15. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

4.9
(20)

வரம் – 15

வைரத்தை திருடியவன்
வைரத்தை திருட்டுக் கொடுத்தவன்
அந்த வைரத்தை கைப்பற்றத் துடிப்பவன் என அனைவரும் அந்தப் பார்ட்டி நடக்கும் இடத்தில் கூடியிருந்தனர்.

ஷர்வாவின் பார்வையோ அரவிந்தனுடன் இணைந்து ஆடிக்கொண்டிருந்த மோஹியின் மீது தொடர்ந்து நிலைத்துக் கொண்டிருந்தது.

வீராவின் பார்வையும் அவள் மீது தான் நிலைத்திருந்தது.

அரவிந்தனோ தன்னுடைய காதலியுடன் ஆடிக் கொண்டிருந்தாலும் கூட தன்னுடைய முழுக் கவனத்தையும் தங்களுக்கு அருகே வந்து செல்பவர்களின் மீது பதித்திருக்க ஒவ்வொரு நொடியும் கூட அவனுக்கு யுகமாகவே கழியத் தொடங்கியது.

வீராவோ சரியாக 9:00 மணி தாண்டியதும் அவளை நெருங்கிச் செல்லத் தொடங்கினான்.

எப்படியாவது ஒரு மணி நேரத்திற்குள் அவளைச் சந்தித்து விட்டு இங்கிருந்து செல்வதே சிறந்தது.

இனி சிறிது நேரம் தாமதித்தால் கூட இறந்து கிடந்தவனை மோப்பம் பிடித்து முட்டாள் போலீஸ் அதிகாரிகள் தன்னை வந்தடையக் கூடும் என எண்ணியவன் தன்னுடைய திட்டங்களை விரைவாக செயல்படுத்த எண்ணினான்.

மோஹி ஆடிக்கொண்டிருந்த இடத்தைச் சுற்றி பலரும் தங்களுடைய துணையோடு பாடலுக்கு ஏற்றவாறு உடலை அசைத்து வளைந்து நடனம் ஆடிக் கொண்டிருக்க ஒவ்வொரு ஜோடியையும் கடந்து முன்னேறிக் கொண்டிருந்தான் வீரா.

இன்னும் நான்கு அடிகள் வைத்தால் மோஹஸ்திராவை நெருங்கி விடக்கூடும் அப்படி இருக்கும் போது அந்தப் பார்ட்டி நடக்கும் இடத்தில் யாரோ அலறும் சத்தம் அங்கே ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலுக்கு மேலாகக் கேட்க சட்டென அனைவரின் அசைவும் நின்று போனது.

“ஹெல்… ஹெல்ப்…. போ… போலீஸுக்கு ஃபோன் பண்ணுங்க.. இங்க ஒரு பொண்ணு துடிச்சு கிட்டு இருக்கா…. யா… யாரோ ரேப் பண்ணிட்டாங்க போல இருக்கு… சீக்கிரமா போலீஸைக் கூப்பிடுங்க…” என நடுத்தர வயதைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் அலறிக் கொண்டு ஓடி வர அவர் கூறியதைக் கேட்டு அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

இத்தனை பேர் இருந்தும் கூட இப்படி தவறு நேர்ந்து விட்டதா என பதறிப் போனாள் மோஹஸ்திரா.
அவள் உள்ளம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக பதறி தவிக்கத் தொடங்கியது.

“ஜஸ்ட் ஸ்டாப்… இங்கே இருக்க யாரும் போலீஸுக்கு ஃபோன் பண்ணக் கூடாது…
ஏதோ என்னோட பையன் தெரியாம ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டான்… அந்த பொண்ணு கொஞ்சம் ஒத்துழைச்சிருந்தா இப்படி நடந்திருக்காது… இதை பெருசு பண்ணாம விடுங்க… அந்த பொண்ணோட குடும்பத்துக்கு எவ்வளவு கொடுக்கணுமோ அதை நாங்க கொடுத்துக்கிறோம்…” என அந்த பார்ட்டிக்கு வந்தவர்களில் மிகவும் செல்வந்தனான பாண்டி தேவ் கூற ஷர்வாவோ கொதித்துப் போனான்.

“வாட் த ஃ**********” எனத் திட்டியவாறு அவர்களை ஷர்வா நெருங்க,
தவறு செய்த பாண்டி தேவ்வின் மகனோ சற்றும் அச்சம் கொள்ளாமல் அலட்சியமாக நிற்க அந்த இடமே குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் போல மயான அமைதியைத் தழுவிக் கொண்டது.

