காயத்ரி மயங்கி விழுந்து கிடந்த இடத்தை நோக்கி கருணாகரன் “காயத்ரி..” என்று பேர் அரவத்துடன் கத்தியபடி அவர் அருகே ஓடிப் போய் அவரைத் தூக்கி தனது மடியில் போட்டு “காயத்ரி.. காயத்ரி..” என அவரது கன்னம் தட்டினார்.
ஆனால் பதிலுக்கு காயத்ரியிடம் இருந்து எந்தவித அசைவும் இல்லை.
கருணாகரனுக்கு தனது உலகமே அசைவற்று ஸ்தம்பித்து போய் நின்றது போல இருந்தது. இப்படி ஒரு நிலையில் காயத்ரியை பார்க்க முடியாமல் அவரது இதயமோ வெளியே வந்து துடிப்பது போல மிக வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
‘ஐயோ இறைவா அவளின்றி நான் எவ்வாறு உயிர் வாழ்வேன்..’ என்று எண்ணங்கள் அலை மோத அவர் ஒரு பயப்பிரளயத்துக்குள் மாட்டித் தவித்துக் கொண்டிருந்தார்.
நிலைமையை சுதாரித்துக் கொண்ட கார்த்திகேயன்,
“சார் சீக்கிரமா தூக்குங்க ஹாஸ்பிடல் கொண்டு போலாம்..” என்றதும் தான் கருணாகரன் சுயத்தை அடைந்தார்.
உடனே இருவரும் காயத்ரியை தூக்கிக்கொண்டு காரை நோக்கி ஓட நிவேதாவை பற்றி அவதூராக பேசிய பெண்ணோ மலைத்துப் போய் நின்றாள்.
அந்தப் பெண்ணை கடந்து செல்லும்போது ஆட்காட்டி விரலைக் காட்டி,
“என்னோட காயத்ரிக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு உன்னோட உயிர் உனக்கு சொந்தம் இல்லாம போயிடும் ஜாக்கிரதை..” என்று கர்ஜித்துவிட்டு காயத்ரியை காரில் ஏற்றிப் புறப்பட்டார்.
கார்த்திகேயன் காரைப் புயலைப் போல வேகமாக ஓட்டிச் சென்றவன் அருகில் உள்ள சிறந்த மருத்துவமனையில் விசேட பிரிவில் காயத்ரியை சேர்த்தான். காயத்திரிக்கு சிகிச்சைகள் மிக விரைவாக வழங்கப்பட்டன.
காயத்ரி இருக்கும் அறைக்குள் தாதியர், வைத்தியர் என மாறி மாறி உள்ளே வெளியே என்று அலைமோதி ஓடித்திரிய கருணாகரனுக்கு இந்நிலையை பார்க்க மனதளவில் சக்தி இன்றி நிற்கத் திராணி அற்று அருகில் உள்ள இருக்கையில் தடுமாறியபடி சாய்ந்து அமர்ந்து கொண்டார்.
கார்த்திகேயன் கருணாகரனின் நிலையைக் கண்டு மனம் இறங்கியவன், அவர் அருகே சென்று,
“சார் கவலைப்படாதீங்க காயத்ரி மேடத்துக்கு ஒன்னும் ஆகி இருக்காது ஏதாவது அதிர்ச்சியில அவங்களுக்கு மயக்கம் வந்திருக்கும் வேற எதுவும் இருக்காது நீங்க அதிகமாக யோசித்து மனச குழப்பிக்கொள்ளாதீங்க நம்ம மேடம் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை அதனால அவங்களுக்கு எந்தத் தீங்கும் கிட்ட நெருங்காது..” என்று கருணாகரனிடம் முடித்தளவு ஆறுதலைக் கூறி அவரைத் தேற்ற முயற்சி செய்தான் கார்த்திகேயன்.
அவனது சொற்கள் யாவும் ஏதோ கிணற்றில் அடியில் யாரோ கதைப்பது போல அசரீரியாக தான் கருணாகரனுக்கு கேட்டது. அவனது சிந்தனைகள் அனைத்தும் காயத்ரியை பற்றியே சுழன்று கொண்டிருந்தது. அதனால் தான் கார்த்திகேயனது பேச்சு கருணாகரனது காதில் எட்டவில்லை.
காயத்திரிக்கு சிகிச்சை வழங்கத் தொடங்கி 2 மணி நேரத்துக்கு பின்பு வைத்தியர் அவ்வறையில் இருந்து வெளியேறி வந்தார்.
கருணாகரன் ஓடிச் சென்று மனதில் பெரிய அளவு சுமையுடன்,
“டா..க்…டர் டாக்டர் என்னோட காயத்திரிக்கு ஒன்னும் இல்ல தானே..!” என்று கூற வைத்தியருக்கு கருணாகரனை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.
