உடனே அவ்விடத்தைச் சூழ மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அத்துடன் பத்திரிகையாளர்களும் தங்களது வேலையை சரிவர செய்து கொண்டிருந்தனர்.
இந்த நெரிசல்களுக்கு மத்தியில் கார்த்திகேயனும் கருணாகரனும் உள்ளே செல்ல கமிஷனர் உடனே கார் எரிந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார்.
என்னது கார் எரிந்து விட்டதா..? ஆம் விபத்து நடந்த நேரத்தில் எதனுடனோ கார் மோதிய வேகத்தில் தீப்பற்றி எரிந்து விட்டது.
அதனை அடையாளம் காணவே முடியாமல் போனதால் தான் கருணாகரன் இங்கு வர வேண்டியதாயிற்று.
கருணாகரன் வந்த வேலையில் மும்முரமாகி இறங்கி அந்தக் காரை சுற்றிச் சுற்றி பார்த்தார். ஆனால் எதுவும் அவரது கண்களுக்கு புலப்படவில்லை.
மீண்டும் சாரதி இருக்கையில் எட்டிப் பார்ததவர் அதனுள் ஏதோ தென்பட, அதனை எடுத்துப் பார்த்தால், அது காரினுடைய சாவி.
அதனை எடுத்தவரது கரங்கள் சடுதியில் நடுக்கம் கண்டன. அந்த சாவியில் ஒரு இதய வடிவில் உள்ள டாலரைப் பார்த்ததும் கமிஷனரையும் கார்த்திகேயனையும் பார்த்து “ஆம்..” என தலையாட்டினார்.
கார்த்திகேயனுக்கு அன்றைய நாள் வெறுப்பில் மூழ்கியது போலவே இருந்தது. ஒரு நிமிடம், ஒரு செகண்ட், ஒரு மணித்துளி கூட நிம்மதி இல்லாத நாளை அவன் இதுவரையில் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு நாளை அவனது வாழ்க்கையில் அவன் வெறுத்தான் என்றறே சொல்லலாம்.
“என்ன சார் உண்மையாகவா..?” என்று மீண்டும் கார்த்திகேயன் நம்ப முடியாமல் கேட்க,
கருணாகரன் பேச்சற்று அப்படியே நிலை குலைந்து நின்றார்.
அவரது நிலையைக் கண்ட கார்த்திகேயனுக்கும் சொல்லொனா துன்பமே மனதில் சூழ்ந்து கொண்டது. முதல் முதல் கார்த்திகேயன் கருணாகரனை பார்க்கும்போது மனதில் ஒரு இனம் புரியாத உற்சாகமும், புத்துணர்ச்சியும் பிறந்தது என்று கூறலாம்.
எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் தொழில் வட்டாரங்களில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதனை விரல் நுனியில் வைத்து மிக லாவகமாக தூசி தட்டுவது போல் அதனை நிவர்த்தி செய்பவர்.
இன்று கண்களில் நீர் வடிந்து கொண்டிருக்க தனது கம்பீரத்தை இழந்த ஆண் சிங்கம் போல அவ்விடத்திலேயே மண்டியிட்டு காரின் சாவியை கையிலே அழுத்திப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தார்.
ஆயிரம் குடும்பங்களுக்கு சோறு போடுபவர். பார்ப்பவர் மனதில் எல்லாம் மரியாதையாக குடி கொண்டிருந்தவர்.
ஏன் தற்போதைய சமுதாயத்திற்கு சிறந்த தொழிலதிபராகவும், பலருக்கு ரோல் மாடலாக திகழ்ந்தவர். இன்று பாசம் என்னும் கூட்டுக்குள் அடைந்த கிளியாக வருத்தமுற்று வாடி வதங்கிப் போனார்.
கார்த்திகேயனுக்கு அவரது நிலையை பார்க்க மனம் கொள்ளவில்லை. இருந்தும் அவரது துன்பத்தைப் போக்க எண்ணம் கொண்ட கார்த்திகேயன் அவருக்கு அருகில் அமர்ந்தபடி,
“சார் எனக்கு என்னவோ இது நம்மளோட கார் மாதிரி தெரியல..?” என்று அன்புடன் அவருக்கு எடுத்துக்கூறி அவரை நிதானத்திற்கு கொண்டுவர முயற்சித்தான் கார்த்திகேயன்.
