14. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.9
(42)

சொர்க்கம் – 14

அந்த ஜீப்பின் பின் பக்கத்தில் அவளை ஏற்றி அசைய விடாமல் இருவர் பிடித்துக் கொள்ள அவளுக்கோ அச்சத்தில் இதயம் தாறுமாறாகத் துடித்தது.

கதறித் திமிறியவளின் வாயில் அவர்கள் பழைய துணி ஒன்றை அடைத்து விட, இப்படியே தன்னை கடத்திக் கொண்டு போய் ஏதாவது செய்து விடுவார்களோ என நடுங்கிப் போனாள் பெண்.

கண்ணீர் வழிந்து கழுத்தை நனைத்தது.

உச்சக்கட்ட அதிர்ச்சியும் பயமும் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்தில் ஆழ்த்த அவளுடைய விழிகளோ தானாக மூடிக் கொண்டன.

“பாஸ் இந்த பொண்ணு மயங்கிட்டா..”

“நல்லதா போச்சுடா ரொம்பவும் திமிறுறா.. இவளோட கொழுப்பை அடக்கினாதான் எனக்கு திருப்தியா இருக்கும்..” என்ற மோகனின் ஜீப்போ அவனுடைய பண்ணை வீட்டை நோக்கி வேகமாகப் பறந்தது.

மேகலாவோ அருகில் உள்ள சிலரிடம் உதவி கேட்டும் கிடைக்காது போய்விட வீட்டிற்குள் ஓடி வந்தவர் செந்தூரியின் ஃபோன் அங்கே இருப்பதைக் கண்டு அதனை எடுத்து சேகருக்கு அழைத்தார்.

அவனோ அழைப்பை ஏற்காது விட அவருக்கோ நெஞ்சம் வெடித்து விடும் போலானது.

மீண்டும் மீண்டும் அவனுக்கு முயற்சி செய்ய மூன்றாவது அழைப்பில்தான் அவருடைய அழைப்பை ஏற்றான் சேகர்.

“சொல்லு..” என்றான் அவன்.

“தம்பி நான் ஆன்ட்டி பேசுறேன்… எங்கப்பா இருக்க..? ஒரு பிரச்சனை ஆயிடுச்சு..” என இவர் மூச்சு வாங்கியவாறு வேகமாகப் பேச இவர் பேசுவது அவனுக்கோ புரியவே இல்லை.

“ஆன்ட்டி நீங்க என்ன பேசுறீங்கன்னு புரியல.. கொஞ்சம் நிதானமாப் பேசுங்க..” என்றான் அவன்.

“நாம வட்டிக்கு வாங்கினோமே மோகன்.. அவன் வட்டிப் பணத்தை கொடுக்கலைன்னு நம்ம செந்தூரிய கூட்டிட்டுப் போய்ட்டான்பா.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. ரெ… ரெண்டு மணி நேரத்துக்குள்ள பணத்தோட வந்து பொண்ண கூட்டிட்டுப் போன்னு சொல்லிட்டான்.. என் பொண்ணு கதறிக்கிட்டே இருந்தா.. பயமா இருக்கு தம்பி.. சீக்கிரமா வரிங்களா..? உங்ககிட்ட பணம் இருந்தா எடுத்துட்டு வாங்க தம்பி.. சீக்கிரமா அங்க போய் அவளை கூட்டிட்டு வரணும்..” என்றதும் சில நொடிகள் தயங்கி அமைதியாக இருந்தான் சேகர்.

“தம்பிஇஇஇ தம்பீஈஈஈ..? லைன்ல இருக்கீங்களா..?” என அந்த சில நொடி அமைதியையும் தாங்க முடியாது கதறினார் மேகலா.

“இப்போ என்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே ஆன்ட்டி..” என்றதும் அவருக்கோ நெஞ்சம் அடைத்துக் கொண்டது.

“இ.. இல்லையா..?” திணறினார் அவர்.

