🤎 நேசம் நீயாகிறாய்! 🤎
நேசம் 14
எரிந்து முடிந்து சாம்பலான புகைப்படத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்த தேன் நிலா கணவனை நோக்கி பார்வையைச் செலுத்த, அவளை இங்கு எதிர்பாராததில் அதிர்ந்த தோரணை மாறாமல் நின்றான் ராகவ்.
“அந்த போட்டோவில் இருந்தது யார்?” என்று அவள் கேட்க, “ப்ச்! அதை கேட்காத. அப்படியே விட்று” என்றவனுக்கு அதைச் சொல்லும் எண்ணம் இல்லை போலும்.
“அப்படிலாம் விட முடியாது. கண்ணு முன்னால ஒரு போட்டோவை எரிச்சீங்க. அது ஏன்னு தெரிஞ்சுக்க வேண்டிய கட்டாயம் எனக்கிருக்கு” அவளால் அதை சாதாரணமாகக் கடக்க முடியவில்லை.
ஒரு வேளை அவனால் காதலிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை எரித்தானோ?
அப்படியென்றால் இன்று ஏன் எரிக்க வேண்டும்? தேவையில்லை என்று நினைத்தால் திருமணத்திற்கு முன்னதாகவே அதை அழித்திருக்கலாமே?
இன்று வரை வைத்திருந்தான் என்றால், இப்போதும் அவன் மனதில் அப்பெண் வாழ்கிறாளா? இப்போது தூக்கிப் போட வேண்டிய அவசியம் தான் என்ன?
அவளுக்கு பல்வேறுபட்ட சிந்தனைகளின் தாக்கத்தில் தலை வலிக்கத் துவங்கிற்று. இதை இப்படியே விடக் கூடாது. நேரடியாகக் கேட்டு இரண்டில் ஒன்று முடிவெடுத்து விட எண்ணினாள்.
“இதோ பார் நிலா! ஒவ்வொரு விஷயத்திலும் ஆர்கியூமண்ட் நடக்குது. பட் இது மட்டும் வேண்டாம். சண்டை போடுற மூட் எனக்கு கொஞ்சமும் இல்லை” அவன் முகத்தில் மெல்லிய அயர்வு.
ஆனால் அவளோ இன்று அந்த விடயத்தைத் தெரிந்து கொண்டு ஒரு முடிவு காணாமல் விடப் போவதில்லை என திடமாக நிற்கலானாள்.
“ஃபைன்! அது யாருன்னு சொல்ல வேண்டாம். ஆனால் எதுக்காக எரிச்சீங்கனு மட்டும் சொல்லுங்க” அவளின் பிடிவாதத்தை அவன் அறிவான் அல்லவா?
“அது என் வாழ்க்கைக்கு சரியானதல்ல. இருக்க இருக்க பிரச்சினையாகிப் போகும்”
“தேவைன்னா கையில் வெச்சுப்பீங்க. அவசியம் இல்லாமல் போனா இதான் முடிவா?” தரையில் இருந்த சாம்பலைச் சுட்டு விரலால் காண்பிக்க, “ம்ம். தேவையால்லாத விஷயங்களை எரிச்சுடறது நல்லது” என தலையசைத்தான்.
அவன் சொன்னதில் சிந்தனை வயப்பட்டவள் “அப்போ நான் தேவையில்லைனா?” சட்டெனக் கேள்வி எழுப்பினாள்.
“ஏய்ய்….!!” வேட்டையாடும் சிங்கத்தின் வேட்கையுடன் கர்ச்சித்தான் ராகவேந்திரன்.
அவனது உறுமலில் அதிர்ந்து போனவளுக்கு, தான் சொன்னது என்னவென்று புத்தியில் உறைத்தது.
தேவையில்லாததால் புகைப்படத்தை எரித்தான். நான் தேவையில்லைனா? என்று அவள் கேட்டதின் மறு பாதி, “என்னையும் எரிப்பீங்களா?” என்பது தானே.
அவள் எப்படி இப்படிக் கேட்கலாம்? தன் மீதான அவளின் அபிப்பிராயம் ஏன் இத்தனை மட்டமாக இருக்கின்றது?
