15. சிறையிடாதே கருடா

4.9
(16)

கருடா 15

“நீ அந்தப் பொண்ணுக்கு ரொம்ப சப்போர்ட் பண்றேன்னு தோணுது.”

“எந்தப் பொண்ணுக்கு?”

“அதான்…”

“அவ நம்ம மருமகள்! அவளை யாரோ மாதிரிப் பேசாதீங்க. நான் நதியாவோட அம்மாவாதான் ரிதுகிட்ட நடந்துக்கிறேன். நீங்களும் அதே கண்ணோட்டத்துல பாருங்க, தப்பாத் தெரிய மாட்டா.”

“அதெல்லாம் எனக்குப் புரியாம இல்ல சரளா. நம்ம மகனும் பாவம் தான…”

“நீர் அடிச்சு நீர் விலகாது. என் புள்ள என்னைப் புரிஞ்சுகிட்டு எப்ப இருந்தாலும் வருவான். மருமகள் அப்படி இல்லங்க. இன்னைக்கு நான் சேர்த்துப் பிடிக்காம விட்டா எப்பவும் அந்த உறவு சேராது.”

“என்னமோ போ. இந்தப் பொண்ணு வந்ததுல இருந்து தான் நம்ம குடும்பத்துல ஏகப்பட்ட பிரச்சினைன்னு தோணுது.”

“மருமகள் வந்ததுக்கு அப்புறம் தான், பெத்த புள்ள எப்படின்னு தெரியுது. இத்தனை நாள் அவனைப் பத்தி ஒன்னுமே தெரிஞ்சுக்காம இருந்திருக்கேன்.”

“அவனைத் தப்பானவன்னு சொல்றியா?”

“அவனுக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கும்னு புரிஞ்சுகிட்டேன். இது நாள் வரைக்கும், நாலு வார்த்தை சேர்ந்தாப்போல கோபமாய் பேசக்கூட என் புள்ளைக்கு வராதுன்னு நம்பிட்டு இருந்தேன். கோபம் மட்டும் இல்ல, கோவத்துல என்ன செய்யவும் துணிவான்னு என் மருமகளால தான் புரிஞ்சுகிட்டேன்.”

“மாமியார், மருமகள் சண்டை போடுவாங்கன்னு தான் கேள்விப்பட்டிருக்கேன். இங்க என்னடானா, இன்னும் ஏத்துக்காத மருமகளுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ற.”

“என்னன்னு தெரியலங்க, அவகிட்ட என்னமோ ஒரு விஷயம் நெருடலாக இருக்கு. உள் மனசுல இருந்து எதுவும் பண்ணலன்னு என்னோட மனசு சொல்லுது.”

“உன் நம்பிக்கை பலிச்சா சந்தோஷம்தான்!” என்றவர்கள் வீட்டிற்கு வந்திறங்க, எங்கு இருக்கிறோம் என்பது கூடத் தெரியாமல், காலாற நடந்து கொண்டிருக்கிறான் கருடேந்திரன்.

போதும் என்றவரை மகளைத் திட்டிய பொன்வண்ணன், மனைவியைப் பார்க்க மூன்றாம் தளத்திற்குச் சென்று விட்டார். நடந்த அனைத்தையும் அசை போட்டவளுக்குச் சரளாதான் அதிகம் ஸ்கோர் செய்வதாகத் தோன்றியது. மாமியாரை எண்ணிச் சிரிக்கவும் தவறவில்லை. அன்றைய நாள் வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லாது வீட்டோடு இருந்து கொண்டாள். மதியம் வரை வீட்டை விட்டுச் சென்றவனைப் பற்றிக் கவலை கொள்ளாது, தன் போக்கில் சுதந்திரமாக இருந்தவள் மாலை ஆனதும் பால்கனியில் நின்று தெருவை நோட்டமிட்டாள்.

பொடிநடையாக நடந்து மெரினா கடற்கரைக்குச் சென்று விட்டான் அவளின் கட்டியவன். சுனாமியாய் பொங்கிக் கொண்டிருந்தவன், கடல் அலையின் உணர்வால் சாந்தமடைந்தான். உப்புக் காத்தும், ஊர் மக்களின் பேச்சும் இயல்புக்குத் திருப்பியது. கடற்கரை மணலில் கடல் அன்னையைப் பார்த்தவாறு அமர்ந்தவன் எண்ணம் முழுவதும் தாலி கட்டியவளே.

என்ன செய்து அவளுக்கும் தனக்குமான பிரச்சினையைச் சரி செய்வது என்ற கேள்விக்கான விடையை இன்னும் கண்டு பிடிக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான்.

கூடவே, அவளை அடித்த குற்ற உணர்வும், உணர்வின்றித் தன்னைப் பார்த்த பார்வையும் வலியைக் கொடுத்தது. வலித்திருக்குமோ என எண்ணியவனுக்கு வலித்தது. என்ன கோபம் இருந்தாலும், அவளின் அந்தச் செய்கை உயிரை வதைத்தது.