“இல்ல… என்னோட ஃப்ரெண்ட் யார்கிட்டயும் இருக்கான்னு கேட்டு பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்றேன் ஆன்ட்டி..” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட இவருக்கோ நெஞ்சமெல்லாம் பதறித் துடித்தது.

வீட்டில் வாங்கி வைத்த புதுப் பொருட்கள் எல்லாவற்றையும் பார்த்தவர் ‘இதையெல்லாம் யாருக்கும் விற்றாவது பணத்தை புரட்டி விடலாமா..? ஆனால் அதற்கான நேரம் தான் கிடையாதே.. இப்போதே ஒரு மணி நேரம் முடிந்து போய்விட்டதே..’ என தவியாய் தவித்தது அவருடைய உள்ளம்.

****

மயக்கம் தெளிந்து தன்னுடைய விழிகளைத் திறந்தவள் ஹாலின் ஒரு மூலையில் தான் படுத்துக் கிடப்பதைக் கண்டு பதறி எழுந்தாள்.

பேச முடியாது வாய்க்குள் ஏதோ ஒரு பழைய துணி அடைத்து இருப்பதை உணர்ந்து சட்டென திணறியவாறு தன் வாய்க்குள் இருந்து அதனை வெளியே எடுத்தவளுக்கு வாயெல்லாம் கசந்து வழிந்தது.

என்னை இழுத்து வந்து இங்கே போட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டவள் அச்சத்தோடு தன்னுடைய விழிகளைச் சுழற்றினாள்.

அங்கே இரு காவல் அதிகாரிகள் அவளையே பார்த்த வண்ணம் இருக்க சட்டென எழுந்தவள்,

“சார்… சார்.. என்னைக் காப்பாத்துங்க சார்.. என்ன இங்க தூக்கிட்டு வந்துட்டாங்க..” என அழுகையோடு கூற,

காக்க வேண்டிய காவல் அதிகாரிகளோ, கையில் இருந்த மதுபானத்தை சுவைத்தவாறே “எதுக்கும்மா அழுற..? இனி உனக்கு வாழ்க்கைல எல்லாமே நல்லதாதான் நடக்கும்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போயேன்..” என்றதும் அந்த வார்த்தையில் அவளுக்கோ உடலின் ஒவ்வொரு அணுவிலும் வலிப்பது போல இருந்தது.

எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தானா..?

விதிர்விதிர்த்துப் போனவளாய் பின்னால் நகர்ந்து சுவற்றோடு ஒன்றிக் கொண்டாள்.

உள்ளே சில கட்டுப் பணத்தை ஏந்தியவாறு அந்த இடத்திற்கு வந்தான் மோகன்‌.

அந்தக் கட்டுப் பணத்தை இருவருக்கும் சமமாகப் பிரித்து அவர் கொடுக்க அவளுடைய பார்வையோ பயத்தோடு அவர்களையே வெறித்துக் கொண்டிருந்தது.

அங்கு இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவளுக்கு நெருப்பில் இருப்பதைப் போல இருக்க அழுது கதறி தொண்டை வறண்டு போனது.

அங்கே ஒரு பெண் இக்கட்டான சூழ்நிலையில் உதவி கேட்டதைக் கூட மதிக்காது தங்களது கரத்தில் இருந்த மதுவை குடித்து முடித்துவிட்டு மோகன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து தன்னுடைய கடமையை ஆற்றாது சென்றது காவல்துறை.

மோகனோ அவள் அருகே வந்தவன்,

“இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு.. அந்த அரை மணி நேரத்துக்குள்ள உன்னோட அம்மா பத்தாயிரத்த எடுத்துட்டு வந்தாங்கன்னா நீங்க இருந்து கிளம்பிடலாம்.. இல்லனா எனக்கு ரெண்டாவது மனைவியா காலம் முழுக்க என் கூடவே இருக்கலாம்.. 10 லட்சம் என்ன எவ்வளவு வேணாலும் உனக்காக தரேன்…” என்றவர் தன்னுடைய ஒற்றைக் கரத்தை உயர்த்தி அவளுடைய சிவந்து போன கன்னத்தை அழுத்தமாக வருட அவளுக்கு உடல் முழுவதும் தீப்பற்றிக் கொண்டது போல எரிந்தது.

