முள் – 14
சாஹித்யாவின் செயலும் வார்த்தையும் ஒரு நொடி அவனை உறையச் செய்தன.
தன் கால்களைப் பிடித்துக் கொண்டு விட மறுப்பவளின் கரத்தைப் பற்றி எழுப்பியவன்,
“என்ன சாஹி இதெல்லாம்..? நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சுதான் பேசுறியா..? கல்யாணம் சின்ன விஷயமா தெரியுதா உனக்கு..?” எனக் கேட்டான்.
“இல்ல மாமா… இப்ப மட்டும் நான் அவங்க கூட போனேன்னா யாராவது ஒருத்தன பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க மாமா.. அவர் நல்லவனா என்னனு கூட கேப்பாங்களான்னு தெரியல.. என் பிரச்சனைய சொல்லி எனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுத் தரணும்னு மட்டும்தான் இப்போ யோசிப்பாங்க.. பயமா இருக்கு மாமா.. நான் அவங்க கூட போக மாட்டேன்.. இப்போ எனக்கு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல..” எனத் தீவிரமாக மறுத்தாள் அவள்.
“சரி இப்போ கல்யாணம் பண்ண வேணாம்.. நீ படிச்சு முடிச்சதுக்கு அப்புறமா பண்ணிக்கோ…”
“எ.. என்னால முடியாது மாமா..” உறுதியாக வெளிவந்தது அவளுடைய வார்த்தைகள்.
அவனுடைய விழிகளோ அவள் மீது கூர்மையாகப் படிந்தன.
“என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?” என அழுத்தமாகக் கேட்டான் அவன்.
அவளுக்கோ அவனிடம் மறைக்கத் தோன்றவில்லை.
“நான் நாலு வருஷமா ஒருத்தர காதலிக்கிறேன் மாமா.. அவரைத் தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.. அவர் இப்போ கனடால இருக்காரு.. இப்போ நான் எங்க அப்பா அம்மா கூட போனேன்னா கண்டிப்பா எனக்கு வேற ஒருத்தர் கூட கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க…
தயவு செஞ்சு நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க.. உங்களோட வாழ்க்கைல நான் எந்த விதத்திலையும் தொல்லை பண்ணவே மாட்டேன்.. அவர் வரும் வரைக்கும் இந்த வீட்ல ஒரு ஓரமா பாப்பாவ பார்த்துகிட்டு இருந்திடுறேனே..”
அவள் பேசிக் கொண்டே போக தன் நெற்றியில் கரத்தைப் பதித்து அழுத்தமாகத் தேய்த்தான் யாஷ்வின்.
சிறு பெண் என்றல்லவா நினைத்திருந்தான்.
ஆனால் அவளின் மனதிலும் நான்கு வருடமாக ஒரு ஆண்மகன் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கின்றானே.
அவனிடமிருந்து பெருமூச்சு எழுந்தது.
“இதுக்கு நான் எதுக்குமா உன்ன கல்யாணம் பண்ணனும்..? நீ பயப்படாதே, அத்தைகிட்டயும் மாமாகிட்டயும் நான் பேசுறேன்.. அந்த பையனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்றேன்..”
“இ… இல்ல அவர் கனடா போன பிளைட் ஆக்சிடன்ட் ஆயிடுச்சு… அதுல கொஞ்ச பேர்தான் தப்பிச்சாங்கன்னு தெரிய வந்துச்சு.. இப்போ வரைக்கும் அவர் உயிரோடு இருக்காரா இல்லயான்னு கூட எனக்குத் தெரியல..
அப்படி இருக்கும்போது எப்படி அவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு என்னால எங்க அப்பா அம்மாகிட்ட பேச முடியும்..? நான் இப்போ இதை சொன்னா கூட அவங்க ஏத்துக்கவே மாட்டாங்க.. மறுபடியும் என்ன தப்பா பேசி அடிக்கத்தான் செய்வாங்க.. அவர நான் கண்டுபிடிக்கணும்னு ஆசைப்படுறேன்… கண்டிப்பா அவர் உயிரோடதான் இருப்பார் மாமா..
அவரைக் கண்டுபிடிச்சு எங்க அப்பா அம்மா முன்னாடி நிறுத்தி அதுக்கு அப்புறமா அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.. அதுக்கு எத்தனை வருஷம் ஆகும்னு தெரியல.. போன வருஷத்துல இருந்து மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க… நிறைய தடவை வேணாம்னு சொல்லி திட்டு வாங்கிட்டேன்..
