தொல்லை – 16
கதிரின் குரலைக் கேட்டதும் மதுராவின் முகம் இருண்டது.
“ஹேய் யாரு மது..?” என அவள் அருகே நின்ற அர்ஜுன் கேட்டான்.
“வெயிட்.. பேசிட்டு வந்துடுறேன்…” என்றவள் கிளப்பின் சத்தத்திலிருந்து விலகி வெளியே நடந்தாள்.
கடற்கரையின் குளிர்ந்த காற்று அவளைத் தழுவியது.
ஆனால் கதிரின் குரல் அவளுடைய உற்சாகத்தை உடைத்து விட்டிருந்தது.
அதுவும் அவன் மதுரா என அழைத்ததிலேயே அவனுக்கு உண்மை தெரிந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டாள் அவள்.
‘இந்த அஞ்சலி லூசு என்னத்த உளறி வச்சாளோ தெரியலையே..’ என தனக்குள் முனகியவள் “ஹலோ..” என்றாள்.
அஞ்சலியின் அருகே நின்றவாறு மதுராவின் குரலைக் கேட்ட கதிருக்கோ கோபத்தில் கழுத்து நரம்புகள் புடைத்தன.
அவனருகே நின்ற அஞ்சலியின் முகத்தில் பதற்றமும் குற்ற உணர்ச்சியும் கலந்து தெரிந்தன.
“நான் கதிர் பேசுறேன்…” என்றான் அவன் அழுத்தமான குரலில்.
“ஓஹ்… என்ன விஷயம்?” என மதுரா இயல்பாகக் கேட்டாள்.
அவளுடைய குரலில் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை. அஞ்சலியை போல அவள் தவிக்கவும் இல்லை.
“என்ன விஷயமா..? ஏன் என்ன விஷயம்னு உனக்குத் தெரியாதா..?” எனக் கேட்டவனின் கை முஷ்டிகள் இறுகின.
அமைதியாக இருந்தாள் மதுரா.
“பதில் இன்னும் வரலையே…” என்றான் அவன் கோபக் குரலில்.
“ம்ம்.. சொல்லு கதிர்…” என்றாள் அவள் நிதானமாக.
“வாவ்… நீ எப்படி இவ்வளவு கூலா பேசுற..? உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா..? உன் தங்கச்சியை மிரட்டி நடிக்க வெச்சு என்னை ஏமாத்திட்டு அங்க சென்னைல ஜாலியா இருக்க போல… இங்க அஞ்சலி உன்னோட மிரட்டலால தவிக்கிறா…” என கதிர் கோபத்தில் கத்தினான்.
அவனுடைய குரல் உடைந்து வெளியேறியது.
அஞ்சலி அவனருகே நின்று தவித்தாள்.
மதுராவோ மறுமுனையில் ஒரு நொடி மௌனமாக இருந்தவள் தன் பதற்றத்தை மறைத்தாள்.
“ஓஹ்.. அஞ்சலி உண்மையை சொல்லிட்டாளா..? இட்ஸ் ஓகே… நான் என் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தேன்… எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்ல.. நான் எனக்குப் பிடிச்ச படிப்பை படிக்கணும்.. எனக்கு இந்த கல்யாண வாழ்க்கை வேணாம் கதிர்… நீயும் உன்னோட வாழ்க்கையை பாரு… இதுல அஞ்சலி தவிக்கிற அளவுக்கு என்ன பிரச்சனை இருக்கப் போகுது..” எனக் கேட்டாள் அவள்.
கதிருக்கு அவளுடைய நியாயமற்ற பேச்சு அதிர்ச்சியாக இருந்தது.
“இடியட் மாதிரி பேசாத மதுரா.. உன்னோட வாழ்க்கைல முடிவெடுக்கிறதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. ஆனா என் வாழ்க்கையையோ அஞ்சலி வாழ்க்கையையோ பணயம் வைக்க உனக்கு யார் ரைட்ஸ் கொடுத்தா..? ஹவ் டேர் யு மதுரா..?” என்ற கர்ஜனையில் மதுராவின் புருவங்களோ அவனுடைய ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்து உயர்ந்தன.
“கல்யாணம் பிடிக்கலைன்னா அப்போவே சொல்லி இருக்க வேண்டியதுதானே..? இல்லை கல்யாணம் பண்ணாமலேயே இங்கே இருந்து போயிருக்க வேண்டியது தானே..? உன்னைக் கட்டாயப் படுத்தி கல்யாணம் பண்ணுற அளவுக்கு நீ ஒன்னும் எனக்கு அவ்ளோ வர்த் இல்லை.. நானே கல்யாணத்தை நிறுத்திருப்பேன்.. என் கூட மணமேடை வரைக்கும் எந்த தைரியத்துல வந்து உட்கார்ந்த..?” என கதிர் உறும,
திணறிப் போனாள் மதுரா.
எப்படியாவது இவனை சமாளிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அக்கணம் அவளுடைய மூளையில் ஓடத் தொடங்கியது.
