எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல் நடந்தேறிக் கொண்டிருந்தது யாஷ்வின் மற்றும் சாஹித்யாவின் பதிவுத் திருமணம்.
யாஷ்வினுக்கு உறவு என்று யாரும் இல்லையாதலால் அவனுடன் படித்த நண்பன் ஒருவன் மட்டுமே அவனுக்காக அங்கே வந்திருக்க அவனா இயந்திரம் போலத்தான் செயற்பட்டுக் கொண்டிருந்தான்.
கையெழுத்து வைக்கச் சொன்ன இடத்தில் தன்னுடைய கையொப்பத்தை வைத்து விட்டு நிமிர்ந்தவனின் ஒற்றைக் கரத்திலோ அவனுடைய மகள் அங்கே நடப்பது புரியாது சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு நெஞ்சம் பிசைந்தது.
மனைவி இறந்து முழுதாக நான்கு நாட்கள் கூட முடியவில்லையே.
ஜீரணிக்க சிரமம் கொண்டான் அவன்.
கழுத்தில் இருந்த மாலை அந்த ஆண்மகனை உறுத்தியது.
அவனுக்கு அருகே சோர்ந்த முகத்துடன் வாடிய பூங்கொடி போல நின்றாள் சாஹித்யா.
அவளுடைய விழிகள் சோர்ந்து போன யாஷ்வினின் முகத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டுதான் இருந்தன.
விளைவு உள்ளுக்குள் துடி துடித்துப் போனாள் அந்த மாது.
சாட்சிக் கையெழுத்து இட்டு முடித்து மாலையும் கைகள் நடுங்க ஒருவருக்கொருவர் மாற்றி விட்டு நிமிர்ந்த போது எப்போது இங்கிருந்து செல்லுவோம் என்ற நிலைக்கு வந்து விட்டான் நம் நாயகன்.
அதே கணம் ஒரு தட்டில் தாலி ஒன்றை கொண்டு வந்து யாஷ்வின் முன்பு நீட்டினார் ராஜி.
அதிர்ந்து விட்டான் அவன்.
“மாப்பிள்ள தாலிய கட்டுங்க..” என அவர் கூற,
அவனுடைய பார்வையோ அர்த்தமாக சாஹித்யாவைப் பார்த்தது.
அவனுடைய விழிகள் முடியவே முடியாது என்பதைப்போல மறுத்து அவளிடம் கூற அவனை நெருங்கி வந்து தன் கழுத்தை அவனுக்கு நீட்டியவளாக குனிந்து நின்று கொண்டாள் சாஹித்யா.
மீண்டும் அதிர்ச்சிதான் அவனுக்கு எஞ்சியது.
“இல்ல அத்தை.. தாலி எதுக்கு..? மேரேஜை பதிவு மட்டும் பண்ணிக்கலாம்.. இதுவே போதும்..” என்றான் அவன்.
“அது எப்படி மாப்பிள என்னதான் திருமணத்தை பதிவு பண்ணாலும் நாம காலம் காலமா பின்பற்றி வர்ற இந்த முறையை எல்லாம் மாத்த முடியாது இல்லையா..? தாலி கட்டினாதான் கல்யாணம் முடிஞ்சதா அர்த்தமாகும்..
இந்தத் தாலிய பக்கத்துல இருக்க அம்மன் கோயில்ல வச்சு ஆசி வாங்கி எடுத்துட்டு வந்தேன்.. கட்ட மாட்டேன்னு சொல்லாம அவ கழுத்துல தாலியைக் கட்டி உங்க மனைவியா மனசார அவள ஏத்துக்கோங்க மாப்பிள்ள..” என ராஜி கூற திணறித் திண்டாடிப் போனான் அவன்.
“என்ன மாப்ள யோசிக்கிறீங்க தாலிய கட்டுங்க..” என ஊக்குவித்தார் விமலன்.