இப்போ புதுசா அக்காவால இந்த பிரச்சனை வேற வந்துருச்சு.. இனி என்ன வீட்ல வெச்சி இருக்கவே யோசிப்பாங்க மாமா… நீங்கதான் கொஞ்ச நாளைக்கு எனக்கு பாதுகாப்பு கொடுக்கணும்.. நீங்க கல்யாணம் பண்ணீங்கன்னா உங்களை நம்பி என்னை இங்க விட்டுட்டுப் போயிருவாங்க..” மன்றாடிக் கேட்டுக் கொண்டாள் அவள்.
“முட்டாள் மாதிரி பேசாத சாஹித்யா.. என்ன கல்யாணம் பண்ணிட்டு அவனைக் கண்டுபிடிச்சு மறுபடியும் அவனை கல்யாணம் பண்ணிக்கப் போறியா..? உங்களுக்கெல்லாம் கல்யாணம்னா விளையாட்டா தெரியுதா..?
உன்னோட பாய் ஃப்ரெண்ட் வந்தா இந்த கல்யாணத்தை பத்தி என்ன நினைப்பான்..? நாம எவ்வளவு நல்லவங்களா இருந்தாலும் ஒரே வீட்ல ஒன்னா இருக்குறதே தப்புதான்..”
“அவருக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரியும்.. நான் இந்த காரணத்துக்காகத்தான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னா புரிஞ்சுப்பாரு..
நீங்க தாலி கூட கட்ட வேணாம்.. ரிஜிஸ்டர் மேரேஜ் மட்டும் பண்ணிக்கலாம்.. இந்த கல்யாணத்தை பதிவு மட்டும் பண்ணுங்க ப்ளீஸ் மாமா.. இப்போ நான் இல்லாம பாப்பாவாலையும் இருக்க முடியாது.. நீங்க கூடவே இருந்து அவ கூட நல்லா பழகிக்கிற வரைக்குமாவது நான் அவளை பார்த்துக்கிறேன்.. தயவு செஞ்சு எனக்கு உதவி பண்ணுங்க..
என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணி வாழ முடியாது மாமா.. நானும் அக்கா போன இடத்துக்கே போயிடுவேன்..” என அவள் தேம்பி அழத் தொடங்க,
“ஏய்…” என கோபத்தில் கர்ஜித்து விட்டான் அவன்.
கோபத்தில் அவனுடல் நடுங்கியது.
அவன் எப்போதும் பொறுமைசாலிதான்.
ஆனால் அவனுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கின்றதுதானே..?
ஏற்கனவே குடும்பத்தில் ஒருத்தி இறந்து மீளாத துயரை கொடுத்து விட்டுச் சென்றது போதாதா..?
அனைத்து வலியையும் அனுபவித்துவிட்டு மீண்டும் இவளும் இதேபோல கூறினால் அவனால் எப்படி அந்த வார்த்தைகளைத் தாங்க முடியும்..?
தலை வலி அதிகரித்தது.
“ப்ளீஸ் மாமா.. எனக்கு இந்த ஒரு உதவியை மட்டும் பண்ணுங்க.. தயவு செஞ்சு நான் சொன்ன எதையும் அப்பா அம்மாகிட்ட சொல்லிடாதீங்க.. ஜஸ்ட் பதிவு திருமணம் மட்டும் பண்ணிக்கோங்க.. அவர் வந்ததும் நானே விவாகரத்து கொடுத்துடுறேன்.. உங்களை எதுக்குமே டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. என்னால பாப்பாவ விட்டுட்டு இருக்க முடியாது ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க..”
“நான் முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவ..?”
“செ… செ…செத்துருவேன்..”
“பிளாக்மெயில் பண்றியா பாப்பா..?” வருத்தத்துடன் கேட்டான் அவன்.
அவனுடைய அந்தக் குரலில் அவளுக்கு உயிர் துடித்தது.
அவனுடைய விழிகளில் தெரிந்த வலியை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கைகளை குவித்து அவனைப் பார்த்து கும்பிட்டவள்,
“என்ன மன்னிச்சிடுங்க மாமா.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க.. எனக்கு வேற வழி தெரியல ப்ளீஸ்…” எனக் கதற,
“சரி போமா..” என்றான் அவன்.
அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“என்ன முடிவு பண்ணி இருக்கீங்க மாமா…?”
