14. தொடட்டுமா தொல்லை நீக்க..!

4.7
(108)

தொல்லை – 14

கதிர் தன்னை அடிப்பான் என்பதை சிறிதும் எதிர்பாராதவள் அவனுடைய அடியின் வேகத்தை தாங்க முடியாமல் தடுமாறி கீழே விழப் போய் தன் காலை அழுத்தமாக தரையில் ஊன்றி நின்றாள்.

அவன் அறைந்த ஒரு பக்கக் கன்னம் தீப் பற்றி எரிவது போல இருந்தது.

வலி தாங்க முடியாமல் விழிகளை மூடி தன்னை சமப்படுத்திக்கொள்ளப் போராடியவளின் விழிகளில் இருந்து கண்ணீர் பெருக மௌனமாக நின்றாள் அவள்.

இதே போல இன்னும் எத்தனை அடிகளை அவன் அடித்தாலும் தாங்குவதற்கு அவள் தயார்தான்.

அவள் செய்தது மாபெரும் பிழையல்லவா?

ஒருவரின் உணர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் விளையாடி விட்டோம் என்பதை புரிந்துகொண்டவள் தலைகுனிந்து கண்ணீரை உகுத்தபடி நின்றாள்.

அவள் அருகே வேகமாக வந்தவன் “எதுக்கு இப்படி பண்ணின..? ஏன் இப்படி என்னை ஏமாத்தின..? இப்பவாவது வாயைத் திறந்து பேசு ம…. ப்ச் அஞ்சலி…” என்றான் உடைந்த குரலில்.

அவன் தன்னை மது என அழைக்க வந்து தன் பெயரை மாற்றிக் கொண்டதை உணர்ந்தவளுக்கு சட்டென பேச முடியவில்லை.

பதற்றமும் பயமும் அவளை ஆட்டுவித்தன.

அவனுக்கோ அஞ்சலி உண்மையைக் கூறிய நொடி வாழ்க்கையே வெறுத்துப் போனது.

‘என்ன வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன்?’ என எண்ணி நொந்து போனான் அவன்.

அவளோ மௌனமாக கண்ணீரை சிந்த,

“உன்கிட்டதான் அஞ்சலி பேசிக்கிட்டு இருக்கேன்… இதெல்லாம் எதுக்கு பண்ணின..? மதுரா எங்க? வாயைத் திறந்து பதில் சொல்லு…” என்று கத்தினான்.

“சா… சாரி மாமா…” என்று முனகினாள் அவள்.

“ஏய் சாரி சாரின்னு சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருந்தா மறுபடியும் அறைஞ்சிடுவேன்… தெரியாம பண்ண தப்புக்குத்தான் மன்னிப்பு… எல்லாம் தெரிஞ்சே ஆள் மாறாட்டம் பண்ண உன்னை எதுக்கு நான் மன்னிக்கணும்..?

பைத்தியக்காரன் மாதிரி நான் உன் பின்னாடி சுத்தி வரப்போ நீ என்னை அவாய்ட் பண்ணதுக்கு இதுதான் காரணம்னு அப்பவே சொல்லி தொலைச்சிருக்கலாமே… எதுக்கு டைம் வேணும் மண்ணாங்கட்டி வேணும்னு நடிச்ச?

உன் மேல எவ்வளவு அன்பு வச்சிருந்தேன்… என்னோட லவ்வை கூட உன்கிட்ட சொன்னேன்… அப்பவாவது உண்மையை சொல்லணும்னு உனக்கு தோணவே இல்லையா? என்னைப் பார்த்தா முட்டாள் மாதிரி தெரியுதா? சொல்லு முட்டாள் மாதிரியா தெரியுது?” என அவன் கர்ஜிக்க நடுங்கிவிட்டாள் அவள்.

ஆக்ரோஷமாக கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தவனை எதிர்கொள்ள முடியாமல் அச்சத்துடன் பின்னால் நகர்ந்து சுவற்றில் மோதிக் கொண்டவளுக்கு கரங்கள் கூட கிடுகிடுவென நடுங்க ஆரம்பித்து விட்டிருந்தன.

அவள் பயந்து நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டவன் தன் கோபத்தைக் குறைக்க முயற்சி செய்தான்.

இப்படியே கோபப்பட்டா உண்மை என்னன்னே தெரியாம போயிடும் என்பதை உணர்ந்தவன் நிதானத்திற்கு வர முயன்றான்.

ஆனால் அவனால் அவ்வளவு எளிதாக அந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இத்தனை நாட்களாக ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்.. அதுவும் மனைவியென நினைத்து அவளை நெருங்கிய தருணங்களும் அவள் தன்னை ஒதுக்கிய தருணங்களும் நினைவில் வர அவனுக்கு அடி ஆழம் வரை வலித்தது.

அந்த வலி அவனுடைய கோபத்தை அதிகரித்ததே தவிர கட்டுப்படுத்தவில்லை.

