நெஞ்சம் – 15
விழியின் விழி தன்னை குற்றஞ்சாட்டுவது போல் இருக்க, அவளிடம் இருந்து மனமே இல்லாமல் அவன் கையை மெதுவாக உருவிக் கொண்டான் அர்விந்த். அவன் எதுவுமே பேசவில்லை என்றதும், அவன் அவளை தவிர்க்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டு கனத்த மனதோடு கிளம்பத் தயாரானாள் மலர்.
அப்பாவையும் பெண்ணையும் பஸ் ஏற்றி விட தியாகுவே கிளம்பினார். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய போது மற்றவர்களை போல் வாசல் வரை செல்லவில்லை அர்விந்த், வேகமாக திரும்பி தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான். அறையில் லைட்டை எல்லாம் நிறுத்தி விட்டு, படுத்து கண்களை மூடிக்கொண்டான். மூடிய கண்களுக்குள் கருவிழி அலைபாய்ந்தது, சூடான இரு முத்துகள் அவன் கன்னத்தில் வீழ்ந்த போது தான் அவன் அழுகிறான் என்று உணர்ந்தான் அர்விந்த்.
கண்ணீரா நானா? இதென்ன சின்ன பையன் மாதிரி…. அவளை நினைச்சு வருத்தப்படுறேன் போல், அவ நல்ல பொண்ணு! நீதான் ஸாரி சொல்லிட்டியே…. நடந்தது எல்லாம் தற்செயல், வேணும்னு எதுவும் நடக்கலை…. மாறிடுவா…. கவலைப்படாதே…. நீ அவளை பத்தி நினைக்காதே! அவனே அவனை வெகுவாக தேற்றிக்கொண்டான். மனதிற்குள் பேசியபடியே கண்ணீருடன் தூங்கி போனான் அர்விந்த்.
எந்த பிரிவிற்கும் முதல் நாள் என்பது கொடுமையானதாக இருக்கும்! பின் சில நாட்களில் மனம் அதற்கு பழகி விட்டால், அவ்வளவு தான் என்றாகி விடும்!
பேருந்தில் செல்லும் மலருக்கு கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது. அதை துடைக்க கூட எண்ணவில்லை அவள். இருட்டு என்பதால் யாருக்கும் தெரியாது என்பது அவளுக்கு வசதியாக போயிற்று.
அடுத்த வாரம் எப்படி போனது என்று கேட்டால் இருவருக்குமே தெரியாது. உண்டார்கள், உறங்கினார்கள், பேசினார்கள், சிரித்தார்கள், ஆனால் எதுவும் மனதை தொடவில்லை, எந்த நியாபகமும் இல்லை!
வீடு வந்த முதல் இரண்டு நாள் மலர் என்ன முயன்றும் அவள் வருத்தம் முகத்தில் தெரிந்து விட, கண்ணகி அவளின் மனநிலை புரியாமல் அவளை கிண்டல் செய்தார்.
“என்னடி அம்மா வீட்டுக்கு வந்த புது பொண்ணு மாதிரி சோகமாக சிரிக்கிற? அங்க உனக்கு அவ்ளோ பிடிச்சு இருந்துச்சா?”
அவர் சொன்ன உதாரணம் இன்னும் வருத்தியது அவளை. ஆனால் அதை காட்டிகொள்ளாமல், “அந்த மாதிரி ஒரு புகுந்த வீடு கிடைச்சா, நான் ஏன் அம்மா வீட்டுக்கு வரப்போறேன்?” அம்மாவை வம்புக்கு இழுத்தாள் மலர்.
ஆனால் மலர் எதிர்பார்த்தது போல் இல்லாமல், கண்ணகி மனம் நெகிழ்ந்து பேசினார். “இதை கேட்க எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? உன்னை அனுப்பிட்டாலும் எத்தனை நாள் தவிச்சு இருக்கேன் தெரியுமா? எங்க இயலாமைனால உன்னை கஷ்டப்படுத்துறோம்னு கவலையா இருக்கும்!”
“அவங்க ரொம்ப நல்லவங்க மா! ஆனா இது மாதிரி இனி நான் இன்னொரு வீட்டுக்கு வேலைக்கு போகலை. நான் தைக்கப் போறேன், இத்தனை நாள் வேண்டாம்னு நினைச்சேன், ஆனா சுயதொழில் என்கிட்ட இருக்கும் போது ஏன் நான் அதை விடணும்?”