மாலை மறைந்து தன்னைச் சுற்றி முழு இருட்டு வந்ததைக் கூட அறியாது, அதே நிலையில் இருந்தான். தனக்கு மேல் இருக்கும் நிலாவை அண்ணாந்து பார்த்தவள் இன்னும் பால்கனியை விட்டு நகரவில்லை. இவர்களுக்காகக் காத்திருக்காமல், நேரம் கடகடவென்று ஓடியது. இரவு உணவிற்கு அழைப்பு வந்தும் செல்லாதவள் மெத்தை மட்டும் போதும் என்று படுத்து விட்டாள்.

தொடர்ந்து மாமனாரிடமிருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது. அத்தனை அழைப்பையும் துண்டித்தவன் நேரத்தைப் பார்த்தான். நேரத்தைக் கடந்த பின்பும் வீட்டிற்குச் செல்ல மட்டும் மனம் வரவில்லை. மின்விசிறியைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தவள் தன்னையும் மீறிக் கண் அசந்தாள். எப்படியும் மருமகன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் பொன்வண்ணனும் உறங்கச் சென்றார்.

அவர் நம்பிக்கையைப் பொய்யாக்காத கருடேந்திரன், நள்ளிரவு தாண்டி வீட்டிற்கு வந்தான். நடுக்கூடத்தில் வந்து நின்றதும் காலை நடந்த சம்பவங்கள் முகத்தில் அறைந்தது. கசந்த மனத்தோடு, மீண்டும் மீண்டும் தோல்வியுற்று அவள் முன்பு நிற்கும் அவல நிலையை எண்ணிக் கலங்கிக் கொண்டே படியேறினான்.

திடீரென்று ஒரு சத்தம். முகத்தைச் சுருக்கியவன் மேல்மாடியை அண்ணாந்து பார்த்தான். ஒரு நொடி யோசித்து விட்டு மாடி ஏறும் நேரம் மீண்டும் சத்தம். அவன் கால்கள் மூன்றாம் தளத்தை நோக்கி நடைபோட்டது. இதுவரை இங்கு வந்ததில்லை. மாமனார் சொல்லி மாமியார் இந்தத் தளத்தில் இருக்கிறார் என்று மட்டும் தெரியும். அவனின் உள்ளுணர்வு இங்கு வரச் சொல்ல, அவசரமாக ஒரு இளம் பெண் வெளியில் ஓடி வந்தார்.

பதட்டமாக வரும் அப்பெண்ணைப் புரியாது பார்த்திருக்க, என்ன செய்வதென்று தெரியாது அரண்டபடி நின்றிருந்தாள் அந்தப் பெண். உடல் நடுக்கத்தையும், வேர்த்துக் கொட்டும் முகத்தையும் வைத்து எதுவோ தவறென்று உணர்ந்தவன் விசாரிக்க,

“மேடம்க்கு ஃபிட்ஸ் வந்துடுச்சு சார். என்ன பண்றதுன்னு தெரியல. அவங்க அப்படியே பெட்ல இருந்து கீழ விழுந்துட்டாங்க.” என்றாள்.

அந்தப் பெண்ணைத் தாண்டி அவசரமாக உள்ளே ஓடிக் கதவைத் திறந்தான். தரையில் படுத்துத் துள்ளிக் கொண்டிருக்கும் மாமியாரைக் கண்டு பதற்றம் கொண்டான். பின்னால் ஓடிவந்த அந்தப் புதுப்பெண்,

“சத்தியமா நான் எதுவும் பண்ணல சார்.” பயத்தில் உளறினாள்.

“நீ நர்ஸ் தான. ஃபிட்ஸ் வந்தா என்ன பண்ணனும்னு கூடத் தெரியாதா?”

“நான் நர்ஸ் இல்ல சார். இங்க வேலை பார்த்துட்டு இருந்த பொண்ணு எனக்குப் பக்கத்து வீடு. ரெண்டு நாள் இவங்களைப் பார்த்துக்கிட்டா, நிறையக் காசு தரேன்னு சொன்னதால நர்ஸ்னு பொய் சொல்லி வந்துட்டேன் சார்.”

அவள் வார்த்தைகளைக் கேட்டுக் கோபம் கொண்டவன், இப்போது ராதா தான் முக்கியம் என்பதால் தூக்கிக் கொண்டு படி இறங்கினான். தன் மீது பழி வந்துவிடும் எனப் பயந்த அப்பெண் வீட்டை விட்டு ஓடிவிட, நடுக்கூடத்தில் நின்று கத்தினான். வெளியில் இருந்து வரும் சத்தம் தங்களைத் தொந்தரவு செய்து விடக் கூடாது என்பதற்காக வடிவமைக்கப்பட்ட கதவு அவன் சத்தத்தைத் தடுத்தது.

