14. செந்தமிழின் செங்கனியே!

4.9
(42)

செந்தமிழ் 14

 

இனியன் அழைப்பை ஏற்கவும், அழைத்தது என்னவோ கயலின் வகுப்பு ஆசிரியை தான்!

“மிஸ்டர் தமிழினியன், நான் கயல்விழியோட கிளாஸ் டீச்சர் பேசுறேன்… உங்க பொண்ணு பெரிய பொண்ணு ஆகிட்டா.. கொஞ்சம் வந்து அழைச்சிட்டு போறிங்களா?”, என்று அவர் சொல்லவும், அவனின் கண்கள் விரிந்தன!

அவன் எழுந்தே விட்டான்! இப்போது தான் அவளை பூக்குவியலாக கையில் ஏந்தியது போல் அவனிற்கு தோன்றியது!

இன்னும் அந்த நாள் நினைவு இருக்கிறது அல்லவா அவனிற்கு, பசுமரத்து ஆணி போல பதிந்த நினைவு அது!

முதன்முதலில் தாதி வந்து அவனின் கையில் அவனது செல்வ மகளை தந்த காட்சியை வாழ்நாளில் மறக்கவும் தான் முடியுமா?

“மிஸ்டர் இனியன்? இருக்கீங்களா? உங்க வைப்க்கு தான் கால் பண்ணேன் பட் ஷி டிண்ட் பிக் அப்”, என்று அவர் சொல்லவும், கனிக்கு இன்று ஏதோ பள்ளியில் விழா இருப்பதாக சொன்னது அவனின் நினைவிற்கு வந்தது.

அவனோ உடனே சுதாகரித்து, “நோ இஸ்ஸுஸ் மேம், நான் தர்ட்டி மினிட்ஸ்ல வரேன்”, என்று சொல்லி வைத்து விட்டான்.

அதற்குள் பெரிய பிள்ளை ஆகிவிட்டலா? என்று தான் அவனுக்கு தோன்றி கொண்டே இருந்தது.

அவனின் மேலதிகாரியான சுரேஷிற்கு தகவல் சொல்லிவிட்டு, அரை நாள் விடுப்பு எடுத்து விட்டு, கயலின் பள்ளிக்கு சென்றான்.

அங்கோ கயல் அழுது கொண்டு இருந்தாள்.

கனி அவளுக்கு இதை பற்றி எல்லாம் ஓரளவு சொல்லி கொடுத்து இருக்கிறாள் தான்! ஆனாலும் பள்ளியில் மற்ற பிள்ளைகளிடம் இருந்து அவள் கேட்ட விடயங்கள் அவளின் மனதை பிசைய துவங்கியது!

இனியன் பள்ளிக்கு வர, அவனின் கண்ணில் தென்பட்டது என்னவோ அங்கு வரவேற்பு அறையில் அவனின் கண்ணின் மணியான கயல்விழி அழுது கொண்டிருக்கும் காட்சி தான்!

அவளின் அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்தவன், “ஏன் மா அழற?”, என்று அவளின் தலையை வருட, “இதோட நான் வெளியலாம் போக கூடாதுல பா?”, என்று கண்களை உருட்டி கேட்க, அவனுக்கோ புருவங்கள் சுருங்கியது.

“ஏன் மா அப்படி கேட்குற?”, என்று கேட்டவனிடம், “என் பிரண்ட் ஒருத்தி சொன்னா… அவ இப்படி பெரிய பொண்ணு ஆனதும் அவங்க அப்பா பேட்மின்டன்ல இருந்து நிறுத்திட்டாராம்…. கேட்டா இனி நீ வெளிய போக கூடாதுனு சொன்னாராம்… இன்னொரு பிரண்ட் சொன்னா இப்படி பெரிய பொண்ணு ஆனதும் அவங்க அப்பா சத்தமா பேச கூடாது, சத்தமா சிரிக்க கூடாதுனுலாம் சொல்லுறாராம்… அப்பறோம் அந்த த்ரீ டு பைவ் டேஸ் வீட்ல தனியா இருக்க சொல்றங்களாம்”, என்று சொன்னதும், அவனுக்கு சங்கடமாக இருந்தது!