அவனுக்கு ஆத்திரம் தீரவில்லை.
“ரா..ராகவ்” அவனது சிவந்த வதனம் அவளுக்கு உள்ளூர அச்சம் விளைவித்தது.
“இப்போ எனக்கு எல்லாமே தப்பா தோணுது. வேணாம்னு சொன்ன உன்னைக் கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாதுன்னு நெனக்கிறேன்” என்றவனின் உள்ளம் காயப்பட்டுப் போயிருந்தது.
“என்னைக் கட்டிக்கோங்கனு நான் சொல்லல. அதை மட்டும் செய்யாம இருந்திருந்தா இன்னிக்கு கல்யாணத்தைத் தப்பு சொல்லி இருக்கவும் வேண்டாம், உங்க காதலை இழந்திருக்கவும் வேண்டாம்” என்று சொன்னதும், அவன் அதிர்ந்து போனான்.
“கா.. காதலா?”
“காதல் தான். லவ், ப்ரேமம், நேசம்.. அதைத் தான் சொல்லுறேன். உங்களுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க முன்னாடி அது இருந்தது எனக்குத் தெரியும். எப்படினு பார்க்குறீங்களா? நீங்க அந்த தனுஜா கூட பேசினது விளங்கிச்சு” என்று சொல்ல, அவன் அமைதியாக நின்றான்.
“இப்போ பேசுங்க டாக்டரே! அன்னிக்கு துருவனுக்காக போலீஸ் ஸ்டேஷன் போனீங்கனு சொல்லாம, கல்யாணத்தை நிறுத்தப் போனதா சொன்னீங்களே, அது பொய்னு நெனச்சேன். ஆனால் நடந்தது அது இல்லைனாலும் நீங்க சொன்ன விஷயம் உண்மை. உங்களுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை”
“அதெல்லாம் பாஸ்ட்! விருப்பம் இருந்துச்சோ இல்லையோ கல்யாணம் ஆச்சு. இனிமே அரைச்ச மாவை அரைக்கிற மாதிரி அதையே பேசி எந்த பிரயோசனமும் இல்லை. அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்கிறது புத்திசாலிக்கு அழகு” அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.
“நான் முட்டாளாவே இருந்துக்குறேன். புத்திசாலி பட்டம் வேண்டாம். ஆனால் எல்லாத்தையும் உங்களை மாதிரி என்னால இவ்ளோ ஈசியா எடுத்துக்க முடியாது” தனது மனக்கருத்தைக் கூறினாள்.
“பின்ன? நடந்ததை நெனச்சு நெனச்சு அப்படியே இருக்கப் போறியா? நீ சந்தோஷமா வாழனும்னு தான் உங்கப்பாம்மா ஆசைப்படுறாங்க. நீ என்னன்னா தேவையில்லாததைப் போட்டு யோசிச்சுட்டே இருக்க”
“உங்களை மாதிரி தேவையில்லாததுனு ஒரேயடியாக எல்லாத்தையும் எரிச்சு சாம்பலாக்கிட்டு அடுத்த நிமிஷம் அதை மறந்துட முடியாது” என்றவளோ, “அது எப்படிங்க லவ் பண்ணுன பொண்ணை சட்டுனு மறந்துடறீங்க? அதுவும் நெருப்பு வைக்கிற அளவுக்கு ஏன் போறீங்க? அப்போ லவ் பண்ணாமலே இருந்திருக்கனும்” என்க, அவன் திகைத்துப் போனான்.
“ஹேய் ஹேய். அது தனுஜாவோட ஃபோட்டோ. என்னை லவ் பண்ணுறப்போ அவளையும் என்னையும் வெச்சு எடிட் பண்ணுன போட்டோஸ்னு என் கிட்ட கொடுத்தா. அதை வெச்சுக்கிறது என் வாழ்க்கைக்கு சரியில்லைனு எரிச்சுட்டேன்” என்று அவன் பல்லைக் கடிக்க,
“அவ எதுக்கு உங்க கிட்ட கொடுக்கனும்?” என்று எகிறியவள், அவனோடு சண்டை போட தனக்கு எந்த உரிமையும் இல்லையென அமைதியானாள்.
