமர்ந்து குழந்தையைத் தன் மடியில் கிடத்தியவன் விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைக்கத் தோன்றாது அந்தக் குழந்தையின் முகத்தையே ஆழ்ந்து பார்த்தான்.
சமத்தாக உறங்கிக் கொண்டிருந்தது குழந்தை.
“தியாம்மா..” மெல்ல தன் குழந்தையின் பெயரைச் சொல்லி அழைத்துப் பார்த்தான் அந்தத் தாயுமானவன்.
மகளோ கண்களைத் திறக்கவே இல்லை.
அவனுடைய மனதில் இருந்த அழுத்தம் குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் சற்றே வடிந்தாற் போல இருந்தது.
குழந்தைக்கு பால் எடுத்து வைக்க வேண்டும்.
ஆடைகளை அலசிப் போட வேண்டும்.
இந்த வீட்டைக் கழுவித் துடைக்க வேண்டும்.
முதலில் ஏதாவது சமைக்க வேண்டும்.
வீட்டில் இருந்தவாறே வேலை செய்வதற்கு ஆன்லைனில் வேலை ஏதாவது தேட வேண்டும்.
ஒவ்வொரு வேலைகளாக மனதில் அடுக்கிக் கொண்டே போனவன் சோர்ந்துதான் போனான்.
மகளின் பேசத் தெரியாத மழலையை ரசிக்க வேண்டும் போல இருந்தது.
ஆனால் உறங்கும் குழந்தையை எழுப்ப மனமின்றி ஹாலில் இருந்த தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்தவன் அடுத்து என்ன செய்வது எனச் சிந்தித்தான்.
இந்த வீடு அவனுடைய சொந்த வீடுதான்.
ஆனால் இனி இங்கே நிம்மதியாக அவனால் வசிக்க முடியாது என்பது அவனுக்குத் தெளிவு.
இந்த வீட்டை விற்று விட்டு வேறு எங்காவது ஒரு வீட்டை வாங்கி விடலாம் என்ற முடிவை எடுத்துக் கொண்டான் அவன்.
இன்று மாலை போலீஸ் விசாரணைக்கு வருவதாகக் கூறி இருந்தனர்.
மிகவும் ஆராய்ந்தால் நடந்த உண்மையை அப்படியே கூறி விடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான் அவன்.
வீட்டில் அனைத்தும் அப்படியே போட்டபடி இருக்க ஒவ்வொன்றாக சுத்தப்படுத்தத் தொடங்கியவன் குழந்தை அழத் தொடங்கியதும் அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டான்.
அவனுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் அவனுடைய மகள்தானே.
“தியாம்மா எழுந்துட்டீங்களா..? பாப்பாக்கு என்ன வேணும்..? பசிக்குதா..?” எனக் கேட்டவாறு குழந்தையை அவன் சமாதானப்படுத்தத் தொடங்க சற்று நேரம் அமைதியாக தந்தையின் கரங்களில் இருந்த குழந்தையோ “ம்மா..” என தன் அன்னையைக் கேட்டவாறு சிணுங்கத் தொடங்கியது.
உடைந்து போனான் அவன்.
இனி தன்மகள் அன்னையைத் தேடி ஏங்கிப் போவாளோ..?
அவன் இதயம் பதைபதைக்கத் தொடங்கியது.
ஏதேதோ பேசி சிரித்து வித்தைகள் எல்லாம் காட்டி அவளுடைய அழுகையை மறக்கச் செய்தவன் பாலைக் காய்ச்சி ஆற வைத்து பால் புட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு புகட்டத் தொடங்கினான்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை வந்து சென்றாலும் அடிக்கடி வீடியோ அழைப்பில் தந்தையை பார்க்கும் குழந்தைக்கு அவனுடைய குரலும் முகமும் பரீட்சையமாகவே இருந்தது.
ஆதலால் அவனுடன் ஒட்டிக் கொண்டாள் தியா.
ஆனால் அரை மணி நேரம் கூட இருக்காது மீண்டும் அம்மா என்ற சிணுங்கலோடு அவள் அழத் தொடங்கி விட இவனுக்குத்தான் குழந்தையை சமாளிப்பது பெரும் சவால் ஆகிப்போனது.
மீண்டும் குழந்தையை சமாதானப்படுத்த முயன்று தோற்றுப் போனவனுக்கு என்ன செய்து குழந்தையின் அழுகையை நிறுத்துவது என்றே தெரியவில்லை.
“ம்மா… ம்மா..” என்று ஏங்கி அழத் தொடங்கிய குழந்தையை சமாதானப்படுத்த முடியாது திண்டாடிப் போனான் அவன்.
குழந்தையின் அழுகையோ அதிகரித்துக் கொண்டே போக பயந்துதான் போனான் அந்த ஆண்மகன்.
அதே கணம் சாஹித்யாவும் அவளுடைய பெற்றோரும் அங்கே தங்களுடைய பொருட்களை எடுப்பதற்காக வந்தனர்.
விடாது அழுது கொண்டிருந்த குழந்தையைக் கண்டதும் அவளுக்கோ நெஞ்சம் பதறிப் போனது.
வேகமாக ஓடிவந்து தன் மாமனின் கரத்தில் இருந்த குழந்தையைத் தன் கரத்தில் வாங்கிக் கொண்டவள் குழந்தையின் முகம் எல்லாம் முத்தமிட்டு தன் மார்போடு அணைத்துக் கொள்ள,
சுவிட்ச் போட்டாற் போல அழுகையை நிறுத்திய குழந்தையோ அவளைப் பார்த்து “ம்மா…” எனக் கூறிச் சிரிக்க விக்கித்துப் போனான் யாஷ்வின்.
விதியின் சதியை மாற்றிவிட முடியுமா என்ன..?
💜
இனி தினமும் அத்தியாயம் பதிவிடுவேன்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
Super sis 💞
Excellent 👌👍
Super sis rendu epi poduga sis 😍 💕