14. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

5
(13)

வரம் – 14

“இப்போ எதுக்காக என்ன அமைதியா இருக்கச் சொல்ற…? உன்ன சீண்டினவன சும்மா விட சொல்றியா..? என் ரத்தம் கொதிக்குது பேபி டால்.. எந்தக் கை உன்னத் தப்பா தொட்டிச்சோ அந்தக் கைய உடைச்சு ஆத்துல எறிஞ்சாதான் என் மனசு அமைதி அடையும்.. அந்த ஷர்வாக்கு இந்த அரவிந்தன் எப்பேற்பட்டவன்னு காட்டிட்டு வரேன்…” எனக் கோபத்தோடு அங்கிருந்து கிளம்பியவனின் கரத்தை இறுகப்பற்றி நிறுத்தினாள் மோஹஸ்திரா.

“உனக்கு எவ்வளவு கோபம் இருக்கோ அதே கோபம் எனக்கும் அவன் மேல கொட்டிக் கிடக்கு… பட் இப்போ அவனை எதுவும் பண்ண வேணாம் அர்வி… முதல்ல நான் இந்த மீட்டிங்க நல்லபடியா முடிக்கிறேன்… இந்த சான்ஸ்ஸை விட்டா மறுபடியும் எனக்கு வேற சான்ஸ் கிடைக்காது..”

“ப்ச்…. அதுக்காக அவனை சும்மா விட சொல்றியா…?”

“இதோ பார் அர்வி நான் ஒன்னும் புத்தன் கிடையாது அவனை மன்னிச்சு விடுறதுக்கு… அவனுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்கணும் அதை எப்ப கொடுக்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்… அவன் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டான்… என்னைப் பத்தி தெரியாம என்ன ரொம்ப அசிங்கப்படுத்திட்டான்… எல்லாத்துக்கும் அவன் கதறணும்…” என மித மிஞ்சிய சீற்றத்தோடு அழுத்தமான குரலில் கூறியவளை சரி என்பது போல அரவிந்தன் பார்க்க சற்றே தள்ளி நின்ற குருவுக்கோ முதுகுத்தண்டு சில்லிட்டது.

‘ஆத்தி விட்டா ரெண்டு பேரும் சேர்ந்து ஷர்வாவை கொலையே பண்ணிடுவாங்க போல இருக்கே….’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டவன் முகத்தில் தன்னுடைய அச்சத்தை மறைக்க வெகுவாக பாடுபட்டான்.

“ம்ம்… ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்கிட்ட சொல்லு பேபி டால்…”

“ஏன்…? என்னால தனியா அவனை சமாளிக்க முடியாதா…? இந்த மீட்டிங் மட்டும் முடியட்டும் அதுக்கப்புறம் அவன எப்படித் தட்டித் தூக்குறேன்னு மட்டும் பாருங்க…” எனக் கூறியவளைப் பார்த்து குருவுக்கோ விழிகள் பிதுங்கின.

அரவிந்தனோ இதழ் பிரித்துச் சிரித்தான்.
அதே கணம் அவளுடைய அலைபேசிக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர அவளுடைய பார்வையோ அரவிந்தனின் மீது படிந்து மீண்டது.

“என்ன பேபி டால்…?”

“யாருன்னு தெரியல புது நம்பரா இருக்கு…”

“காலை அட்டென்ட் பண்ணி பேசினா யாருன்னு தெரிஞ்சிடப் போகுது…” என இலகுவாகக் கூறியவன் அவளுடைய முன்னெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கி விட்டான்.

அவளோ பார்வையால் குருவை அங்கிருந்து வெளியே செல்லும்படி கட்டளையைக் கொடுத்துவிட்டு அந்த அழைப்பை ஏற்று ஸ்பீக்கர் மோடில் போட்டவள்
“ஹலோ மோஹஸ்திரா ஹியர்…” என்றாள்.

“ஹாய் மேடாஆம்… எப்படி இருக்க..?” என தன்னுடைய குரலை மாற்றி பேசிக் கொண்டிருந்தான் வீரா.

“யார் நீ….?” எனக் கேட்டவளின் குரலில் அத்தனை அழுத்தம் ஏறி இருந்தது.
“இதோ பாரு மேடம் நான் யாருன்னு உனக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்ல… இனி எப்பவும் நான் யாருன்னு உனக்குத் தெரியப் போறதும் இல்ல… சுத்தி வளைச்சு பேச நான் விரும்பல..”