இன்றும் நடப்பது தானே இதெல்லாம்! என்ன நவீனமாகி என்ன பயன்? இன்னும் இந்த மாதவிடாய் நாட்களில் பெண்களை தீண்டத்தகாத பொருட்களை பார்ப்பதை மட்டும் இன்னுமே பல வீடுகளில் நடப்பது ஒன்று தானே!

இனியனும் ஒரு பெரு மூச்சு விட்டு கொண்டு, “அப்படி எல்லாம் இல்ல கயல்… சில பிள்ளைங்களுக்கு மாதவிடாய் அப்போ ரொம்ப வயிறு வலிக்கும், சில பேருக்கு இடுப்பு வலிக்கும், ஏன் சில பேருக்கு உடம்பு பூரா அடிச்சி போட்ட மாறி கூட இருக்கும்… இத தான் நம்ப மென்சுரல் கிரம்ப்ஸ்னு சொல்லுவோம்… இன்னும் சில பேருக்கு பீரியட்ஸ் வர்றதுக்கு ரெண்டு மூணு நாள் வரத்துக்கு முன்னாடியே கூட மூட் ஸ்விங்ஸ்லாம் இருக்கும்… இப்போ நீ அழறது கூட மூட் ஸ்விங்ஸ் தான் காரணம்”, என்று கூறினான்.

“அப்படியா?”, என்று அவள் கண்களை துடைத்து கொண்டு வினவ, “இல்லையா பின்ன? என் பொண்ணு கயல் அன்னைக்கு அவ தம்பிய நான் அடிச்ச அப்போ கூட எவளோ ஸ்ட்ரோங்கா இருந்தானு நான் தான் பார்த்தேனே!”, என்று சொல்லவும், “ஆமா அப்பா எனக்கு திடிர்னு அழணும்னு தோணுச்சு”, என்று சொல்லவும், “அதுக்கு பெரு தான் மூட் ஸ்விங்ஸ்”, என்று சொன்னவனை பார்த்து அவளும் புன்னகைத்தாள்.

போகும் வழியில் ஒரு ஐஸ் கிரீம் பார்லரில் அவன் காரை நிறுத்தி, “வா ஐஸ் கிரீம் சாப்பிடலாம்”, என்று இறக்கி விட்டான்.

அப்பாவும் மகளும் சேர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டு வீட்டிற்கு வரவும், “என்ன டா கயலை கூட்டிட்டு வந்திருக்க?”, என்று பொன்னம்மாள் கேட்க, “அவ பெரிய பொண்ணு ஆகிட்டா”, என்று அவன் சொன்னதும், அவரும் எழுந்து விட்டார்.

“அச்சோ தங்கம்! இப்படி உட்கார்”, என்று சொல்லி அமர வைத்து விட்டு, அவளுக்கு உளுந்த கலி செய்து வந்து கொடுத்தார்.

முதலில் அச்யுத் வர, “அக்கா உன்ன தேடுனேன்..உன் பிரண்ட் தான் நீ அப்பாவோட வீட்டுக்கு போய்ட்டாத சொன்னாங்க… என்ன ஆச்சு உடம்பு சரி இல்லையா?”, என்று அவன் கேட்டுக்கொண்டே அவளின் அருகில் வந்து அமர, “டேய் அக்கா கிட்ட போகாத”, என்று பொன்னம்மாள் சொல்லவும், கயலின் கண்களில் தண்ணீர்.

இனியனோ, “அம்மா எதுக்கு இப்போ அவ பக்கத்துல உட்கார கூடாது?”, என்று காட்டமாகவே கேட்டான்.