மாமியாரின் நிலை கண்டு அவசரத்தை உணர்ந்தவன், தானே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் நலன் மீதே முழு எண்ணம் இருந்ததால், தகவல் சொல்ல மறந்தவன் தாமதமாக மாமனாரை அழைத்தான். இரண்டாவது முறை அழைப்பை ஏற்றவர் மகளிடம் விபரத்தைக் கூறி மருத்துவமனைக்குப் பறந்தார்.

நல்ல தூக்கத்தில் இருந்தவள், செவியில் விழுந்த செய்தியை நம்ப முடியாமல் பதைபதைக்கத் தாயிடம் வந்து சேரக் கட்டியவன் வரவேற்றான். தாவிச் சட்டையைப் பிடித்தவள்,

“அம்மாக்கு என்னாச்சுடா? என்கிட்டக் கூடச் சொல்லாம என் அம்மாவை எதுக்குக் கூட்டிட்டு வந்த? உண்மையச் சொல்லு, என் மேல இருக்க கோபத்துல எங்க அம்மாவை ஏதாச்சும் பண்ணியா?” என அவனைப் போட்டுக் குலுக்கினாள்.

பெற்ற மகளை அடக்கியவர் நடந்ததை விசாரிக்க, அனைத்தையும் தெளிவாகக் கூறினான். மருமகனின் கைப்பிடித்து நன்றி சொல்லியவர், மனைவி சம்பந்தமான மருத்துவ அறிக்கைகளை அங்கிருந்த செவிலியரிடம் கொடுத்தார்.

அங்கிருந்த இருக்கையில், பலம் இல்லாமல் அமர்ந்தவள் முகத்தை மூடிக்கொண்டாள். புதல்வியின் மனம் புரிந்து பக்கத்தில் அமர்ந்த பொன்வண்ணன், ஆதரவாகத் தலையைத் தடவிக் கொடுக்க, உச்சக்கட்ட பயத்தில் இருந்தாள். கை இரண்டையும் சேர்த்துப் பிடித்து எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

பயத்தில் வேர்வைத் துளி, பாறை மீது இருக்கும் பனிக்கட்டியாய் பரவி இருந்தது. அடிக்கடி, தாய் இருக்கும் அறைக்கதவை எட்டிப் பார்த்துக் கண்களை மூடினாள். தாயின் நலன் மீதுள்ள பயத்தில் இயற்கை உபாதையே வந்துவிட்டது ரிது சதிகாவிற்கு. அதை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தவள் மருத்துவரைக் கண்டதும் ஓடிச் சென்று விசாரித்தாள்.

“ரொம்ப நேரமா ஃபிட்ஸ் வந்திருக்கு. நேத்துல இருந்து எடுக்க வேண்டிய டேப்லெட்டை எடுக்கலன்னு நினைக்கிறேன். நல்லவேளையா, சரியான நேரத்துக்கு ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டு வந்தீங்க. இல்லன்னா, இவங்களைக் காப்பாத்தி இருக்கவே முடியாது.”

“நான் அம்மாவப் பார்க்கலாமா?”

“அரை மணி நேரம் கழிச்சுப் போய் பார்க்கலாம்.”

“எதனால டாக்டர் இப்படி ஆகி இருக்கு?”

“அவங்களுக்கு லைட்டா சுயநினைவு வந்திருக்கு. அதோட அதிர்வை அந்த உடம்பால தாங்கிக்க முடியாம ஃபிட்ஸா மாறியிருக்கு.”

“அம்மா… அம்மாக்கு நினைவு வந்துடுச்சா?”

“வந்திருக்கு, இப்ப இல்ல. இனி எப்ப வேணா திரும்ப வர வாய்ப்பு இருக்கு.”

மருத்துவரின் வார்த்தையைக் கேட்டு நிம்மதி அடைந்தவள், அனுமதி கிடைத்ததும் தாயைக் கண்ட கன்றுக் குட்டியாய் துள்ளி ஓடினாள். அன்னையின் உடல் நோகாது நெஞ்சில் முகம் சாய்ந்தவள் என்னென்னவோ பேசினாள். சற்றுத் தூரத்தில் இருந்ததால், எதுவும் கருடேந்திரன் காதில் விழவில்லை. தாயின் கன்னங்களைப் பற்றியவள் நடு நெற்றியில் முத்தமிட்டு முகத்தோடு முகத்தை ஒட்ட வைத்துக் கொண்டாள்.

பொன்வண்ணனும் மனைவி மீதான காதலைக் கண்ணீரால் காட்டிக் கொண்டிருந்தார். அங்கு நடக்கும் அனைத்தும் விசித்திரமாகத் தெரிந்தது அவனுக்கு. அருகில் சென்று விசாரிக்காது, வெறும் பார்வையாளராக மட்டுமே தன்னை நிறுத்திக் கொண்டான். போதும் என்ற வரை தன் மனக்குறையைக் கொட்டியவர், மருமகன் கைகளைப் பற்றி நன்றி உரைக்க, சின்னப் புன்னகையோடு அதைக் கடந்தான்.

