13. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.8
(33)

சொர்க்கம் – 13

இதுவரை நிறைய பேருக்காக தன்னுடைய இஷ்ட தெய்வம் முருகனிடம் கௌதமன் பிரார்த்திப்பது வழமைதான்.

இன்று தனக்காக ஒரு பெண் வேண்டிக் கொண்டதும் அவனுடைய மனம் நெகிழ்ந்து போனது.

விளைவு விழிகள் கலங்கிப் போய்விட்டன.

“தேங்க்ஸ் நட்பு..” என்றான் அவன்.

“ஓகே.. கௌதம் நான் கிளம்புறேன்..” என அவள் அவனிடம் இருந்து விடை பெற,

“ஓகே நட்பு.. உனக்கு என்ன பிரச்சனைன்னு நீ எப்போ வரைக்கும் என்கிட்ட சொல்லவே இல்ல.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கண்டிப்பா இந்த ப்ரண்டுகிட்ட கேளு..” என அவன் உரிமையாக ஒருமையில் அழைக்க அதை இலகுவாக ஏற்றுக் கொண்டாள் அவள்.

“இப்போதைக்கு ஒரு வேலை தேடணும் கௌதம். ஏகப்பட்ட கடன் தலைக்கு மேல கத்தி மாதிரி தொங்கிக்கிட்டு இருக்கு.. வேலை தேடணும்.. கடன் கட்டணும் இதெல்லாம் முடிஞ்சாதான் நிம்மதியா இருக்கலாம்..”

“ஓஹ் எனக்கு தெரிஞ்சு ஏதாவது நல்ல வேலை கிடைச்சா உன்கிட்ட சொல்றேன்..”

“இதுதான் என்னோட நம்பர்.. ஃபோன்ல சேவ் பண்ணி வச்சுக்கோ..” என அவன் கொடுத்ததும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் செந்தூரி.

“ஓகே நான் இங்க வந்து ரொம்ப நேரமாச்சு.. அம்மா தேடுவாங்க.. பை…” என்றவள் அங்கிருந்து கிளம்பி விட சற்று நேரம் அவள் இருந்த இருக்கையில் அமர்ந்தவனுக்கு அவளுடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.

அவளுடைய கையடக்கத் தொலைபேசியின் எண்ணையும் வாங்கி இருக்கலாமோ என தாமதமாக வருந்தத் தொடங்கியது அவனுடைய மனம்.

*****

நான்கு நாட்களுக்குப் பிறகு.

நேரமோ மதியத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

சேகருடன் அன்று பேசியதற்கு பின்பு இப்போது வரை அவனிடம் செந்தூரி பேசவே இல்லை.

மனதை நோகடிக்கும் வகையில் அல்லவா அவனுடைய பேச்சு அன்று இருந்தது.

அவனும் ஒரு தடவை கூட அவளோடு பேசவில்லை.

இதோ இந்த நான்கு நாட்களாக வேலை தேடி அலைந்து களைத்துப் போய்விட்டாள் அவள்.

அவளுடைய படிப்பைப் பார்த்துவிட்டு வேலை தருவதாக சம்மதிக்கும் அனைவரும் அடுத்த நாள் அவள் வேலையில் சேரும்போது சேர்க்கவே முடியாது என சொல்லி வைத்தாற் போல மறுத்து விட இவளுக்கோ நம்பிக்கை வடிந்து போனது.

குறைந்த சம்பளத்தில் கூட வேலை செய்யத் தயாராக இருந்தாள் அவள்.

ஆனால் முதலில் அவளை வேலைக்கு சேர்ப்பதும் பின்னர் இங்கு வேலை பார்க்க முடியாது என ஒரேடியாக அவர்கள் மறுப்பதும் அவளுக்கு சந்தேகத்தை உண்டு பண்ணியது.

இதுவும் விநாயக்கின் வேலையாக இருக்குமோ என எண்ணி நொந்து போனாள் அவள்.

ஒரு மனிதனுக்கு இவ்வளவு வன்மம் இருக்குமா என்ன..?

அவனுடைய மொத்த வேலையையும் விட்டுவிட்டு என்னைக் கண்காணிப்பதைத்தான் வேலையாக கொண்டிருக்கிறானோ..?