அவளோ தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

“எப்பவுமே பொண்ணுங்ககிட்ட கோபத்தைக் காட்டக்கூடாதுன்னு நினைக்கிறவன் நான்… உங்க மேல அவ்வளவு மரியாதை இருக்கு… இதுவரைக்கும் எங்க அம்மாவையோ வேற எந்தப் பொண்ணுங்களையோ நான் எடுத்தெறிஞ்சு பேசினதே கிடையாது… என்னால முடிஞ்ச மரியாதையைக் கொடுக்க நினைக்கிறேன்…

ஆனா இப்போ உன்னோட விஷயத்துல என்னால என்னையே கண்ட்ரோல் பண்ணிக்க முடியல அஞ்சலி… ரொம்ப கோபமா வருது… நீ என்னோட வாழ்க்கையை மட்டும் ஸ்பாயில் பண்ணல… உன்னோட வாழ்க்கை மதுராவோட வாழ்க்கைன்னு எல்லாரோட வாழ்க்கையையும் கெடுத்துட்ட… உன்னை கை நீட்டி அடிச்சதுக்கு சாரி… இதுக்கு மேலயும் நான் உன்கிட்ட பேசினா என்னை மீறி ஏதாவது பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு…

என்ன நடந்துச்சுன்னு சொல்றதுக்கான வாய்ப்பை நான் உனக்கு கொடுத்தேன்… ஆனா நீ இப்போ வரைக்கும் எதுவுமே என்கிட்ட சொல்லல… இதுக்கு மேல நாம பேச வேணாம்… இனி நம்ம குடும்பமே பேசி முடிவெடுக்கட்டும்… உங்க அப்பா அம்மாவை இங்க வர வைக்கிறேன்… எங்க வீட்லயும் விஷயத்தை சொல்லிடுறேன்…” என்றவன் இறுகிய முகத்துடன் அந்த அறையை விட்டு வெளியேற விக்கித்துப் போனாள் அஞ்சலி.

“மாமா… வேணாம் ப்ளீஸ்… நில்லுங்க…” என்றவள் வேகமாக ஓடி வந்து அவனுடைய வழியை மறைத்து விட அவனுடைய பார்வையோ அவளை அழுத்தமாக ஏறிட்டது.

“எல்லாருக்கும் தெரிஞ்சா ரொம்ப பெரிய பிரச்சனையா போயிடும் மாமா… தயவு செஞ்சு நான் சொல்றதை கேளுங்க… நான் பண்ணது தப்புதான்… எனக்கே தெரியும்… உங்களை ஏமாத்தணும்னு சத்தியமா நான் நினைக்கவே இல்ல… இவ்வளவு நாளும் உங்களை ஏமாத்திட்டு இருக்கோம்னு குற்ற உணர்ச்சியில்தான் நானும் வாழ்ந்துகிட்டு இருக்கேன்… இதெல்லாம் நான் வேணும்னு பண்ணல மாமா…” எனக் கதறி அழுதவளை வெறித்துப் பார்த்தான் அவன்.

“பெரியவங்களுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடுமா? இப்பவே நம்ம வாழ்க்கை பிரச்சினையில்தான் இருக்கு அஞ்சலி… உனக்கு அது புரியுதா இல்லையா?” என்றவன் அங்கே இருந்த சோபாவில் அவளை அமரச் செய்தான்.

“சரி..‌ பெரியவங்ககிட்ட போறதுக்கு முன்னாடி நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு…” என்றான் அவன்.

“ச… சரி மாமா…” என்று முனகினாள் அவள்.

“எனக்கு உண்மை மட்டும்தான் வேணும் அஞ்சலி… இதுக்கு மேல என்கிட்ட பொய் சொல்லவோ நடிக்கவோ செய்யாத…” என்றான்.

“சத்தியமா உண்மையை மட்டும்தான் சொல்லுவேன்…” என தேம்பியவளைப் பார்க்க அவனுக்கு கோபம் மட்டுமே அதிகரித்தது.

பற்களைக் கடித்து தன் கோபத்தை அடக்கியவன் “நான் யாரோட கழுத்துல தாலி கட்டினேன்? மதுரா கழுத்துல கட்டினேனா? உன் கழுத்துல கட்டினேனா? எப்போ இந்த ஆள் மாறாட்டம் நடந்துச்சு? எதுக்காக இப்படி பண்ணீங்க? இதெல்லாம் மதுராவுக்கு தெரியுமா? இல்ல நீதான் ஏதாவது வில்லி வேலை பண்ணிட்டியா?” என அவன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக அவளுக்கு நெஞ்சமெல்லாம் வலித்தது.

வேகமாக மறுத்து தலையசைத்தவள் “நீங்க மதுரா அக்காக்குதான் தாலி கட்டினீங்க… அன்னைக்கு நைட்தான் நான் மதுராவா இங்க வந்தேன்…” என திக்கியவளுக்கு தன் தவறின் விபரீதம் புரிந்தது.

“அடடா… அக்காக்கு தாலி கட்டி தங்கச்சி கூட ஃபர்ஸ்ட் நைட்டா?” என அவன் இகழ்ச்சியாகக் கேட்க கதறிவிட்டாள் அவள்.