“நான் லவ் பண்ணுன பொண்ணோட போட்டோவை எரிச்சேன்னு நீ தப்பு கணக்கு போட்டுட்டியா? உயிருக்குயிரா லவ் பண்ணுன பொண்ணு போட்டோவை உண்மையா காதலிச்ச யாராலேயும் எரிக்க முடியாது” அவன் கண்களில் அப்பட்டமான காதல்.
காதலை உணராத அளவுக்கு அவள் ஒன்றும் குழந்தை அல்லவே. அந்தப் பெண் மீது அவனுக்குள்ள நேசத்தை அந்தக் கண்களில் தெரிந்த பிரகாசமும், குரலில் தொனித்த மென்னுணர்வும் அழகுற எடுத்துரைத்தது.
அது தனுஜாவின் புகைப்படம் என்றதும் பெருமூச்சு விட்டவளுக்கு, மறு நொடி அவனது காதலானது மனதில் ஒரு வித வலியை ஊடுறுவச் செய்தது.
“அவ்ளோ காதல் இருக்கிறவர் என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்? பேசாம அந்த பொண்ணையே கட்டியிருக்கலாமே”
“என் காதலை சொல்லனும்னு தான் இருந்தேன். ஆனால் இடையில் கல்யாணம் வந்ததால எல்லாம் சொதப்பிருச்சு”
“எனக்கு மட்டும் தான் கல்யாணம் பிடிக்கலனு அசட்டையா இருந்துட்டேன். உங்களுக்கும் பிடிக்கலனு தெரிஞ்சா எப்பாடுபட்டாவது ஸ்டாப் பண்ணி இருப்பேன்” என்று தலையில் கை வைக்க,
“கல்யாணத்தை நிறுத்துறத தவிர, உனக்கு வேற பேச்சே கிடையாதா? எப்போ பாரு கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னே சொல்லி சலிச்சு போகல உனக்கு?” சீற்றத்துடன் அங்கிருந்து வெளியேறினான்.
மறுநாள் தம் இருப்பிடம் செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர் ராகவ்வின் நண்பர்கள்.
காலையுணவு முடிந்ததும், “நாங்க போயிட்டு வர்றோம் தங்கச்சி” என்று நகுல் கூற, தலையசைத்துப் புன்னகைத்தாள்.
“எங்க வீட்டுக்கு ஒரு நாள் வரனும் தேனு. கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணுறோம் வாங்க” லிரிஷா தேனுவை அணைத்து விடுவிக்க, “கண்டிப்பா லிரி” என்று முகம் மலர்ந்தாள்.
அலெக்ஸும் அவ்வாறே விடபெற, “நாங்க கிளம்புறோம்” பொதுப்படையாக சொல்லிச் சென்றாள் தனுஜா.
அவளைப் பார்த்த தேனுவிற்கு நேற்றிரவு அவளோடு நிகழ்ந்த உரையாடல் நினைவுக்கு வந்தது.
ராகவ் கோபமாகச் சென்றதும், கார்டனில் நடை பயின்று கொண்டிருந்தாள் தேனு.
“என்ன தேனு ஒரே யோசனையா இருக்க போல” நக்கலாகக் கேட்டவாறு வந்தாள் தனு.
“ஆமாமா! கண்டவங்க கிட்டிருந்து என் புருஷனை எப்படி காப்பாத்துறதுனு ஐடியா பண்ணுறேன்” என்ற கூற்று மற்றவளை நன்கு தைத்தது.
இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “உன் புருஷன் ஒரு பொண்ணை ரொம்ப லவ் பண்ணுனானே. அது தெரியுமா உனக்கு?” என அவள் வினவ,
“தெரியுமே. அவர் என் கிட்ட எதையும் மறைக்க மாட்டார். அது அப்போ. ஆனால் இப்போ என்னைத் தான் லவ் பண்ணுறார். லவ்வுனா எப்படி தெரியுமா? அவ்ளோ லவ், உங்க பாஷையில் சொல்லனும்னா அன்கன்டிஷனல் லவ்” அவளை வெறுப்பேற்றுவதற்காக முகபாவனையை உல்லாசமாக மாற்றிக் கொண்டாள்.