சேகர் சொன்னதைப் போல மீண்டும் ஒருமுறை சென்று அவனுடைய கால்களைப் பிடித்து கெஞ்சி விடலாமா என்ற எண்ணம் கூட அவளுக்குள் தோன்றியது.

ஆனால் மீண்டும் அவன் ஏதாவது தவறாகப் பேசி விடுவானோ என்ற அச்சத்தில் அந்த எண்ணத்தை கைவிட்டவள் மீண்டும் மீண்டும் வேலை தேடி முயற்சித்துக் கொண்டே இருந்தாள்.

இன்று அருகே உள்ள லைப்ரரி ஒன்றில் புத்தகம் அடுக்கும் வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம் என எண்ணி அங்கே செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தவள் வீட்டுக் கதவு உடைவது போல தட்டுப்படவும் பதறிப் போனாள்.

மேகலாவோ வெளியே ஓடி வந்தவர்,

“யாருடி இப்படி கதவ உடைக்கிற மாதிரி தட்டுறது..?” என அச்சத்தோடு கேட்க,

எனக்கும் தெரியலை..” என்றாள் பெண்ணவள்.

“யாருங்க அது..? கதவை இப்படி தட்டுறது..?” எனத் திட்டியவாறு மேகலா கதவைத் திறக்க அங்கே வெற்றிலையை மென்ற வாயோடு நின்றான் மோகன்.

“மோ.. மோகன் சார் நீங்களா..?” என அவனைப் பார்த்ததும் ஒடுங்கிப் போனவராய் கேட்டார் மேகலா.

அப்போதுதான் செந்தூரியின் பார்வையும் அவரின் மீது படிந்தது.

“என்ன சார் ஒரு வாரத்துல தானே பணம் வேணும்னு கேட்டீங்க.. இப்போ நாலு நாள்லயே வந்து இருக்கீங்களே..” என இயலாமையுடன் மேகலா கூற,

“அசல் பணத்தைதான் ஒரு வாரத்துல வாங்கிக்கிறேன்னு சொன்னேன்.. வட்டி நீ இன்னும் கொடுக்கவே இல்லையே..” என்றதும் மேகலாவுக்கோ பேச்சே எழவில்லை.

“என்னம்மா இது..? வட்டி மாச வட்டின்னுதானே சொன்னீங்க..? இப்போ இவர்கிட்ட பணம் வாங்கி ஒரு வாரம்தானே ஆகுது..” என அவள் அதிர்ந்தவாறு கேட்க,

“இதோ பாரு தங்கம் உன்னோட அம்மா மாச வட்டி எல்லாம் சொல்லல.. வட்டியை நீங்க எப்படி போட்டாலும் பரவால்ல.. அவசரமா 10 லட்சம் பணம் வேணும்.. இப்பவே கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டுப் போனாங்க… நான் வார வட்டின்னுதான் சொன்னேன்.. இப்போவே பத்தாயிரம் பணத்தை கொடுத்தா சத்தமே இல்லாம திரும்பிப் போயிடுவேன்..” என்றவரைப் பார்த்து உறைந்து போய் நின்றாள் அவள்‌.

பத்தாயிரம் ரூபாய் அவளிடம் இல்லையே.

சேமிப்பு என்ற எதுவுமே அப்போது இல்லாது போக அவளுக்கோ முகம் வாடிப் போனது.

“சார் ப்ளீஸ் கொஞ்சம் டைம் கொடுங்க.. இப்போ என்கிட்ட பணம் இல்லை..” என செந்தூரி தயக்கத்துடன் கூற,

“என்னமா விளையாடுறியா..? உங்க அம்மா என்னடான்னா நீ பெரிய நடிகையாயிடுவ உங்க பணத்தை ஒரே மாசத்துல திருப்பிக் கொடுத்துவிடுவேன்னு சொன்னாங்க.. நீ என்னடான்னா ஹீரோ சாரை அடிச்சிட்டு வந்துட்டியாமே.. உனக்கு இனி படம் நடிக்க வாய்ப்பு கிடைக்காதாம்னு பேசிக்கிறாங்க… என்னோட பணம் புல்லுக்கு இறைச்ச நீரா போயிரும் போல இருக்கு.. டைம் எல்லாம் தர முடியாது.. ஒன்னு பத்தாயிரம் வட்டிய இப்போவே கொடு.. இல்லனா மொத்த பணத்தையும் கொடுத்துடு..” என அவர் அதட்டலாகக் கேட்க அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