மோஹியோ வேகமாக ஓடிச்சென்று அந்தப் பெண்ணுக்கு உதவ முயன்றவள் அங்கே அந்தப் பெண் கிடந்த நிலையைக் கண்டு துடித்துப் போனாள்.

“ஓ காட்… நோ….” உடல் அவளுக்கு அழுகையில் குலுங்கத் தொடங்கியது.
தலை சுற்றுவது போல இருக்க தடுமாறிப் போனாள் அவள்.
உடல் முழுவதும் காயங்களும் பற் தடங்களும் கண்டிச் சிவந்து போன அடையாளங்களையும் கண்டு பயந்தே போனாள் அவள்.

“அர்விஇஇஇஇ…” என உதவிக்கு அவனை அழைத்தவளுக்கு குரல் நடுங்கியது.

“இங்க நடந்த எல்லாத்தையும் எல்லாரும் மறந்துடுங்க… யாரும் என் மகனுக்கு எதிரா சாட்சி சொல்லக்கூடாது… நாம எல்லாரும் பிஸ்னஸ் வேர்ல்டுல ஒன்னா ட்ராவல் பண்றவங்க… ஒருத்தருக்கு ஒருத்தர் பகைச்சிக்க மாட்டீங்கன்னு நம்புறேன்… அப்படி ஏதாவது எனக்கு எதிரா பண்ணனும்னு நினைச்சீங்கன்னா அதோட பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்….” என பாண்டி தேவ் எச்சரிக்க அரவிந்தனோ கொதித்துப் போனான்.

தன்னுடைய கை முஷ்டிகளை மடக்கி விட்டவாறு பாண்டி தேவ்வை நெருங்கியவன் அவனுக்கு அருகே நின்ற அவனுடைய மகன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

“ஏய்… எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட பையன அடிச்சி இருப்ப…? நீ யாருடா…? என் பையன் மேல கை வைக்கிறதுக்கு நீ யாரு….? நீ என்ன எங்க பிஸ்னஸ் பார்ட்னரா… இல்ல எங்க சாதியா…? எவ்ளோ தைரியம் இருந்தா என் கண்ணு முன்னாடியே என் பையன் மேல கைய வெச்சிருப்ப…? நான் யாருன்னு உனக்கு காட்றேன்டா…” என பாண்டி தேவ் எகிறிக் கொண்டே போக அவனுடைய கன்னத்திலும் ஓங்கி ஒரு அறை விட்டான் அரவிந்தன்.

“ஷட் அப்…. நான் யாருன்னு உனக்கு தெரியணுமா….? ஐ ஆம் சி.பி.ஐ ஆபீஷர் அட் மும்பை பேஸ்ட் பிரான்ச்… இங்கே இருக்க எவனும் வெளியே போகக்கூடாது திஸ் இஸ் மை ஆர்டர்..” என கோபத்தில் அரவிந்தன் கர்ஜிக்க,
அங்கிருந்த அனைவரும் திகைத்து ஸ்தம்பித்துப் போயினர்.

ஷர்வாவோ வேகமாக அவர்களின் அருகில் வந்தவன்,

“ஓஹ் ஷிட்… அவசரப்பட்டு நீ யாருன்னு எல்லாருக்கும் முன்னாடி சொல்லிட்டியே அரவிந்தா… இட்ஸ் ஓகே. நீ இவனுங்கள வெளிய போக விடாத… முடிஞ்சா இப்பவே உன்னோட கஷ்டடிக்கு கீழ கொண்டு வந்துரு… வெளியே விட்டா இனி இந்த பொறுக்கிங்களை கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்… நான் அந்த பொண்ண பாத்துக்கிறேன்…” எனக் கூறிய ஷர்வாதிகரனோ உள்ளே ஓடிச்சென்று ஆடையின்றி உடல் சேதப்பட்டு கிடந்த அந்தப் பெண்ணைக் கண்டு ஒரு கணம் உறைந்து போனவன் அந்தப் பெண்ணுக்கு அருகே விக்கித்துப் போய் நின்ற மோஹஸ்திராவையும் கண்டான்.
அடுத்த நொடியே சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய கோர்ட்டை கழற்றி அந்தப் பெண்ணின் மீது போட்டுவிட்டு அவளை வேகமாகத் தன் கையில் ஏந்திக் கொண்டான்.

“ஹே.. ஹேய் இட்ஸ் ஓகே… உனக்கு ஒன்னும் ஆகாது… பயப்படாதம்மா… நான் பாத்துக்குறேன்…. பயப்படாத….” என பேச முடியாது வலியில் துடித்துக் கொண்டிருந்த அந்த பதினாறு வயது பெண்ணுக்கு தன்னால் முடிந்த ஆறுதல் வார்த்தைகளை கூறியவனின் விழிகள் கலங்கியது.