தாயைச் சோதிக்க வந்த செவிலியரிடம், “உண்மையாவே அம்மா இப்ப நல்லா இருக்காங்களா?” பதற்றத்தோடு விசாரித்தாள்.

“ரொம்ப நல்லா இருக்காங்க மேடம்.”

“தேங்க்யூ!”

“சார் தான் கரெக்டான நேரத்துல கொண்டு வந்து சேர்த்துக் காப்பாத்திட்டாங்க. நீங்க அவங்களுக்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும்.”

கருடன் எனும் அரக்கனைக் கடவுளாகப் பார்த்தாள். தன் தாயின் உயிரைக் காப்பாற்றிய அவனுக்கு, நன்றி உரைப்பதற்காக அவன் முன் நின்றவள் என்ன நினைத்தாளோ தாவி அணைத்தாள். என்னவென்று அவன் உணர்வதற்குள் நெஞ்சுக் கூட்டோடு தன் முகத்தை மறைத்துக் கொண்டு வாய்விட்டுக் கதறினாள். ரிதுவின் அழுகையை முதல்முறையாகப் பார்க்கிறான். மனைவி தானா? எனத் திகைத்தான். அதன் அழுத்தம் தாங்காமல் உள்ளங்கையை இறுக்கி மூடினான்.

எத்தனை வருட மனபாரமோ தெரியவில்லை. தாங்க ஆள் இல்லாமல், தனக்குத்தானே ஆறுதல் என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தவள் தனக்கான உறவோடு துயரத்தைச் சேர்த்தாள்.

அழுத்தமாக அணைத்தவள் தேவை வரை ஒன்றி விட்டு விலகி அவன் முகம் பார்க்க, நடந்ததை நம்ப முடியாது, திகைத்த உருவத்தை மாற்றாது நின்றிருந்தான் கருடன். அவன் முகத்தைப் பார்த்தவளுக்குச் செய்த செயல் புரிந்தது. கூனிக்குறுகித் தோற்றுப் போனதாய் உணர்ந்தவள் ஓடி விட்டாள்.

மெல்லக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான். இருட்டான அறையில், நிழல் தேவதையாக நின்று கொண்டிருக்கும் தன்னவளுக்குப் பின் நின்றான். அவன் வரவைக் கண்டு கொண்டவள், திரும்பாது கிளம்பத் தயாராக இருக்கும் நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஓய்!”

“முதலாளி!”

“உன்னத்தான்…”

எத்தனை முறை அழைத்தும் எந்த அசைவும் இல்லை அவளிடம். இடைவெளி விட்டு நெருங்கி நின்றவன், “ரிது!” மெல்ல அழைக்க, தலை அவன் புறம் திரும்பியது.

“அம்மா கூட இருக்காம இங்க எதுக்கு வந்த?”

“நான் அங்க இருக்கக் கூடாது!”

“ஏன்?”

“இருக்கக் கூடாது!”

பின்னால் நின்று கொண்டிருந்தவன் அவளுக்குப் பக்கத்தில் சென்று நின்று, “யார் இருந்தாலும் நீ இருக்கிற மாதிரி வராது. உங்க அம்மா மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கன்னு உன் கண்ணீரே சொல்லுது. அப்படி இருக்க எதுக்காக விலகிப் போற.” என்றவன் கை மீது கை வைத்து அழுத்தமாகப் பிடித்தாள்.

அந்தக் கை மீது பார்வையை மாற்றியவன், அதில் கொடுக்கும் அழுத்தத்தை அறிந்து முகம் பார்த்தான். துடைத்து வைத்த பாத்திரம் போல் எதையும் காட்டாது இருந்தது அவள் முகம். முகத்திற்கும், அழுத்தத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவன், மெல்ல அவள் கைகளில் இருந்து தன் கையைப் பிரித்து உள்ளங்கைக்கு இடம் மாற்றி ஆதரவாகப் பிடித்தான்.

கூட்டத்தோடு கூட்டமாக வளர்ந்த குட்டி ஆடு, தன் சொந்த பந்தத்தைத் தொலைத்துவிட்டு நடுக்காட்டில் தவித்துக் கொண்டிருக்க, எங்கோ கேட்கும் குரலைக் கேட்டு நம்பிக்கை பிறந்து தாவி ஓடியது போல், தன்னை ஆதரித்த அவனிடம் ஒன்றி நின்றாள். வீட்டுக்காரியின் தோளோடு கை போட்டுத் தன்னோடு இழுத்துக் கொண்டான். அவ்வளவுதான்! உடைந்து விட்டாள் ரிது சதிகா. மூச்சு முட்ட அழுத்தி வைத்த கண்ணீரைப் பட்டாசாய்த் தெறிக்க விட்டாள்.