“சார் நான்தானே உங்ககிட்ட பணம் வாங்கினேன்.. என் பொண்ணை மிரட்டாதீங்க சார்.. பணத்த எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிடுவேன்..” என கண்ணீரோடு மேகலா கூற,

“சரி அப்போ உன்னோட பொண்ண நான் கூட்டிட்டுப் போறேன்.. பணத்தைக் கொடுத்துட்டு பொண்ண வந்து அழைச்சிட்டுப் போ..” என்றவாறு அவர் வீட்டிற்குள் நுழைய விக்கித்துப் போய் பின்னால் நகர்ந்து நின்றாள் செந்தூரி.

“ஐயோ என்ன இது.? இப்படி எல்லாம் பேசுறீங்க..?” என நடுக்கத்துடன் மேகலா சற்றே சீற்றமாகக் கேட்க,

“ஓஹோ வேற எப்படிப் பேசணும்..?அம்மணிக்கு மரியாதை கேக்குதோ..? மரியாதை வேணும்னா வீடு தேடி வந்து வட்டிக்கு பணம் கேக்குறதுக்கு முதல் யோசிச்சிருக்கணும்..”

“ஐயா எனக்கு மரியாதை எல்லாம் வேணாம்.. எப்படியாவது பணத்தை திருப்பிக் கொடுத்துருவேன்.. இப்போ கிளம்புங்க..” என்றார் மேகலா.

அவனுடைய பார்வையோ மீண்டும் செந்தூரியின் மீது படிந்தது.

“ஒன்னுமே இல்லாத நீ வந்து கேட்டதும் பணத்தைத் தூக்கிக் கொடுத்தேனே எதுக்குன்னு நெனச்ச..? நீ திருப்பி தந்துடுவேன்னா..? சேச்சே… இதோ வளர்ந்து அம்சமா நிக்கிறாளே உன்னோட பொண்ணுக்காகத்தான் கொடுத்தேன்… 10 லட்சம் பணத்துக்கு வொர்த்தானவதான் உன் பொண்ணு..” என வெற்றிலையை மென்றவாறே அவர் கூற,

மேகலாவோ இடிந்து போனார்.

அவருக்கு பேச்சை வரவில்லை.

“மரியாதையா வீட்டை விட்டு வெளியே போங்க.. இல்லன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்..” என கோபத்தில் சீறினாள் மங்கை.

“கம்ப்ளைன்ட் பண்ணுவியா..? என்னென்னு பண்ணுவ..? பணத்தை கொடுத்தவன் திருப்பி கேட்க வந்துட்டான்னு கம்ப்ளைன்ட் பண்ணுவியா..? ஹா.. ஹா.. தைரியம் இருந்தா கம்ப்ளைன்ட் கொடுத்துப் பாரேன்..” என அவன் அவள் அருகே வர அவளுக்கு விழிகள் கலங்கிப் போயின.

“நீ கம்பளைண்ட் கொடுக்கிற போலீஸ் நான் சொல்றததான் கேப்பாங்க.. என்ன மீறி இந்த ஊர்ல எதுவுமே நடக்காது.. முரண்டு பிடிக்காம நீயே வந்து என்னோட வண்டியில ஏறு.. இல்லன்னா என்னோட பசங்கள வச்சு உன்னத் தூக்கிட்டுப் போக வேண்டி இருக்கும்..” என மோகன் கூற அவளுக்கோ சப்த நாடியும் ஒடுங்கிப் போனது.

காவல் துறையும் பணத்திற்கு விலை போய் விட்டதா..?

“ரெ.. ரெண்டு நாள் டைம் கொடுங்க சார்.. எப்படியாவது வட்டிப் பணத்தை கொடுத்துடுறேன்..” என உதடுகள் நடுங்கக் கூறினாள் செந்தூரி.