“புடிக்காத கல்யாணத்த நீ அமைதியா பண்ணிக்கிட்டதே தப்பு.. உன்ன விட சின்ன பொண்ணு அஞ்சலியை இந்த பிரச்சனைக்குள்ள நீ இழுத்து விட்டதும் தப்பு.. அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குன்னு நீ யோசிக்கவே இல்லையா..? இவ்ளோ செல்ஃபிஷ்ஷா நீ..”
“கதிர்… நான் என் கனவை துரத்திக்கிட்டு இருக்கேன்… அஞ்சலி என் தங்கச்சி… எனக்காக அவளால இதைக் கூட பண்ண முடியாதா..?”
“அவளுக்காக நீ இதை பண்ணுவியா..? சொல்லு…. நீ இதைப் பண்ணுவியா..? இல்லதானே… உன்னோட சுயநலத்தை மட்டுமே பெருசா நினைச்சு முடிவெடுக்கிற நீ எல்லாம் அஞ்சலியைப் பத்தி பேசவே கூடாது…” கடுமையாக எச்சரித்தான் அவன்.
“கதிர்… நான் என் வாழ்க்கையை வாழுறேன்… இதுல நியாயம் அநியாயம்னு பேசி என்ன ஆகப் போகுது..? சரி நான் பண்ணது தப்புதான்.. சாரி என்ன மன்னிச்சுடு..” என்றாள் அவள் எரிச்சலோடு.
கதிர் அஞ்சலியைப் பார்த்தான்.
அவளுடைய கண்கள் கலங்கின.
“மதுரா நீ இப்படி ஒரு சுயநலவாதியா இருப்பன்னு நான் நினைக்கவே இல்ல… பட் தேங்க்ஸ்.. உன்னாலதான் நான் அஞ்சலி பத்தி தெரிஞ்சுகிட்டேன்.. எனக்கு அஞ்சலியை பிடிச்சிருக்கு… இவ்வளவு நாளா நான் அவளைத்தான் மனைவியா பார்த்தேன்… அவளைத்தான் நேசிச்சேன்… இனி அவளத் தவிர வேற எந்தப் பொண்ணையும் என்னால நினைச்சுக் கூடப் பாக்க முடியாது.. கட்டின தாலிய கழட்டிக் கொடுத்துட்டுப் போனவ எனக்கு வேணாம்…” என்றான் உறுதியாக.
அஞ்சலியோ அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவன் கூறிய வார்த்தைகளில் அதிர்ந்து போன மதுராவோ சட்டென முகம் தெளிந்தாள்.
“வாவ்… கதிர்… இது ரொம்ப சந்தோஷமான விஷயம்… நீங்களும் அஞ்சலியும் சந்தோஷமா வாழுங்க… எனக்கு அந்த கல்யாண வாழ்க்கை வேணாம்… எனக்கு இங்க இருக்கிறதுதான் பிடிச்சிருக்கு.. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்.. உங்க ரெண்டு பேரோட வாழ்க்கைல நான் சத்தியமா குறுக்கே வர மாட்டேன்..” என்றாள் அவள்.
அவளுடைய வார்த்தைகளைக் கேட்ட கதிருக்கோ மனதில் நிம்மதி வேகமாக பரவியது.
எங்கே மதுரா ஏதாவது பிரச்சனை பண்ணி விடுவாளோ என அஞ்சியவன் அவள் இப்படிக் கூறியதும் நிம்மதியாக உணர்ந்தான்.
அவனால் இனி ஒருபோதும் அஞ்சலியை இழக்க முடியாது.
“வெல்… நீ உன்னோட படிப்பை கன்டினியூ பண்ணு.. நான் ரெண்டு வீட்லையும் இந்த விஷயத்தைப் பத்தி பேசி முடிச்சிடுறேன்.. இனி எந்தக் குழப்பமும் வராது..” என்றான் அவன்.
“தேங்க்ஸ் கதிர்.. முடிஞ்சா என்னோட படிப்புக்கு உன்னால ஹெல்ப் பண்ண முடியுமா..? இங்க ஸ்காலர்ஷிப்லதான் படிக்கிறேன்.. வீட்டு வாடகை தினசரி செலவுன்னு என்னால மேனேஜ் பண்ண முடியல.. முடிஞ்சா கொஞ்சம் பண உதவி பண்ணு… நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்துடுறேன்..” என இயல்பாகக் கேட்டாள்.
“சரி மதுரா… உனக்கு பண உதவி பண்ணுறேன்… ஆனா ஒரு கன்டிஷன்… இனி நீ என்னோட வாழ்க்கையிலோ அஞ்சலியோட வாழ்க்கையிலோ தலையிடக் கூடாது… உனக்கு இந்த வாழ்க்கை முக்கியமில்லைன்னு சொன்ன… இதை நீ எப்பவும் மறக்கக் கூடாது…” என்றான் அழுத்தமாக.
