🤎 நேசம் நீயாகிறாய்! 🤎
நேசம் 15
உடை மடித்துக் கொண்டிருந்த மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ராகவ்.
நேற்றிலிருந்து அவளின் செய்கைகள் வித்தியாசமாகத் தோன்றின. வழமையாக அவனோடு சண்டை போட்டாலும், நேரத்திற்கு சாப்பாடு எடுத்து வைப்பாள், ஹாஸ்பிடலில் இருந்து வரும் போது வாயிலுக்கு ஓடி வருவாள், காஃபி போட்டுக் கொடுப்பாள்.
ஆனால் இப்போது ஒன்றும் இல்லை. அவனைப் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை. அவளை சீண்டினால் கொந்தளிப்பாள் என்று அவன் செய்த செயல்களுக்குக் கூட பெரிதாக பிரதிபலிப்பு எழவில்லை.
என்னவாயிற்று என்று கேட்டால் நிச்சயம் பதில் வராது. மாறாக, எடக்கு மடங்காக கேள்வி கேட்டு கோபத்தைக் கிளப்புவாள். ஆனால் அவளை அப்படிப் பார்க்கவும் ஏதோ போல் இருந்தது அவனுக்கு.
அவனது உடையை மடித்து வைக்கும் போது, அன்று அவன் வாங்கி வந்த சாரி கண்களில் பட்டது.
எடுப்பாளா? தான் வாங்கியதை அணிந்து கொள்வாளா? என்ற அவாவில் தலை தூக்கிப் பார்க்க, அவள் அதனை தொட்டுப் பார்க்கவும் இல்லை.
‘அவ்ளோ ஆசையா உனக்காக வாங்கி வந்தேன். ஆனால் உனக்கு அதை உடுக்க மனசு இல்லைல?’ என்று அவன் மனதினுள் கேட்டுக் கொள்ள, ‘இதைப் போடவும் எனக்கு தகுதி இல்லை’ என விரக்தியாக நினைத்துக் கொண்டாள் தேனு.
அவள் வெளியில் செல்ல எத்தனிக்க, “நில்லு” என தன்னைத் தடுத்தவனை என்ன எனும் வினாவோடு நோக்கினாள்.
“நான் கேட்கிறதுக்கு பதில் சொல்ல வேண்டும்”
“கேளுங்க சொல்லுறேன்” அவன் முகத்தைப் பாராமல் சொல்ல, “முதல்ல என்னைப் பார்” என்றான் அவன்.
“எனக்கு நிறைய வேலை இருக்கு. கேட்கனும்னா கேளுங்க. அதை விட்டுட்டு என்னைப் பார் என் கண்ணைப் பார்னு டயலாக் பேச வேண்டாம்” படபட பட்டாசாக வெடித்தாள் மனைவி.
“என்னைப் பார்க்கும் வரை நான் கேட்கவும் முடியாது. உன்னைப் போக விடவும் முடியாது” அவனுக்கும் பிடிவாதம் பிடிக்கத் தெரியுமே.
நீண்ட மூச்சொன்றை இழுத்து விட்டு, சிரம் தூக்கி அவன் முகம் நோக்க, அவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்தவாறே, “என்ன பிரச்சினை உனக்கு? எதற்காக ஒரு மாதிரி இருக்கே?” பூவினும் மென்மையாக வினவினான்.
இதயத்தைக் கவ்வியிழுக்கும் அப்பார்வையும், உயிர் உருக்கும் குரலும் பெண்ணவளை ஸ்தம்பிக்கச் செய்திட, மௌனமாக அவனையே பார்த்தபடி நின்றாள்.
“சொல்லு நிலா. எதுவா இருந்தாலும் சொல்லு” நான் இருக்கிறேன் என்று கூறும் விதமாய் அவளது கைகளைத் தன் முரட்டுக் கரங்களுள் சிறைப்படுத்த, மாயவுலகில் இருந்து நிஜத்திற்கு மீண்டவள் தன் நிலை உணர்ந்து வேகமாக விலகினாள்.