“கருணாகரன் உங்க மனைவிக்கு எதுவும் இல்ல..” என்று கூறியதும் நெஞ்சில் கை வைத்து, “ஓ தெங்க் காட்..” என்று கடவுளுக்கு நன்றி கூறினார்.
“ஆனா இனி தான் நீங்க ரொம்ப கவனமா இருக்கணும் அவங்களுக்கு சின்னதா ஒரு அட்டாக் வந்திருக்கு அதிர்ச்சியான சம்பவங்கள் கேட்கும் போது ஹை பிரசர் வந்து அப்படியே மைனர் அட்டாக்கும் சேர்ந்து வந்திருக்கு அதனால தான் அவங்க திடீர்னு மயங்கி விழுந்து இருக்காங்க
ஆனா இனி நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் அவங்களுக்கு ரொம்ப அதிர்ச்சி தர்ற மாதிரி எந்த விஷயத்தையும் சொல்லக்கூடாது..” என்று கருணாகரனின் தலையில் இடியை அலுங்காமல் குலுங்காமல் இறக்கினார் டாக்டர் வைத்தியநாதன்.
“என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க காயத்ரிக்கு ஒன்னும் இல்லன்னு தானே சொன்னீங்க இப்போ இப்படி சொல்றீங்க
இதைவிட நல்ல ஹாஸ்பிடல் இருந்தா சொல்லுங்க அங்க கொண்டு போய் நான் சேர்த்து என்னோட காயத்ரிய பத்திரமா பாத்துக்குறேன் இல்லனா இங்கே இருந்து ஃபாரின் கண்ட்ரிக்கு போகணும்னாலும் சொல்லுங்க இல்லன்னா அங்கு இருக்கிற டாக்டர்ஸ் யாராவது இங்கு அழைத்து வந்து ட்ரீட்மெண்ட் பாக்கணும் என்றாலும் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை பணத்தைப் பத்தி கவலைப்படாதீங்க டாக்டர் எவ்வளவு செலவானாலும் நான் பணம் தாரேன் ஆனா எனக்கு காயத்ரி பழையபடி வேணும்..” அடம்பிடித்தார் கருணாகரன்.
“என்ன கருணாகரன் இது சின்ன பிள்ளை மாதிரி பேசாதீங்க அவங்களோட உடல்நிலை அவங்களோட மனநிலையை பொறுத்துதான் அமைஞ்சிருக்கு
அவங்களோட மனசு எப்பவுமே சந்தோஷமாக வச்சிருந்தீங்கன்னா அவங்க பழையபடி ஹெல்தியா இருப்பாங்க துக்கம் தருகிற மாதிரி அதிர்ச்சி அடையுற மாதிரி ஏதாவது சம்பவங்களை அவங்க எதிர்நோக்கினாலோ இல்லன்னா பார்த்தாலோ கேட்டாலோ அவங்க உடல் ரொம்ப வீக்க ஆகிரும் அப்படி நடந்தா திரும்பவும் அட்டாக் வர சான்ஸ் இருக்கு அத நான் உங்ககிட்ட கட்டாயமா சொல்லத்தான் வேணும நீங்க அப்போ தானே ஜாக்கிரதையா இருப்பீங்க..” என்று டாக்டர் கூறியதும் கருணாகரன் பேச்சு மூச்சற்று டாக்டரை பார்த்தபடி அப்படியே அதிர்ந்து போய் நின்றார்.
கருணாகரனுக்கு அருகில் வந்த கார்த்திகேயன் கருணாகரனின் தோலை பிடித்து அழுத்திய பின்பு தான் அவன் சுயநினைவை அடைந்தான்.
“ஓகே டாக்டர் நான் இப்போ காயத்ரியை பார்க்கலாமா..?”
“தாராளமா பாக்கலாம் 10 மினிட்ஸ்ல அவங்க கண் முழிச்சிடுவாங்க அதுவரைக்கும் டிஸ்டர்ப் பண்ணாம போய் பக்கத்துல இருந்து பாருங்க ஆனா நான் சொன்ன விஷயங்களை ஞாபகத்துல வச்சிக்கோங்…”
“ஓகே தேங்க் யூ டாக்டர்..” என்று கூறியபடி கருணாகரன் தள்ளாடி தள்ளாடி நடந்து கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார்.
கார்த்திகேயன் கருணாகரனது உடல் நிலையையும் மனநிலையையும் எண்ணி வருத்தத்துடன் அவரை கைத்தாங்கலாகப் பிடித்து அவ்வறைக்குள் அழைத்துச் சென்றான்.
இதயத் துடிப்பை பரிசோதிக்கும் கருவி சுவாசத்திற்கு என்று பல கருவிகள் அவரது உடலில் மாட்டி இருக்க இப்படியெல்லாம் தனது அன்பு மனைவியை காணாத கருணாகரனின் மனது விசும்பி அழத் தொடங்கியது.