“இல்ல கார்த்தி இந்த கீ செயின பாரு இதுல ஒரு ஹார்ட் ஷேப்ல டாலர் ஒன்று இருக்கு. அதை ஓபன் பண்ணி பாரேன்..” என்று கருணாகரன் கூறியதும் அவனுக்கு ஆச்சரியமாக தான் இருந்தது.
அந்த இதய வடிவான டாலர் கருகிய நிலையிலும் மிகவும் அழகாக திறந்து கொண்டது. அங்கே தான் அவன் அதனை கண்டு மெய்சிலிர்த்துப் போனான்.
இந்த சிறிய அளவிலான டாலரில் இப்படி ஒரு ரகசியம் புதைந்திருக்கின்றதா..? ஆம் அதனுள் கருணாகரன் காயத்ரியின் புகைப்படம் சிறிய அளவில் ஒரு பக்கமும் மறு பக்கம் நிவேதாவின் புகைப்படம் சிறிதளவில் இருந்தது.
அதனைத் திறந்ததும் அவர்களது புகைப்படம் கண்களில் தென்பட அதனை அன்புடன் அந்நிலை மறந்து ரசித்தான் கார்த்திகேயன்.
“இது நான் அமெரிக்கா போன நேரம் நிவேதாவுக்காக வாங்கி வந்து கிப்ட்டா கொடுத்ததுபா நான் நினைச்சு கூட பாக்கல எங்களோட போட்டோவ அவ இதுக்குள்ள வச்சிருப்பானு ஒரு நாள் என்னோட கார் ரிப்பேர் ஆயிட்டேன்னு அவளோட காரை எடுத்துட்டு போகும்போது தான் எதேர்ச்சியா இதை பார்த்தேன்.
அதைப் பார்த்ததும் என்னோட மனசு எவ்வளவு சந்தோஷப்பட்டுச்சு தெரியுமா என்னோட மகள் எங்க மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கான்னு ஆனா அதை அப்ப கூட அவகிட்ட சொல்லி நான் சந்தோஷப்படல இப்படி நடக்கும்னு…” என்று கூற முடியாமல் வார்த்தைகள் தந்தியடித்தன.
“சார் என்ன சார் இப்படி எல்லாம் பேசுறீங்க கார் மட்டும் தானே கிடைச்சிருக்கு நிவேதா இன்னும் கிடைக்கலையே ஒருவேளை நிவேதா உயிரோட இருக்கலாம் நீங்க கொஞ்சம்..” என்று அவன் என்ன கூறுவது என்று புரியாமல் திணறிக் கொண்டிருக்க, அந்நேரம் கமிஷனர் கார்த்திகேயனை ரகசியமாக அழைத்தார்.
அவர் செய்கை மூலம் அழைப்பதை பார்த்து கார்த்திகேயன் அருகில் வந்து,
“சொல்லுங்க அங்கிள்..”
“கார்த்திகேயன் இன்னொரு முக்கியமான விஷயம் உன்கிட்ட சொல்லணும் இதை எப்படி கருணாகரன்ட சொல்றதுன்னு எனக்கு தெரியல..” என்று கமிஷ்னர் தடுமாற,
“என்ன அங்கிள் எனிதிங் சீரியஸ்..?” என்று வாய்விட்டு கேட்டாலும் மனதிற்குள் கார்த்திகேயனுக்கு தொண்டைத் தண்ணீர் வற்றியது போல் இருந்தது.