“எனக்கு ஒன்னும் இல்லை. எப்போவும் போல நார்மலா தான் இருக்கேன். சும்மா எதையாவது பேசிட்டு இருக்காதீங்க” என்று முரண்டு பிடிக்க,
“உன்னைப் பற்றி தெரிஞ்சும் கேட்டது என் தப்பு தான். இனிமே எதுவும் கேட்க மாட்டேன்” அவளின் பேச்சில் சினந்தான் ராகவ்.
“உங்க தப்பு தாங்க. வேண்டாத கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டீங்களே. அங்கே தப்பு பண்ணிட்டீங்க” என்று சொன்னதும்,
“பேசாத. நீ பேசாம இருக்கும் வரையில் நல்லாருக்கும். பேசப் போனா உன் வாயில் நல்ல வார்த்தை வராதே. பேச முன்னால யோசிச்சு பேசு. விட்ட வார்த்தையை ஒரு நாளும் அள்ள முடியாது” விரல் நீட்டி எச்சரித்தான்.
“நான் பேசாம என் வேலை உண்டு நான் உண்டுனு இருந்தேன். நீங்களே கூப்பிட்டு பேச வெச்சுட்டு என்னை குற்றம் சொல்லாதீங்க” பதிலுக்கு அவளும் கத்தி விட்டு பல்கோணிக்குச் சென்றாள்.
‘ரஷ்யாக்காரா! ஏன்டா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட? உனக்கு நான் பொருத்தமானவளே இல்லை’ என புலம்பித் தீர்க்க, அவளையே வெறித்துப் பார்த்திருந்தான் ஆடவன்.
அவன் ரெடியாகிக் கொண்டு ஹாஸ்பிடல் செல்ல, பல்கோணியில் இருந்தவள் அவனையே பார்த்தாள்.
அவன் திரும்பிப் பார்த்ததும் இவள் வேறு புறம் பார்வையைத் திருப்ப, “ஓவரா பண்ணுவாள்” என முறைத்தவாறு காரில் ஏறிச் சென்றான்.
தேனுவுக்கு தனுஜா சொன்னது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர, அதை மறப்பதற்கு தன்னை வேலைகளில் மூழ்கடித்துக் கொண்டாள்.
சுசீலாவின் குரல் கேட்டதும் ஓடிச் செல்ல, மரகதத்துடன் பேசிக் கொண்டிருந்தார் அவர்.
“அம்மா” என தன்னருகே அமர்ந்த மகளின் முகம் அவருக்கு எதையோ உணர்த்த, “அத்தைக்கு சமைக்க உதவாம என்ன பண்ணிட்டு இருக்கே” என்று கேட்டார்.
“பிள்ளையை திட்டாத சுசீ. எனக்கு முன்னால அவ எல்லா வேலையும் செஞ்சுட்டா. எதுக்கு இவ்ளோ வேலை செய்யுறேனு நான் அவளை திட்ட வேண்டியதா இருக்கு” என்ற மரகதத்தைப் பார்த்து மென்னகை பூத்தாள் மருமகள்.
“தேனுக்கு உடம்பு சரியில்லையானு தெரியல. நேற்றிலிருந்து முகம் சரியில்லை” என அவர் அக்கறையோடு கூற, “என்னடா ஆச்சு? உடம்புக்கு ஏதும் பண்ணுதா?” சுசீலா பதற்றமாக வினவினார்.
“இல்லம்மா நான் நல்லா இருக்கேன். லைட்டா தலை வலிக்குது அதான்” என்று எதையோ சொல்லி சமாளித்து வைக்க, அங்கு வந்தவனைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது.
“வா துருவா” என்றழைக்க, “போரடிக்குதுக்கா. இன்னிக்கு ஆஃபிஸ் லீவ் வேற. உன்னை வெறுப்பேத்திட்டு போகலாம்னு வந்தேன்” என்று கூற,
“பாசமா வந்தேனு நெனச்சா வெறுப்பேத்த வந்தியா? பரவாயில்லை வாடா” அவனோடு மாடிக்குச் சென்றாள்.