சாஹித்யாவோ குனிந்த தலை நிமிரவே இல்லை.
யாஷ்வினுக்கு பைத்தியம் பிடித்து விடும் நிலைதான்.
“இல்லத்த இது சரியா வரும்னு தோணல..” என அவன் பின்வாங்கத் தொடங்க,
“என்ன மாப்பிள்ள இது? ரெஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சிருச்சு.. இப்போ இப்படி சொன்னா என்ன அர்த்தம்..? என் நெஞ்செல்லாம் பதறுது… என்னாச்சு..? ஏதாவது பிரச்சனையா..? ஏன் தாலி கட்ட மாட்டேன்னு சொல்றீங்க..?” என ராஜி பதறத் தொடங்க,
ஐயோ என்றானது அவனுக்கு.
அங்கிருந்த அனைவருக்கும் ஒரு விதமான பதற்றம் தொற்றிக் கொள்ள,
“என்ன மாப்பிள்ளை இது எல்லாரும் பாக்குறாங்க தாலிய கட்டுங்க..” என்றார் விமலன்.
அதற்கு மேலும் மறுக்க முடியாது அந்தத் தாலியைத் தன் கரத்தில் வாங்கியவனுக்கு விரல்கள் எல்லாம் நர்த்தனமாடத் தொடங்கின.
விழிகள் கலங்கி விழியோரத்தில் கண்ணீர் கசிய ஆரம்பித்தது.
தாலியை ராஜியிடம் இருந்து வாங்கிக்கொண்டு சாஹித்யாவின் முகத்தைப் பார்த்தான் அவன்.
அவளுடைய விழிகளில் இருந்து கண்ணீரோ பொல பொலவென வழிந்து கொண்டே இருக்க அக்கணம் அவளை எண்ணியும் அவனுக்குள் இரக்கம் சுரந்தது.
பாவம் இந்தச் சிறு பெண் எந்தத் தவறும் செய்யாமல் இப்படி வகைப்படுகிறாளே என எண்ணியவன் அவளை நெருங்கி அவளுடைய காதருகே,
“மன்னிச்சிடு சாஹி பாப்பா..” என்ற வார்த்தையோடு அந்தத் தாலியை அவளுடைய கழுத்தில் கட்ட,
விழி மூடி அதனை மனதார ஏற்றுக் கொண்டாள் அந்த மாது.
அவள் உடல் சிலிர்த்தது.
விழிகளில் வழிந்த கண்ணீரை அவள் துடைக்காத தலை குனிந்து நிற்க,
தன்மகளின் கண்ணீரைத் துடைத்து அணைத்துக் கொண்ட ராஜியோ “இனி நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்.. சந்தோஷமா வாழணும்..” என்றார்.
“எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா அப்பா..” என்றவள் சட்டென தன் அன்னை தந்தையின் முன்பு பாதத்தை தொட்டு வணங்கும் பொருட்டு கீழே குனிந்து விட முதலில் அதிர்ந்தவன் பின் தானும் அவளோடு இணைந்து அவர்களிடம் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டான்.
ஆக மொத்தத்தில் சாஹித்யா சட்டப்படியும் சம்பிரதாயத்தின் படியும் யாஷ்வின் என்ற ஆண் மகனின் மனைவியாக அக்கணம் முழுதாக மாறிக் கொண்டாள்.
காலையிலிருந்து யாரும் உணவு உட்கொள்ளாததால் அனைவரையும் வீட்டிற்கு போகும் படி கூறியவன் குழந்தையை சாஹித்யாவிடம் கொடுத்துவிட்டு அவர்களுக்கு உணவு வாங்கி வருவதாக தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு பதிவுத் திருமண ஆஃபீஸில் இருந்து அவன் சென்று விட,
சாஹித்யாவுக்கு அவனை எண்ணி மனம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது.
இனி சிறு துரும்பளவு துன்பமும் அவனுக்கு நேர்ந்து விடக் கூடாது என அக்கணம் மனதார பிரார்த்தித்தாள் அவள்.