“ப்ச்… இப்பவே நீ சுத்தி வளைச்சு பேசுற மாதிரிதான் இருக்கு… ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வா… இல்லன்னா ஃபோனை கட் பண்ணிடு..” எனக் கட்டளைக் குரலில் கூறினாள் அவள்.
அரவிந்தனின் புருவங்களோ இவர்களின் உரையாடலில் சுருங்கி உச்சி மேட்டைத் தொட்டு மீண்டன.

“ரொம்பத்தான் சலிச்சுக்கிற… நான் சொல்லப் போற விஷயம் மட்டும் என்னன்னு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவ.. உனக்கு தேவையான ஒன்னு என்கிட்ட இருக்கு..”

“வாட்…?” எரிச்சல் மீதூறிய குரலில் கேட்டாள் அவள்.

“நீ ரொம்ப ஆவலா தேடிட்டு இருக்கியே அந்த கிரீடம்….. ஹாங்… ஷர்வாவோட ரெட் ரீபெல் டைமண்ட் பதிச்ச கிரீடம் என்கிட்ட தான் இருக்கு…” என வீரா கூறியதும் மோஹஸ்திராவுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

அரவிந்தனோ விழிகள் விரிய அவளை இன்னும் நெருங்கி வந்தவன் மேலே பேசு என்பது போல் தன்னுடைய கரத்தால் சைகை செய்ய நொடியில் உண்டான அதிர்ச்சியை மறைத்துக் கொண்டவள் தன்னுடைய மூச்சை மறுபக்கம் இருப்பவனுக்கு கேட்காதது போல நன்றாக உள்ளே இழுத்து வெளியேற்றிவிட்டு இயல்பாக பேசத் தொடங்கினாள்.

“லிசின் உன்ன மாதிரி ஃபிராடு கூட்டத்தை எல்லாம் நான் நம்புறது கிடையாது… இதோட நிறைய பேர் எனக்கு கால் பண்ணி இப்படி எல்லாம் பேசிட்டாங்க… யார் என்ன சொன்னாலும் நம்பி ஏமாந்துருவேன்னு நினைச்சியா..? என்னோட டைம் வேஸ்ட் பண்ணாத… பை..” என இவள் அலட்சியமாகக் கூறுவதைப் போலக் கூற மறு பக்கம் இருந்த வீராவோ குழம்பிப் போனான்.

வேறு சிலர் தங்களிடமும் கிரீடம் இருப்பது போல பணம் பறிக்க முயன்றிருப்பார்கள் போலும் என எண்ணிக்கொண்டவன்,

“ஏய் மேடம் நிஜமாவே அது என்கிட்டதான் இருக்கு… நாம ஏன் டீல் பேசக்கூடாது..?”

“அந்தக் கிரீடம் நிஜமா உன்கிட்ட இருந்தா எத்தனை கோடி வேணும்னாலும் நான் கொடுக்க தயாரா இருக்கேன்… ஆனா அது உன்கிட்ட தான் இருக்குன்னு எப்படி நான் நம்புறது…? முதல்ல நீ யாரு? எங்கே இருந்து பேசுற..? உன்ன பத்தின டீடெயில்ஸ் எனக்கு வேணும்… அதுக்கு அப்புறமாதான் என்னால உன்கிட்ட டீல் பேச முடியும்… யாருன்னே தெரியாதவன்கிட்ட எல்லாம் நான் பிஸ்னஸ் டீல் பண்றது கிடையாது..” என பட்டுக் கத்தறித்தாற் போல கூறினாள் அவள்.

“இதோ பாரு மேடம் நான் ஒன்னும் லீகலா பிஸ்னஸ் பண்ண வரல… இதுவே திருட்டு கிரீடம்தான்.. இது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்…. உன்கிட்ட இந்த கிரீடம் பத்தி பேச வந்ததுக்கு காரணமே ஷர்வா கூட பிரச்சனை பண்ற ஒரே ஆளு நீதான்…. உன்கிட்ட வித்தா எனக்கு பாதுகாப்பு என்கிற ஒரே காரணத்தாலதான் உன்கிட்ட இப்போ வந்து பேசிகிட்டு இருக்கேன்… ரொம்ப ஓவரா பண்ணினா வேற எவனையாவது பார்த்து டீல் பேசிட்டு போயிட்டே இருப்பேன்…” என அவன் தெனாவட்டாகப் பேச அவளுக்கோ முகம் இறுகியது.