அவனுடைய கரத்தை பலவீனமாகத் தட்டி விட்டவள் தன்னுடைய மொத்த நம்பிக்கையும் இழந்து போனாள்.

தொடை வேறு கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருந்தது.

நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடில் தடுமாற அப்படியே மடங்கி தரையில் விழுந்தவளுக்கு கடவுள் வந்து தன்னைக் காப்பாற்ற மாட்டாரா என உள்ளம் ஏங்கியது.

மீண்டும் அவளை தொடுவதற்காக தன்னுடைய கரத்தை நீட்டிய மோகனுக்கு அவருடைய அலைபேசி சினுங்கும் சத்தம் தொல்லையாக இருக்க எரிச்சலோடு அவளைத் தொட முயன்ற கையை மடக்கியவர் யார் இந்த நேரத்தில் தொந்தரவாக அழைப்பது என எண்ணியவாறு அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தார்.

“சா.. சார்..? நீ.. நீங்களா..?” என அதிர்ந்து பேசிய மோகனோ முழுதாக நிமிர்ந்து நின்றவன்,

“ஓகே சார்.. ஓகே சார்.. சரி இனி இப்படி நடக்காது சார்…” என சற்றே தடுமாறியவாறு கூறிவிட்டு எரிச்சலோடு அந்த வரவேற்பறையின் அங்கும் இங்குமாக நடந்தவர்,

“டேய் இங்க வாங்கடா..” என அவருடைய ஆட்களை அழைத்தார்.

உடனே இருவர் உள்ளே வந்து கைகட்டி நிற்க,

“இவள கூட்டிட்டுப் போய் அவங்க வீட்டிலேயே விட்டுட்டு வாங்க..”

“இந்தாம்மா உனக்கு இன்னும் ரெண்டு நாள்தான் டைம் அதுக்குள்ள மொத்த பணத்தையும் செட்டில் பண்ணியே ஆகணும்… அதுக்கப்புறம் என்ன நடந்தாலும் நான் உன்ன விடவே மாட்டேன்..” என்ற எச்சரிக்கையோடு அவர் கூற எழுந்து கூட நிற்க முடியாது சுவற்றைப் பிடித்தவாறு நின்றவள் வேகமாக ஆம் என தலை அசைத்தாள்.

தன்னை அழைத்துச் செல்ல நெருங்கிய இருவரையும் பார்த்து அச்சத்தோடு வேகமாக மறுத்து தன் தலையை அசைத்தவள் மெல்ல நடந்தவாறு அந்த பண்ணை வீட்டை விட்டு வெளியேறினாள்.

உடல் நடுக்கம் குறையவே இல்லை.

உள்ளம் இன்னும் முழுதாக அச்சத்தில் இருந்து மீளாது போக இதயத் துடிப்பும் நிதானத்திற்கு வரவில்லை.

மெல்ல மெல்ல நடந்து வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கியவளுக்கு என்ன வாழ்க்கை இது என்ற எண்ணம் தோன்றியது.

அழுதழுது நடந்து செல்லும் தன்னையே வீதியில் செல்பவர்கள் பார்ப்பது போலத் தோன்றக் கூனிக் குறுகிப் போனாள் அவள்.

ஏராளமான வாகனங்கள் நில்லாமல் அந்த வீதியில் ஓடிக்கொண்டே இருந்தன.

மொத்த பிரச்சனையையும் இந்த நொடியே முடித்து விடலாமா..?

நான் இல்லை என்றால் இந்த பிரச்சனையும் ஓய்ந்துவிடும் அல்லவா.?

விநாயக் மிரட்டுவதற்கும் நான் இருக்க மாட்டேன்.

பணயப் பொருளாக என்னை மோகன் இழுத்துச் செல்வதற்கும் நான் இருக்க மாட்டேன்‌

சக்கரவர்த்தி சாரும் என்னிடம் பணம் கேட்டு மிரட்ட முடியாதே.