மருத்துவமனையில் அழும் பொழுது கூடக் கண்ணீர் மட்டும் தான். ஆனால், இப்போது கண்ணீரோடு சேர்ந்து அவள் விசும்பலும் வெளிப்பட, அவசரமாக அவளோடு சேர்ந்து நின்று, “ஹே… என்னடி?” கேட்டதும், கட்டி அணைத்தாள்.

தயக்கமின்றி தன்னோடு சேர்த்துக் கொண்டவன், அவள் அழுகை நிற்கும் வரை அன்போடு தட்டிக் கொடுத்தான். சுதந்திரமாக, ஒளித்து வைத்ததைக் கொட்டித் தீர்த்தவள் மெல்ல விலகினாள். பாசம் கசிய முகம் பற்றியவன், குளித்தது போல் இருக்கும் அவள் முகத்தைத் துடைத்து,

“உனக்குள்ளே வச்சு என்ன சாதிக்கப் போற? எதுவா இருந்தாலும் மனசு விட்டுப் பேசு. கோபத்தைக் காட்டுற மாதிரி அழுகையையும் வரும்போது காட்டிடனும். எதையும் கட்டுப்படுத்தி வைக்காத.” என்றான்.

“ஒன்னும் இல்ல, விடு!”

தன்னிடமிருந்து நழுவப் பார்க்கும் கட்டியவள் செயலில், பிடித்தம் கொள்ளாதவன் இடையோடு கை நுழைத்து, “என்னைப் பாரு!” கட்டளையிட்டான்.

ரிது சதிகா விலகிச் செல்வதில் குறியாக இருக்க, “ஓய் பாருடி!” எனத் தாடை பற்றித் தன்னைப் பார்க்க வைத்தவன், “இப்பச் சொல்லு!” புன்னகைத்தான்.

அதில் தன்னைத் தொலைத்தவள் இமை சிமிட்டாது ஆழமாகப் பார்த்து, “எனக்குப் பிடிச்ச யாரும் என்கூட இருக்க மாட்டாங்க. நான் பக்கத்துல போகாம இருந்தா தான் அம்மா உயிரோட இருப்பாங்க.” என்றதைக் கேட்க மனம் வலித்தாலும், அவள் உள்ளத்தில் இருக்கும் அனைத்தையும் வாங்க நினைத்தவன்,

“அம்மாக்குத் திடீர்னு எப்படி ஃபிட்ஸ் வந்துச்சுன்னு தெரியுமா?” கேட்டான்.

புரியாத பாஷையில் அவள் பார்க்க, “புதுசாப் பார்க்க வந்த அந்தப் பொண்ணுகிட்ட நான் பேசினேன். அவ பாய் பிரண்டுகிட்ட நம்மளைப் பத்திப் பேசிட்டு இருந்திருக்கா… அதைக் கேட்டதால நினைவு திரும்பி இப்படி ஆகி இருக்கு.” என்றான்.

“நம்மளைப் பத்தியா?”

“நமக்குக் கல்யாணம் ஆன விஷயத்தை இங்க வேலை பார்த்துட்டு இருந்த வாணிப் பொண்ணு புதுசா வந்த பொண்ணுகிட்டச் சொல்லி இருக்கு. அதைத் தன்னோட பாய் ஃப்ரெண்ட்கிட்ட போன்ல சொல்லி இருக்கா…” கேட்டதும் முகம் சிவந்து அவனை விட்டு விலகினாள்.

“இப்ப எதுக்குக் கோவப்படுற?”

“அம்மாவைப் பார்த்துக்கச் சொல்லி வேலைக்கு வச்சா, லவ்வர் கூடக் கடலை போட்டுட்டு இருக்காளா? அவளுக்கு எதுக்கு நம்மளைப் பத்தின பேச்சு? முதல்ல பொய் சொல்லி இங்க வந்ததுக்கே என்ற பண்றதுன்னு தெரியாம இருக்கேன். இதுல அம்மாவ இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்கா…”

“ப்ச்! புத்தி இல்லாம நடந்துக்காத.” என்றதும் முறைப்பைத் தூக்கலாக வீச, மெல்லச் சிரித்தவன் விலகியவளை மீண்டும் இணைத்துக் கொண்டு,

“உன்னப் பத்தின விஷயத்தை உங்க அம்மா தெரிஞ்சுக்க ஆசைப்படுறாங்க. உன் குரலைக் கேட்காம ஏங்கிட்டு இருக்காங்க. அதை யாரோ ஒருத்தர் கொடுக்கும்போது, அவங்களையும் மீறி அவங்களுக்குள்ள இருந்த பாசம் வெளிப்பட்டிருக்கு. உன்னோட அம்மாக்கு என்ன தேவைன்னே தெரியாம, வசதியா வைக்கிறேன்னு அவங்களைத் தனிமைப்படுத்தி வச்சிருக்க.” உண்மையைப் புரிய வைத்தான்.