“உன்னோட உயிரை விட எனக்கு வேற எதுவும் பெருசா தெரியல.. கூடிய சீக்கிரமே உன் பாய் ஃப்ரெண்ட்டை கண்டுபிடிச்சு அவன் கூட உன்னை சேர்த்து வைக்கிறேன்.. என்னால தாலி எல்லாம் கட்ட முடியாதும்மா.. திருமணத்தை பதிவு பண்ணிக்கலாம்.. ஆனா அடுத்த வருஷமே விவாகரத்து வாங்கிடணும்..” என்றவன் அவளை வெளியே போகும்படி கூறிவிட்டு சற்று நேரம் உள்ளேயே நின்றான்.
நெஞ்சு அடைப்பது போல இருந்தது.
ஒருவன் எத்தனை இடர்களைத்தான் தாங்குவது..?
எவ்வளவுதான் வலிக்காதது போலவே நடிப்பது..?
மூச்சடைத்து நெஞ்சு வெடிப்பது போல இருந்ததை தாங்க முடியாது தன் தலையை இறுகப்பற்றிக் கொண்டு சற்று நேரம் உள்ளேயே இருந்தவன் தனக்காக வெளியே வான்மதியின் பெற்றோர்கள் காத்திருப்பதால் தன்னை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு வெளியே வந்தான்.
அவர்களோ அவனைக் கேள்வியாகப் பார்க்க,
“நான் சாஹிய கல்யாணம் பண்ணிக்கிறேன் மாமா.. ரெஜிஸ்டர் மேரேஜ் மட்டும் பண்ணிக்கலாம்..” என அவன் கூறி முடிப்பதற்குள் அவனுக்கு வியர்த்தே விட்டது.
வார்த்தைகள் தடுமாறி குரல் கரகரப்பாக வெளியே வர அவனுடைய நிலைமையைப் புரிந்து கொண்டார் விமலன்.
அவனை அணைத்து ஆறுதல் படுத்தியவர்,
“ரொம்ப நன்றி மாப்பிள்ள.. என் மூத்த பொண்ணால கெட்டுப்போன உங்க வாழ்க்கை என் ரெண்டாவது பொண்ணால நல்லா இருக்கும்னு நம்புறேன்.. நீங்க நல்லா இருப்பீங்க.. எல்லாமே சரியாயிடும்..” என்றார்.
“ம்ம்…” என்றான் அவன்.
மனம் ஒப்பினால் தானே அவனுக்கு வார்த்தைகள் வெளிவரும்.
ராஜிக்கோ அவ்வளவு நேரமும் மனதில் கூடிக் கொண்டிருந்த பாரம் அப்படியே இறங்கினாற் போல இருந்தது.
எங்கே தன்னுடைய பேத்தி தாய் இல்லாமல் தனித்து விடுவாளோ.. தன்னுடைய இரண்டாவது மகளின் வாழ்க்கை அவதூறால் இப்படியே கெட்டுப் போய்விடுமோ.. எந்தல் தவறும் செய்யாத மருமகன் தனித்தே நின்று விடுவானோ என்றெல்லாம் பதவறியவருக்கு இப்போது அனைத்தும் ஒரே முடிவில் சரியானதைப் போல இருந்தது.
சாஹித்யாவால் மட்டும்தான் தன் பேர்த்தியை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்பதை மனதார நம்பியவர் அப்போதுதான் நிம்மதி அடைந்தார்.
“கொஞ்ச நாள் போகட்டும்.. இந்த போலீஸ் கேஸ் எல்லாம் முடியட்டும்.. அதுக்கப்புறம் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடலாம்..” என்ற விமலனை கண்களாலேயே மறுத்தவர்,
“அதெல்லாம் வேணாம்.. இப்படியே போனா ரொம்ப மோசமா அவதூறு கிளம்பிட்டே இருக்கும்.. இதுக்கு உடனேயே முடிவு கட்டுறதுதான் நல்லது.. நாளைக்கே ஏதாவது ரிஜிஸ்டர் ஆபீஸ்ல மேரேஜ் முடிச்சுடலாம்..” என்றார் ராஜி.
அதற்கும் தலையசைத்தானே தவிர அவன் ஒற்றை வார்த்தை கூட உதிர்க்கவே இல்லை.
அதன் பின்னர் கூட சாஹித்யா அவர்களுடன் ஊருக்குச் செல்ல மறுத்து விட அவளின் பிடிவாதத்தில் அங்கேயே தங்கிவர்கள் பதிவு திருமணத்தை முடித்துவிட்டு செல்லலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
விதியின் பொம்மலாட்டத்தில் அனைத்து மாந்தர்களும் பொம்மைகளே.
💜💜💜
அடுத்த அத்தியாயம் 10 மணிக்கு வரும் காத்திருக்கவும்.
Super sis 💞