கோபம் அளவுக்கு அதிகமாக வந்தாலும் எப்படியாவது அந்த கிரீடத்தை தன் வசப்படுத்தி விடும் நோக்கில்,
“சரி இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்குள்ள மட்டும்தான் இருக்கணும்… இன்னைக்கு என்னோட பிஸ்னஸ் மீட்டிங் அந்த ஷர்வா பொறுக்கியால நின்னு போச்சு… பட் மீட்டிங் வந்தவங்களுக்காக ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்கேன்… மகாஜால் ஹோட்டல்லதான் பார்ட்டி நடக்கும்… நீயும் அங்க வந்துரு… நம்ம நேர்லயே அந்த கிரீடத்தை பத்தி பேசலாம்… எனக்கு அந்த ஷர்வாவோட கிரீடம் கிடைச்சே ஆகணும்… அதை வெச்சு நான் யாருன்னு அவனுக்கு நிரூபிக்கணும்… நீ எவ்வளவு கேட்டாலும் கொடுக்க ரெடியா இருக்கேன்… பட் அதுக்கு முன்னாடி உன்கிட்டதான் கிரீடம் இருக்குன்னு எனக்கு நீ ப்ரூப் பண்ணி ஆகணும்…” என்றாள் அவள்.

மோஹஸ்திரா நேரில் சந்திக்கக் கேட்டதும் வீராவோ சற்று தயங்கினான்.
இந்த வைரத்தை விற்பதற்கு வேறு வழி கிடைப்பது சிரமம் என்பதை உணர்ந்து கொண்டவன் மாறுவேடத்தில் சென்று அவளை சந்தித்துப் பேசி விட்டு வரலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

“ஓகே மேடம்… நீ சொல்ற இடத்துக்கு வரேன்…. நைட் 9 மணிக்கு மேல மீட் பண்ணலாம்…” எனக் கூறியவன் அவருடைய பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்து விட்டிருக்க அரவிந்தனின் பார்வையும் மோஹஸ்திராவின் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.

“ஓ மை காட் அர்வி இவன் சொல்றதெல்லாம் உண்மையா..? நாம இவ்வளவு நாள் எதுக்கு போராடினமோ அது நம்ம கைக்கு வரப்போகுதா..? ஐ காண்ட் பிலீவ் திஸ்…” என அதிர்ச்சி கலந்த இன்ப படபடப்பில் மோஹஸ்திரா உரைக்க அவனோ அதீத சந்தோஷத்தின் வெளிப்பாட்டில் அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.

“தேங்க்யூ பேபி… நீ இல்லேன்னா இது இந்த அளவுக்கு வந்தே இருக்காது… எல்லாமே உன்னாலதான்.. நம்ம கைக்கு டைமண்ட் கிடைக்கட்டும் அப்புறம் இந்த கஷ்டத்துல இருந்து உன்ன ரிலீஸ் பண்ணிடுறேன்.. நாம சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்றவனின் மார்பில் தன் முகத்தை அழுத்தமாக புதைத்துக் கொண்டாள் அவள்.

அவளுடைய விழிகளிலோ நிம்மதி கலந்த பூரிப்பு மின்னியது.

********
ஷர்வா அவளிடம் அத்துமீறி நடந்து கொண்டவை எல்லாம் பொய்யோ என எண்ணத்தக்க வகையில் எந்தவித கவலையும் இன்றி அந்த இரவு நேரக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்தாள் மோஹஸ்திரா.

இம்முறை அவளோடு அரவிந்தனும் இருக்க அவளுக்கோ முகத்தில் புன்னகையே விஞ்சி இருந்தது.

இன்று காலையில் அவள் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பிற்கு வந்திருந்த முக்கிய புள்ளிகள் அனைவரும் மீண்டும் இந்த கொண்டாட்டத்தில் ஓன்று கூடியிருக்க இதை சரியாக பயன்படுத்தி விடும் திட்டத்தில் குருவோ உற்சாகமாக ஈடுபட்டிருந்தான்.

மோஹஸ்திராவின் விழிகளோ வைரம் பற்றி தன்னிடம் பேசியவன் தன்னை வந்து சந்திக்கப் போகும் நொடியை எண்ணி சற்றே மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள்.

இரவு நேர சுவை மிகுந்த உணவுகள், விலை உயர்ந்த மதுபானங்கள், குளிர்களி வகைகள் ஏனைய இனிப்பு பண்டங்கள் என மிகப் பிரமாண்டமான முறையில் விருந்து அமைக்கப்பட்டிருந்தது.

அதே நேரம் அந்த விருந்திற்கு அழையாத விருந்தாளியாக ஷர்வாவும் வந்திருந்தான்.