கட்டியவன் சொல்லிய வார்த்தைகள் யாவும் அவள் உள்ளத்திற்குள் சென்று பெருத்த யோசனையை உருவாக்க, விழி இரண்டும் அகண்டு விரிந்தது. தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்த விழிகளின் ஓரம் தேங்கி நிற்கும் கண்ணீரை வைத்து மனதைப் படித்தவன் மெல்ல அதைத் துடைத்து விட்டான். அடுத்த நொடி மழை நீர் போல் தடதடவென்று கொட்டத் துவங்கியது.

அத்தனைக் கண்ணீரையும் துடைத்துவிட்டுக் கன்னம் இரண்டையும் பிடித்தவன், “உன் அம்மாக்கு நீ தான் மருந்து! எப்பவோ உன்னையே அறியாம நடந்த ஒரு விஷயத்துக்காக, உன் அம்மாவைக் கஷ்டப்படுத்துனது போதும். அவங்க பக்கத்துல உட்கார்ந்து மனசுல இருக்க எல்லாத்தையும் பேசு. நிச்சயமா சொல்றேன், அவங்க கண் விழிப்பாங்க. உன்னப் பத்தின ஒரு சின்ன நியூஸ்கே இவ்ளோ ரியாக்ட் ஆகுதுன்னா, நீ கூட இருந்தா மொத்தமா மாறும்.” என்றதும் அவனை விட்டு விலகினாள்.

“ரிது…”

“வேண்டாம், என்னால அது முடியாது.‌”

“ஏன்?”

“தெரியல!”

“உஃப்! திரும்பு…”

“வேண்டாம்!”

“ப்ச்!” என அவளைத் திருப்பியவன், “உனக்கு உன் அம்மா வேணுமா, வேணாமா?” அவளிடமே விருப்பத்தை விட்டு விட்டான்.

வேண்டும் என்பதை விழிகளில் பறைசாற்ற, உதட்டை மட்டுமே அழகு என்று ரசித்துக் கொண்டிருந்தவன், ஆயிரம் அர்த்தங்களை ஒரே நொடியில் கூறும் அந்தக் கண்களில் தன்னைத் தொலைத்தான். அவனோடு நெருக்கமானதை அறியாதவள்,

“நிஜமா, நான் பேசினா அம்மா கண் விழிப்பாங்களா?” கேட்டாள்.

ஒரு வழியாகத் தன் வார்த்தைகளைப் புரிந்து கொண்டதில் நிம்மதி அடைந்தவன், “கண்டிப்பா!” எனப் புன்னகைக்க, அவளுக்குள் புது நம்பிக்கை பிறப்பெடுத்தது.

“பயமா இருக்கு!”

“முதல்ல அப்படித்தான் இருக்கும். ஒரே ஒரு தடவை பேசிப் பாரு. அப்புறம் உன் அம்மாவ விட்டு விலகவே மாட்ட.”

“நிஜமாவா?”

“சத்தியமா!”

“அம்மாவப் பார்க்கப் போலாமா?”

“ஆட்டோக்காரன் ரெடி!”

தீராத மனக்கவலைகள் தீர்ந்து விட்டதாய் உணர்ந்தவள், மெல்லிய புன்னகையை அவனிடம் வீசிட, இருவரும் மருத்துவமனைக்குக் கிளம்பினார்கள். மனைவியோடு பொன்வண்ணன் மட்டும் இருந்தார். எட்டு ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருக்கும் மனைவியின் சிந்தனையில் இருந்தவருக்கு மகள் சென்றது கூடத் தெரியவில்லை.

தைரியமாக உள்ளே நுழைந்தவள், தந்தையின் நிலை கண்டு பழைய நிலைக்குச் சென்றுவிட, கைப்பிடித்து அழைத்தான். தைரியம் இல்லாது அவன் கையை உதறித் தள்ளிவிட்டு வெளியே ஓடினாள். ஒரே ஓட்டமாக ஓடிவந்து காரில் அமர்ந்தவள் பக்கத்தில் வந்தமர்ந்தவன், “அவ்ளோ சொல்லிக் கூட்டிட்டு வந்திருக்கேன். சின்னப்பிள்ளை மாதிரிப் பண்ற.” சிறு கோபம் கொண்டான்.

“அம்மாவையும், அப்பாவையும் இப்படிப் பார்க்குற தைரியம் எனக்கு இல்லை. இவங்களைப் பார்க்கும்போது அண்ணன் ஞாபகம் வருது. அம்மா சரியாகி, எங்கடி என் பையன்னு கேட்டா என்ன சொல்லுவேன்? ஏன்டி என் பையனைக் கொன்னன்னு திட்டுவாங்க. கல்யாணம் பண்ணிக் குடும்பமா வாழ வேண்டியவனை இப்படி ஆக்கிட்டியேன்னு அழுவாங்க. என்னால அது எல்லாத்தையும் தாங்கிக்க முடியாது.”