அவன் சென்றதும் தன் கரங்களில் இருந்த குழந்தையை அள்ளி அணைத்து முத்த மழையைப் பொழிந்தவள்,
“அம்மா நான் இருக்கேன் தங்கம்.. நான் சாகும் வரைக்கும் உன் கூடவே இருப்பேன்..” என குழந்தையிடம் கூற,
அவளுடைய வார்த்தைகள் அவளுடைய பெற்றோரின் காதுகளிலும் விழத்தான் செய்தது.
குழந்தைக்கும் அவளுக்கும் இடையே இருந்த பிணைப்பு அவர்களை நிம்மதி கொள்ளத்தான் செய்தது.
“சரி வாங்க வீட்டுக்குப் போகலாம்.. மாப்ள நேரா வீட்டுக்கு வந்துருவாரு..” என்றவர் தன் மனைவியையும் மகளையும் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
உணவு வாங்குவதாக கூறிவிட்டு வெளியே வந்தவனுக்கு கரங்களின் நடுக்கம் இன்னும் நின்ற பாடில்லை.
தாலியை எந்தத் தைரியத்தில் கட்டினான் என்று அவனுக்கே புரியவில்லை.
அவசரப்பட்டு விட்டோமோ..?
சிறு பெண்ணவள் புரியாமல் பயத்தில் பேசினால் என்றால் அவசரப்பட்டு அவளுடைய வாழ்க்கையை நானே கெடுத்து விட்டேனோ என்றெல்லாம் சிந்தித்தவனுக்கு உள்ளம் வலித்தது.
தன்னால் எந்தப் பிரச்சனையும் சாஹித்யாவின் வாழ்க்கைக்கு வரக்கூடாது வரவும் விடமாட்டேன் என்ற உறுதியோடு ஹோட்டல் ஒன்றில் தன்னுடைய பைக்கை நிறுத்தியவன் அனைவருக்கும் உணவை வாங்கிக் கொண்டு தன்னுடைய வீட்டை நோக்கி செல்லத் தொடங்கினான்.
மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த வீட்டுக்கு எவ்வளவு மகிழ்ச்சியுடன் தன் மனைவியைத் தேடி வந்தான்.
இதுவரை வாழ்க்கையில் பார்க்க முடியாத ஏமாற்றம் தானே அவனுக்குக் கிடைத்தது.
இதோ அந்த நொடியில் இருந்து அவனுடைய வாழ்க்கை அவனுடைய கரங்களில் இல்லை அல்லவா.
அனைவரும் கூறும் படி தானே இசைந்து நடந்து கொண்டிருக்கிறேன்.
இனி அனைவரின் முன்பும் மகிழ்வாக இருப்பது போல நடிக்கப் பழக வேண்டும்.
யாரைப் பார்த்தாலும் சிரித்துக் கொண்டே கடக்க வேண்டும்.
தன் வலி வேதனை எல்லாம் அடக்கி வைக்கப் பழக வேண்டும்.
பெண் பிள்ளை போல கண்ணீர் சிந்துவதை முற்றாகத் தடுக்க வேண்டும்.
அவன் மனமோ அவன் செய்ய வேண்டியவற்றை அவனுக்கு வரிசையாக கூறிக் கொண்டே வந்தது.
வீட்டின் அருகே வந்ததும் பைக்கை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வந்தவன் சாப்பாட்டைத் தன் அத்தையின் கரத்தில் கொடுக்க அவரோ அனைவருக்கும் பரிமாறத் தொடங்கினார்.