“துருவனைப் பார்த்ததும் அவ முகம் பூ போல மலர்ந்துருச்சு” என்ற மரகதத்தின் கூற்றை ஏற்றுக் கொண்டு தலையசைத்தார் சுசீலா.
இருவரும் கேரம் விளையாடினர். தம்பியோடு பேசும் போது அவளுக்கு கவலைகள் மறப்பது போல் தோன்றிற்று.
“நான் ராகவ்வுக்கு செட்டாக மாட்டேனா?” திடீரென அவள் கேட்ட கேள்வியில் திகைத்துப் போனான் சகோதரன்.
“என்னக்கா பேசுற? நீ அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்ட. சோ அவருக்கு செட்டானவ நீ தான்” திகைப்பு மாறாமல் பதிலளித்தான்.
“கல்யாணம் பண்ணிக்கிட்டா செட்டாகலனா கூட செட்டாக்கிக்கனுமா? அது அன்பால இல்ல, கடமைக்காக பண்ணுற மாதிரி தானே?”
அவளைக் குழப்பமாகப் பார்த்தான் துருவன். அவள் எதையோ நினைத்து குழம்பிக் கொண்டிருப்பது நன்கு புரிந்தது.
“உன் மனசுல என்ன இருக்குனு எனக்கு தெரியலக்கா. ரொம்ப குழம்பிப் போயிருக்க, அதான் ஏதேதோ பேசுற. ஆனால் ஒன்னு மட்டும் சொல்லுறேன் கேட்டுக்க. ராகவ் அண்ணாவுக்கு பொருத்தமானவ நீ தான். அது கடவுளால போடப்பட்ட முடிச்சு. அதனால தான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்திருக்கு. அதை மட்டும் ஞாபகம் வெச்சுக்க”
“ஆனால் துரு…” என ஏதோ சொல்ல வர, “நீ எதுவும் சொல்ல வேண்டாம். இப்போ கொஞ்ச நேரம் பேசாம இரு” அவளை அறையினுள் அழைத்துச் சென்று அமர வைத்தான்.
இப்போது உண்மையில் தலை வலித்திட அவளுக்கு தைலம் தேய்த்து விட்டான் பாசமிகு தம்பி.
“நான் ஏதும் தப்பு பண்ணுறேனா டா?” கவலையோடு அவள் கேட்க, “ஷ்ஷ்” வாயில் கை வைத்தவனது தோளில் அவள் சாய்ந்து கொள்ள, சற்று நேரத்தில் உறங்கியும் போனாள்.
🎶 உறங்கும் போதும்
இவனின் கவனம் உறங்கி போகாது..
கனவில் கூட காவல் செய்யும்
கடமை மறவாது 🎶
🎶 உலகமே இவளென இவன் வாழும் அழகை பாரடா
மகள் என வளர்க்கிறான்
இவன் உயரம் குறைந்தால் தாயடா 🎶
🎶 இவனின் அன்பை அளந்திட
எந்த மொழியும் போதாது 🎶
சற்று நேரம் அவளைப் பார்த்தவாறு நின்றவன், பெட்சீட்டால் போர்த்தி விட்டு சென்றான்.
தூங்கி எழுந்தவள் வழக்கம் போல் தன் வேலைகளை செய்யத் துவங்கினாள். இரவு நேரம் தன்னை மறந்து கார்டனில் அமர்ந்திருந்தாள். அங்கு வந்த ராகவ் “தலை வலி எப்படி இருக்கு?” என்று கேட்க, தலையசைப்பை மட்டும் பதிலாகக் கொடுத்தாள்.