தற்கொலை என்ற ஒரு முடிவு என்னுடைய எல்லா பிரச்சனைக்கும் தீர்வாகி விடுமோ..!

இப்படியே நடுவீதியில் நடந்து சென்று விழிகளை மூடி அசையாமல் நின்று விட்டால் நிச்சயமாக வேகமாக வரும் ஏதோ ஒரு வாகனம் என்னை இடித்துத் தள்ளிவிடும்.

முட்டிய வேகத்தில் இந்த உலகை விட்டுச் சென்றால் நிம்மதி தானே.

ஒருவேளை யாராவது நல்ல உள்ளம் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி விட்டால்..?

ஐயோ அந்தச் செலவு வேறு இழுத்துக் கொள்ளுமே‌.

என்னுடைய செலவை பார்க்க அன்னை என்ன பாடுபட வேண்டி வருமோ..?

உயிர் வாழ்ந்தாலும் தொல்லை. உயிருக்குப் போராடினாலும் தொல்லைதான் போலும்.

சாக வேண்டும் என்றால் கூட பணத்தை சேர்த்து வைத்த பின் தான் சாகவேண்டும் போல.

மீண்டும் கண்ணீர் பெருகியது.

ஏதாவது பெரிய வாகனம் வந்தால் அதில் சென்று விழுந்து விடுவோமா..?

நிச்சயம் உயிர் பிரிந்து விடும் என எண்ணியவளுக்கு நெஞ்சம் நடுங்கியது.

அவளுக்கென்ன வாழ ஆசை இல்லையா.?

இல்லை வயதுதான் இல்லையா..?

ஆனால் வாழ்வதற்கு ஆசையும் வயதும் பத்தாதே.

இந்த உலகில் வாழ்வதற்கு பணம் அல்லவா அவசியமாக இருக்கின்றது.

நடந்து கொண்டிருந்தவளின் நடை அப்படியே நின்றது.‌

சில நிமிடங்கள் தன்னுடைய விழிகளை மூடியவள் நடுவீதியை நோக்கி நடக்கத் தொடங்க அவளுக்கு குறுக்காக வேகமாக வந்து நின்றது ஒரு கார்.

அந்தக் கார் வந்த வேகத்தில் பதறி இவள் கண்களை விரித்துப் பார்க்க கார் கண்ணாடி இறங்கியது.

யார் அது என திகைப்போடு பார்த்தவளுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து காதில் ப்ளூடூத்துடன் அமர்ந்திருந்த விநாயக் தென்பட்டதும் மொத்த உடலும் மின்சாரம் தாக்கியதை போல தடுமாறியது.

“கெட் இன் த கார்..” என்றான் அவன்.

அவளுக்கோ காதுகள் அடைத்துப் போயின போலும்.

அவன் கூறிய வார்த்தைகள் செவியில் விழவே இல்லை.

மலங்க மலங்க விழித்தபடி கண்ணீரோடு நின்றவளைப் பார்த்தவன் எட்டி அவனுக்கு அருகே இருந்த கார்க் கதவைத் திறந்து விட்டான்.

“கமான் உள்ள வா..” என நிதானமான குரலில் அவன் அழைக்க, இதோ விழப்போகிறேன் என்பது போல அவளுடைய கால்கள் மீண்டும் மடிய ஆரம்பித்தன.

கீழே விழாமல் திறந்திருந்த கார்க் கதவை சட்டென பிடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள் அவள்.

எப்படியும் இவன் தன்னை விடப்போவதில்லை என்பதை இத்தனை நாட்களில் புரிந்து கொண்டவள் தளர்ந்து போனவளாய் அந்த காருக்குள் ஏறி அமர்ந்தாள்.

அழுகை பீறிட்டது.

அவன் முன்பு அழுவதா..?

அழவே கூடாது என்ற வைராக்கியத்துடன் கீழ் உதட்டை மடித்து கடித்துக் கொண்டவள் தன் தலையை நன்றாக தாழ்த்திக் கொண்டாள்.

  • 💜🔥💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 42

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “14. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!