“டேய் அவளை ஓலை பின்னி உட்கார வச்சி தண்ணி ஊத்தணும் டா”, என்று அவர் சொல்ல, “இதுலலாம் எனக்கு நம்பிக்கை இல்ல, ஏதோ தண்ணி வேணா உங்க ஆசைக்கு ஊத்திக்கோங்க… ஆனா என் பொண்ணு தனியாளாம் உட்கார மாட்டா… நீங்க கலி செஞ்சி கொடுத்தீங்க ஏனா அது உடம்புக்கு நல்லது… தனியா உட்கார்றதுல என்ன நல்லது இருக்கு? அந்த காலத்துல பொண்ணுங்களுக்கு அந்த மூணு நாள் ரெஸ்ட் கொடுக்க தான் இதெல்லாம் கட பிடிச்சாங்க.. ஆனா நம்ப மக்கள் தான் அதெல்லாம் மாத்திட்டாங்க”, என்று அவன் சொல்லவும், பொன்னம்மாளுக்கு மேலே ஏதும் பேச முடியவில்லை.

அடுத்து கனி வந்ததும் அவளுக்கும் விஷயம் சொல்லப்பட, அவளும் மகளுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் செய்து கொடுத்தாள்.

அன்று இரவு அவள் அவர்கள் அறைக்கு வர, இனியனின் கைகளில் ஒரு புகைப்பட கட்டு இருந்தது!

“என்ன பார்த்துட்டு இருக்கீங்க?”, என்று அவள் கேட்டுக்கொண்டே அவனின் அருகில் வந்து அமர, அவன் பார்த்து கொண்டு இருந்தது என்னவோ கயலின் சிறுவயது புகை படங்கள் தான்!

“என்ன பொண்ணோட சின்ன வயசு நினைவுகள் எல்லாம் பார்த்துட்டு இருக்கீங்க?”, என்றவளை பார்த்து, “எவளோ சீக்கிரம் வளந்துட்டால?”, என்றதும் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“சீக்கிரமா மிஸ்டர் இனியன் அவளுக்கு பனிரெண்டு வயசு நினைவு இருக்கா?”, என்றவுடன், “ஆமா இன்னும் பத்து பதினஞ்சு வருஷத்துல அவளுக்கு கல்யாணம் கூட ஆகிரும்”, என்று சொல்லும்போதே அவன் உடைந்து விடுவது போல் தான் அவளுக்கு தோன்றியது.

“என்ன இதுக்கு எல்லாம் இவ்வளோ உணர்ச்சி வச படுறீங்க? எல்லா பொண்ணுங்களும் ஒரு நாள் கல்யாணம் ஆகி அவங்க புகுந்த வீட்டுக்கு போய் தான ஆகணும்”, என்றவளை பார்த்து, “அப்படினு எந்த இபிகோ செக்ஷன்ல டி இருக்கு? பொண்ண பெத்து, வளர்த்து, ஆளாக்கி இன்னொருத்தன் கைல ஒப்படைக்கணும் அதுக்கும் கூட டௌரி வேற! எனக்கு சில நேரம் இந்த திருமணம்லாம் கூட ஒரு வகையான வியாபாரம் மாறி தான் தெரியுது”, என்று சலித்து கொண்டான்.

“ஏன் நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கல? ஒரு ருபாய் கூட வரதச்சனை வாங்காம… அப்படி ஒருத்தன் வருவான் நம்ப பொண்ணுக்கு… இப்போ தானே அவ வயசுக்கே வந்திருக்கா இன்னும் நேரம் இருக்கு அதுக்குலாம்… ஈ மனச போட்டு குழப்பிக்குறிங்க?”, என்றதும் அவளை அணைத்து கொண்டான்.

அவனின் மனநிலையை அவளாலும் புரிந்து கொள்ள முடிந்தது!

அவன் சொல்லிவிட்டான் அவள் சொல்லவில்லை அவ்வளவு தான் வித்யாசம்!

எல்லா பெற்றோர்களையும் போல தானே அவர்களும்!