கமிஷனர் குரலை செருமிக் கொண்டு,
“அது வந்து இந்த காருக்குள்ள இருந்து ஒரு பாடி கிடைத்தது. அது ரொம்ப தெரிந்த நிலையில் தான் இருந்துச்சு ஆனால் அது ஒரு கேர்ள்ன்னு மட்டும் நல்லா தெரியுது அந்த பாடில இருந்த டிரஸ்ல ஒரு சின்ன துண்டு மட்டும் மீதமா கிடைச்சிருக்கு கருணாகரன் கிட்ட இத பத்தி எப்படி சொல்றதுன்னே தெரியல இந்த டிரஸ்ட துண்ட வச்சு நிவேதாவா இருக்குமானு கண்டுபிடிக்க முடியுமா அப்படி இல்லன்னா போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகுதான் எதுவும் சொல்லலாம்
அவ பார்ட்டிக்கு போட்டு போன டிரஸ் என்ன கலர்னு உனக்குத் தெரியுமா கார்த்தி நீயும் தானே பார்ட்டிக்கு போனா..?” என்று கமிஷனர் கூறியதும் கார்த்திகேயனுக்கு காதுகள் அடைத்தது போல் இருந்தது.
‘என்னது அப்போ நிவேதாக்கு… எப்படி..? எவ்வாறு.. சான்சே இல்ல அப்படி நடக்க வாய்ப்பில்லை..’ என்று மனம் கதறி அழுதது. அந்த உண்மையை ஏற்கவும் மறுத்தது.
மனதை திடப்படுத்திக் கொள்ள பல காரணங்களை தேடினான் கார்த்திகேயன். அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கமிஷனரின் முன் தனது உணர்ச்சிகளை எவ்வாறு கட்டி ஆள்வது என்று புரியாமல் கைகள் நடுங்க தலையில் கையை வைத்து கண்களை இறுக மூடி தன் உணர்வுகளை கட்டுக்குள் பெரிதும் சிரமப்பட்டான்.
ஏனோ இந்த வார்த்தைகள் ஆவனது காதில் கேட்டதிலிருந்து இதயத்தின் ஓரத்தில் ஒரு சிறு ஊசி குத்தியது போல வலிக்கத் தொடங்கியது. தன்னை அறியாமலேயே கண்களில் நீர் துளிர்த்தது. சிறிது சிறிதாக உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன், கண்களில் வலிந்த நீரை துடைத்து விட்டு நிமிர்ந்து கமிஷனரை பார்த்தவன்,
“எங்க அந்த எரி.. எரிந்த டிரஸ்ஸ எடுத்துட்டு வாங்க பார்ப்போம்..” என்று துன்பக் கடலில் மூழ்கி எழுந்த கார்த்திகேயன் கூறியதும் அருகில் இருந்த கான்ஸ்டபிள் அந்த எரிந்த உடையின் சிறு துண்டை எடுத்துக்கொண்டு வந்து கார்த்திகேயனது கையில் கொடுத்தார்.
அதை வாங்கி பார்த்ததும் கார்த்திகேயனுக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. அவன் மிகவும் மன தாக்கத்தில் இருந்ததனால் அவனுக்கு எதுவுமே ஞாபகத்திற்கு வரவில்லை.
அதிக வலியினை சுமந்த மூளையோ வேலை செய்ய மாட்டேன் என படம் பிடித்தது. மிகச் சிரமப்பட்டு மாற்றி மாற்றி சிந்தித்துப் பார்த்தவனுக்கு மனக்கண்ணில் அவளது ஆடை நினைவில் தோன்றவே இல்லை.
இந்த குழப்பமான நிலையில் கார்த்திகேயன் திண்டாடிக் கொண்டிருக்க அந்நேரம் பார்த்து கருணாகரன் கார்த்திகேயனைத் தேடி அவ்விடத்திற்கு வந்தார்.
அந்த ஆடை துண்டை கார்த்திகேயன் அது கையில் கான்ஸ்டபிள் கொடுக்கவும் கருணாகரன் அவ்விடத்திற்கு வரவும் நேரம் சரியாக இருந்தது.
அவ்விடத்திற்கு அந்நேரம் கருணாகரன் வருவார் என்று எண்ணிப் பார்க்காத கார்த்திகேயனக்கு அவரது வருகை மிகவும் அதிர்ச்சியை கொடுத்தது. செய்வதறியாது அவன் முழித்துக் கொண்டிருக்க உடனே கார்த்திகேயனின் கையில் இருந்த ஆடைத் துண்டை கருணாகரன் வாங்கி விசித்திரமாகப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.
என்ன வாசகர்களே இப்போ சொல்லுங்க பார்ப்போம் அது நிவேதா இருக்குமா..?