“அப்படியெல்லாம் எதுவும் கேட்க மாட்டாங்க.”

“தயவு செஞ்சு கார எடு!”

“நான் சொல்றதக் கொஞ்சம் கேளு!”

“இப்ப நீ எடுக்குறியா, இல்ல நானே டிரைவ் பண்ணவா?” என்றதும் வேறு வழி இல்லாமல் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான்.

வீட்டிற்கு வந்துவளைச் சமாதானம் செய்ய முயற்சிக்க, “நான் கொஞ்சம் தனியா இருக்கணும்.” என அதற்குத் தடை போட்டு விட்டாள்.

***

ராதா, வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். ஒவ்வொரு முறையும் தனி ஆளாகப் பாடுபடும் பொன்வண்ணனுக்கு இந்த முறை ஓய்வு. மாமியாருக்கான அனைத்துத் தேவைகளையும் செய்து முடித்து வீட்டிற்கு அழைத்து வந்தான். மருமகனை எண்ணிப் பெருமை கொண்டவர் நிம்மதியாக இருந்தார். அனைத்துச் செய்தியும் தெரிந்தாலும், அறையை விட்டு வெளிவராமல் பிடிவாதம் பிடித்தாள். அவளாகவே வெளியே வரும்படி சத்தமாக அனைத்தையும் செய்து கொண்டிருந்தான்.

கட்டியவன் கொடுக்கும் சத்தம் தாங்காது வெளியில் வந்து நிற்க, “இந்த ரூம்ல வச்சிருங்க.” என்றவன், “அப்படியே பெட்ஷீட் கவர் போட்டுடுங்க.” அங்கிருந்த வேலையாள்களுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தான்.

“என்ன பண்ணிட்டு இருக்க?”

“வணக்கம் முதலாளி!”

“எதுக்கு இந்த ரூமை ரெடி பண்ணிட்டு இருக்க?”

“என் மாமியார் இனிமே இந்த ரூம்ல தான் இருக்கப் போறாங்க.”

அவள் இருக்கும் பக்கத்து அறையைக் கைகாட்டிட, “அவங்க ரூம் தர்ட் ஃப்ளோர்ல இருக்கு.” என்றாள்.

“அவங்க ஒரு ஆளுக்கு அவ்ளோ பெரிய ரூம் எதுக்கு? அதுவும் இல்லாம படுத்த படுக்கையா இருக்குறவங்களை நம்மதான் எந்நேரமும் கவனிச்சிட்டு இருக்கனும். அதுக்கு இங்க இருந்தா தான் சரி வரும்.”

“ப்ச்! அதெல்லாம் எதுவும் வேண்டாம். வேற ஒரு நல்ல நர்ஸை ஏற்பாடு பண்ணி இருக்கேன். அவங்க அம்மாவ நல்லபடியா பார்த்துப்பாங்க. நீ அங்கயே ஷிப்ட் பண்ணிடு.”

ரிதுவை ஆழமாகப் பார்த்து, “நேத்து வரைக்கும், அவங்க யாரும் இல்லாம வேலை பார்க்கிறவங்க தயவுல வாழ்ந்திருக்கலாம். இப்ப மருமகன் நான் இருக்கேன். அவங்க பக்கத்துல இருந்து அவங்களுக்கு என்ன தேவையோ, அதை நான் செஞ்சுக்கிறேன். இனி நீ இவங்க விஷயத்துல தலையிடாத.”

“என் அம்மா விஷயத்துல என்னைத் தலையிடக் கூடாதுன்னு சொல்ல நீ யாருடா?”

“இவங்களோட மருமகன்!”

“வம்புக்குப் பண்ணிட்டு இருக்கியா?”

“ஏன் பண்றன்னு உனக்குத் தெரியும். உன்ன மாதிரி, ஒரு உயிரோட விஷயத்துல என்னால விளையாட முடியாது. அவங்களுக்கு நீ தான் தேவைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், மருந்து மாத்திரையை நம்பிப் பிரயோஜனம் இல்லை. என்ன ஆர்ப்பாட்டம் பண்ணாலும் அவங்க இங்கதான் இருக்கப் போறாங்க. இந்த வீட்ல நடக்குறது முதல் கொண்டு, நம்ம எல்லாரோட சத்தத்தையும் டெய்லி கேட்கப் போறாங்க.”