மெதுவாக அவரது அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்த கருணாகரன் காயத்ரியின் கையைப் மென்மையாகப் பிடித்து தனது வதனத்தில் வைத்து குலுங்கிக் குலுங்கி அழுதார்.
கார்த்திகேயன் அருகில் வந்து,
“அழாதீங்க சார் நீங்க அழுகிறத காயத்ரி மேடம் பாத்தாங்கன்னா ரொம்ப கவலைப்படுவாங்க..”
“என்னால முடியல கார்த்திகேயன் ஒரு பக்கம் பொண்ண காணல இன்னொரு பக்கம் இந்த ரிலேஷன் எல்லாம் சேர்ந்து எப்படா அவமானப்படுத்துவோம், அவதூறா பேசுவோம் என்னோட இமேஜ கெடுப்பமுன்னு திரியுறாங்க
இப்போ என்னோட மனைவி என்னோட காயத்ரிக்கு இப்படி நடக்கும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை என்ன விட ரொம்ப தைரியமானவள் தான் காயத்ரி எந்த ஒரு சிட்டுவேஷன்லையும் எனக்கு பக்கபலமா இருந்தவ
இப்படி கண்முன்னே நொறுங்கிப் போய் படுத்த படுக்கையாக கிடைக்கிறது என்னால் எப்படி பார்க்க முடியும் என்னோட முழு பலமும் அவதான் அவளே இப்படி சிதறிக் கிடக்கிறது என்னால் எப்படி தாங்கிக்க முடியும்..” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே மெதுவாக காயத்ரியின் இமைகள் அசைந்தன.
அதை கவனித்த கருணாகரன் அவரது கையை ஆதுரமாகத் தடவி விட்டபடி,
“காயத்ரிமா… காயத்ரி.. காயு..” என்று காயத்ரியை அழைத்து சிறிது சிறிதாக சுயநினைவைத் திருப்ப முயற்சி செய்தார்.
மெதுவாகக் கண்களைத் திறந்து கருணாகரனை பார்த்து லேசாக புன்னகைத்தார் காயத்ரி. அன்று பூத்த மலர் போல இருந்த காயத்ரியின் வதனம் வாடி வதங்கி போய் மிகவும் சோர்வாகக் காணப்பட்டது.
அவ்வளவுதான் கருணாகரன் கண்களில் வழிந்த நீரை துடைத்து விட்டு காயத்ரியை பார்த்து அவரும் புன்னகைத்தார். அவரது முகத்தில் ஆயிரம் மின்குமிழ்கள் ஒளிர்ந்ததைப் போன்ற ஒரு பிரகாசம் தோன்றியது.
அவர்கள் இருவரின் காதலைப் பார்த்து பார்த்ததும் கார்த்திகேயனுக்கு மெய் சிலிர்த்தது.
“என்னங்க இது சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு இருக்கீங்க அதான் எனக்கு ஒன்னும் இல்ல நான் தான் முழிச்சுக்கிட்டேனே சும்மா போட்டு மனச குழப்பிக்கொள்ளாதீங்க போங்க..”
“இந்த லவ்ஸ்க்கு மட்டும் குறையில்லை வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாம்..” என்று காயத்ரி கூற வர அவரது வாயில் தனது கையை வைத்த கருணாகரன்,
“காயத்ரி ப்ளீஸ் எதுவும் பேசத் தேவையில்லை அதை பத்தி நீ ஒன்னும் மனசுக்குள்ள போட்டு குழப்பிக்காத நான் எல்லாத்தையும் பணிவா பேசி எல்லா விஷயத்தையும் விளக்கமாக கூறி அவங்கள அனுப்பி வைச்சிட்டேன் அதை நினைச்சு நீ கவலைப்பட தேவையில்லை ஓகேவா செல்லம்..” என்றதும் காயத்ரி சரி என தலையசைத்தார். அப்போது கருணாகரனின் தொலைபேசி ஒலிக்க,
உடனே தொலைபேசியை எடுத்து வெளியே பார்த்தவர், அதில் கமிஷனரின் பெயர் விழ உடனே அதனை எடுத்துக்கொண்டு காயத்ரியை அருகில் இருந்து பார்த்துக் கொள்ளும்படி கார்த்திகேயனுக்கு கண்ணசைத்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தார் கருணாகரன்.
வெளியே வந்தவர் உடனே தொலைபேசியை அழுத்தி காதில் வைத்து,
“என்ன கமிஷனர் ஏதாவது நிவேதா பத்தின அப்டேட் கிடைச்சுதா..” என்று பதட்டமும் ஆர்வமும் ஒன்று சேர கேட்க, அந்தப் பக்கம் இருந்து கமிஷனர் சொன்ன பதிலைக் கேட்டதும் அவரது கையில் இருந்த தொலைபேசி அப்படியே கைநழுவி கீழே விழுந்து சிதறியது.