தன் இரண்டு பெண்களுக்குமே தையல் கத்து கொடுத்து இருந்தார்கள் கண்ணகியும் மாணிக்கமும். ஆனால் அவர்களே அதை வைத்து கஷ்ட ஜீவனம் செய்வதால் பெண்களை அதில் புகுத்தவில்லை. ஒரு டிக்ரி அவசியம் படிக்க வைக்க வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசை. இப்போது மலருக்கே தோன்றுவதால் அதை அவர்கள் தடை சொல்லவில்லை.
விடிந்தால் அரவிந்தனின் திருமணம்,
வீடே உற்சாகமாக இருந்தது. பெங்களூரில் தான் திருமணம் என்பதால், பெண் வீட்டாருக்கு தங்க அனைத்து ஏற்பாடும் பக்காவாக செய்து இருந்தார்கள்.
மண்டபத்தின் மாடியில் இருக்கும் அறைகளில் தங்கி இருந்த பெண் வீட்டாரிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருந்த மகனை கண்ட அருணா,
“எனக்கு இப்போ தான் சந்தோஷமா இருக்குடி. கொஞ்ச நாள் முன்னாடி எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தான். அப்படி அவனை பார்த்தப்போ வயிரெல்லாம் கலங்கும்! பயமா இருந்துச்சு! பிள்ளை எதை நினைச்சு அப்படி இருந்தானோ…. இப்போ சரியான வரைக்கும் ரொம்ப சந்தோஷம்”
“நீங்கதான் போன்லயும் சொல்லிட்டே இருந்தீங்களே… நான் வந்தப்போ நார்மலா தான் இருந்தான், எனக்கு ஒன்னும் தெரியலை”
தன்னை யாரோ பார்க்கிறார்கள் என்று தோன்ற, சரியாக இவர்கள் இருக்கும் திசையை திரும்பி பார்த்தான் அர்விந்த். அம்மாவையும் அக்காவையும் கண்டவன், மகிழ்ச்சியாக கையை ஆட்டினான். அவன் அருகே நின்றிருந்த நிவேதாவும் இவர்களை கண்டு கையை அசைத்தாள்.
“அம்மா, உங்க மருமக காலத்துக்கும் உங்களுக்கு இந்த ஹாய் பை மட்டும் தான் சொல்லுவா! என்ஜாய்…” அம்மாவை கிண்டல் அடித்து சிரித்தாள் ஜனனி.
“சும்மா இருடி, என் பையன் சந்தோஷமா இருந்தா போதும் எனக்கு!”
“வேற வழி, இப்படி தான் சொல்லணும் நீங்க!”
அங்கு இருந்து பார்த்தவனுக்கும் ஜனனியின் கேலி புரிந்தது, அங்கு இருந்தே கையை நீட்டி பத்திரம் காட்டினான் அக்காவிற்கு. போடா என்று வாயசைத்து தோளை குலுக்கினாள் ஜனனி.
இரவு நேரம் ஆகி கொண்டே இருக்க, நண்பர்களுடன் இருந்த அரவிந்தனை அழைத்து படுக்கச் சொன்னார் தியாகு,
“ரொம்ப லேட் பண்ணாம போய் தூங்குங்க! உன் பிரண்ட்சையும் தூங்க சொல்லு.”
“சரிப்பா, நீங்க போய் படுங்க, நான் பார்த்துக்கிறேன்….”
அப்பா சொன்னது போல், அனைவரையும் படுக்க அனுப்பி விட்டு, அறைக்குள் வந்து படுத்தவனுக்கு உறக்கம் வருவேனா என்றது!