அவன் உள்ளே செல்ல, “ராகவ்! நான் இதைக் கேட்க கூடாது. இருந்தாலும் கேட்கிறேன். உங்களுக்குள்ள ஏதும் பிரச்சினையா? தேனு இப்படி இருக்கிற பொண்ணு இல்லை. வாய் மூடாம பேசிட்டே இருப்பா. இப்போ சிரிச்சாலும் அவ சிரிப்பில் உயிர்ப்பில்ல” என மரகதம் கேட்க,
“இல்லம்மா! தலை வலி அவளுக்கு. அதான் அப்படி இருக்கா. ஓகே ஆகிரும். நீங்க கவலைப்படாதீங்க” என்று பொய் சொல்லி விட்டுச் சென்றான்.
உண்மையை சொல்ல அவனால் முடியாதே. அதைச் சொன்னால் அங்கு தொட்டு இங்கு தொட்டு அவளுக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொன்னது வரை தெரியப்படுத்த வேண்டும். அதைக் கேட்டால் தாயால் நிச்சயம் தாங்க முடியாது என்று நினைத்தான்.
அவன் அறையினுட் செல்ல, சிறிது நேரம் கழித்து வந்தாள் தேனு. அவள் ஒரு பக்கமாய் உட்கார, தொண்டையை செருமியவன் மீது அவளது கவனம் திரும்பியது.
“நீ எதற்காக இப்படி இருக்கேனு சொல்ல மாட்ட. ஆனால் இதை கவனிச்சிட்டு ஏதும் சண்டையானு அம்மா கேட்கிறாங்க”
“சாரிங்க. இனிமே அப்படி நடக்காது. என் கவலைகளை எனக்குள்ளயே புதைச்சிட்டு சிரிச்சு நடிக்கிறேன். உங்கம்மாவுக்கு இனி சந்தேகம் வராது” என மறு பக்கம் திரும்பிக் கொள்ள,
“உன்னை நடிக்கனும்னு சொல்லல. நெஜமாவே நீ சந்தோஷமா இருக்கனும்னு சொல்லுறேன். என்னவோ உன்னை கஷ்டப்படுத்தி வாழ வைக்கிற மாதிரி பேசாத” இவளிடம் எவ்வாறு எடுத்துக் கூறுவது என்று அவன் தான் ஓய்ந்து போனான்.
“நான் அப்படி சொல்லவே இல்ல. எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்கிட்டு நீங்க என்னை சந்தோஷமா வாழ சொல்லுறீங்க. நான் தான் அதை செய்யல. தப்பு என்னோடது, நீங்க எதுவும் யோசிக்க வேண்டாம்”
“கண்டபடி உளறாம ஒழுங்கா பேசு” அவன் சுட்டு விரலை நீட்ட, “எதுக்கு அடிக்கடி விரலை காட்டுறீங்க?” என முறைத்தாள்.
ஏதோ யோசித்தவன், “அது நம்பர் காட்டுறேன். உனக்கு தந்த டைம் முடிய ஒரு நாள் இருக்குல்ல. அதைத் தான் ஒரு விரலைக் காட்டி சொன்னேன்” என்றிட அவள் கண்களை அகல விரித்தாள்.
ரணகளத்திலும் குதூகலம் போல இதை மட்டும் மறக்காமல் நினைவூட்டுகிறானே. தன் மனம் அவனது முன்னைய காதலால் பாதிக்கப்பட்டது அறிந்தும் அவனோடு சகஜமாக வாழச் சொல்கிறானே.
“இதை மட்டும் மறக்காதீங்க” என்றாள் சீற்றத்துடன்.
“மறக்கக் கூடிய விஷயம் அல்ல. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்கனும்” அவன் சாவகசாகமாக சொல்ல, “எவ்ளோ கூலா சொல்லுறீங்க” அவளால் தாள முடியவில்லை.
“அப்போ ஹாட் ஹாட்டா சொல்லட்டுமா?” அவனது கண்களில் அவளது கன்னத்தில் படிய, “இல்ல வேணாம். சில்லுன்னு சொன்னாலே போதும்” என்று மறுபுறம் திரும்பிப் படுக்க,
“சைனா சரவெடி” என சிரித்தவாறு தூங்கிப் போனான் ராகவ்.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி
2024-11-19