“எனக்கு வேணாம் அத்த பசிக்கல.. நீங்க சாப்பிடுங்க.. நான் பாப்பாக்கு பால் சூடு பண்ணிட்டு வரேன்..” என்றவனைத் தடுத்தவர்,
“இப்படி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சாப்பிடாம உங்க உடம் வாட்டப் போறீங்க..? பாப்பாக்கு சாஹி அப்போவே பால் கொடுத்துட்டா.. உங்க உடம்பையும் பாத்துக்கோங்க மாப்பிள்ளை.. சாப்பிடுங்க…” அக்கறையுடன் கூறினார் ராஜி.
அவன் இருக்கும் நிலையில் ஒரு கவளத்தைக் கூட அவனால் விழுங்க முடியாதே.
எப்படி இயல்பாக உண்பது..?
“சாப்பிடுங்க மாப்பிள்ள..” உணவுத் தட்டை அவனுடைய கரத்தில் கொடுத்தார் விமலன்.
மறுத்தால் அவர்களும் வேதனைப்படுவார்களோ என நினைத்து மறுக்காது அந்த உணவுத் தட்டை வாங்கிக் கொண்டவனுக்கு உணவை பிசைந்து வாயில் வைத்ததும் பாறாங்கல்லை விழுங்குவது போலத்தான் தோன்றியது.
உணவை உண்பதாக பேருக்கு நடித்துவிட்டு அப்படியே எழுந்து கொண்டவன் கையைக் கழுவி விட்டு தொட்டிலில் உறங்கும் குழந்தையைப் பார்த்தான்.
அலை கடலாய் கொந்தளித்துக் கொண்டிருந்த மனம் சற்றே அமைதி கண்டது.
ஒரு மணி நேரம் கடந்தும் யாரும் யாருடனும் அங்கே பேசவே இல்லை.
சோபாவில் ராஜியும் விமலனும் அமைதியாக இருக்க அந்த ஹாலின் சுவற்றில் சாய்ந்தவாறு அமைதியாக நின்றிருந்தாள் சாஹித்யா.
குழந்தையோ தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க இவனோ அதற்கு அருகே இருந்த இருக்கையில் எதையோ சிந்தித்த வண்ணம் அமர்ந்திருந்தான்.
வான்மதி தவறு செய்த போதும் கூட அவளின் இழப்பு அனைவருக்கும் வலிக்கத்தான் செய்தது.
அனைவரும் அவள் மீது உண்மையான அன்பை அல்லவா வைத்து விட்டார்கள்.
சற்று நேரத்தில் ராஜியும் விமலனும் எழுந்து கொண்டவர்கள் “இந்த நிலைமைல உங்கள மறுவீட்டுக்கு கூட எங்களால அழைக்க முடியாது மாப்பிள்ள… மன்னிச்சிடுங்க… எல்லாம் சரி ஆகட்டும்… அதுக்கப்புறம் நீங்களும் சாஹியும் வீட்டுக்கு வாங்க..” என்றவரை புரிந்தது என்பது போல பார்த்தான் அவன்.
“என்னாலையும் இனி இந்த வீட்ல இருக்க முடியாது அத்த..”
“வேற ஏதாவது வீடு வாங்கலாம்னு இருக்கேன்.. அதுவரைக்கும் பக்கத்துல வாடகைக்கு ஏதாவது வீடு கிடைச்சா அங்க போய்க்கிறேன்..” என்றவனின் உணர்வுகளை அவர்களும் புரிந்து கொண்டனர்.
அதன் பின்னர் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி விட்டு மகனையும் மருமகளையும் கண்ணீர் ததம்ப பார்த்துவிட்டு அவர்கள் அவர்களுடைய ஊருக்குக் கிளம்பிச் சென்றுவிட,
ஒருவரின் முகத்தைக் கூட மற்றவரால் பார்க்க முடியாது சங்கடத்துடன் வேறு வேறு திசையில் அமர்ந்து கொண்டது அந்தப் புது தம்பதி.
அங்கே மௌனம் பரவியது.
புதுமண வாழ்வில் அங்கே பூவுக்கு பதிலாக முள் மட்டுமே முகிழ்த்தது.
Super and waiting for next epi sis