கோபத்தோடு உள்ளே சென்றவளுக்கு மனம் கேட்கவில்லை. ராதாவைப் புதிய அறைக்கு மாற்றியவன் பக்கத்தில் அமர்ந்து, “நான் பேசறது உங்களுக்குக் கேட்கும்னு நினைக்கிறேன். உங்க பொண்ணு சம்மதம் இல்லாம அவ கழுத்துல தாலி கட்டுனதுக்காக மன்னிப்புக் கேட்டுக்குறேன்.‌ உங்களுக்கு என் மேல நிறையக் கோபம் இருக்கும்னு தெரியும். உங்க பொண்ணு மாதிரி மனசுலயே வச்சு அழுத்திட்டு இருக்காம, ஏன்டா இப்படிப் பண்ணன்னு சட்டையைப் புடிச்சுக் கேளுங்க. கோபம் போற வரைக்கும் போட்டு அடிங்க. ஏன் அடிக்கிறீங்கன்னு கேக்க மாட்டேன். நீங்களும் எனக்கு அம்மா தான்…” என்றதைக் கேட்டுக்கொண்டு அன்னையின் அறைக்குள் நுழைந்தாள்.

மருமகன் அன்பில் மனம் கரைந்து போனார் பொன்வண்ணன். ஒரு கை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தவருக்கு, கடவுளின் கருணையால் கை கிடைத்தது போல் இருந்தது இவன் வரவு. மிகுந்த ஆனந்தத்தோடு நிற்கும் தந்தையைப் பார்த்துக் கொண்டு, அன்னையின் பக்கத்தில் வந்து நின்றவளுக்கு உணர்வுகள் பெருக்கெடுத்தது. தன்னவன் பேசுவதைக் கேட்டபின் ஆசை துளிர்விட்டது. அன்னையின் முகம் பார்க்க உள்ளம் ஏங்கியது.

பிடிவாதக்காரியின் பிடித்தம் புரிந்து, “உங்க பொண்ணு இங்கதான் இருக்காங்க. உங்ககிட்டப் பேச பயமாம். உங்க பொண்ண நீங்க திட்டுவீங்களாம். அப்படியெல்லாம் எதுவும் பண்ண மாட்டேன்னு சொல்லுங்க. அப்பதான் உங்க பொண்ணு உங்ககிட்டப் பேசுவாங்க.” என்றதை எல்லாம் கேட்ட ராதாவின் உள்ளம், கரைந்ததோ இல்லையோ ரிதுவின் உள்ளம் கரைந்தது.

மெல்ல அவனோடு அமர்ந்தவள் அவன் முகம் பார்த்துக் கொண்டிருக்க, அன்பான புன்னகையை அவளுக்குக் காட்டியவன், மாமியாரின் கையை மனைவியின் கைமேல் வைத்தான். அதன்பின், அங்கு இருந்த ரிது சதிகா ராதாவின் மகளாக மட்டுமே இருந்தாள்.

“அம்மா…” என்றதற்குப் பின் வாய்மொழி இடம் தராமல் சதி செய்ய, ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான்.

அவன் கையைத் தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டவள், மறு கையில் அன்னையின் கைப்பிடித்து, “எப்படிம்மா இருக்க? என் மேல இன்னும் கோபமா இருக்கியா?” என ஒவ்வொன்றாகப் பேசத் தொடங்கினாள்.

மகளின் மாற்றத்தைக் கண்கூடாகப் பார்த்த தந்தை மருமகனைக் கடவுளாகப் பார்க்க, அவள் உணராவண்ணம் கையை உருவிக் கொண்டவன், மாமனாரை வெளியே அழைத்து வந்து விட்டான்.

“அவங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.”

“ரொம்ப தேங்க்ஸ்!”

“எதுக்கு?”

“எதை நினைச்சு என் பொண்ணைக் கட்டி வச்சனோ, அது நடந்துட்டு இருக்கு.” என்றிட, தன்னவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குச் சென்று விட்டான்.

பல வருட அன்பை மொத்தமாகக் கொட்டி விட்டாள். வாய் வலிக்க உரையாடித் தீர்த்தவள், பல நூறு முத்தங்களைப் பெற்றவளுக்குக் கொடுத்தாள். கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த கயிர், அறுந்து விழுந்தது போல் உணர்ந்தவளுக்கு மூச்சு சீராக வந்தது.

“லவ் யூ அம்மா!” என்று விட்டு இதழ் பதித்து அறையை விட்டு வெளிவந்தவள் தன்னவனைத் தேடினாள்.

பால்கனியில் நின்று தரிசனம் கொடுக்க, அவனுக்கு முன் நின்றவள் பரம நிம்மதியில் கட்டி அணைத்தாள். ஏற்கெனவே எதிர்பார்த்து இருப்பான் போல. அவள் தொட்டதும் தாவி இறுக்கிக் கொண்டான். சிரிப்பிற்கு இடையில் ரிதுவின் கண்ணீர் மறைய, அதைக் கொடுத்தவன் பின்னந்தலையை வருடிக் கொடுத்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!