“பெண்களா பொறந்தாலே இப்படி தாங்க வாழ்க்கை!”, என்று சொன்னதும், “நானும் உன்ன ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்ல… எத்தனை நாள் நீயும் உன் பீரியட்ஸ் அப்போ வேலை செஞ்சி கொடுத்திருக்க! உனக்கும் இதே வலி தானே இருந்திருக்கும்”, என்று சொல்லவும், “பொண்ண பார்த்த பிறகு தான் பொண்டாட்டிக்கும் இப்படிலாம் வலிக்கும்லனு உங்களுக்குலாம் தோணுதுல?”, என்று கேட்டாள்.

“அப்படி தான்னு நினைக்கிறன்… கணவனா எங்கயோ ஒரு எடத்துல எல்லா ஆம்பளைங்களும் சறுக்கிடறோம் தான்… ஆனா அதையே நாங்க பெத்த பொண்ணுங்க அனுபவிக்க போது தான் எங்களுக்கு குத்துதே! தன் இரத்தம் என்கிற நினைப்போ என்னவோ!”, என்று ஒப்புக்கொண்டான்!

“தமிழ்ல ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? ஊரார் பிள்ளையை ஊட்டி வளத்தா தான் பிள்ளை தானா வளரும்னு… அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஊரார் பிள்ளைனு சொல்றது உங்க மனைவிங்க தான்… அவங்கள கவனிச்சா உங்க பிள்ளையும் நல்லா இருக்கும்னு தான் அர்த்தம்… அது கூட தெரியாம தான் நிறைய ஆம்பளைங்க இருக்கீங்க”, என்றவளை பார்த்து, “இத்தனை நாள் இது தெரியாம போச்சே”, என்று அவன் யோசிப்பது போல் பாசாங்கு செய்தான்.

“ரொம்ப யோசிக்காம தூங்குங்க… நாளைக்கு வேற ஏதோ ஜாப்பனீஸ் கிளைண்ட்ஸோட மீட்டிங்னு சொன்னிங்களே!”, என்று அவள் நினைவு படுத்தவும், “ஐயோ ஆமா கனி… அந்த ட்ரான்ஸ்லேட்டர் கிட்ட வேற காலைல பேசணும் நினைவு படுத்து”, என்று சொல்லி இருவரும் உறங்கி விட்டனர்.

அடுத்த நாள் விடிய, கயலுக்கு காலையிலேயே நலெண்ணையும் முட்டையும் கொடுக்க அவளோ ஓடியே விட்டாள். எப்படியோ உருட்டி மிரட்டி இனியன் தான் பின்பு அவளை சாப்பிட வைத்தான்.

அவளுக்காக புட்டு கடலை கர்ரி செய்து இருந்தாள் கனி. பின்பு அவள் கிளம்புவதற்கு முன், “அந்த ட்ரான்ஸ்லேட்டர் கிட்ட பேசிருங்க”, என்று அவள் நினைவு படுத்த, அப்போது தான் ட்ரான்ஸ்லேட்டர்க்கு இனியன் அழைக்க, அவனுக்கோ அடுத்த இடி தலையில் விழுந்தது!

அந்த ட்ரான்ஸ்லேட்டர் இன்று அவனால் வர முடியாது என்று சொல்லிவிட்டான்.

கனி அவளின் ஹாண்ட்பேக் எடுக்க, “என்ன ஆச்சுங்க ஏன் இப்படி உட்காந்து இருக்கீங்க?”, என்று கேட்க, “ட்ரான்ஸ்லேட்டர் வர முடியாதுனு சொல்லிட்டான் கனி… வரவங்களுக்கு இங்கிலிஷ் தெரியாது… முன்னாடியே எம்டி சொன்னார்”, என்று அவன் பதட்டமாக சொல்லவும், கனிக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

“அப்பா நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?”, என்று அவர்களின் உரையாடலை கேட்டு கொண்டு இருந்த கயல் சொல்ல, “என்ன யோசனை?”, என்று இனியன் கேட்க, அவள் சொன்னதை கேட்டு இனியன் மட்டும் அல்ல கனியும் கூட அதிர்ந்து தான் விட்டாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 42

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!