மலர் ஊருக்கு சென்ற பின், அவன் வீட்டில் எங்கும் அவள் பிம்பமும், நியாபகமும் தான் வந்தது அவனுக்கு. அவளிடம் தான் நடந்து கொண்டது குறித்து அவனுக்கு இன்னும் சங்கடம் தான்! அதை விட அவள் தன்னை விரும்புவதாக கூறியது எல்லாம் அந்த நிகழ்வின் தாக்கத்தால் தானே, அவன் செய்கையை நியாயப்படுத்தவோ, சரி செய்யவோ முடியவில்லையே என்ற கோபமும் அவனுக்கு இருந்தது. அவளிடம் தன்னுடைய மரியாதை மிகவும் இறங்கி விட்டதை போல் தான் உணர்ந்தான் அவன். தன் ரகசியம் தெரிந்த மற்றொருவர் இருக்கிறார் என்பது என்றும் சங்கடம் தரும் விஷயம் அல்லவா? மிகவும் கடினப்பட்டு தான் அவனின் உள்ளத்தை நிகழ்காலத்தில் தக்க வைத்தான் அரவிந்தன். கடந்த போன எதையும் மாற்ற முடியாது, அவளும் ஊருக்கு சென்று விட்டாள், அவள் வாழ்வை பார்ப்பாள் என்ற நம்பிக்கையில் அரவிந்தன் சற்று தன்னை தெளிவாக்கி கொண்டான்.
அங்கே திருக்கோவிலூரில் ஒருத்தி புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தாள். பெங்களூரில் இருந்து வந்த பிறகு தினமும் மனதுடன் போராட்டம் தான் மலருக்கு. நிறைவேறாத காதல் என்றாலும் அவன் இருக்கும் வீட்டில் இருந்த போது கொஞ்சம் சாந்தமாக இருந்தது. அவனை பார்த்துகொண்டு இருந்ததில் அமைதியாக இருந்தது. ஆனால் நாளையில் இருந்து அவன் வேறு ஒருத்தியை தன் சரிபாதியாக ஏற்றுக் கொள்ள போகிறான், அவன் இன்னொரு பெண்ணின் கணவன் ஆக போகிறான் என்பது அவள் மனதை ரணமாக்கி தீராத வலியை கொடுத்தது.
கடவுளே, என்றேனும் எனக்கு இந்த வலியில் இருந்து விடுதலை கிடைக்குமா? பலநாட்களாக மனதை கசக்கும் அந்த வலியில் இருந்து வெளியேற வழி தெரியாமல் தவித்தாள் மலர்விழி! அரவிந்தனின் விழி!
கண்ணீருடன் மனதெல்லாம் பாரமாகி கிடந்தவளுக்கு நடு இரவில் திடீரென்று மூச்சே விட முடியவில்லை. எழுந்து அமர்ந்து பார்த்தாள், தண்ணீர் குடித்து பார்த்தாள், ஒன்றும் முடியவில்லை. கடைசியாக மாணிக்கத்தை எழுப்ப, குடும்பமே எழுந்து விட்டது. கண்ணகியும் கனிமொழியும் வீட்டில் இருக்க, இவர்கள் மட்டும் ஆஸ்பத்திரிக்கு கிளம்பினார்கள். மிகவும் பயந்து போனவராக மகளை தன் வண்டியில் வைத்து, ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். என்ன செய்கிறது என்ற கேட்ட மருத்துவரிடம் அவள் சொல்ல, மாணிக்கத்தை வெளியில் போக சொன்னார் அந்த இளம் மருத்துவர். அவர் தயங்க,
“இங்க பாருங்க நர்ஸ் இங்கேயே தான் இருப்பாங்க, உங்க பொண்ணுக்கு வைத்தியம் தான் செய்ய போறேன்” என்றார் கொஞ்சம் அழுத்தமாக. அவர் வெளியேறிய பின், மேலும் சில கேள்வி கேட்ட பின்,
“என்ன லவ் பெயிலரா?” என்று சிரித்தார் அந்த மருத்துவர்.
அவள் அமைதியாக இருக்க, “ஒன்னு வாய் விட்டு அழுது தீர்த்து முடிச்சுடு அந்த சாப்டரை! இல்லைனா, மானம் ரோஷம் எல்லாம் பார்க்காம மறுபடி போய் முயற்சி பண்ணி சேர்ந்துக்க பார்! இப்படி உன் இதயத்துக்கு பளு கொடுக்காதே! உனக்கு வேற ஒன்னும் பிரச்சனை இல்லை, உன் மனசு அமைதி ஆனா தானா உன் மூச்சு சீர் ஆய்டும்” என்றவர் அவளுக்கு மூச்சை சீராக்கி தூங்க ஊசி போட்டார். பின், மாணிக்கத்திடம்,
“இன்று இரவு மட்டும் இங்கு இருந்து விட்டு, காலையில் செல்லலாம், பயப்படும்படி ஒன்றும் இல்லை, ஏதோ கவலை இருக்கு அவங்களுக்கு” என்று கூறினார்.