அவனோ அங்கே இருந்த யாருடைய கவனத்தையும் உறுத்தாது ஓரமாக போடப்பட்டிருந்த டேபிளை நோக்கிச் சென்றவன் அங்கே இருந்த இருக்கையில் அமைதியாக அமர்ந்து கொண்டான்.

அவனுடைய விழிகள் மோஹஸ்திராவின் மீதும் அரவிந்தனின் மீதும் அழுத்தமாகப் பதிந்து மீண்டு கொண்டிருந்தன.

எந்தவித அழைப்பும் இன்றி எந்தவித அறிவிப்பும் இன்றி அவனுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விருந்திற்கு வந்து அமர்ந்திருந்தவனுக்கு ஒரு விதமான அழுத்தம் உள்ளத்தில் தோன்றத்தான் செய்தது.

இருந்தும் அனைத்தையும் அவளுக்காக புறக்கணித்தவன் அவளுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.

அவள் சிரிக்கும்போது அவளுடைய கன்னங்களில் விழும் குழி அவனை மேலும் தடுமாறி தடம் மாறச் செய்தன.

“நீ ரொம்ப அழகு மோஹி..” என முணுமுணுத்தன அவனுடைய உதடுகள்.

அதே கணம் அந்தப் பார்ட்டி நடக்கும் இடத்திற்குள் நுழைந்தான் வீரா.

அங்கே இருந்த அனைவரும் மிக மிக உயர்ந்த ரகமான ஆடைகளை அணிந்து உயர்தர மக்களாக கையில் மதுபானத்துடன் நடமாடுவதைக் கண்டவன் குனிந்து தன்னைப் பார்த்தான்.

கசங்கிய கட்டம் போட்ட சட்டையும் சாம்பல் நிற மங்கிப்போன பேண்டும் அத்தனை பேரில் இருந்தும் அவனை வித்தியாசமாக்கிக் காட்டியது.

இப்படியே போனால் நிச்சயமாக மாட்டிக் கொள்ள நேரிடும் என எண்ணியவன் எப்போதும் போல தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்து சிறிய கத்தி ஒன்றை கரத்தில் எடுத்து அந்த ஹோட்டலின் வாயில் அருகே இருந்த அழகுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறு குன்றின் பின்னே மறைந்து கொண்டான்.

தனக்கு தோதாக உடல்வாகு அமைந்த யாரேனும் செல்கிறார்களா எனப் பார்த்தவன் அவனுடைய உயரத்தில் அவனுடைய உடல் வாகுக்கு ஏற்றாற் போல ஒருவன் தாண்டிச் செல்ல மின்னல் வேகத்தில் கண்ணிமைக்கும் நொடிக்குள் அவனை இழுத்து அந்தப் பாறையின் பின்னே போட்டவன் தனக்கு என்ன நேர்கின்றது என்பதை கீழே விழுந்தவன் புரிந்து கொள்வதற்கு முன்பே அவனுடைய தலையை அந்தக் குன்றோடு மோதியிருந்தான்.

அடிபட்ட வேகத்தில் வலியில் அலற முயன்றவனின் கழுத்தில் கத்தியை பதித்து ஒரு இழுவையில் அவனுடைய கழுத்து நரம்பை அறுத்தவன் ரத்தம் குபுகுபுவென வழிந்து அவன் அணிந்திருந்த ஆடையை நனைக்க முயல சட்டென ஒற்றைக் கையால் அவனுடைய கழுத்தில் தன் கரத்தைப் பதித்து வெளியே கொட்ட முயன்ற ரத்தத்தை அடக்கியவன் மற்றைய கரத்தால் அவனுடைய ஆடைகளை வேகமாகக் களைந்தான்.

அடுத்த சில நொடிகளில் அந்த ஆடைகளைத் தான் அணிந்து கொண்டவன் அவன் அணிந்திருந்த செயின் வாட்ச் மோதிரம் என அனைத்து நகைகளையும் தன்னுடைய உடலில் அணிவித்துவிட்டு தன் ரத்தம் படிந்த கரங்களை அருகே இருந்த நீர்த் தொட்டியில் கழுவிக் கொண்டவன் பாடியை அப்புறப்படுத்தி விட்டு அந்தக் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல நடக்கத் தொடங்கினான்.

ஏதோ பரம்பரை பணக்காரன் போல ஸ்டைலாக உள்ளே நுழைந்தான்.
அவனுடைய பார்வை மோஹஸ்திராவைத் தேடித் துளைத்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!