அடியாட்களுடன் வந்து மிரட்டும் போது பெண்ணவளும் கெஞ்சுவதைத் தவிர வேறு என்னதான் செய்துவிட முடியும்..?

“இதுக்கு மேல உங்களுக்கு டைம் கொடுக்க முடியாது.. மரியாதையா வந்து வண்டில ஏறு..” என மிரட்டினான் அந்த இரக்கம் இல்லாத மிருகம்.

“முடியாது வெளியே போங்க..” படபடத்தாள் அவள்.

“என்னையே எதிர்த்துப் பேசுவியா..?” என அவன் மென்று கொண்டிருந்த வெற்றிலையை அவர்களுடைய வீட்டுக்கு உள்ளேயே துப்பியவன் செந்தூரியை நெருங்கி அவளுடைய கரத்தைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு வெளியே செல்லத் தொடங்க பதறிப்போனார் மேகலா.

“ஐயா என் தலையை அடமானம் வச்சாவது உங்க பணத்தை கொண்டு வந்து கொடுத்திடுவேன்.. தயவு செஞ்சு விட்ருங்க.. என் பொண்ண விட்டுருங்க ஐயா.. நான் தானே கடன் வாங்கினேன்.. அவ என்ன பண்ணுவா..? ஐயோ அவள விடுங்க..” என கையெடுத்து கும்பிட்டவாறு மேகலா கதறியழத் தொடங்கினார்.

அவருடைய கதறலோ வீணாகிப் போனது.

அவன் பிடித்த இடத்தில் அவளுடைய மணிக்கட்டு சிவக்கத் தொடங்க கையை உதறி விடுவிக்கப் போராடினாள் அவள்.

“பயப்படாத மேகலா.. உன்னோட பொண்ண எதுவுமே பண்ண மாட்டேன்.. இன்னும் ரெண்டு மணி நேரம் உனக்கு டைம் தரேன்.. அதுக்குள்ள பத்தாயிரம் ரூபாய் கொண்டு வந்துட்டேனா உன் பொண்ண அப்படியே கூட்டிட்டுப் போகலாம்.. உனக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் டைம் இருக்கு..” என்றவன் செந்தூரியைக் கதறக் கதற இழுத்து தான் வந்த ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட உடைந்து போனார் மேகலா.

அவருக்கோ உடல் முழுவதும் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

இப்போது மகளை எப்படி மீட்பது..?

இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் பத்தாயிரம் வேண்டுமே.

அவிழ்ந்த தலைமுடியை அவசர அவசரமாக கொண்டை இட்டவாறு கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினார் அவர்.

பக்கத்து வீட்டு பெண்ணிடம் கடனாக வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் அவரோ கதவைத் தட்ட இவரைப் பார்த்ததும் “இப்போ எதுக்கு நீங்க இந்த வீட்டுக்கு வந்திருக்கீங்க.. டிஸ்டர்ப் பண்ணாதீங்க..” என முகத்தில் அடித்தாற் போல பேசிவிட்டு கதவை மூடி சென்று விட்டார் அந்தப் பெண்மணி.

பின்னே எப்போது பார்த்தாலும் அந்த பெண்ணுடன் மேகலா வம்பு அல்லவா வளர்த்து வைத்திருந்தார்.

அவரிடம் மட்டுமா கிட்டத்தட்ட அந்த ஊருக்குள் இருக்கும் அக்கம் பக்கத்து வீடுகள் முழுவதும் அவர் தன்னுடைய வாய்த் திறமையை காட்டி வைத்திருக்க அனைவருக்கும் மேகலா என்றால் வெறுப்பு மட்டுமே மிச்சம் இருந்தது.

செந்தூரி சென்று கேட்டிருந்தால் கூட அவர்களிடம் இருப்பதை கொடுத்து நிச்சயமாக உதவி இருப்பார்கள்.

ஆனால் மேகலாவைக் கண்டதுமே எந்த உதவியும் செய்யாது போக கையறு நிலையில் துடித்துப் போனார் மேகலா.

தன் வினை தன்னைச் சுடும்.

தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் சுடும்.

💜💜💜

அடுத்த எபிசோட் 10.15pm

Stay tuned 😁

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 33

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “13. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!