ஆனால் உள்ளமோ புகைந்து கொண்டிருந்தது. தனுஜாவிடம் அப்படிக் கூறினாலும் அனைத்தும் உண்மை அல்லவே?!
அவனுக்கு அவள் மீது துளியளவும் காதல் இல்லை. அதுவும் இல்லாமல் காதல் விவகாரத்தை முற்று முழுதாக மறைத்து விட்டானே.
தெரியாது என்று சொல்வாள். அதனை வைத்து அவளை சீண்டி விடலாம் என எண்ணியவளுக்கு அனைத்து நினைப்பும் பொய்யாகிப் போனது.
எனினும், தன் மனதின் ஆவேசத்தைக் கொட்டித் தீர்க்க எண்ணி, “எல்லாம் ஓகே. ஆனால் நீ என்னிக்கும் அந்தப் பொண்ணோட இடத்திற்கு வர முடியாது. ராகவ் மனசுல அவளுக்குத் தான் முதலிடம். கட்டிக்கிட்டோமேனு கடமைக்கு உன் கூட வாழுறானே தவிர, உன்னைப் பிடிச்சு வாழல.
அன்ட் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா நீ ராகவ்வுக்கு செட்டாக மாட்ட. ரஷ்யாவில் படிச்சு டாக்டரான அவன் எங்கே? காலேஜ் கூட போகாம உடுப்பு தைக்கிற நீ எங்கே?” என்று கேட்டு விட்டுச் சென்றாள்.
தனுஜாவுக்கு ராகவ் கிடைக்கவில்லை. அவ்வாறிருக்க, தேன் நிலாவுக்குக் கிடைத்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட பொறாமை குணம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் வாழத் தான் செய்கிறார்கள்.
தேனுவின் பதிலுக்காக தனுஜா காத்திருக்கவில்லை. காத்திருந்தால் கூட பதில் சொல்லும் நிலையில் அவளும் இல்லை.
அந்தளவுக்கு சிதைந்து போயிருந்தது அவளிதயம். அவள் கூறியது தவறாகத் தோன்றவில்லை.
‘உண்மை தானே? அவர் டாக்டர். என் படிப்புக்கும் அவர் படிப்புக்கும் ஏணி வெச்சா கூட எட்டுமா? அவர் காதலிச்ச பொண்ணு ரொம்ப படிச்சு இருக்காளோ?’ என்று தன்னையே தாழ்வாக நினைத்துக் கொண்டாள்.
அதே உணர்வோடு அவள் தூங்கிப் போக, ராகவ்வும் அதுவும் பேசாமல் தூங்கினான். காலையில் கூட பேசவில்லை.
நண்பர்களை ஏர்போர்ட்டில் விட்டு வந்தவன், அமைதியாக இருந்த மனைவியைக் கண்டான்.
“டேய்! தேனுவுக்கு என்னாச்சு? ஒரு மாதிரியா இருக்கா” என மரகதம் கேட்க, “தெரியலம்மா. நான் பார்க்கிறேன்” அவளருகில் சென்று அமர்ந்தான் ராகவ்.
அவனது வரவை உணர்ந்து, “நான் ஒன்னு கேட்கவா?” எனக் கேட்க, தலையசைத்து அனுமதி வழங்கியவனுக்கோ ஏடாகூடமாக எதுவும் கேட்டு விடுவாளோ எனவும் தோன்றியது.
“நீங்க லவ் பண்ணுன பொண்ணு நிறைய படிச்சு இருக்காங்களா?”
இதென்ன கேள்வி எனப் பார்த்து விட்டு, “எஸ்! படிச்சும் இருக்கா. படிச்சு கொடுக்கவும் செய்வா. அவ்ளோ அறிவு அவளுக்கு” அவன் வதனம் மலர்ந்தது.
‘அந்தப் பொண்ணு டீச்சர் போல’ என நினைத்தவாறு நகர்ந்தவளை புருவம் சுருக்கிப் பார்த்தான் காளை.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி
2024-11-18