மறுநாள் காலை மகளை வீட்டிற்கு அழைத்து வந்தவர்,
“அப்படி என்ன உன் மனசை போட்டு அறுக்குது? மூச்சு முட்டுற அளவுக்கு என்ன பிரச்சனை?” வீட்டினர் அனைவரும் அவளை சுற்றி விட்டனர். அவர்களிடம் ஏதேதோ கதை சொல்லி தப்பித்தாள் மலர். அவளை தூங்க சொல்லி விட்டு அவர்கள் நகர, அவள் மனம் அவளின் நாயகனிடம் ஓடியது. அந்த டாக்டர் சொல்றது போல் மானம் ரோஷம் எல்லாம் பார்க்காம போகணும்னா அவனுக்கு கல்யாணம் ஆகாம இருந்தா பரவாயில்லை! இன்று, இந்நேரம் தாலி கூட கட்டி இருப்பானோ என்னவோ அவனிடம் சென்று நான் என்ன கேட்பது? அப்படியே கேட்டாலும் அவன் எங்கே? நான் எங்கே? இதெல்லாம் நடக்கிற விஷயமா? ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லையே! அதனால் மருத்துவர் சொன்னது போல் இன்றோடு அதை முடித்து விடுவோம் என்று முகத்தை மூடிக் கொண்டு சத்தமே வராமல் அழுது தீர்த்தாள் மலர்.
மலர் நினைத்தது போல், பெங்களூரில் அப்போது தான் தாலி கட்டி முடித்து இருந்தான் அர்விந்தன். நிவேதவுடன் அவன் திருமணம் முடிந்தே விட்டது!!! சுற்றி இருந்த சொந்தமும் நட்பும் மணமக்களை அணைத்தும் உலுக்கியும் ஆரவாரம் செய்து அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அர்விந்தன் என்ன உணர்கிறான் என்றே அவனால் கணிக்க முடியவில்லை. யாருடைய ஆரவாரமும் அவனை கொஞ்சமும் எட்டவில்லை. அவன் மனம் எந்த உற்சாகத்தையும் பிரதிபலிக்கவில்லை. ஆனால் அது எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தான்.
மணமக்கள் வீடு வர, சிறு சிறு சடங்குகள் செய்து மணமக்களை கலாட்டா செய்தனர் உறவுகள். நேரம் செல்ல செல்ல, அது எதிலும் ஒன்ற முடியாமல் தவித்தான் அர்விந்தன். என்ன இது இப்படி இருக்கிறது? வாழ்க்கை முழுதும் வரக்கூடிய இந்த உறவு முதல் நாளே என்னை கலங்க வைக்கிறது. இது அனைத்தையும் விட்டு எங்காவது ஓடிவிடலாம் என்று தோன்றியது அவனுக்கு. சற்று நேரம் வெளியில் கூட செல்ல விட மாட்டார்களே இப்பொழுது. அனைவரிடமும் இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு மெதுவாக மொட்டை மாடிக்கு நழுவினான் அர்விந்த்.
அவன் அங்கே சென்ற சிறிது நேரத்தில், நிவேதாவை கொண்டு வந்து தள்ளினார்கள் நண்பர்கள். “இதுக்கு தானே டா, தனியா வந்து இங்க யோசிக்கிற? என்ஜாய்!” என்றனர்.
கடவுளே என்று மனதினில் நொந்து போனவன், வெளியில் சிரித்து வைத்தான்.
அவனை நெருங்கிய நிவேதா, “ஏன் இவ்ளோ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கே அர்வி? இன்னைக்கு கண்டிப்பா இப்படி கலாட்டா இருக்கும்னு தெரியும் தானே? கமான் அர்வி… வா கீழே போலாம்.” என்றவள் அவனை நெருங்கி, அவன் கையேடு அவள் கையை பிணைத்து கொண்டு அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். அவன் அமைதியாகவே நிற்க,
அர்வி என்று மிரட்டுவது போல் கூறி, அவனின் கழுத்தில் கைகளை கோர்த்து, அவன் இதழில் முத்தமிட்டாள் நிவேதா. நிவேதாவின் தொடுகை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. அணைப்பு, தொடுகை, சில முறை இதே போல் முத்தம் எல்லாம் இருந்திருக்கிறது, ஆனால் இன்று அதுவும் அவர்களின் திருமணத்திற்கு பின் நிகழும் இந்த முத்தத்தில் சட்டென்று விறைத்து உறைந்து போனான் அர்விந்த்.