மதுரா ஒரு நொடி மௌனமாக இருந்தவள் “ஓகே கதிர்… டீல்… நீ பணத்தை அனுப்பு… நான் உங்க வாழ்க்கையில தலையிட மாட்டேன் ப்ராமிஸ்… நீங்க ஹாப்பியா லைஃப்ப ஸ்டார்ட் பண்ணுங்க…” என்றாள்.
“குட்…. நாளைக்கு உனக்கு தேவையான பணம் உனக்குக் கிடைக்கும்.. நீ இந்த பண உதவிய என்கிட்ட கேட்கலைன்னா கூட நான் என் அஞ்சலிக்காக இதை உனக்குப் பண்ணிருப்பேன்.. உன் அக்கவுண்ட் டீடைல்ஸ்ஸ எனக்கு டெக்ஸ்ட் பண்ணிடு… பை..” என்றான் அவன்.
“தேங்க்ஸ்…” எனக் கூறி அழைப்பைத் துண்டித்தவளுக்கோ பெரும் நிம்மதி.
இனி இவர்களுடைய தொல்லையும் இருக்காது பணமும் கிடைக்கும்..
“வாவ்.. ஐ ஆம் சோ லக்கி..” என தனக்குத்தானே கூறினாள் அவள்.
ஆனால் நிஜத்தில் யார் லக்கி என்ற விடயத்தை அவள் அறியும்போது பூகம்பம் நிச்சயம் வெடிக்கும்.
***
மதுராவுடன் பேசி முடித்த கதிரோ அஞ்சலியைப் பார்த்தான்.
அவளுடைய முகம் அதிர்ச்சியில் வெளிறி இருந்தது.
“இப்போவாவது உன்னோட அக்காவைப் பத்தி உனக்குப் புரிஞ்சுதா அஞ்சலி? அவளுக்கு நாம ஒரு பொருட்டே இல்ல…” என்றான் அவளுக்கு புரியும் பொருட்டு.
அவளோ விழிகளில் கண்ணீர் வழிய மெல்ல ஆம் எனத் தலை அசைத்தாள்.
“ஹேய் ரொம்ப திங்க் பண்ணாதடி.. நான் பார்த்துக்கிறேன்…” என்றவனின் முகம் மலர்ந்திருந்தது.
“மாமா… இது.. இது எப்படி சரியா இருக்கும்..? உங்க வீட்ல என்ன ஏத்துப்பாங்களா…? இ.. இது தப்பில்லையா..?” எனத் தயங்கினாள்.
கதிரோ அவள் அருகே நெருங்கி வந்தவன் அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டான்.
“அஞ்சலி… நம்ம வீட்டைப் பத்தி நீ யோசிக்காத.. அத நான் பாத்துக்குறேன்.. இவ்வளவு நாளா நான் உன்கூடதான் வாழ்ந்தேன்… உன் கழுத்துல நான் கட்டின தாலி இருக்கு… என் மனசுல நீ மட்டும்தான் இருக்க… மதுரா அவளோட வாழ்க்கையை தேர்ந்தெடுத்துட்டா… இனி நாமதான் நம்ம வாழ்க்கையைப் பார்க்கணும்… புரியுதா…?”
அஞ்சலி மௌனமாக நின்றாள்.
அவளுடைய மனதின் குற்ற உணர்ச்சியும் கதிரின் அன்பும் அவளைத் திணற வைத்தன.
“மாமா… என்னால இதை உடனே ஏத்துக்க முடியல… ஆனா உங்களோட அன்பு எ.. என்னை உயிரோட உருக்குது மாமா.. குற்ற உணர்ச்சி வேற என்ன கொல்லாம கொல்லுது… நா.. நான் என்ன பண்ணட்டும்…” என உண்மையைக் கூறியவள் உடைந்து போய் அழுதாள்.
“என் பொண்டாட்டியா இருடி அது போதும்.. உன்னோட குற்ற உணர்ச்சியைத் தூக்கி குப்பைல போடு..”
“ஆ.. ஆனா மாமா..”
“உஷ்… எனக்கும் உன்ன பிடிச்சிருக்கு.. உனக்கும் என்ன பிடிச்சிருக்கு.. அப்புறம் என்ன..?” எனக் கேட்டான் அவன்.
“எனக்குப் பிடிச்சிருக்கா..? நா.. நான் எப்ப சொன்னேன்..?” எனப் பதறினாள் அவள்.
“என்ன புடிக்காமதான் அன்னைக்கு குளத்துல என்கூட அப்படி இருந்தியா..?” என அவன் கேட்டு விட அவளுக்கோ நொடியில் முகம் குப்பெனச் சிவந்தது.
“அ.. அது..” தடுமாறினாள் அவள்.
“ஐ லவ் யூ அம்மு… சீக்கிரமே நீயும் என்னை லவ் பண்ணுவ..” என்றவன் அவளுடைய நெற்றியில் இதழ் பதித்தான்.
💜💜
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Super vini sis
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்