மிகவும் உடல் சிதைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் முனகலோ ஷர்வாவை பதற வைத்தது.

“ஷ.. ஷர்வா நானும் உங்க கூட வர்றேன்…” எனக் கூறியவாறு அவன் பின்னாலேயே ஓடினாள் மோஹஸ்திரா.

“மோஹி சீக்கிரமா உன்னோட காரை ஸ்டார்ட் பண்ணு..” என கட்டளைக் குரலில் கூறியவன் இவ்வளவு நேரமும் ஈனஸ்வரமாக ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுடைய முனகல் சத்தம் நின்று போக அதிர்ந்தான்.

அவனுடைய கால்களோ அந்த உடலில் எந்த அசைவும் இல்லாததை உணர்ந்து சட்டென நிலத்தில் வேரோடியதைப் போல நின்று போனது.

அவனோடு சேர்ந்து ஓடிய மோஹியோ ஷர்வா திடீரென அதிர்ந்து நின்றதைக் கண்டதும் திகைத்துப் போனாள்.

“ஷ… ஷர்வா… எ… என்னாச்சு அந்த பொண்ணுக்கு எதுவும் ஆகலைல்ல…? ஏன் அங்கேயே நிக்கிறீங்க…? வா.. வாங்க ஹாஸ்பிடல் போகலாம்..” என விழிகளில் கண்ணீரோடு கேட்ட மோஹியைப் பார்த்து வேதனையோடு மறுப்பாக தலை அசைத்தான் ஷர்வா.

அவனுடைய கரங்களில் தூக்கிய சில நொடிகளிலேயே அந்தப் பெண்ணின் உயிர் அந்த உடலை விட்டுச் சென்றிருக்க காப்பாற்ற முடியவில்லையே என்ற துயரத்தில் சோர்ந்து போனான் அவன்.

அவளுக்கோ விழிகளில் இருந்து கண்ணீர் மழை போல கொட்டத் தொடங்கியது.

பாண்டி தேவ் நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தவர் வேகமாக தன்னுடைய மகனை இழுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற முற்பட அடுத்த கணம் அரவிந்தனின் துப்பாக்கியோ பாண்டி தேவ்வின் மகனான ரோஹித்தின் மீது பாய்ந்து அவனுடைய தலையை துளைத்து உயிரை நொடி நேரத்தில் பறித்திருந்தது.

அக்கணம் துப்பாக்கி சத்தத்தில் அனைவரும் தெறித்து ஓட நடந்த அனைத்தையும் ஒரு ஓரத்தில் நின்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வீராவோ மிகப்பெரிய அதிர்ச்சியில் சிக்கியிருந்தான்.

மோஹஸ்திராவின் காதலன் ஒரு சிபிஐ ஆபீஸரா…?

ஷர்வாவும் மோஹஸ்திராவும் சற்று முன்னர் வெகு சாதாரணமாக பேசிக் கொண்டது எல்லாம் அவனுக்குப் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இவர்களிடம் தன்னை வெளிப்படுத்துவது ஆபத்தில் முடியக் கூடும் என எண்ணியவன் தானும் துப்பாக்கி சத்தத்திற்கு பயந்து ஓடுவதைப் போல வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறி ஓடத் தொடங்கினான்.

செல்லும் பாதையில் அவன் அணிந்த நகைகள் ஆடைகள் என அனைத்தையும் அவன் கழற்றி வீதியில் போட்டுவிட்டு வெறும் ஜட்டியோடு ஓடி மறைந்துவிட பார்ட்டி நடந்த இடத்தில் நின்ற அரவிந்தன் மோஹஸ்திரா ஷர்வா மூவரும் பார்வையும் வேதனை கலந்த சிறு சலிப்போடு சந்தித்து மீண்டன.

அடுத்த அரை மணி நேரத்தில் அங்கே காவல் அதிகாரிகள் வந்துவிட வீராவால் கொல்லப்பட்ட இன்னொரு தொழில் அதிபரின் உடலும் அவர்களால் அங்கே கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

அந்த சடலத்தில் ஆடைகளோ அவர் அணிந்திருந்த நகைகளோ இல்லாதிருப்பதைக் கண்டு அதிகாரிகளோ இது திருட்டா அல்லது கொலை வழக்கா எனக் குழம்பிப் போக ஷர்வாவின் புருவங்களோ ஏகத்துக்கும் உயர்ந்தன.

💜💜💜

ஓரளவு கதையை இப்போ கெஸ் பண்ணிருப்பீங்கன்னு நம்புறேன்..

கண்டு பிடிச்சிருந்தா கமெண்ட்ல சொல்லுங்க

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!