“இப்படி எல்லாம் பேசாதீங்க மாமா… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… என்னால தாங்க முடியல…” என்று கதறினாள்.

“நீ எதுக்குமா அழுற? நான் தான் அழணும்…” என்றான் கதிர்.

கோபப்படக் கூடாது என நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாமல் அவனுடைய வார்த்தைகள் குத்தலாக வெளிப்பட்டன.

“அக்காக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல மாமா… அவ படிக்கணும்னு ஆசைப்பட்டா… சென்னையில அவ படிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது… வேற வழி இல்லாம இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டா…” என்றவள் அன்று இரவு நடந்த அனைத்தையும் கதிரிடம் கூறி முடித்தாள்.

மதுரா தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியது தொடங்கி அவளை வற்புறுத்தி மதுவாக இங்கு நடிக்க வைத்தது வரை அனைத்தையும் கூறி முடித்தவளுக்கு இன்னும் அழுகை அதிகரித்தது.

அவள் கூறிய அனைத்தையும் கேட்டு உறைந்துவிட்டான் கதிர்.

தலை வெடிப்பது போல இருந்தது.

“இவ்வளவுதானா? இல்ல இன்னும் ஏதாவது என்கிட்ட மறைக்கிறியா?” என உடைந்த குரலில் கேட்டான் அவன்.

“எங்க வீட்டுக்கு இந்த உண்மை தெரியும் மாமா..” என்றதும் கொதித்து எழுந்து விட்டான் அவன்.

அவளோ அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டவள் “நாங்க இப்படி ஆள் மாறாட்டம் பண்ணது அடுத்த நாள்தான் எங்க அம்மாக்கு தெரிஞ்சுது.. அன்னைக்கே உண்மையை சொல்லிடலாம்னு அம்மா சொன்னாங்க… ஆனா அப்பா மறுத்துட்டாரு…” என அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தாள்.

“சோ குடும்பமா சேர்ந்து ஏமாத்தி இருக்கீங்க… இது எவ்வளவு பெரிய பார்ஜரின்னு உனக்குத் தெரியுமா அஞ்சலி? நான் மட்டும் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தா உன்னையும் உங்க அக்காவையும் தூக்கி உள்ள வச்சுடுவாங்க…” என்றான் அவன்.

விதிர்விதிர்த்துப் போனாள் அவள்.

“ஐயோ மாமா… நான்தான் தப்பு பண்ணினேன்… எனக்கு என்ன தண்டனை வேணாலும் குடுங்க… நான் ஏத்துக்குறேன்… ஜெயிலுக்கு போறதுனாலும் நான் போறேன்… அக்காவையும் எங்க அப்பா அம்மாவையும் எதுவும் பண்ணிடாதீங்க… உங்கள கெஞ்சிக் கேட்கிறேன்…” என தன் முன் மண்டியிட்டு அமர்ந்து அழுதவளைப் பார்த்தவனுடைய முகத்தில் உணர்ச்சிகள் தொலைந்து போயின.

“முதல்ல எழுந்திரு…” என்றான் அவன்.

அழுது அழுது அவளுடைய முகம் வீங்கிச் சிவந்திருந்தது.

எழுந்து நின்றவளை மீண்டும் சோபாவில் அமரச் சொன்னான் அவன்.

“இப்போ நீ எதுக்காக அழுதுக்கிட்டு இருக்க? நீ அழுறதால ஏதாவது மாறப் போகுதா இல்லைல.. முதல்ல கண்ணைத் துடை…” என்றான் அவன்.

“சென்னைக்கு போனதுக்கு அப்புறம் மதுரா உன்கிட்ட பேசினாளா? அவ ஏதாவது சொன்னாளா?” என்று கேட்டான்.

“ஆமா மாமா… உங்ககிட்ட ஒரு லட்சம் பணம் வாங்கி கொடுக்கச் சொன்னா…” எனத் திக்கித் திணறி அவமானத்தில் முகம் சிவக்க தலையைக் குனிந்தவாறே கூறினாள் அவள்.

“ஓஹ்…?” என்றவன் தன் நெற்றியை அழுத்தமாக தேய்த்து விட்டான்.

“நான் மதுராக்கிட்ட பேசணும் அஞ்சலி…” என்றான்.

“எ… எனக்கு அவ நம்பர் தெரியாது மாமா… அவ கால் பண்ணா மட்டும்தான் பேச முடியும்…” என முனகினாள்.

“அவ வீட்டு போனுக்குத் தானே கால் பண்ணி இருந்தா..? அதுல அவ நம்பர் ஸ்டோர் ஆகி இருக்கும்… அதிலிருந்து நான் அவ நம்பரை எடுத்துக்கிறேன்…” என்றான் அவன்.

“ம்ம்…” என முணுமுணுத்தாள் அவள்.

“மதுராக்கிட்ட பேசிட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு நான் சொல்றேன்…” என்றவன் எழுந்து கொண்டான்.

அவளோ வேதனையுடன் தலையைச் சரியென அசைத்தாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 108

No votes so far! Be the first to rate this post.

1 thought on “14. தொடட்டுமா தொல்லை நீக்க..!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!