அவன் மனம் கடகடவென்று வேறு ஒருத்தியிடம் ஓடிச்சென்றது. அவளை அந்த இரவில் முத்தமிட்டது அப்போது நிகழ்ந்தது போல் பசுமையாக நியாபகத்தில் வந்தது. ஒரு முறை கூட நிவேதவுடன் அவன் கழித்த எந்த பொழுதையும் அவன் இப்படி நினைத்து பார்த்ததில்லை, நியாபகத்திலும் வந்தது இல்லை! ஆனால் இந்த பத்து நாளில் மட்டுமில்லாமல் அவள் இங்கே அவன் வீட்டில் இருந்த போதும், அவளுடன் அவன் பேசிய, சிரித்த பொழுதுகளை அவன் நினைத்து பார்க்காமல் இருந்ததே இல்லை! அது அவன் முகத்தில் புன்னைகையை வரவழைக்காமல் இருந்ததும் இல்லை!
அவனையும் அறியாமல் இப்போது ஏதோ தப்பு செய்வது போல சடாரென்று நிவேதாவிடம் இருந்து விலகி நின்றான் அர்விந்த்.
“என்ன? என்ன ஆச்சு அர்வி?”
“இல்லை, ஒண்ணுமில்லை யாரோ வந்தது மாதிரி இருந்தது.” சமாளிக்க பார்த்தான் அர்விந்த்.
“ஹாஹா, நீ எப்போ இருந்து இப்படி மத்தவங்களை நினைக்க ஆரம்பிச்ச? அதுவும் இப்போ நமக்கு கல்யாணம் ஆய்டுச்சு…. வீ ஹாவ் ஆல் ரைட்ஸ்….”
“ஹாஹா, ஆமா ஆமா…. சரி வா போலாம்…. ரொம்ப நேரம் ஆச்சு….” நிவேதாவை அழைத்து கொண்டு கீழே வந்தவன், நெருங்கிய நண்பனிடம் மட்டும் சொல்லி விட்டு காரை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் ஒட்டிச் சென்றான்.
மனதின் திரை விலகியதில் அதிர்ந்து போய் இருந்தான். இத்தனை நாள் அவள் நினைப்பாகவே இருந்ததற்கு, அவளிடம் நடந்து கொண்டதற்கு எல்லாம் வேறு வேறு காரணம் கற்பித்து கொண்டவனால் இன்று அவனுக்கு நேர்ந்த அனுபவத்திற்கு என்ன காரணம் கற்பித்துக் கொள்ள முடியும்? அவன் உள்ளமும் உடலும் அவளை மட்டுமே நாட, தொட்டு தாலி கட்டிய பெண்ணிடம் இருந்து விலகி நிற்கிறான்!
கடவுளே, விழியை நான் நேசிக்கிறேன்…. இந்த திருமணமே ஒரு தப்பு! நான் எப்படி நிவேதவுடன் வாழ்வேன்? மனம் அரற்ற, வாய் விட்டு, விழி ஸாரி டா, ஸாரி பார் எவரித்திங், எவ்ளோ அழகா ஐ லவ் யூ சொன்னே…. அப்போ சிரிச்சேனே…. ஐ லவ் யூ டா…. ஆனா உன்கிட்ட சொல்ல கூட முடியாதுடி…. கண்களை இறுக மூடி திறந்தான் அர்விந்த்.
திறந்தவன் கண்டது, இவன் காரை நோக்கி கன்ட்ரோல் இல்லாமல் வந்த லாரியை தான்!
விழி!!!!!!!!!!!!!!!!!! அவன் கடைசியாக உதிர்த்த வார்த்தை, லாரி, அவன் காரை இடித்த சத்தத்தில் யாரையும் எட்டவில்லை! அவனோடு அதுவும் அடங்கி போனது!
😭😭😭
Intha Twista ethir pakala sis.interesting